அத்தியாயம் ஒன்பது
மௌனமாக வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான் சக்திவேல். உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தாலும், அதை அந்தப் பெண்ணிடம் காட்டப் பிரியமில்லை. கோபம்கூடக் காதலைப் போன்றதுதான்… உரிமையான கோபத்தை உரியவர்களிடம் மட்டுமே காட்ட முடியும்! நந்தினிக்கு அந்தத் தகுதி கூட இருப்பதாகப் படவில்லை சக்திவேலுக்கு!
எவ்வளவு நம்பிக்கை… ஆயிரம் தான் வேலுச்சாமி சாதி வெறி பிடித்தவராக இருந்தாலும், காதலுக்கு எதிராகக் கொலையைக்கூட நியாயப்படுத்தக் கூடியவராக இருந்தாலும், அவர் தன்னை நம்பி மட்டுமே அவரது பெண்ணை வேனில் அனுப்பினார். அவரது அந்த நம்பிக்கை மட்டுமில்லாமல் அத்தனை பெண்களின் பெற்றோர்களின் நம்பிக்கையுமல்லவா சூறையாடப்பட்டுள்ளது!
அவனால் நந்தினியின் செயலை ஜீரணிக்க முடியவில்லை. அதுவும் அவள் கடைசியாகச் சொன்ன பொய்! அவனால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத, கனவிலும் நினைத்துப் பார்த்திராத பொய்!
தன்னுடைய வேனில் வருபவர்களைத் தன் தங்கையாகவே பாவித்த தன் மேலா இப்படியொரு பழியைச் சுமத்தினாள்? திரும்பியும் பார்க்காமல் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தவனால் ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் போயிற்று. ஓரமாக நிறுத்தியவன், அந்த இருளை வெறிக்கத் துவங்கினான்.
ஆயிற்று… அவளுடைய உயிருக்குப் பயந்து அழைத்து வந்தாயிற்று. இனி என்ன? என்ற கேள்வி அவனைப் பயமுறுத்தியது. தங்குவதற்குச் சரியான வீடு கூட இல்லாத நிலையில் இவளை எங்கு அழைத்துச் செல்வது? ஆண்கள் இருவருமாக மட்டும் இருப்பதால் மினி லாரியும் வேனும் நிறுத்தும் ஷெட்டே அவர்கள் இருவரின் இருப்பிடமாக இருந்து வந்தது. அங்கு ஒரு பெண்ணைத் தங்க வைப்பதைப் பற்றிக் கனவிலும் நினைக்க முடியாது.
இரு கைகளால் தலையைத் தாங்கி, ஸ்டீயரிங் வீலின் மேல் கவிழ்ந்தவனுக்கு எதிர்காலத்தைக் குறித்த அச்சம் முதல்முறையாக வந்தது. கேட்கக்கூடாத சொற்களை எல்லாம் கேட்டாயிற்று. தன்னை நம்பிச் சொல்லவே முடியாத பொய்யைக் கூறியவளை அழைத்தும் வந்தாயிற்று. இனி அவளைக் கைவிடுவதும் ஆகாத காரியம்.
அப்படியொரு பழியைக் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டு வந்துவிட்ட பிறகு, அவளைத் திருமணம் செய்யாமல் தன்னுடன் வைத்திருப்பதும் மிகப்பெரிய அசிங்கம். அவளைத் திருமணம் செய்வதா என்று மனம் ஓலக் குரலை எழுப்பியது. மனக்குழப்பத்தைத் தாங்க முடியாமல் டிரைவர் சீட்டிலிருந்து கீழே இறங்கினான்.
சில்லென்ற மார்கழிக் காற்று முகத்தில் அறைய, முகத்தைத் தேய்த்து விட்டுக்கொண்டான். தெருவிளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்க, சாலையில் மக்கள் நடமாட்டம் சுத்தமாக இல்லாமலிருந்தது. யாருமற்ற அந்தச் சாலை சூனியத்தை விதைக்க, என்னவென்று சொல்ல முடியாத உணர்வு அவனுடைய மனதை அழுத்தியது.
“அடிச்சுப் போட்டா ஏன்னு கேட்க நாதியில்லாத அநாதை நாயி நீ. உனக்கு எங்க வீட்டுப் பொண்ணு கேட்குதா?” அந்த மனிதன் கூறிய வார்த்தை அவனது மனதை அறுத்தது. எவ்வளவோ முறை கேட்ட வார்த்தைகள்தான். மிகச் சிறிய வயதில் ஆசிரமத்தில் பசிக்குச் சரியான உணவில்லாதபோது, கிடைத்த உணவு பற்றாததால் மீண்டும் தட்டை ஏந்தும்போது,
“டேய் அநாதைப் பயலே… இன்னும் எத்தனை தட்டு சோறுடா கேட்ப?” என்று அந்த ஆசிரமத்தில் வேலை செய்த மனிதர் கேட்ட கேள்விக்கு அர்த்தம் அப்போது புரியவில்லை. ஆனால், புரிந்த வயதில் ரத்தம் கொதித்தது; எதிர்த்துக் கேள்வி கேட்க வைத்தது; எதிர்த்து நின்றால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற எண்ணத்தையும் அவனுள் விதைத்தது.
உறவுகளை இழந்து நின்றது அவனது தவறில்லையே, இறைவனின் எண்ணம் அதுவாக இருந்திருக்கிறதே! ஆனால், இறக்கும்போது உறவில்லாமல் இறக்கக் கூடாது, அது பாவம், மிகப்பெரிய பாவம்… யாரோ ஒருவர் கூறிவிட்டுச் சென்றது அவனது காதில் ஒலித்தது.
“சம்பாதிப்பது என்பது பணத்தை அல்ல, மனிதர்களை…”
அவனும் நினைத்துக் கொள்வான்… தான் இறக்கும்போது தன்னைத் தூக்குவதற்காவது நான்கு பேரை, அதுவும் உண்மையான மனிதர்களைச் சம்பாதிக்க வேண்டும் என நினைப்பான்.
கைகளைக் கட்டிக்கொண்டு இருளில் சூனியத்தை வெறித்தவனது மனம் எதை எதையோ எண்ணிப் புண்ணாகிக் கொண்டிருந்தது!
“ச… சக்தி…” நந்தினியின் மெல்லிய குரல் பின்னாலிருந்து கேட்க, திரும்பிப் பார்க்கப் பிடிக்கவில்லை.
“சக்தி…” சற்றுச் சப்தமாக அவள் அழைக்க, ஒரு பெருமூச்சோடு திரும்பிப் பார்த்தான்!
“என்ன…” எந்த உணர்வையும் காட்டாமல் அவன் கேட்க,
“நைட் நேரம்… இருட்டுல… தனியா இருக்கப் பயமா இருக்கு…” தயங்கித் தயங்கி அவள் கூற, மெலிதான அந்த வெளிச்சத்தில் அவளைக் கூர்ந்து பார்த்தான். கண்ணீர் காய்ந்து கண்கள் சிவந்து முகம் களைத்துப் போயிருந்தது. அவனை நேராகப் பார்க்காமல் நிலம் பார்த்தன அவளது விழிகள்.
“அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு சொல்ற?” கோபத்தை அடக்கிய குரலில் அவன் கேட்க,
“வீ… வீட்டுக்கு… உங்க வீட்டுக்கு… போ… போலாம்…” திக்கித் திணறி அவள் கூற.
“வீடா? அப்படீன்னா… அப்படியொன்னு எனக்கு இருக்கா?” இயல்பாகக் கூற வந்து குத்தலாக முடிக்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் நந்தினி!
அவளுக்கும் எதிர்காலத்தை நினைத்துப் பயம் இருந்தாலும், சக்தி தன்னை ஒருக்காலும் கைவிட்டுவிட மாட்டான் என்ற நம்பிக்கை மிகவும் இருந்தது. ஆனாலும் இன்னொரு மனமோ, காதலிப்பவர்கள் அந்த நம்பிக்கையைக் கொள்ள முடியும்; ஆனால் காதலே இல்லாமல் அவளைக் கடமைக்காக அழைத்து வந்தவனிடம் எதை எதிர்பார்ப்பது என்றும் மருகியது.
நிற்பது நடுத்தெரு என்பது உரைத்தாலும், எப்படியும் சக்தி ஏதாவது செய்வான் என்று மனதில் உருப்போட்டுக் கொண்டாள்! மனதின் ஓரத்தில் சிறு நப்பாசை ஒட்டிக்கொண்டிருந்தது; தன்னைப் பிடித்து அழைத்து வந்திருப்பானோ என்று.
அவளது எண்ணம் அதிகம்தான்… ஆனால், பதின்ம வயதைக் கடந்து இரு வருடமேயான அந்தப் பேதையின் மனம் இப்படியும் இருக்கக் கூடாதா என்று ஏங்கியது!
“நீ… நீங்க… இல்ல… உ… உங்களுக்கு… எ… என்னைப் பிடிக்கவே இல்லையா?” அவளது உயிரைக் கண்களில் தேக்கி அவனை ஏக்கமாகப் பார்த்து அவள் அந்தக் கேள்வியைக் கேட்க, சக்திவேல் அவளை வெறித்து, வெறுத்துப் பார்த்தான்.
“ஆஹா… எவ்வளவு சீக்கிரமா கேட்டுட்ட…” குத்தல் மாறாமல் கூறிவிட்டு, “நல்லா யோசிச்சுச் சொல்லும்மா… நான் என்னைக்காவது ஒரு வார்த்தை உன்கிட்ட தப்பாப் பேசியிருக்கேனா?” வலியில் தோய்ந்த வார்த்தைகளைக் கொண்டு அவளை வலிக்க வைத்தான்.
“இல்லை…” கண்கள் நிலம் பார்க்க, இடம் வலமாகத் தலையசைத்து மெல்லிய குரலில் அவள் கூறினாள்.
“தப்பாப் பார்த்திருக்கேனா?” மீண்டும் அவளுக்கு வலித்தது. கண்களில் கண்ணீர் சூழ அவனை நிமிர்ந்து பாராமல் இல்லையென்று தலையசைத்தாள்.
“அப்புறம் ஏண்டி அப்படியொரு பொய்யைச் சொன்ன?” அதுவரையில் இருந்த தொனி மாறி, மிகுந்த கோபத்தோடு ‘டி’ என்று அவளை விளித்துக் கேட்க, அவளது உடல் பயத்தில், நடுக்கத்தில் தூக்கி வாரிப் போட்டது! பதில் கூற முடியாமல் உடல் நடுங்க, அவனை நிமிர்ந்து பார்க்கப் பயந்து குனிந்து இருந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் தாரைத் தாரையாகக் கொட்ட.
“சொல்லுடி… ஏன் அப்படிச் சொன்ன?” மற்றவர்களிடம் அவன் கோபம் கொண்டு பார்த்திருக்கிறாள். ஆனால், அவளிடம் கண்ணியமான பேச்சைத் தாண்டி இதுவரை வராததால் அவனது அந்தக் கோபமுகம் அவளுக்குள் கிலியை ஏற்படுத்தியது.
“எனக்கு வேற வழி தெரியலை…” தேம்பிக்கொண்டே அவள் கூற.
“உஷ்… அழுகையை நிறுத்து…” அவன் சற்றுச் சப்தமாகச் சொல்ல, அதிர்ந்து வாயை மூடினாள்.
“ஆனா ஊன்னா அழுக மட்டும் நல்லா தெரியும். என்ன அழுது என்னைக் கரைக்கலாம்ன்னு நினைச்சுக்கிட்டியா?” வம்படியாக அவளைத் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தான்.
தேம்பல் நிற்காமல் தொடர, அவனுக்கே ஒரு கட்டத்தில் பாவமாக இருந்தது. அங்கும் அடியும் உதையும் வாங்கித் தன்னிடமும் திட்டுகளை இவள் வாங்கிக்கொண்டிருப்பது எதற்காக? படிப்பின் மேல் உள்ள ஆசையினால் தானே? அந்த ஒரு காரணம் மட்டுமே அவனை இளக்கியது.
“சரி, நீ ஆசைப்பட்ட மாதிரியே படிக்கலாம். ஆனா அதுக்கு மேல என்கிட்ட இருந்து ஒன்னையும் எதிர்பார்க்காத. உன்னைப் பார்த்தாலே நீ சொன்ன பொய்தான் ஞாபகத்துக்கு வரும்… என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும்…”
அவளைப் பார்க்காமல் உரைத்துவிட்டுச் செல்லிடப்பேசியை எடுத்தான். மணி இரவு பதினொன்றைத் தாண்டியிருந்தது. மார்கழிக் குளிர் ஊசிபோலத் துளைக்க, அவளது உடல் நடுக்கம் அதிகமாயிற்று. இவளுக்கு இந்தக் கஷ்டம் தேவையா என்று அவனுக்குப் பாவமாகத்தான் இருந்தது.
உறங்கக் கிடைக்கும் எந்த இடமும் அவனுக்குச் சொர்க்கமே. குளிரோ வெயிலோ பனியோ மழையோ அவனை எதுவும் பாதிப்பதில்லை. கிடைக்கும் இடத்தில் தூங்கிப் பழகியவன்.
ஆனால் நந்தினி? பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்ட வீட்டு மரம். இந்தச் சிறு குளிரையே தாங்க முடியாதவள் தன்னுடைய வாழ்க்கை முறைக்கு எப்படி ஒத்துவருவாள்? ஆனால், அவள்தான் தன் மனைவி என்பது தீர்மானமாகிவிட்ட ஒன்று; முன்வைத்த காலைப் பின்வைப்பதற்கும் இல்லை.
“உள்ள போய் உட்காரு. நாய் நரியெல்லாம் சுத்தற நேரம்…” சற்று இறங்கி வந்த குரலில் கூறியவனைப் பார்த்து நடுக்கத்தோடு,
“அப்போ நீங்க? உங்களுக்குக் குளிரலையா?” நிமிர்ந்து அவளைப் பார்த்தவனின் உள்ளத்தில் என்ன இருக்கிறது என்று அவளுக்குப் புரியவில்லை. அவனது கூர்மையான பார்வையைத் தாங்க முடியாமல் தலைகுனிய,
“எனக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை…” என்று கூறிவிட்டு வெற்றியின் எண்ணை அழுத்தினான், சிறிது தயக்கத்தோடு.
“அண்ணா… வீட்டுல இருக்கீங்களா இல்லை வெளியவா?” தயங்கியபடியே கேட்க,
“ஏன் சக்தி? வீட்டுலதான்டா இருக்கேன்… சொல்லு சக்தி…”
“இல்லைண்ணா… ஒரு ஹெல்ப் வேணும்…” இன்னமும் தயங்க,
“அட சொல்லுடா… என்ன வேணும்? இப்படித் தயங்கற? பணம் ஏதாவது பிரச்சினையா?”
“இல்லைண்ணா… எனக்குத் தெரிஞ்ச பொண்ணு, கொஞ்சம் பிரச்சினை. இந்த நைட்டுல எங்க தங்க வைக்கறதுன்னு தெரியலை. அதான்…” சற்றுத் தடுமாறியபடி சக்திவேல் கூறுவதைக் கேட்ட வெற்றி ஒரு நொடி யோசித்து,
“சக்தி… தயக்கமே இல்லாம இங்க கூட்டிக்கிட்டு வா. என் தம்பி கண்டிப்பா தப்பு வேலைக்குப் போகமாட்டான்டா…” என்று தீர்மானமாகக் கூறிய வெற்றியின் தொனியில் உள்ளம் நெகிழ்ந்தது.
“தேங்க்ஸ்ண்ணா… ரொம்ப தேங்க்ஸ். இந்த நைட்டுல அந்தப் பொண்ணை எங்க தங்க வைக்கறதுன்னு தவிச்சுட்டு இருந்தேன்… ரொம்ப தேங்க்ஸ்ண்ணா…”
“டேய்… தேங்க்ஸ் சொன்னா உதைப்பேன் படவா. வாடான்னா…” என்று வெற்றி மிரட்ட ஆரம்பிக்க, சிரித்துக்கொண்டே ‘சரியென்று’ வைத்தான்.
நந்தினியை தங்க வைக்க இடம் கிடைத்த சந்தோஷத்தில் புதிய சக்தியோடு டிரைவர் சீட்டில் அமர்ந்து வேனை உயிர்ப்பித்தான்!
***
வேனை வெற்றியின் வீட்டில் நிறுத்தியபோது தேவசேனா ஆவலாக வாசலுக்கு வந்தாள். வெற்றியும் பின்னே வர, இருவரும் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்திருப்பார்கள் போலும்! தயங்கியபடியே சுற்றியும் பார்த்தபடி இறங்கிய நந்தினியைப் பார்த்து மலைத்தாள் தேவசேனா. சக்தியின் அருகில் வந்து நின்று,
“டேய் சக்தி… என்னடா பொண்ணு இவ்ளோ அழகா இருக்கு…”
வாடிய பூவாகக் கசங்கிப்போயிருந்தவளின் தோற்றத்தை வியந்து அவள் பார்க்க, அப்போதுதான் அவளது தோற்றத்தை ஊன்றிப் பார்த்தான். தலைமுடி கலைந்திருந்தாலும் அதுவும் அவளுக்கு அழகைத் தர, அவளது வழவழப்பான தந்த நிறம் இரவு விளக்கு வெளிச்சத்தில் பளீரென்றது. பிறை நெற்றியும் வில்லாக வளைந்த புருவங்களும் பெரிய கண்களும் ஆரஞ்சு பழ உதடுகளும் செழிப்பான கன்னமும் சங்கு கழுத்தும் அதற்குக் கீழ்…
“ச்சே…” தலையை உலுக்கிக்கொண்டு பார்வையை வலுக்கட்டாயமாக அவளிடமிருந்து பிரித்தான்.
“சக்தி… எனக்கொரு ஹெல்ப் பண்றியா?” விடாமல் அவனிடம் கிசுகிசுத்தாள் தேவசேனா.
“என்னக்கா…”
“அந்தப் பொண்ணு என்ன சோப்பு யூஸ் பண்ணுதுன்னு கேட்டுச் சொல்றா…” அப்பாவியாக அவனிடம் கேட்டவளைத் திரும்பிப் பார்த்தவனின் முகத்தில் இருந்த கேலியை வைத்து அவனது எண்ணத்தைப் புரிந்து கொண்டவள், “ப்ளீஸ்டா…” எனப் கெஞ்ச ஆரம்பிக்க,
“எக்கா… ஏன்க்கா…” அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவர்களுக்குள்ளாக ரகசியம் பேசியபடி இருந்தவர்களைத் திட்டிக்கொண்டே நந்தினியை உள்ளே அழைத்தார் வெற்றி.
“வந்த புள்ளையை உள்ள வான்னு கூப்பிடாம உடன்பிறப்பை மட்டும் கொஞ்சிட்டு இருக்கா பார்த்தியாம்மா…” சிரித்துக்கொண்டே வெற்றி தேவசேனாவை வார,
“அச்சோ… சாரிம்மா… உள்ள வாம்மா…” நந்தினியை அழைத்தாள். அவளை முன்னே விட்டுத் தேவசேனாவும் சக்திவேலும் பின்னே செல்ல, மீண்டும் அவனை நச்சரிக்க ஆரம்பித்தாள்.
“டேய் தம்பி… அந்தப் பொண்ணு என்ன ஷாம்பு போடுதுடா? ப்ளீஸ் கேட்டுச் சொல்றியா?” மீண்டும் அவளது கெஞ்சல் படலத்தை ஆரம்பிக்க,
“ஏன்கா…” சிரித்துக்கொண்டே கேட்டவனை, “எவ்ளோ நீள முடிடா…” என வெள்ளந்தியாக வியந்தவளைப் பார்த்துச் சிரித்தான். இருவரையும் அமரச் செய்த வெற்றி,
“சொல்லுடா… என்ன பிரச்சினை…” என்று கேட்க, நந்தினியை முறைத்தான் சக்திவேல். அவனது பார்வையைத் தவிர்க்க நிலம் பார்த்தாள் நந்தினி.
“அங்கென்னடா முறைப்பு வேண்டிக்கிடக்கு? விஷயத்தைச் சொல்லு…” என்று வெற்றி மீண்டும் கேட்க, நடந்ததை முழுவதுமாகக் கூறினான். வெகுசிரத்தையாகக் கேட்ட வெற்றி,
“ஏன்மா நந்தினி அப்படிச் சொன்ன? நம்ம சக்தி அப்படிப்பட்ட பையனே கிடையாதேம்மா…” என்று வருத்தப்பட,
“பரவால்லண்ணா விடுங்க… நடந்ததை மாத்த முடியாது…” அவளுக்குப் பதிலாக இவன் கூற, சக்திவேலை நிமிர்ந்து ஒருமுறை பார்த்த நந்தினி மெலிதான குரலில் கூறினாள்.
“எனக்கு வேற வழி தெரியலை… அந்தச் சந்தர்ப்பத்தை விட்டா எனக்கு வேற சந்தர்ப்பம் கிடைக்காது…” நிமிர்ந்து பார்க்காமல் அவள் கூறிய பதிலில் உச்சி குளிர்ந்து போன தேவசேனா,
“டேய் தம்பி… அவ்ளோ லவ் பண்ணுதுடா பொண்ணு உன்னை…” சிரித்துக்கொண்டே சொன்ன தனது இஷ்ட தெய்வத்தைப் பார்க்கும்போது சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு.
“தெய்வாக்கா…” பல்லைக் கடித்துக்கொண்டு அடங்கு அடங்கு என்று மறைமுகமாகச் சக்திவேல் கூற,
“சரி ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா?” என்று தேவசேனா கேட்டபோதுதான் இருவருக்குமே வயிறு என்ற ஒன்றும் அது இட்டுக்கொண்டிருந்த சப்தமும் உரைத்தது. மாலை முதலே தன்னோடு இருந்தவள் அவள் மட்டுமாகவா உண்டிருப்பாள்?
“அட இல்லக்கா… புரோட்டா கிடைக்குதான்னு பார்த்துட்டு வரேன்…” என்று கிளம்பியவனை,
“ஒழுங்கா உட்காரு சொல்லிட்டேன். சட்னி அரைச்சு நாலு தோசை ஊத்தினா முடிஞ்சுது…” என்று தேவசேனா உள்ளே போக, இதுதான் தெய்வாக்கா என்று நினைத்துக்கொண்டான்; இப்படியொரு இரண்டு நல்ல உள்ளங்களைச் சேகரித்து வைத்திருக்கிறோம் என்ற பெருமையில்!
“சரி அடுத்தது என்ன பண்ணப் போறீங்க?” தோசையை உண்டுவிட்டுக் கைகழுவிய பின் அமர வைத்து வெற்றி கேட்க, சக்திவேல் ஆழ்ந்து யோசித்துத் தீர்க்கமாக முடிவெடுத்தவன், உறுதியாகக் கூறினான்.
“இன்னைக்கு நைட் மட்டும் இங்க தங்கியிருக்கட்டும்ண்ணா. நாளைக்கு இவங்க காலேஜ்ல பேசணும், ஹாஸ்டல்ல சேர்த்துவிடணும்…”
தன்னைச் சக்தி ஏற்றுக்கவே போவதில்லை என்று அவளாக அவளறிந்த உண்மை முகத்தில் அறைய, ஏமாற்றத்தோடு அமர்ந்திருந்தாள். கண்கள் கலங்கியது. கண்களிலிருந்து உருண்டு விழுந்த கண்ணீர் அவளது மடியில் கோர்த்துப் பிடித்திருந்த கைகளில் பட்டுத் தெறித்தது!





