arrow_back
வீணையடி நீயெனக்கு அத்தியாயம் ஐம்பத்து மூன்று
வீணையடி நீயெனக்கு chevron_right பகுதி 53 / 64

அத்தியாயம் ஐம்பத்து மூன்று

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

காலை வெகு பரபரப்பாக விடிந்தது. மஹா தன்னுடைய இன்டர்ன்ஷிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள். இரண்டு நாட்களுக்கு முன் அவசர வேலையென்று போனவன் முந்தைய தினம் இரவு தான் திரும்பியிருந்தான். ஜோதியும் நாதனும் ஹைதராபாத் கிளம்பிப் போய் நான்கு நாட்களாகி இருந்தன. போயஸ் கார்டன் வீட்டை இருவருக்குமாக செட் செய்து கொடுத்திருந்தார்கள் பெரியவர்கள் அனைவரும்.

அவரவர்களுக்கு தோன்றியதை எல்லாம் வாங்கி குவித்து ஒருவழியாக்கி ஓய்ந்து இருந்தனர். வேண்டாமென்று ஷ்யாம் சொன்னதை எல்லாம் பைரவியோ கார்த்திக்கோ காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. முருகானந்தம் இருவருமாக வாங்கிக் குவிப்பதை ஆசையாக பார்த்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் ஒரு பக்கம் என்றால் ஜோதி ஒரு பக்கம்.

ரசனையாக தேர்ந்தெடுப்பதில் அவரை அடித்துக் கொள்ளவே முடியாது என்பதை போல இருக்கும் அவரது தேர்வுகள்.

இரு பக்கமும் திருப்தியாகும் வரை வீட்டை நிரப்பி விட்டு போக, மஹா விழிபிதுங்கிப் போயிருந்தாள்.

அவள் மூச்சடைத்து போய் இருப்பதை பார்த்தவன்,

“ஏய் பொண்டாட்டி…” என்று குறும்பாக கத்தி அழைக்க, ஜெர்க்காகி அவனை பார்த்தாள்.

“என்ன?” கண்களை விரித்து அவனை பார்த்து கேட்க,

“ஏன்? நீ என் பொண்டாட்டி தானே?” என்றான் சிரிப்போடு.

“ம்ம்ம்… அதுக்காக எப்பவும் பொண்டாட்டி பொண்டாட்டின்னு கூப்பிடுவியா?” கொஞ்சம் கடுப்பாகத்தான் கேட்டாள்.

வீட்டில் வேலை செய்பவர்கள் சுற்றி இருக்கிறார்கள் என்ற ஸ்மரணையே இல்லாமல் இவன் இப்படி கத்தி வைக்கிறானே என்ற எரிச்சல் தான்!

“பின்ன? பொண்டாட்டிய பொண்டாட்டின்னு கூப்பிடாம வப்பாட்டின்னா கூப்பிட முடியும்? வேணும்னா ட்ரை பண்ணி பார்க்கட்டா?” என்று கண்ணடித்தவனை பார்த்து தலையிலடித்துக் கொண்டாள்.

“உஷ்ஷ்ஷ்…” என்று சப்தத்தை அடக்கியவள், “டேய்… கல்யாணம் பண்ணிட்டடா நீயி… எருமை… அப்புறம் ஏன் உனக்கு அங்கேயே நெனப்பு போகுது?” என்று சிறிய குரலில் கேட்க,

“கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கேனே ஏடுகொண்ட்ல வாடா… இப்படி அநியாயம் பண்ணுவன்னு தெரிஞ்சு இருந்தா…” என்று அவன் கிசுகிசுப்பாக இழுக்க,

“ம்ம்ம்… தெரிஞ்சு இருந்தா?” என்று கண்களை உருட்டினாள்.

“ம்ம்ம்… தெரிஞ்சு இருந்தா…” என்று மீண்டும் இழுத்தவன், சற்று தள்ளி நின்று கொண்டு, “எல்பிடபிள்யூ அடிச்சு இருப்பேன்டி பொண்டாட்டி…” என்றவன், இன்னும் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான். சேஃப் ஜோன்.

“எல்பிடபிள்யூ வா? அப்படீன்னா?” புரியாமல் பார்த்தாள் அவனது மனைவி!

“ஹிஹி… சொன்னா என்னை அடிப்ப…” என்று கிண்டலாக சிரித்தவனை பார்த்து முறைத்தாள் மஹா.

“சொல்லலைன்னாலும் அடிப்பேன்…” என்று அவனை நோக்கி போக,

“இதுக்கும் நான் பதில் சொல்லிடுவேன்… ஆனா அது டூ மச் கிரீனிஷ்ஷா இருக்குன்னு ரீடர்ஸ் நெத்திக்கண்ணை திறந்துடுவாங்க…” என்று கண்ணடித்தவன், “எதுவா இருந்தாலும் ஹால் வேண்டாம் டார்லிங்…” என்று சிரிக்க, சுவாமிஜி மலையேறி விட்டார் என்பது மட்டும் அவளுக்கு புரிந்தது.

“டேய்… உன்கிட்ட என்னதான் பேசறதுன்னே தெரியல… எல்லாத்துக்கும் இன்னொரு அர்த்தம் வெச்சு இருக்க…” என்று கடுப்படித்தாலும் புன்னகை வழிந்தது.

எவ்வளவு டென்ஷனாக வந்தாலும், இரண்டு நிமிடங்களில் சிரிக்க வைத்து விடுபவனை என்ன சொல்லி கோபித்துக் கொள்வது? அதிலும் யாருக்கும் புரியாமல் இரட்டை அர்த்தங்களில் இவன் காதை கடிக்கும் போதெல்லாம் வெடித்து சிரிப்பதை போலத்தான் இருக்கும். ஆனாலும் சுற்றுபுறத்தை கணக்கில் கொண்டு கட்டுப் படுத்திக் கொள்வாள். ஆனால் அத்தனையும் பேசிவிட்டு ஒன்றுமே தெரியாதவனை போல அமர்ந்திருப்பான் இந்த சமர்த்தன்.

“பேசவே பேசாதன்னு தான்டி நானும் சொல்றேன்…” என்று அவன் கண்ணடிக்க,

“டேய்… வேண்டாம்…” என்று அடிக்க கையோங்கியவள், “நீ இப்படியேத்தான் பேசிட்டு இருப்ப… எல்பிடபிள்யூவுக்கு முதல்ல விளக்கம் சொல்லு…” என்று அவனை கிடுக்கிப் பிடி போட,

“அடியே அறிவு வாளி பொண்டாட்டி… ஒரு எம்பிபிஎஸ் ஸ்டுடன்ட்டா இருந்துட்டு எல்பிடபிள்யூவுக்கு அர்த்தம் தெரியலைன்னு சொல்ற ஒரே ஆள் நீயாத்தான்டி இருப்ப…” என்று நக்கலாக சிரிக்க, அவள் முகம் சிவந்து பார்த்தாள்.

“ஏன் சிலபஸ்ல இன்க்ளுட் பண்ணி இருக்காங்கன்னு சொல்லேன்…” என்று பல்லைக் கடிக்க, அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“என்னடி சொல்ற? எல்பிடபிள்யூவை சிலபஸ்லையா…?????” என்றவன், அடக்க மாட்டாமல் சிரிக்க, அவனது கிண்டல் சிரிப்பே சொன்னது… அதற்கான அர்த்தம் ஏதோ விஷமமானது என்று!

“பின்ன? கிளாஸ்ல சொல்லி தர்ற மாதிரி சொல்ற? நீ சொல்லும் போதே தெரியுது… ஏதோ கோக்குமாக்காத்தான் இருக்கும்ன்னு…” என்று இவள் சலித்துக் கொள்ள,

“இதையெல்லாம் கிளாஸ்ல சொல்லி வேற தரணுமா?” என்று புருவத்தை உயர்த்தி மீண்டும் சப்தமாக சிரிக்க, அதற்கும் மேல் அவளால் தாள முடியவில்லை. டைனிங் டேபிளின் மேலிருந்த கத்தியை கையிலெடுத்தவள்,

“டேய் பிசாசே… ஒழுங்கா அர்த்தத்தை சொல்லிட்டு சிரி… இல்லன்னா கொன்னுடுவேன் பார்த்துக்க…” என்று அவனை நோக்கி நீட்ட,

“ஏய் பொண்டாட்டி… இப்படியெல்லாம் வயலன்ஸ்ல இறங்க கூடாது… பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்…” என்றவனின் கழுத்தில் கத்தியை வைத்தவள்,

“மவனே மரியாதையா சொல்றியா? இல்லையா?” என்று வேண்டுமென்றே மிரட்ட,

“அடப்பாவி… நான் உன் புருஷன்டி…”

“அதெல்லாம் எனக்கு தெரியாது… ஓவரா வாயாடாம அர்த்தத்தை சொல்றியா? இல்ல…” என்று வில்லியை போல சொல்ல, அவனால் இன்னமும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போனது. ஒரு பிடிக்கு தாங்க மாட்டாள். இவள் தன்னை மிரட்டுகிறாளாமா என்று சிரித்தவன்,

“ஓகே சொல்றேன்… கத்தியை கீழ போடு…” என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஷ்யாம் கூற,

“அது…” என்று தன்னுடைய காலர் வைத்த சுடிதாரின் காலரை ஏற்றி விட்டுக் கொண்டாள்.

கூடுமானவரை அவளை விட்டு தள்ளி நின்று கொண்டவன்,

“எல்பிடபிள்யூன்னா லவ் மேக்கிங் பிஃபோர் வெட்டிங்… அதாவது கல்யாணத்துக்கு முன்னாடியே மேட்டரை முடிச்சு இருக்கனும்ன்னு சொன்னேன்டி அறிவு வாளி…” என்றவனை இரண்டு நொடிகள் புரியாமல் பார்த்தவள், முகம் சிவந்து, கண்களை உருட்டி, பல்லைக் கடித்துக் கொண்டு அவனது கழுத்தை நெரிக்க, “அடேய்ய்யி…” என்றபடி அவனை நோக்கிப் போக, அவளது அந்த அவதாரத்தை பார்த்து சிரித்தவன்,

அவளிடம் சிக்காமல், “ரா ரா… சரசுக்கு ரா ரா…” என்று பாட, அவளது கொலைவெறியை அந்த பாடல் இன்னமும் ஏற்றி விட, அவனை எப்படியாவது பிடித்தேயாக வேண்டும் என்ற வெறியில் அவனை துரத்தினாள்.

“ஏய் பொண்டாட்டி தலகுப்பால ஸ்லிப்பான என்னோட ஹார்ட் இப்ப ஜம்ப் ஆகுதுடி…” என்றவனை புரியாமல் பார்த்தவளை, கண்ணடித்து, “ரன் பேபி ரன்… ரன் மிர்ச்சி ரன்…” என்று ரன்னிங் கமெண்ட்ரி கொடுக்கவும் தான் அவனது சில்மிஷம் புரிய, அது அவளது வெறியை இன்னமும் ஏற்றி விட்டது.

அவளிடமிருந்து தப்பி, போக்கு காட்டிவிட்டு மாடியை நோக்கி சிரித்துக் கொண்டே வம்பிழுத்தபடி ஓடினான் ஷ்யாம்.

“எல்பிடபிள்யூவ சிலபஸ்ல இன்க்ளுட் பண்ணா…” என்று பெரும் சிரிப்பாக சிரித்தவன், “நினைச்சு பாரு…” என்று மீண்டும் சிரிக்க, அவனது சிரிப்பை கண்டவள், பல்லைக் கடித்துக் கொண்டு,

“டேய்… வேண்டாம்…” என்று கொதிக்க,

“அதை வேற இவங்களுக்கு கிளாஸ்ல லெக்சர் எடுக்கணுமாம்…” என்று சிரித்தவன், “கிளாஸ்ல சமையல் மந்திரம் ப்ரோக்ராமை ஓட்டி பார்க்கனும்ன்னு நினைக்கற அளவுக்கு இருக்க நீ…” என்று மனைவியை வார, அவள் முகம் சிவந்து,

“அடேய் எருமை… அர்த்தம் புரியாம சொல்லிட்டேன்… வேண்டாம்… ரொம்ப கலாய்க்கற…” என்று அவனை விடாமல் துரத்த, அவளுக்கு போக்கு காட்டி விட்டு அவர்களது அறைக்குள் நுழைந்தான் ஷ்யாம்.

துரத்தியதில் அவன் அவர்களது அறைக்குள் நுழைந்ததையே அவள் உணரவில்லை.

மூச்சு வாங்கியபடி அவன் படுக்கையில் விழ, அவனது கழுத்தை நெரிக்க வந்தவளின் காலை அவனே அறியாமல் தட்டி விட, அவன் மேலேயே விழுந்தாள் மஹா.

“ஐயோ… நான் சட்னி…” வேண்டுமென்றே ஷ்யாம் கத்த,

“கத்தி தொலைக்காதடா…” என்று அவனது வாயை மூடினாள் மஹா, கதவை பார்த்தபடி.

ஆட்டோமேடிக் லாக், சமர்த்தாக லாக் ஆகி இருந்தது.

“ஷப்பா…” என்று பிடித்து வைத்த மூச்சை வெளியே விட்டவள், அவனது வாயிலிருந்து தன்னுடைய கையை எடுத்து விட்டு,

“இப்ப கத்தி தொலை…” என்று கூற, அவன் எதுவும் பேசாமல் அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது கண்கள் அவளையே விஷமமாக பார்த்துக் கொண்டிருந்தது.

இத்தனை நேரம் அவளை வம்பிழுத்து, கலாய்த்து, அவளை அழ வைத்து, சிரிக்க வைத்து, ஓட வைத்து, கிண்டல் செய்து அவளை ஒரு வழியாக்கியவன், இப்போது ஏன் மெளனமாக அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று யோசிக்க, அவனது பார்வை அவளை துளைத்தது. ஊடுருவியது. அவளது உயிரை தொட்டது. என்னவென்று புரியாமல் இவள் பார்க்க,

இடையை வளைத்து இருந்த அவனது கை அவளை வருட, மஹா துள்ளினாள்.

“ஏய் கிச்சுகிச்சு மூட்டாத…” என்று எச்சரிக்கை செய்ய, அவன் அதை கேட்டால் தானே? அவனது கை அதன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க, அவனது பார்வை அவளது உதடுகளில் பதிந்து இருந்தது.

அவனது பார்வை அவளை ஏதோ செய்ய, அவனிடமிருந்து எழுந்து கொள்ள பார்த்தாள் மஹா.

பின்கழுத்தில் கைகொடுத்தவன், கன்னத்தில் உதடால் ஊர்வலம் போக, மஹா சிலிர்த்தபடி கண்களை மூடினாள்.

“மஹா…” அவளது காதுக்குள் ரகசியமாய் பேச,

“ம்ம்ம்…” என்றாள் மஹா, மயக்கத்தோடு! கண்களை திறந்து அவனை பார்க்க, அவனது விஷமப் புன்னகைதான் கண்களில் பட்டது.

“சும்மா மெத்து மெத்துன்னு டன்லப் மெத்தை மாதிரி இருக்கடி… ஆனா என்ன? கொஞ்சம் பெரிய சைஸ் மெத்தை…” என்று சொல்லி கண்ணடிக்க, அப்போதுதான் உணர்ந்தாள், அவன் மேல் தான் படுத்துக் கொண்டிருப்பதை.

அதிலும் தன்னை அவன் பெரிய சைஸ் மெத்தை என்று வேறு கூறிவிட, ரோஷமாக எழுந்து கொள்ள முயல, அவளால் முடியவில்லை. விழுந்ததில் முடி அவனது டி ஷர்ட்டின் பட்டனில் சிக்கியிருக்க,

“ஸ்ஸ்ஸ்…” என்றபடி முகத்தை சுளித்தாள்.

முடியை பியைத்து எடுக்க முடியாமல், எப்படியாவது அவனிடமிருந்து விடுபட முயல,

அவளை பார்த்து சிரித்தவன், “காதலுக்கு மரியாதை விஜய் ஷாலினி ஞாபகம் வரலையா குல்ஃபி உனக்கு?” என்று கண்ணை சிமிட்ட, அவனை பார்த்து முறைத்தாள்.

அத்தனை நெருக்கமாக அவன் மேல் படுத்திருப்பது வேறு அவஸ்தையாக இருக்க, அவனோ விடாமல் அவளை கலாய்த்துக் கொண்டிருந்தான்.

“ஹீரோ ஹீரோயினுக்கு இப்படி சீன வெச்சா அடுத்த செக்கன்ட் அவங்களுக்குள்ள லவ் மூட் ஸ்டார்ட் ஆகணும்டி… எதிக்ஸ்சே தெரியல உனக்கு…” என்று சிரிக்க,

“டேய் இப்ப வாயை மூடறியா? இல்ல நான் கடிச்சு வைக்கட்டா?” எரிச்சலில் அவள் வாயை விட்டுவிட, அவனது முகம் பிரகாசமானது.

“ஏய்… செக்கன்ட் ஆப்ஷன் சூப்பர்டி பொண்டாட்டி… ஐ ஆம் ரெடி…” மீண்டுமாய் அவன் சிரித்தபடி அவளை கிண்டலடிப்பதில் எரிச்சலானவள்,

“அதையெல்லாம் அவ கிட்டத்தான் நீ கேக்கணும்…” என்றவளுக்கு முடி இப்போது விடுபட, அவள் தன்னை விடுவித்துக் கொண்டு எழ முயன்றாள்.

அவளை அப்படியே கவிழ்த்தவன், அவள் மேல் படர்ந்து கொண்டு,

“எவ?” என்று கேட்க,

“ம்ம்ம்… அந்த சௌஜன்யா…” என்று எரிச்சலாக கூற,

“அவ கிட்ட நான் எதுக்குடி கேக்கணும்? நீதான என் பொண்டாட்டி?” என்று கேட்டவனுக்கு சுர்ரென்று கோபம் வந்திருந்தது. எப்படி இவள் சௌஜன்யாவோடு ஒப்புமைப் படுத்தலாம் என்ற எரிச்சல். அவனது எல்லைக் கோட்டை மீற வைத்து இருந்தாள் மஹா.

ஒரு வார்த்தை… ஒரே வார்த்தை… அத்தனையையும் புரட்டிப் போட மஹாவால் மட்டுமே முடியும் என்பதை மீண்டும் மீண்டுமாய் உறுதி செய்து கொண்டிருந்தாள்.

இது ஆணுடைய ஈகோவை தட்டி எழுப்பும் இடம். கடந்த காலங்களில் இருந்த உறவுகளை எல்லாம் யாருமே நினைத்துக் கொண்டிருக்க போவதில்லை. அதிலும் பெண்கள் உணர்வு பூர்வமானவர்கள் என்றால், ஆண்கள் மிகவும் பிராக்டிகலாக சிந்திக்கக் கூடியவர்கள். அதிலும் ஷ்யாம் ரொம்பவுமே ப்ராக்டிகல். அவன் சொன்னது ஒன்றே ஒன்று தான். ‘உனக்கு முன்பாக எனக்கு நிறைய உறவுகள் இருந்து இருக்கின்றன தான். இப்போது அவை எனக்கு ஒன்றுமே இல்லை. உன் மீதான நேசம் உண்மை. காதல் உண்மை. அதை மட்டும் பார். உனக்கு முன்பான உறவுகளின் தன்மையை நான் இப்போது நினைத்தும் பார்க்கவில்லை’ என்பதுதான் அவனது நிலை.

அதை அவள் முழுவதுமாக உணர்ந்து இருக்கிறாள். சொல்லப் போனால் ஆண்களில் முக்கால்வாசி பேருக்கு கண்டிப்பாக கடந்தகாலம் என்ற ஒன்று இருந்து இருக்கிறது என்பதை அவளும் அறிவாள்.

ஜீரணிக்க முடியாத படங்களை அவளால் மறக்கவே முடியவில்லை என்பதுதான் உண்மை. அந்த கோபம் அவ்வப்போது வெளிப்படுவதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த ஜீரணமாகாத கோபத்தினால் இப்போது மட்டுமல்ல… எப்போதுமே அவளால் வார்த்தைகளை கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டால்?

“நீதானே என்னுடைய பொண்டாட்டி… உன்கிட்ட தான் நான் கேப்பேன்…” என்றவனை உறுத்து முறைத்தவள்,

“தயவு செஞ்சு தள்ளிக்க… அப்புறம் என்ன வேண்ணா கேளு…” என்றவளை ஒரு மாதிரியாக பார்த்தவன்,

“ஏன்?” என்று கேட்க,

“பிடிக்கல…” முகத்தை திருப்பிக் கொண்டு கூற,

“ஏன் பிடிக்கல?” இறுக்கமாக அவன் கேட்க,

“பிடிக்கலன்னா விடேன்…”

“அப்படியெல்லாம் விட முடியாது… என்னன்னு சொல்லு… உன்னை முன்னாடி நான் இப்படி கட்டிப் பிடிச்சது இல்லையா?” என்றவன், அவளை இறுக்கமாக கட்டிக் கொண்டு காட்ட, அவள் மூச்சு விட முடியாமல் திண்டாடினாள்.

“இல்லைன்னா உன்னை இப்படி கிஸ் பண்ணதில்லையா?” என்றவன், பிடிவாதமாக அவனது கன்னத்தில் முத்தமிட்டு கேட்க, அவளது முகம் கோபத்தில் சிவந்தது.

“ஷ்யாம்… தயவு செஞ்சு தள்ளிக்க… எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்கல…”

“அதான் என்னன்னு சொல்லு…”

“ஒரு மாதிரி அருவருப்பா இருக்க மாதிரி இருக்கு…” தன் மேல் படுத்திருந்த அவனை சுட்டிக் காட்டி அவள் கூற, அவனது கோபம் இன்னமும் உச்சிக்கு பறந்தது.

“என்னடி ரொம்ப பேசற? நான் உன்னோட புருஷன்… அது ஞாபகம் இருக்கா?”

“எல்லாம் இருக்கு…” அழுத்தமாகத்தான் கூறினாள் மஹா.

“இப்ப என்ன புதுசா இப்படியெல்லாம் பேசற மஹா? உனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுக்கணும்ன்னு நான் நினைச்சது தப்பா?” என்று கேட்டவனுக்கு என்ன பதில் கூறுவதாம்?

அவனை மிகவும் பிடிக்கும்… அவனது தொடுகை முன்னரெல்லாம் அவ்வளவு பிடிக்கும். மயக்கத்தில் மூழ்கி இருந்திருக்கிறாள். ஆனால் அவன் அருகில் வந்தால் அந்த படம் அவளது நினைவுக்கு வருவதையும் தவிர்க்கவே முடியவில்லையே. அவளும் தான் என்ன செய்வாளாம்? அவனை விட்டுக் கொடுக்க முடியாமல் கட்டிக் கொண்டாலும் மனம் சண்டித்தனம் செய்கிறதே!

ஆனால் இவையனைத்தையும் ஷ்யாம் அறியவில்லை. மஹாவால் விளக்கவும் முடியவில்லை. முடியவில்லை என்பதை விட தெரியவில்லை. அவனுடையது அதீத காதல் தான். ஆனால் காமம் இல்லாத காதல் ஏது? அவனது அபிலாஷைகள் மறுக்கப்படும் போது அவனது உணர்வுகள் எரிமலையாகின.

“பிடிக்காம உன்னை தொடனும்ன்னு எனக்கு எந்த கம்பல்ஷனும் இல்ல மஹா… நினைச்சா திரும்பவும் பழைய லைஃப்பை ரீஸ்டார்ட் பண்ண எவ்வளவு நேரமாகிடும் எனக்கு?” உக்ரமாக அவன் கேட்க,

“ஏன் ரீஸ்டார்ட் பண்ணேன்… யார் உன்னை கண்ட்ரோல் பண்ணா? கண்ட்ரோல் பண்ண நான் யார் உனக்கு?” எங்கோ பார்த்தபடி சொன்னவளின் கண்களில் லேசான பளபளப்பு. ‘செய்யேன்’ என்ற அவளது வார்த்தைகள் அவனை இன்னமும் உக்கிரப்படுத்த,

“நானாத்தான் கண்ட்ரோல்ல இருக்கேன்…யாரும் என்னை கண்ட்ரோல் பண்ணலை… பண்ணவும் முடியாது மஹா…ஆனா இப்படியெல்லாம் நீ சொல்லும் போது மீறி உன்னை தொட்டுப் பார்த்தா என்னன்னு என்னை நினைக்க வெச்சுடாத… ஓரளவு தான் எலாஸ்டிக்கை கூட இழுக்க முடியும்… ரொம்ப இழுத்து பிடிக்க நீ நினைச்சா…” என்றவன் அவளை தள்ளி விட்டு, “நீ என்னடி சொல்றது என்னை தொடாதன்னு… நானே சொல்றேன்… என்னை நீ தொடாத…” என்று அதீத கோபத்தில் கூற, அவனது கோப முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள், பக்கென்று சிரித்து விட, அவளை முறைத்தான்.

“இப்ப எதுக்குடி சிரிக்கற?” எரிச்சலாக கேட்க,

“ஓவர் வாய்டா உனக்கு…” என்று மீண்டும் சிரிக்க,

“பின்ன… தொடாதன்னு சொன்னா, பின்னாடி ஒரு இளையராஜா பிஜிஎம் ஓட விட்டுட்டு மௌனராகம் மோகன் மாதிரி சோக கீதம் வாசிக்க சொல்றியா? பிச்சு போடுவேனாக்கும்…” என்றவனை பார்த்து முறைத்தவள்,

“கல்யாணத்துக்கு முன்னாடி ப்ராமிஸ் பண்ணியே ஷ்யாம்…” என்று கேட்க,

“உனக்கு மைன்ட் ஸ்டடியாகட்டும்ன்னு சொன்னேன்… அதுக்காக உன்னை வெச்சுக்கிட்டு காலம் முழுக்க ஊறுகாய் போட்டுட்டு இருப்பேன்னு நினைச்சியா?” என்று கடுப்பாக கேட்டவனை பார்த்து இன்னமும் முறைத்தவள்,

“என்னடா நீ இப்படியெல்லாம் பேசற?” அவனது தோரணையை கண்டவளுக்கு சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கிட்டத்தட்ட பத்து நாட்களாக தள்ளியே தான் இருந்தான். இப்போதும் இப்படியெல்லாம் பேசவும் நடந்து கொள்ளவும் எந்த எண்ணமும் இல்லை அவனுக்கு. மஹாவாகத்தான் வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தாள்.

அவளது மனவோட்டம் புரிந்து இருந்தது அவனுக்கு. சட்டென தனக்குள்ளாக இறுகி விடும் அவளை எப்படி சமாதானம் செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால் செய்து தானாக வேண்டும்.

என்ன பிரச்சனை என்று வாய்விட்டு சொன்னால் அதை களையலாம். எதையும் சொல்லாமல் தனக்குள்ளே வைத்தபடி மறுகுபவளை எங்கனம் சமாதானம் செய்வது? இதுதான் பிரச்சனை என்று அவளும் சொல்ல வேண்டும். இது தான் உனது பிரச்சனையா… இதற்கு தீர்வு இப்படி இருக்கலாம், அதுவரை நான் பொறுமை காக்கிறேன் என்று அவனும் இருக்க வேண்டும்.

அந்த பொறுமையும் அவனிடமில்லை. அவனும் தெளிவாக கூறவில்லை.

இவையெல்லாம் அவனுக்கு புரியாமல் தான் அவளிடம் கொதித்தான்.

முடிந்தவரை இயல்பாக இருப்பதை போல இருந்தாலும், தனக்கு உரிமையான மனைவியிடம் அத்தனை எதிர்பார்ப்பும் உண்டு அவனுக்கு. அவளுக்கும் தன் மேல் மிகத் தீவிர காதலுண்டு, ஆசையும் உண்டென தெரியும். ஆனாலும் அவளால் ஒட்டமுடியவில்லை என்பதையும் அறிவான்.

இவனுக்குமே ஒட்ட முடியாத நிலை என்று ஒன்று உண்டு. அதை கடந்து வர கண்டிப்பாக அவனால் தனிப்பட்டு முடியாது… முடியவே முடியாது… அவளாக அவனை ஏற்றுக் கொண்டாலே அன்றி அவனால் அந்த நிலையை கடக்க முடியாது. அந்த எல்லைக் கோட்டை இருவர் மட்டுமே அறிந்து இருந்தனர்.

அந்த எல்லைக் கோட்டை அவள் கடந்து, தன்னையும் கடக்க செய்ய வேண்டும் என்ற அவனது உள்மன விருப்பம் நிறைவேறாத போது அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது.

எதுவும் பேசாமல் எழுந்து கொண்டவன், பால்கனியில் நின்று கொண்டு சிகரெட்டை பற்ற வைத்துக் கொண்டான்.

அவனது மனது ஒருவிதமான உணர்வில் ஆட்பட்டிருந்தது.

அது அவனது தொடுகையை அருவருப்பு என்று அவனது மனைவி கூறியதினால் ஏற்பட்ட அவமானமா? இயலாமையா? கோபமா? ஆத்திரமா?

ஒற்றை வார்த்தைகளில் உயிர் கொன்று விடுகிறாளே இவள் என்று நினைத்தான்.

மெளனமாக அவனருகில் வந்து நின்றாள் மஹா. சிகரெட்டை அவனது வாயிலிருந்து எடுத்து கீழே போட, மீண்டும் இன்னொன்றை பற்ற வைக்க வாயில் வைத்தவன், அதை கைவிட்டான்.

“சாரி ஷ்யாம்… ஐ டிட்ன்ட் மீன் இட்…” என்றவளை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. எங்கோ அவனது பார்வை இருந்தது.

‘இன்னும் எவ்வளவு தூரம் ஹர்ட் பண்ணுவன்னு தெரியல மஹா… நான் உன் மேல வெச்சு இருக்க லவ்வை மட்டும் நீ புரிஞ்சுக்கவே இல்ல…’ மனதுக்குள் தான் நினைத்தானே தவிர, வெளியில் கூறவில்லை. அவனது முகத்தில் ஏதோவொரு ஆற்றாமை.

அமாவாசை இரவின் அந்தகாரத்தில் தன்னையும் தொலைக்க முடியுமா?

அவனது வெறித்த பார்வையை கண்டவள், அவளே தொடர்ந்தாள்.

“உன்னை ஹர்ட் பண்ணக் கூடாதுன்னு தான் நினைக்கறேன்… ஆனா என்ன பண்றது, பேசறதுன்னு தெரியாமத்தான் ஏதாவது பேசிடறேன்…” என்று உணர்ந்து கூற, திரும்பி அவளை பார்த்தான்.

“ம்ம்ம்… சரி விடு…” என்று கூறி விட்டானே தவிர, அவனால் சமாதானமாக முடியவில்லை. அவளும் அதற்கும் மேல் சமாதானம் செய்ய முயலவில்லை.

****

அடுத்த நாள் காலையிலேயே சமையலறை இரண்டு பட்டது. மகேந்திரனை தள்ளி நிறுத்திவிட்டு, தான் களத்தில் குதித்து இருந்தாள் மஹா.

“ஏய் மஹா… மகேந்திரன் பார்த்துக்குவான்… ஒழுங்கா நீ கிளம்பு…” என்று மாடியிலிருந்து ஷ்யாம் கத்த,

“வந்துட்டேன்… இன்னொரு பைவ் மினிட்ஸ்…” பதிலுக்கு கத்தினாள் மஹா.

“என்னமோ செய்… சொன்னா எதையுமே கேட்க கூடாதுன்னு முடிவு பண்ணி வெச்சுட்டு இரு…” என்றவன், அவசரமாக அலுவலக அறையை நோக்கிப் போனான். கொழுகட்டையை பிடித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் இது பட, தோளைக் குலுக்கிக் கொண்டு அவள் தன்னுடைய வேலையை தொடர்ந்தாள்.

அவளுக்கு சமையலில் எப்போதுமே ஆர்வமுண்டு. பைரவியும் பெண்ணுக்கு எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று சமையல் பழக்கி இருந்தார்.

முந்தைய தினம் அவனை ரொம்பவுமே கோபப்படுத்தியாகி விட்டதே என்ற சிறு குற்ற உணர்வு. அப்போது வரைக்குமே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதானிருந்தான்.

அதற்காக அவனோடு இழைய முடியாது. ஆனால் அவனை அப்படியே பார்க்கவும் பிடிக்கவில்லை. அவன் வீட்டில் இருந்தால் அவள் சிரித்துக் கொண்டுதானிருப்பாள் என்ற அளவில் அவளை வம்பிழுத்து சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பவனை இப்படி பார்க்க அவளுக்கு மனம் பிசைந்தது.

அவனிடம் எப்போதும் போல பேச வேண்டும் என்று ஆசைப்பட்டவள், அவனுக்காக சமைக்க முடிவு செய்திருந்தாள்.

காபியை கலந்தவள், எடுத்துக் கொண்டு அவனது அலுவலக அறையை நோக்கிப் போனாள்.

அடுக்கி வைத்திருந்த கோப்புகளில் ஏதோவொன்றை அவசரமாக தேடிக் கொண்டிருந்தான்.

காபியோடு வந்தவளை பார்த்தவன், “டேபிள்ல வெச்சுட்டு போ மஹா…” என்று கூற, வைத்தவளுக்கு அவன் குடிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது.

முதன் முறையாக அவனுக்காக காபி போட்டவள், இருவருமாக அமர்ந்து குடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இரண்டு கோப்பைகளையும் எடுத்து வந்திருந்தாள். அவன் குடித்து விட்டு கூறும் ஒரு வார்த்தைக்காகத்தான்! ஆனால் அவனோ அதை சற்றும் கண்டுகொள்ளாமல் வைத்து விட்டு போ என்றதும் அவளுக்குள் இருந்த ஆசை அத்தனையும் வடிந்தது.

தன்னுடைய கோப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள், சோபாவில் விஸ்ராந்தையாக அமர்ந்து கொண்டு கையில் பேப்பரையும் எடுத்துக் கொண்டாள். காபி வித் எக்ஸ்ப்ரெஸ் என்று முன்னெல்லாம் கிண்டல் செய்வாள். இப்போது காபி வித் பிசினஸ் லைன் என்று தான் கூற வேண்டும்.

ஆம்! ஷ்யாம் முதலில் கண் விழிப்பது, அதில் மட்டும் தான். ஒரு வரி விடாமல் மனப்பாடம் செய்து விடுபவனை ஏலியனை போலத்தான் பார்த்தாள். ஆனால் இப்போது அந்த பெண் புலியே பிசினஸ் லைனை எடுத்து வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டதே! என்ன சோகம்!

அவள் காபி குடித்து முடிக்கும் வரை அவன் வரவே இல்லை. அடுப்பில் வைத்த கொழுக்கட்டை நினைவுக்கு வர, சமையலறைக்கு சென்று அடுப்பை சிம்மில் வைத்தவள், மகேந்தரனிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு, ஷ்யாமை நோக்கி போனாள்.

அலுவலக அறையிலேயே அமர்ந்தபடி, செல்பேசியில் யாரிடமோ ஹிந்தியில் பேசிக் கொண்டிருந்தான் அவன்.

காபி ஏடு கட்டி ஆறிப் போயிருந்தது.

ஷ்யாம் அவளை கண்டாலும், எந்த பிரதிபலிப்பும் இல்லை.

சற்று நேரம் பேசிவிட்டு வைத்தவன், நெற்றியை சுருக்கிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்தான்.

“என்ன ஷ்யாம் பிரச்சனையா?” என்று இவள் கேட்க,

“ம்ம்ம்… என்ன கேட்ட?” என்று தடுமாறியவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

அவனுக்கு இது போன்ற தடுமாற்றங்கள் குறைவு. எதுவாக இருந்தாலும் தெளிவாக இருப்பான். ஆனால் அவனே ஒரு மாதிரியாக இருக்கிறான் என்றால்?

“பிரச்சனையான்னு கேட்டேன்…” என்றவளிடம்,

“ம்ம்ம்ம்… அப்படியொண்ணும் இல்ல… சின்ன விஷயம் தான்… ஆனா என்ன பண்றதுன்னு தெரியல…” என்றவனை வியப்பாக பார்த்தாள். என்ன செய்வது என்று தெரியவில்லையா?

“என்னன்னு சொல்லேன்… என்னால எதாவது சொல்யுஷன் சொல்ல முடியுமான்னு பார்க்கறேன்…” என்று கேட்க, அவன் சிரித்தான்.

“ஏய் நீயெல்லாம் இன்னும் குழந்தை… போய் செரிலாக் சாப்பிடு செல்லம்…” என்று சிரித்தாலும் அந்த சிரிப்பு அவனது கண்ணை எட்டவில்லை.

“ரொம்ப பண்ணாத… சொல்லு…” என்று கேட்க,

“இன்னைக்கு சென்ட்ரல் மினிஸ்டர் விட்டல் ராவ் சென்னை வர்றார்…” என்று கூற,

“சரி… அதனால?”

“அவர் கிட்ட கணக்கு காட்டனும்…”

“ஓ… அந்த ஆளையும் வளைச்சு போட்டு வெச்சுருக்கன்னு சொல்லு…” என்று கிண்டலாக கூற,

“ம்ம்ம்… இன்னைக்கு மொத்தமாக கணக்கை முடிக்கணும் மஹா. அடுத்த செட் ஃப்ரெஷா ஆரம்பிப்போம், இதுதான் வழக்கம்… ஆனா போன செட்டோட கணக்கு இருந்த பைல் எங்கன்னு தெரியல…” என்று கூற, உள்ளுக்குள் அதிர்ந்தாள்.

இது சிங்கத்தின் வாயில் தலையை கொடுத்த கதை ஆயிற்றே!

“என்ன சொல்ற ஷ்யாம்?” என்று அதிர்ந்து கேட்க,

“ம்ம்ம்… அதை விஜி தான் பார்த்துட்டு இருந்தான்…” என்று கூற, அவனை வெறித்துப் பார்த்தாள் மஹா.

“சாஃப்ட் காபி இல்லையா? வேற பேக் அப் எதுவும்?”

“சிஸ்டம்ல எப்படி இவன் போட்டு வெச்சு இருக்கான்னே தெரியல… ஆனா கண்டிப்பா அதுல பேக் அப் இருக்கும்… எங்க இருக்குன்னு தான் தெரியல…” என்று கூற,

என்ன பதில் பேசுவது என்று அவளுக்கு புரியவில்லை.

“விஜிக்கு நினைவு திரும்பிடுச்சு…” மெல்லிய குரலில் கூறியவளை எந்த பதிலும் கூறாமல் பார்த்தான்.

“ம்ம்ம்… தெரியும்…” என்றவனை ஆச்சரியமாக பார்த்தாள்.

“எப்ப தெரியும்?”

“அவன் எப்ப முழுசா மெமரி ரீகைன் பண்ணானோ அப்பவே தெரியும்… அவனோட சின்ன சின்ன ஆக்ஷன்ஸ் கூட எனக்கு அத்துப்படி மஹா… நீ ஏமாறுவ… நான் மாட்டேன்… அதுக்கப்புறம் நாலு நாள் கழிச்சு தான் உனக்கு தெரியும்…” என்றவனை கண்களை விரித்துப் பார்த்தாள்.

“நான் என்ன பேசினேன்னு நீ கேட்கவே மாட்டியா ஷ்யாம்?” அவனது முகத்தை எதிர்பார்ப்போடு பார்க்க,

“எனக்கு தெரியாம பார்க்கனும்ன்னு நீ நினைச்ச மஹா… அதை நான் எப்படி கேட்பேன்… ப்ச்… அது உன்னோட டீப் பர்சனல்…” என்று அவன் முடிக்க, அவள் கோபமாக,

“என்ன பெரிய பர்சனல்? உன்கிட்ட சொல்ல முடியாததுன்னு எனக்கு எதுவும் இல்ல…” அவசரமாக அவள் கூறிய வார்த்தைகளே அவளுக்கு எதிராக போய்விட, அவளை ஆழ்ந்து பார்த்தான்.

“ஆஹான்… அப்படியா?” என்றவனின் தொனியிலேயே அவனிடம் தான் சிக்கிக் கொண்டதை உணர்ந்து கொண்டவள், உதட்டை கடித்துக் கொண்டு தலை குனிந்து கொண்டாள்.

“ஈவன் ஹஸ்பன்ட் அன்ட் வைஃப்பா இருந்தாலுமே அவங்களுக்குன்னு தனிப்பட்ட ஸ்பேஸ் இருக்கு… அந்த ஸ்பேஸ்ல அவங்க அனுமதி இல்லாம ஊடுருவ கூடாதுன்னு நினைக்கறேன் மஹா.” என்றவனை நிமிர்ந்து பார்த்தாள். அது எத்தனையோ கேள்விக்கான பதில் தான். ஆனால் அதை எப்படி ஏற்பது என்று தான் அவளுக்கு புரியவில்லை.

அவளை பொறுத்தவரை கணவன் மனைவி உறவென்பது அனைத்துக்கும் அப்பாற்ப்பட்டது. இருவருக்குமிடையில் மறைத்து வைக்க ஒன்றுமே இல்லையென்ற அளவில் ஒன்றி போக வேண்டிய உறவு, உணர்வாலும், உறவாலும், உயிராலும் கூட!

அவளது எண்ணம் அப்படியாகப்பட்டதாக இருப்பதால் தான் அவளால் அவன் இன்னொரு பெண்ணில் லயித்து இருந்ததை ஏற்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதும்.

அந்த ஒரு விஷயத்தை தவிர, அவளுடைய கணவன், அவளது உயிர்! அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை அவளுக்கு!

“நான் அப்படி நினைக்கல… அன்னைக்கு நான் உன்னை பர்பசா தவிர்க்கவும் நினைக்கல… சம்ஹவ் ஹேப்பன்ட்… அவ்வளவுதான்… ஆனா அவனுக்கு மெமரி ரீகைன் ஆனது எனக்கு அப்ப தெரியாது… நிறைய விஷயம் பேசினான்… எனக்கு தெரிஞ்சவரைக்கும் அவன் இனிமே முதுகுல குத்தற வேலை செய்ய மாட்டான்… நேருக்கு நேராத்தான் நிற்பான்…” என்று உறுதியாக கூற, அவளை கேலியாக பார்த்து சிரித்தான்.

“ஒரு நாள் பேசினதுல உனக்கு யாரோ ஒருத்தன் மேல நம்பிக்கை வந்துருச்சா மஹா?” என்று குத்தலாக கேட்க,

“எனக்கு தெரிஞ்சவரைக்கும் சொன்னேன் ஷ்யாம்… அதை நீ எப்படி வேணும்னாலும் எடுத்துக்கலாம்…” என்றவள், எழுந்து கொள்ள,

“நான் எப்படி எடுத்துகிட்டாலும் உனக்கு கவலை இல்ல… அப்படித்தானே?” என்று உணர்வற்ற முகத்தோடு கேட்க,

“ப்ச்… உன்கிட்ட எப்படி பேசறதுன்னே தெரியல…” என்றவளுக்கு சலிப்பாக இருந்தது.

“பெருநெருப்பை காத்து அணைக்க முடியாது மஹா… இன்னும் தூண்டி விடும்… ஆனா சிறு நெருப்பை காத்து சுலபமா அணைச்சுடும்…” என்று கூற, அறையை விட்டு வெளியேற எத்தனித்தவள், நின்று அவனை திரும்பி பார்த்தாள்.

அவனது முகத்தில் எந்த உணர்வுமில்லை. முந்தைய நாளின் அவமானம் மட்டுமே மீதமிருந்தது.

“நீ என்ன சொல்ல வர்றன்னு எனக்கு புரியல…”

“லவ்… ஜஸ்ட் லவ் அன்ட் லவ் ஒன்லி…”

“அப்படீன்னா உன்னை நான் லவ் பண்ணலைன்னு சொல்ல வர்ற இல்லையா?”

“அப்படி நான் சொல்லவே இல்லை… நீயாத்தான் சொல்ற… நான் ஜஸ்ட் ஒரு பழமொழியை சொன்னேன்…” என்று தோளை குலுக்கியவனை வெறித்துப் பார்த்தாள்.

அவளுக்கு பதில் கூறி தன்னை புரிய வைக்க விருப்பமில்லை. அவனுக்கும் அதே!

செல்பேசி அழைத்தது. விட்டல் ராவ் தான் அழைத்திருந்தார்.

சற்று நேரம் அவரிடம் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தவன், பெரிய புன்னகையோடு பேசியை வைத்தான்.

“ஈவினிங் உனக்கு ஏதாவது வேலை இருக்கா?” என்று கேட்க, அவள்,

“இல்ல… ப்ரீ தான்…” என்று இடம் வலமாக தலையாட்டினாள்.

“ஈவினிங் ஹயாட்ல டின்னர் கொடுக்கறாராம்… வர சொன்னார் மஹா…”

“அப்படியா?” என்று யோசித்தவள், “தியேட்டர் டியூட்டில மாட்டினா தான் கஷ்டம் ஷ்யாம்…” என்று கூற,

“இன்னைக்கு ஒரு நாள் எக்ஸ்கியுஸ் வாங்கேன்… இந்த ஆளை பேசித்தான் சரி கட்டனும்… கணக்குல விஜி என்ன ஓட்டை பண்ணி வெச்சு இருக்கான்னு தெரியல… ஆடிட்டர் டீமோட நம்ம பசங்களும் பார்த்துட்டு இருக்காங்க… அந்த பைல் கிடைக்கலைன்னா நிறைய பிரச்சனை வேற வரும்… அதுக்கு முன்னாடி அந்தாளை கொஞ்சம் மெஸ்மரைஸ் பண்ணி வைக்கணும்…” என்றவனை சின்ன புன்னகையோடு பார்த்தாள்.

“உனக்கு மெஸ்மரைஸ் பண்றது தான் வேலையா?” என்று சிரிக்க,

“ஒரே ஒரு ஆளைத்தவிர யாரை வேணும்னாலும் சரி கட்டிடலாம்…” புருவத்தை உயர்த்தியபடி சிரித்த ஷ்யாமை, உதடுகள் குறும்பாக வளைய புன்னகைத்தவள்,

“ஆஹான்… அப்படியா? யாராம் அந்த அப்பாட்டக்கர்?” என்று கேட்க,

“அதுவா?” என்று விஷமமாக புன்னகைத்தவன், “எனக்கிருக்க ஒரே ஒரு பொண்டாட்டி தான்…” என்று கூற,

“அவ தான் ஆல்ரெடி உன்கிட்ட கவுந்துட்டாளே…” என்று சிரிக்க,

“அப்படியொண்ணும் தெரியல… ரொம்ப வாய் பேசறா… ஒரு நாள் என்கிட்ட சிக்குவால்ல, அப்ப மொத்தமா பார்பிக்கியு போட போறேன்… என்ன பண்ண போறான்னு அப்ப பார்க்கறேன்…” என்றவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல், இங்குமங்கும் பார்க்க, சரியாக செல்பேசி அவனை அழைத்து, அவளை காப்பாற்றியது.

இளங்கவி தான் அழைத்திருந்தான்.

“சொல்லுடா…” என்று ஷ்யாம் ஆரம்பிக்க,

“பாஸ்… கணக்கையெல்லாம் ஓரளவு கோரலேட் பண்ணியாச்சு… பெரிய அளவுல தப்பெதுவும் இருக்க மாதிரி தெரியல… இந்த ஆறு மாச பேக் அப் மட்டும் கிடைக்கவே இல்ல… அதுக்கு முன்னாடி இருக்க கணக்குக்கு பேக் அப் இருக்கு… எப்படி இருந்தாலும் ஒரு ஐம்பது லட்சத்துக்கு கணக்கு குறையுது…” என்று சொல்லி முடிக்க, ஊன்றி அதை கேட்டுக் கொண்டவன்,

“சரி கவி… அந்த ஐம்பதை ராவ் கணக்குக்கு மாத்தி எழுதிடு…” என்று சாதாரணமாக கூற, இளங்கவி அதிர்ந்தான்.

“பாஸ்… ஐம்பது லக்ஷம்…” என்று அதிர,

“இட்ஸ் ஓகே டா… தப்பு நம்ம பக்கம் இருக்கு… விஜியை மொத்தமா நம்பினது தப்பு… அந்த தப்புக்கு நாம தான் காம்பன்செட் பண்ணனும்… நீ ஐம்பதை ராவ் கணக்குக்குல மாத்து…” என்று வெகு தீவிர குரலில் கூற,

“அந்த ஐம்பதை எப்படி கணக்குல கொண்டு வர்றது பாஸ்… அது இன்னும் பிரச்சனை… அதுவும் மெடிக்கல் காலேஜ்க்காக எய்ட்டி பர்சன்ட்ட ஆல்ரெடி நாம வைட்ல கொண்டு வந்துட்டோம்…” என்று யோசனை கேட்க, அவனுக்கும் அந்த யோசனை இருந்தது.

“முதல்ல இன்னைக்கு ராவ் கணக்கை முடிக்கலாம் கவி… நாளைக்கு ஆடிட்டர்ஸ் மீட்டிங் அரேஞ்ச் பண்ணு… டிஸ்கஸ் பண்ணலாம்…” என்று முடிக்க, இளங்கவி மனமே இல்லாமல்,

“ஓகே பாஸ்…” என்றான்.

“சரி… அவருக்கு என்ன வேணுமோ செஞ்சு கொடு கவி…” என்று கூற,

“எஸ் பாஸ்… அதெல்லாம் ஆல்ரெடி பண்ணிட்டு தான் இருக்கோம்… விஷ்ணு ஹயாட்ல இருக்கான்… அவர்…” என்று ஆரம்பித்து ஒரு நடிகையின் பெயரை சொன்னவன், “வேணும்ன்னு கேக்கறார்…” என்று தயங்க,

“அரேஞ்ச் பண்ணிக் கொடு… இதையெல்லாம் என்கிட்டே கேட்டுட்டு தான் செய்வியா கவி?” என்றான் எரிச்சலாக. ஆம் எரிச்சலாகத்தான் இருந்தது, இவர்களுடைய பணத்துக்கு பாதுகாப்பும் வேண்டும், மாதமாதம் வட்டியும் வேண்டும், கறுப்பை வெள்ளையாக்கவும் வேண்டும்… கூடவே ப்ரோக்கராகவும் ஆக்குகிறானே இந்த ராவ் என்ற எரிச்சல் அவனுக்கு.

“ஓகே பாஸ்…” என்று வைத்தான் இளங்கவி.

ஷ்யாமின் முகம் யோசனையாக சுருங்கியது.

இப்போதுள்ள நிலைமையில் ஐம்பதை கணக்கில்லாமல் எடுப்பது என்பது பெரிய ரிஸ்க் ஆக நிறைய வாய்ப்புள்ளதே… அதுவும், கையிலிருக்கும் பணத்தையெல்லாம் மெடிக்கல் காலேஜில் இன்வஸ்ட் செய்த நிலையில், இதில் சற்று பிரச்சனையாகும் வாய்ப்பும் அதிகம்! கறுப்புப் பணமாக டீல் செய்தவரை பெரிய பிரச்சனை இல்லை. இப்போது அதெல்லாம் சாத்தியமில்லை, என்று எண்ணிக் கொண்டான்.

‘ம்ம்ம்… சமாளித்து தானாக வேண்டும்…’ என்று எண்ணிக் கொண்டு, மகாவை நிமிர்ந்து பார்த்தவன்,

“இன்னைக்கு ஃபுல்லா பார்க் ஹயாட்ல தான் இருப்பேன் மஹா… ஈவினிங் நீ வந்தவுடனே ஒரு கால் கொடு… வந்துடறேன்…” என்றவனை ஆழ்ந்து பார்த்தவள்,

“என்ன அரேஞ்ச் பண்ணிக் கொடுக்க சொன்ன?” என்று ஒரு மாதிரியான குரலில் அவள் கேட்க,

“அது எதுக்குடி உனக்கு?” என்றான் எரிச்சலாக!

“தெரியனும்… சொல்லு…” வேறு புறம் திரும்பி நின்று பிடிவாதமாக அவள் கேட்க, அவளது தாடையை தன்னை நோக்கி திருப்பியவன், இறுக்கமாக,

“அவன் கூட இருக்க ஒரு நடிகைய கேட்டான்… அவளை அரேஞ்ச் பண்ணி தர சொன்னேன்… போதுமா?” என்று கூற, மகாவின் முகத்தில் அதிர்ச்சி வெளிப்படையாக தெரிந்தது.

“ச்சீ இதென்ன வேலை?” அசூயையாக முகத்தை திருப்ப,

“இது பிசினஸ்… இங்க இதெல்லாம் சகஜம்… உனக்கு இதை பற்றி தெரியாது… இருக்கற எரிச்சல்ல நீ இன்னும் எண்ணெய் விடாத மஹா…” என்றவனின் முகம் கோபத்தில் சிவந்திருந்தது.

“அந்த மாதிரி ஆள்ன்னு தெரிஞ்சுகிட்டே என்னையும் ஏன் ஷ்யாம் டின்னருக்கு வர சொல்ற?”

“ஏய் இது வேற… அது வேறடி…” என்றவனுக்கு புரியவில்லை. எதனோடு எதை முடிச்சிடுகிறாள் இவள்?

“அந்த மினிஸ்டர் அப்படின்னு தெரிஞ்சே எப்படி என்னையும் அவன் முன்னாடி கூட்டிட்டு போற?” என்று கேட்க,

“நீ என்னோட ஒய்ப்… மிசஸ் ஷ்யாமள பிரசாத்… உனக்குத்தான் அதனோட வால்யு தெரியலை… அவன் முன்னாடி வந்து நின்னு பார்… அப்ப தெரியும்டி… வால்யு…” என்று இறுமார்ப்புடன் சொன்னவன், “ஒரு செக்கன்ட் தப்பா பார்த்தாலும், மினிஸ்டரா இருந்தாலும் என்ன நடக்கும்ன்னு அவங்களுக்கு தெரியும்…” என்று நிறுத்தியவன், “இன்னமும் என்னை பத்தி உனக்கு தெரியல மஹா…” என்று இறுக்கமாக முடிக்க, மௌனமாகினாள். சற்று பொறுத்து,

“அப்படீனா நடிகைன்னா எப்படி வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்… இல்லையா?” சிறு குரலில் அவள் கேட்டாலும், அதில் கோபம் தெறித்தது.

“அது அவளோட தொழில்… அவ்வளவுதான்… ரொம்ப டீப்பா போகாத…”

“ஆசைப்பட்டு இதை தொழிலா செய்வாங்களா ஷ்யாம்?” அவளது முகத்தில் அத்தனை வெறுமை!

“செய்றாங்க… பணம் கொடுக்கறோம்… அதுக்கு அவங்க சர்விஸ் பண்றாங்க… மேட்டர் ஓவர்… இதை எதுக்கு இவ்வளவு ஆழமா ஆராய்ச்சி பண்ற? முடியாதுன்னு சொல்றவங்களை என்ன ஃபோர்ஸ் பண்ண போறேனா? வர்றாங்க… வேலை பார்க்கறாங்க… காசை வாங்கிட்டு போயிட்டே இருக்க போறாங்க… அவங்களே கூட இவ்வளவு பீல் பண்ணிருக்க மாட்டாங்க…” என்று கேலியாக முடிக்க முயன்றவனை இறுகிப் போன பார்வை பார்த்தாள்.

“யாரோ ஒரு மஹாவையும் இப்படித்தான் நினைச்சியா? எவ்வளவு சுலபமா கஸ்டடி எடுத்த… மஹாவும் உனக்கு டேக் இட் ஃபார் கிராண்டட்டா?” நிதானமாக அவள் கேட்க,

“கன்னம் பழுத்துரும்… என்ன பேச்சு பேசற? தொலைச்சுருவேன்… யாரோட யாரை கம்பேர் பண்ற?” கோபம் கொப்பளிக்க கொதித்தவன்,

“ஈவினிங் ஒழுங்கா ரெடியாகு… இன்னமும் இப்படியே பேசின, எனக்கிருக்க டென்ஷன்ல என்ன நடக்கும்னே சொல்ல முடியாது மஹா… பிசினஸ் மேட்டர்ஸ்ல தலையிடாத…” என்று கட் அன்ட் ரைட்டாக கூறிவிட்டு போக, உண்மையில் அதிர்ந்து தான் போயிருந்தாள், கணவனின் இன்னொரு முகத்தை கண்டு!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் ஐம்பத்து நான்கு

மருத்துவமனைக்கு வந்தும் மஹாவால் என்னமொருமித்து வேலை பார்க்க முடியவில்லை. காலையில் ஷ்யாமின் கோபத்தை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் பாரமாக இருந்தது.ஒரு புறம் அவனை காயப்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு... இன்னொரு புறம் அவன் செய்யும் செயல்களை ஒப்புக்கொள்ளவே முடியாத தன்னுடைய மனநிலை. இரண்டுக்குமிடையில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்