அத்தியாயம் இரண்டு
ஒரே சமயத்தில் இருவரும் அழைக்கவே கௌதம் ஒரு நிமிடம் வியந்து நிமிர்ந்து பார்த்தான்! எதிரில் அர்ஜுன் அமர்ந்து இருக்க அவன் முன்னர் வேறு யார் அஞ்சலி தான்! கௌதமுக்கு வியப்பில் விழி விரிந்தது… அர்ஜுன் அவனது பால்ய வயது முதல் சிநேகிதன்… அவனது இணைபிரியாத சிநேகிதத்தால்தான் கௌதம் அர்ஜுனுடன் அகமதாபாத் சென்றதே… எம்பிஏ படிக்க… அதன் பின் அர்ஜுன் அவனது வியாபாரத்தில் மும்முரமாகி விட கௌதம் அவனுடைய வேளைகளில் மூழ்கடிக்க பட்டான்… இத்தனை வருடங்கள் கழிந்து இப்போதுதான் திரும்ப பார்த்ததே… நட்பில் இது இயல்பானது… கல்லூரி முடிக்கும் வரை இணைபிரியாமல் இருக்கும் நண்பர்கள்… அவர்களுக்கு என்று கடமைகள் காத்திருக்கும் போது அந்த நட்பில் இடைவெளி விழுவது இயற்கை… அது எப்படி விழும் என்பது தெரியாது… ஆனால் வருடங்கள் கழிந்த பின்பு அடையாளம் காணப்படும் அந்த சுகத்தை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது.
“ஹேய் அர்ஜுன்!” வியப்பில் கரைந்து விழுந்தன அவன் வார்த்தைகள்! நண்பனை ஆர்வத்தோடு கட்டிக்கொள்ளும் போதுதான் அஞ்சலியை பார்த்தான்.
“ஹேய் எலிக்குட்டி!… நீங்க ரெண்டு பேரும் எப்படிடா ஒன்னா? சித்தப்பா சொல்லவே இல்ல…”
அவ்வப்போது அஞ்சலியை பார்த்து கொண்டு… அவள் தன் அப்பாவிடம் செய்து கொண்டு இருந்த சிறுபிள்ளைத்தனமான விவாதத்தை நினைத்து சிரித்து கொண்டிருந்த அர்ஜுனுக்கு… அவள் கௌதமுக்கு தெரிந்தவள் எனும்போது வியப்பு மேலிட்டது!
“ஹேய் ஹேய் ஸ்டாப் மேன்! அவங்க தனியா வந்தாங்க… நான் தனியா வந்தேன்… நீயே கோர்த்து விடாத!” கண்களில் கள்ள சிரிப்போடு கூறியவனை பார்த்து முறைத்தாள் அஞ்சலி!
“அதான பார்த்தேன்… நம்ம தோஸ்த் நல்ல பையனாச்சே… போயும் போயும் இந்த காளியாத்தா கூட எப்படி வர முடியும்னு யோசிச்சேன்…” என்று கௌதம் அவனது தங்கையை கலாய்க்க அதை கேட்ட அர்ஜுன் மனம் விட்டு சிரித்தான்… அஞ்சலி தன் அண்ணனை பார்த்து முறைத்து.
“காளியாத்தாவா… டேய் கோந்து வேணாம்டா… இதுதான் நீ துணைக்கு வர்ற லட்சணமா?” அவனது பட்டப்பெயரை கூறி ஒரு விரலை காட்டி மிரட்ட…
“ஓகே… ஓகே கூல்டா… கொஞ்சம் லேட் ஆகிடுச்சு… அதான் வந்துட்டேன்ல… எலிக்குட்டி இது என் பிரெண்ட் அர்ஜுன்… ஸ்கூல், காலேஜ்ல ஒண்ணா படிச்சோம்… டேய் அர்ஜுன் இது என் உடன் பிறவா சகோதரி, மேன்மை தாங்கிய என்னோட சித்தப்பாவோட ஒரே பொண்ணு… பேர் அஞ்சலி!” இருவரையும் அறிமுகப்படுத்தி வைத்தான்!
“அண்ணா… உன் பிரெண்ட் 4.5 % பால் தான் குடிப்பாரா… மீதிய என்ன சார் பண்ணுவீங்க?” என்று சிரிக்காமல் கேட்க… அர்ஜுன் அதை கேட்டு புன்னகைத்து கொண்டே… கௌதமை நோக்கி.
“ஏண்டா இந்த ஒரு எலி, ரெண்டு எலி, மூணு எலி, நாலு எலி, அஞ்சு எலின்னு சின்ன வயசுல கிண்டல் பண்ணுவியே… இது அந்த அஞ்சலியா கௌதம்?” அர்ஜுன் குறும்பாக கண்ணை சிமிட்டி கேட்க
“ஆமா அதே எலி தான்…” என்று கௌதம் சிரிக்க… அஞ்சலி கொதிநிலைக்கு போய் கொண்டிருந்தாள்!
“டேய்… அண்ணா… என்னை எலின்னு கூப்டாதன்னு எவ்ளோ தடவ சொல்றது? மறுபடியும் சொன்ன…” என்று மிரட்ட
“என்ன எலிக்குட்டி பண்ணுவ? ட்ரெயின்ல இருந்து குதிச்சுடுவியா?” வேண்டுமென்றே அவளை கலாய்த்தான் கௌதம்… அவனுக்கு அவன் தங்கையை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காலை வாரி விட வேண்டும் ஆனால் எப்போதும் அவளை பாதுகாக்க தவறியதில்லை… அஞ்சலியை மும்பை அழைத்து செல்ல கிளம்பிய தனது சித்தப்பாவை வலுகட்டாயமாக அமர்த்திவிட்டு அந்த பொறுப்பை அவன் எடுத்துகொண்டதே அவளது பாதுகாப்பை உறுதிபடுத்தி கொள்ளத்தான்… மும்பையை அவன் தேர்ந்தெடுத்ததும் அவன் அடிக்கடி தொழில் நிமித்தமாக செல்வது தங்கையை பார்க்க உபயோகப்படுமே என்றுதான்! அவசரமாக கடைசி நேரத்தில் ரயிலை பிடித்தவன் சிவதானுவின் பயத்தை தெளிவுப்படுத்திவிட்டே ஏறினான்.
“நான் எதுக்குடா குதிக்கறேன்? உன்னை பிடிச்சு தள்ளி விட்ருவேன்!” சிரிக்காமல் அசால்ட்டாக கூறிய அஞ்சலியின் முகத்தீவிரத்தை பார்த்து புன்னகை பொங்கியது அர்ஜுனுக்கு!
“ஐயோ… அர்ஜுன்… என்னை முழுசா பார்த்துக்கோ… இந்த காளியாத்தா செஞ்சாலும் செய்வா…”
“ஆமா ஆமா… யாரோ கார்த்திக்க கூட சேத்துல தள்ளி விட்டுட்டாங்களாம்… உனக்கு தெரியுமா கௌதம்…”
“இது எப்படி உங்களுக்கு தெரியும்?” அஞ்சலி குழப்பமாக
“உங்க அப்பா சொல்லிக்கிட்டு இருந்தார்ல… அப்போ தானா காதுல வந்து விழுந்தது!” குறும்பு கண்ணன் கூறிய பதிலில் கடுப்பானாள் அஞ்சலி!
“ஒட்டு கேக்கறதுக்கு இப்படி ஒரு பேரா… மங்களம்ம்ம்ம்ம்… என் இமேஜ இப்படி டேமேஜ் பண்ணிட்டு போயிட்டியே” என்று புலம்ப ஆரம்பிக்க
“ஏன் எலிக்குட்டி புலம்பற…?” அப்பாவியாக கௌதம் கேட்க
“ம்ம்ம்… ரெண்டு பேரும் சேர்ந்து என் இமேஜ ஸ்பாயில் பண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ இப்படி ஒரு கேள்வியா… டேய் அண்ணா… வீட்டுக்கு வருவியில்ல… அப்போ இருக்கு உனக்கு…” செல்ல கோபத்தோடு கண்களை உருட்டி மிரட்டினாள்!
“நீ டேய் அண்ணான்னு கூப்பிடுற வரைக்கும் நான் உன்னை எலிகுட்டின்ன்னு தான் கூப்டுவேன்… ஏன் லூசு என் மானத்த வாங்குற?” கௌதம் சலித்து கொள்ள
“ஆமா நீ பெரிய லார்ட் லபக்கு தாசு… உன்னை வாங்க அண்ணா போங்க அண்ணான்னு கூப்பிடனுமாக்கும்… போடா…” அவனுடைய தங்கை என்று மீண்டும் நிரூபித்தாள்!
“வேணாம் எலிக்குட்டி… பப்ளிக்ல அடி வாங்காத…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே அஞ்சலியின் செல்பேசி அழைக்க
“ஹலோ… அம்மா…”
“ஏன்டா கண்ணா… ட்ரெயின் கிளம்பிடுச்சா?” அந்த பக்கம் சுமதியின் சோகமான கீதம் ஒலித்தது!
“ம்ம்ம்… கிளம்பிடுச்சும்மா…” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே செல்பேசியை பறித்த கௌதம்
“சித்தி… உடனே உங்க பாட்டை ஆரம்பிச்சுட்டீங்களா? இதுதான் சாக்குன்னு இவளும் ஆரம்பிச்சுடுவா… நான் பார்த்துக்கறேன் சித்தி… டோன்ட் ஒர்ரி…” இருவரையும் ஒரு சேர கலாய்த்தாலும் அவனது இயல்பை அறியாதவரல்லவே சுமதி!
“அஞ்சு ஏதும் வம்பு பண்ணலையே கௌதம்… இங்கவே ஆயிரம் சண்டை இழுத்துட்டு வருவா… அங்க தனியா அவளை விடறதை நினைச்சாலே பயமா இருக்குப்பா… ஆனா அப்பாவும் பையனும் சேர்ந்து அவளை துரத்தறீங்க…” சோக கீதத்தை அவனிடம் ஆரம்பித்திருந்தார்!
“ஷப்பா… சித்தி… நான் மாசத்துல பாதி நாள் அங்க தான் இருக்கேன்… நான் பார்த்துக்க மாட்டேனா?”
“சரிம்மா… புரியுது… அது சரி… இப்போ அந்த வானரம் ஒழுங்கா வருதா?” பேச்சோடு பேச்சாக அவளை வானரம் என்று கூறியதை கேட்டவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“சித்தி… எலி இப்போ நல்ல பிள்ளையா இருக்கு…” என்றான் சிரித்து கொண்டே அவன் கூற
“சரி கண்ணா… தங்கச்சிய பத்திரமா பார்த்துக்கோ…” குரலில் மகளை பிரியும் ஏக்கத்தோடு கூற.
“இத நீங்க சொல்லனுமா… என் தங்கச்சிய நான் பார்த்துக்க மாட்டேனா? சித்தி… நம்ம அர்ஜுன் இருக்கான்ல… ஸ்கூல் படிக்கும் போது வீட்டுக்கு வந்து இருக்கான்ல சித்தி… ஞாபகம் இருக்கா?” ஆர்வமாக கௌதம் கூற
“ம்ம்ம் ஆமாம்… நம்ம அஞ்சலிய கூட தூக்கி வெச்சுக்குவான்ல… அந்த பையனா?”
“ஆமாம் சித்தி… இப்போ தான் இங்க பார்த்தேன்! அவனும் எங்க கூட தான் வரான்” என்றான் சந்தோஷமாக.
“பரவால்லயே கண்ணா… நல்ல பையன்… சரி நல்லபடியா மும்பை போயிட்டு போன் பண்ணு கௌதம்…”
பேசி கொண்டே திரும்பியவன் கண்களில் பட்டது மேகாவின் ஏக்கம் நிறைந்த கண்கள் தான்!
“வாவ்… என்ன ஒரு அழகு! சேலை விளம்பரத்துக்கு சூப்பரா சூட் ஆவாங்க போல இருக்கே… ஆனா ஏன் இவ்வளவு சோகம்?” என்று நினைத்து கொண்டே சிநேகமாக மேகாவை பார்த்து புன்னகைத்தான் கௌதம்!
புன்னகைத்தவனை பார்த்து முறைத்து கொண்டே வெளியே செல்பேசியை எடுத்து கொண்டு போனான் சசிதரன்! இருவரும் தெரிந்தவர்கள் போல என்று நினைத்து கொண்டே அர்ஜுனிடம் திரும்பி
“அப்புறம் எப்படி போகுது… பார்த்து நாலு வருஷம் இருக்குமில்ல அர்ஜுன்?”
“ம்ம்ம் ஆமா எம்பிஏ கான்வகேஷன்ல பார்த்தது அகமதாபாத்ல… இப்போ நீ என்ன பண்ற கௌதம்?”
“நான் மீடியா கோஆர்டினேஷன், ஆட் ஏஜென்சி, மாடல் கோஆர்டினேஷன்னு பிசி தான் அர்ஜுன்… இப்போ ஒரு ஆட் விஷயமா தான் மும்பை போறேன்… நீ எப்படி இருக்க… அப்பா எப்படி இருக்காங்க?” நடுவே குறுக்கிட்ட அஞ்சலி, “ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க நான் வந்துடறேன்” என்று கூறி விட்டு பாத்ரூம் சென்றாள்! அவள் போய் சிறிது நேரம் கழித்து மேகாவும் சென்றாள்!
“நான் நல்லா இருக்கேன்டா… அப்பா கம்பெனிஸ பார்த்துக்கறேன்… வாழ்க்கை நிற்காம ஓடுது… இப்போ கூட செல்போன் சர்விஸ் ப்ரவைட் பண்ண ஆரம்பிச்சு இருக்கோம்… ஓசோன்… ம்ம்ம்… அப்படியே போகுது…” இயல்பாக தனது வாழ்கையை விவரித்தான்… எந்தவித பீற்றலும் இன்றி!
“கேள்விபட்டேன் அர்ஜுன்! என் கிட்ட கூட ஓசோன் தான்… ஆனா வந்து நேர்ல பார்க்க தான் சங்கடமா இருந்துச்சு… டு பீ பிரான்க்… முதல்ல மாதிரியே இப்போ நீ பழகுவியான்னு தான்!” சிறிது சங்கடமாக கௌதம் கூற… அவனை முறைத்தான் அர்ஜுன்.
“ஹேய்… கௌதம்… என்ன நீ இப்படி கணக்கு போட்டுட்ட… என்னை பத்தி தெரியாதா உனக்கு… ராஸ்கல்… ஆட் ஏஜென்சி ஆரம்பிக்கும் போதாவது சொல்லி இருக்கலாமே… அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பாரே கௌதம்?” ஆதங்கமாக அவன் கேட்க கௌதம் தலைகுனிந்தவாறே.
“நினைச்சேன் அர்ஜுன்… உன்னை மாதிரி பெரிய ஆளுங்க வந்தா நல்லா இருந்து இருக்கும் தான்… ஆனா நம்ம பிரெண்ட்ஷிப்ப யூஸ் பண்ணிக்கறதா நினைக்க கூடாதில்ல… அதான்… சாரிடா மச்சான்!” இதுதான் கௌதம்… அவனை பொறுத்தவரை யாரையும் எதிர்பார்க்க கூடாது… மிகவும் தன்மானம் பார்ப்பவன்!
“உன்னை பத்தி தான் தெரியுமே கௌதம்… அப்புறம் எப்படி போகுது உன் பிசினெஸ்?
“நல்லா போகுதுப்பா… கிங்பிஷர் காலண்டர் கூட நாங்க தான் இந்த வருஷம் பண்ணோம்…” என்று சிரித்து கொண்டே சொல்ல.
“வாவ்… அப்போ செம சீன் தான்னு சொல்லு… உன் ப்ரோபைல் குடுடா… அப்பா கிட்ட பேசி நமக்கும் உன்னையே புக் பண்ணிடறேன்… சார் அப்பாய்ன்மென்ட் குடுப்பீங்களா?” நக்கலாக சிரித்து கொண்டே கேட்டவனை வெட்கத்தோடு பார்த்தான் கௌதம்!
“ஹேய்… என்னடா நீ இப்படி ஓட்டற… பட் தேங்க்ஸ்டா… ஆமா நீ என்ன ட்ரெயின்ல… அதுவும் டூ டயர்ல…” புரியாமல் கேட்டவனை பார்த்து சிரித்து விட்டு.
“இதுல என்னடா இருக்கு… ஜஸ்ட் லைக் தட்… ஒரு நாள் ப்ரீயா இருக்கணும்ன்னு நினைச்சேன்… இது எனக்கு பழக்கம் தான்டா…” புன்னகை மாறாமல் கூறியவனை ஆச்சரியமாக பார்த்தான் கௌதம்! தன்னுடைய நண்பன் என்றுமே தன் நண்பன் தான் என்பதில் அவனுடைய மனம் கர்வப்பட்டது!
“யூ ஆர் இம்பாசிபல் அர்ஜுன்… ஐ ரியல்லி மீன் இட்…” உணர்ந்து கூறினான் கௌதம்… அவனது தோளை தட்டிய அர்ஜுன்…
“ஹேய் கம் ஆன்டா… இது ஒரு பெரிய விஷயமே இல்ல…” அடித்து பேசி சிரித்து கொண்டிருக்க… பின்னர் குரலை தழைத்த அர்ஜுன்
“சரி… இந்த வாலு இப்போ ஆள் எப்படி?” கண்ணடித்து கேட்டவனை நன்கு புரிந்து இருந்தாலும் சிறு கோபம் வந்தது… என்ன இருந்தாலும் தங்கையாயிற்றே! அவனிடமே அவள் எப்படி என்று கேட்டால் கோபம் வராதா?
“டேய்… அவ என் தங்கச்சிடா…” என்று கண்டன குரலில் கூற
“ஹேய்… கூல் மேன்… இல்லைன்னு யார் சொன்னா… சப்போஸ் அவ மேல எனக்கு பின்னாடி இன்ட்ரெஸ்ட் வந்துச்சுன்னு வை…” என்று இன்னமும் கேலியாக கூற.
“அஞ்சலி மேல… ஐயோ… தயவு செஞ்சு அந்த நினைப்ப விட்டுடு… கொஞ்ச நாள் நீ நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறேன்…” என்று அவனும் கேலியாக சொல்லிவிட்டு சிரிக்க அர்ஜுனும் அதை கேட்டு சிரித்தான்… பின்னர் கௌதமே தொடர்ந்து.
“அவ… சான்சே இல்ல… கஷ்டம்… இத சொன்னன்னு வை… உன் மண்டைய உடைச்சுடுவா… எத்தனை பேர காலி பண்ணி இருக்கா என் தங்கச்சி…” என்று சிரித்து கொண்டே கூறினான்!
“அப்படியா… அவ்ளோ பெரிய ரவுடியா உன் தங்கச்சி… இன்னும் மாறவே இல்லை? கிரிக்கெட் விளையாடி கண்ணாடிய இவ உடைச்சதுல நாம பக்கத்து வீட்டு ஆண்ட்டிகிட்ட செம டோஸ் வாங்கினோமே… அதையெல்லாம் மறக்க முடியுமா? இப்போவும் வால்தனம் தானா? !…” என்று கேலியாகவே கூற!
“ஹேய்… ஞாபகம் இருக்கா உனக்கு… அப்புறம் என்னை மாட்டி விட்டுருச்சு அந்த குட்டி பிசாசு!” பின்னர் குரலை தழைத்து… “சீரியஸா சொல்றேன் அர்ஜுன்… அவ என் தங்கச்சி… கல்யாணமாக வேண்டிய பொண்ணு அவ… நீ இப்படி பேசுறது சரி வராது அர்ஜுன்…”
“ஹய்யோ… டேய் மச்சான்… என்னடா இவ்ளோ சீரியஸா எடுத்துகிட்ட… கம் ஆன் கௌதம்! இப்போ சீரியஸா ஒண்ணுமே இல்ல… என்னை பத்தி உனக்கு தெரியாதா?”
“நல்லா தெரியும்… நீ டைம் பாஸ்க்காக இந்த மாதிரி பண்ற ஆள் இல்லைன்னு தெரியுமே… என்ன… எதாச்சும் பொண்ண சைட் அடிக்கறதுன்னா கூட நாம ரெண்டு பேரும் சேர்ந்து தானே செய்வோம்… அப்போவே அதுக்கு மேல போகாத ஆள் நீ… ஆனாலும் அஞ்சலிக்கு அண்ணன்னா நான் வேற எப்படி பேசுவேன்னு நினைக்கிற?” நியாமாக அவன் கேட்க அதை மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொண்ட அர்ஜுன் கேலி செய்ய துவங்கினான்!
“ஓகே… கரெக்ட் தான்… அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை அதில் தீபமன்றோ…” பாடினான் கேலியாக!
பேசி கொண்டிருக்கும் போதே மேகாவும் அஞ்சலியும் சிரித்து பேசி கொண்டு வர… செல்பேசியில் பேசி விட்டு சசிதரனும் உள்ளே வந்தான்!
“ஹேய் அஞ்சலி வரா… எதையும் காட்டிகாத மச்சி…” என்று கௌதம் எச்சரிக்கை செய்து வேறு விஷயம் பேச… சட்டென்று திரும்பி பார்த்த அர்ஜுனுக்கு அஞ்சலி சிரித்து பேசி கொண்டு வந்த காட்சி கல்வெட்டாக பதிந்தது!
‘குழந்தை மாதிரி முகம்… பார்பி டால்… இன்னும் அந்த பழைய குறும்பு அப்படியே இருக்கு! என்னை ஞாபகமே இல்லை போல இருக்கே!’ என்று மனதுக்குள் நினைத்து கொண்டு அவளையே பார்த்தான்!
அர்ஜுன் அஞ்சலியை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதை பார்த்தவாறே திரும்பிய கௌதம் கண்ணில் சிக்கியவள் மேகா! மின்சாரம் தாக்கியவன் போல் அவளை பார்த்தான்!
என்ன ஒரு சாத்வீகமான அழகு! சிரிக்கும் போது மனசு அள்ளுதே! யாருன்னே தெரியலையே… ஒரு வேளை இந்த முசுடுக்கு எதாச்சும் சொந்தமா இருப்பாளா? என்னவா இருந்தாலும் கொஞ்சம் விசாரிச்சு தான் பார்க்கலாமே… எப்படி இருந்தாலும் அடுத்த விளம்பரத்துல இந்த பொண்ண நடிக்க வெச்சுடனும்… சம்மதிப்பாளா? எப்படியாச்சும் சம்மதிக்க வைக்கணும்… நினைத்து கொண்டிருந்தவனை கலைத்தது அஞ்சலியின் குரல்!
“என்ன ஞாபகம் வருதே ஞாபகம் வருதே பாட்டெல்லாம் முடிஞ்சுதா…” அஞ்சலி கேட்டு கொண்டே கௌதம் பக்கத்தில் உட்கார… மேகா சசிதரனின் பக்கத்தில் உட்கார்ந்தாள்!
“ம்ம்ம்… பாதி பாட்டு தான் ஓடி இருக்கு… மீதி பாதிய உன்னை வச்சு பாடலாம்ன்னு இருக்கோம் எலி… ஓகே வா?” என்று வம்பிழுத்தவன் வேறு யார்? அர்ஜுன் தான்!
“வேணாம்… டேய் அண்ணா… உன் பிரெண்ட் கிட்ட என்னை பத்தி சொல்லி வை… என் கிட்ட இந்த வேலையெல்லாம் வெச்சுக்க வேணாம்… நம்மளை பத்தி இன்னமும் தெரியலை போல இருக்கு…” மிரட்டலாக கூறியவளை பார்த்து சிரித்தான் அர்ஜுன்!
“சரி எலின்னா பிடிக்கலையா? பெருச்சாளி… ஓகே வா?” குறும்பாக கேட்டவனை முறைத்தாள் அஞ்சலி… அவளை கேலி செய்தேயாக வேண்டும் என்று முடிவு செய்துவிட்டவனை என்ன செய்வது?
“அண்ணாஆஆஆஆ!” கௌதமிடம் அவளது கோபத்தை காட்ட… அதற்கும் சிரித்து வைத்தான் அர்ஜுன்…
“ஏன் கௌதம்… இது இன்னும் அப்படியே இருக்குல்ல… அதே வாயாடிதனம்! என்ன கொஞ்சம் வளந்துட்டா… அவ்ளோதான்! ஏன் எலி இன்னும் மரம் ஏறிகிட்டு தான் இருக்கியா?” நக்கலாக கூறியவனை நெற்றி கண் இருந்திருந்தால் எரித்து இருந்தாலும் ஆச்சரியமில்லை… இது போன்ற கேலிகளும் கிண்டல்களும் அவளுக்கு புதியதில்லை என்றாலும் அதை அர்ஜுன் செய்வது ஏனோ அவளது ஈகோவை பாதித்தது! அவனது கண்கள் ஏதோ ஒரு செய்தியை கூறின… இது பெண்களுக்கு மட்டுமான உள்ளுணர்வு… எதுவோ சரியில்லை என்கிற உணர்வு… அர்ஜுன் நல்லவன் தான் என்றாலும் அவன் கண்களில் அவள் கண்ட ஏதோ ஒன்று அவளை அவனிடம் இருந்து தள்ளி நிறுத்தவே செய்தது.
“ஏன் கூட நீங்களும் வந்து ஏறவா?”
“பின்ன… சின்ன வயசுல என் கிட்ட அவ்வளவு க்ளோஸ் நீ… நான் தான் உன்னை மரம் ஏத்தி விடுவேன்… தெரியுமா?”
“இத நான் நம்ப மாட்டேன்… உடான்ஸ்…”
“ஹேய்… எலிக்குட்டி நிஜமாடா… அர்ஜுன் வந்து தூக்குனா தான் சாப்பிடுவேன்னு நீ அடம் பண்ணுவ…” என்று கௌதம் சொல்லவும்.
“அப்படியா… எனக்கு எதுவுமே ஞாபகம் இல்லண்ணா…”
“டேய் கௌதம்… எலிக்கு ஞாபகம் வரதுக்கு வேணும்னா நான் எலிய தூக்கி காட்டுட்டா?” என்று கண்ணடித்து கொண்டு சொல்ல.
“வேணாம்ம்ம்ம்ம்ம்ம்ம் அர்ஜுன்… அப்படியே ட்ரெயின்ல இருந்து உன்னை தள்ளி விட்டுடுவேன்!” என்று ஒருமையில் மிரட்டவும் இருவருக்கும் சிரிப்பு பீறிட்டு கொண்டு வந்தது! இருவரும் வாய் விட்டு சிரிக்க.
இதை பார்த்த மேகாவும் சிரிக்க… சசிதரன் முகத்தை உம்மென்று வைத்து கொண்டு மேகாவை முறைத்தான்! பெட்டியில் ஏறியதில் இருந்து அவனிடம் அவள் பேசவே இல்லையே! ஏதாவது இவனாக பேச்சு குடுத்தாலும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லி விட்டு அந்த மூன்று பேரும் அடிக்கும் கூத்தை பார்க்க உட்கார்ந்து விடுகிறாள்! சசிதரனுக்கோ நெருப்பின் மேல் உட்கார்ந்தது போல் இருந்தது! என்ன நாளை வரை தானே! அப்புறம் இவர்கள் யாரென்று கூட தெரிய போவதில்லை!
ரயில் திருத்தணி ரயில் நிலையத்தில் நிற்க… இன்னும் கொஞ்சம் ஆட்கள் ஏறினார்கள்! ரயில் பயணங்களின் சிறப்பே இதுதான்! முன்பின் தெரியாதவர்களை கூட வலைக்குள் கட்டி வைத்து விடும்! இறங்கும் வரை ஒருவருக்கொருவர் உறவாகவும் நட்பாகவும் வைத்திருக்கும்… ஒரு சில நேரங்களில் பழைய நட்பை புதுப்பித்தும் குடுக்கும்!
அர்ஜுனும் கௌதமும் பாண்ட்ரி செல்ல முனைய… அஞ்சலி அவள் அம்மா கட்டி குடுத்த தயிர் சாதத்தை எடுத்தாள்!
“ஹேய் அஞ்சு… நீயே முழுங்கிடாத… வெயிட் பண்ணு பாண்ட்ரில இருந்து வாங்கிட்டு வரோம்… சேர்த்து வைத்து சாப்பிடலாம்! சார்… நீங்களும் வரீங்களா?” என்று சசியை பார்த்து நாகரீகம் கருதி கௌதம் கேட்க
“நீங்களும் போயிட்டு வாங்க சசி! நான் அஞ்சலிகிட்ட பேசிட்டு இருக்கேன்!” மேகாவும் அவனை வற்புறுத்த வேறு வழியில்லாமல் கிளம்பினான்.
“ஓகே மேகி… நீ பேசிட்டு இரு… உனக்கு என்ன வேணும்?”
“தயிர் சாதம் ஓகே… அப்புறம் ஏதாவது தொட்டுக்க…”
மூவரும் செல்ல மேகாவும் அஞ்சலியும் உரையாட ஆரம்பித்தனர்! அவர்களை பற்றி… குடும்பம்… படிப்பு… பெற்றோர்… மும்பை போகும் காரணம் என்று அனைத்து பக்கமும் போனது! சசியும் மேகாவும் திருமணத்திற்காக தான் மும்பை போகிறார்கள் என்பதை அறிந்த போது மிகவும் ஆச்சரியபட்டாள்!
“ஏன் மேகி… கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாமே…”
“எனக்கு அவசரமே இல்ல அஞ்சலி… இவர் ரொம்ப அவசர படுத்தறார்! எங்க அப்பாவுக்கு தெரிஞ்சுட்டா சம்மதிக்க மாட்டார்னு!”
“நம்ம அம்மா அப்பா நமக்கு என்ன செய்தாலும் அது நம்ம நன்மைய கருதி தான் மேகி… அவங்க நமக்கு கெடுதலே நினைக்க மாட்டாங்க… நீங்க இப்படி வந்து இருக்கறது எவ்வளவு தூரம் சரின்னு சொல்ல தெரியல… யோசிச்சு முடிவு பண்ணுங்க… ரொம்ப உரிமை எடுத்துக்கறதா நினைக்காதீங்க… மனசுல பட்டத்த சொல்றேன்…” இதுதான் அஞ்சலி… மனதில் பட்டதை பட்டென்று கூறிவிடும் இயல்பினள்! அதே சமயத்தில் யோசியாமல் பேசிவிடும் இந்த பழக்கத்தினால் மற்றவர் மனம் காயப்படுமே என்பதையும் அறியாதவள்… ஆனால் ஈகோவை இழுத்து பிடித்து வைக்க தெரியாது.
மேகா தன் பெற்றோரை நினைத்து பார்த்தாள்! அவர்கள் கொஞ்சம் இவளிடம் உட்கார்ந்து பேசி இருந்தால் இந்த இடத்தில் இருப்போமா என்று நினைத்து பார்த்தாள்… அவர்களுக்கு தான் நேரமே இல்லையே… பின்னர் எதுக்காக இவர்கள் தன்னை பெற்றார்கள் என்று கூட தோன்றும்! பிள்ளை இல்லை என்று மற்றவர்கள் பேசுவதை தவிர்க்க தன்னை பெற்று விட்டு தன்னை அன்புக்கு ஏங்க விட்டவர்களை என்ன செய்வது? அவளுக்கு அந்த நினைவே கண்ணை கரிக்க செய்தது… எப்போதும் போல சுயபச்சாதாபத்தில் மூழ்கினாள்!
“எனக்கும் பயமா தான் இருக்கு அஞ்சலி! சசி தைரியம் சொல்லும் போது வர துணிச்சல் அப்புறம் காணாம போய்டுத்து… வந்தாச்சு… என்ன பண்றது?” பெருமூச்சோடு அவள் கூற
“ரொம்ப அப்பாவியா இருக்கீங்க மேகி… எனி வே… ஹவ் அ ஹாப்பி மெரிட் லைப்!” மனதார வாழ்த்தினாள் அஞ்சலி!
“தேங்க்ஸ் அஞ்சலி!”
மூவரும் உணவு பொட்டலத்தோடு வர பேச்சு தடைபட்டது! திறந்து வைத்த தயிர் சாதத்தோடு அஞ்சலி அமர்ந்திருந்ததை கண்ட அர்ஜுன்… வேகமாக அவளை நோக்கி வந்தான்.
“ஏய்… எலி… நீயே முழுசா முடிச்சுட்டியா… ஒழுங்கா பாக்ஸ என் கிட்ட குடு…” என்று அர்ஜுன் பிடுங்க…
“நான் பெருச்சாளிக்கெல்லாம் சாப்பாடு குடுக்கறது இல்ல அர்ஜுன்!” சிரிக்காமல் பதில் கூறினாள்.
“அதையும் பார்க்கலாம்…” என்று கூறியவன் வலுக்கட்டாயமாக பிடுங்கி திறந்து தயிர் சாதத்தை சாப்பிட ஆரம்பித்தான்!
“வாவ்… சூப்பர் டேஸ்ட் கௌதம்… இந்தா நீ கொஞ்சம் சாப்பிடு… ஹேய் எலி அந்த ஐட்டம் எல்லாம் நீயே சாப்பிட்டுக்கோ…” என்று சிரித்து கொண்டே கூறி சாப்பிட கௌதமும் அதில் பங்கெடுத்து கொள்ள… இதை பார்த்த அஞ்சலிக்கு பற்றி கொண்டு வந்தது.
“பிசாசுங்களா… எங்க அம்மா கட்டி குடுத்தது…” என்று சிணுங்க.
“சோ வாட்…” அலட்டிகொள்ளாமல் அர்ஜுன் கேட்க
“எங்கள பாக்க வெச்சுட்டு இத முடிக்கறீங்க இல்ல… உங்க ரெண்டு பேருக்கும் வயித்தால தான் போகும்… வாந்தி வாந்தியா எடுப்பீங்க…”
“டேய் கௌதம்… எலி சாபம் விடுதுடா… சரி போனா போகுது… இந்தா… கொஞ்சம் எடுத்துக்கோ!”
“ஐயோ ச்சீ எச்சி… நீங்க ரெண்டு பேருமே முழுங்குங்க…” என்று முகம் சுளிக்க… அதை கேட்ட இருவரும் வாய் விட்டு சிரித்து கொண்டே உணவை உள்ளே தள்ள…
“கௌதம் அண்ணா… உங்க செல்போன குடுங்க…” கௌதமை நோக்கி கை நீட்டினாள் அஞ்சலி!
“ச்சே என் தங்கச்சி என்னை எப்படி மரியாதையா கூப்பிடறா… புல்லரிக்குது… ஏன் உன்னோடது என்னாச்சு?”
“ம்ம்ம்… அது ரோமிங்ண்ணா…” முகத்தை சுருக்கி கொண்டே கூற
“கஞ்ச பிசினாரி… இந்தா… பிடி…” என்று சிரித்து கொண்டே கொடுத்தான்… செல்பேசியை வாங்கியவள் வீட்டிற்கு போன் செய்ய முயல… டவர் கிடைக்காமல் அடம் செய்தது.
“ஐயோ… இதென்ன டப்பா நெட்வொர்க்… கிடைக்கவே மாட்டேங்குது… உங்களுக்கு வேற நெட்வொர்க்கே கிடைக்கலையா… போயும் போயும் இந்த ஓசோன் தான் கிடைச்சுதா? ஓட்டை செல்போன் கம்பெனி…”
சாப்பிட்டு கொண்டிருந்த அர்ஜுனுக்கும் கௌதமுக்கும் புரை ஏறியது! இருவரும் தலையை தட்டி கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்! சிரிப்பதா முறைப்பதா என்று புரியாமல்.
“ஏன் அந்த கம்பெனிகாரன தான சொன்னேன்… நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி பேய் முழி முழிக்கறீங்க… அண்ணா… எனக்கு வேலை கிடைச்சு இருக்கறது எங்க தெரியுமா?” அஞ்சலி பெருமையாக கேட்டாள்… அதுவரை கௌதமிடம் பெரிதாக விவரம் எதையும் கூறிவிடவில்லை… ஏனென்றால் அங்கே தான் போகவே போவதில்லை என்ற கொள்கை முடிவில் இருந்த காரணம் இப்போதுதானே சிவதானுவால் உடைக்கப்பட்டு கௌதமால் முன்னெடுத்து செல்லபட்டுகொண்டிருக்கிறது!
“எங்கடா அஞ்சு?” கௌதம் கேட்க
“இந்த ஓட்டை ஓசோன்ல தான்… சேலரி எவ்ளோ தெரியுமா? ஸ்டார்டிங் பேவே ட்வென்டி தௌசன்ட்…”
அர்ஜுனுக்கு நிற்காமல் புரை ஏறியது!





