அத்தியாயம் இருபது
ஐந்து வருடங்களுக்கு பிறகு.
“’கங்காருலேஷன்ஸ் மேகா…” என்று குறும்பு புன்னகையோடு சொன்ன கௌதமை பார்த்து குழப்பமாக
“எதுக்குகுகுகுகு… குருஜி…” எதுவும் ஓட்டுவதற்காக அவன் இப்படித்தான் ஆரம்பிப்பான் என்பது தான் அவளுக்கு தெரியுமே!
இதற்கிடையில் அவளது வளர்ச்சியை சொல்லியே தீர வேண்டும்! ஐந்து வருடங்கள் முன்பு தீ விபத்தால் (அப்படித்தான் பதிவு செய்யப்பட்டது… சசி, விஷால், சுரேஷ் பெயர் வெளியே வராமல் இருக்க கௌதமின் யோசனை ) பாதிக்கப்பட்ட கடையை சீரமைத்ததொடு தமிழகத்தில் நான்கு கிளைகள் நிறுவியதோடு இல்லாமல் பெங்களூரு, ஹைதராபாத்… என்று விரிந்து… அதன் பின் போன வாரத்தில் சிங்கப்பூரிலும் கால் பதித்து விட்டாள்! எங்கும் கணபதி ஸ்டோர்ஸ் என்பதே அவளது தாரக மந்திரமாக இருந்தது! இது முழுக்க முழுக்க கௌதமுடைய கைங்கரியம் என்பது எல்லோரும் அறிந்த ரகசியம் தானே! ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் உழைக்க தயாராக இருந்தாள் மேகா… அவளை மிக சரியாக உபயோகபடுத்தினான் கௌதம்! ஆனால் எண்பது சதவித வேலைகளை அவன் பார்த்து விட மீதமுள்ள இருபது சதவித வேலைகளே அவளுக்கு வரும்! ஆனாலும் மேகாவை முன்னிறுத்துவதில் அவனுக்கு நிகர் அவன் தான்!
அவளது கைகளை பற்றியவன்,
“CII அவார்டீய பார்த்து என்ன சொல்ல முடியும் மேகா…” என்று சந்தோஷத்தை அடக்கிய குரலில் சொல்ல மேகாவுடைய முகம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை தெறித்தது!
“கௌதம்…” கண்கள் விரிய சந்தோஷத்தை வெளிப்படுத்த
“எஸ் மேன்… நீ தான் இந்த வருஷ வின்னர்… யாஹூ…” என்று குதித்து அவளையும் தூக்கி தட்டாமாலை சுற்றினான்!
சிஐஐ கூட்டமைப்பின் கான்பிரன்ஸ் ஹால்
மும்பையில் இந்தியாவின் சிறந்த தொழிலதிபர்களின் கூட்டமைப்பு! இந்த கூட்டமைப்பின் விருது என்பது பல இளம் தொழிலதிபர்களின் கனவு!
ஹாலில் முதல் வரிசையில் கௌதம், மேகாவுடன் அஞ்சலியும் அர்ஜுனும் தனது ஒரு வயது வாண்டு ஸ்ரீவர்ஷனுடன் அமர்ந்து இருக்க வானமாமலை மேடையில் கம்பீரமாக அமர்ந்து இருந்தார்… சிஐஐ செயலாளர் என்பதால்! இந்த இரண்டு வருடங்களில் கௌதம் விளம்பர உலகின் முதன்மையான இடத்தில் இருந்தான்! இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவில் இவனது விளம்பர படங்கள் பேசப்பட்டது!
“பசி நோக்கார் கண் துஞ்சார்” என்று உழைத்த அவனது இந்த உழைப்பு இன்று கொண்டாடப்பட்டது! கௌதம் பக்கத்தில் வந்து அமர்ந்தாள் அதிதி ஸ்ரீவத்சவா… சிஐஐ தலைவர் நாராயன் ஸ்ரீவத்சவாவின் ஒரே செல்ல புத்திரி! உடை அணிந்திருந்த பாங்கே கவர்ச்சியை வெகுவாக அள்ளி தெளிக்க வெகு சாதாரணமாக கௌதம் கையை பற்றி கொண்டு பேச ஆரம்பித்தாள்! இருவரின் உரையாடல்கள் மேகாவின் கவனித்திலிருந்து தப்பவில்லை! தீ மூண்டது மேகாவினுள்! விட்டால் அதிதியை கண்களாலேயே எரித்து விடுபவள் போல உறுத்து முறைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்!
“ஹேய் மேகி… பக்கத்துல பார்த்தியா… அந்த அதிதிய… செம பிகர் இல்ல…” மேகாவின் காதை கடித்தான் கௌதம் அவனுக்கு அவனே ஆப்பு வைத்து கொள்வதை அறியாமல்!
“ஆமா ஆமா…”
“கண்ணுல என்னமா கவர்ச்சி பொங்குது பாரேன்…”
“ஆமா ஆமா…” அவளது கடுப்பை உணராமல்! ஏதாவது அழகான பெண்களை பார்த்தால் மேகாவிடம் கண்டிப்பாக கூறுவான்! இருவருக்கும் இயல்பான ஒன்று இது! அப்போதெல்லாம் உள்ளுக்குள் ஏதோ செய்தாலும் அவளது நண்பனுக்காக சேர்ந்து ரசித்து விட்டு… அவளும் ஏதாவது நகைச்சுவையாக கூறுவாள்! அப்போதெல்லாம் இந்த அளவு பொறாமை தீ பரவியதில்லை!
சட்டென உணர்ந்தாள் மேகா… ஏன் இவ்வளவு எரிச்சல் தனக்குள் அந்த பெண் கௌதமின் கைகளை பற்றியதற்க்கு? அவனது தொழிலில் இல்லாத பெண்கள் நட்பா? ஆனால் அவனது கட்டுப்பாடுகளை முழுமையாக உணர்ந்தவள் மேகா! அதிசயித்தும் இருக்கிறாள்! அழகை ஆராதிப்பான் ஆனால் ஒரு புள்ளி கூட அதிகமாக போக மாட்டான் என்பது அவளுக்கு முழுமையாக தெரிந்த ஒன்று! இன்று மட்டும் ஏன் தனக்குள் இப்படி ஒரு தீ பரவுகிறது?
“காதல்”
உணர்ந்த மறுவினாடி உடல் முழுவதும் குப்பென வியர்த்தது மேகாவுக்கு! தானா? காதலா? ஆமாம்! அப்படி இல்லையென்றால் தனக்கு இந்த பொறாமை வருவதற்கு வாய்ப்பு இல்லையே! கௌதமை பார்த்தாள் மேகா! கம்பீரமாக புல் சூட்டில் ஆண்மையின் முழு வடிவமாக அமர்ந்து இருந்தான்! அதிதி அவனது காதில் ஏதோ கூற அதற்கு புன்னகைத்த கௌதமை பார்க்க பார்க்க உள்ளுக்குள் கோபம் கனன்றது! விட்டால் சட்டையை பற்றி சண்டைக்கு போய் விடுபவள் போல முறைத்து கொண்டு இருந்தாள்! ஆனாலும் அவள் உணர்ந்த காதல் சுகமாய் இருந்தது!
மைக்கில் அறிவிப்பு வந்தது!
“மே ஐ ரெக்வஸ்ட் மிஸ்டர் வானமாமலை… அவர் செக்ரடரி டு பெலிசிடேட் தி அவார்ட்… டு மிஸ் மேகா கணபதி… லெட் அஸ் சியர் அப்…”
பலத்த கைதட்டலுக்கு இடையில் மேகா மேடைக்கு செல்ல… கௌதம் மற்றும் அஞ்சலியின் நிலையோ உணர்ச்சி மயமாக இருந்தது! மேகா அந்த அறிவிப்பாளரிடம் ஏதோ கூற
“மே ஐ ரெக்வஸ்ட் மிஸ்டர் கௌதம் நாராயணன் டு தி ஸ்டேஜ் ப்ளீஸ்… டு ஷேர் தி அவார்ட் வித் மிஸ் மேகா கணபதி!”
ஒரு கணம் திகைத்த கௌதம் புன்னகையோடு அஞ்சலியை பார்த்து விட்டு எழுந்து செல்ல… அரங்கம் கைதட்டல்களால் நிரம்பியது! கை தட்டல்களுக்கு இடையில் மேகாவுடன் சேர்ந்து விருதை பெற்று கொண்டான்! பெருமித புன்னகையோடு அவர்களிடம் அந்த விருதை கொடுத்தார் வானமாமலை! மைக்கை வாங்கிய மேகா.
“அனைவருக்கும் வணக்கம்… இந்த இடத்தில் நான் இப்போ இருக்கிறேன் என்றால் அதற்கு ஒரே காரணம் எனது நண்பர்கள்! வாழ்க்கையே வெறுத்து போய் இந்த உயிரே வேண்டாம் என்று நான் நினைத்த போது எனக்கு பக்கபலமாக இருந்தது என்னுடைய நண்பர்கள் மட்டுமே!
முதலில் அஞ்சலி… அடுத்தது அர்ஜுன் வானமாமலை!… நன்றி அஞ்சலி… நன்றி அர்ஜுன் நீங்கள் இருவரும் இல்லை என்றால் நான் என்னவாகி இருப்பேனோ தெரியாது! கடைசியாக…
ஆனால் முதன்மையான ஒரு நண்பர் என்னுடைய கௌதம்!… கௌதம் நாராயணன்! நான் அழுதபோது எனக்கு தோள் கொடுத்து… சிரித்த போது சிரித்து… சோர்ந்த போது உற்சாகப்படுத்தி… விரக்தியின் போது தாங்கி பிடித்து என்னுடைய சோதனையான காலத்தில் எனக்கு பக்கபலமாக இருந்து… எனக்கு என் வாழ்க்கையை வாழ கற்று கொடுத்தது என்னோட உயிர் நண்பர்… கௌதம்!
நீங்க இல்லைன்னா நான் இல்லை! இந்த இடம் எனக்கு இல்லை… இந்த பெயர் எனக்கு உரியதில்லை… இந்த உழைப்பை நான் உணர்ந்து இருக்கபோவதில்லை… அத்தனையும் செய்தது நீங்கள்… நீங்கள் மட்டுமே கௌதம்… இப்போது நான் இங்கே நிற்கிறேன் என்றால் அது நீங்க எனக்கு தந்தது… இந்த விருது உங்களுக்கு உரியது… ஐ லவ் யூ கௌதம்… ஐ லவ் யூ…”
அழகான ஆங்கிலத்தில்… உணர்ச்சிவசப்பட்டு மேகா கூறி விட்டு கௌதமை பார்க்க… அவனது நிலையோ வரையறுக்க முடியாத நிலையில் இருந்தது! அவனது பொறுமைக்கு தகுந்த விடையாக அவள்!
பார்ட்டி ஹாலில் பார்ட்டியை முடித்து விட்டு நால்வருமாக குட்டி வாண்டோடு கிளம்பியவர்களுக்குள் யார் முதலில் ஆரம்பிப்பது என்ற கேள்வி! ஒன்றும் பேசாதே என்று அர்ஜுன் சைகை செய்ததால் அஞ்சலி வாய் திறவாமல் வந்தாள்! எதுவாக இருந்தாலும் முதலில் அவர்களிருவரும் பேசி கொள்ளட்டும் என்ற எண்ணத்தில்!
அர்ஜுனின் மும்பை வீட்டில் இருவரையும் இறக்கி விட்டு… கௌதம் மேகாவை அழைத்து சென்ற இடம் அவனது மும்பை அலுவலகம்! அவனுக்கு அந்த தனிமை தேவைப்பட்டது சில விஷயங்களை மேகா மூலமாக தெளிவாக்க! அலுவலகத்தை அடைந்தவன் உள்ளே அழைத்து சென்றான்! மேல் கோட்டையும் டையையும் கழற்றி போட்டு விட்டு ஓய்வாக சோபாவில் அமரும் வரை கூட இருவருக்கும் ஒரு சிறு பேச்சுவார்த்தையும் இல்லை!
சோபாவின் நுனியில் மேகா அமர்ந்து இருந்ததை வைத்தே சொல்லி விடலாம் அவளது பதட்டத்தை! தண்ணீர் எடுத்து அவளுக்கு கொடுக்க அதை வாங்கியவள் ஒரே மூச்சில் குடித்து முடித்தாள்! அவளுக்கு தேவைப்பட்டது! நிமிர்ந்து அவனை பார்த்தவள் அப்போதுதான் கவனித்தாள் அவன் தன்னை வைத்த கண்ணை எடுக்காமல் பார்த்து கொண்டிருப்பதை!
“என்ன அப்படி பார்க்கறீங்க?” பாதி விழுங்கியும் விழுங்காமலும் கேட்க… புன்னகைத்தான் கௌதம்!
“ம்ம்ம்… என்ன பண்றதுன்னு தான்…”
“என்ன?”
நிமிர்ந்தவளுக்கு கண்கள் உயர்த்தி அவனை பார்ப்பதே பெரும் வேலையாக இருந்தது! தனிமையில் கௌதமுடன் இருந்ததே இல்லை என்று சொல்லவே முடியாது! இரவு ஒரு மணியை தாண்டும் போது கூட தொழில் நிமித்தமான விவாதங்கள் அவர்களிடையே வெகு சாதரணமான ஒன்று! அவற்றோடு எவ்வளவோ விஷயங்கள் அவர்களிடையே பகிர்ந்து கொள்வதும்… அதாவது வானத்தின் கீழ் உள்ள அனைத்து விஷயங்களையும் அந்த இரவு வேளைகளில் பேசியும் இருக்கின்றனர்! ஆனால் இந்த தனிமையை போல இருந்ததில்லை! மனம் படபடக்க அமர்ந்து இருந்தாள்!
“எந்த அர்த்தத்துல மேகா அப்படி சொன்ன?”
“எந்த அர்த்தத்துல சொல்லணும் கௌதம்?”
“நான் எடுத்துக்கற அர்த்தம் உனக்கு புரியாதது இல்லையே… என்னோட காதலுக்கு வயசு ஐந்தரை மேகா…”
முகம் சிவக்க அவன் பக்கம் நெருங்கி உட்கார்ந்தவள்,
“இதுக்கு மேலையும் என்னால எப்படிடா விளக்கமா சொல்றது?” கிசுகிசுப்பாக கூறியவள் அடுத்த நிமிடம் கௌதமின் இறுக்கமான அணைப்பில் இருந்தாள்! முகம் எங்கும் முத்தார்ச்சனை நடத்திய கௌதமின் அன்பு தாக்குதலை தாள முடியாமல் அவன் மேல் துவண்ட கொடியானாள் மேகா!
“வேணாம் ப்ளீஸ்… கௌதம்ம்ம்ம்ம்…”
“எனக்கு வேணுமே… ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்…”
“ச்சீ… விடுங்க…”
“ம்ம்ம்… அப்படியா… அப்படீன்னா என் கைக்குள்ள தான் இருக்கணும்… ஓகே வா…” என்று கூறிய கௌதமின் கையை பற்றி தன் கன்னத்தில் வைத்து கொண்ட மேகாவுக்கு இந்த உலகமே அழகானது!
“கௌதம்… ஏன் கௌதம்? இந்த அளவு நீங்க லவ் பண்றதுக்கு நான் தகுதியான ஆளா? அதுவும் நான் முதல்லயே சசிய லவ் பண்ணதெல்லாம் தெரிஞ்சவங்க நீங்க!”
“ப்ளீஸ் மேகா… அந்த பழைய கதையெல்லாம் பேசாதடா…”
“இல்ல கௌதம்… இந்த ஒரு முறை தான்… சொல்லுங்க ப்ளீஸ்!”
“முதல் முதல்ல உன்னை பார்த்தப்போவே நீ என் மனசுக்குள்ள வந்துட்டன்னு சொன்னா நம்புவியாடா…” என்று அவளது முகம் பார்த்து கூறியவனை அதிர்ச்சியோடு பார்த்தாள்!
“கௌதம்…”
“அப்போ நீ யாருன்னு எனக்கு தெரியல… ஆனா தெரிஞ்சப்போ எனக்கு ஏற்பட்ட மனசு கஷ்டத்த சொல்லவே முடியாது மேகா…”
“கௌதம்…”
“ஆமாம்… ஆனா மனச கட்டுபடுத்திகிட்டேன்… அதுவும் அந்த ஆக்சிடென்ட் அப்போ என்னோட நிலைய சொல்லவே முடியல… ப்ச்… ஆனா என்னவோ தப்புன்னு மட்டும் மனசுக்குள்ள ஒரு பட்சி சொல்லிகிட்டே இருந்தது…” மேகா மௌனமாக கேட்டு கொண்டிருந்தாள்!
“அதையெல்லாம் இப்போ எதுக்கு பேசிட்டு மேகா… ஆனா ஒரு விஷயம் எனக்கு இப்போவும் ஆச்சரியம் தர்றது சசி என்கிட்டே கடைசியா பேசினது தான்…”
“ஆமா முன்னாடியே சொல்லி இருக்கீங்க… என்ன சொன்னார்?” மெல்லிய குரலில் கேட்டாள்!
“நீ ஒரு பரிசுத்தமான தேவதைன்னு சொல்லி உன்னை பார்த்துக்க சொன்னான்… அதையும் என்கிட்டே சொன்னதுதான் என்னோட ஆச்சரியம்… அதுதான் அவனோட கடைசி பேச்சு மேகா… இதுனாலேயே அவன் மேல எனக்கு இருந்த கோபம் எல்லாம் போச்சு…”
“ஆனா எல்லா விஷயமும் தெரிஞ்சுகிட்டு எப்படி கௌதம்?”
“மேகா… ஒரு பாரதியார் பாட்டு தெரியுமா? காக்கை சிறகினிலே நந்தலாலா… நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா… அதாவது காக்கையோட நிறத்துல கூட கண்ணன பார்க்குற நிலை மேகா… அதாவது உண்மை காதலை பாரதியார் சொல்லி இருப்பார்… அதே நிலை தாண்டா என்னுடையதும்… அப்போவும் உன் கிட்ட நான் பார்த்தது தன்னலமில்லாத அன்பும் அப்பாவித்தனமும் தான்… நான் லவ் பண்ணதும் அதை தான்…” அவனது விளக்கம் அவளை மொத்தமாக கவிழ்த்தது!
“நான் ரொம்பவே கொடுத்து வெச்சு இருக்கேன் கௌதம்… தேங்க்ஸ்… தேங்க்ஸ் எ லாட்…” கண்களில் ஆனந்த கண்ணீர் சூழ நன்றி நவின்றவளை ஒரு மார்கமாக பார்த்து வைத்த கௌதம்.
“ஹேய்… நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்…”
“எதுக்கு?”
“நீ இப்படி வாகா என் மேலேயே இருந்தா எனக்கு அப்படியே மிதக்கற மாதிரி இருக்கு… செம கிக்கா… அதான் சொன்னேன்…” சிரிக்காமல் சொன்னவனை ஒரு கணம் புரியாமல் பார்த்தவள் பின்னர் அர்த்தம் புரிந்து அவனை தள்ளி விட்டு
“ம்ம்ம்… அதுக்கு நீங்க பார்ட்டில ஈஷிக்கிட்டு இருந்தீங்களே… அவ கிட்டயே போங்க…”
“எவ கிட்ட…” கொஞ்சலாக அவன் கேட்க
“அதான் அந்த அதிதி… அப்போ எனக்கு அப்படியே கோபம் வந்தது பாரு… மவனே அவ தான் ஈ ன்னு இளிச்சா நீயும் அப்படி ஈஷனுமா?” கோபம் கொப்பளிக்க மேகா கேட்க
“ஹேய் என்னடி மரியாதை குறையுது…”
“ஆமா… பின்ன… எவ கிட்டயாச்சும் வழிஞ்ச… உனக்கு மரியாதை கிடையாதுதான்…” மிரட்ட துவங்கியவளை காதலாக பார்த்தான் அந்த காதலன்.
“எவ கிட்ட வழிஞ்சேன்… எனக்கு தெரிஞ்ச பிகர் எல்லாம் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நீ மட்டும் தான்டி… ஆனா இப்போ முடிவு பண்ணிட்டேன்…”
“என்ன?”
“நீ இந்த லெவலுக்கு வர்றதுக்கே இவ்ளோ நாள்… இனிமே கல்யாணத்துக்கு எவ்வளவு நாளோ? அதான் கிடைச்ச பிகர எல்லாம் கரெக்ட் பண்ண முடிவு பண்ணிட்டேன்…”
“பண்ணுவ… பண்ணுவ… அதுக்கு உன்னை விட்டாதானே…”
கையில் கிடைத்த நோட்பேடை எடுத்து கொண்டு துரத்த… கௌதம் ஓட.
மேகத்தில் இருந்து வெளியே வந்த வெண்ணிலா ஒளி வெள்ளத்தை பாய்ச்சியது! சிலுசிலுவென வீசிய காற்றில் மயங்கின இரண்டு ஜோடிபுறாக்கள்! இனி அவர்களின் வாழ்வில் வசந்தம் மட்டுமே வீசும்!





