arrow_back
தித்திக்குதே அத்தியாயம் பத்து
தித்திக்குதே chevron_right பகுதி 10 / 26

அத்தியாயம் பத்து

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

ஜன்னலின் அருகில் நின்றுகொண்டு வெளியில் தெரிந்த இருண்ட வானத்தை வெறித்துக்கொண்டிருந்தாள் நந்தினி. ஒரே நாளின் நிகழ்வுகள் அவளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டிருந்தது. எல்லாவற்றையும் மீறி அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது அவளது தந்தையின் சாதி வெறி… அதற்காக எதற்கும் துணிய முடியுமா?

அவர்களிடம் வாதாடும்போது சக்தி கூறினானே… கௌரவத்திற்காகக் காதலித்துத் திருமணம் முடித்த பெண்ணை விஷம் வைத்துக் கொன்றதாக… யாரை? புனிதாவையா? ஆனால், புனிதா அவளாகத்தானே விஷத்தைக் குடித்ததாகக் கூறினார்கள்? காதல் கைகூடாததால் தற்கொலை செய்துகொண்டதாகத் தன் தாய் கூறியது நினைவில் வந்தது.

வீட்டைத் தவிர எதையும் அறியாத பேதையாக இருந்தவள் தான் நந்தினி. அவளது தைரியமும் துடுக்குப் பேச்சும் இயல்பாக உடன்பிறந்த ஒன்று. கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்… ‘ஆசை இருக்கு அம்பாரி ஏற… அம்சம் இருக்கு கழுதை மேய்க்க…’ என்று. அதுபோலத்தான்… ஆசை பெரியதாக இருந்தாலும், நன்றாகப் படிக்கக் கூடியவளாக இருந்தாலும், பெரிதாக உலக அனுபவம் இல்லாத சிறு பெண் என்பதை அடிக்கடி நிரூபித்துக்கொண்டே இருப்பவள்.

அதுபோலப் புனிதாவின் இறப்பு எதனால் என்று கூட அறியாதவளாக, தனது சமூகத்தின் சாதி வெறியைப் பற்றி முழுமையாகத் தெரியாதவளாகத்தான் சக்தியைக் காதலிப்பதாக அந்தச் சபையில் கூறினாள். ஆனால், அதன் தாக்கத்தை முற்றிலும் அறிந்தவன் சக்தி. வேறு வழியில்லாமல் உடன் அழைத்து வந்துவிட்டான். அவளுக்கு அவளது தந்தையைப் பற்றிப் புரிந்தபோதோ மனம் அதிகபட்ச அதிர்ச்சியை உள்வாங்கியது.

கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த தேவசேனாவைப் பார்த்தாள். நந்தினியின் துணைக்கு அவள் படுத்திருந்தாள். வெற்றி எவ்வளவு சொல்லியும் சக்தி வேனில் படுத்துக்கொள்வதாகப் பிடிவாதமாகப் போய்விட்டான்.

“பிடிவாதம் பிடிச்சான்னா அவ்வளவுதான் நந்தினி… மாத்தவே முடியாது…” தேவசேனா கடிந்துகொண்டு உறங்கியும் இருந்தாள்.

புனிதாவின் விஷயத்தில் என்னவாகியிருக்கும் எனத் தெளிவாகத் தெரிந்து கொண்டாக வேண்டும் அவளுக்கு. அதுவும் இல்லாமல் அவனிடம் தெளிவாக்கிக்கொள்ள சில விஷயங்களும் இருந்தன. தேவசேனாவை மென்மையாக எழுப்ப,

“அக்கா… அக்கா…”

“முறையை மாத்தாத நந்தினி… அண்ணி…” தூக்கத்திலேயே உளற, சிறுபுன்னகை நந்தினியின் இதழில்!

“சரி அண்ணி… கொஞ்சம் வெளிய போய் அவங்ககிட்ட பேசிட்டு வரட்டா…” என்று கேட்டவளிடம் தூக்கத்திலேயே உளறினாள் தேவசேனா.

“சரி நந்தினி… ஜாக்கிரதை…” என்று கூற, கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். மணி இரண்டுக்கு மேலாகியிருந்தது. குளிர் இன்னமும் அதிகமாக இருக்க, வெளியில் சிட் அவுட்டில் நீளமான பெஞ்சில் அமர்ந்து தலையில் கைவைத்தவாறு யோசித்துக் கொண்டிருந்தான் சக்திவேல்! அவள் வரும் அரவம் கேட்டு நிமிர்ந்தவன்,

“என்ன பண்ற… போய் தூங்கு…” கடுமையான குரலில் கூறியவனை கூர்ந்து பார்த்தாள். அவனைக்கண்டு பயந்ததெல்லாம் சற்று மாறியிருந்தது நந்தினிக்கு. பழைய நந்தினியாக அவன் முன் வந்து நின்றாள்.

“எனக்கு ஒரு விஷயம் தெரியணும்…” உணர்வை வெளிக்காட்டாத குரலில் அவள் கேட்க, என்னவென்பது போலப் பார்த்தான்.

“என்ன…” அதே கடுமையோடு கேட்க,

“புனிதாக்காவுக்கு என்னாச்சு?”

“உனக்குத் தெரியாதா?” முறைப்பது போலப் பார்க்க, முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“உங்களுக்குத் தெரிந்தது எனக்குத் தெரியாது…” எங்கோ பார்த்தபடி அவள் கூற, ஒரு நெடுமூச்சை விட்டபடி கூறினான்.

“அந்தப் பொண்ணுக்கு விஷத்தைக் கொடுத்துக் கொன்னாங்க. அந்தப் பையனை அடிச்சு ஆத்துல வீசிட்டாங்க…” கடுமை மாறாமல் சுருக்கமாக அவன் கூற, அதைக் கேட்ட நந்தினி முகம் வெளிறிப் போய் அவனைப் பார்த்தாள். கல்போல மாறியிருந்த அவனது முகத்தோடு அவன் கூறியது அவளது மனதில் கிலியைப் பரவச் செய்தது. மனதை ஆசுவாசப்படுத்திக் கொண்டு,

“யாருமே ஒன்னும் சொல்லலையா?” சந்தேகமாக அவள் கேட்க,

“யாரு சொல்வாங்க? காலம் காலமா இதுதான் நடக்குது. அன்னைக்கு அந்தப் பொண்ணு, அதுக்கு முன்னாடி இன்னொரு பொண்ணு… அவங்க கௌரவத்தைக் காப்பாத்தறாங்களாம்… ச்சை… இதுங்கெல்லாம் மனுஷ கூட்டமா?” அவளை வெறுப்பாகப் பார்த்துப் பேச, அவளுக்கு அந்தக்கூட்டத்திலிருந்து வந்தவள் தானே நீயும் என்று அவன் கூறுவது போல இருந்தது; மனம் கனத்தது.

“இதுவரைக்கும் வீட்டுல இப்படியொரு பேச்சு நான் பார்த்ததில்லை. ஆனா, காதலிச்சுத் கல்யாணம் செய்யறதை அனுமதிக்கறது இல்லைன்னு மட்டும்தான் தெரியும் சக்தி எங்களுக்கு. அதுக்கு பின்னாடி இப்படியெல்லாம் நடந்துட்டு இருக்குன்னு நினைச்சாலே மனசு நடுங்குது…”

கண்களில் கண்ணீர் சூழ அவள் முகத்தை மூடிக்கொண்டு அவனை விட்டுச் சற்றுத் தள்ளி அமர்ந்தாள். முதுகு குலுங்கியதை வைத்து அழுகிறாள் என்பதை கண்டுகொண்டான்.

“எல்லாருக்கும் தெரிஞ்சுதான் நடக்குது. அன்னைக்கு சித்ரா வீட்டுல பிரச்சினை நடந்தப்போ உங்க அப்பா சொன்னார்… மிச்ச மீதியை நாளைக்குப் பார்த்துக்கலாம்ன்னு. அதோட அர்த்தம் அடுத்த நாள்தான் எனக்குத் தெரிஞ்சுது. அதே மாதிரி உனக்கும் சொன்னப்போ என்னால அப்படியே விட்டுட்டு வர முடியலை…” அழுது கொண்டிருந்தவள் கண்ணீரோடு நிமிர்ந்து பார்த்தாள்.

“அதனாலதான் என்னை நீங்க உங்க கூடக் கூட்டிட்டு வந்தீங்களா?”

“ஆமா…” உணர்வைத் துடைத்து அவன் கூறியது நந்தினிக்கு வலித்தது.

ஒருபுறம் அவளைப் பெற்ற தந்தையை நினைத்து வெறுத்தாள்; மறுபுறம் சக்தியின் காதலுக்காக ஏங்கினாள். ஆனால், இரண்டுக்கும் நடுவில் அவளது மனம் தன் படிப்பு என்னாகுமோ, கனவு நிறைவேறுமா என்று துடித்துக் கொண்டிருந்தது.

“என் மேல வேற அபிப்பிராயமே இல்லையா?” ஏக்கமாக அவள் கேட்டது அவனுக்குப் புரிந்தாலும், அவனது மனம் அப்போது நிர்தாட்சண்யமாக மறுத்தது. அவை வார்த்தைகளாகவும் வெளிவந்தன.

“இல்லை… இப்போ வரைக்கும் இல்லை…”

“அப்போ எதிர்காலத்துல வர்றதுக்கு சான்ஸ் இருக்கா?”

“தெரியாது…” உணர்வைத் துடைத்துப் பாறையாக இறுகிய குரலில் அவன் கூறிய பதிலைக் கேட்டு மனம் தளர்ந்தாள். மௌனமான அவளது பார்வையில் அவன் பேச ஆரம்பித்தான்.

“நீ சொன்ன பொய் நான் கனவில்கூட நினைத்துப் பார்க்காத பொய். ஆனா, அந்தப் பொய்யைத் துணிஞ்சு நீயும் சொல்லியிருக்க. உன் உயிரைக் காப்பாத்த வேண்டி, கிட்டத்தட்ட அக்செப்ட் பண்ணிட்டுதான் உன்னைக் கூட்டிட்டு வந்திருக்கேன். வேற வழியும் எனக்குத் தெரியலை. சும்மா உன்னைக்கூட வெச்சுருந்தா அசிங்கம்… அதுக்கு வேற பேர் கட்டிவிட்டுடுவாங்க… சோ, நாளைக்கு நமக்குக் கல்யாணம்…” என்று கூறிவிட்டு நிறுத்த, அவளது முகம் மலர்ந்தது.

“ஆனா, அதுக்கு மேல எதையும் எதிர்பார்க்காத. ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடுறேன்… படிச்சுக்கோ. எவ்வளவு வேணுமோ படி. நீ ரேங்க் ஸ்டூடண்ட் வேற. அந்த ஒரு ரீசன்தான்… உன் படிப்பு கெட்டுப் போயிடக் கூடாதுன்னு இப்படியொரு காம்ப்ரமைஸ் பண்ணிருக்கேன். ஆனா, நீ சொன்ன பொய்யைத் டைஜஸ்ட் பண்ணி உன்னையே லவ் பண்ணியாகணும்ன்னு என்னைப் போர்ஸ் பண்ணாத. என்னால கண்டிப்பா முடியாது. பிகாஸ் ஐ டூ ஹேவ் பீலிங்ஸ்… நான் ஒன்னும் ரோபோ இல்லை… திடீர்னு புரோகிராம் மாத்தி எழுதினா அதை அக்செப்ட் பண்ணிக்க…”

அவன் கூறியதை அவனைப் போலவே உணர்வைத் துடைத்துக் கேட்டுக் கொண்டிருந்தவள், “நீங்க என்ன படிச்சிருக்கீங்கன்னு இன்னும் சொல்ல மாட்டீங்களா?”

“இப்படியொரு என்னைப் பற்றி எதுவுமே தெரியாமல் எப்படி அப்படியொரு டெசிஷன் எடுத்த?” கேள்வியாக அவளைப் பார்க்க,

“என் மனசு சொல்லுச்சு சக்தி… நீங்க நல்லவர்ன்னு…”

“ஹா… இந்தச் சினிமா டயலாக் எல்லாம் வாழ்க்கைக்கு ஒத்து வராது. ஏன் அதே மனசு முன்னாடி எல்லாம் சொல்லலையா? நானும் உன்னை வருஷக்கணக்கா தானே பார்க்கிறேன்…”

“அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. எங்களை மாதிரி நல்ல ஹியுமன் பீயிங்ஸ்க்கு தான் அந்த லவ்ங்கற பீலிங் வரும். அதுவும் வரப்போறேன்னு லெட்டர் போட்டுட்டு, நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்துட்டு வராது…” அவளது பழைய குறும்பு மீண்டிருக்க, அவனைக்குறும்பாகப் பார்த்துக் கண்ணடித்தாள்.

“அப்படீன்னா… நாங்க யாருங்க மேடம்? ஹியுமன் பீயிங் இல்லாம…” அவளுடைய நக்கலை நினைத்து உள்ளுக்குள் சிரித்தாலும் வெளிகாட்டிக் கொள்ளாமல் அவன் கேட்க,

“உங்களை எல்லாம் யார் ஹியுமன்னு சொன்னா? நீங்க எல்லாம் இந்தக் கல்லு மண்ணு மாதிரி… அப்புறம் இதோ நிற்குதே உங்க அழகு ஓட்டை வேன்… அது மாதிரி ஒரு புரோடக்ட்… உங்களுக்கு பீலிங்ஸ் எல்லாம் தேவையே இல்லை…” என்று கூறிவிட்டு உதட்டைச் சுளித்தபடி எழ.

“இங்க பாரும்மா… இப்படியொரு ஓவரா வாயாடிக்கிட்டு இருந்த, பல்லைத் தட்டி கையில கொடுத்துடுவேன். ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பார்த்துட்டுப் போ” என்றபடி அவனும் எழ, அவள் திரும்பிச் சக்தியைப் பார்த்து அவனருகில் வந்தாள்.

“எதைத் தட்டுவீங்க? பல்லையா? தட்டிக்கோங்க…” என்றபடி அவனுக்கு நெருக்கமாக முகத்தைக் காட்ட, அவனுக்குத் திக்கென்றது. வெகு அருகில் அவளது முகம்… அவனது பதற்றத்தை ரசித்துப் பார்த்தவள் அவனை இன்னும் கொஞ்சம் வம்புக்கிழுக்க வேண்டி,

“மாமா… ஒண்ணா, ரெண்டா?” அப்பாவியாக அவள் கேட்க, சக்தி திடுக்கிட்டு,

“என்ன்னன்ன…?” என்று கேட்க,

“இல்லை மாமா… நீங்க தட்டுறேன்னு சொன்ன பல்லைத்தான்…” என்று சிரித்து வைக்க, அவளைக் கடுப்பாக ஒரு பார்வை பார்த்து வைத்து, முகத்தையும் கடுமையாகவே வைத்துக்கொண்டு,

“இப்போதான் ரெண்டு பேய் சுத்தறதைப் பார்த்தேன். அதுங்ககிட்ட வேணும்னா கேட்டு உனக்குப் பதிலைச் சொல்றேன்…” சிரிக்காமல் அவன் கூற.

“ஐயோ பேயா? நீங்க பார்த்தீங்களா?” என்று அலற, அவனுக்குச் சிரிப்பு வந்தாலும் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“ஏன், நீ பார்க்கலையா? இங்கேயேதான் இருந்ததுங்க. இரு கூப்பிடறேன்…” என்று அவன் சுற்றியும் பார்க்க, அவள் நிஜமாகவே பயந்துகொண்டு,

“உங்களுக்குப் பயமா இல்லையா?” என்று கேட்க,

“பயமா? எனக்கா? கிழிஞ்சுது… இந்நேரம் வரைக்கும் அதுகூடத்தானே பேசிட்டு இருக்கேன்…” அதையும் சிரிக்காமல் கூற, அவனது கேலி புரியும் வரை பரிதாபமாகப் பார்த்தவள் புரிந்தவுடன்,

“அடப்பாவி… நானா பேய்?” அவனைக்கடுப்பாகக் கேட்க.

“பின்ன… நீயும் தூங்காம என்னையும் தூங்க விடாம அறுத்துத் தள்ளிக்கிட்டு இருந்தா… மரியாதையா போய்ப் படுத்துத் தூங்கு…” என்றபடி அவன் திண்ணையிலேயே படுக்க, உதட்டைச் சுளித்துப் பழித்துவிட்டு உள்ளே சென்றாள்.

***

மத்தள மேளம் முரசொலிக்க

வரிசங்கம் நின்றாங்கே ஒலியிசைக்க

கைத்தலம் நான் பற்ற கனவு கண்டேன்

அந்த கனவுகள் நனவாக உறவு தந்தாய்!

அன்று காலையில் அவசரமாக எடுத்த பருத்திக் கூரைப்புடவையில் நந்தினி அமர்ந்திருக்க, அருகில் தூய பருத்தி வேஷ்டி சட்டையில் சக்திவேல் அமர்ந்திருந்தார். கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயிலில் சைவ நெறிமுறைப்படி தேவார திருவாசகங்களை ஓதுவார் ஓத, அம்மையும் அப்பனும் அருள்பாலிக்கத் திருத்தாலியை நந்தினியின் கழுத்தில் அணிவித்துத் தன் இல்லாளாக்கிக் கொண்டான் சக்திவேல். வெகு எளிமையாக நடந்த அந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு வாழ்த்தியவர்கள் வெற்றி, தேவசேனா, செந்தில் இன்னும் சில நண்பர்கள் மட்டுமே.

“சக்தி… என்னோட புதுப் பட்டுச்சேலையே இருக்குடா… அதையாவது நந்துக்குக் கொடு. அரை மணி நேரத்துல நானே பிளவுஸ் தச்சுடுறேன்…” தெய்வா கெஞ்சினாலும் சற்றும் செவிசாய்க்காமல்,

“அக்கா… இப்போ என்னோட வசதி இவ்வளவுதான். என்னோட வசதிக்குத்தான் அவங்க பழக்கப்படுத்திக்கணும். பின்னாடி வசதி வந்தாக்கூடப் பட்டுச் சேலையெல்லாம் கட்டறதுல எனக்கு உடன்பாடு இல்லை. அந்த காசுக்கு ஐந்நூறு பிள்ளைங்க ஒரு நேரம் வயிறு நிறையச் சாப்பிடலாங்க்கா…”

பிடிவாதமாக முடித்துவிட்டவனைப் பார்த்தபோது நந்தினிக்கு மனதின் ஓரத்தில் சிறு பயம் வந்தது. அவனது பிடிவாதங்களைப் பார்த்து, இதே பிடிவாதத்தை அவளது காதல் விஷயத்திலும் அவன் காட்டிக்கொண்டே இருந்தால்? மனம் ஒரு பக்கம் சோர்ந்தாலும் மறுபக்கம்,

“டேய் ஹிட்லர்… வைக்கிறேன்டா உனக்கு ஆப்பு. லவ்வா பண்ண மாட்ட லவ்வு… நான் உன்னையப் படுத்தற படுத்துல ‘நந்து ஐ லவ் யூ’ன்னு நீ ஓடியாரணுமாக்கும்…” என்று சூளுரைக்கவும் மறக்கவில்லை. எப்படியிருந்தாலும் இந்த மூன்று மாதம் ஹாஸ்டல் வாசம்தான் என்று முடிவாகிவிட்டதால்,

“இந்த மூணு மாசம் ஃப்ரீயா இருந்துக்கடா ஹிட்லர்… அப்புறம் இருக்கு உனக்கு…” மனதிற்குள் அவனை வறுத்து எடுத்துக்கொண்டிருந்தாள்.

முகம் முழுக்க புன்னகையோடும் பூரிப்போடும் நிமிர்ந்த நந்தினி, தாலியை அணிவித்து நிமிர்ந்தவனைப் பார்த்துக்காதலோடு புன்னகைக்க, மனம் முழுக்க அவள்மேல் கோபத்தில் இருந்த சக்திவேலோ அவளை எரிக்காதது ஒன்று மட்டுமே குறையாக இருந்தது.

அப்பொழுதே திருமணத்தைப் பதிவு செய்யக் கோரும் விண்ணப்பத்தில் இருவரும் கையெழுத்திட, அந்தத் திருக்கோயிலின் திருமணப் பதிவாளர்,

“இன்னும் பதினைஞ்சு நாள் கழிச்சு ஒரு சைன் மட்டும் வந்து பண்ணிடுங்க. கல்யாணம் லீகலா ரெஜிஸ்டராகிடும்…” என்று கூறிவிட்டுப் போக, அனைவரோடும் சுவாமி தரிசனம் செய்யச் சென்றான்.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார்த்தமை நன்னெறிக்கு உய்ப்பது

வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயமே!

ஓதுவார் கணீரென்ற குரலில் அப்பன் முன்னின்று பாட, கண்ணீர் மல்கியது நந்தினிக்கு!

“ஈஸ்வரா… இனிமே எனக்கு வாழ்க்கையில சக்தியைத் தவிர வேற துணையில்லை. எனக்குப் படிப்பும் வேணும், என் சக்தியோட ஆத்மார்த்தமான காதலும் வேணும்… எங்களுக்கு என்ன கஷ்டம் வந்தாலும் அதைச் சமாளிக்கிற தைரியத்தை மட்டும் கொடு ஆண்டவா…”

அவளையும் அறியாமல் கண்ணீர் உருண்டு விழுந்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பதினொன்று

கோயிலிலிருந்து வெளியே வந்த சக்திக்கு மனதில் ஏதோ உறுத்தல். அவனது புத்தி ஏதோ சரியில்லை என்று கூறியது. பெரும்பாலான நேரங்களில் அவனது புத்தி காட்டும் பாதை சரியாக இருக்கும். ஒருமுறை நிதானமாகச் சுற்றியும் பார்த்தவன், செருப்பை அணிவதற்காகக் குனிய, பக்கத்தில் சிலீர்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்