arrow_back
தித்திக்குதே அத்தியாயம் பன்னிரண்டு
தித்திக்குதே chevron_right பகுதி 12 / 26

அத்தியாயம் பன்னிரண்டு

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

ஹாஸ்டலில் சேர்ந்துவிட்ட நந்தினிக்கு நேரத்தை நெம்பித் தள்ள வேண்டியிருந்தது. பகல் நேரங்களில் பெரும்பாலும் வகுப்பறையிலும் பரிசோதனை கூடத்திலும் நூலகத்திலும் கழிந்தாலும், இரவில் சக்தியின் நினைவு வருவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.

அவன் எங்குத் தங்கியிருப்பான்… என்ன உண்டிருப்பான்… என்று மனம் தவிக்க, ஹாஸ்டல் மெஸ்ஸில் உணவை உண்ணாமல் நேரம் போவது தெரியாமல் அளந்துகொண்டிருப்பாள். யாராவது கவனித்து ஊக்கினாலொழிய, அவள் அந்த இடத்தை விட்டு நகர்வது இயலாத காரியமாக இருந்தது. அவனை மனதுக்குள் கொண்டு வராதவரை இருந்த தெளிவும் நிம்மதியும் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோவதைத் தள்ளி நின்று வேடிக்கை பார்க்கத் துவங்கினாள் நந்தினி.

ஆனால், இந்த உணர்வுகள் அனைத்தும் படிக்கும் புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் காணாமல் போய் பாடங்களில் ஆழ்ந்து விடுவதை அவளே உணர்ந்து, தன்னை முன்பை விட மிகவும் அதிகமாகப் புத்தகங்களில் புதைத்துக்கொள்ள ஆரம்பித்தாள். தன்னை மறந்து படித்துக் கொண்டிருப்பது அவளது தினசரி வழக்கமாகிப் போனது.

சக்தி கூறியது போலவே, அதற்குப் பின் கல்லூரிக்கு வருவதைச் சுத்தமாக நிறுத்தியிருந்தான். செந்தில் அந்த ட்ரிப்பை எடுக்க, மாலை வேளையானால் அவனைக் காணத் தவித்த இதயத்தோடு அவள் வேன் ஸ்டாண்ட் பக்கம் போனாலும், செந்திலை மட்டுமே பார்க்க முடியும். அவள் ஏமாந்து செல்வதைப் பார்த்த செந்தில்,

“அக்கா… அண்ணன் இனிமே ட்ரிப்புக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க…” ஒவ்வொரு நாளும் வந்து ஏமாந்து செல்லாதீர்கள் என்று அவன் கூறாமல் கூற, கண்களின் ஓரம் கரித்தது நந்தினிக்கு.

“சரி செந்தில்…” என்று ஜீரணிக்க முயன்றாலும் அவளது மனது அவ்வளவு விரைவாக ஏற்கவில்லை. செந்திலுக்கோ சக்தி கூறியது காதில் ஒலித்தது.

“பேசுன ஒவ்வொருத்தன் வாயையும் அடைக்கணும்டா… அவனுங்ககிட்டயெல்லாம் காட்டணும். ‘பிச்சைக்கார பய’ன்னா சொன்னீங்க? பாருங்கடா, உங்க பொண்ணை ராணி மாதிரி வெச்சுருக்கேன்னு காட்டணும்…” அவன் கோபத்தில் கொதித்துக்கொண்டு கூற, “அண்ணே… அக்கா உங்க வீட்டம்மாண்ணே… அவங்க யாரோ பொண்ணில்லை…” சக்தியின் பேச்சிலிருந்த தவறை அவன் உணராமல் கூறியதென்று எண்ணித் திருத்தப் பார்க்க, அவனோ அது தெரிந்ததுதான் என்று அவனுக்கு உணர்த்தி உதடுகளை ஏளனமாக வளைத்தான்.

“ப்ச்… விடுடா…” செந்திலின் வாயை அடைக்க,

‘அண்ணே… அது விடக் கூடியது இல்லை…’ என்று எண்ணிக்கொண்டான். மனதில் நினைத்தாலும் சக்தியிடம் கூறவில்லை. அவனது மனம் செந்திலுக்குப் புரிந்தது, ஆனால் இன்னொரு மனமோ நந்தினிக்காகப் பரிதாபப்பட்டது. அவளது ஏமாற்றம் அவனது மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. கல்லூரி உள்ளே செல்லத் திரும்பியவள், மீண்டும் செந்திலிடம் திரும்பி,

“நேரத்துக்குச் சாப்பிடறாங்களா செந்தில்?” கவலையாக அவனிடம் கேட்க,

“கரூர் வந்தாதானக்கா தெரியும்? அண்ணன் இங்க வந்தே ரெண்டு வாரமாச்சே… உங்களை இங்க விட்டுட்டுப் போனவங்கதான்…”

“ஏன்… எங்க இருக்காங்க? அப்போ வீடு எதுவும் பார்க்கலையா?” சற்றே பதட்டமாகக் கேட்க,

“வீடு இன்னும் பார்க்கலைக்கா… ஆனா அண்ணன் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் சரக்கேத்திட்டு இருக்காங்கன்னு மட்டும்தான் தெரியும். லாரி செகண்ட் ஹேண்ட்ல எடுத்து இருக்காங்கல்லக்கா? உங்ககிட்ட சொல்லலையா?” அப்பாவியாக அவன் கூறிவிட்டு அவளையே திருப்பிக் கேட்க, அவள் சற்றும் அறியாத தகவலால் அவளது மனம் காயப்பட்டது. தன்னிடம் கூறவே இல்லையே! ஆனால், இந்த விஷயத்தையெல்லாம் கூறுமளவு அவனென்ன உன்னிடம் தினமும் கொஞ்சிக்கொண்டா இருக்கிறான் என்று மனம் இடித்துரைத்தது.

“சொல்லலை செந்தில்…” ஏமாற்றமாகக் கூறிவிட்டு விடுதிக்குச் சென்று படுக்கையில் விழுந்தாள். கண்கள் கரித்தது. தனக்காக யாருமில்லையே என்று மனம் சுயவிரக்கத்தில் கலங்க, கொண்டவனும் தனக்காக இல்லையே என்ற கழிவிரக்கம் அவளைப் படுத்த, விடுதி மெஸ்ஸுக்குச் செல்லாமல் உணவையும் உண்ணாமல் அழுதே கரைந்தாள். தன் தாய் தன்னருகில் இருந்திருந்தால் அவளது மடியில் தலைவைத்துத் படுத்திருப்பாள். எதற்கும் கொடுத்து வைக்காத தனது நிலை அவளை என்னென்னவோ எண்ண வைத்தது.

“என்னடி… முகம் எல்லாம் இப்படி வீங்கிப் போயிருக்கு? அழுதியா நந்தினி?”

இருண்டிருந்த அறையில் டியூப்லைட்டை ஆன் செய்துவிட்டு, வகுப்புத் தோழியும் இப்போது அறைத் தோழியுமாகிவிட்ட பார்கவி நந்தினியை உலுக்கி எழுப்ப, வெளிச்சம் கண்களைக் கூச முயன்று இமைகளைப் பிரித்தாள் நந்தினி.

“இல்லை…” மூக்கை உறிஞ்சிக்கொண்டே அவள் கூறுவதை வைத்தே அவளது அழுமூஞ்சித்தனத்தைக் கண்டுகொண்ட பார்கவி,

“ஏன் நந்தினி… பேரண்ட்ஸ் ஞாபகம் வந்துடுச்சா?” நந்தினியின் திருமணம் பற்றிப் பார்கவி அரசல் புரசலாகக் கேள்வியுற்று இருந்தாலும், அவளாக வாய் திறந்து கூறியதில்லை. அதன் காரணமாகப் பெரிய அளவில் யாருக்கும் நந்தினியின் திருமணத்தின் உள்காரணங்கள் தெரியாமல் இருந்தது. பார்கவி கேட்ட கேள்வியில் கசப்பாகப் புன்னகைத்தாள்.

“அப்படியெல்லாம் இல்லை பார்கவி…”

“பின்ன… ஏன் இப்படி அழுதுட்டு இருக்க? சக்தி அண்ணா நினைப்பா நந்து?” தயங்கியவாறே கேட்க, கண்கள் கலங்கியது நந்தினிக்கு.

“வேணாம் கவி… என்னைத் தனியா இருக்க விடு… ப்ளீஸ்…” பரிதாபமாகக் கூறியவளைப் பாவமாகப் பார்த்தாள் பார்கவி.

“சரி… சாப்பிட்டுட்டு வந்து படுத்துக்கோ. நேரமாகிடுச்சுன்னா அந்த இட்லியைச் சுத்தி வெச்சுதான் உடைக்கணும்… வாடி…”

சிரிக்காமல் அந்த விடுதி உணவைக் கிண்டலடித்தவளின் தோரணையில் சட்டென்று சிரிப்பு வந்தது நந்தினிக்கு. அழுது வீங்கிய முகத்தோடு சிரித்தவளைப் பார்த்து,

“குட் கேர்ள்… வா போய் சாப்பிடலாம்…” இழுத்துக்கொண்டு சென்று சாப்பிட வைத்துத்தான் விட்டாள் பார்கவி. உணவை உண்டுவிட்டுப் பார்கவியையும் சமாளித்துவிட்டு மீண்டும் படுக்கையில் விழுந்தபோது மனம் சோர்வாக இருந்தது.

அவசரம் என்றால் தொடர்புகொள்ளக் கைபேசி ஒன்றை அவளுக்கு வாங்கி கொடுத்திருந்தான். விடுதியில் கைபேசிக்கு அனுமதியில்லாததால் யாரும் அறியாமல் மறைத்து வைத்திருந்ததை இரவு நேரங்களில் எடுத்துப் பார்த்துக்கொண்டே இருப்பாள் நந்தினி. சக்தி அவளை அழைக்கிறானா என்ற அவளது ஏக்கம் விடுதிக்கு வந்து இரண்டு வாரமாகியும் நிறைவேறவில்லை.

சமயத்தில் தன்னை நினைத்து அவளுக்கே தாழ்வாகவும் தோன்றும். தன் நினைவே இல்லாதவனிடம் அன்பை எதிர்பார்க்கிறாயே என்று அவளது மனது அவளைச் சாடும். ஆனால், அடுத்த மனமோ ‘அது தெரிந்துதானே அவனை நீ திருமணமும் புரிந்து கொண்டாய்’ என்று ஆறுதல்படுத்தும். படிக்கும் வேளைகளில் நினைவுக்கு வராத அவளது கணவன், உறங்குவதற்காகக் கண்களை மூடினால் இமைகளில் நர்த்தனமாடினான்.

அன்று இரவு பதினொன்றாகியும் உறக்கம் வராமல் புரண்டுகொண்டிருக்க, அழுது ஓய்ந்த கண்கள் எரிந்தது. வெகுநேரமாக அவனது கைபேசிக்கு அழைக்கலாமா என்ற அவளது எண்ணம் கடிகார பெண்டுலம் போல ஆடி, கடைசியில் அவனை ஒருவாறு அழைத்து நின்றது. அழைத்துவிட்டாளே ஒழிய, அவன் எடுக்கும் வரை மனம் தடதடக்க, ஊரில் உள்ள தெய்வங்களையெல்லாம் துணைக்கழைத்துக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா… ஏதாவது பிரச்சினையா?” பதட்டமாக அவன் கேட்க, தயங்கிப் பதிலுரைத்தாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை… ஏன் அப்படி கேட்கறீங்க?”

“இந்த நேரத்துல கால் பண்ணதால கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்…” எங்கோ பயணித்துக்கொண்டு அவன் பேச,

“டிரைவ் பண்ணிட்டு இருக்கீங்களா?” ஏக்கமாக ஒலித்த அவளது குரலின் தன்மை அவனுக்குப் புரியாமலில்லை.

“ம்ம்ம் ஆமா… சரக்கு ஏத்திட்டு சென்னைக்குப் போயிட்டு இருக்கேன். என்னம்மா விஷயம்?” நேராக அவன் கேட்க, ‘ஏதாவது விஷயத்தோடுதான் உன்னிடம் பேச வேண்டுமா? இல்லையென்றால் கூடாதா’ என்று மனம் கொடி பிடிக்க,

“ஏன் விஷயம் இல்லைன்னா பேசக் கூடாதா?” கடுப்பாக அவள் கேட்க,

“சரி… உனக்கு ஏதாவது புக்ஸ் வேணுமா சென்னைலருந்து?” பேச்சை அவன் மாற்ற முயல்வதை உணர்ந்து,

“வெச்சுடுன்னு நீங்க சொன்னா வெச்சுடுறேன்… அதுக்காக இப்படிப் பேச்சை மாத்தாதீங்க…” அவளும் நேரடியாகத் தாக்க, ஒரு வினாடி தடுமாறினான். நான்கு வழிச் சாலையில் ஓடிக்கொண்டிருந்த லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு,

“சரி… சொல்லு…” உணர்வுகள் எதையும் காட்டாத குரலில் அவன் கேட்க, என்னவென்று அவனைப் கேட்பது என்று புரியாமல் விழித்தாள் நந்தினி. அவனைக்காதலிப்பதாகக் கூறிவிட்டாளே தவிர, எந்த உரிமையுணர்வும் இதுவரை அவளுக்கும் தோன்றவில்லை. அவனும் அதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை. இப்படி இருக்கும்போது என்னவென்று அவனிடம் கேட்பது என்பது புரியாமல்,

“சாப்பிட்டீங்களா?”

அந்தக் கேள்வி அவனை ஏதோ ஒரு வகையில் தாலாட்டியது. வெற்றியோ, செந்திலோ தன்மேல் அன்பு வைத்திருந்தாலும் அவனது உணவைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. ஆண்களுக்கு அது ஒரு பெரிய விஷயமில்லை. தெய்வா வீட்டிற்குச் செல்லும்போது கண்டிப்பாக வயிற்றை நிறைத்துத்தான் அனுப்புவாள். ஆனால், சாப்பிட்டுவிட்டாயா என்று யாரும் கேட்டதில்லை அதுவரை. நந்தினி கேட்டது அவனுக்கு உண்மையில் சந்தோஷமாக இருந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளவில்லை.

“ம்ம்ம் ஆச்சும்மா… நீ சாப்பிட்டியா?”

உண்மையில் அப்போது உண்டிருக்கவில்லை. விழுப்புரத்தை நெருங்கிக் கொண்டிருந்தவன் மேம்பால நைட் கடையில் சிக்கன் குருமாவோடு புரோட்டாவை ஒரு பிடி பிடிக்க வேண்டுமென்று சென்று கொண்டிருந்தான்.

“ம்ம்ம் ஆச்சு…”

“அப்புறம்…”

“உங்களைப் பார்க்கணும்…” வேறு சொல்லத் தோன்றாமல் நேரடியாகக் கேட்டிருந்தாள்!

“எதுக்கு?”

“எதுக்குன்னா? நான் உங்க வைஃப்… அந்த ஞாபகம் இருக்கா மிஸ்டர் சக்திவேல் உங்களுக்கு?”

“நல்லாவே இருக்கு மிசஸ் சக்திவேல்… அதுக்காக இப்போ என்ன பண்ணச் சொல்றீங்க?”

“எதுவும் பண்ணச் சொல்லலை… சும்மா பார்க்கணும்னுதான் சொல்றேன்…” அவளது நக்கல் புரியாதவனா சக்தி?

“சும்மா பார்க்கணுமோ சுமந்துக்கிட்டுப் பார்க்கணுமோ? நான் வெட்டியா உட்கார்ந்துட்டு இல்லை. இப்போ ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு. இப்போதைக்கு கரூர் வர்ற ஐடியா இல்லை எனக்கு…”

கறாராக முடித்தவனை நினைக்கும்போது கோபத்தோடு எரிச்சலும் போட்டி போட்டது.

“என் வேலையை நான் சரியாத்தான் செஞ்சுட்டு இருக்கேன்… நீங்கதான் என்கிட்டே ஒண்ணுமே சொல்றதில்லை, பேசறதும் இல்லை. இன்னைக்கு செந்தில் சொல்லித்தான் தெரியும் நீங்க கரூர்ல இல்லைன்னு. அப்புறம்…” பொரிந்துகொண்டிருந்தவள் சற்று இடைவெளி விட்டு, “புதுசா லாரி வாங்கியிருக்கீங்கன்னு… ஏன் சொல்லலை?”

“உன்கிட்ட எதுக்கும்மா சொல்லணும்? எனக்கு எத்தனையோ வேலை இருக்கும். வேலைக்காக ஏதாவது வாங்க வேண்டியிருக்கும். அத்தனையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா?”

அவனுக்குப் புரிபடவே இல்லை, எதற்காகச் சொல்ல வேண்டுமென்று. இதுவரை சொல்வதற்கு யாருமில்லாமல் பழகிக்கொண்டவன், அதுவே இப்போதும் தொடர்கிறது என்பதை அவனையும் அறியாமல் தொடர்ந்து கொண்டிருந்தான். அதைக் கேட்ட நந்தினிக்கு மனம் வலித்தது. ஆனாலும் அவனது இயல்பையும் சூழ்நிலையையும் கவனத்தில் கொண்டு அவனது வார்த்தைகளை ஜீரணிக்க முயன்றாள்.

“நான் உங்க வைஃப்ன்னு ஒவ்வொரு தடவையும் உங்களுக்கு நியாபகப்படுத்தணும் போல இருக்கு…” கம்மிய குரலில் அவள் கூற,

“அப்படீன்னா என்கிட்ட நீ சொன்னதெல்லாம் பொய்யா?” தலையுமில்லாமல் வாலுமில்லாமல் அவன் கேட்ட கேள்வி அவளுக்குப் புரியவில்லை.

“புரியல…”

“எனக்குக் கலெக்டராகணும், அதாகணும், இதாகணும்ன்னு அளந்து விட்டியே… அதெல்லாம் சும்மாவா? படிக்கணும்ன்னு அழுத? இப்போ கல்யாணம் பண்ணிகிட்டா உடனே குடும்பம் நடத்த ஆரம்பிக்கணும்ன்னு நினைக்கறியா? இதுதான் உன்னோட தேவையா நந்தினி?” நின்று நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாகக் கூற, நந்தினி கண்கள் கலங்க வார்த்தைகளுக்குத் தடுமாறினாள்.

“சக்தி… ஏன் இப்படி…” வார்த்தைகள் வெளியே வராமல் தடுமாறிக் கம்மியது அவளுக்கு.

“பின்ன… அதுதான் உன்னோட தேவையா இருந்தா உங்க அப்பா பார்த்த பையனையே கட்டி இருந்திருக்கலாம்ல… எந்தப் பிரச்சினையும் இல்லாம…”

“நீங்க சொன்ன மாதிரி எல்லாம் நான் நினைக்கவே இல்லை… இப்படியெல்லாம் தப்புத் தப்பாப் பேசாதீங்க?”

“நான் தப்பாப் பேசல… உன் நினைப்புத் தப்பா இருக்கு… படிக்கிற வயசுல இதெல்லாம் தேவையே கிடையாது…”

“என் நினைப்புத் தப்பால்லாம் இல்லை. உங்களை லவ் பண்றேன்… அதுக்காக என்னோட லட்சியத்தை விட்டுக் கொடுத்துடுவேன்னு எல்லாம் நினைக்கத் தேவையில்லை. ஆனா உங்களுக்கு லவ்ன்னா என்னன்னே தெரியல… காட்டுமிராண்டித்தனமா உங்க நினைப்புத்தான் தப்பாப் போகுது…”

“ஆமா காட்டுமிராண்டிதான்… தெரிஞ்சுதானே கட்டிகிட்ட?”

அவன் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் மௌனமாகினாள். அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. சக்திவேலுக்கு அவள் தனது மனைவி என்ற நினைவு இருந்தாலும், அவளை அந்த நிலையில் வைத்துப் பார்க்கவும் முடியவில்லை; அவளைக் காதலிக்கவும் முயற்சிக்கவில்லை. ‘காதலென்ன கடையில் வாங்குகின்ற பொருளா? நினைத்தவுடன் வாங்கிக்கொள்ள’ என்று நினைத்துக்கொண்டாள்.

“சாரி சக்தி… சத்தியமா உங்ககிட்ட பேசற ஆசைலதான் உங்களுக்கு போன் பண்ணினேன். வேற எந்த எண்ணமும் இல்லை…” என்று படபடத்தவள், சற்று இடைவெளி விட்டு, “உடம்பைப் பார்த்துக்கங்க… நேரத்துக்குச் சாப்பிடுங்க… நேரத்துக்குத் தூங்குங்க… வெச்சிடுறேன்… இனிமே நான் உங்களுக்குக் கூப்பிடமாட்டேன்…” என்று கைபேசியை அணைத்து வைத்தாள்.

அவள் வைத்துவிட்டாலும் கைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தான் சக்திவேல். சற்று அதிகமாகத்தான் பேசிவிட்டேனோ? அவளும் யாருமில்லாமல் தான் இருக்கிறாள் என்பது அப்போதுதான் அவனுக்கும் உரைத்தது. ‘அந்தச் சிறு பெண்ணிடம் போய் உன்னுடைய கோபத்தைக் காட்டுவதா?’ என்று அவனது மனம் அவனைச் சாட, அவளது எண்ணிற்கு அழைத்தான். அணைத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வர, மனமே இல்லாமல் லாரியைக் கிளப்பினான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பதின்மூன்று

அடுத்த நாள் எழுந்தபோதே தலைவலித்தது நந்தினிக்கு. சோர்வாக இருந்தது. இரவு அவளது கணவனிடம் செய்த தர்க்கமும் அவனது வார்த்தைகளும் அவளை வெகுவாகக் காயப்படுத்தியிருக்க, இனி அவனைத் தானாக அழைக்கப்போவதில்லை என்ற அவளது தீர்மானமும் அவளது கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்தது.அன்று முழுநாளும் பரிசோதனைக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்