arrow_back
தித்திக்குதே அத்தியாயம் இரண்டு
தித்திக்குதே chevron_right பகுதி 2 / 26

அத்தியாயம் இரண்டு

visibility 5
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால்

ஐயனை காணலாம் சபரியில் ஐயனை காணலாம்

ஐயப்பா சுவாமி ஐயப்பா

ஐயப்பா சரணம் ஐயப்பா

பக்தி மனத்தோடு பத்தி மனமும் கமழ, சக்திவேலின் வாகனம் கல்லூரி மாணவிகளை ஏற்றச் சென்று கொண்டிருந்தது. அதில் அமர்ந்திருந்தவர்கள் அழாத குறையாக ஒருவரையொருவர் பார்க்க, பூனைக்கு யார் மணி கட்டுவது என்று புரியாமலிருந்தனர்.

“அண்ணா, ப்ளீஸ் சினிமா பாட்டு போடச் சொல்லுங்கண்ணா!” வளர்மதி முன் சீட்டில் அமர்ந்திருந்த செந்திலிடம் ரிகமண்டேஷன் பிடிக்க, அவனோ அதை சக்திவேலிடம் சொல்லவும் முடியாமல், அழகான பெண்களின் கோரிக்கையை நிறைவேற்றவும் முடியாமல் விழித்தான். சக்தியை ஒரு கெஞ்சும் பார்வை பார்க்க, அவனோ முறைக்க, கப்சிப்பென்றானது அந்த வட்டாரம்.

“இருடி நந்து வரட்டும், அவதான் இந்த முசுட்டுக்கு கரெக்ட்!” வாங்கலில் ஏறவிருக்கும் நந்தினியை நினைத்துச் சித்ரா மனதைத் தேற்ற, ஐயப்பன் பாடல்கள் மாறி முருகன் பாடல்கள் ஆரம்பித்தது!

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன், அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.

வேன் நிற்க, சித்ராவும் வளர்மதியும் ஆர்வமாக வெளியே பார்த்தனர்.

“அம்மா, வேன் வந்துடுச்சும்மா! சீக்கிரம் டிபன் பாக்ஸைக் கொடு!” நந்தினி கத்துவது எட்டு ஊருக்கும் கேட்கும் என்று நினைத்துக் கொண்டனர்!

“ஏய் நந்து, உனக்கு டிபன் கட்டி அரை மணி நேரமாகுது. ராணியம்மா எழுந்திருக்க நேரம் பண்ணிட்டு, இப்போ என்கிட்டே கத்தறியா? இப்படி இருந்தா வர்ற மாமியா கொமட்டுலையே ரெண்டு இடி இடிப்பார், அதையும் வாங்கிக்க.” நந்தினியின் தாய் செல்வி அவளது மண்டையில் நங்கென்று ஒரு கொட்டு வைத்து டிபன் பாக்ஸைக் கையில் திணிக்க.

“ஷப்பா… போதும் உன் ராமாயணம். ஈவினிங் மீதியைக் கண்டினியூ பண்ணு, இப்போ என்னை விடு!”

தன் தாயிடம் உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தது வேன் வரையில் கேட்க, செந்தில் நமுட்டுச் சிரிப்புச் சிரிக்க, சக்திவேலின் முகம் எப்போதும் போல உணர்வைக் காட்டாமல் கல்லைப் போலவே இருந்தது. ஒவ்வொரு நாளும் நடப்பதுதான் என்றாலும், தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அடுத்த ஸ்டாப்பிலும் தாமதமாகும் என்பது ஏன் இந்தப் பெண்ணிற்குப் புரிவதே இல்லை என்று உள்ளுக்குள் கடுப்பானான் சக்தி!

அவசரமாக, அரக்கபரக்க ‘தங் தங்’ என்று ஓடிவந்தவள், கூடத்தில் அமர்ந்திருந்த தனது தந்தை வேலுச்சாமியைப் பார்த்தவுடன் ஸ்பீட் பிரேக்கர் அடித்தது போல பம்மிக் கொண்டு வந்தாள். இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்று அப்பாவிப் பார்வை பார்த்தபடி, நிலம் அதிராமல் குனிந்த தலை நிமிராமல்,

“போயிட்டு வரேங்ப்பா…” மெல்லிய குரலில் கூற, வேனில் இருந்து பார்த்த சித்ராவும் வளர்மதியும்,

“ஏய் இவ அந்நியன் மாதிரிடி! அவங்க அப்பாவப் பார்த்தா அப்பாவி அம்பி, பார்க்கலைன்னா அந்நியன். கலக்கறாடி டபுள் ரோல்ல!” இருவரும் சிரித்தபடி கிசுகிசுக்க,

“எந்த வம்புதும்புக்கும் போகாம பொறுப்பா போயிட்டு வரணும்,” கறாராகக் கூறினார்.

“சரிங்கப்பா.”

“சக்திவேலை ட்ரிப் முடிஞ்சவுடனே நம்ம குடோனுக்கு வரச் சொல்லிடு, தேங்காய் லோடு அடிக்கணும்.”

“சரிங்கப்பா.”

“சரி கிளம்பு.” தலையை வேகமாக ஆட்டிவிட்டு வேனில் ஏற, வேன் கிளம்பியது. ஏறி அமர்ந்தவள் வேலுச்சாமியின் தலை மறையும் வரை காத்திருந்து,

“ஷப்பா…” பெருமூச்சோடு வேனில் இருந்த இருவரையும் பார்த்துச் சிரித்தாள்!

“ஹாய் மச்சிஸ்!” கண்ணடித்துக் கொண்டே கூற,

“ஏன் மச்சி இன்னைக்கு கொஞ்சம் டல்லா தெரியற?” வளர்மதி கேட்க,

“அதுவா மச்சி, இன்னைக்கு பவுடர் கோட்டிங் கொஞ்சம் கம்மி, அதான்!” ராகமாய்ச் சொன்னவளின் தொனியில் இருவரும் சிரிக்க,

“இரு மச்சி, இந்த முசுட்டு முருகேசன் கிட்ட ஒரு மேட்டர் சொல்லணும், இல்லன்னா மறந்துடும்.” என்றபடி அவள் சக்தியை நோக்கித் திரும்பி,

“சக்தி… சக்தி…”

தன் பெயரை நந்தினி ஏலம் போடுவதைப் பார்த்து முறைக்க, அவனிடம் இருந்து ஒரு பதிலும் வராததைக் கண்டு, தனது டெக்னிக்கை மாற்றினாள்.

“சாமி சரணம்.” அவனைப் பார்த்துக் கூற, அனிச்சை செயலாகச் சக்திவேலும்,

“சாமி சரணம்.” என்று கூற, இருவரையும் பார்த்து வெற்றிச் சிரிப்புச் சிரித்தாள்! ஆனானப்பட்ட மன்மோகன் சிங்கைப் பேச வைத்து விட்ட சாதனைச் சிரிப்பு!

“சாமி, டிரிப்பு முடிஞ்சவுடனே குடோனுக்கு போவீங்களாம் சாமி. அங்க தேங்காய் லோடு ஏத்தணுமாம் சாமி. அப்பா சாமி சொன்னாங்க சாமி!”

நந்தினி நக்கலாக ஒவ்வொரு வார்த்தைக்கும் சாமி என்று கூற, அதற்கும் ஒரு வார்த்தையும் பேசாமல் வாகனத்தைச் செலுத்தினான்! ஆனாலும் விட்டுவிடுபவளா நந்தினி?

“என்ன சாமி, ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறீங்க சாமி?”

அவளது இந்த வம்புப் பேச்சு எப்போதும் இருப்பதுதான் என்றாலும், இன்றைக்குச் சற்று எரிச்சலாக இருந்தது. இவள் என்ன இன்னும் சின்ன பெண்ணா? எப்போதும் சிறு பிள்ளை போல லொடலொடவென ஓட்டைப் பானையில் இட்ட காசு போலப் பேசிக் கொண்டே இருக்க? ஆனாலும் அவளது தந்தைக்காகப் பார்க்க வேண்டியுள்ளது என்று நினைத்துக் கொண்டான். அவன் லோடு அடிக்க ஆரம்பித்த நாள் முதல் அவரது லோடை அவனுக்கு மட்டுமே தந்து கொண்டிருப்பவர். அவரைப் பொறுத்தவரை சக்திவேல் சொன்ன நேரத்தில், சொன்ன வேலையைச் செய்து முடிக்கும் திறமையாளன். அவனைப் பொறுத்தவரை பணத்தை இழுத்தடிக்காமல் கொடுத்து விடும் பண்பாளர்!

இந்த உறவுமுறை இருவருக்கும் ‘வின்-வின்’ ஒப்பந்தமாக எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் செல்ல, கல்லூரிக்குச் செல்ல ஆரம்பித்த நந்தினியின் பொறுப்பையும் அவனிடமே தந்தார், அவனது பண்புகளைப் பார்த்து!

குடோனில் வேலை செய்யும் பெண்களாகட்டும், வெளியில் பார்க்கும் பெண்களாகட்டும், யாரிடமும் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் ஒதுங்கி விடுபவனை விட்டால், நந்தினியைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேறு யாருமில்லை என்ற எண்ணம் அவருக்கு. தந்தை எவ்வளவுக்கு எவ்வளவு முதலாளித்தனத்தைக் காட்டுகிறாரோ, மகளுக்கோ சிறுவயது முதல் பார்த்துப் பழகிய சக்திவேல் விளையாட்டுப் பொருளாகவே ஆகிப்போனான்!

அவள் கூறியதற்குச் செந்திலைப் பார்த்து முறைத்த சக்தியைப் பார்த்து, நமுட்டுச் சிரிப்புச் சிரித்த நந்தினி,

“சுவாமியே சரணம் ஐயப்பா!” என்று கூறிவிட்டு, இருவரையும் பார்த்துக் கண்ணடித்த நந்தினி,

“எம்மாடி ஆத்தாடி உன்னை உன்னை எனக்கு தரயாடி!” என்று அப்போது ரிலீஸான ‘வல்லவன்’ பாடலைப் பாட ஆரம்பிக்க, மற்ற இருவரும் அவளுடன் சேர்ந்து கொள்ள, தலையில் அடித்துக் கொள்ளாத குறையாகப் பாட்டை மாற்றினான்!

“ஹேய்ய்ய்ய்ய்!” ஆரவாரித்தது மூவர் படை.

நந்தினி வரும் வரை ஒன்றும் அறியாத பாப்பாக்களைப் போல இருப்பவர்கள், அவள் வந்தவுடன் எல்லாருமே “இனிமே எல்லாம் இப்படித்தான்!” என்று வேறு வசனம் பேசுவதைக் கண்டால் அவனுக்கு எரிச்சலாக இருக்கும்.

ஆனால் கல்லூரி காலமென்பதே இது போலத் தளைகளில்லாமல் சிறகடிக்கத்தான் என்பதை அறிந்த அவனும், ஒரு முறைப்போடு நிறுத்திக் கொள்வான். எத்தனை பெண்களைப் பார்த்திருக்கிறான்!

கல்லூரி காலத்தில் கவலையில்லாமல் சிறகடித்துப் பறந்துவிட்டு, அந்த வசந்தகாலம் முடிந்தவுடன் குடும்பம் எனும் விலங்கைப் பூட்டிக்கொண்டு, அத்தனை கவலைகளையும் கண்ணில் தேக்கிக் கருவளையத்தோடு,

“சக்தியண்ணே நல்லாருக்கீங்களா?” என்று பிரியமாக விசாரிக்கும் போது சக்திவேலின் உள்ளமெல்லாம் பூரிக்கும். தனக்கே அவர்கள் தங்கையானது போன்ற ஒரு உவகை ஏற்படும்.

“நல்லாருக்கேன்மா, வீட்ல மாப்பிள்ளை மத்த எல்லாரும் சௌக்கியமா?” என்று பாசத்தோடு கேட்கும் போது, இவனா அவன் என்றே தோன்றும் அந்த முன்னாள் மாணவிகளுக்கு!

இந்தப் பெண்களுக்கு எங்கு வாழ்க்கை அமையக் காத்திருக்கிறதோ? பெருமூச்சோடு மனதை ஒருநிலைப்படுத்தி வாகனத்தைச் செலுத்தினான். தானாக ஒவ்வொரு ஸ்டாப்பாக வாகனம் நிற்க, மாணவிகள் ஏற, கல்லூரிகளை நோக்கிப் பறந்தான்.

அந்தப் பெண்கள் கல்லூரியில் ஒவ்வொருவராக இறங்க, சித்ராவிடமும் வளர்மதியிடமும் வளவளத்தபடியே இறங்கினாள் நந்தினி. சக்திவேல் செந்திலிடம் கூறி அவளை நிற்கச் சொல்ல, அதற்காகச் செந்தில் அவளை அழைக்க,

“நந்தினியக்கா…” செந்திலைத் திரும்பிப் பார்த்தவள்,

“என்ன செந்தில்?” புன்னகையோடு கேட்டாள்.

“அண்ணன் கூப்பிடறாங்க.” என்றவுடன் அவளது முகத்தில் குறும்பு கூத்தாடியது!

“ஏன் உன் அண்ணனுக்கு நீதான் வாயா? சாமியோட வாய் எங்க போச்சு? கடன் கொடுத்துட்டாரா?” சரமாரியாகக் கேட்க, அவன் பரிதாபமாக விழித்தான்!

“ஏன் கா?”

“இல்ல, சாமி அவங்க வாயால கூப்பிட மாட்டாங்களோ?” நக்கலாக அவள் கேட்க, செந்திலின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போலானது.

சக்திவேல் டிரைவர் சீட்டிலிருந்து இறங்கி அவளருகே வந்தான். செந்திலிடம் சைகை காட்ட, அவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். “ஷப்பா… எப்படித்தான் கண்களாலேயே மிரட்டுகிறானோ?” என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள் நந்தினி.

“பாரும்மா பொண்ணு…” கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தவனை அதே குறும்பு பார்வையோடு,

“பார்த்துட்டுத் தான் இருக்கேன் சாமி!”

அவளது இடக்கு பார்த்து எரிச்சலாக வந்தது சக்திவேலுக்கு.

“உஷ்… இந்த இடக்கு பேச்செல்லாம் என்கிட்டே வேணாம். உங்க அப்பாரு கிட்ட நான் சொல்லிக்கறேன், நீ வேற வேன் பார்த்துக்க.”

நேரடியாக அவளிடம் கடுகடுத்தவனை புன்னகையை கைவிடாத முகத்தோடு பார்த்தாள் நந்தினி. அவளும் தான் எத்தனை முறை அவனது இந்த மிரட்டலைக் கண்டுவிட்டாள்? அசருவேனா என்று எண்ணிக்கொண்டு,

“ஏன்?” ஒற்றை வார்த்தையில் கேட்க,

“ஏன்னா, எல்லாரும் அண்ணா அண்ணான்னு ஒழுங்கா கூப்பிடறாங்க. அதென்ன நீ மட்டும் சக்தி சக்தின்னு ஏலம் போடற?”

“ஏன், உன்னைச் சின்ன வயசுல இருந்தே அப்படித்தானே கூப்பிடறேன்? இப்போ என்ன புதுசா சொல்ற?” தன் சிறு வயது முதலே லோடு எடுக்க வரும் சக்தியை அப்படியே அழைத்துப்பழகி இருந்தாள் நந்தினி!

“அப்ப கூப்பிட்டா இப்பவும் கூப்பிடணுமா? எனக்குன்னு ஒரு மரியாதை இருக்கு இங்க. ஒழுங்கா அண்ணான்னு கூப்பிட்டா வேன்ல வா, இல்லைன்னா உங்க அப்பாகிட்ட சொல்லி வேற வேன் பார்த்துக்கோ.” கறாராக அவன் கூற,

“அஞ்சுக்கும் பத்துக்கும் அப்பா கிட்ட கையேந்தி நிற்கும் போதே இவ்வளவு திமிர் இவனுக்கு! ஒரு ஓட்டை வண்டியாம், அதுக்கு இவன் டிரைவராம்! ஹும்ம்… இதுக்கு மேலயும் இருந்துட்டா இவனையெல்லாம் கைல பிடிக்க முடியாது.” தனக்குள்ளாக அவள் முனக, அதைக் கேட்ட சக்திவேல்,

“உங்க அப்பாகிட்ட லோடு தான் அடிக்கறேன், அதுக்காக அஞ்சுக்கும் பத்துக்கும் அவர்கிட்ட கையேந்தற வேலைக்காரன் இல்ல. எனக்கு நான் தான் முதலாளி. அனாவசியமா இப்படியெல்லாம் நினைப்பு வெச்சுக்காத.” கடுமையாக அவளைப் பார்த்து கூற, மளுக்கென்று அவளது கண்ணில் குளம் கட்டியது.

“சரிங்கண்ணா.” அவனது முகத்தைப் பாராமல் கூறிவிட்டு கல்லூரியை நோக்கிப் போனாள். அவளைக் கடுமையாகப் பேசிவிட்டாலும் அவனது உள்ளம் இன்னும் ஆறவில்லை.

“என்ன பேச்சு பேசுது இந்தப் பொடுசு? நான் பார்த்து வளர்ந்ததுக்கு இத்தனை வாயா? ப்ப்ப்ப்பா!”

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் மூன்று

சித்ரா, வளர்மதி, நந்தினி மூவரும் வேறு வேறு டிபார்ட்மென்டாக இருந்தாலும், ஒன்றாக அமர்ந்து உண்ணும் மதிய உணவு நேரத்தில் கண்டிப்பாகச் சந்தித்து விடுவர். சித்ரா கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட், வளர்மதி காமர்ஸ், நந்தினி கெமிஸ்ட்ரி!இதில் சித்ராவும் வளர்மதியும் அளவான உயரமும் நேர்த்தியான…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்