அத்தியாயம் நாற்பத்து ஒன்பது
“நோ… பக்கத்துல வந்தா நான் என்னை கொன்னுக்குவேன்… என்கிட்ட வராதீங்க…” விஜி கத்துவது வராண்டா வரை கேட்டது.
திக்கென்றது மகாவுக்கு. அச்சத்தோடு ஷ்யாமை பார்த்தாள். அவன் என்ன சொல்வான் என்று தெரியவில்லை. என்ன நினைக்கிறான் என்பதும் தெரியவில்லை. முஹூர்த்த சேலை எடுக்க போன இடத்தில் அப்படியொரு போன்கால். தான் சொன்னால் கோபப்படுவான் என்ற எண்ணத்தில் போனை ஷ்யாமிடம் தயங்கிக் கொண்டே கொடுத்து இருந்தாள் மஹா.
“சொல்லுங்க…” என்று இயல்பாக ஆரம்பித்தவனின் முகம் அவர் சொன்ன செய்தியில் கறுத்து மீண்டது.
“இப்ப என்ன பண்ணலாம்ன்னு நினைக்கிறீங்க டாக்டர்?” என்று அவன் கேட்க,
“ரொம்ப வயலன்ட்டா இருக்கு அவர் பிஹேவியர்… கண்ட்ரோல் பண்ண கஷ்டமா இருக்கு பாஸ்…” என்று கூற,
“எதாவது செடேட்டிவ்ஸ் கொடுத்து தூங்க வைக்க மாட்டீங்களா? அதுக்காக போன் பண்ணுவீங்களா?” ஷ்யாம் இறுக்கமாக கூற,
“ட்ரை பண்ணிட்டோம் பாஸ்.. எதுவும் முடியல… பக்கத்துல போகவே முடியல… நர்ஸ் எல்லாம் பயப்படறாங்க…” எனவும் அவனுக்கு துணுக்குற்றது.
“சம்ஹவ் மேனேஜ் பண்ணுங்க சாரதி… இதை கூட மேனேஜ் பண்ண தெரியாம இன்டென்சிவ் கேர்ல இருக்கீங்களா?” என்று பல்லைக் கடித்தான்.
“பாஸ்… மேனேஜ் பண்ணலாம்… ஆனா பேஷன்ட் ரொம்ப வயலன்ட்டா இருக்கும் போது என்ன பண்றதுன்னு தெரியல… அதுவும் பேஷன்ட் உங்க டைரக்ட் பேஷன்ட்ங்கறதால ரொம்ப பொறுமையா டீல் பண்ணிட்டு இருக்கோம்…” எனவும்,
“நாலு ஆளுங்களை வெச்சு கை காலை கட்டிப் போட்டு ஐவில இஞ்சக்ட் பண்ணுங்க… கூட செடேடிவ்ஸ் கொடுத்து தூங்க வைங்க… எதுக்கும் சீப் கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கங்க…” என்றவன், அதோடு முடிந்தது என்பதை போல வைத்து விட்டான்.
ஆனால் மஹாவால் அதை சுலபமாக கடக்க முடியவில்லை.
சுயநினைவு இல்லாத ஒருவன், அதுவும் சுகவீனமான ஒரு நிலையில் அவளை பார்க்க வேண்டும் என்று நினைப்பதை மனிதத் தன்மையுள்ள ஒரு மனிதியாக தவறாக கருத முடியவில்லை. ஆனால் பெரியவர்கள் அனைவரும் உள்ள நிலையில் ஷ்யாமை எதிர்த்து பேசுவதும் முடியாது.
மனதுக்குள் ஏதோவொரு குமைச்சல். அவளால் அங்கு இயல்பாக அமர்ந்து கொண்டிருக்க முடியவில்லை.
ஷ்யாம் அவளது முக மாற்றங்களை பார்வையிட்டுக் கொண்டு தான் இருந்தான். சாண் ஏறினால் முழம் சறுக்குகிறது என்று சொல்வார்களே… அது போலத்தான் இருந்தது அவனது நிலை. விஜி விஷயத்தில் அவளை ஹர்ட் செய்ய மாட்டேன் என்று தான் கூறியிருந்தானே தவிர, அவளது நடவடிக்கைகள் அனைத்தையும் ஒப்புக்கொள்ளவோ, ஏற்றுக்கொள்ளவோ அவளிடம் வாக்கு கொடுக்கவில்லை.
அவனுக்கு நினைவே இல்லையென்றாலும் விஜய்யை அவள் பார்ப்பதை ஷ்யாம் விரும்பவே இல்லை. எப்படி இருந்தாலும் அவள் தன்னுடைய நிலையிலிருந்து மாற மாட்டாள் என்றாலும், தான் மட்டுமே கீழறங்கி போக வேண்டும் என்றாலும், அவனால் ஒப்புக் கொள்ள முடியவில்லை.
அவன் எப்படி போனால் என்ன என்ற நினைவுதான். இத்தனைக்கும் இன்று அவனது பெற்றோரும் வேறு வந்து விட்டதாக தகவல் வந்திருந்தது. வந்தவர்களை பார்த்தவனுக்கு எதுவும் நினைவுக்கு வரவில்லை என்றும் முன்னரே அந்த மருத்துவர் அழைத்துக் கூறியிருந்தார். ஆனால் ஷ்யாமால் அதை நம்ப முடியவில்லை, இப்போதும். அவன் நடிப்பதாக தான் எண்ணிக் கொண்டிருந்தான்.
எதுவும் பேசாமல் மற்றவர்களுக்கான புடவைகளை தேர்ந்தெடுப்பதை பார்த்துக் கொண்டிருந்தவன், மெல்ல எழுந்து வெளியே சென்றான். அவன் செல்வதை பார்த்த கார்த்திக், பிருந்தாவிடம் கூறிவிட்டு, அவனை நோக்கி சென்றான்.
கார் பார்க்கிங் போனவன், சிகரெட் ஒன்றை இழுத்துப் பற்ற வைக்க, கார்த்திக் அருகில் வந்தான்.
ஷ்யாம் அவனிடம் சிகரெட்டை நீட்ட, வேண்டாமென மறுத்தான் கார்த்திக். அவனுக்கு எப்போதாவது மது அருந்தும் பழக்கம் உண்டு. ஆனால் சிகரெட் தொட மாட்டான். மதுவும் கூட தினமோ, வார இறுதியோ என்றெல்லாம் இல்லை. தோன்றினால் எப்போதாவது தான்!
“என்ன மச்சான்?” என்று கார்த்திக் கேட்டான். எதுவோ பிரச்சனை என்று புரிந்தது. ஆனால் என்னவென புரியவில்லை.
“ஹாஸ்பிடல்ல விஜி நேத்து நைட்ல இருந்து சாப்பிடலையாம்… கொஞ்சம் டிஸ்ஒரின்ட்டான மாதிரி தெரியுது போல…” என்று நடந்தவைகளை சுருக்கமாக புகையை ஆழ்ந்து இழுத்து விட்டபடி ஷ்யாம் கூற, அவனை வியாகூலமாக பார்த்தான். ஆனால் எதுவும் பேசவில்லை.
“என்ன கார்த்திக் நினைக்கற?” என்று ஷ்யாம் கேட்க, மெளனமாக அவனை பார்த்தவன்,
“அவனை பத்தி எந்தவொரு டெசிஷனுக்கும் வர முடியல ஷ்யாம்…” என்றவன், “ஆனா மஹாவை கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிதான் வெச்சாகணும்… அவளுக்கு அவனை பற்றி தெரியாது… ஆனா நமக்கு தெரியும்ல…” என்று கூற, ஷ்யாம் தலையாட்டினான்.
“ம்ம்ம்… ஆனா அவளுக்கு ப்ராமிஸ் பண்ணிருக்கேன்… விஜி விஷயத்துல அவளை ஹர்ட் பண்ற மாதிரி எதுவும் பண்ண மாட்டேன்னு…” என்று கூற,
“இது உனக்கு தேவையில்லாத ப்ராமிஸ்… நமக்கு நம்ம லைப் முதல்ல முக்கியம்… அப்புறமா அடுத்தவனுக்கு பார்க்கலாம்…” சற்று கோபமாக கூறினான்.
“நானும் அவ கிட்ட சொல்லிட்டே தான் இருக்கேன் கார்த்திக்… ஆனா அவளுக்கு ஒரு குற்ற உணர்வு ஆல்ரெடி டெவலப்பாகிடுச்சு…”
“இது தேவையில்லாத குற்ற உணர்வு… அவளுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லையே… நீ செய்ற ஒவ்வொரு விஷயத்துலையும் அவ இந்த மாதிரி தலையிட்டுட்டு இருந்தா சரி வராது ஷ்யாம்… நான் லட்டு கிட்ட பேசறேன்…” என்று நடுநிலையாக கூறினான். அவனைப் பொறுத்தவரை ஷ்யாமை ஏற்றுக் கொண்டபின் தான் நினைத்தது போல தான் அவன் செயல்பட வேண்டும் என்று நினைப்பது தவறு. அது வாழ்க்கை எனும் படகை கவிழ்த்து விட்டுவிடும்.
இத்தனை நாட்களாக அவள் இருந்து ஷ்யாம் ஜீவிக்கவில்லை. அவள் சொல்லி தொழிலை நடத்தவில்லை. அவன் அளவுக்கு அனுபவமும் இல்லை, பரிட்சயமும் இல்லை எனும் போது, அவன் மேல் அளவுக்கு மீறி அவள் ஆதிக்கம் செலுத்த முயல்வதை போல உணர்ந்தான். அதை அவன் கூறவில்லை. என்ன இருந்தாலும் தங்கையை, அவளது எதிர்கால கணவன் என்றாலுமே ஓரளவுக்கு மேல் விட்டுக் கொடுத்து பேசமுடியாது. அது சரி வரவும் வராது.
அதிலும் விஜி மாதிரியான ஒருவன்… அவன் செய்த காரியங்கள்… அதன் பொருட்டு வந்த பிரச்சனைகள் என்று அனைத்தும் கார்த்திக்கின் கண் முன் வலம் வந்தன. இத்தனையையும் அறிந்தும் மஹா இப்படி செயல்படுவது முட்டாள் தனமில்லையா? எதில் மனிதத் தன்மையை காட்டுவது?
இப்போது மனிதத் தன்மையை காட்டி விட்டால் அவளுக்கு சிலை வைத்து விடுவானா விஜி?
அவனுக்கு உண்மையில் நினைவு தப்பவில்லை என்றால், இவளை வைத்து ஷ்யாமை அடிக்க நினைத்தால் இவளது பரிதாபம், மற்றவர்களுக்கு பரிகாசமாக போய்விடாதா?
“அதுக்கு எதுக்கு மஹாவுக்கு போன் பண்ணாங்க?” என்று கேட்க,
“இவ வந்தாதான் சாப்பிடுவேன்னு அடம் பண்றானாம்…” என்று கூற,
“கண்டிப்பா அவன் ப்ளான் பண்றான் ஷ்யாம்…” என்றான் கார்த்திக்.
“ம்ம்ம்… நானும் அப்படித்தான் நினைக்கறேன்…” என்று சிகரெட்டை கீழே போட்டு மிதித்தான்.
“சிகரெட் வேண்டாமே ஷ்யாம்…” என்றவனை, பார்த்து சிரித்தவன்,
“குறைச்சுட்டேன் கார்த்திக்… விடறது உன் பாசமலர் கைல தான் இருக்கு…” என்று குறும்பாக புன்னகைக்க, கார்த்திக்கும் புன்னகைத்தான்.
இருவருமே ஒன்றாக கடைக்குள் நுழைய, புடவைகள் எடுத்து முடிக்கப்பட்டு பில்லிங்கில் இருந்தது. பில்லை இருவருமாக செட்டில் செய்துவிட்டு, புடவை பர்சேசை முடித்தவர்கள் மதிய உணவுக்காக சரவண பவனுக்குள் நுழைந்தனர்.
அனைவருமாக முன்னால் நுழைய, பிருந்தாவை தேக்கி தன்னோடு அழைத்துக் கொண்டு போனான் கார்த்திக்.
“என்ன திடீர்ன்னு என்னை கண்ணுக்கு தெரியுது?” மனத்தாங்கல் அவளுக்கு!
“ஹேய்… உனக்கு கோபம் கூட வருமா?” என்று சிரித்தான் கார்த்திக்.
“ஆமா… எனக்குத்தான் எந்த ஃபீலிங்க்ஸும் கிடையாதே…” என்றவள், அங்கிருந்த செடிகளின் இலைகளை பறித்து போட்டபடி வர,
“அதையேன் பிச்சுட்டு இருக்க பிருந்தா?” என்றவன், அவளது கரங்களிலிருந்த இலையை பிடுங்க,
“உங்களை பிச்சு போட முடியல… அந்த கோபத்தை இப்படி ஆத்திக்கறேன்…” என்றவள் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள்.
“ஏன் மேடம் க்கு இவ்வளவு கோபம்…” என்றவன் ஓரப்பார்வையாக உள்ளே சென்றவர்களை பார்த்துக் கொண்டான். இத்தனை பேச்சும் மெல்ல நடந்தபடிதான்.
அவனை முறைத்தவள், அவனை விடுத்து வேகமாக உள்ளே போக முயல, “பிருந்தா…” என்றழைக்க, வேக நடையிட்டவள் நின்றாள்.
“என்ன?”
“என்னன்னே சொல்லாம இப்படி கோபப்பட்டா என்ன பண்ண?” என்று பாவமாக இவன் கேட்க,
“உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது… தெரிஞ்சுக்கவும் மாட்டீங்க… விடுங்க… நான் இப்படியே இருந்துடறேன்…” என்று சிறிய குரலில் வெடித்தாள்.
அவ்வளவு ஆசையாகத்தான் புடவை எடுக்க வந்தாள். கார்த்திக்குடன் சற்று நேரம் செலவிடலாம் என்ற ஆசை. ஆனால் அவன் வந்ததே லேட். அதோடு குடும்பத்தின் மீது மட்டுமே பார்வையை செலுத்துவேன் என்பதை போல அவன் நின்று கொண்டிருக்க அவளுக்குத்தான் வெறுத்து விட்டது. மஹாவே வலுகட்டாயமாக, ‘அண்ணியை பார்’ என்று நாசூக்காய் கூறினாலும் அதையும் காதில் வாங்கிக் கொள்ளாத மரமண்டை என்று மனதுக்குள் திட்டிக் கொண்டாள்.
ஏக்கமாக அவனை பார்த்தாலும், அதை கண்டுக் கொண்டால் தானே?
பைரவியாக அவளை இழுத்து பேச்சுத் துணைக்கு வைத்துக் கொண்டார், அவளது ஏக்க பார்வையை கணக்கில் கொண்டு. பாவம் இந்த பெண் என்ற நினைப்பு போலும். உடன் ஜோதியும் வேறு… பொழுது நன்றாகத்தான் போனது. ஆனாலும் கார்த்திக்கின் அருகாமையை அவள் மொத்தமாக மிஸ் செய்துகொண்டிருந்தாள்.
“கார்த்திக்… பிருந்தாவுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா…” என்று தனியாக நின்று கொண்டிருந்தவனை பைரவி ஊக்க, சரியென்று அவன் தலையாட்டிக் கொண்டிருக்கும் போதே ஷ்யாம் வெளியே போக, அவனோடு இவனும் ஓடி விட்டான்.
எதற்காக தான் இங்கு வரவேண்டும் என்றாகி விட்டது. காதலை உரைக்க தயக்கம். காதலியோடு பேச தயக்கம். காதலை பற்றி பேசவே தயக்கம் என்றிருந்தால் தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயம் ஒரு மூலையில் உதித்தது.
ஒரு சிலருக்கு காதலை கலாட்டாவாக சொல்ல தெரியும். ஷ்யாமை போல… அவர்கள் தளைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். அவற்றை பற்றி கவலைப் படாதவர்கள்.
ஆனால் ஒரு சிலருக்கு காதலை கவிதையாக மனதுக்குள் பூட்டி வைத்து அழகு பார்க்க தான் தெரியும். கார்த்திக்கை போல. குடும்பம் எனும் தளைக்கு கட்டுப்பட்டவர்கள் அவர்கள்.
இருவரது காதலும் குறைவானது அல்ல… குறைத்து மதிப்பிடக் கூடியதும் அல்ல… பின்னவன் தென்றல்… முன்னவன் புயல்!
பிருந்தாவுக்கு முன்னமே மனத்தாங்கல் இருந்தது தான், தன்னிடம் பேசுவதில்லை என்று… இப்போது அது இன்னும் அதிகமாகி விட்டிருந்தது.
“நீ மெச்சுர்ட்டான பொண்ணுன்னு நினைச்சுட்டேன்…” அவளருகில் சென்றவன், மனம் வருந்தினான். அவனுக்கும் அவளைக் காயப்படுத்தவெல்லாம் மனமில்லை. அவனையும் அறியாமல் என்றெல்லாம் சொல்லவும் இல்லை. ஆனால் தனக்கு கீழிருக்கும் தங்கைக்கு உதாரணமாக மட்டுமே இருக்க விரும்பினான். அது பிருந்தாவிடம் இப்படி எதிரொலிக்கும் என்று அவன் சற்றும் நினைக்கவில்லை.
“நான் மெச்சுர்ட் கிடையாது… அரவேக்காடு தான்… சரியா? உங்களுக்கு நான் வேண்டாம்…” என்றவள் கோபமாக கூறிவிட்டு போக முயன்றாள்.
“நீ வேண்டாம்ன்னு எப்ப சொன்னேன் பிருந்தா?”
“வார்த்தையால சொன்னாத்தான் ஆச்சா?” என்று பிருந்தா இறங்கிய குரலில் கொதிப்பாக கேட்க,
“அதே தான் நானும் சொல்றேன்… வார்த்தையால சொன்னாத்தான் ஆச்சா? நமக்குள்ள இருக்கற பாண்டிங் வெறும் வார்த்தைகளால கட்டமைக்கப் படறது இல்ல பிருந்தா… சம்திங் மோர்…” என்றவன், அவளது கையை பிடித்து, “என்னால ஐ லவ் யூ தினமும் சொல்ல முடியாது… ரோஸ் கொடுத்து உன்னை ப்ரொபோஸ் செய்ய தெரியாது… அசர வைக்கற மாதிரி பேச தெரியாது… ஆனா இப்ப பிடிக்கற கையை வாழ்நாள் முழுக்க விட்டுட மாட்டேன்னு உனக்கு உறுதியை கொடுக்க முடியும்… என்னோட பட்டர் ஹாஃப்பை கண்ணுக்குள்ள வெச்சு பார்த்துக்க தெரியும் பிருந்தா…” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.
ஒன்றும் தெரியாது என்று கூறியே இப்படி வசியப்படுத்துவான் என்று நினைக்கவில்லையே!
“வாட் எ மெடிக்கல் மிராக்கில்… மொத்தமா இத்தனை வார்த்தை பேசிட்டீங்க…” என்று சிரிக்க,
“மஹா கல்யாணம் முடியட்டும்… அப்புறம் பாரு..” என்றவனை ரசித்துப் பார்த்தவள்,
“ப்ரோ உங்களை பாசமலர்ன்னு கிண்டல் பண்றதுல தப்பே இல்ல… ஓவர் சீன்…” என்று சிரித்தாள்.
“வாலு…” என்றவன், அவளது கையை பிடித்தபடியே ஹோட்டலுக்குள் அழைத்து சென்றான். யாரும் எதுவும் சொல்லிவிட மாட்டார்கள் தான். ஆனால் அவனுக்காய் இருந்த தயக்கம். பிருந்தாவின் கோபம் அவனை சற்று தயக்கத்திலிருந்து மீட்டது.
இருவருமாய் கையைப் பிடித்தபடி வந்ததை ஷ்யாம் கவனித்துவிட்டு மகாவிடம் கண்களால் காட்டினான். விஜியின் நிலையை நினைத்தபடி ஷ்யாமிடம் முகம் கொடுக்காமல் இருந்த மஹாவே சட்டென பிருந்தாவை பார்த்து புன்னகைத்தாள்.
இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி…
அதற்கு பின் மதிய உணவு முழுக்கவே கார்த்திக்கும் பிருந்தாவும் அருகே அமர்ந்து கிசுகிசுவென பேசியபடியே உணவை உண்ண, இவர்கள் இருவரும் மெளனமாக உண்டனர்.
இப்போது சற்று இறங்கினாலும், அவள் மீண்டும் உச்சியில் அமர்ந்து கொண்டு விஜியை பார்த்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பாள் என்பதால் பேசுவதையே தவிர்த்தான் ஷ்யாம்.
அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் உணவை உள்ளே தள்ளினாள் மஹா.
பெரியவர்கள் அவர்களது பேச்சில் மூழ்கியிருக்க, கார்த்திக் பிருந்தாவிடம் பேச்சில் ஒன்றியிருக்க, இந்த இரண்டு பேரின் கோல்ட் வார் யார் கண்களிலும் படாமல் போனது.
உண்டு முடிக்கும் போதே மீண்டும் அவளது செல்பேசி அழைத்தது.
தெரியாத எண்!
யோசனையாக காதுக்குக் கொடுத்தாள்.
“சாமீ தங்கம்… மகாலக்ஷ்மியாம்மா பேசறது?” வெகுவான தவிப்போடு யாரோ ஒரு பெண் கேட்க, அந்த தொனி அவளை ஏதோ செய்தது. விளிம்பு நிலை மக்களின் கடைசி குரல் அது!
“ஆமாங்க… நீங்க யார் பேசறது?” என்று கேட்க,
“நான் விஜியோட அம்மா பேசறேன் தங்கம்…” என்று வாயை மூடிக்கொண்டு அழுதபடி அவர் கூற, அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“சொல்லுங்கம்மா…” என்று அவள் கூற,
“தயவு செஞ்சு என் பையனை காப்பாத்தி கொடும்மா… யார் யாரோ என்ன்னவோ சொல்றாங்க… எதுவும் உண்மையா இருக்க கூடாதுன்னு மனசு கிடந்து பதறுது… உன் பேர மட்டும் தான் அவன் சொல்றானாம்… தயவு செஞ்சு காப்பாத்து தெய்வமே…” என்றவர் வெடித்து அழுதார். முந்தைய தினம் தான் அவர்களுக்கு தகவல் கொடுக்கபட்டிருந்தது. அன்று காலை முதலே மருத்துமனையில் தான் இருந்தார் அவர்.
கணவருக்கு முழு ஓய்வில் இருந்தாக வேண்டிய கட்டாயம். மகனை அவரது துணைக்கு வைத்து விட்டு தான் மட்டும் கிளம்பி வந்திருந்தார். கிராமத்து பெண்மணி.
பிரச்சனைகளை மேலோட்டமாக கூறியிருந்தனர். எதனால் இப்படியாகி இருக்கக் கூடும் என்று கேட்கும் போது பதில் சொல்லித்தானே தீர வேண்டும்?
“ம்மா… அப்படியெல்லாம் நான் வர முடியாது… தயவு பண்ணி புரிஞ்சுக்கங்க…” என்று மறுத்தும் பார்க்க,
“அப்படி சொல்லாத சாமீ… இவன் தான் என் மூத்த பையன்… என் குலத்துக்கே விளக்கம் இவனால தான்… இப்ப இவனே இப்படி கெடக்கறதை பார்த்தா நெஞ்சே வெடிச்சுரும் போல இருக்கே தாயீ… தயவு காட்டும்மா…” என்று அவர் கெஞ்ச, அவள் சங்கடமாக ஷ்யாமை பார்த்தாள்.
அவன் எதையும் கண்டுக்கொள்ளாமல் உண்பதில் மட்டும் கவனத்தை செலுத்துவது போல காட்டிக் கொண்டிருந்தான். மகாவுக்கு கோபம் பற்றியது!
“ஷ்யாம்ம்ம்ம்…” பல்லைக் கடித்துக் கொண்டு அவனை அழைத்தாள்.
“ம்ம்ம்…” எதிரே அமர்ந்திருந்த பெரியவர்களை எல்லாம் பார்த்தவள்,
“அந்த விஜியோட அம்மா கெஞ்சறாங்க…” என்று இவள் கெஞ்ச,
“சோ வாட்?” என்றான் வெகு இயல்பாக!
“ப்ளீஸ்…” என்று கெஞ்சினாள்.
“யாரைப் பற்றியும் எனக்கு கவலை இல்ல…”
“மினிமம் மனுஷத்தன்மையாவது வேணும் ஷ்யாம்…”
“சாரி… ஸ்டாக் இல்ல…” என்றவன் உணவை உள்ளே தள்ளினான்.
“சரி… நீ இப்படியே இரு… நான் போய் பார்க்கணும்…” என்று எழுந்து கைகழுவ போக, அவள் போன திசையை வெறித்தான்.
***
ப்ரைவேட் ஐசியுவுக்குள் நுழையும் போதே விஜியின் கத்தல் கேட்க, மஹா அவசரமாக நுழைந்தாள். ஷ்யாம் பின்னால் வர, அழுது கொண்டிருந்த விஜியின் தாயை பார்த்து கை காட்டி அமர சொல்லிவிட்டு, அறைக்குள் நுழைய, காளிக்கு ஆண்பாலாக உக்கிரமாக அமர்ந்திருந்தான் விஜி!
“யாரையும் பக்கத்துல போக விட மாட்டேங்கறார்… ட்ரசிங் பண்ண விடலை… சாப்பிடலை… நைட் முழுக்க தூங்கலை… ஹெவிலி டிஸ்ஓரியன்ட்டட்…” என்று ஷ்யாமிடம் மருத்துவர் கூற, தைரியமாக அவனுக்கு அருகில் சென்றாள் மஹா.
அவனுக்கு முன்னால் சென்று அவனைப் பார்க்க, கீழே எதுவோ விழுந்து விட்டதை போல கோபமாக தேடிக்கொண்டு இருந்தான்.
“விஜி…” என்று மஹா அழைக்க, தேடுவதை நிறுத்தி விட்டு அவளை பார்த்தான்.
கண்களில் கருவளையம் விழுந்து கறுத்திருந்தான். முன்தினம் முதல் உண்ணவில்லை, உறங்கவில்லை என்பது அவனது கண்களில் தெரிந்தது.
“கொஞ்ச நேரம் கூடவா தூங்கலை?” சற்று அதிர்ச்சியாக கேட்டான் ஷ்யாம்.
“ஆமா பாஸ்… டிஸ்ஒரியன்டேஷன்… ஹெவி ஸ்ட்ரெஸ்… ஆல்கஹால் அப்யுஸ்… ஆக்சிடென்ட்… இன்னும் நிறைய பேக்டர்ஸ்… இப்ப அவருக்கு தெரிஞ்ச ஒரே பிம்பம் மஹா மேம் மட்டும் தான்… சாப்பிட சொன்னா எனக்கு மஹா சாப்பாடு கொண்டு வருவாங்கன்னு சொல்லி சாப்பிடலை… ட்ரிப்ஸ் போட்டுக்கலை… நாங்களும் எவ்வளவோ ஃபோர்ஸ் பண்ணி பார்த்தோம்… ஒன்னும் முடியல பாஸ்…”
“அம்னீசியான்னு மட்டும் தானே சொன்னீங்க?” அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை, விஜியின் நிலையை பார்த்து!
நிமிர்ந்து மகாவை பார்த்த விஜியின் கண்கள் கலங்கியது. கண்ணிமைகள் ஒரு இடத்தில் நில்லாமல் அலைபாய்ந்தது. கைகள் இரண்டு புறமும் கட்டப்பட்டு இருக்க, கால்களும் கட்டப்பட்டு இருந்தது. படுக்கையிலேயே மலம் கழித்து இருந்தான்.
“ஏன் கிளீன் பண்ணலை டாக்டர்?” ஷ்யாமே தாள முடியாமல் கேட்டு விட,
“பக்கத்துல யாரையும் விட மாட்டேங்கறார் பாஸ்… ரொம்ப அடிக்கறார்… வயலண்டா பிஹேவ் பண்றார்… பயப்படறாங்க எல்லாரும்…” என்று கூற, ஷ்யாம் தலையில் கைவைத்துக் கொண்டான்.
விஜியின் கண்களில் கண்ணீர் ஊற்று பெருகியது…
“மஹா…” என்று ஹீனமாக அழைத்தவன், “என்னை அடிக்க வேண்டாம்ன்னு சொல்லு மஹா… வலிக்குது… ஊசி போட்டு என்னை கொல்ல பாக்கறாங்க… பயமா இருக்கு மஹா… கட்டை கழட்ட சொல்லு மஹா…” வார்த்தைகள் குழறியபடி தான் வந்தது. பாதி புரிந்தும் புரியாத நிலை. சொல்லிவிட்டு அவன், வெடித்து அழ… பார்த்துக் கொண்டிருந்த ஷ்யாமின் கண்களில் கண்ணீர்.
அவனது அருகில் சென்ற மஹா, “உங்க கைகட்டை கழட்டினா நர்ஸ் உங்களை கிளீன் பண்ண ஒத்துக்கணும்…” என்று கூற, மெளனமாக தலையாட்டினான்.
மகா கைகாட்ட, அங்கிருந்த ஆண் நர்ஸ் வந்து கை கட்டுக்களை அவிழ்த்து விட்டான். அதுவரை பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தவன் மகாவின் ஒற்றை சொல்லுக்கு கட்டுப்படுவதை அனைவருமே ஆச்சரியமாக பார்த்தனர்.
இன்னும் இரண்டு ஆண் நர்ஸ்கள் வந்து, ஸ்க்ரீனை இழுத்து விட்டு, அவனை கிளீன் செய்து மாற்று உடையை அணிவித்து விட, சற்று தள்ளி நின்று கொண்டிருந்த ஷ்யாம் எங்கோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான்.
விஜி செய்ததெல்லாம் தவறுதான்… ஆனால் நிதானம் தவறிய தன்னுடைய பதிலடி இப்படியொரு விளைவை கொடுத்திருக்கிறது என்பதை அவனாலேயே ஜீரணிக்க முடியவில்லை.
“டாக்டர்… சாப்பாட்டை கொண்டு வர சொல்லுங்க…” என்று மஹா கேட்க, தயாராக இருந்த சூப்பையும் கஞ்சியையும் கொண்டு வந்தார்கள்.
“இல்ல… இங்க சாப்பிட மாட்டேன்…” விஜி மறுக்க,
“ஏன்?” என்று கேட்டாள் மஹா.
“இதுல விஷம் வெச்சு இருக்காங்க மஹா… உனக்கு தெரியாது…” என்றவன், அவளை அருகில் அழைத்தான். அவன் புறம் குனிந்த மகாவிடம்,
“நைட்டெல்லாம் என்னை எப்படி கொல்றதுன்னு ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க மஹா… எனக்கு இங்க பயமா இருக்கு… நான் பேசறதை கூட அவன் ரெக்கார்ட் பண்ணிட்டு இருக்கான் பாரு…” என்று அருகில் நின்றுகொண்டு அவனை பாவமாக பார்த்தபடி இருந்த ஆண் நர்சை காட்டிக் கூற,
“அப்படியா?” என்று கேட்டவள், “நான் இருக்கேன்ல… யாரும் உங்களை எதுவும் பண்ண முடியாது… நான் பார்த்துக்கறேன்… இந்த சாப்பாடு நான் கொண்டு வந்தது… நீங்க சாப்பிடுங்க விஜி…” என்று பரிவாக கூற, ஷ்யாம் கண்ணை சிமிட்டியபடி கண்ணீரை கட்டுப்படுத்தினான்.
விஜய்யின் மனதில் பதிந்த அப்ஷஷன்… வார்த்தைகளாக வெளிவருகிறது!
“அப்படியா? நீ தான் கொண்டு வந்தியா? அப்படீன்னா சாப்பிடறேன்…” என்றவன் ஆர்வமாக சூப் பவுலை வாங்கினான். அவனது செயலிலேயே அவனது பசி தெரிந்தது.
அதே ஆர்வத்தோடு ஸ்பூனை எடுத்தவனால் பிடிக்க முடியவில்லை. இடது கையில் கட்டு இருக்க, வலது கை கட்டப்பட்டு இருந்ததால் ரத்தம் கட்டி, சிவந்து வீங்கியிருந்தது.
அதை பார்த்தவள், அவனிடம் ஸ்பூனை வாங்கி, தானே ஊட்டி விட்டாள்.
ஷ்யாம் கண்களில் நீர் திரள பார்த்திருந்தான்.





