arrow_back
தித்திக்குதே அத்தியாயம் மூன்று
தித்திக்குதே chevron_right பகுதி 3 / 26

அத்தியாயம் மூன்று

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

சித்ரா, வளர்மதி, நந்தினி மூவரும் வேறு வேறு டிபார்ட்மென்டாக இருந்தாலும், ஒன்றாக அமர்ந்து உண்ணும் மதிய உணவு நேரத்தில் கண்டிப்பாகச் சந்தித்து விடுவர். சித்ரா கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மென்ட், வளர்மதி காமர்ஸ், நந்தினி கெமிஸ்ட்ரி!

இதில் சித்ராவும் வளர்மதியும் அளவான உயரமும் நேர்த்தியான அமர்த்தலான அழகுமாக இருக்க, நந்தினியோ சராசரியை விடச் சற்று உயரம். ஆளை அடித்து வீழ்த்தும் அழகு. அவளது இடை தாண்டிய முழங்காலைத் தொடும் கறுத்தடர்ந்த கூந்தலுக்கும் தாழம்பூ நிறத்திற்கும் கல்லூரியில் நிறைய விசிறிகள் உண்டு. ஆனாலும் அவளைப் பொறுத்தவரை அவளுக்கு அவளது அழகு ஒரு பொருட்டல்ல.

கல்லூரியின் மூன்றாவது வருடத்தில், அதுவும் கடைசி செமஸ்டர் என்பதால் மூவருக்குமே அவ்வப்போது சோகம் தலைகாட்டும். ஆட்டோகிராப் நோட்டில் கையெழுத்து வாங்கினாலும், கைபேசி எண்கள் பரிமாறிக் கொண்டிருந்தாலும், கல்லூரி காலம் முடிவது என்பது அவர்களைப் பொறுத்தவரை தாங்க முடியாத ஒன்றாகவே இருந்தது.

“நீ என்ன பண்ணப் போற வளரு? உங்க ஆத்தா வேற நீ எப்போ காலேஜ் முடிப்பன்னு ஆர்வமா காத்துட்டு இருக்கறதா எங்க அப்பத்தா சொல்லுச்சு. எப்படியும் கல்யாணம் தானா?” சோகமே வடிவாக உணவை அளந்து கொண்டே வளர்மதியைப் பார்த்து கேட்டாள் நந்தினி.

“ஆமா நந்து, அப்படித்தான் வீட்ல பேசிக்கிறாங்க. எனக்குத்தான் மனசே கஷ்டமா இருக்கு…” வளர்மதி சோகத்தைப் பிழிந்தாள்! அவளது வீட்டில் அவளும் அவன் அண்ணனும் மட்டுமே சிறியவர்கள். அவளது அண்ணனுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்று அவசரமாக வளர்மதிக்குத் திருமணத்திற்குப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவளுக்கோ ஒரு வருடமாவது வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதும், அவளது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பது தீவிரமான கனவு!

“ஏன்டி அப்படி நினைக்கற? கல்யாணம் பண்ணி வெச்சா பண்ணிக்க வேண்டியதுதானே. இதுக்கு எதுக்கு முழ நீளத்துக்கு முகத்தை இழுத்து வெச்சுக்கற? செம ஜாலியான மேட்டரை இப்படி சோகமாச் சொல்ல உங்க ரெண்டு பேர்னால தான்டி முடியும்…” சித்ரா இருவரையும் சேர்த்து வார.

“ம்ம்ம்… உன்னைய உங்க வீட்ல எம்சிஏ படிக்கச் சொல்லிட்ட திமிர்ல பேசறடி. எங்களை மாதிரி மாட்டி இருந்தாத்தான் புரியும்.” வளர்மதி சித்ராவைக் கடுப்படித்தாள். சித்ராவின் வீட்டில் சித்ராவின் அக்கா திருமணத்திற்குக் காத்துக் கொண்டு இருப்பதால், சித்ராவைப் பொறுத்தவரை அவளுக்குத் தற்போது எந்தப் பிடுங்கலும் இல்லை. அதனால் அவர்களது வீட்டில் அந்த கல்லூரியிலேயே எம்சிஏ சேரச் சொல்லியிருக்க.

“அட ச்சே! நீ வேற! நானே இன்னும் மூணு வருஷம் இந்த முசுட்டு முருகேசன் வேன் தான் நமக்கு விதியாங்கற கடுப்புல இருக்கேன், நீ வேற.” சித்ரா வளர்மதியைப் போட்டுத் தாக்கினாள்!

“ஆமா ஆமா, அவனை முசுட்டு முருகேசன்னு சொல்லும் போதே கிக்கா சொல்றியே! இதுல இருந்தே தெரியல, நீ அவனைச் சைட் அடிக்கறதெல்லாம் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சுட்டு இருக்கியா சித்து குட்டி?” குறும்பான பார்வையோடு வளர்மதி சித்ராவைப் போட்டுத் தர, நந்தினி வாயைக் கைகளால் மூடிக் கொண்டு கேட்டாள்.

“அட கருமம் புடிச்சவளே, இது எப்போல இருந்து?” சித்ராவைப் பார்த்து நந்தினி கேட்க, முகம் சிவந்து இருவரையும் வெட்கப்பார்வை பார்த்த சித்ராவோ,

“ச்சீ போடி, அதெல்லாம் ஒண்ணுமில்ல.” நாணம் சிறிதும் குறையாத குரலில் அவள் மறுக்க,

“இவ சொல்றதுல இருந்தே தெரியல, அம்மணி எப்படி மயங்கிப் போய் கெடக்காங்கன்னு.” வளர்மதி விடாமல் வம்பிழுக்க,

“ஏய், நான் தான் இல்லைன்னு சொல்றேன்ல.” சித்ரா பரிதாபமாக மறுத்த விதத்திலேயே அவளது கள்ளத்தனம் வெளிப்பட, நந்தினியும் வளர்மதியுமாக அவளை மொத்தி எடுத்தனர்!

“சரி சரி, விடுங்கடி. ஒத்துக்கறேன். நான் அந்த முசுடை லவ் பண்றேன், போதுமா?” குறுஞ்சிரிப்போடு சொன்னவளைப் பார்த்து அதிர்ந்தாள் நந்தினி!

“என்னடி சொல்ற? எப்படிடி ஒத்துவரும்? போயும் போயும் ஒரு டிரைவரா உனக்கு கிடைச்சான்? உனக்கே இது நல்லா இருக்கா? உன் அந்தஸ்து என்ன, அவன் அந்தஸ்து என்ன? நீ படிச்சவ, அவன் படிக்காத காட்டான். உனக்கும் அவனுக்கும் ஏணி வெச்சா கூட எட்டாது.” நந்தினி கோபமாகக் கூற,

“நந்து, லவ்வுங்கறது ஜாதி, அந்தஸ்து, படிப்பு, பணம், காசுன்னு எதையுமே பார்த்து வராதுடி. அது ஒரு யூனிக் பீலிங். அதை அனுபவிக்கும் போதுதான் தெரியும்.” சிலாகித்தாள் சித்ரா!

“மண்ணாங்கட்டி! கண்ட சினிமாவையும் பார்த்து கெட்டுப் போய் கிடக்க. யுனிக்காவது ஒன்னாவது. கல்யாணத்தைக் கட்டினதுக்கு அப்புறம் காசில்லாம ரெண்டு நேரம் பட்டினி கிடக்கும் போது தெரியும். பீலாவது மண்ணாவது.” சித்ராவிடம் பொரிந்து தள்ளினாள் நந்தினி.

“ஏய் கூல், கூல். ஏன் இந்த அளவு கோபப்படற நந்தினி? கொஞ்ச நாள் இந்தக் கிரஷ் இருக்கும், அப்புறம் நாமளா இப்படியெல்லாம் பினாத்தினதுன்னு நினைச்சு அவளே சிரிச்சுக்குவா, விடுடி.” வளர்மதி நந்தினியைச் சமாதானப்படுத்த, நந்தினி ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சித்ராவைப் பார்த்துச் சிரித்தாள். முகம் சுண்டிப் போன சித்ராவோ,

“ஏன்டி அவரை இந்த அளவு மோசமா நினைக்கற? கண்டிப்பா என்னோடது ஜஸ்ட் எ கிரஷ் இல்ல. நிஜமா லவ் பண்றேன். எப்படியும் அடுத்த மூணு வருஷம் அதே வேன்ல தானே வரப்போறேன். என்னோட லவ்வைச் சொல்லி அவரை கன்வின்ஸ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக் காட்டறேன் நந்து.” என்று கூறி இடைவெளி விட்டவள்,

“அப்புறம் நீ சொன்ன மாதிரி கஷ்டமெல்லாம் பட மாட்டோம் நந்து. நானும் படிச்சிருக்கேன், அவர் கைலையும் தொழில் இருக்கு, பொழச்சுக்குவோம்.” மிகவும் சீரியஸாகக் கூறிய சித்ராவை ஒன்றும் பேசாமல் நந்தினியும் வளர்மதியும் பார்த்துக் கொண்டிருந்தனர். மனதில் இவ்வளவு தீவிரமாக நினைத்துக் கொண்டிருப்பாள் என அவர்களும் நினைக்கவில்லையே!

“உனக்கு ரியாலிட்டி புரியல சித்ரா. அதான் இப்படிப் பேசற. ஆஸ் எ பிரண்ட்ஸ் உனக்கு நல்லது சொல்லிட்டோம். அதைத் தாண்டி நீ போய் கிணத்துல தான் விழுவேன்னு சொன்னா என்ன பண்றது?” சங்கடமாக நந்தினி கூற,

“சித்ரா, சக்தியண்ணன் நல்லவரா இருக்கலாம். இருக்கலாம் என்ன, ஆமா அவரை மாதிரி ஒரு நல்லவரைப் பார்க்க முடியாதுதான். நந்து சொல்ற அளவு அவர கட்டிகிட்டா கஷ்டப்படணும்னு சொல்ற அளவெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஆனா உங்க அம்மா அப்பாவை நினைச்சுப் பாரு. நம்ம சொசைட்டில லவ்வுங்கறது எந்த அளவு ஏத்துக்கப்படுதுன்னு நினைச்சுப் பாரு. நந்து பயப்படறதும் அதுக்குத்தான் சித்து.” வளர்மதி பொறுமையாகக் கூற, நந்தினி அவளைக் கையமர்த்திவிட்டு,

“சித்ரா, உன்னோட பீலிங்க்ஸ் எங்களுக்கும் புரியுது. ஆனா படிக்கற வயசு இதுடி. எங்களை மாதிரி இல்லாம உனக்கு உங்க வீட்லயே அடுத்தது படிக்க பர்மிஷன் கொடுத்துட்டாங்க. காரணம் உனக்கு முன்னாடி உங்க அக்கா இருக்காங்க. அதைச் சரியா யூஸ் பண்ணிக்கடி. படிப்புதான் முக்கியம். என்னைக்கு இருந்தாலும் அதுதான் நமக்குக் கை கொடுக்கும். சொல்றதைச் சொல்லிட்டோம், யோசி, யோசிச்சு முடிவெடு சித்து.”

நந்தினி கூறி முடிக்க, சித்ராவின் முகம் குழப்பத்தைத் தழுவி இருந்தது. அதற்குப் பின் அவளை மேலும் குழப்ப வேண்டாம் என்று இருவரும் விட்டுவிட, பேச்சு வேறு திக்கை நோக்கிச் சென்றது.

“ஏன் நந்து, இவளை விடு. இப்போ உன்னோட வீட்ல என்ன சொல்றாங்க?” வளர்மதி நந்தினியைப் பார்த்து கேட்டாள்.

“அவங்க என்னமோ சொல்லிட்டுப் போகட்டும் வளரு. எனக்கு ஒரே குறிக்கோள் தான். நான் ஐஏஎஸ் முடிக்கணும். இந்த மாவட்டத்துக்கே கலெக்டரா வரணும். அவ்வளவுதான்.” ஒரே வரியில் முடித்து விட்டு அவளது சாப்பாட்டில் கவனமாக.

“இதெல்லாம் எங்களுக்கு முன்னாடியே தெரியும். அதுக்கு என்ன செய்யப்போற? அதுவும் உங்க அப்பாவையும் அப்பத்தாவையும் நினைச்சாலே எங்களுக்கே பயமா இருக்கு.” சித்ரா கவலைப்பட,

“அவங்க ரெண்டு பேரும் எனக்கு ஜுஜுபி! முதல்ல இங்க பிஎஸ்சிய முடிக்கறேன்டி. அடுத்ததா மெட்ராஸ் யுனிவர்சிட்டில எம்எஸ்சி சேரணும். அங்கேயே ஐஏஎஸ் கோச்சிங் சென்டர்ல சேர்ந்துடுவேன். அப்புறம் எம்எஸ்சி முடிக்கும் போதே மேடம் ஐஏஎஸ் பாஸ் பண்ணிடுவேன். எப்படி என் பிளான்…” கண்களில் கனவோடு கூறிக்கொண்டிருந்தவளைப் பார்த்து,

“பிளான் எல்லாம் நல்லாதான் இருக்கு. எப்படி ஒர்க் அவுட் பண்ணப் போற? அதைச் சொல்லு.” இருவரும் கோரஸாகக் கேட்க, நந்தினி சோகமாக,

“தெரியலடி, அதான் யோசிச்சிகிட்டே இருக்கேன். ஏதாவது ஐடியா இருந்தா குடுங்கடி. எப்படியாவது நான் ஐஏஎஸ் பண்ணியே ஆகணும்.” முகம் முழுக்க யோசனையாக அவள் கேட்க,

“நந்து, நீ பறக்கறதுக்குத் தான்டி ஆசைப்படற.” வளர்மதி மெலிதான குரலில் கூற, பரிதாபமாகப் பார்த்தாள் நந்தினி!

“பின்ன என்ன? ஒரு வேளை இங்கயே எம்சிஏவோ என்னவோ பண்ண ஆசைப்பட்டா கூட உங்க அப்பா ஒத்துக்கறதுக்குச் சான்ஸ் இருக்கு. ஆனா நீ மெட்ராஸ் யுனிவர்சிட்டிக்கு ஆசைப்பட்டா முடியுமா? உன்னை வாங்கல்ல இருந்து கரூர் அனுப்பறதே பெரிய விஷயம்டி.” நந்தினியின் சூழ்நிலையை வளர்மதி விளக்க, நந்தினியின் முகமோ தீவிரத்தைத் தத்தெடுத்தது!

“இல்லடி… நான் எப்படியாவது செய்துதான் ஆவேன்! எங்க அப்பா ஒத்துக்கலைன்னா பட்டினி கிடந்தாச்சும் நான் சென்னைக்கு போயே தீருவேன்…” உறுதியான குரலில் அவள் கூற, மிகவும் சீரியஸாகவே பேசிக் கொண்டிருப்பதை உணர்ந்த சித்ரா,

“ஏய் போதும்டி… ஓவரா சீரியஸாவே பேசிட்டு இருக்கோம். கொஞ்சம் ரிலாக்ஸா எதாச்சும் சொல்லுங்கப்பா…” பேச்சை மாற்ற விழைந்தாள்!

“சரி, வல்லவன் படத்துக்கு நாளைக்கு போலாமா? நாம மூணு பேர் மட்டும்…” நந்தினி அசால்ட்டாக கேட்க, மற்ற இருவரின் கண்களும் விரிந்தது. மூன்று பேர் வீட்டிலும் இது நடக்கவே நடக்க முடியாத ஒன்று. பின் எப்படி இப்படிக் கேட்கிறாள் என்பதை நினைத்து இருவரும் சிரிக்க,

“ஹேய், நெசமாத்தாண்டி சொல்றேன். முசுடுகிட்ட காலைலேயே சொல்லிடலாம், நம்ம மூணு பேருக்கும் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கு, ஈவினிங் வர மாட்டோம்ன்னு. மத்தியானம் தியேட்டர் போயிட்டு ஈவினிங் எப்பவும் போல வீட்டுக்கு போயிடலாம்…” அவளது திட்டத்தை விவரிக்க,

“அவர்கிட்ட சொல்றது இருக்கட்டும், ஏன் வேன்ல வராம பஸ் வந்தீங்கன்னு வீட்ல கேட்டா என்ன பதில் சொல்றது?” சித்ரா விவரமாகக் கேட்டு வைக்க,

“அங்கேயும் இதே பதிலைச் சொல்லிடலாம், ஸ்பெஷல் கிளாஸ்ன்னு…” மிகவும் சுலபமாக நந்தினி கூற,

“ம்ம்ம்… மேகலாவுக்கு இல்லாத ஸ்பெஷல் கிளாஸ் தான் உனக்கு இருந்துச்சான்னு எங்க ஆத்தா என்னை குடைஞ்சு எடுத்துடும்…” வளர்மதி அவளது பங்கிற்கு ஒரு பிட்டை போட,

“ஏய்… எங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கிளாஸ்ன்னு சமாளிக்கலாம்டி. இதுதான் லாஸ்ட் செமஸ்டர். இப்போ கூட என்ஜாய் பண்ணலைன்னா தெய்வ குத்தம் ஆகிடும் ராசாத்திங்களா! மறுக்கா மறுக்கா அது இதுன்னு கேட்டுட்டு இருக்காம, நாளைக்கு போற படத்தைப் பத்தி நினைங்கடி…” சிரித்துக் கொண்டே நந்தினி கூறி, அதற்குத் தற்போதைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள்!

“சரி, காலைல அவர் எதுவோ உன்கிட்ட தனியா சொல்லிட்டு இருந்தாப்லையே, என்ன விஷயம்?” ரொம்ப நேரமாக மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தைச் சித்ரா கேட்க,

“எவுரு?” முறைத்துக் கொண்டு கேள்வியாகச் சித்ராவை நந்தினி பார்க்க,

“அவர்தான் சக்தி.”

“ம்ம்ம்… எல்லாரும் அண்ணா அண்ணான்னு சொல்றாங்களாம், நீ மட்டும் என்ன சக்தி சக்தின்னு ஏலம் போடறன்னு கடிச்சுது. வேறென்ன, இதென்ன எனக்குப் புதுசா…” அலட்டாமல் ராகமாக அவள் கூறுவதைப் பார்த்த இருவரும் சிரிக்க, சிரித்து விட்டுச் சித்ராவும் அதையே கூறினாள்.

“ஆமா நந்து, ஒழுங்கா அண்ணான்னு கூப்பிடு, அதுதான் நல்லது…” என்று கண்ணடிக்க, நந்தினியோ கடுப்பானாள்.

“ம்ம்ம்ம்… நான் அண்ணான்னு கூப்பிடணுமா? ஏன், நீ கூப்பிடு!”

“ஏய், முறையை மாத்தாதடி. என்னைக்காச்சும் அவங்ககிட்ட நான் பேசிப் பார்த்திருக்கியா? பேசினா அண்ணான்னு கூப்பிடச் சொல்லுவாங்கன்னு நான் பேசினதே இல்லடி. நீ தான் தினமும் அவங்ககிட்ட மல்லுக்கு நிற்கற, அதான் அப்படிச் சொல்லியிருப்பாங்க…” சக்தியை விட்டுக் கொடுக்காமல் சித்ரா பேச, நந்தினிக்குக் கொலைவெறியே வந்தது.

“ஹலோ… யாருக்காகவும் அவனுக்கெல்லாம் புதுசா மரியாதை தந்துட்டு இருக்க முடியாது. என்னையவா மிரட்டறான்? இருக்கட்டும்… காலேஜ் முடிஞ்சு போறதுக்குள்ள அவன் வாழ்நாள்ல மறக்கவே முடியாத மாதிரி அவனுக்கு ஆப்பு வெச்சுட்டுதான் நான் சென்னை போவேன்… பார்த்துகிட்டே இரு சித்து…”

யார் யாருக்கு ஆப்பு வைக்கிறார்கள் என்று பாரேன் என்று அருகில் அமர்ந்திருந்த விதி சிரித்தது. நந்தினியின் வாழ்க்கையில் விளையாட நேரம் பார்த்துக் கொண்டிருந்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் நான்கு

மதிய நேரமாகையால் கூட்டம் சற்று குறைவாக இருந்தது... டிக்கெட்டை நந்தினி எடுக்க, மற்ற இருவரும் பதற்றத்திலேயே இருந்தனர். வீட்டிற்குத் தெரியாமல் இதுபோல தியேட்டருக்கு வருவது முதல் முறை என்பதால், வியர்த்துக் கொட்டியது சித்ராவுக்கும் வளர்மதிக்கும்! நந்தினிக்கு உள்ளுக்குள் பயம் இருந்தாலும் வெளியே…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்