அத்தியாயம் ஐம்பத்து இரண்டு
திருமணம் முடிந்து ஒரு வாரத்திலேயே மீண்டுமாய் இண்டர்ன்ஷிப்பை தொடர்ந்தாள் மஹா. ஒரு வார விடுமுறையில் விருந்து கேளிக்கைகள் என கழிய, ஷ்யாமும் வீட்டை போயஸ் கார்டனுக்கு மாற்றுவதில் பிசியாக இருந்தான்.
உத்தண்டி பார்ம் ஹவுஸ் கல்லூரியிலிருந்து வெகு தூரம் என்பதோடு, அந்த வீட்டில் தங்கள் வாழ்க்கை ஆரம்பிப்பதை அவன் விரும்பவில்லை. அவனது பல கருப்பு பக்கங்களை ஞாபகப்படுத்தக் கூடிய வீடு அது. எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் நினைவலைகள் தேயும் போது அவை மறக்கப்படலாம், ஆனால் இப்போதைக்கு அந்த வீட்டை அவனால் ஏற்க முடியவில்லை. கார்த்திக், நாதன், ஜோதி, பைரவி என்று அனைவருமாக வீட்டுக்கு தேவையானதை வாங்கிக் குவித்துக் கொண்டே இருந்தனர், இவர்கள் இருவரையும் இழுத்துக் கொண்டு போய்!
இன்டீரியர் டெக்கரேட்டரை வைத்து முதலிலேயே வீட்டை அலங்கரித்து இருந்தான். முன்னர் போயஸ் கார்டன் வீடு அலுவலகமாக உபயோகப்படுத்தப் பட்டு வந்ததை, இப்போது முழுவதுமாக வீடாக மாற்றியிருந்தான்.
திருமணம் முடிந்த கையோடு ஹைதராபாத் அழைத்துக் கொண்டு போகலாம் என்று ஜோதி திருமணத்திற்கு முன்னரே ஆசைப்பட, மகாவின் படிப்பைக் காரணம் காட்டி நாதன் அதை சற்று தள்ளி வைத்திருந்தார்.
ஆனாலும் முறையை கைவிட முடியாது என்பதால் முதலில் ஹைதராபாத்துக்கு அழைத்துப் போக பைரவி கூறியிருந்தார். அதன் படியே அழைப்புகளை போயஸ் கார்டன் வீட்டிற்கும் பெசன்ட் நகருக்குமாக முடித்து விட்டு ஹைதராபாத் கிளம்பியிருந்தனர்.
முருகானந்தம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இறுக்கமாகவே இருக்க முயன்றாலும் அவரால் முடியவில்லை. பக்கத்து வீட்டில் தான் மாப்பிள்ளை என்றாலும் திருமணம் முடிந்து, தன்னுடைய மகள் அடுத்த வீட்டுக்கு போவது என்பது ஒரு தந்தையை பொறுத்தவரை தாள முடியாதவொன்று. தாய் என்பவள், தனது திருமணத்தின் போது அதை அனுபவித்து விடுவதால் அவளை அந்த நிகழ்வு பெரும்பாலும் பெரிதாக பாதிப்பதில்லை. ஆனால் தந்தைக்கு, அதுநாள் வரை, தன்னுடைய மகளை கூடவே இருந்து, தான் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த மகளை பிரிவது என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு!
பிரிந்து செல்லும் மகளை பார்க்க முடியாமல் அவர் தனியறையில் அழ, தேடி வந்த கார்த்திக் சமாதானப்படுத்தி மகாவிடம் அழைத்து வந்தான்.
எப்போது பொங்கி அழலாம் என்று காத்திருந்த மஹாவுக்கு தந்தையை அதுபோல பார்த்ததில் கண்ணீர் கரையுடைத்தது.
தந்தையை கட்டிக் கொண்டு கதறி அழுதவளை கண்ட பைரவி,
“ஏய் மஹா… அப்பாவும் பிள்ளையும் ரொம்ப தான் சீனப் போடறீங்க… என்னமோ இப்பவே ஹைதராபாத் போய்டற மாதிரி? இங்க இருக்க போயஸ் கார்டன்… எகிறி குதிச்சா போய் நிற்கலாம்… அப்படியே ஹைதராபாத் போனாலும் தான் என்ன? ஒரு ப்ளைட் பிடிச்சா சென்னை… அதுக்குள்ள என்னமோ அடுத்த செவ்வாய் கிரகத்துக்கு போற மாதிரி சீனைப் போடறீங்க ரெண்டு பேரும்…” கிண்டலாக கூறுவது போலவே இருவரையும் சமாதானம் செய்தாலும் அவருக்கும் அந்த வலி இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை அவர் காட்டிக் கொள்ளவில்லை.
கார்த்தியும் அவரும் இந்த விஷயத்தில் ஒன்று போலத்தான் சிந்திப்பார்கள்.
ஆனால் மகளின் மேல் உயிரை வைத்திருந்த முருகானந்தம் உணர்வு பூர்வமானவர், அதிலும் மகள் விஷயம் என்றால் உயிரை விட்டுவிடுமளவு!
“உனக்கு கொஞ்சம் கூட என் மேல பாசமே இல்ல… போம்மா…” என்று தாயைக் கோபித்துக் கொண்டவளை புன்னகையோடு பார்த்தான் ஷ்யாம்.
“ஆமா… கிளம்பும் போது என்னமோ போர்களத்துக்கு அனுப்பற மாதிரி உங்கப்பாவும் பீல் பண்ணுவாங்க… நீயும் அதுக்கேத்த மாதிரி பண்ணுவ… நானும் பண்ணனுமா? அழவே கூடாதுன்னு நானும் சொல்லிட்டு இருக்கேன்ல பாப்பா?”
“அழுகை வருதே… நான் என்ன வேணும்னே அழறனா?” இடது பின் கையால் கண்ணை துடைத்துக் கொண்டு அவள் கூற,
“அப்படீன்னா நான் தான் பீல் பண்ணும்டி… என்னை எப்படியெல்லாம் கொடுமை பண்ண போறியோன்னு நினைச்சு…” என்று ஷ்யாம் வெகு தீவிர குரலில் கூறினாலும், குறும்பு சிரிப்பு அவனது முகத்தில் ஒட்டியிருக்க, அவனைப் பார்த்து இவள் முறைக்க, சுற்றியிருந்த அனைவருமே வாய்விட்டு சிரித்தனர்.
“இப்ப நீ பீல் பண்ணி நோ யூஸ் மச்சான்… உனக்கு எப்பவோ ஸ்டாச்சுவரி வார்னிங் கொடுத்தாச்சு…” என்ற கார்த்திக்கை பார்த்து சிரித்தவன்,
“என்ன? மேரேஜ் இஸ் இஞ்சுரியஸ் டூ ஹெல்த் ன்னு நீ சொன்னியே மச்சான்… அதான?” சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்க, மஹா ஒருபுறம் முறைக்க, பிருந்தாவுக்கு கோபத்தில் முகம் சிவந்தது.
‘அடப்பாவி இப்படியெல்லாம் சொல்லி வைத்திருக்கிறானா? அதுதான் திருமணமென்றால் சொல்லாமல் கொள்ளாமல் ஓடுகிறானா?’ என்று பல்லைக் கடித்தவளையும், ஷ்யாமையும் மாறி மாறி பார்த்த கார்த்திக்,
“மச்சான்… கிளம்பும் போது கூட ஒரு குண்டை தூக்கிப் போட்டுட்டு தான் போவேன்ங்கற…” என்று புலம்ப,
“நாராயணா நாராயணா… இன்னும் ரெண்டு நாள் என் தங்கச்சி கிட்ட அடி வாங்கு நாராயணா… நான் மட்டும் வாங்கினா என்னாகறது நாராயணா?” என்று கலாய்க்க,
“நீ வாங்கறன்னா அது உன் விதி…” என்று வேண்டுமென்றே கலாய்த்து சிரிக்க,
“அப்படீன்னா உனக்கு அந்த விதி இல்லைங்கற… பாசமலரே… உனக்கு கேட்டுச்சா?” என்று பிருந்தாவை பார்த்து கேட்க,
“நல்லாவே கேட்டுதே… கேட்டுதே…” என்று கையை நம்பியாரை போல முறுக்கிக் கொண்டு கூற, அவளது தந்தை உட்பட அனைவரும் சிரித்து விட, கார்த்திக் பரிதாபமாக பிருந்தாவை பார்த்தான்.
“உன் அண்ணனோட வில்லத்தனத்துல கவுந்துடாத பேபி… நான் ரொம்ப நல்லவன்…” என்று கூற,
“ம்ம்ம்… சொன்னாங்க… அவங்க கிளம்பட்டும் அப்புறம் இருக்கு உங்களுக்கு…” அவன் புறம் குனிந்து பல்லைக் கடித்துக் கொண்டு கூற,
“பிருந்தா… உனக்கு ஏதாவது பாயின்ட் வேணும்னா கேளு… நான் இருக்கேன்…” ஷ்யாம் சிரித்துக் கொண்டே கூற, முகத்தை தூக்கிவைத்துக் கொண்டு கண்களில் நீரோடு இருந்த மஹாவே சிரித்து விட, கார்த்திக்கின் முகமும் அவனது பெற்றோர் முகமும் தெளிவானது. மஹாவின் நாடியை கச்சிதமாக பிடித்து வைத்திருக்கும் தங்களின் மாப்பிள்ளையை பெருமையாக பார்த்தார் முருகானந்தம்.
“மாப்பு… போட்ட பிட்டு எல்லாம் போதும்யா… இன்னும் கும்மியடிக்காத…” சிரித்துக் கொண்டே கார்த்திக் கூற, அத்தனை பேரின் முகத்திலும் புன்னகை.
அதே புன்னகையோடு ஹைதராபாத்துக்கு ப்ளைட் ஏறினாள் மஹா, தனது கணவனோடு… புதிய வாழ்க்கையை நோக்கி!
****
கண்ணாடியில் தெரிந்த தனது பிம்பத்தை ஆழ்ந்து பார்த்தாள் மஹாவேங்கட லக்ஷ்மி. உடலை தழுவிய மென்மையான பிங்க் நிற டிசைனர் சேலை, அதற்கு ஏற்றார் போன்ற சிறு நகைகள், மேக்அப் சிறிதும் இல்லாமல் கண்களுக்கு மட்டும் மையிட்டு, முடியை தளர பின்னி, இருபுறமும் ஜாதி மல்லியை படர விட்டிருந்தாள் பிருந்தா.
பிருந்தாவும், பெண் வீட்டின் சார்பில் கார்த்திக்கும் மட்டும் ஹைதராபாத்துக்கு உடன் வந்திருந்தனர்.
ஷ்யாமின் ஹைதராபாத் வீட்டை பார்த்து உண்மையிலேயே மலைத்துத்தான் போய்விட்டான் கார்த்திக். திருமண சடங்குகள் அனைத்துமே சென்னையிலேயே முடிந்து விட்டதால் ஹைதராபாத் வீட்டை மஹாவின் பக்கத்திலிருந்து யாருமே பார்க்கவில்லை. அதுவுமில்லாமல் ஷ்யாமின் பிடிவாதத்தில் அவ்வளவு சிறு இடைவெளியில் நடந்த திருமணம் என்பதால் அதை பார்க்க யாருக்கும் தோன்றவில்லை.
மாப்பிள்ளை வீட்டை பார்ப்பது என்பதை சென்னையிலேயே முடித்து இருந்தனர்.
ஆனால் இந்த வீடு ஒரு குட்டி அரண்மனை. அந்த காலத்து நிஜாம் வாரிசு ஒருவரிடமிருந்து நாதன் வாங்கியதாக கூறினார் அவனிடம்.
வீடு முழுக்க லஸ்தர் விளக்குகளும், ஓவியங்களுமாய், பழமை மாறாமல் பாதுகாத்துக் கொண்டிருந்தார் ஜோதி! மரச்சாமான்கள், அலங்கார பொருட்கள் என அனைத்தையும் சேர்த்து தான் அந்த வாரிசு கொடுத்துவிட்டு அமெரிக்கா போய் விட்டாராம்.
வீடும் சுற்றிலும் இருந்த பெரிய புல்வெளி சூழ்ந்த தோட்டத்தையும், சிறு குளத்தையும், அலங்கார பவுண்ட்டைன்களையும், இரவு நேரத்தில் ஏகாந்தமாக இருந்த அந்த இடத்தை கண்களால் நிரப்பிக் கொண்டான் கார்த்திக்.
ஒவ்வொன்றையும் ஆழ்ந்து அனுபவித்து பராமரிக்க வேண்டியது மிக அவசியம் என்று பட்டது. ஜோதி அதை அழகாக செய்திருந்தார். ஒவ்வொன்றிலும் அத்தனை ரசனை, அத்தனை நளினம். இத்தனையும் தங்கை கற்றுக் கொள்ள வேண்டுமே என்றிருந்தது.
வீட்டில், “அழுக்குத் துணியை லாண்டரி பேக்ல போடுடி எருமை… அப்படியே கடாசிட்டு போற…” என்று பைரவியிடம் எப்போதும் பாட்டு வாங்குபவள் அவனது செல்ல தங்கை. அப்படிப்பட்டவள், சமாளிப்பாளா என்று மலைப்பாகத்தான் இருந்தது.
அதை பிருந்தாவிடம் சிறு குரலிலும் தெரிவித்து இருந்தான்.
“அதெல்லாம் சமாளிப்பாங்க… அவளை பத்தி எனக்கு தெரியும்…” நம்பிக்கையோடு கூறியபிறகு தான் சற்று சமாதானமானது மனது.
அவனை சமாதானம் செய்துவிட்டாளே தவிர, உள்ளுக்குள் மஹாவை நினைத்து லேசாக உறுத்திக் கொண்டிருந்தது. அதை அவளுக்கு இரவு அலங்காரம் செய்த போது கூறிக் கொண்டிருந்தாள்.
“எந்த கோபத்தையும் மனசுல வெச்சுட்டு இருக்காத மஹா… ஃபீல் ஃப்ரீ…” என்றவளுக்கு பதிலெதுவும் கூறாமல் வெறுமையாக பார்த்தாள் மஹா.
“என்னன்னு யோசிக்கறியா?” என்று இவள் கேட்க, மஹா மெளனமாக தலையாட்டினாள்.
“ரொம்ப நாளாவே உன்னோட முகமே சரியில்ல மஹா… எனக்கு புரிஞ்சுது… அதோட கல்யாணம் பேசின நாள்ல இருந்தே நீ சுத்தமா சரியில்ல… எதையோ பறிகொடுத்த மாதிரியே இருக்க…” என்று நிறுத்தியவள், “ஆனா அண்ணா அப்படி இல்ல… எல்லாத்தையும் ஸ்போர்டிவா எடுத்துக்கறாங்க… ஜாலியா உன்னை இன்ப்ளுயன்ஸ் பண்ணிட்டு போயிட்டே இருக்காங்க… அவங்களுக்கு ஏத்த மாதிரி போய்க்கடி… நம்ம லைப் நமக்கு முக்கியம் மஹா…” என்றவளை தவிப்பாக பார்த்தவள்,
“நானும் ட்ரை பண்றேன் பிருந்தா… ஆனா ரொம்ப பயமா இருக்கு…” சிறு நடுக்கத்தோடு கூறியவளை அணைத்துக் கொண்டாள்.
“ஒரு செடியை பிடுங்கி இன்னொரு இடத்துல நடும் போது, அந்த செடிக்கு கண்டிப்பா ஒரு பிரஷர் இருக்கும்… புது இடத்துல நாம வளர முடியுமான்னு… தண்ணி, காத்து, வெளிச்சம் எல்லாம் சரியா இருக்குமான்னு நினைக்கலாம்… ஆனா அது கவலைப்படவே தேவையில்லை… அதை அந்த இயற்கை பார்த்துக்கும்… ஆனா கண்டிப்பா நாம நல்லா இருப்போம்னு அந்த செடி நம்பனும்… நம்பினா மட்டும் தான் அது வளர முடியும் மஹா. பாசிடிவா திங்க் பண்ணு…
எத்தனையோ விஷயம் அண்ணன் கிட்ட உனக்கு சரி வராம இருக்கலாம்… எத்தனையோ விசயம் அவருக்கு உன்கிட்ட சரி இல்லாம இருக்கலாம்… ஆனா அதிகபட்சமான காதல் எல்லாத்தையும் மாத்திடும்… அதிகமான காதல் இருந்தா சின்ன சின்ன தப்பெல்லாம் பெருசா தெரியாதுடி.. லவ் பண்ணு… ரொம்ப லவ் பண்ணு… முழுசா உன் வீட்டுக்காரரை சுவீகரிக்க அந்த லவ் ஒண்ணுதான் வழி மஹா…” என்று நிதானமாக அழுத்தமாக கூறியவளை மெல்லிய புன்னகையோடு பார்த்தாள்.
“நூத்து கிழவி மாதிரி பேசறடி அண்ணி…” என்று சிரிக்க,
“எல்லாம் உன் அண்ணன் ட்ரைனிங், ஒரு கிழவனை லவ் பண்ணி தொலைச்சுட்டேனே…” சிரித்தாள் பிருந்தா.
“என் அண்ணனை கிழவன்னு சொல்ற நீ…” என்று செல்லமாக கையோங்க, அறைக்குள் வந்தார் ஜோதி.
“என்ன பொண்ணுங்களா… ரெடியாகியாச்சா?” என்று அவர் கேட்க, பிருந்தா லேசாக சிவந்த முகத்தோடு,
“ரெடி பெரியம்மா…” என்று கூற, எழுந்து நின்றிருந்த மஹாவை ஆசையாக பார்த்தார்.
“ஷ்யாமோட செலக்ஷன் என்னைக்கும் பெஸ்ட் தான்…” என்று அவளை ஒற்றைக் கையால் நெட்டி முறித்தவர், “சந்த்ராம்மா…” என்று அழைத்து விட்டு கையிலிருந்த எலுமிச்சையை கொண்டு அவளுக்கு சுற்றி விட்டு, அவரது குரலுக்கு வந்த சந்த்ராம்மாவிடம் அந்த எலுமிச்சையை கொடுத்து, “இதை முச்சந்தில கொண்டு போய் நாலா பக்கமும் போட்டுடு…” என்று தெலுங்கில் கூற, அவர் வாங்கிக் கொண்டு போனார்.
“இவங்க குடும்பம் அவுட் ஹவுஸ்ல இருக்காங்க மஹா… சமையலுக்கு சந்த்ராம்மா… அவங்க ஹஸ்பன்ட் நம்ம கிட்ட டிரைவரா இருக்காங்க…” என்று கூடுதல் தகவலை கொடுக்க, மஹா மெலிதாக தலையாட்டிக் கொண்டாள்.
அவர்கள் வீட்டில் எத்தனை பேர் வேலைக்கு இருந்தாலும் பைரவி தான் சமைத்தாக வேண்டும். மஹாவுமே சமைப்பாள் என்பதால் சமையலுக்கு என்று யாரையும் வைத்ததில்லை.
“இவங்க பையன் நம்ம சென்னை வீட்ல சமையலை பார்த்துக்கறான்… அவன் குடும்பத்தோட அங்க தான் கண்ணா இருக்கான்… சோ நீ எதை பத்தியும் கவலைப்படாம படி, ஷ்யாமை பார்த்துக்க…” என்று அவளது கன்னத்தைப் பற்றியபடி கூற, மஹா நெகிழ்வாக ஜோதியை பார்த்தாள்.
“பெரியம்மா… அநியாயத்துக்கு இப்படி விக்கெட்டை காலி பண்றீங்களே…” என்று பிருந்தா சிரிக்க, மென்மையாக சிரித்தார் ஜோதி. தன் மகனின் இயல்பை எண்ணி உள்ளுக்குள் அவர் தவித்துக் கொண்டிருந்ததை யார் அறிவார்? இந்த பிள்ளைக்கு நல்ல புத்தியை கொடு இறைவா என்று எத்தனை நாள் வேண்டியிருப்பார்.
ஒரு திருமணத்தை செய்து கொண்டால் சற்று நிம்மதியாக முடியும் என்று எத்தனையோ நாள் வேதனையுற்று இருக்கிறார். பாதி நாள் வீட்டை எட்டியும் பாராமல் இருந்து இருக்கிறான். அப்போதெல்லாம் அத்தனை கவலையாக கண்ணீர் விட்டிருக்கிறார். அவனுக்காய் நல்ல எண்ணம் தோன்றி மஹாவை திருமணம் செய்து கொள்ள இருவரிடமும் பேசியபோது அத்தனை சந்தோஷமாக இருந்தது ஜோதிக்கு.
ஆனால் திருமணம் பேசியதிலிருந்தே மஹாவின் முகம் சற்றும் மகிழ்ச்சியை காட்டி விடவில்லை. அதோடு எத்தனையோ பிரச்சனைகள். அத்தனையும் ஓய்ந்து இனியாவது இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனதார எண்ணினார் ஜோதி.
மஹாவின் கன்னத்தை பிடித்து, பாசமாக,
“பிருந்தா, இப்படியொரு கல்யாணம் இதுவரைக்கும் நடக்கலைங்கற அளவு பெருமையோட என் மகன் கைய பிடிச்சுட்டு வந்தவ என்னோட மருமக… எனக்கொரு பொண்ணு இல்லையேங்கற குறைய தீர்க்க வந்த தேவதை… வீட்டுக்கு வந்த பொண்ணுங்க சந்தோஷமா இருந்தா தான் அந்த வம்சத்துக்கு கடவுளோட ஆசிர்வாதம் கிடைக்குமாம்…” என்று பிருந்தாவை பார்த்து கூறியவர்,
“அந்த ஆசீர்வாதம் என் வம்சத்துக்கு கிடைக்கணும் மா…” என்று முடிக்க,
“கண்டிப்பா கிடைக்கும் பெரியம்மா…” என்று நெகிழ்ந்து போய் கூறினாள் பிருந்தா. அதே நெகிழ்வோடு ஜோதியை மெளனமாக பார்த்தாள் மஹா.
“ஊர் மெச்ச நீங்க ரெண்டு பேரும் வாழ்ந்து இந்த குடும்பம் தழைக்கனும் மஹா. சரி செய்ய முடியாத குறைன்னு எதுவுமே இல்லடா… எல்லாமே அன்பால சாதிக்க முடியும்… புருஷன்மாரை கைக்குள்ள போட்டுக்க அன்பை தவிர வேற எந்த ஆயுதமும் இல்ல…” என்று கூற,
“பெரியம்மா… உங்க மருமகளுக்கு நீங்களே பையனை கைக்குள்ள போட்டுக்க சொல்லித் தரீங்க… இது சரியே இல்ல…” பிருந்தா சிரிக்க,
“என் மருமகளுக்கு நான் சொல்லித் தராம வேற யார் சொல்லி தருவாங்க?” என்று சிரித்தவர், “பிருந்தா குட்டி உனக்கும் தான் சொல்றேன்… பொண்ணுங்க செய்ய வேண்டிய முதல் வேலை, புருஷனை கைக்குள்ள போட்டுக்கறதுதான்… ஏன் அவங்க அவங்க புருஷனை தானே கைக்குள்ள போட்டுக்க சொல்றேன்…” என்று கிண்டலாக சிரிக்க,
“தெய்வமே…” என்று வணங்கினாள் பிருந்தா. மஹாவின் முகத்தில் அடக்க முடியாத சிரிப்பு.
“நிஜமா… கல்யாண வாழ்க்கைல வர்ற பாதி பிரச்சனைகளுக்கு காரணம் பொண்ணுங்களுக்கு புருஷனை எப்படி கைக்குள்ள போட்டுக்கனும்ன்னு தெரியாம இருக்கறதால தான்… அதை மட்டும் ஒழுங்கா பண்ணிட்டா போதும்…” என்று சிரித்தவர், மஹாவின் புறம் திரும்பி, “நீ நில்லுன்னு சொன்னா ஷ்யாம் நிற்கணும்… உட்கார்ன்னா உட்காரனும்… அந்தளவுக்கு அவனை நீதான் வழிக்கு கொண்டு வரணும் மருமகளே…” என்று நெட்டி முறித்தவர்,
“வா… முதல்ல விளக்கு ஏத்தி சுவாமியை நமஸ்காரம் பண்ணிடு மஹா…” என்றபடி அவளை அழைத்துப் போக, உள்ளுக்குள் லேசாக நடுங்கியபடி பூஜையறையை நோக்கி போனாள் மஹா.
*****
மெலிதாக தட்டிவிட்டு கதவை திறந்தவளுக்கு வியர்த்தது. உள்ளுக்குள் வெகு படபடப்பாக இருந்தது. ஒவ்வொருவரும் அறிவுரையை அள்ளித் தெளித்து இருந்தனர். அப்போதெல்லாம் பதட்டப்படாத மனம், நேரடியாக அவனை பார்க்க வேண்டிய நேரத்தில் பந்தய குதிரையாக படபடத்தது.
இத்தனைக்கும் வாக்கு கொடுத்திருக்கிறான் தான். உனக்காய் எப்போது தோன்றுகிறதோ அப்போது வாழ்க்கையை துவக்கலாம் என்று!
ஆனாலும் கைகள் நடுங்கியது… படபடத்தது… அவனை தனிமையில் சந்திக்காமல் எல்லாம் இல்லை. தலகுப்பாவில் அவனோடு முழுவதுமாக தனிமை தான். மலையேற்றத்தின் போதும் தனிமை தனிமை தான். ஒரே டென்டில் இருவருமாக உறங்கியிருக்கிறார்கள். ஒரே தட்டில் உணவை உண்டும் இருக்கிறார்கள். எத்தனையோ சந்தர்ப்பங்களில் இருவருமாக நெருக்கமாக அமர்ந்தபடி பேசியும் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் தோன்றாத பதற்றம் இப்போது!
அதிலும் நாள் முழுக்க அவனுடனே கழிந்து இருக்க, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கண்களால் அவளை கண்களால் களவாண்டுக் கொண்டிருந்தவனை உள்ளுக்குள் பயப்பந்து உருள அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தாள்.
சற்று நேரத்திற்கு முன்பாக விளக்கேற்றும் வேளையில், கார்த்திக் உடனிருந்தாலும் அவளையே தொடர்ந்து கொண்டிருந்தது அவனது கண்கள். அதிலும் முன்னெப்போதும் இல்லாததை போல, அவனது கண்கள் தழுவி சென்ற இடங்களை நினைத்து விதிர்த்து போனது நெஞ்சம்.
அதில் அத்தனை காதல், தாபம், நேசம், ஆசை!
அத்தனையும் பார்வையில் தேக்கி வைத்து, அவளை பார்த்தவனை நினைத்து உண்மையில் பயந்து தான் போனாள்.
அவனது காதல் அவளை நிஜமாக பயமுறுத்தியது. மனதை படபடக்க செய்தது.
மொத்தத்தில் தீக்குள் விரலை விட்ட கதையாகி போனது அவளது நிலை! தீயை தழுவவும் முடியாமல், விட்ட விரலை எடுக்கவும் முடியாமல்…
மெல்ல அறைக்குள் நுழைந்தவளை வரவேற்றது அவனது குரல்!
“வெல்கம் மிசஸ் ஷ்யாமள பிரசாத்…”
நிமிர்ந்து பார்த்தாள்.
அவளையே பார்த்தபடி சோபாவில் அமர்ந்தபடி கால் மேல் காலிட்டுக் கொண்டு, கைகளை கட்டியபடி அவளையே பார்த்திருந்தான், எப்போதும் போல பெர்முடாஸ், ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டில் சின்ன சில்மிஷ சிரிப்போடு! அவளுக்கு ஏனோ தலகுப்பாவில் முதல் நாள் அவள் கண்ட ஷ்யாம் நினைவுக்கு வந்தான். அப்போதும் இது போல அமர்த்தலான குரலில் ‘வெல்கம் மிர்ச்சி’ என்று கூறியவனை நினைத்துப் பார்த்தாள்.
அப்போது நினைத்திருப்பாளா? அவனையே பைத்தியம் போல காதலித்து, அவனை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு, எதை எதையோ கண்டு, வேதனையுற்றாலும் தவறுகளை மறக்கவும் முடியாமல், அவனை தவிர்க்கவும் முடியாமல் திருமணமும் செய்து கொள்ளப் போகிறோம் என்பதை உணர்ந்திருப்பாளா என்ன?
ஆயிரத்தில் ஒரு பங்காக கூட நம்பியிருக்க மாட்டாள்.
ஆனால் ஷ்யாம், இப்போது அவளது கணவன்!
ஆனால் அவளுக்கு மட்டும் உரிமையானவனா? தெரியவில்லை… இப்போது தெரிந்து கொள்ளவும் விருப்பமில்லை. வலித்தது…
எந்த உணர்வையும் காட்டாமல் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க, கண்ணை சிமிட்டிப் புன்னகைத்தான்.
திக்கென்று இருந்தது. ஆயிற்று… எந்த தருணத்தை நினைத்து, எந்த தருணத்தை எதிர்கொள்ள விரும்பாமல் இருந்தாளோ அந்த தருணம் ஆர்ப்பாட்டமான அமைதியோடு!
சோம்பலாக அவளை தழுவியது அவனது பார்வை. உச்சி முதல் பாதம் வரை… உரிமையாக மேய்ந்த அந்த பார்வையிலிருந்த தேவையை அவளால் உணர முடியாமலில்லை. பொருளுணர்ந்தவள் தலை கவிழ்ந்தாள்.
பேச முடியவில்லை… நிமிர்ந்து பார்க்கவும் முடியவில்லை… அது வெட்கமும் அல்ல… கூச்சமும் அல்ல… புது மணப்பெண்ணின் எதிர்பார்ப்பும் அல்ல… ஒருவிதமான இறுக்கம்… அந்த தருணத்தை விரும்பாத இறுக்கம்…
மெளனமாக கையிலிருந்த பாலை அவனிடம் கொடுக்க, பாதியை குடித்தவன்,
“மீதிய நீ குடிக்கணும்ன்னு ஏதாவது ரிச்சுவல் இருக்கா?” என்று கேட்டவனின் முகத்தில் அத்தனை கள்ளத்தனம். சிரிப்பும் கூட! அவன் அந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருந்தான். அத்தனை பிரச்சனைகளுக்கு பின்னான திருமணம். காதல் நிறைவேறிய நிறைவு அவனது முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது.
கட்டற்று திரிந்தவனை கூட்டுக்குள் அடைத்து, பிரதிபலன் பாராத நட்பும் காதலும் தந்தவள்… இப்போது வாழ்வின் சரிபாதியாக… அர்த்தநாரியின் மறுபாதியாக, உரிமையான மனைவியாக முன்னே நின்று கொண்டிருந்தவளை கண்களால் கொய்தான்.
அவனது முகம் விகசித்தது…
இனி அவள் அவனது உரிமை…
முழுக்க முழுக்க அவனுக்கு மட்டுமே உரித்தான பொக்கிஷம்…
அந்த பொக்கிஷத்தை களவாட வேண்டும் என்ற வேட்கையிருந்தாலும், அவளது மனதை மனதில் கொண்டு சற்று நிதானித்தான். அவனது நிதானம் அவளுக்காக மட்டுமல்ல… அவனுக்காகவும் கூடத்தான்!
அந்த புகைப்படங்கள்… வீடியோ… உள்ளுக்குள் ரொம்பவுமே அவமானமாக இருந்தது. எதனை கொண்டும் அந்த உணர்வை அவனால் தவிர்க்க முடியவில்லை. யார் அறியக் கூடாதோ அவளே பார்த்ததை தவிர வேறென்ன தண்டனையை தான் அனுபவித்து விட முடியும்? அவளை அணுக மிகவும் தயக்கமாக இருந்ததுதான் உண்மை… ஆனால் அதையெல்லாம் அவளிடம் அவன் காட்டிக் கொள்ளவே இல்லை. காட்டிக் கொள்ளவும் மாட்டான்.
“எனக்கு தெரியல…” என்று அவள் தப்பிக்கும் மார்கத்தை தேட,
“உனக்கு வேணும்னா குடுக்கறேன்…” சில்மிஷமாக கூறியவனுக்கு பதில் தராமல் நகர, அவளது கையை பிடித்து தன்னருகே அமர்த்தியவன், அவளையே காதலோடு பார்த்தபடி,
“வோர்ட் இஸ் எ வோர்ட் மஹா. நான் தான் சொல்லிட்டேன்ல… நீ எப்ப கம்பர்டபலா ஃபீல் பன்றியோ அப்ப மத்ததையெல்லாம் பார்த்துக்கலாம் ஹனி…” என்றவன், “ஆனா இப்ப பேச கூடவா கஷ்டமா இருக்கு?” என்று கேட்க, அவள் இல்லையென தலையசைத்தாள்.
“அப்புறம் ஏன் இவ்வளவு டென்ஷனா, மூடியா இருக்க? ஃப்ரீயா பேசு மஹா…” என கூற,
“ம்ம்ம்…” என்று நெளிந்தாள். அவனது அண்மை அவளை நெளிய செய்திருந்தது.
அவளிடம் தன் கையிலிருந்த பாலைக் கொடுத்தவன், “உனக்கு வேணும்னா குடி… இல்லன்னா வேண்டாம்…” என்று அவளது முகத்தை பார்க்க, சற்று தயங்கியவள், வாங்கிக் குடித்தாள்.
பெரும்பாலும் பால் குடிக்கவே மாட்டாள். பைரவி ரொம்பவும் கெஞ்சித்தான் குடிக்க வைப்பது வழக்கம். முக்கியமாக அந்த பால் வாடையே அவளுக்கு ஆகாது… குமட்டிக் கொண்டு வந்துவிடும். அதனால் அவளை பாலை குடிக்க வைக்க பைரவி கையாண்ட முறைகள் அத்தனையும் வரலாற்று சிறப்பு வாய்ந்தவை.
அப்படிப்பட்டவள் ஷ்யாம் கொடுத்ததை மறுக்க முடியாமல் குடித்தாள். ஆனால் முழுவதுமாக குடிக்க முடியவில்லை. அவள் குடிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தவன், குடித்த டம்ப்ளரை அவள் வைக்க முயல, அதை தடுத்தவன், வாங்கிப் பருகினான், ஒரு சொட்டு விடாமல், அவளை பார்த்தபடியே!
அந்த பார்வை அவளை சிலிர்க்க செய்தது. சிவக்க செய்தது. வெறும் பார்வையால் மனதின் அடியாழம் வரை ஊடுருவ முடியுமா? செய்து கொண்டிருக்கிறானே…
புருவத்தை உயர்த்தி என்னவென கேட்டவாறு டம்ளரை கொடுக்க, மெல்லிய நடுக்கத்தோடு கண்களை இவள் தாழ்த்தியபடி வாங்கி, அருகிலிருந்த சைடு டேபிளில் வைத்தாள்.
“மஹா வேங்கடலக்ஷ்மியான்னே எனக்கு சந்தேகமா இருக்கே…” சிரித்துக் கொண்டே கேட்ட ஷ்யாமை முறைத்தாள்.
“நான் ஸ்டாப்பா எஃப்எம் ரேடியோ மாதிரி பேசிட்டு இருந்த என்னோட செல்லக்குட்டியை காணோமே… நீ எதுவும் பார்த்தியா?” என்று மீண்டும் அவளிடம் வம்பு வளர்த்தவனை முறைத்து விட்டு எழுந்தாள்.
“என்ன?” என்றவனிடம், “ட்ரெஸ் சேஞ்ச் பண்ணனும்…” என்க,
“இதே அழகா இருக்கே மஹா…” என்றவனது பார்வை, அவளை அங்குலம் அங்குலமாக தடவியது.
“இல்ல… சாரி கட்டிட்டு எனக்கு தூங்கி பழக்கமில்ல…” என்று கூற, அவளை குறும்பாக பார்த்தவன்,
“வாவ்… அப்படியா?” என்று சில்மிஷ பார்வை பார்க்க, பல்லைக் கடித்தவள்,
“ஹலோ… நைட்டி போட்டுக்கனும்ன்னு சொன்னேன்…” கடுப்பாக கூற,
“ச்சே… அப்படியா? நான் கூட என்னன்னெமோ நினைச்சுட்டேனே…” கண்ணடித்து குறும்பாக கூற,
“நினைப்ப… நினைப்ப…” என்றபடி எழுந்தவளை, கையை பிடித்து இழுத்தவன் மேல் விழுந்தாள் மஹா.
“கொஞ்ச நேரம் இந்த சாரில இரேன்டி… சும்மா கும்முன்னு இருக்க…” ஜாதி மல்லியை ஆழ்ந்து முகர்ந்தவன், போதையாக காதில் கிசுகிசுக்க, அவனது கைக்குள் அவள் நெளிந்தாள். காதோரம் உரசிய அவனது மூச்சு காற்று வேறு அவளை இன்னும் குறுகுறுக்க செய்ய, “இப்படியெல்லாம் பிஹேவ் பண்ண மாட்டேன்னு எனக்கு நீ ப்ராமிஸ் பண்ணிருக்க ஷ்யாம்…” முயன்று அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள முயல, அவனது கை இறுக்கமாக வெற்றிடையை சுற்றி வளைத்து இருந்தது. அவனது உயரத்திற்கு அவள் சிறு கோழிக் குஞ்சாக அவனுள் அடங்கியிருந்தாள்.
“ஹோய்… நான் இதுக்கெல்லாம் ப்ராமிஸ் பண்ணலை… அதுக்கு தான்…” என்றவன் குறும்பாக ‘அதுக்கு’ என்று அழுத்தம் கொடுக்க, கடுப்பானவள், “ஃபிராடு…” என்றவள் வலுகட்டாயமாக அவனது கைகளை பிரித்து விட முயல, “சான்ஸே இல்ல… முடிஞ்சா போ…” என்றவனின் கைகளை அவளால் விலக்கவே முடியவில்லை.
சும்மாவா… அத்தனை அட்வென்சர்களையும் அனாயசமாக செய்பவன், பிட்னஸ்ஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து, உடம்பை வெகு ஃபிட்டாக வைத்திருப்பவன் என்பதை தான் அவள் அறிவாளே!
அவனிடம் போட்டி போட்டு எங்கனம் வெற்றி பெறுவது?
“விடு ஷ்யாம்…” என்றவளை இன்னும் கொஞ்சம் இறுக்கி, “கொஞ்ச நேரம் இருந்தா நானே விட்டுடுவேன்… ரொம்ப பண்ண, ப்ராமிசாவது ஒன்னாவதுன்னு சுவாமிஜி பரவச நிலைக்கு போய்டுவேன்… ஜாக்கிரதை…” என்று சிரித்துக் கொண்டே அவளை மிரட்ட,
“எங்கேயோ போ… என்னை விடு…” என்று அவனிடமிருந்து எப்படியாவது விலக வேண்டும் என்று முயல,
“சரி போ… உன்னை அப்புறமா கவனிச்சுக்கறேன்…” என்றவனுக்கு அவளை விடவும் மனமில்லை. ஜாதி மல்லியின் மணம் வேறு அவனை சுண்டி இழுத்தது.
“போன்னு சொல்லிட்டும் பிடிச்சு வெச்சுருந்தா எப்படி போக?” உதட்டை சுளித்தபடி மஹா கேட்க, அவள் சூடியிருந்த பூவை இன்னுமே ஆழ்ந்து முகர்ந்தான். அவனது உணர்வுகளை தட்டி எழுப்பிக் கொண்டிருந்தது பூவா, பூவையா என்று சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் வைக்குமளவு ஆழ்ந்து அமிழ்ந்து போயிருந்தான்.
“இதென்னடி பூ? இப்படி ஒரு ப்ராக்ரன்ஸ்? செமயா இருக்கே…” என்று கேட்க,
“ஜாதி மல்லி…”
“தினம் வெச்சுக்க… செமயா மூடை கிளப்புது…” மயக்கமாக கூற,
“கிளப்பும் கிளப்பும்… மண்டைல ரெண்டு போட்டா நல்லாவே கிளப்பும்…” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவளது பின்கழுத்தில் அவனது முகத்தை தேய்க்க, மஹாவுக்கு திக்கென்று இருந்தது.
“ஏய்… என்ன இப்படியெல்லாம் பண்ற?” என்றவள் அவனிடமிருந்து விடுபட வெகுவாக முயல,
“அப்படி செய்ய மாட்டேன்னு மட்டும் தானடி சொன்னேன்… இப்படி கூட செய்யக் கூடாதுன்னா எப்படி?” ஹஸ்கியான குரலில் கூறியவனின் வார்த்தைகளில் அவளுக்குள்ளே குளிர் பரவியது.
“எப்படியெல்லாம் செய்ய மாட்டன்னு ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்துடு… ஃபிராடு போர் டுவென்டி…” என்றவள், அவன் அசந்த நேரமாக தன்னை விடுவித்துக் கொண்டு எழுந்தாள்.
குறும்பாக அவளைப் பார்த்து சிரித்தான்.
அறையை அப்போதுதான் சுற்றிலும் பார்த்தாள். வெகு ஆடம்பரமாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. நிஜாம்களின் தாக்கம் தெரிந்தது. கட்டிலும் கூட அத்தனை ரசனையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. கட்டிலின் நான்கு புறமும் அழகாக தூண்கள் வேய்ந்து, கால்களும் கூட அத்தனை அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. சுற்றிலும் மெல்லிய வலை. அதை காட்டிலும் சோம்பலான மஞ்சள் விளக்கு அறைக்குள் பரவியிருந்த சூழ்நிலை அத்தனை ரொமான்டிக்காக இருந்தது. அந்த வெளிச்சத்தை ஒளிர்ந்து கொண்டிருந்த லஸ்தர் விளக்குகளும், வாசனை மெழுகுவர்த்திகளை கட்டிலின் இருபுறமும் சுமந்து கொண்டிருந்த குமிழ்களும், தேக்கு மர சாமான்களுமாக அத்தனையும் ஆண்டிக் என்று கூறிக்கொண்டிருந்தது. வீடு முழுக்கவே இப்படித்தான் இருப்பதை அப்போதுதான் நினைத்துப் பார்த்தாள்.
“முப்பது வருஷத்துக்கு முன்ன, இங்க செட்டிலாகும் போது, நிஜாம் வாரிசு ஒருத்தர் கிட்ட இருந்து நானா வாங்கினார். அந்த வாரிசு மர சாமான்லருந்து அத்தனையும் சேர்த்து கொடுத்துட்டு அப்ராட் போய்ட்டாராம்… ஆனா அத்தனையும் பழமை மாறாம அழகு குறையாம பராமரிக்கறது அம்மா தான்…” அவளது பார்வைக்கு விளக்கம் கொடுத்தான்.
அத்தனை பெரிய அறையின் ஒரு பக்கத்தில் ஆளுயர கண்ணாடி, அத்தனை அலங்காரமாக, இருபுறமும் தந்தத்தை சுமந்து கொண்டு வீற்றிருக்க, அவளது கண்கள் ஆச்சரியத்தை சுமந்தது.
“எங்க வீட்ல இவ்வளவு ரசனையால்லாம் அலங்காரம் பண்ணிக்க மாட்டாங்க…” என்றவளின் கண்களில் அத்தனை ரசனையிருந்தது. மெலிதாக புன்னகைத்தான்.
“இத்தனை நாள்ல நானே இவ்வளவு ரசிச்சு பார்த்ததில்லடி…” சிரித்தான்.
“எப்படி இவ்வளவு அழகான வீட்டை விட்டுட்டு இருக்க?” என்று ரசனை மாறாமல் அவள் கேட்க,
“அப்படீன்னா இங்கயே வந்துடலாமா குல்ஃபி?” என்று புன்னகையோடு கேட்க,
“வாவ்… நிஜமாவா?” என்று ஆச்சரியமாக கேட்டவள், “ஐயோ படிப்பை முடிக்கணுமே…” என்று உண்மையாகவே கவலைப்பட்டாள்.
“அப்படீன்னா படிப்பை முடிச்சவுடனே இங்க வந்துடலாமா?” என்று அவன் கேட்க,
“ம்ம்ம்… கண்டிப்பா…” என்றாள், கண்ணாடியின் முன் அமர்ந்தபடி நகைகளை கழட்டி வைத்தபடி!
உறங்கும் போது அவள் எந்த நகையும் அணிய மாட்டாள். வெகுவாக உறுத்தும். அத்தனையும் கழட்டி வைத்து விடுவாள். இப்போதும் தாலியை மட்டும் விட்டுவிட்டு அத்தனையும் கழட்ட, கழுத்தை ஒட்டிக் கொண்டிருந்த நெக்லஸ் மட்டும் முரண்டு செய்தது. ஹூக்கை கழட்ட முடியாமல் சோர்ந்தவள்,
“ஷ்யாம்…” என்று அழைக்க, நிமிர்ந்து பார்த்தவன், “என்னடி…” என்று கேட்டான்.
“கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்… இதை கழட்ட முடியல…” நெக்லஸை காட்டி கூறியவளை ஒரு மார்கமாக பார்த்தவன், அருகில் வந்து,
“அது மட்டும் தானா குல்ஃபி?” என்று சில்மிஷமாக கேட்க, அவளது முகம் கோபத்தில் சிவந்தது.
“டேய்…”
“இல்லடி… வேற ஏதாவது செயின், வளையல், தோடு இப்படி எதாவது கழட்ட முடியலைன்னா ஹெல்ப் பண்ணலாமேன்னு கேட்டேன்…” என்று குறும்பாக சிரித்தவனை பார்த்து வாயை மூடி சைகை காட்ட,
“ஓகே ஓகே…” என்றவன் நெருங்கி நின்று நெக்லஸை கழட்ட முயல, அவளது சங்குக் கழுத்தும் அதை தொட்டு உறவாடிக் கொண்டிருந்த அவன் அணிவித்த தாலியும் வெண்மையான முதுகும் ஈர்க்க, அவளை இன்னமும் ஒட்டி நின்றவன், அவளது தோளில் முகத்தை பதித்தபடி இருவரையும் கண்ணாடியில் பார்த்தான், அவளது தாடையை நிமிர்த்தியபடி.
தன்முன் தெரிந்த பிம்பத்தை பார்த்தாள் மஹா. அவனது கண்களில் அத்தனை காதல்… அந்த கண்களில் மூழ்கினாள் அவள்!
கண்ணாடி வழியாக பார்த்தபடியே புருவத்தை உயர்த்தி என்னவென்று அவன் கேட்க, உலகமே மறந்து போனது… அவனும் அவளுமாக மட்டுமே அவளது உலகத்தில்!
கழுத்திலிருந்து பயணித்த அவனது கைகள் அவளது இடையை சுற்றி வளைக்க, எதிர்க்க தோன்றாமல் மயங்கி அப்படியே அவனது நெஞ்சில் சாய்ந்தாள்.
“ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்டி பொண்டாட்டி…” மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக அவன் கூற, மஹாவுக்கு உடல் முழுக்க சிலிர்த்து சிவந்தது.
“ம்ம்ம்…” என்று முனகினாலும் அவள் இந்த உலகத்திலேயே இல்லை. தன்னை மறந்து அவனது நெஞ்சில் சாய்ந்திருந்தாள்.
இடையை வளைத்த கை இன்னும் கொஞ்சமாக தன்னோடு சேர்த்து இறுக்க, முற்றிலுமாக வசமிழந்தாள்.
தோளில் முகத்தை வைத்திருந்தவன், அவளது கழுத்தில் முத்தமிட, மொத்தமாக மயக்கத்தில் ஆழ்ந்தாள்! கண்கள் தாமாக மூடியது!
அவளது மயக்கமும் கிறக்கமும் அவனுக்குள்ளும் மின்சாரத்தை பாய்ச்சியது. அவனையும் அறியாமல் அவனது உதடுகள் கழுத்தை தாண்டி பயணிக்க ஆரம்பிக்க, கைகள் அதன் போக்கில் அத்துமீற, இருவருக்குமே உலகம் மறந்தது.
மஹா அதே மயக்கத்தோடு கண்களை திறந்து பார்க்க, கண்ணாடியில் ஷ்யாமின் பிம்பம், அவளை முத்தமிட்டுக் கொண்டிருக்க, அவனது கண்களில் அவள் கண்ட கிறக்கமும், அவனது மயக்கமும் சட்டென அவளுக்கு வேறு ஒன்றை நினைவுப்படுத்த, மின்சாரம் தாக்கியதை போல அதிர்ந்தாள் அவள்!
இது போலத்தானே அவளையும் முத்தமிட்டான்…
விஜி அனுப்பிய வீடியோவை அவள் முழுவதும் பார்க்கவில்லை. ஆனால் பார்த்த ஒரு சில காட்சிகளிலேயே அவனது ஈடுபாட்டில் தான் அதிர்ந்து போயிருந்தாள்.
அதே மயக்கம்… அதே கிறக்கம் அவனில்… இப்போதும்!
காதலுக்கும் காமத்துக்குமான வித்தியாசத்தை அவன் பட்டியலிடலாம். அவன் அனைத்தையும் அறிந்தவன், புரிந்தவன், தெரிந்தவன், தெளிந்தவன், தெளிவானவன், ருசி பார்த்தவன். ஆனால் அதை பற்றிய அடிப்படையே அறியாமல், காதலின் அறிமுகம் மட்டுமே கிடைத்திருக்கும் மகாவை போன்ற ஒரு பெண்ணுக்கு அனைத்துமே ஒன்றாக தெரிவதில் ஆச்சரியமென்ன இருக்கப் போகிறது?
வெகு ஆழமாக கைகளில் நெகிழ்ந்து இருந்தவளின் உடல் திடீரென விறைக்கவும் கண்களை திறந்து அவளது முகத்தை பார்த்தான்.
கலக்கமாக இருந்த அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
சட்டென அவளை விட்டு விலகியவனுக்கு அத்தனை உணர்வுகளும் வடிந்தன!





