அத்தியாயம் நாற்பத்து எட்டு
காஞ்சிபுரத்தில் இருக்கும் அந்த பட்டு ஜவுளி மாளிகையை இரண்டாக்கிக் கொண்டிருந்தனர் இரு வீட்டாரும். முகூர்த்த பட்டுப் புடவை மற்றும் அனைத்து வைபவங்களுக்குமான பட்டுப் புடவைகளையும், மற்ற அனைவருக்கும் எடுக்க வேண்டிய புடவைகளையும் எடுப்பதற்காக வந்திருந்தனர்.
பாரம்பரியமான பட்டு மாளிகை அது. புடவைகளை அவர்களே நெய்து நேரடியாக விற்பனை செய்பவர்கள். திருமண பட்டுக்கு பெயர் வாங்கிய இடம். ஷ்யாமின் பாட்டி காலம் முதலே அனைத்து திருமணங்களுக்கும் அங்கு மட்டுமே புடவைகளை எடுப்பார்கள். அதோடு ஜோதி எப்போது சென்னை வந்தாலும், அங்கு பட்டு புடவைகளை பர்சேஸ் செய்யாமல் போக மாட்டார் என்பதால் அவர்கள் நன்கு அறிமுகம். நல்ல மரியாதையும் கூட! முந்தைய தினமே சொல்லி வைத்ததால் உரிமையாளரே வரவேற்று, புடவைகளை காட்டிக் கொண்டிருந்தார்.
பட்டுப்புடவையை எடுத்து, காமாக்ஷி அம்மனிடம் பூஜை செய்தபின் தான் அவர்களுடைய வழக்கத்தில் திருமண சடங்குகள் ஆரம்பமாகும். அதுவொரு தனி வைபவம்.
காலையிலேயே மகாவை அழைத்துக் கொண்டு எல்லோரும் வந்துவிட, ஷ்யாமும் கார்த்தியும் மட்டும் ப்ரொடியுசர் கவுன்சில் மீட்டிங் முடித்து விட்டு வருவதாக கூறியிருந்தனர். முந்தைய தின மீட்டிங் தள்ளி வைக்கப்பட்டு, காலையில் தான் சற்று உரசலோடு முடிந்து இருந்தது.
விநாயகமூர்த்தி தன் பக்கம் சில தயாரிப்பாளர்களை சேர்த்துக் கொண்டு ஷ்யாமுக்கு எதிராக காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். விநாயகமூர்த்தி கவுன்சிலில் வலுவான மனிதர். அதனால் தான் பிரச்சனை என்று வந்த போது அவரை நாடினான் கார்த்திக். அவரோ ஷ்யாம் என்றதும் வாயில் வடை சுட்டு விற்று போய்விட்டார்.
கவுன்சில் மீட்டிங்கே பைனான்சியர்களின் அடக்குமுறையை எப்படி மீறுவது என்பது பற்றித்தான். அதிலும் அந்த மீட்டிங்கே ஷ்யாமை குறி வைத்து தான் என்ற நிலையில் கார்த்திக் ஷ்யாமை அழைத்துக் கொண்டு மீட்டிங்கின் முதல் வரிசையில் அமர்ந்து விட, தயாரிப்பாளர்கள் நெளிந்தனர்.
“தம்பி… கவுன்சில் மீட்டிங்ல மெம்பர்ஸ் மட்டும் தான் கலந்துக்கனும்… அது தெரியாதா?” விநாயகமூர்த்தி துணிந்து கூறிவிட, நிமிர்ந்து அமர்ந்தான் ஷ்யாம். அவர் தன்னைத்தான் தாக்குகிறார் என்பது புரியாதவனா அவன்?
கார்த்திக் என்ன பதில் போகிறான் என்று பார்க்க,
“ஆமா மூர்த்தி சர்… மெம்பர்ஸ் மட்டும் தான்…” என்றவன் சற்று புரியாமல் கேட்டான். அவன் ஷ்யாமை தான் அவர் கூறுகிறார் என்று நினைக்கவே இல்லை.
“மெம்பர்ஸ் இல்லாதவங்களை கவுன்சில் மீட்டிங்ல கூட்டிட்டு வந்தா நாம எப்படி டிஸ்கஸ் பண்றது?” என்று அவர் கேட்க, அந்த ஹாலிலிருந்த அனைவருமே கவனிக்க ஆரம்பித்து இருந்தனர். ஷ்யாமுக்கு ஆதரவானவர்கள் எழுபது சதவிதம் என்றால், அவனது கறாரில் கடுப்பானவர்கள் முப்பது சதவிதம் என்பதால், ஆங்காங்கே முனுமுனுப்பு தோன்றியிருந்தது.
“என்ன சொல்றீங்க? சொல்றதை நேரடியா சொல்லுங்க…” என்று சற்று கறாராக கேட்டான்.
“ஷ்யாம் தம்பி ப்ரொடியுசர் கவுன்சில்ல மெம்பர் கிடையாது கார்த்திக் தம்பி… அவர் ஃபைனான்சியர்…” என்று அவர் விளக்கம் கொடுக்க, ஷ்யாமுக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது. இவர்களுக்கு பணம் தேவைப்படும் போது மட்டும் நம்மை கண்ணுக்கு தெரியும்… இப்போது மெம்பர் இல்லையாமா? என்று எண்ணிக் கொண்டவன், அதை காட்டிக் கொள்ளாமல், இருவரையும் கவனித்தான்.
“ஓ அப்படி சொல்ல வரீங்களா?” என்றவன், சற்று அழுத்தமாக, “ஷ்யாம் எங்க மாப்பிள்ளை… லக்ஷ்மி மூவீஸ்னா அதுல என்னோட சிஸ்டரும் பார்ட்னர் தான்… அப்படி பார்த்தா இனிமே அவங்க சார்பா மாப்பிள்ளை தான் வருவார் மூர்த்தி சர்… போதுமா எக்ஸ்ப்ளனேஷன்…” என்று கட் அன்ட் ரைட்டாக முடிக்க, ஷ்யாம் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
விருது வழங்கும் விழாவில் புளியங்கொம்பை உன்னுடைய தங்கையை வைத்தே பிடித்து விட்டாயா என்று பொருமியவருக்கு சரியான பதிலடி கொடுத்து விட்ட திருப்தியில் புன்னகையோடு அழுத்தமாக கூறியிருந்தான்.
கார்த்திக்கின் எண்ணம் அதுவரை தான் போனது. ஆனால் ஷ்யாமின் திட்டம் வேறு. ‘அவன் லேடீஸ் விஷயத்துல ரொம்ப வீக்… ஏதாவது நடிகையை அனுப்பி விடு…’ என்று கார்த்திக்கு யோசனை கூறிய மூர்த்தியை எங்கு அடிப்பது என்று காத்துக் கொண்டிருந்தான். மூர்த்தியின் மேல் கோபம் கொள்ளவில்லை. இவர்களை போன்றவர்களை நிதானமாக நின்று அடிப்பதை இவன் வழமையாக கொண்டிருப்பவன். அடித்தால் திருப்பி அடிக்க வாய்ப்பே தரக் கூடாது என்ற முடிவில் தான் அமர்ந்திருந்தான்.
அவன் அப்படி கூறிய பிறகு,
“ஏன் மூர்த்தி… ஷ்யாம் தம்பி கிட்ட பணம் வாங்காதவங்க இங்க யாராவது இருக்காங்களா? பணம் மட்டும் வேணும்… அவர் இங்க உட்கார கூடாதா?” என்று இன்னொருவர் கேட்டு விட, விநாயகமூர்த்தி அதற்கும் மேல் அதைப் பற்றி பேசவில்லை.
இனியும் பேசினால் ரொம்பவுமாய் அவனை பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதை புரிந்து கொண்டவர், வாயை இறுக்கமாக மூடிக் கொண்டார். ஆனால் எதைப்பற்றி பேச வேண்டும் என்று நினைத்தாரோ அதை பற்றி பேசும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆனால் ஷ்யாம் அவரை கண்டுகொண்டான். அவரை எரிச்சலாக்கினால் மட்டுமே தான் நினைத்ததை சாதிக்க முடியும் என்று நினைத்துக் கொண்டான்.
பலதரப்பட்ட பிரச்சனைகளை பேசினார்கள். அனைத்தையும் மெளனமாக அமர்ந்து கொண்டு கேட்டுக் கொண்டிருந்தான். அவ்வப்போது கார்த்திக் தனது கருத்தை கூறினான்.
அதிகரித்து விட்ட தயாரிப்பு செலவுகளை குறைப்பது எப்படி என்பதை பற்றியும், வலைதளங்களில் படங்களை பதிவேற்றுவது பற்றியும் பேச,
“அத்தனை செலவு பண்ணி, எவ்வளவோ கஷ்டப்பட்டு தான் படத்தை எடுத்து முடிக்கறோம்… ஆனா பாருங்க… அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்தை அன்னைக்கே டாரண்ட்ல ரிலீஸ் பண்றாங்க… யாரோட உழைப்பை யார் சுரண்டறதுன்னு வேண்டாமா? எத்தனை டெக்னீஷியன்ஸ், எத்தனை பேர், அவ்வளவு உழைப்பை கொட்றாங்க… ஆனா இவங்க ஒரே நிமிஷத்துல இல்லீகலா செய்துட்டு போறாங்க…” என்று கார்த்திக் கூற,
“நிறைய இடத்துல ஒரிஜினல் ப்ரிண்டே லீக் ஆகுது தம்பி… லேப்ல, டப்பிங்ல இன்னும் ஓவர்சீஸ் ரைட்ஸ் கொடுக்கறோம் இல்லையா… அங்க… இப்படி நிறைய…” என்று இன்னொருவர் குறிப்பிட, விநாயகமூர்த்தியை சேர்ந்தவர்கள் அந்த விவாதத்திலிருந்து தப்பிக்க நினைத்தனர்.
காரணம் என்னவென்றால் அவர்களுக்கு தெரிந்த ஓரிருவர் அது போல திருட்டுத்தனமாக படங்களை பதிவேற்றி சம்பாதிப்பவர்கள். அதில் மூர்த்தியும் கூட்டு என்றும் கூட ஒரு பேச்சு நிலவியது. ஆனால் யாரும் வெளிப்படையாக பேச மாட்டார்கள். பேசவும் விட மாட்டார்கள்.
அத்தனையிலும் சற்று இல்லை அதிகமாகவே அடக்குமுறையை கையாள்வது அந்த தயாரிப்பாளர்கள் கூட்டணிக்கு கைவந்த கலை.
“இதையெல்லாம் ஒண்ணுமே செய்ய முடியாது தம்பி… எங்காவது ஒரு மூலைல இருந்து இப்படி பண்ணி விடறானுங்க… அவனுங்களை என்ன செய்ய முடியும்?” என்று கேட்க, கார்த்திக் சற்று கோபமாகவே கேட்டான்.
“செய்யனும்ன்னு நினைச்சா செய்யலாம் சர்… உங்களுக்கு மனசில்லைன்னு சொல்லிட்டு போய்டுங்க…” என்று வார்த்தையை விட,
“என்ன இப்படி பேசறீங்க? நீங்க இப்ப வந்தவங்க தம்பி… உங்களுக்கென்ன தெரியும்? இதுல எவ்வளவு அனுபவம் இருக்கு? முருகானந்தத்துக்கு அத்தனையும் தெரியும்… ஆனா உங்களுக்கு? தெரியாம பேசக் கூடாது…” என்று மூர்த்தியை சேர்ந்த கவுன்சிலின் பெரிய தலை குதிக்க,
“இப்ப வந்தவங்களுக்கு தான் இந்த மாதிரி திருட்டை எல்லாம் எப்படி ஹேண்டில் பண்றதுன்னு தெரியும்… நீங்கள்லாம் இன்னும் நாப்பது வருஷம் பின்னாடிதான் யோசிப்பீங்க…” என்று கார்த்திக்கு ஆதரவாக குரலை எழுப்பினார் ஒருவர். மூர்த்தியின் அடக்குமுறைக்களினால் எரிச்சலானவர் அவர்.
அது போன்ற மற்றவர்களும் குரல்களை எழுப்ப, அவர்களால் சமாளிக்க முடியவில்லை.
“சரி சரி… நமக்குள்ள இப்படி பேசிட்டு இருந்தா அவங்களுக்கு தான் லாபம்… நாம சமாதானமா போய்ட்டா நமக்கு நல்லது…” என்று மூர்த்தி சமரசம் செய்ய வந்தார்.
ஆங்காங்கே முனுமுனுப்புகள் எழுந்தாலும் சற்று அடங்கியது.
ஷ்யாம் இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தானே தவிர, வெளியே அவன் பேசவில்லை.
அவன் அன்று மீட்டிங் வந்ததே மூர்த்திக்கு சற்று பயம் காட்டத்தான். கார்த்தியிடம் பேசியதை தவிர, சில விஷயங்களில் சங்கத்தை சேர்ந்தவர்கள் என்ற பெயரில் இவனை உரசியும் இருந்தார்கள்.
அதையெல்லாம் நினைவில் வைத்துக் கொண்டு நேரம் பார்த்திருந்தான், திரும்ப அடிக்க!
கவுன்சில் மீட்டிங் என்றதும் அவையெல்லாம் தான் நினைவுக்கு வந்தது. தானும் வருவதாக கூறிவிட்டான். கார்த்திக் இவற்றையெல்லாம் அறிய மாட்டான்.
வந்தவன் கார்த்திக்கை பேசவிட்டு வேடிக்கை மட்டும் பார்த்திருந்தான். பேச வேண்டிய சமயங்களில் அவனுக்கு லேசாக எடுத்து மட்டும் கொடுப்பதோடு தன் பணி முடிந்தது என்பதை போல, முழங்கை வரை ஷர்ட்டை இழுத்து விட்டு, கால் மேல் காலை போட்டபடி அமர்ந்து கொண்டு சிறு புன்னகையோடு நடப்பவற்றை கவனித்துக் கொண்டிருந்தான்.
“சங்கம் சார்பா கலை நிகழ்ச்சி நடத்தலாம்ன்னு இருக்கோம்… துபாய்ல… அதுக்கு யார் யார் என்ன செய்யனும்ன்னு பேசலாம்…” என்று மூர்த்தி ஆரம்பிக்க, ஷ்யாம் அவனது காதில் கிசுகிசுத்தான்.
அதை கேட்டவன், “சர்… கலைநிகழ்ச்சி நடத்தறது நடிகர் சங்கத்தோட தொழில்… அதுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்? நாமெல்லாம் ப்ரொடியுசர்ஸ்…” என்று கேட்க,
“கார்த்திக் தம்பி… நம்ம சங்கத்தோட செலவை எப்படி சமாளிக்கறது? அதுக்கு வேற எதாவது வழி இருந்தா சொல்லுங்க…” என்று அவர் கேட்க,
“சங்க நிதின்னு எல்லார் கிட்டயும் கலெக்ட் பண்றீங்க… அதுக்கு என்னங்க செலவு கணக்கு?”
“உங்களுக்கு தெரியாது தம்பி… நீங்க உட்காருங்க…” என்று சற்று அதட்டலாக அவர் கூற,
“அவருக்கு என்ன தெரியாது மூர்த்தி? கேட்டா பதில் சொல்லுங்க…” என்று இடையிட்டது ஷ்யாம். குரலில் அவ்வளவு அழுத்தம்.
ஹாலே சற்று அமைதியானது!
“இல்ல ஷ்யாம் சர்… சின்னவங்களுக்கு இந்த கணக்கெல்லாம் எப்படி புரியும்?” என்று மழுப்பலாக கவுன்சிலின் இன்னொருவர் கூற,
“ஏன்? அவர் இன்னமும் ஃபீடிங் பாட்டில்ல பால் குடிக்கற குழந்தையா? அவருக்கு என்ன தெரியாதுன்னு இப்படி அடக்க பார்க்கறீங்க?” என்ற ஷ்யாமை அவர் சற்று அச்சத்தோடு தான் பார்த்தார்.
இத்தனை நாள் தன்னிடம் வேலை பார்த்தவனையே நடு ரோட்டில் ஓட விட்டு அடித்தவன் இவன் என்பது அனைவருமே அறிந்த ரகசியம். காரணம் தான் என்னவென்று புரியவில்லை. ஆளாளுக்கு ஒவ்வொன்று கூறினாலும், பொருளடக்கம் ஒன்று மட்டும் தான்.
ஹைதராபாத் ஷ்யாம் ஒரு இரக்கமே இல்லாத ராட்சசன் என்பது!
அதனாலேயே அவன் பேச ஆரம்பிக்கவுமே அவர் சற்று மழுப்ப ஆரம்பித்து விட, மூர்த்தியும் இன்னும் சிலரும் சற்று அடங்காமல் தான் பேசிக்கொண்டிருந்தனர்.
“செலவுக் கணக்கு பத்தி பேச இப்ப வந்தவங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு தம்பி?” என்று மூர்த்தி கேட்டுவிட,
“ஏன் கேக்க கூடாது? கேட்டா பொறுப்புல இருக்கவங்க பதில் தரனும்… அதை விட்டுட்டு இப்படி பொறுப்பே இல்லாம பேசக் கூடாது மூர்த்தி சர்…” என்று இவர்கள் சார்பாக இன்னொருவர் கூற,
“ஆமா… இந்த வருஷ செலவுக்கணக்கை முதல்ல கொடுங்க… அப்புறமா மத்ததை பற்றி பேசலாம்…” கார்த்திக் தைரியமாக கேட்டு விட, ஆரம்பித்தது சொற்போர்.
இரண்டு சாராரும் மாற்றி மாற்றி சண்டையிட்டுக் கொள்ள, ஒரு வழியாக மிகவும் பெரியவராக தோற்றமளித்தவர் இடையில் வந்தார்.
“எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க… பொறுப்புல இருக்கவங்க கண்டிப்பா கணக்கை தாக்கல் பண்ணுவாங்க… நமக்கு பொறுமை தான் தேவை…” எனவும்,
“இப்போதைக்கு கணக்கை கொடுக்க முடியாதுங்க… ஆடிட்டர் இன்னும் பைனலைஸ் பண்ணலை… அவங்க பண்ணதுக்கு அப்புறம் தான் தாக்கல் பண்ண முடியும்…” என்று மூர்த்தி முடிக்க பார்த்தார்.
“கணக்கை கொடுக்க முடியலைன்னா பதவிய விட்டு விலகிகங்க…” அழுத்தமாக கூறினான் ஷ்யாம்.
மத்தியஸ்த்தம் பேசியவரே சற்று அதிர்ந்தார்.
மூர்த்தி, சங்க ரீதியாக மட்டுமல்ல… அரசியல் ரீதியாகவும் சற்று பலமுள்ளவர்… இத்தனை வருடமாக தேர்தலே இல்லாமல் சங்க பொறுப்புகளில் இருந்தவர்களை ஒரே நாளில் பதவியை விட்டு விலகு என்று கூறினால் இது ஆகும் காரியமா?
ஆனால் ஷ்யாம் வர நினைத்தது அந்த புள்ளிக்குத்தான்.
தயாரிப்பாளர் சங்கம் தன் கைக்கு வர வேண்டும்… மூர்த்தியை முதலில் பந்தாட வேண்டும் என்பதுதான் அவனது குறிக்கோள். அதை தான் அப்போது அவன் செய்து கொண்டிருந்தான். ஆனால் அத்தனையும் கார்த்திக்கின் பெயரைக் கொண்டு!
“நீங்க அதை சொல்லக் கூடாது தம்பி…” என்றார் மூர்த்தி.
“வேற யார் சொல்லனும்ன்னு சொல்றீங்க மூர்த்தி?” இறுக்கமாக கேட்டான் ஷ்யாம்.
“இல்… இல்ல… நீங்க சொல்ல வர்ற விஷயம் சரியில்லைன்னு சொல்றேன்… ஒரே நிமிஷத்துல கணக்கு கேட்டா எப்படி?”
“எப்ப கணக்கு கேட்டாலும் தயாரா இருக்கணும்… அப்படி இருந்தா தான் சங்கத்து பொறுப்புல இருக்கணும்…”
“எப்படிங்க அதுக்குள்ளே கணக்கை எல்லாம்…” என்று திணறினார் மூர்த்தி.
“கணக்கு ஒழுங்கா இருந்தா கொடுக்க வேண்டியதுதானே மூர்த்தி? சரி பண்ணித்தான் கொடுக்கணும்ன்னு நீங்க சொன்னா, என்ன மீன் பண்றீங்க? எதை நீங்க சரி பண்ண போறீங்க? இத்தனை வருஷமா கணக்கே இல்லாம சங்கத்தை நடத்த, இதென்ன உங்க அப்பா வீட்டு சொத்தா?”
வேறு யாராக இருந்தாலும் விநாயகமூர்த்தி இவ்வளவு பேசவே விட மாட்டார். ஆனால் இவனிடம் வேறு வழியில்லை.
‘என்னை லேடீஸ் விஷயத்துல வீக்குன்னா சொல்ற? உனக்கிருக்கு…’ என்று நினைத்துக் கொண்டவன்,
“நான் சொல்றது சரியா தப்பா?” கூட்டத்தில் இருந்த மற்றவர்களை பார்த்து அழுத்தமான குரலில் ஷ்யாம் கேட்க, அவனை நேரடியாக எதிர்த்து பேச யாருக்கேனும் துணிவிருக்கிறதா என்ன?
“கண்டிப்பா சரிதான்… நீங்க சொல்றபடி கணக்கை ஒப்படைக்கணும்… இல்லைன்னா ரிசைன் பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்… பிரச்சனைகளை சமாளிக்க தெரியாதவங்க பொறுப்புல இருக்கறதை விட உங்களை மாதிரி இளரத்தம் தான் பொறுப்புக்கு வரணும் தம்பி…” என்றார் ஒருவர்.
அவரது குரலை மற்றவர்கள் மீண்டும் ஒலிக்க, கார்த்திக்கு உள்ளுர சிரிப்பு பொங்கியது. ‘அடேய் உலக நடிப்புடா சாமி…’ என்று ஷ்யாமை பார்த்து சிரித்தான்.
“ம்ம்ம்… கண்ட்ரோல் கண்ட்ரோல் மச்சான்…” என்று கிசுகிசுத்தான் ஷ்யாம்.
சிரித்தானே தவிர, உள்ளுக்குள் ஷ்யாமின் ஆகர்ஷணத்தை, ஈர்ப்புவிசையைக் கண்டு மலைத்தான். அவனிருக்கும் இடங்களில் அவனது பேச்சு மட்டுமே எடுபடும் ரகசியத்தை கார்த்திக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் பேச்சு எடுபடாமல், அவன் திணறும் ஒரே இடம் மஹா மட்டும் தான் என்று தெளிவாக புரிந்தது.
“பதவி விலகனுமா? என்ன விளையாடுறீங்களா?” என்று மூர்த்தி பக்கம் குதிக்க, கார்த்திக்கின் சாரார் அதில் நிலையாக நின்று கொண்டனர்.
“சரி… எலெக்ஷன் வைக்கறோம்… ஆனா யார் எங்களை மீறி போட்டியிட முடியும்?” மிரட்டலாக மூர்த்தி கேட்க,
“என் மச்சான் கார்த்திக் எலெக்ஷன்ல நிக்கறார்… என்ன சொல்றீங்க மூர்த்தி?” வெகு அழுத்தமாக ஷ்யாம் கூற, அவர் அதிர்ந்தார்.
நேரடியாக இப்படி மோதுவான் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பேசுவான் விட்டுவிடுவான் என்று தான் நினைத்தார்.
ஆனால் விஷயம் அவரது கையை மீறிக் கொண்டிருந்தது.
வேறு வழியில்லை…
கணக்கை தாக்கல் செய்தாக வேண்டும் என்ற நிலையில் இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் அந்த நிலையை தாண்டி விட்டது.
ஒப்புக்கொண்டு தானாக வேண்டும்.
ஆனால் இவர்களை நுழையவும் விடக் கூடாதே என்று யோசித்தார்.
இறுதியாக தேர்தலுக்கு பெருந்தலைகள் ஒப்புக்கொண்டது!
ஒருவழியாக இந்த களேபரங்களை முடித்து விட்டு காஞ்சீபுரத்துக்கு வந்து கொண்டிருந்த போதுதான்,
“ஷ்யாம் மச்சான்… எப்படி இப்படி? நிஜமா அசந்து போயிட்டேன்…” ஷ்யாம் தான் காரை செலுத்திக் கொண்டிருந்தான். உடன் அமர்ந்திருந்த கார்த்திக் உண்மையிலேயே அசந்து தான் போயிருந்தான்.
“ஏன் மச்சான்? இதுல என்ன அசந்து போக இருக்கு?” என்று அவன் கேட்க,
“ஒவ்வொருத்தனையும் ஆஃப் பண்ண பாரு… ச்சே எனக்கெல்லாம் வரவே வராது… இப்படியே மகாவை ஆஃப் பண்ணேன் மச்சான்?” என்று சிரித்துக் கொண்டே கேலியாக கேட்க, ஷ்யாமுக்கு உண்மையில் சிரிப்பு வந்தது.
மகாவையாவது தான் ஆஃப் செய்வதாவது? நடக்கிற காரியமா என்ன?! ஒவ்வொரு தடவையும் கிழித்து தோரணம் கட்டி தொங்க விடுகிறாளே. அதையும் கார்த்தி பார்த்துக் கொண்டு தானே இருக்கிறான்.
“யோவ்… என்னை தலையால தண்ணி குடிக்க வைக்க ஒரு ஆளிருக்குன்னா அது உன்னோட பாசமலர் தான்ய்யா… ஒன்னும் முடியல…” என்று வேடிக்கையாக கூற,
“என்ன மச்சான்… நீயே இப்படி சொல்ற?” என்றவனுக்கு சிரிப்பு மலர்ந்தது.
“பின்ன… இவனுங்களை எல்லாம் ஒரு வார்த்தைல அடக்கிடலாம்… ஆனா அவகிட்ட ஒரு மணி நேரம் தொண்டை தண்ணி வத்த பேசினா கூட அசையவே அசைய மாட்டேங்கறா… அப்படி ஒரு பிடிவாதம் பிடிச்ச கழுதை… கடைசில ஒவ்வொரு தடவையும் நான் தான் கால்ல விழ வேண்டியிருக்கு கார்த்திக் மச்சான்…” என்று சிரிப்போடு விளையாட்டாகவே கூறினான்.
“அடப்பாவி… கால்ல விழறதை இப்படி பெருமையா சொல்லிக்கற ஒரே ஒருத்தன் நீயா தான்ய்யா இருப்ப…” சிரித்தான். காரை செலுத்திக் கொண்டே திரும்பி அவனை பார்த்தவன்,
“சிரிக்கற… நீ என்ன பண்ண போறன்னு நானும் பார்க்கத்தானே போறேன்…” என்று கேலியாக கூற,
“பாரேன்… நான்லாம் தில்லா நிப்பேன் மச்சான்…” என்றவனை,
“பாக்கறேன்… பாக்கறேன்…” என்று சிரித்தவன், குறுக்கே வந்த டூ வீலரை இடிக்காமல் கியரை மாற்றி வேகத்தை குறைத்தவன் லாவகமாக திருப்ப, அதை கவனித்த கார்த்திக், புருவத்தை உயர்த்தினான்.
“எல்லா மேட்டர்லையும் பக்காவா இருக்க… எப்படி விஜி, சௌஜன்யா மேட்டர்ல மட்டும் ஏமாந்த?”
“நம்ம டைம் மச்சான்…” என்றவன், “எல்லாத்தையுமே சமாளிப்பேன்… உன் தங்கச்சியை தவிர… ஆனா மேரேஜுக்கு அப்புறம் எப்படியும் சமாதானம் பண்ணிடலாம்ன்னு ஒரு நம்பிக்கை இருக்கு… பார்க்கலாம்…” என்று நம்பிக்கையுடன் கூறினான்.
“ஏன் மச்சான்… இப்ப சமாளிக்க முடியாதவன் அப்ப மட்டும் எப்படி சமாளிக்க போற?” என்று கார்த்திக் கேட்க,
குறும்பாக சிரித்த ஷ்யாம், “சாஷ்டாங்கமா கால்ல விழுந்துட வேண்டியதுதான்… வேற வழி?!” என்று சிரித்தான்.
“அடப்பாவி… சும்மா தான் சொல்றன்னு நினைச்சேன்… நிஜமாவா சொல்ற?” அதிர்ச்சியாக அவனை பார்த்தான் கார்த்திக்.
“கண்டிப்பா… பொண்டாட்டி கால்ல விழுந்தா தான் வேலையாகும்னா விழுந்துட வேண்டியதுதான் கார்த்திக் மச்சான்… என்னோட ஒரே ப்ளான் அதுதான்… இவ கிட்ட பேசி, சண்டை போட்டெல்லாம் வேலைக்கே ஆகாது… நீயும் கத்துக்க மச்சான்… என் தங்கச்சியை நீயும் இப்படித்தான் சமாதானம் பண்ண வேண்டியிருக்கும்…” என்றவனை சற்று பெருமையாக பார்த்தான் கார்த்திக்.
இவனை காட்டிலும் வேறு யார் மஹாவுக்கு பொருத்தமாக அமைந்து விட முடியும்? அவள் கண்ணில் கண்ணீரை கண்டால் அவர்களை அழித்து விடுவேன் என்று இவன் கூறியது எத்தகைய வார்த்தை?! இத்தனை காதலை ஒருவன் வைக்க முடியுமா? அதோடு இந்த புரிதல்? மலைத்தான்!
“யோவ்… போய்யா… எனக்கெல்லாம் இந்த வெ மா சூ சு ல்லாம் கொஞ்சம் ஜாஸ்தி… அவ தான் என் கால்ல விழனுமாக்கும்…” என்று காலரை ஏற்றி விட்டவனை பார்த்து சிரித்தான் ஷ்யாம்.
“உன் வெ மா சூ சுவ நானும் தானடா பாக்க போறேன்… எப்படி நீ மண்ணை கவ்வ போற… எப்படி நீ தலையாட்ட போறன்னு…”
“அதெல்லாம் உன்னோட வேலை… நாமெல்லாம் ஆம்பிளை சிங்கம்ல…” என்று பெருமையாக கூறியவனை, புன்னகையோடு பார்த்தவன்,
“யோவ்… நீ இப்படி சொல்லிட்டு இரு… உன் தங்கச்சி என்னை ஆம்பிளை இல்லைன்னே சொல்லிட்டா…” என்று இயல்பாக கூறவும், அதிர்ந்தான். ஒரு ஆண் மட்டுமே அறிவான். அந்த வார்த்தையின் தாக்கத்தை! எந்தவொரு ஆணாலும் ஏற்றுக் கொள்ளவே முடியாத வார்த்தை அது. அதிலும் ஷ்யாமை போன்றவனை இந்த வார்த்தை எப்படி தீண்டக் கூடும் என்பதை கூட புரியாதவளா மஹா?
“என்ன மச்சான் சொல்ற?”
“ம்ம்ம்… இப்ப விஜி செயல்பட முடியாத நிலைல இருக்கானாம்… இப்ப அவனை எதாவது பண்ணா நான் ஆம்பிளை இல்லையாம்… என் வருங்கால பொண்டாட்டி ஸ்டேட்மென்ட் கொடுக்கறா…” என்று சற்று இறுக்கமாக கூற, கார்த்திக் சங்கடமாக அவனை பார்த்தான்.
“நீயேன் அவளை விஜியை பார்க்க கூட்டிட்டு வந்த? முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான?”
“சொன்னா அதுக்கும் அதைதான் சொல்வா…”
“மகாவுக்கு ரொம்ப வெய்ட்டேஜ் குடுக்கற…” என்று யோசனையாகக் கூறினான். தங்கையின் செயல்பாடுகளில் அவனுக்கே ஒப்புதலில்லை எனும் போது எப்படி ஆதரிக்க? அதை மிகவும் வெளிப்படையாக ஷ்யாமிடம் கூறவும் மனமில்லை.
திருமணம் என்று முடிவான பின், வருங்கால கணவனுக்கு பிடிக்காதவனிடம் எதற்கு தேவையில்லாத பேச்சுவார்த்தை? எதற்காக அவனை பார்க்க வேண்டும்? இது தேவையற்ற பிரச்சனைக்கு மட்டுமே கொண்டு செல்லாதா? இது தெரியாத சிறு குழந்தையா மஹா?
அவளிடம் எப்போதுமே ஷ்யாமிடம் தோழமை உண்டு. தோழமையோடு நின்றிருந்தால் பிரச்சனை இருந்திருக்காது. அவளுக்கு உரியவனை காணக் கூடாத விதத்தில் கண்டத்தில் அதிர்ந்து போயிருக்கிறாள்.
அதைதான் அவனும் கூறினான்.
“வேற யாருக்கு மச்சான் கொடுக்க சொல்ற? மஹா இடத்துல நான் இருந்தா கண்டிப்பா இவ்வளவு பொறுமையா இருக்க முடியாது. அவளால என்னை விட்டுக் கொடுக்கவும் முடியல… அதையெல்லாம் ஜீரணம் பண்ணவும் முடியல… அவளுக்கு நான் டைம் கொடுத்து இருக்கணும்… ஆனா என்னால அந்த டைமை கொடுக்க முடியல… ரொம்ப திணறிட்டு இருக்கா… அது எனக்கும் புரியுது… நான் பேசக் கூடாதுன்னு நினைக்கறேன்… ஆனா அந்த இடத்துல என்னாலையும் கண்ட்ரோல் பண்ண முடியல… ஆம்பிளைங்கற ஈகோ…
ரொம்ப பாவம்டா… என்னை ஹர்ட் பண்ண கூடாதுன்னு தான் நினைப்பா… ஆனா உள்ள இருக்க அந்த ஜீரணமாகாத கோபம் அவளையும் மீறி வெளிய வருது… அந்த கோபத்தோட வெளிப்பாடு தான் அவ சட்டுன்னு பேசிடற வார்த்தைகள்… ஆனா எல்லாத்தையும் மீறி என் மேல டன் டன்னா லவ் வெச்சுருக்கா… அது எனக்கு தெரியும் கார்த்திக்…” என்றவனை இப்போது உண்மையிலேயே ஆச்சரியமாக மரியாதையாக பார்த்தான்.
இதுதான்… இந்த புரிதல் இருந்தால் போதுமே!
லட்டுக் குட்டி கொடுத்து தான் வைத்திருக்கிறாள் என்று தோன்றியது! ஆனால் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டான். இது போல பிருந்தாவின் தந்தை தன்னை பற்றி நினைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
அவனையும் அறியாமல் வெட்க முறுவல் மலர்ந்தது.
அதே சிரிப்போடு இருவரும் அந்த பட்டு மாளிகையின் உள்ளே நுழைந்தனர்.
தங்களது கும்பல் தான் கடையை இரண்டாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை கண்களால் காட்டினான் ஷ்யாம். நடுவே புதிதாய் பூத்த பூவென மஹா. ப்லசோ, கிராப் டாப்பில் அம்சமாய், அசத்தலாய் அமர்ந்து கொண்டிருக்க, அவள் மேல் ஒவ்வொரு சேலையாக வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. அவர்களோடு போய் அமர்ந்தார்கள் இருவரும். அங்கு அனைவருமே கீழே தான் அமர வேண்டியிருக்கும். மொத்தமாக மெல்லிய வெள்ளை மெத்தை மட்டுமே விரிக்கப் பட்டிருக்கும்.
முருகானந்தமும் ஆத்மநாதனும் கடை உரிமையாளரிடம் பேசிக் கொண்டிருக்க, பெண்கள் அனைவருமாக சேலைகளை பதம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அவளிடம் மருத்துவமனையில் சண்டையிட்டு இருந்தவன், அதன் பின் பேசாமல் இருந்திருந்தான். அவனுக்கு புரிந்தாலும், பேசினால் மீண்டும் சண்டைதான் வரும் என்பதால் அதை தவிர்த்து இருந்தான். அவன் பேசாததால், அவளும் இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.
ஷ்யாமையும் கார்த்திக்கையும் கண்ட ஜோதி,
“ஷப்பா… வந்தியா? இன்னும் ஒரு சேலைய கூட செலக்ட் பண்ணலை உன்னோட டார்லிங்… என்னன்னு நீயே கேளு ஷ்யாம்…” என்று சிரிக்க,
மணியை பார்த்தான். பனிரெண்டை கடந்து இருந்தது. காலை ஒன்பது மணிக்கு கடை திறக்கும் போதே வந்து விட்டது அவனுக்கும் தெரியும். ஒரு சேலை எடுக்க இத்தனை ஆர்ப்பாட்டமா? விழிகள் பிதுங்கியது, எதிர்காலத்தை நினைத்து!
அவனை பார்த்தாலும், யாருக்கு வந்த விருந்தோ என்று மஹா அமர்ந்திருந்தாள்.
என்னவென பார்வையால் அவளை கேட்க, ஒரு பெருமூச்சோடு கீழே பார்த்தபடி, தலையை பிடித்துக் கொண்டாள். அவளால் திருமண ஏற்பாடுகளில் ஒன்ற முடியவில்லை.
‘நீயே எடுத்துட்டு வந்துறேன் ம்மா…’ என்று பைரவியை கேட்டலும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.
‘வந்தவங்களுக்கு மரியாதை கொடுக்க தெரியாதா மஹா?’ என்று அவளையும் இழுத்து வந்துவிட்டார்.
ஒவ்வொருவரும் திருமணத்தை பற்றியே பேசிக் கொண்டிருக்க, அவளுக்கு அது அடுப்பின் மேல் அமர்ந்திருப்பது போன்ற உணர்வை உருவாக்கியது.
அவளால் ஷ்யாமை தவிர வேறு யாரையும் நினைக்கவும் முடியாது. ஆனால் இன்றுள்ள சூழ்நிலையில் அவனையே நினைத்துப் பார்க்க முடியாது. நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும் அவனது அந்த புகைப்படங்களும் வீடியோவும் அவளது கண் முன் வலம் வருவதை தவிர்க்க முடியவில்லை. நித்தமும் வேதனையாக இருந்தது. அவனது நிலை புரிந்து இருந்தது. ஆனால் வேதனையில் உழலும் மனதை என்ன செய்வது என்று புரியவில்லை.
அத்தனையும் தெரிந்து தான் அவனது காதலை ஒப்புக்கொண்டாள். ஆனால் ஒப்புக்கொண்டதனால் அவனது அத்தனையையும் எங்கனம் ஜீரணிப்பது? அவளால் முடியவே இல்லை.
அவள் இப்போது கையறு நிலையிலிருந்தாள்.
அந்த கோபத்தை எல்லாவற்றிலும் பிரதிபலித்துக் கொண்டிருந்தாள்.
அதோடு விஜியின் விஷயம் அவளை உலுக்கியிருந்தது. அவனது நிலைக்கு காரணம் தான் தானோ என்ற எண்ணம் அவளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது. அவன் முன்னர் போனில் மிரட்டியதை எல்லாம் மறந்து விட்டாள். ஷ்யாம் அவனது விஷயத்தை காம்ப்ளிகேட் செய்து கொண்டே போவதை அவள் விரும்பவில்லை. ஆனால் அவனை தடுக்கும் வழி அவளுக்கு தெரியவில்லை.
முன்தினம் அவள் ரொம்பவுமே பேசிவிட்டதில், அவளுடன் பேசவே கூடாது என்று தான் நினைத்தான். கார்த்திக்கிடம் அவளை தாங்கி பேசுவது என்பது வேறு. ஆனால் அவளிடம் விட்டுக் கொடுக்க அவனது ஈகோ இடம் தரவில்லை. அருகில் தான் அமர்ந்திருந்தான், ஆனால் ஜோதி, பைரவி, பிருந்தா என இவர்களிடமெல்லாம் பேச்சை வளர்த்துக் கொண்டிருந்தான். ஜோதியே இவனை கிண்டலாக கூறி ஒரு வழியாக்கி இருந்தார்.
ஆனால் எதிலுமே கலந்து கொள்ளாமல் உம்மென்று இருந்தவளை அவ்வப்போது பார்வையிட்டுக் கொண்டிருந்தான். மஹாவின் இறுக்கமான முகம் எல்லோர் கண்களிலும் பட்டு உறுத்திக் கொண்டு இருந்தது. அதிலும் ஜோதியின் கண்களும், பைரவியின் கண்களும் அவளை தொட்டு மீண்டு விட்டு இருவருமே கலக்கமாக ஷ்யாமை அவ்வப்போது பார்த்தனர். இவற்றையெல்லாம் கவனித்தவன், இனியும் ஈகோவை கட்டிக் கொண்டு அவளிடம் பேசாமல் இருப்பது சரியல்ல என்று நினைத்துக் கொண்டு,
அவளுக்கு அருகில் குனிந்தவன், “மஹா… நமக்கு ஒன்ஸ் இன் லைஃப்டைம்… ப்ளீஸ்… உன்னோட கோபத்தை எல்லாம் விட்டுட்டு பங்க்ஷன்ல மெர்ஜ் ஆகேன்…” தணிந்த குரலில் கூற, சற்று மெளனமாக இருந்தவள்,
“என்னால முடியல…” என்றவள், நெற்றியை பிடித்துக் கொண்டு தலை குனிந்து கொண்டாள். அவளால் ஒட்டவும் முடியவில்லை. வெட்டி விடவும் முடியவில்லை. அவள் ஒப்புக்கொண்டதால் தான் திருமணம் இந்தளவுக்கு வந்ததும். இவள் முடியாது என்று ஆத்மநாதனிடம் மறுத்துவிட்டிருந்தால் ஷ்யாமால் கூட எதுவும் செய்ய முடியாது தான். மகாவால் அதையும் செய்ய முடியவில்லை. இப்போது மனதார இங்கு ஒன்றவும் முடியவில்லை. குழப்பத்தில் தலைசுற்றியது.
“புரியுது… ஆனா நாம ரெண்டு பேரும் கிழவன் கிழவியானதுக்கு அப்புறம், என் பேரன் பேத்திகிட்ட எல்லாம் நான் சொல்லுவேன்… இந்த கிழவி, கல்யாணத்தப்ப உர்ருன்னு இருந்தான்னு… என்ன ஓகே வா?” கொஞ்சமும் சிரிக்காமல் அவளுக்கு மட்டும் கேட்குமாறு ஷ்யாம் கூறியதை கேட்டவளுக்கு அத்தனை கோபத்தையும் மீறி சட்டென சிரிப்பு வரும் போல இருந்தது. ஆனால் கட்டுப்படுத்திக் கொண்டாள்.
‘இன்னும் கல்யாணமே ஆகலையாம்… இதுல பேரன் பேத்திக்கு போய்ட்டாங்கய்யா…’
“ஏன் நீ மட்டும் தான் உன் மகனை பத்தி நினைக்கணுமா? நாங்க இன்னும் அட்வான்ஸ்ட்…” என்று அவளது மனதை படித்தவனாக கூற, அவள் பதில் ஏதும் பேசவில்லை.
அவளது மௌனம் அவனுக்கு சரியாக படவில்லை. மேலும் பேச்சை வளர்க்காமல் நிமிர்ந்தவனை முருகானந்தத்தோடு பேசிக்கொண்டிருந்த ஆத்மநாதன் கண்களால் என்னவென கேட்டார்.
‘ஒன்றுமில்லையென’ கண்களால் தெரிவித்தாலும், அவரது முகம் தெளிவாகவில்லை. மஹா முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. ‘வேண்டாமென்றால் திருமணத்தை நிறுத்தி விடலாம்’ என்று அவளுக்கு ஒரு ஆப்ஷனையும் கொடுத்த பின்னும் இப்படி இருப்பது நாதனுக்கு மனதை ஏதோ செய்தது.
“இங்க பார் மஹா… நானா இங்கவே பார்த்துட்டு இருக்கார்… அவருக்கு நல்லாவே தெரியும்… நீ என்ன மூட்ல இருக்கன்னு… எல்லார் மனசையும் ஹர்ட் பண்ணியே ஆகணும்ன்னு நினைக்கிறியா?” அவளிடம் மிகச்சிறிய குரலில் ஷ்யாம் கேட்க, நிமிர்ந்து அவனை பார்த்தவளின் கண்களில் கலக்கம்.
“என்னை புரிஞ்சுக்கவே மாட்டியா ஷ்யாம்? என்னோட பீலிங்க்ஸ பத்தி உனக்கு கவலையே இல்லையா?” என்று கேட்க,
“எனக்கு என்னை விட நீ தான் முக்கியம் மஹா. ஆனா இந்த நேரத்துல இந்த மேரேஜ் ரொம்ப ரொம்ப அவசியம்… உனக்கு டைம் தர்றதுக்கு எனக்கு டைம் இல்ல… அதை நீயும் புரிஞ்சுக்க…”
“ரொம்ப போர்ஸ் பண்ற… எனக்கு ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா ஸ்ட்ரெஸ்புல்லா இருக்கு…”
“இங்க பார் மஹா… உன்னோட பயம் சங்கடமெல்லாம் என்னன்னு எனக்கு தெரியும்… ஐ மேக் எ ப்ராமிஸ்… கல்யாணம் மட்டும் பண்ணிக்க… அது போதும்… உனக்கா எப்ப நம்ம லைஃப்பை ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு தோணுதோ அப்ப பண்ணிக்கலாம்…” என்று வெகுவாக தகைந்து போய் அவளுக்கு மட்டும் கேட்குமாறு கேட்கவும், ஆச்சரியமாக பார்த்தாள்.
சுற்றிலும் அனைவரும் அமர்ந்திருக்க, யாரும் அறியாமல் அவன் கொடுத்துக் கொண்டிருக்கும் சத்தியத்தை உண்மையில் மஹா நினைத்தே பார்க்கவில்லை. ஆனால் அவளது மனம் தயங்கியது உண்மை!
“நிஜமாவா சொல்ற?” கண்களை விரித்து கேட்க, ‘இதுக்கு மட்டும் என்ன ரியாக்ஷன்டா ஏடுகொண்ட்லவாடா…’ என்று நினைத்தவன்,
“எஸ்… நிஜமா தான் சொல்றேன்…”
“இல்ல… நீ அப்புறமா என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுவ…” என்றவளை யாருமறியாமல் முறைத்தவன்,
“வோர்ட் இஸ் எ வோர்ட்… அவ்வளவுதான் சொல்வேன்…” என்றவன், “கர்மம்… இந்த ரொமான்ஸ் நாவல்ஸ் படிக்கும் போது இப்படி கல்யாணம் கட்டி தள்ளி இருந்துக்கலாம்ன்னு சீன் வந்தாலே செம காமெடியா இருக்கும் எனக்கு… இப்ப நானே இப்படியொரு சீனை உன்கிட்ட சொல்ல வேண்டியிருக்கு பாரேன்… எல்லாம் என் நேரம்…” என்று சிரிப்பை அடக்கிக் கொண்டு கிசுகிசுப்பாக கூற,
“அந்த சீனெல்லாம் ஹீரோவுக்கு தான்டா…” என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறிய மஹாவை பார்த்து,
“அப்படீன்னா நாங்க யாராம்?” என்று கிண்டலாக கேட்க,
“நீயெல்லாம் ஹீரோன்னு சொன்னா எல்லாரும் அடிக்க வருவாங்க… ஒரு பழக்கத்தை விட்டு வெச்சு இருக்கியா? அத்தனையும் உண்டு… அத்தனைக்கும் மேல… ட்விட்டர் லீக்ஸ்… அதையும் நானே பார்த்து தொலைச்சு… சத்தியமா சொல்றேன்… எந்த ஹீரோவுக்கு இப்படியொரு ஓபனிங் இருக்காம்? இதுல ஹீரோவாம் ஹீரோ… கடுப்பேத்தாத… ஓடிடு…” என்றவளை கண்ணிமைக்காமல் பார்த்தான். இத்தனையும் உண்டு என்று எரிச்சல் பட்டாலும் தன்னை விட்டுக் கொடுக்க முடியாமல் திண்டாடும் காதலி ஒரு வரமல்லவா!
“அப்புறம் எப்படிடி ஓகே பண்ண?” கிண்டலாக இவன் கேட்க,
“அதான் எனக்கும் இப்பவரைக்கும் புரியல… என்னமோ ஏமாத்திட்ட…” என்று அவள் புலம்புவது போல கூற,
“இதை நம்ம அறுபதாம் கல்யாணத்துக்கு சொல்லேன்…”
“சியூர்… கண்டிப்பா…”
“சொன்னாலும் சொல்லுவடி…” என்றவன், சேலைகளில் மூழ்கினான்.
சற்று நேரம் பொறுத்து, சேலைகளை பார்த்துக் கொண்டிருந்தவளை சுரண்டியவன்,
“மஹா… ரொம்ப லேட் பண்ண மாட்ட தானே?” என்று மொட்டையாக கேட்க,
“ஏன்? எதுக்குடா?” என்று அவள் கேட்க,
“உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொன்னன்ல… அதுக்கு ஏதாவது டைம் லிமிட் மாதிரி வெச்சுக்கலாமா?” என்று கேட்க, அவனை முறைத்தாள். அவசரப்பட்டு வாக்கு கொடுத்து விட்டோமோ என்ற கடும் மனஉளைச்சலில் இருந்தான் ஷ்யாம். ‘சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி…’ என்று தந்தை கூறும் பழமொழி நினைவுக்கு வந்தது.
“அந்த டைம்லிமிட்டையும் நீங்களே சொல்லுங்களேன் மகாபிரபு… என்று கடுப்பாக கூற,
“ம்ம்ம்… ஒரு ஒன் வீக்?” என்று பிட்டை போட்டவனை பார்த்து இன்னமுமே முறைத்தவள்,
“முடியாது… இது ஆவறதில்ல… எனக்கு சேலையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்…” என்று கையிலிருந்த சேலையை கீழே போட,
“அதெல்லாம் வேண்டாம்ன்னு தான் நானும் சொல்றேன்டி…” என்று அவன் முணுமுணுக்க, முதலில் புரியாதவள்,
“டேய்…” என்று பல்லைக் கடித்தாள்.
“மஹா… இந்த ரொமான்ஸ் நாவல்ஸ்ல ஒரே ஒரு மேட்டரை வெச்சு மொக்கையா அம்பது அறுபது எபிசொட் இழுப்பாங்க… நம்ம ரைட்டர் மாதிரி… அதையெல்லாம் படிச்சுட்டு கெட்டு போய்டாத… நிஜத்துல உன்னை மாதிரி சப்ப பிகரை பக்கத்துல வெச்சுகிட்டு இருந்தாலும் நிலவை பார்த்து வானம் சொன்னதுன்னு எவனும் பாட மாட்டான்… புரிஞ்சுக்க குல்ஃபி…” மிகவும் தீவிரமான குரலில் கூறியவனை பார்த்து கண்கள் இடுங்க, ரத்தம் கொதிக்க, நரம்புகள் முறுக்கேற முறைத்தவள்,
“சப்ப பிகரு?” என்று கேட்க,
“சப்ப பிகரா? யார்ம்மா அது?” ஒன்றும் தெரியாதவன் போல கேட்க, அவனை முறைத்தவள்,
“டேய் ஒன்னும் தெரியாதவன் மாதிரி சீனை போடாத…”
“உன்னை மாதிரி சூப்பர் பிகர்ன்னு சொன்னதை நீ தப்பா நினைச்சுகிட்ட குல்ஃபி… உங்க ஜட்ஜ்மென்ட் ரெம்ப தப்பு…” என்று வடிவேலுவை போல கூறியவனை இன்னமுமே முறைத்தாள்.
“நிஜமாத்தான்… உன்னைப் போய் சப்ப பிகர்ன்னு சொல்லுவேனா? அதுவும் பாம்பே மனிஷாவயே பீட் பண்ண பிகர் நீ குல்ஃபி…” என்று கண்ணடித்தவனை மண்டையிலேயே எதையாவது எடுத்து அடிக்க வேண்டும் போல ஆத்திரம் கிளம்பினாலும் சுற்றிலும் இருந்தவர்களை கருத்தில் கொண்டு தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டாள்.
“வேண்டாம்… உன்னோட வேலையெல்லாம் இங்க காட்டாத… எல்லாரும் இருக்காங்க…” என்றவள், “நேத்து அவ்வளவு சண்டை போட்டுட்டு போன… இப்ப ஒண்ணுமே நடக்காத மாதிரி பேசுற… உன்னோட டிசைனையே புரிஞ்சுக்க முடியலையே…”
“என்னடி பண்றது? சூடு சொரணை எல்லாம் முதல்ல முரண்டு பண்ணுது… ஆனாலும் என்ன பண்ண? எல்லாத்தையும் விட்டுட வேண்டியதா இருக்கு…” என்றவனின் முகத்தில் கவலையான புன்னகை.
“ம்ம்ம்… பார்க்க கூடாத அத்தனையும் பார்த்தும் உன்கூட மேரேஜ் வரைக்கும் வந்துருக்கேன்னா எனக்குத்தான் அதெல்லாம் இல்ல ஷ்யாம்…” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன், நிமிர்ந்து,
“ம்மீ… சாரி சூஸ் பண்ணி முடிச்சவுடனே எனக்கு கால் பண்ணுங்க… நானும் கார்த்திக்கும் வெளிய வெய்ட் பண்ணிட்டு இருக்கோம்…” எனக் கூற, மஹா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது கண்களில் தெரிவதென்ன? கவலையா? கலக்கமா? ஆற்றாமையா? பரிதவிப்பா? ஏதோவொன்று! அந்த பெயர் கூற முடியாத உணர்வை சுமந்து கொண்டு அவள் பார்த்த பார்வையை கண்களால் ஏந்தியவனால் சொன்னதை செய்ய முடியவில்லை.
யாரிடமும் அவனது மனம் படும் பாட்டை கூற முடியாது. அதுபோல, யாரிடமும் அவளது மனதை திறந்து காட்டவும் முடியாது. அது அவளது ஷ்யாமின் மரியாதை சம்பந்தப்பட்டது. பிருந்தாவிடம் கூட, அவளது உயிர் தோழியானாலும் சரி, வருங்கால அண்ணியாக இருந்தாலும் சரி, அவளால் வெளிப்படையாக தன்னுடைய உணர்வுகளை கூற முடியாத நிலையிலிருந்தாள்.
ஷ்யாம் மேல் அவள் கொண்ட காதல் அத்தகையது. காதலா இல்லையா எனும் போதே அவனை விட்டுக் கொடுக்க முடியாதவள், இப்போது காதலென்று அறிந்தும், திருமணம் நிச்சயமான நிலையிலும், அவனது அத்தனை பிரஸ்தாபங்களை பார்த்தும், விட்டுக் கொடுக்கவும் முடியாமல், விட்டும் போக முடியாத நிலையில் திரிசங்கு சொர்கத்தில் தவித்ததை ஷ்யாம் உணர்ந்து கொண்டிருந்தான். ஆனாலும் அவள் காயப்படுத்தும் போது?
“மஹாதான் சாரி சூஸ் பண்ண இவ்வளவு லேட் பண்றான்னா நீயாவது ஹெல்ப் பண்ணேன் ஷ்யாம்… நீயும் வெளிய வெய்ட் பண்றன்னு போனா எப்பதான் வேலைய முடிக்கறது?”
“ம்ம்மீ…”
“ஷ்யாம்… முடிச்சுட்டு போலாம்…” சற்று கறாராக ஜோதி கூற, எழ போனவன், அப்படியே அமர்ந்தான்.
“சரி… ஆனா உங்களுக்கு தேவையான சாரீஸ் மட்டும் எடுங்க… மகாவுக்கு டிசைனர் பார்த்துக்கட்டும்… என்னென்ன வேணும்ன்னு மட்டும் லிஸ்ட் கொடுங்க…” என்றவன், மிகப் பிரபலமான அந்த டிசைனருக்கு அழைத்தான்.
அவர் மிகவும் பிரபலமான டிசைனர் என்பதோடு, அவரது உடைகள் உலக அளவில் புகழ் பெற்றவை. அதிலும் அவர் மணப்பெண்கள் உடை வடிவமைப்பில் மிகவும் பெயர் பெற்றவர். பாலிவுட்டில் அவரது உடைகள் இல்லாத நபர்கள் இல்லை என்பதோடு, தன்னிடம் அவரது டிசைன்ஸ் இருக்கிறது என்பதை பெருமையாக கூறிக் கொள்ள ஒரு கூட்டமே இருக்கிறது.
ஆனால் இந்த குறுகிய கால இடைவெளியில் அவரது டிசைன்ஸ் சாத்தியமா என்று ஜோதி யோசிக்க, அவரிடம் பேசி, ஒப்புக்கொள்ளவும் வைத்து விட்டே நிமிர்ந்து ஜோதியை பார்த்து புன்னகைத்தான்.
கார்த்திக்கையும் ஜோதியையும் பார்த்தவன்,
“அவர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கியாச்சு… மும்பை போறீங்க… எல்லாத்தையும் முடிச்சுட்டு வர்றீங்க… அவ்வளவுதான்… இங்க என்னென்ன எடுக்கணுமோ, எடுங்க…” என்று ஷ்யாம் முடிக்க,
“அவர் கிட்ட டிசைன் பண்ணி வாங்கனும்ன்னா அட்லீஸ்ட் சிக்ஸ் மன்த் ஆகுமே ஷ்யாம்…” கார்த்திக் சந்தேகமாக கேட்டான்.
“யார் யாருக்கு என்ன வேணுமோ அதை மட்டும் சொல்லிட்டு வாங்க… மீதிய நான் பார்த்துக்கறேன்… எத்தனை ட்ரெஸ்னாலும் நாம சொல்ற டைமுக்கு கொடுப்பார்… அவரோட பிசினஸ் எக்ஸ்பான்ஷன்க்கு நம்ம கிட்ட பணம் வாங்கி இருக்கார் கார்த்திக்…” என்று சிரிக்க,
“எத்தனை பேரை தான் வளைச்சு போட்டு வெச்சு இருக்க நீ?” என்று கார்த்திக் சிரித்தான்.
“உன் தங்கச்சியை தவிர யாரை வேணும்னாலும் வளைச்சு போட்டுடலாம்… மசியாத ஒரே ஆள் உன் பாசமலர் மட்டும் தான்யா…” என்று சிரித்துக் கொண்டே அவளை காட்டியவாறு கூறினாலும், அதில் தெறித்த ஆற்றாமையை கார்த்திக் உணர்ந்து கொண்டான்.
பெண்ணின் மனதை பெண் தான் புரிந்து கொள்ள முடியும் என்பதை போல, ஆணின் மனதை ஒரு ஆணால் மட்டுமே உணர முடியும். அதனால் தானோ என்னவோ, ஆண்களுக்குள் நட்பு என்பது ஒரு முறை அழுத்தமாகிவிட்டால், காலத்துக்கும் அது மாறுவதில்லை!
“ஓகே… அப்படீன்னா முறைக்கு ஒன்னு எடுத்து காமாக்ஷி அம்மன் கிட்ட வெச்சு பூஜை பண்ணிடலாம்…” என்று ஜோதி யோசனை கூற,
“ஆமா… ஒரு புடவை கண்டிப்பா வெச்சு பூஜை பண்ணனும்…” பைரவியும் கூற,
“மற்றபடி சங்கீத், ஹல்டி, மெஹந்திக்கு டிசைனர் பண்ணிடட்டும்…” என்றார் ஜோதி.
“நம்ம முறைப்படி செய்யலாமே அண்ணி…” என்று பைரவி தயங்கிக் கொண்டே கேட்க,
“இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி நாமளும் மாறிக்கலாமே பைரவி… எல்லாம் கிரான்ட்டா செய்யனும்ன்னு ஜோதிம்மாவும் நினைச்சு இருப்பாங்கள்ல…” என்று முருகானந்தம் கூறினார்.
“நீங்க வேறண்ணா… இவன் ஒரு கல்யாணத்தை பண்ணாலே போதும்ன்னு தான் நினைச்சேன்… அந்தளவு எங்களை படுத்தி வெச்சுட்டான்… இப்ப பிள்ளைங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது எல்லாமே பண்ணி பார்க்கனும்ன்னு ஆசையா இருக்கு…” என்ற ஜோதியை ஆதூரமாக பார்த்தார் நாதன். இவளும் தான் எத்தனை ஆசைகளை மனதில் சுமந்து கொண்டு இருந்திருக்கிறாள் என்று தோன்றியது அவருக்கு. சிறு வயதில் ஷ்யாமை போல கட்டுக்கடங்காமல் திரிந்தவர். அவரை ஒரு நிலைக்கு கொண்டு வர ஜோதியும் எவ்வளவோ பாடுபட்டார்.
இப்போது மகன்!
“கண்டிப்பா பண்ணி பார்க்கலாம் அண்ணி… நம்ம பிள்ளைங்களுக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறோம்?” என்ற பைரவியை பார்த்து சிரித்த ஜோதி,
“அதுவும், இந்த மாதிரி ஒரு கல்யாணமான்னு எல்லாருமே மூக்கு மேல விரலை வைக்கணும்… ரொம்ப கிராண்டா… ஒரு மெகா ஈவன்ட்டா இருக்கணும்…” என்று அவர் தன் ஆசையை தெரிவிக்க,
“அதெல்லாம் ஜமாய்ச்சுடலாம் அத்தை… என்னென்ன பண்ணனும்ன்னு மட்டும் சொல்லுங்க… அத்தனையும் பண்ணிடலாம்…” கார்த்திக் சந்தோஷமாக வாக்கு கொடுக்க,
“எல்லாமே சேர்ந்தே பண்ணலாம் மருமகனே… கலக்கிடலாம்…” என்று நாதன் அவர் பங்குக்கு சந்தோஷித்தார்.
“உங்க ஆசைப்படி எல்லா ரிச்சுவல்ஸ்ஸும் தமிழ் முறைப்படியும் பண்ணிடலாம்… எந்த குறையும் இருக்கக் கூடாது… நான் பண்றது தான் சரி… நீங்க பண்றது தப்புன்னு எந்த ஈகோவும் நான் பார்க்க மாட்டேன்… என்னன்னாலும் சொல்லுங்க…” ஜோதி புன்னகையோடு கூற, பைரவிக்கு வெகு திருப்தியாக இருந்தது.
பெற்று வளர்த்த பெண்ணுக்கு எப்படியெல்லாம் திருமணத்தை செய்வித்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருப்பார். இப்போது அத்தனையும் நிறைவேற்றி வைக்க காத்திருக்கும் சம்பந்திமாரை நினைத்து உள்ளுக்குள் ஆனந்தமாகினார் பைரவி. எவ்வளவுதான் வசதி இருந்தாலும், அத்தனையும் ஈகோ இல்லாமல் ஏற்றுக் கொள்ள சம்பந்திகள் அமைவது வரம் தானே!
கண்களோரம் பளபளப்பு… இந்த அன்பையெல்லாம் இந்த பெண் புரிந்து கொள்ள வேண்டுமே என்று தோன்றியது அவருக்கு!
“ஓகே… அப்படீன்னா எல்லாருடைய ட்ரெஸ்ஸும் அவர்கிட்டவே கொடுத்துடலாமா?” என்று பொதுவாக ஜோதி கேட்க,
“ஒரு டிசைனர் போதாது பெரியம்மா… ஒரு மூணு நாலு பேர் கிட்ட பிரிச்சு கொடுத்துக்கலாம்… மகாவுக்கு மட்டும் ஷ்யாம் அண்ணா சொல்ற இடத்துல கொடுக்கலாம்…” என்று பிருந்தா கூறினாள்.
ஜோதி பிருந்தாவை பெரியம்மா என்று தான் அழைக்க வேண்டும் என்று செல்லமாக உத்தரவே போட்டிருந்தார். எப்படி இருந்தாலும் கார்த்திக்கை மணக்க போகிறவள் என்ற உரிமையோடு, தனக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அவருக்கு மிகவுண்டு. ஷ்யாமுக்கு அதே ஏக்கம் மனதின் அடி ஆழத்தில் உண்டு என்பதையும் அவர் எப்போதும் கவனித்து இருக்கிறார்.
தாயற்ற பிருந்தாவுக்கு அந்த அழைப்பு மிகவும் பிடித்து போய்விட்டது. இப்போதெல்லாம் ஜோதி வரும் போதெல்லாம் பெரியம்மா என்று அவர் பின்னாலேயே சுற்றுவதை வாடிக்கையாகவே கொண்டு இருப்பதை பைரவியும் கூட சிரித்தபடி பார்த்திருக்கிறார்.
“எஸ்… கரெக்ட்…” என்று ஜோதி ஒப்புக்கொள்ள,
“வெட்டிங் பிளானர்ஸ வர சொல்லலாம்… ஆரம்பத்துல இருந்து முழுசா அவங்க பார்த்துக்கட்டும்… நம்ம ரிச்சுவல்ஸ் மட்டும் நாம பார்க்கலாம்…” கார்த்திக் தன் கருத்தை கூற,
“ஓகே… அவங்க கிட்ட தீம் டிசைனிங், புட், அகாமடேஷன், லாஜிஸ்டிக்ஸ் எல்லாம் கொடுத்துடலாம்…” என்றான் ஷ்யாம்.
“எஸ்… சரி இப்ப எத்தனை சாரீஸ் வேணுமோ… எடுத்து முடிங்க பொண்ணுங்களா… ஒன்னொன்னா பார்க்க வேண்டாமா?” நாதனும் கூற,
“மஹா… தள்ளி உக்காரு… நீ சூஸ் பண்ண வரைக்கும் போதும்…” என்று அமர்ந்தவன், ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்துக் கொண்டே சென்றான்.
மகாவுக்கு மொத்தமாக முடித்துவிட்டு நிமிர்ந்தவனை பார்த்து ஜோதி சிரித்தார்.
“டேய்… திருட்டுபையா… என்னைக்காவது எனக்கு ஒரு சாரி செலெக்ட் பண்ணி இருப்பியா?” தெலுங்கில் மகனிடம் கலாய்க்க,
“ம்மீ… இப்ப உனக்கு என்ன வேணும்? எத்தனை வேணும்… சொல்லு… வித் இன் எ செக்கன்ட்…” என்று அவனும் தெலுங்கிலேயே மறுமொழி கூறி சொடக்கிட்டு காட்ட,
“இப்ப நீ எத்தனை வேணும்னாலும் எடுத்துக் கொடுப்படா திருட்டு பையா…” என்று சிரித்தார்.
ஆத்மாநாதன் அதை கேட்டு சிரித்தார்.
இவர்களது அலம்பல்களை எல்லாம் வெறும் பார்வையாளராய் பார்த்துக் கொண்டிருந்தாள் மஹா.
ஒவ்வொன்றாக இவர்கள் திட்டமிடுவதையும் திட்டமிட்டதை நினைத்து சந்தோஷிப்பதையும் பார்த்தவளுக்கு அத்தனை மகிழ்ச்சியையும் தான் கெடுக்க வேண்டுமா என்றும் இருந்தது!
ஆனால் பத்து சதவிதம் கூட அவளால் அந்த மகிழ்ச்சியில் ஒன்ற முடியவில்லை. உள்ளுக்குள் அத்தனை சோர்வாக இருந்தது. அத்தனை சோர்வையும் மீறி எப்படி ஷ்யாமை கணவனாக ஏற்பது?
புரியாத நிலையில் அமர்ந்திருந்தாள் மஹா!
அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த பிருந்தா,
“ஹலோ மேடம்… என்ன? ட்ரீமா?” என்று அவளை கலாய்க்க,
“ப்ச்… அதெல்லாம் ஒண்ணுமில்ல பிருந்தா…” என்று பேச்சை தவிர்க்க முயன்றாள்.
“அப்படீன்னா கொஞ்சமாவது ஆக்டிவா இரு மஹா… எதையோ பறிகொடுத்த மாதிரி உட்கார்ந்து இருக்க…”
“ம்ம்ம்ம்…” என்றவள், கார்த்திக்கை அழைத்து, “கார்த்திண்ணா கொஞ்சம் அண்ணியாரை பாரேன்… நீ வந்தாதான் சாரி எடுப்பேன்னு வேற பிடிவாதமா இருக்கா…” என்றவளை செல்லமாக முறைத்தாள் பிருந்தா. அவளை கார்த்தியிடம் மாட்டிவிட்டதில் அவளது முகம் செக்க சிவந்த வானமாகியது.
பிருந்தாவின் சிவந்த முகத்தை பார்த்து ரசித்தவளை கலைத்தது செல்பேசி அழைப்பு!
எடுத்து பார்த்தவள்,
“சுஷ்ருதால இருந்து தான்…” என்று ஷ்யாமை பார்த்து கூறியவள், போனை ஆன் செய்து காதுக்கு கொடுத்தாள்.
இவளை எதற்காக அழைக்க வேண்டும் என்று யோசித்தவன், அவளை பார்க்க,
“எஸ் டாக்டர்…” என்று ஆரம்பித்தாள்.
“மேம்… அந்த பேஷன்ட்…” என்று அவர் ஆரம்பிக்க,
“எந்த பேஷன்ட் டாக்டர்?” என்று கேட்டாள்.
“விஜய்…” என்றவர், இடைவெளிவிட்டு, “நேத்து மதியத்துல இருந்து எதுவும் சாப்பிடவும் மாட்டேங்கறார்… மெடிசனும் எடுக்கலை…” என்று கூற, அவள் புருவத்தை சுருக்கினாள்.
“ஏன் டாக்டர்?”
“நீங்க வந்தாதான் சாப்பிடுவாராம்…” என்றவருக்கு சற்று பயமாக இருந்தது. ஷ்யாம் அவரிடம் அத்தனை எச்சரிக்கை செய்திருந்தான். அவன் சம்பந்தமாக மஹாவை தொடர்பு கொள்ளக் கூடாது என்று! ஆனால் இப்போது அந்த விஜய்யின் பிடிவாதத்துக்கு முன் தான் எதுவுமே செய்ய முடியவில்லையே!
அதை கேட்ட மகாவுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. என்ன செய்வது என்றே புரியாமல் ஷ்யாமை பார்த்தாள், பரிதாபமாக!





