அத்தியாயம் பத்தொன்பது
“எங்க போறோம் கௌதம்?”
“பேசாம வா”
“எங்கன்னு சொல்லுங்க”
“சொன்னாதான் வருவியா மேகா”
“சொன்னா நல்லா இருக்கும்… அவ்ளோ தான் கௌதம்!”
காலையிலேயே வலுகட்டாயமாக அவளை இழுத்து கொண்டு வந்திருந்தான்! என்ன கேட்டும் அவனது வாயிலிருந்து வார்த்தை வருவேனா என்றது! அவளை குழப்பி பின் அழைத்து சென்ற இடம் மருத்துவமனை! இங்கே எதற்காக அழைத்து வருகிறான்? ஒன்றும் புரியாமல் கௌதமுடன் சென்றாள் மேகா!
“வந்துட்டீங்களா!” செல்பேசியில் யாரையோ கேட்க
“…”
“ஓகே… நாங்களும் வந்துட்டோம்…”
“…”
செல்பேசியை வைத்தவன் கைகளை அப்போதுதான் கவனித்தாள்! ஏதோ பைல் மாதிரி ஒன்றை எடுத்து வந்திருந்தான்! எதற்க்காக?
“யார பார்க்க போறோம்ப்பா… சொல்லுங்களேன்…”
“பார்க்க தானே போற… கொஞ்ச நேரம் பேசாம வா…”
மருந்து நெடி நாசியை தாக்கியது! பரபரப்பாக இருந்தது மருத்துவமனை! நகரின் மையத்தில் இருக்கும் அந்த பெரிய மருத்துமனையில் எந்நேரமும் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்! மனவியலுக்கு பெயர் வாங்கியவர்கள்! வேகமாக நடந்த கௌதமை தொடர்வது மேகாவுக்கு கொஞ்சம் சிரமமாகவே இருந்தது! சாதாரண நடையாகவே தோன்றினாலும் அவனது உயரத்திற்கு அவன் பின்னால் வேகமாக நடக்க வேண்டி இருந்தது! ஒரு அறையின் வாசலில் நின்ற கௌதம், … மேகாவை கையை பற்றி உள்ளே அழைத்து சென்றான்! அவர்கள் போன அறையில் இருந்தது ஒரு பெண்ணும் இரு ஆண்களும்!
“ஹாய் விஷால்…”
தூக்கி வாரி போட்டது மேகாவுக்கு! விஷால் என்றால்… அந்த… அந்த.
“மேகா… இது விஷால்… இது சுரேஷ்… இது…” ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி கொண்டு வந்தவன் தடுமாறி நிற்க
“நான் ஸ்ரீதேவி…” என்று அந்த பெண் அழகாக சிரித்தாள்!
“சசியோட அக்கா… மேகா…” கொஞ்சம் கீழான குரலில் கூற மேகாவுக்கோ அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை!
“நீங்க… நீங்க… உங்களுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்னாங்களே…” தடுமாறி அவளிடம் கேட்டாள் மேகா! அவளை தேடி கண்டுபிடித்து பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தவள் மேகா… அதற்காகவே தேடுவதற்கு கூட சொல்லி வைத்து இருந்தாள்! ஆனால் இப்படி தன்னம்பிக்கையின் உருவமாக தன் முன்னே.
“ம்ம்ம் ஆமா… கொஞ்சம் சரி இல்லாம இருந்தது! இப்போ நல்லா ஆயிட்டேன்… இப்போ வாழ்க்கைய நூறு சதவிதம் தன்னபிக்கையோட எதிர்கொள்வேன் மேகா…”
“நான் யாருன்னு…” தடுமாறினாள்!
“விஷால் சொல்லி இருக்கார் மேகா… இன்பாக்ட் அவர் தான் முழுக்க முழுக்க நான் குணமானதுக்கு காரணம் மேகா… நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்மா… இப்போ யார் மேலையும் எனக்கு வருத்தமில்ல… எல்லாமே விதிப்படி நடக்குது… வேற ஒன்னும் நான் நினைக்கல மேகா…” தெளிவாக அவள் பேசுவதை பார்த்து மேகாவுக்கு புது ரத்தம் பாய்வது போல் இருந்தாலும் உள்ளுக்குள் அழுந்தியது! இவளது இந்த நிலைக்கு காரணம்… தடுமாறி கொண்டு இருக்கும் போதே
“மேகா… இதை உன் கையால அவங்க கிட்ட குடு…” அவன் எடுத்து வந்த பைலை அவளிடம் குடுக்க
“என்ன இது அண்ணா…” ஸ்ரீதேவி கேட்டாள்!
“இல்லம்மா… உங்களோட சொத்தை உங்க கிட்டவே சேர்க்க தான் வந்தோம்… வாங்கிக்கங்க…”
“அண்ணா…” குரல் கமறியது!
“கூடவே கொஞ்சம் பணம் வெச்சு இருக்கேன்ம்மா… சசிக்கு எதுவுமே ஈடாகாது… ஆனா உங்களுக்கு நிறைய செய்யணும்ன்னு மேகா நினைக்கிறா… ஐம்பது லட்சம் ரூபாய்க்கு செக் லீப்ஸ் வெச்சு இருக்கோம்ம்மா… வேற என்ன உதவி வேணும்னாலும் கேக்கலாம் நீங்க…”
வியந்து போய் கௌதமை பார்த்தாள்! தான் கூறாமலேயே தன்னுடைய மனதை படித்த தன் நண்பனை நினைத்தால் அவளுக்கு பெருமையாக இருந்தது!
“அவங்க சொத்து மட்டும் போதும் கௌதம்… பணம் வேண்டாம்… நான் இருக்கேன் பார்த்துக்குவேன்…” விஷால் கூற
“பரவால்ல விஷால்… இருக்கட்டும்… மேகாவோட மனசு திருப்திக்கு… கல்யாணத்துக்கு கூப்பிடுங்க… நாங்க தான் முன்னாடி நின்னு செஞ்சு வைப்போம்…”
“கண்டிப்பா… உங்க நல்ல மனசுக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் கௌதம் அண்ணா…” ஸ்ரீதேவி கண்ணீர் மல்க கூறினாள்!
“ராகினிக்கு நான் குடுத்த இழப்பீட்டு தொகையை குடுத்துட்டீங்களா விஷால்…”
“ம்ம்ம்… ஆச்சு கௌதம்…” சுரேஷும் சேர்ந்து ஒரே குரலில்!
அந்த மூவருக்குமே அவர்களது சொத்தையும் இழப்பீட்டு தொகையும் கொடுத்து அவர்களது மனதை மாற்றி இருந்தான் கௌதம்! தொழிலில் மேகா வந்தபின் பிரச்சனை இருக்ககூடாதல்லவா!
அவர்களை சந்தித்து விட்டு வந்து காரில் அமர்ந்தவள் நெஞ்சில் சுனாமி!
எங்கிருந்தோ வந்தான் இடைசாதி நான் என்றான்!
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்
அதீதமாக உணர்சிவசபட்டிருந்த மேகாவுக்கு எதுவுமே புரியவில்லை! இத்தனை நாளாக மனதுக்குள் அழுத்திய பாரம் அனைத்தும் ஒரு சேர விட்டு போனது போல ஒரு உணர்வு! எதிலிருந்தோ விடுபட்ட உணர்வு! தண்ணீரில் மூழ்கிய வேளையில் மூச்சுக்கு தத்தளிக்கும் போது காப்பாற்றப்பட்ட உணர்வு!
“கௌதம்!”
“என்னம்மா?”
“தேங்க்ஸ்… கௌதம்… தேங்க்ஸ்…” நா தழுதழுக்க கைகளை கூப்பி அழ ஆரம்பித்தவள் பின்பு கதற ஆரம்பித்தாள்!
“என்னோட குற்ற உணர்ச்சி இத்தனை நாளா பெரிய பாரமா அழுத்திட்டு இருந்தது… எனக்கு அதை எப்படி சொல்றதுன்னே தெரியாம இருந்தேன்… எனக்கு இப்போ பெரிய ரிலீப் ஆ இருக்கு… எப்படி உங்களுக்கு நன்றி சொல்றதுன்னே தெரியல… தேங்க்ஸ் பா…”
சிறிது நேரம் பொறுமையாக பார்த்து கொண்டு அழுது முடிக்கட்டும் என்றிருந்தவன் பின்,
“முடிஞ்சுதா?”
“என்ன…” குழப்பமாக பார்த்தாள் மேகா!
“இந்த அழற படலம்… நன்றி நவிலும் படலம் எல்லாம் தான் மேகி… முடியலைன்னா சீக்கிரம் முடி…” சிரியாமல் சொன்னவனை
“ம்ம்ம்…” பார்த்து முறைத்தாள் மேகா!
“பின்ன என்ன… நானும் எவ்வளவு நாள் தான் பொறுமையா நீ அழறத பார்த்துகிட்டே இருக்கறதுடா… ஒரு வழியா இன்னைக்கோட அந்த அழற வேலைய முடி…”
“உங்களுக்கு கிண்டலா இருக்கா கௌதம்?”
“இல்லம்மா தாயே… இல்லவே இல்ல… எப்போ பாரு இப்படியே அழுதுட்டே இரு… பாக்க சந்தோஷமா இருக்கு…” கௌதம் கடிக்க அதை பார்த்த மேகா.
“ஓகே இனிமே அழவே மாட்டேன்… போதுமா?”
“அதை நீ செயல்படுத்தும் போது நம்பறேன்… சரியா? அழுது எதை சாதிக்க முடியும் மேகா… என்னோட அப்பா இறக்கும் போது எனக்கு வயசு எட்டு! அந்த நேரத்துல அம்மா துவண்டு போய் அழுதுட்டு உட்கார்ந்து இருந்தா என்னால இந்த நிலைமைல இருந்து இருக்க முடியாதுடா… அவங்க அந்த இழப்ப தனக்குள்ள போட்டு புதைச்சிட்டு தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்காங்க! எங்க சொந்தகாரங்களும் பெருசா ஹெல்ப் பண்ணல… சித்தப்பாவ தவிர… அப்போ சித்தப்பா கொடுத்த தைரியமும் அம்மாவோட தன்னம்பிக்கையும் அர்ஜுனோட தன்னலமில்லாத ஊக்கமும்தான் இப்போ உன் முன்னாடி இருக்கற கௌதம்! அந்த மாதிரி ஒரு நிலை இல்ல மேகா உனக்கு… உனக்கு எல்லா வசதியையும் உங்க அப்பா செய்து வைச்சுட்டு தான் போயிருக்கார்! எல்லா கட்டுக்களையும் உடைச்சுட்டு வெளிய வா… இந்த உலகமே அழகா தெரியும்! எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற முடியும்…”
“கண்டிப்பா கௌதம்… நீங்க சொல்றது புரியுது… என் மேல அன்பு செலுத்த யாருமே இல்லைன்னு எனக்கு நானே சொல்லிட்டே இருந்துட்டேன்… அதுதான் என்னோட எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்… இனிமே கண்டிப்பா தைரியமா இருப்பேன்…”
“எப்படி நம்பறது?”
“அதான் நீங்க என்னோட நண்பரா இருக்கீங்களே கௌதம்… இதை விட எனக்கு வேற என்ன வேணும்? கண்டிப்பா சாதிப்பேன் கௌதம்…”
நண்பனா தானா? வேற ஒன்னுமில்லையா? கௌதம் மனதுக்குள் கேள்வி! ஆனாலும் எதுவாக இருந்தாலும் அவளது வாயிலிருந்தே வரட்டும்! நான் கூறி அதை அவள் ஏற்பது என்பது எப்போதாக இருந்தாலும் பிரச்சனைக்கு வழிவகுக்கும்! காத்திருப்போம்!
“நான் இருக்கேன் மேகா… உனக்கு எதுக்குடா கவலை? ஓகே… சரி இப்போ சிரி பார்க்கலாம்…” என்று புன்னகைத்து கொண்டே சொல்லவும்
“ம்ம்ம்” என்று முறைத்தவாறே பார்த்து விட்டு கையால் வாயை இழுத்து “ஈஈஈஈஈஈ… போதுமா குருஜி?”
“ஐயோ… வேணாம்… இதுக்கு நீ சிரிக்காமலே இருக்கலாம்… ஐயோ எங்கம்மா எனக்கு வேப்பிலை தான் அடிக்கணும்… அது சரி… அதென்ன குருஜி?”
“ஆமா குருஜி… நீங்க தான் பயங்கர பயங்கரமா அட்வைஸ் மழை பொழியறீங்களே… அப்போ நீங்க குருஜி தானே!” என்று கூறி அவனை பார்த்து மனம் விட்டு சிரித்தாள் மேகா!





