அத்தியாயம் பதினெட்டு
“ஹேய்… மாலை ரெடியா?”
“மெஹந்தி பங்ஷன் ஆராம்பிச்சாச்சு… இன்னும் ரெடி ஆகலியா?”
“மேக்கப் ரொம்ப ஆய்லியா இருக்குப்பா… கொஞ்சம் குறைச்சு விடு…”
நிற்க நேரமில்லாமல் தோழிக்காக சுழன்று சுழன்று சுற்றிய மேகாவை பார்த்தவர்கள் மலைத்தனர்!
“எவ்ளோ அழகு இந்த பொண்ணு… என்ன சுறுசுறுப்பு…” தங்களுக்குள் பேசி கொண்டனர்.
அதே போலவே கௌதமும் காலில் சக்கரத்தை கட்டி கொண்டு ஓட… மஞ்சும்மா இருவரையும் இழுத்து பிடித்து சாப்பிட வைத்தார் இரவு உணவின் போது! ஒரு பக்கம் தன் தங்கை இன்னொரு புறம் தன் நண்பன்! வானளவு சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான் கௌதம்! ஒவ்வொரு வேலைகளுக்கும் தனி தனி மேற்பார்வையாளர்களை கௌதமும், அர்ஜுனும் நியமித்து இருந்ததால், தடங்கல் எதுவும் இல்லாமல் அனைத்தும் சுபமாக நடந்தது! முதல் நாள் இரவு மணப்பெண் சீர், மாப்பிள்ளை சீர்… அதன் பின் உருமால் கட்டு சீர் என்று பாரம்பரிய முறைப்படியும் அதனோடு மெஹந்தி விழாவும் நடைபெற மாற்றி மாற்றி அஞ்சலியையும் அர்ஜுனையும் கிண்டல் செய்து கொண்டே இருந்தனர் இருபக்கமும் இருந்த இளவட்டங்கள்!
இருவரையும் சேர்த்து உட்கார வைத்து சடங்குகள் செய்ய… அஞ்சலி அசந்த நேரத்தில் அவளது இடுப்பில் அர்ஜுன் கிள்ள, வலி தாங்காமல் வாயை திறந்து கத்த போனவள், நிதானித்து தன்னை சுற்றி இருப்பவர்களை பார்த்து விட்டு அர்ஜுனை பார்த்து முறைத்தாள்! அவனோ ஒன்றுமே அறியாதவன் போல திரும்பி கொண்டு அவனது அத்தையுடன் பேசி கொண்டிருந்தவன், அவளை திரும்பி பார்த்து கண்ணை சிமிட்டினான்! அவளது அழகை அவ்வப்போது ரசித்து பார்த்து கொண்டிருந்தவன் சிறிது நிதானமாக ஆராய்ந்து… பின்னர் அடிக்குரலில்
“இப்படி முறைக்காத குண்டூஸ்… பார்க்கவே பயமா இருக்கு… பாரு அந்த கேமராமேன் முழிக்கறத…”
“என்னது குண்டூஸா…” முறைத்து கொண்டு கேட்டு “அப்புறம் எதுக்கு இந்த குண்டூஸ லவ் பண்ண” அடிக்குரலில் அவள் முறைத்து கொண்டே கேட்க
“என்ன பண்றது… தெரியாம பண்ணிட்டேன்…” வேண்டுமென்றே பாவமாக முகத்தை வைத்து கொண்டு கலாய்க்க
கடுப்பில்… எதேச்சையாக படுவது போல் காலை ‘நங்’ என மிதித்து விட்டு குறும்பாக பார்த்து விட்டு திரும்ப… இப்போது அவனாலும் வாய் திறந்து கத்த முடியவில்லை!
“இருடி… இதுக்கெல்லாம் சேர்த்து நாளைக்கு நைட் என்கிட்டே தான் மாட்ட போற…”
அந்த நினைவே அவளது இதயத்துடிப்பை எகிற வைத்தது! சட்டென்று உடல் சில்லிட்டு போக முகம் ரத்த சிவப்பை கொண்டது!
“ம்ம்ம்… ஆச தோச… போடா…” என்றாள் கிசுகிசுப்பாக! அவளது சிவந்த முகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அர்ஜுனுக்கு! பக்கத்தில் நின்று கொண்டிருந்த மேகா,
“நாளைக்கு மொத்தமா சேர்த்து வைச்சு பேசுங்க… இப்போதைக்கு சீர் செய்யறவங்கள டிஸ்டர்ப் பண்ணாதீங்கப்பா…” என்று கிண்டலாக கூற
“ச்சீ… போ மேகா…”
“என்னப்பா… இப்போவே போக சொல்ற? கண்டிப்பா நாளைக்கு டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்ப்பா… ஓகே வா” சிரித்து கொண்டே
“ஹேய்… மேகா…” சிணுங்கினாள் அஞ்சலி! கௌதம் தனது பரிசை மேகாவை பக்கத்தில் இருத்தி கொண்டு இருவருக்கும் அளிக்க… கிண்டலும் கேலியுமாக திருமண சடங்குகள் முடிய மறுநாள் சுபயோக சுபதினத்தில் தேவர்கள் பூமாரி பொழிய சுற்றமும் பந்தமும் நட்பும் வாழ்த்த வைதீக முறைப்படி அஞ்சலியை தன்னவளாக்கி கொண்டான் அர்ஜுன்! எனது கடைசி மூச்சு இருக்கும் வரை உன்னை என்னுள் பாதியாக நினைப்பேன் என்றும், அனைத்து சடங்குகளிலும் உனக்கு சமஉரிமை குடுப்பேன் என்று உணர்ந்து சப்தவடிகளை வைத்து ஊர் அறிய உறவறிய இவள் எனது மனைவி என்று உரைத்தான் அர்ஜுன்!
கௌதமின் விழிகள் மேகாவையே ஏக்கமாக தொடர்ந்து கொண்டிருந்தது! அஞ்சலி மணப்பெண்ணாக தேவதையாக கொலுவீற்றிருக்க மேகாவோ எளிமையான பட்டில் சிறு நகைகளோடு தெய்வீக அழகோடு பவனி வந்தாள் பார்ப்பவர்கள் கண்படுமாறு!
அர்ஜுனின் தொழில் முறை நட்புகள் அனைத்தும் வந்திருந்து வாழ்த்த, அனைவரையும் அறிமுகபடுத்தினான் அஞ்சலிக்கு! அஞ்சலியின் நண்பர் கூட்டம் என்று அதிகபட்சம் வந்திருந்தது நண்டு சிண்டுகள் தான் என்பதில் ஐயம் உள்ளதோ? வீட்டுக்கு பக்கத்தில் இருந்த ஆஷ்ரமத்தில் இருந்து குழந்தைகள் வந்து இருந்தனர்!
“நூறாண்டு காலம் நல்லா இருக்கணும் அஞ்சலி… உன்னோட நல்ல மனசுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டான்…” ஆஸ்ரம தலைவி வாழ்த்த
“ரொம்ப நன்றிம்மா… சந்தோஷமா இருக்கு!”
“அர்ஜுன்… எங்க அஞ்சலிக்கு ரொம்ப மென்மையான மனசு… ஆஸ்ரமத்துல இருக்கற குழந்தைங்க கஷ்டபட்டாலே அவளால தாங்க முடியாது… அஞ்சலி தன்னோட சம்பாத்தியத்துல அதிகபட்சம் செலவு பண்றது எங்க ஆஸ்ரமம் தான்பா… தயவு செஞ்சு அவளை மனம் கோணாம பார்த்துக்கணும்…” புதிய தகவல் அவனுக்கு இது! விளையாட்டு பிள்ளையாக இருக்கும் அஞ்சலிக்கு இப்படி ஒரு மனமா? வியந்தான்!
***
யாருமற்ற தனிமை!
திருமணம் முடிந்த முதல் இரவு!
ஒவ்வொருவருவரும் இனிமையாக எதிர்நோக்கும் அந்த நாளை ஏதோ பயத்துடனே எதிர்நோக்கி கொண்டிருந்தாள் அஞ்சலி! அவளால் நம்பவே முடியவில்லை ஆறு மாதத்திற்கு முன்னால் ஒருவனிடம் இப்படி பைத்தியமாக மாறுவோம் என்று சொல்லி இருந்தால் வயிறு வலிக்க சிரித்து இருப்பாள்! ஆனால் இப்போதோ எல்லாம் தலை கீழ் ஆயிற்றே! அர்ஜுன் தன்னை மிகவும் விரும்புகிறான் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை ஆனாலும் அவனிடம் தெளிவு படுத்தி கொள்ள வேண்டிய விஷயங்கள் இருக்கிறதே!
எளிமையான புடவைக்கு மாறியிருந்த அஞ்சலி உள்ளுக்குள்ளே படபடப்பாக அர்ஜுனின் அறையில் ஜன்னல் வழியே வெண்ணிலவின் குளுமையை ரசித்து கொண்டிருந்தாள்!
“கடைசியா என் கிட்ட மாட்டிக்கிட்டியா?” சிரித்தவாறே அர்ஜுன் கேட்க சப்தம் கேட்டு திரும்பினாள் அஞ்சலி! என்னென்னெவோ பேச வேண்டும் என்று எண்ணியவளுக்கு இப்போது அனைத்தும் மறந்து போனது! அவனை பார்க்கும் போதே உள்ளுக்குள் ஏதேதோ செய்தது! ரத்த ஓட்டம் தலைகீழானதோ? புரியவில்லை அவளுக்கு! முகம் சிவக்க நாணத்தோடு அவள் தன்னை நோக்கி நின்ற அந்த காட்சி அர்ஜுன் மனதில் ஓவியமாக பதிந்தது! அழுத்தமான அடிகளோடு அவளை நோக்கி வந்தவன் ஓவிய பாவையாக நின்றிருந்த அவளின் முகத்தை பற்றி அந்த கண்களில் ஏதோ ஒன்றை தேடினான்!
“வாட் இஸ் ஈடிங் யு ஜுஜு?”
“ஜுஜுவா? அப்படீன்னா? அன்னைக்கும் அப்படித்தான் கூப்ட்டீங்க…” அவளுக்கே கேட்டிருக்குமோ என்னவோ!
அதை கேட்டு சிரித்த அர்ஜுன் அவளின் தலையை தட்டி
“உனக்கு வோடபோன் ஜுஜு தெரியாதா? ஐ லவ் இட் எலிக்குட்டி… ஏதோ உன்னை பார்க்கும் போது எனக்கு அந்த கேரக்டர் தான் தோணும்! அதான் உனக்கு செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல பேர் ஜுஜுகுட்டி… ஓகே வாடி ஜுஜுகுட்டி…” அவளது மூக்கை திருகியபடி கூற
“ஹாஆஆஆ… இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…” என்று அவள் முகத்தை திருப்ப
“வேற எதுலடி குறைச்சல்? சொல்லு டேலி பண்ணிடலாம்” என்று கண்ணை சிமிட்ட அஞ்சலிக்கோ குபீரென்று முகத்தில் ரத்தம் பாய்ந்த உணர்வு! தள்ளாடிய தன் கால்களை நிலத்தில் ஊன்றியபடி சமன் செய்ய முனைய, கண்ணை சிமிட்டியவன்… கொஞ்சம் கொஞ்சமாக அவளை தன் புறம் கொண்டு வந்தான்!
“ஒழுங்கா விடுங்க… உங்க மேல எனக்கு செம கோபம்…”
அவளது கோபத்தின் காரணம் தெரிந்தும் கண்டு கொள்ளாமல் அவன் கைகளும் உதடுகளும் தன் வேலையை பார்த்து கொண்டிருக்க வலுகட்டாயமாக கைகளை தள்ளி விட்டு அவனது சட்டையை பிடித்து கேள்வி கேட்டாள்!
“டேய் பிசாசு… ஏன்டா இத்தனை நாளா என்கிட்டே பேசவே இல்ல… ஏன் பேசவே இல்ல…”
“டூ யு மிஸ்ட் மீ?” அவளை ஆர்வமாக பார்த்து கொண்டே
“அதெல்லாம் ஒண்ணுமில்லையே… நான் எதுக்கு உன்னை மிஸ் பண்றேன்… என் பிரெண்ட்ஸ் கூட நல்லா விளையாடிட்டு இருந்தேன்…” ஈகோவை விட்டு கொடுப்பேனா என்று நன்றாகவே சமாளித்தாள்!
“லையர்…”
“நோ…”
“உண்மைய சொல்லு… ஒழுங்கா…”
“நான் உண்மையைத்தான் சொல்றேன்…”
“ஒஹ்… அப்படின்னா நீ இங்கேயே இரு… உனக்கும் எனக்கும் நோ பேச்சுவார்த்தை…” தன்னுடன் இறுக்கி இருந்தவன் சட்டென அவளை விட… தள்ளாடினாள்! அதுவரையில் மிதந்து கொண்டிருந்தவள் சட்டென தரையில் விழுந்த மீனானாள்! சோபாவில் அமர்ந்தவனை சிறிது நேரம் பார்த்தவள்… ஒரு வாராக தைரியத்தை திரட்டி கொண்டு அவன் முன்னர் சென்று எங்கோ பார்த்தவாறே
“ஆமா…” என்றாள்!
“என்னை பார்த்து சொல்லு…”
“ஆமாஆஆஆ…” கடுப்பாக அவனை நன்றாக பார்த்து!
“ஆமான்னா… என்ன ஆமா… எதுக்கு ஆமா… மொட்டையா சொன்னா…” மனதுக்குள் சிரித்தவாறே
“ஆமா உன்னை மிஸ் பண்ணேன்… போதுமா…”
“அப்படி வா வழிக்கு… ஆனா இது போதாது!” ஒரு மார்கமாக பார்த்து மெலிதாக புன்னகைத்து கொண்டே
“வாட் போதாதா?”
“ஆமா… நான் சொன்னத இது வரைக்கும் நீ என் கிட்ட திருப்பி சொல்லவே இல்ல… அதை சொல்லு…” கண்களை சிமிட்டி கொண்டே
“ம்ம்ம்… என்னது அது…”
“ஹேய் நீ மெகா திருடின்னு எனக்கு தெரியும்… ஒழுங்கா சொல்லுடி…”
“ம்ம்ம்…” என்று யோசிப்பது போல் பாவனை செய்து கொண்டு “ஐ லவ் யு” என்று ஒப்புக்கு சொல்லவும்.
“என்னமோ இன்னைக்கு லீவ்ன்னு சொல்ற மாதிரி கேசுவலா சொல்ற… பீலிங்க்ஸ் மா பீலிங்க்ஸ் வேணும்…”
“அதெல்லாம் சொல்ல முடியாது…”
“சொல்லலைன்னா விடு… நான் போய் வெளிய உங்க அம்மாகிட்ட சொல்லிடறேன்…”
“என்னன்னு…” என்றாள் அதிர்ச்சியாக
“உங்க பொண்ணுக்கு என்னை பார்த்தா பீலிங்க்ஸ் வரவே மாட்டேங்குதாம்ன்னு…” என்று வெளியே போக எத்தனிக்க
“ஹேய் வேணாம்…”
“அப்போ சொல்லு…”
“நோ முடியாது…”
“அப்போ போக வேண்டியதுதான்!” என்று வெளியே போக கதவை திறக்க முயல
“டேய் லூசு… ஐ லவ் யூ டா…” என்று அவசரமாக சொல்லிவிட்டு அவனை பின்னால் இருந்து கட்டி கொள்ள, ஒரு கணம் தாமதித்த அர்ஜுன் மறுகணம் அவளை இறுக்கி அணைத்து இருந்தான்! முகம் எங்கும் முத்தமழை பொழிய துவண்டு தன் கைகளில் சரிந்தவளை மென்மையாக கையில் ஏந்தி கொண்டான்! அவனது கழுத்தில் கைகளை மாலையாக்கிய அவனது காதல் மனைவி… அவனை தன் மேல் இழுத்து… மூக்கோடு உரசி
“இப்போ சொல்லுடா… ஏன் பேசவே இல்ல… ஐ மிஸ்ட் யூ பிசாசு!”
“உன் கிட்ட பேசினா என்னால கண்ட்ரோலா இருக்க முடியாது எலிகுட்டி… அப்புறம் எக்குதப்பா ஆகிட்டதுன்னா… ப்ச்… அதான்…” என்று சிரித்து கொண்டே சொல்லவும்.
“ச்சீ போ… பைத்தியம் மாதிரி உளறாத… உனக்கு வெட்கமே இல்ல” வெட்கத்தோடு முகத்தை மூடி கொள்ள
“ஆமாம்… நான் பைத்தியம் தான்… ஆனா எலிபைத்தியம்…”
அவளது கைகளை விலக்கிய அர்ஜுன் கைகளை பற்றி மோதிரத்தை அணிவித்து விட்டு அந்த கைகளை முத்தமிட்டு
“ஐ லவ் யூ அபிதகுஜலாம்பா…” என்று கண்ணடிக்க
“ஹேய்… வேணாம்ம்ம்ம்ம்…”
“அதான் வேணாம்ன்னு தான் நானும் சொல்றேன்… ’ என்று சிரித்து கொண்டே கூறிவிட்டு காதில் ரகசியமாக முணுமுணுக்க
“ஹய்யோ… ச்சீ போடா…” என்று தள்ளியவளை கொஞ்சம் கொஞ்சமாக தன்னவளாக்கி கொண்டான் அர்ஜுன்!
அவனது மார்பில் சாய்ந்து இருந்தவள்,
“என்னை என்னென்னமோ சொல்லி… பணம் காசுன்னு… அப்புறம் எப்படி நீங்க…” என்று தயங்கவும்
“அச்சோ செல்லத்துக்கு எப்போ வந்து இந்த டவுட் வருது பாரு… எல்லாருமே கடவுள் இல்லடா… ஏதாவது ஒரு குறை இருந்தே தான் தீரும்… உண்மையான லவ்ன்னா அந்த குறையோட ஏத்துக்கிறது தான் அஞ்சலி… சின்ன வயசுல கண்டிப்பா உன் மேல லவ் கிடையாதுடா… அப்போ நீ ரொம்பவுமே சின்ன பொண்ணு… ஆனா ட்ரெயின்ல உன்னை பார்த்த முதல் பார்வைலையே நான் முழுசா நாக் அவுட் பேபி…”
“நிஜமாவா…” ஆச்சரியமாக கேட்டாள்!
“அப்போ உன்னை மட்டும் தான் பார்த்தேன்… உன் அப்பாகிட்ட பேசிட்டு இருந்த… என்னமோ காலம் காலமா உன்னோட வாழ்ந்த மாதிரி ஒரு நினைவு கண்ணம்மா… அந்த பீலிங்க்ஸ என்னால சொல்லவே முடியல… அப்புறம் தான் நீ கௌதம் தங்கச்சின்னு தெரிஞ்சுது…”
“அதனால வேணாம்னு முடிவு பண்ணீட்டீங்களா?”
“ம்ஹூம்… உன் அண்ணா தான் என்னை மிரட்டினான்…” என்று சொல்லி விட்டு சிரித்தான்!
“மிரட்டினானா?” ஒவ்வொன்றும் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது!
“எங்க குடும்பம் அப்படி இப்படின்னு தான்… ஆனா கொஞ்சம் கொஞ்சமா என்னை புரிஞ்சுகிட்டான்… ஏன்னா மேகாவ அவன் லவ் பண்ணதுனால…”
“அப்போவே லவ் பண்ணினானா?” அதிர்ச்சியோடு கேட்டாள்!
“ம்ம்ம்… ஆமா எலிக்குட்டி… ஆனா கண்ட்ரோல் பண்ணிகிட்டான்… ஆனா உன் விஷயத்துல எனக்கு ஓகே சொல்லிட்டான்… மும்பை போனவுடனே… நான் உன்னை ஆக்சிடென்ட்ல காப்பாத்தினத பார்த்து இம்ப்ரெஸ் ஆகிட்டானாம்…” என்று சொல்லி சிரிக்க
“ஏன் அதுக்கு என்ன சிரிப்பு?”
“என்னோட முதுகு வலி எனக்கு தானே தெரியும்…” சொல்லிவிட்டு கண்ணடிக்க
“ச்சீ போ… நான் ஒன்னும் அவ்ளோ வெயிட் இல்ல…”
“இல்லடி குண்டூஸ்… இல்லவே இல்லைதான்…”
“நான் குண்டூஸா…” கடுப்பாகி.
“ஹஹா… உண்மைய சொன்னா உனக்கு கோபம் வரும்…” பலமாக சிரித்தான்!
“வேணாம் அர்ஜுன்… என்கிட்டே அடி வாங்காத…” அஞ்சலி குரல் தேய,
“ஹேய்… செல்லகுட்டி… உன்கிட்ட எல்லாமே எனக்கு பிடிச்சதுதான்…” என்று கண்ணடிக்க முகம் சிவக்க அவனது மார்பில் சாய்ந்து கொண்டாள்!
“சீரியஸா… இன்னைக்கு செம க்யூட்டா இருந்தடா… சும்மா விளையாட்டுக்கு தான் ஓட்டினேன்!” என்று சொல்லி சிரிக்க
“கொழுப்பு கொஞ்சம் ஓவர் டோஸ்ல தான் இருக்கு…” அவனை கிள்ள
“ஆஆஆஆ… ராட்சசி…” கத்த அவன் வாயை கை கொண்டு மூடினாள்! கைகளில் மென்மையாக முத்தமிட்டவன்,
“இன்னைக்கு கல்யாணத்துக்கு வந்த ஆஸ்ரம பிள்ளைங்க உன்னை பற்றி சொன்னப்போ எனக்கு எவ்வளவு பெருமையா இருந்தது தெரியுமா? நாம எல்லார மாதிரியும் பணம் மட்டுமே குறிக்கோளா வெச்சு பிசினெஸ் பண்றது கிடையாதும்மா… அதையும் தான்டி வால்யுஸ் தான் முக்கியம்… அந்த வகைல நான் ரொம்ப குடுத்து வெச்சு இருக்கேன் எலிக்குட்டி…” அணைத்து கொண்டான்!
“இதே மாதிரி மேகாவும் அண்ணனும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா இருக்கும்ல அர்ஜுன்…”
“ம்ம்ம்… கண்டிப்பா நடக்கும்டா… எப்படி பார்த்தாலும் அவளோட ஹெல்த் கண்டிஷன் பார்க்கணும் அஞ்சலி… ஏன்னா இனிமே டென்ஷன் ஆனா ஸ்ட்ரோக் வர்றதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு அஞ்சு… அதான் கௌதம் பொறுமையா இருக்கான்… இப்போ புதுசா ஒரு அஸ்திரம் ரெடி பண்ணிட்டு இருக்கோம்…”
“என்னது?”
“அது சஸ்பென்ஸ்… வெயிட் அன்ட் வாட்ச்…” என்று சிரித்து விட்டு அணைத்து கொண்டான்! இனியும் அங்கே நமக்கு அங்கே என்ன வேலை? காதல் பறவைகள் எல்லை கடந்து தான் பறக்கட்டுமே!





