arrow_back
தித்திக்குதே அத்தியாயம் பதினொன்று
தித்திக்குதே chevron_right பகுதி 11 / 26

அத்தியாயம் பதினொன்று

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கோயிலிலிருந்து வெளியே வந்த சக்திக்கு மனதில் ஏதோ உறுத்தல். அவனது புத்தி ஏதோ சரியில்லை என்று கூறியது. பெரும்பாலான நேரங்களில் அவனது புத்தி காட்டும் பாதை சரியாக இருக்கும். ஒருமுறை நிதானமாகச் சுற்றியும் பார்த்தவன், செருப்பை அணிவதற்காகக் குனிய, பக்கத்தில் சிலீர் என்றது!

அவன்மேல் விழுந்திருக்க வேண்டிய அரிவாள் வெட்டு தவறி, பக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆக்டிவாவின்மேல் விழ, சுதாரித்த சக்தி சட்டெனத் திரும்பிப் பார்த்தான். பக்கத்தில் மூவர் கொலைவெறி கண்களில் மின்ன, கையில் அரிவாளோடு நின்று கொண்டிருந்தனர்.

“ஏன்டா… அநாதை பயலே… கல்யாணம் பண்ணிட்டா மட்டும் விட்டுடுவோம்ன்னு நினைச்சியா?” ஒருவன் வெறியோடு முன்னே வர, அவனை எதிர்கொள்ள சக்தி தயாரானான். நந்தினியின் முகத்தில் கலவரம்.

பூக்கடையில் நின்றிருந்த வெற்றி திரும்பி அந்தச் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியாக, உடன் நின்றிருந்த அவர்களது நண்பர்களும் சில கணங்கள் அதிர்ந்து மீண்டனர். திருமணம் முடித்த கோயிலுக்கு வெளியிலேயே இதை எதிர்பாராததால், முதலில் என்ன செய்வது என்று புரியவில்லை. முதலில் சுதாரித்தது சக்திவேல்தான். வேஷ்டியை காலால் மேலே உதைத்து மடித்துக் கட்டியவன்,

“ஏன்டா மூணு பேரா அருவாள தூக்கிட்டு வந்துட்டா பயந்துருவேனா? இன்னும் எத்தனை பேர் வேணும்னா வாங்கடா… பார்த்துடலாம்…” என்று அவர்களை நோக்கி முன்னேற, சக்தியை நோக்கி அரிவாளை வீசினான் இன்னொருவன். அதில் லாவகமாக குனிந்தவன், அவனது கையை மடக்கி குத்து விட, மடங்கிச் சரிந்தான் அவன். அவன் கையிலிருந்த அரிவாள் இப்போது சக்தியின் கையில்.

ரௌத்திரமாக அந்த இருவரையும் நோக்கி வேகமாக அரிவாளை வீச, அந்த இருவரும் சற்றுப் பின்வாங்கினர். அதற்குள் அதிர்ச்சியிலிருந்து மீண்ட வெற்றியும் மற்றவர்களும் அந்த மூவரையும் சூழ்ந்துகொள்ள, தாங்கள் பிடிபட்டதை உணர்ந்தனர். கோபத்தோடு முன்னே வந்த வெற்றி,

“ஏன்டா நாயிங்களா… எவ்வளவு தைரியம் இருந்தா பட்டப்பகல்ல எல்லாருக்கும் முன்னாடியே சக்தியை வெட்ட வருவீங்க? உங்களை முதுகுக்கு பின்னாடி வேலை பார்க்கற பேடிபசங்கன்னு எங்களையும் நினைச்சுட்டீங்களாடா…” ஆவேசமாகச் சத்தமிட,

“பேடி பையனில்லாம வேற என்னடா… பிச்சைக்கார நாயி… எங்க வீட்டுப் பொண்ணைக் கெடுத்து இப்போ கல்யாணமும் கட்டியிருக்கவன நாங்க சும்மாவா விடுவோம்? இங்க பாரு வெற்றி… உனக்கும் எங்களுக்கும் பகையில்லை. இவனை எங்ககிட்ட விட்டுடு… இது எங்க மானம் மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம்… எத்தனை பேரை வேணும்னாலும் போட்டுத் தள்ளத் தயங்க மாட்டோம்…”

அவர்கள் சக்தியைக் கண்டபடி பேச ஆரம்பிக்க, நந்தினி அவள் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தை உணர ஆரம்பித்து அதிர்ந்தாள். சக்திவேல் திரும்பி அவளை வெறுமையாகப் பார்த்துவிட்டு, அவர்களை நோக்கித் திரும்பினான்.

“டேய் நிறுத்துங்கடா… நீங்க மட்டும்தான் மானம் மரியாதை பார்க்கறவங்க, மத்தவங்களுக்கு எல்லாம் இல்லையா? என்னங்கடா ஓவரா சவுண்டு விட்டுட்டு இருக்கீங்க? இங்கிருந்து மூணு பேரும் ஊரு போய் சேர மாட்டீங்க… எவனா இருந்தாலும் வாங்கடா… பார்த்துடலாம்…” கையில் அரிவாளோடு முன்னேற, வெற்றி அவசரமாக அவனைத் தடுத்தான்.

இவன் கோபத்தில் கண்மண் தெரியாமல் என்ன வேண்டுமானாலும் செய்துவிடக் கூடியவன். திருமணமான அன்றே இந்த ரசாபாசம் தேவையா? தனது நண்பர்களுக்குச் சமிஞ்சை செய்ய, மூவரையும் வளைத்துப் பிடித்தனர்.

“டேய் மாப்பிள்ளை… அரிவாள கீழே போடுடா… கீழே போடுன்னு சொல்றேன்ல…” என்று வலுக்கட்டாயமாக அவனிடமிருந்து பிடுங்கிக் கீழே போட்டுவிட்டு, “இவனுங்களை போலீஸ் ஸ்டேஷன் கூட்டிக்கிட்டுப் போயிடலாம்டா… அங்க வெச்சுப் பார்த்துக்கலாம்…” என்றவாறே ஒரு வேனில் மூவரையும் தள்ளி மற்றவர்களும் ஏறிக்கொள்ள, இன்னொரு வேனில் நந்தினி, தேவசேனாவோடு சக்திவேல் ஏறினான்.

கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்தவனது முகம் கல்போல இறுகியிருக்க, நிமிர்ந்து அவனைப் பார்க்கவும் அச்சப்பட்டுத் தலைகுனிந்திருந்தாள் நந்தினி. அருகிலிருந்த காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.

“நீங்க ரெண்டு பேரும் உள்ள வர வேண்டாம்…” என்று நந்தினியையும் தேவசேனாவையும் பார்த்துப் பொதுவாகக் கூறிவிட்டு, உள்ளுக்குள் சென்றான். கம்ப்ளைன்ட் கொடுத்துவிட்டு, மூவரிடமும் தனக்கோ நந்தினிக்கோ என்ன நேர்ந்தாலும் அவர்களே பொறுப்பு என்று எழுதி வாங்கி, அதைக்காவல் ஆய்வாளரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியே வந்தனர். தங்களுடன் வந்த நண்பர்களுக்கு விடை கொடுத்துவிட்டு, ஒரே வேனில் ஏறிய வெற்றியும் சக்தியும் வீடு வந்து சேர்ந்தனர்.

காலையில் இருந்த மகிழ்ச்சியான மனநிலை மாறி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் வீடு வந்து சேர, தேவசேனா அவசரமாக உள்ளே சென்று ஆலம் கரைத்து வந்தாள். இருவரையும் நிற்க வைத்து ஆலம் சுற்றி வெற்றி உள்ளே அழைத்துச் செல்ல, மௌனமாக அமர்ந்தான் சக்திவேல்.

“ஏன் சக்தி… ஏன் ஒரு மாதிரியா இருக்க?” தேவசேனா பால் பழத்தை இருவருக்கும் கொடுத்துக்கொண்டே வாஞ்சையாகக் கேட்க,

“ஒன்னும் இல்லை தெய்வாக்கா…” என்று அவன் கூறினாலும், அவனது மனதில் ஓடும் எண்ணங்களை வெற்றியோடு தெய்வாவும் அறியாமலில்லை. அதுவரையிலும் நந்தினியைத் திரும்பி ஒரு பார்வை கூடப் பார்க்காமல் இருக்கிறான் என்பதையும் அவள் உணராமல் இல்லை. அவனது கோபத்திற்கான காரணங்கள் நியாயமானவை என்று நந்தினிக்கும் புரிந்துதானிருந்தது.

தேவசேனா கொடுத்த பால் டம்ளரை அவளுக்கும் தராமல் அவனும் குடிக்காமல் யோசனையிலேயே இருக்க, நந்தினி ஓரப்பார்வையால் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“அக்கா இந்தச் சம்பிரதாயம் எல்லாம் வேணாம். எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ இவங்க காலேஜ்க்குப் போய் பேசணும்… நான் கிளம்பறேன்கா…” என்று பாலைக் குடிக்காமல் வைத்துவிட்டுக் கிளம்ப,

“டேய் சக்தி… பால் பழமாச்சும் முடிச்சுட்டுப் போ… அதுதான் முறை…” தெய்வா பதட்டமாகக் கூற,

“நடந்தது எதுவுமே முறை இல்லையாம். இதுல மட்டும் என்னக்கா முறை வேண்டியிருக்கு?” கடுப்பாகத் தெய்வாவிடம் கூறிவிட்டு, நந்தினியை நோக்கி,

“உன்னோட யூனிபார்ம் சேலை காஞ்சு போச்சுன்னா அதைச் சேஞ்ச் பண்ணிட்டு கிளம்பு. காலேஜுக்கு டைம் ஆகுது…”

நேற்றைய தினம் முழுக்க யூனிபார்ம் சேலையிலேயே இருந்திருந்தாள். காலையில் கட்டிக்கொண்ட கூரைப் புடவையைத் தவிர்த்து அவளிடம் இருந்தது அந்தவொரு புடவைதான். நந்தினி மௌனமாகத் தலையாட்டிவிட்டு உள்ளே செல்ல, தெய்வா திட்டத் துவங்கினாள்.

“ஏன் சக்தி… இப்போதான் கல்யாணமே ஆகியிருக்கு. ஒரு சடங்குமே வைக்கலை… அதுக்குள்ளே இப்படி அந்தப் பொண்ணைக் காலேஜுக்கு விரட்டற? பாவம்டா…”

“அக்கா… யாருக்கும் பாவம் பார்க்கற நிலைமையில நான் இல்லை. எனக்கு ஒண்டக் கூட வீடு இல்லாத நிலைமையில இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கறதே நிஜமா அசிங்கமா இருக்கு. இதுல சடங்கு அது இதுன்னு இன்னும் என்னை அசிங்கப்படுத்தாதீங்க…”

அவனது நிலைமை அவனுக்கு எவ்வளவு சங்கடத்தைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்ட தேவசேனா, அவனை மேலும் கடுப்பில் ஆழ்த்த விரும்பவில்லை. மௌனமாகச் சமையலறை நோக்கிப் போனாள்.

“சரிங்க சாரே… இன்னைக்கு மத்தியானமாச்சும் நந்தினியை இங்க சாப்பிட வெச்சுட்டு கூட்டிக்கிட்டுப் போங்க. உங்க பிடிவாதத்தை விட்டுடுவீங்களா?” குத்தலாகக் கூறிவிட்டுச் சென்ற தேவசேனாவைப் பார்த்துச் சிரித்தான்.

“அக்கா… இப்போ போய் காலேஜ்ல பேசிட்டு லஞ்சுக்கு வந்திடுறேன்…” என்று சமாதான உடன்படிக்கையை நீட்ட, வெற்றி சிரித்துக்கொண்டார்.

“அக்காவும் தம்பியும் எதையோ பேசிச் சமாதானத்துக்கு வாங்க…” என்று மீண்டும் அவர் சிரிக்க, அவரோடு சக்தியும் சேர்ந்துகொண்டான்.

“சரிங்கண்ணா… கிளம்பறேன்…” என்று அவன் கிளம்ப, அவனோடு கல்லூரி சீருடையில் நந்தினி, புதுத் தாலியின் ஈரம் காயாமல் குங்குமம் கலையாமல் அவனுடன் செல்ல, அதைப் பார்த்த வெற்றியின் மனமும் தெய்வாவின் மனமும் கனத்தது.

***

“ரொம்ப தேங்க்ஸ் மேடம்… இந்தப் பிரச்சினையை நீங்க எப்படி எடுத்துக்குவீங்கன்னு ரொம்ப யோசனையாவே இருந்தது… ஆனா இப்போ சந்தோஷமா இருக்கு…” நிம்மதி அடைந்த மனதுடன் சக்திவேல் பிரின்சிபாலிடம் நன்றி உரைத்தான்.

“இதுல என்ன இருக்கு சக்திவேல்… உங்களை நான் எவ்வளவு வருஷமா பார்த்துட்டு வரேன்… உங்க ஜென்யுனிட்டி எனக்குத் தெரியும். நந்தினியை ஸ்டூடண்ட்டா, ஒரு ரேங்க் ஹோல்டரா எனக்கு ரொம்பப் பிடிக்கும். யூ போத் டிசெர்வ் இட் சக்திவேல்…” அவரும் மனம் திறந்து கூற, புன்னகைத்த சக்திவேல்,

“தேங்க்ஸ் மேடம்…” என்று மீண்டும் நன்றி கூற, நந்தினியிடம் திரும்பிய பிரின்சிபால்,

“நந்தினி… திடீர்ன்னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நீ நின்றது எனக்கு ஷாக்காதான் இருந்தது. ஆனா சக்தி ஏதோ டைட் கார்னர்லதான் இப்படிப் பண்ணிருக்கார்ன்னு கண்டிப்பா நம்பறேன். உன்னை ஹாஸ்டலுக்கு ரிகமெண்ட் செய்றேன் நந்தினி… ஆனா கோல்ட் மெடல் வாங்க வேண்டியது உன் பொறுப்பு… ஓகேவா?” அன்போடு கண்டிப்பும் சேர்த்துக் கூறிய பிரின்சிபாலை நன்றியுடன் பார்த்தாள் நந்தினி.

“கண்டிப்பா மேம்…”

அவரிடம் பேசிவிட்டு வெளியே வரும் வரை நந்தினியைத் திரும்பியும் பார்க்கவில்லை சக்திவேல். அவளாக அவனிடம் பேசவும் தயக்கமாக இருந்தது. காலையில் நடந்த சம்பவமும், அதில் அவளது உறவினர்கள் வெறியோடு நடந்துகொண்ட முறையும், கூறிய முறையற்ற வார்த்தைகளும் அவளை அவனிடமிருந்து சற்றுத் தள்ளி நிற்க வைத்தது குற்ற உணர்வில்.

மௌனமாகச் கல்லூரியின் உள்சாலையைக் கடந்து கொண்டிருந்த சக்திவேலின் மனதில் கோபம் மிகுந்திருந்தது. இதே கல்லூரியில் கௌரவமாக இத்தனை வருடங்களைக் கடந்து வந்து, இப்போது படிக்கின்ற மாணவியை அவசர திருமணம் செய்தவன் என்கிற பெயரைச் சுமப்பது அவனது மனதை அழுத்தியது.

கல்லூரி பாடவேளை என்பதால் மாணவிகள் நடமாட்டம் இல்லையென்றாலும், அவ்வப்போது கடந்து செல்பவர்களின் கூரிய பார்வையைத் தவிர்க்க, பெரும்பாலும் தலையை நிமிர்ந்து பார்த்திராமல் சென்று கொண்டிருந்தவனை ஓரக்கண்ணால் அவ்வப்போது பார்வையிட்டு வந்த நந்தினிக்கும் அவனை நினைத்துச் சிறிது அச்சம் இருந்தாலும், அப்படி கடந்து செல்பவர்களை நேர்கொண்டு நிமிர்ந்து எதிர்கொண்டாள்!

அவளுக்குச் சிறிதும் தயக்கமில்லை. எது ‘இவன் என் கணவன்’ என்ற கர்வத்தைக் கொடுத்தது என்பதை அவளே அறியவில்லை. ஆனாலும் அவனுடன் இணைந்து நடந்து செல்வது என்பது பெரும் சாதனையாகப் பட்டது அந்தப் பேதைக்கு… அவன் மனம் அறியாமல்!

“சரி… வேறென்ன வேணும்?” இறுகிய கல்போல முகத்தை வைத்துக்கொண்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்தபடி சக்திவேல் கேட்டபோது, நந்தினியின் மனதில் பழைய குறும்பு தலைதூக்கியது.

“எனக்கு ஒரே ஒரு உம்மா போதும்…” என்று கூறிப்பார்க்கலாமா என்று மனதில் நினைக்கும்போதே கிளுக் என்ற சிரிப்பு அவளிடமிருந்து எட்டிப்பார்க்க, அவளைப் பொசுக்கி விடுவது போன்று பார்த்து வைத்தான் சக்திவேல். அவசரமாகத் தலையை மீண்டும் குனிந்துகொண்ட நந்தினி,

“ஒன்னும் வேண்டாம்…” வார்த்தைகளுக்கு வலிக்குமோ என்ற குரலில் கூறியவளை, இன்னமும் முறைத்தான்.

“இருக்கறது ஒரே ஒரு சேலை… அதை வெச்சே மூன்று மாசம் ஓட்டிடுவியா ஹாஸ்டல்ல? வேற ஒரு மண்ணும் வேணாம்ல…” கடுப்பாக அவன் கேட்டபோதுதான் அவன் எதைக்கூறுகிறான் என்பதே விளங்கியது நந்தினிக்கு. ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து உதட்டைச் சுளித்துக்கொண்டாள்.

“ச்சே… இந்த ஹிட்லர் புத்தி தெரிஞ்சும் இப்படி ஏமாந்துட்டு இருக்கேனே… பக்கி… பக்கி… நந்து இப்படியா பக்கியா இருப்ப?” தன்னைத்தானே திட்டிக்கொண்டு அவனை நிமிர்ந்து பார்க்க, அங்கு வெப்பம் நூறு டிகிரியைத் தாண்டிக் கொண்டிருந்தது.

“இங்க என்ன பொழப்பு இல்லாம இருக்கேன்னு நினைச்சியா? ஹாஸ்டல்ல தங்க என்ன வேணுமோ அதை வாங்கிக்க. புக்ஸ் ஏதாவது வேணும்னாலும் சொல்லு. அதை விட்டுட்டு இப்படி கேனத்தனமா உக்கார்ந்துட்டு இருந்த, எனக்கு இருக்கற கோபத்துல கன்னம் பழுத்துடும்…” கறாராகக் கூறியவனைக் கண்டு மனதில் சிறிது பயம் வந்தாலும், கூடவே அவளது மனசாட்சி குரல் கொடுத்தது.

“இதுக்கெல்லாம் பயந்தா ஹிட்லரை எப்படி நந்து வழிக்குக் கொண்டு வருவ? பீ பிரேவ் நந்து… பீ பிரேவ்…” தோளைத் தட்டிக்கொடுத்த மனசாட்சியின் அறிவுரையை ஏற்ற நந்தினி,

“இந்த ஒரு செட் யூனிபார்ம் போதும்… நான் மேனேஜ் பண்ணிக்கறேன். அப்புறம்… ரெண்டு செட் டிரஸ்… ஒன்னு சுடிதார் இன்னொன்னு சேலை போதும். அப்புறம் வாளி, மக், மத்ததெல்லாம் என் ஃபிரண்ட்ஸ் கூட ஷேர் பண்ணிக்கறேன்…” பொறுப்பாகக் கூறுவதாக நினைத்து அவள் கூற, அதற்கும் அங்கு அனல் பறக்க, ஒன்றும் புரியாமல் பார்த்தாள் நந்தினி.

“என்ன வேணும்னாலும் வாங்கிக்க. என் பொண்டாட்டி யார்க்கிட்டவும் எதுக்காகவும் நிற்கத் தேவையில்லை…” என்று அவன் கூறியபோது லட்சம் பூக்கள் மனதில் பூக்க மலர்ந்தவள், அடுத்து அவன் கடித்துக் குதறி வைத்ததைக் கேட்டபோது முழுவதுமாக வாடினாள்.

“ஏன் என்னால வாங்கித் தர முடியாதுன்னு நினைச்சுகிட்டு இப்படிச் சொல்றியா? என்னோட சம்பாத்தியத்துல உனக்கு எதையும் வாங்கித் தர முடியாத பிச்சைக்காரனா உங்க வீட்டாளுங்க வேணும்னா நினைச்சுக்கலாம்… அப்படியொரு நிலைமையில நான் கட்டிகிட்டவளை நிறுத்தமாட்டேன். அப்படியொரு நிலைமையும் எனக்குக் கிடையாது. அந்த நம்பிக்கை உனக்கு இருந்துச்சுன்னா ஒழுங்கா உனக்கு என்னென்ன வேணுமோ அதை வாங்கு…”

கோபமும் குரோதமுமாக அவன் கூறுவதைக் கேட்டபோது அவளுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. வார்த்தைகள் அவளைக் காயப்படுத்த, அவளையும் மீறிக் கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“அப்படியெல்லாம் நான் நினைக்கல…” அவன் கூறுவதை மறுக்கும் துடிப்போடு நந்தினி கூற,

“வேற எப்படி நினைச்சிருந்தாலும் சரி… நீயா எதையாவது நினைச்சுகிட்டு என்னை வெச்சு ப்ளே பண்றதை இதோட விட்டுடு. காலைல ஒவ்வொருத்தனும் பேசினதைக் கேட்டல்ல…” கடுமையாக வந்த மறுமொழி அவளைத் தீவிரமாகக் குத்திக் கிழிக்க, அவனுக்கு அருகில் வந்து அமர்ந்த நந்தினி, அவன் கண்களை நேராகப் பார்த்து,

“நான் உங்களை வெச்சு ப்ளே பண்ண நினைக்கல… நினைக்கவும் மாட்டேன். நான் உங்களை லவ் பண்ணது நிஜம். அதைத்தான் நான் அங்க சொன்னேன்…” வார்த்தைகளை எண்ணி எண்ணிக் கோர்த்து அவன் முன் உதிர்த்தாள்.

“ஹும்ம்ம்… மண்ணாங்கட்டி லவ்வு… லவ்வாம் லவ்வு… கடுப்பேத்தாத! நீ அதுக்கப்புறம் சொன்னதை லவ்வுன்னு எவன் ஒத்துக்குவான்? அட்லீஸ்ட் உனக்கு அதுக்கு அர்த்தமாச்சும் தெரியுமா? சொல்ல வந்துட்டா…” அவனது கோபத்தைக் கொட்டிக்கொண்டிருக்க, நந்தினிக்குள் இருந்த குறும்புப் பெண் எட்டிப்பார்த்தாள்.

இதுவரை குற்ற உணர்ச்சியைத் கொடுத்து வந்த வார்த்தைகள், திருமணம் ஆகிவிட்ட நிலையில் வெட்கத்தைத் தருவிக்க, அவனை வம்பிழுக்கத் தோன்றியது. அவனுக்கு இன்னும் அருகில் அமர்ந்து, தைரியத்தை எல்லாம் சேர்த்து அழைத்துக்கொண்டு, அவனது சட்டை காலரைத் தன் முகத்தை நோக்கிப் பற்றியிழுத்தவள்,

“அர்த்தத்தைச் சொல்லித்தரத்தான் நீங்க இருக்கீங்களே மாமா…” ஹஸ்க்கியான குரலில் அவள் கூற, மிக அருகில் இருந்த அவளது உதடுகளோ ‘என்னை முத்தமிட மாட்டாயா’ என்றழைக்க, திண்டாடிப் போனான் சக்திவேல். இதுவரை அவளிடம் காட்டிய கோபத்தை எல்லாம் அவள் ஒரே வார்த்தையில் சின்னாபின்னப்படுத்த, என்ன செய்வது என்று புரியாமல் அவனுக்குப் புரையேறியது.

“பார்த்துப் பார்த்து…” என்று தலையைத் தட்டியவள், “நான் இங்க இருக்கும்போது வேற யார் மாமா உங்களை நினைக்கறது?” குறும்பாக அவள் கேட்க, அவளிடமிருந்து தனது சட்டை காலரை மென்மையாகப் பிரித்தவன்,

“அடங்கு நந்தினி… என்ன வாய் மறுபடியும் நீண்டுட்டு இருக்கு?” அதுவரையில் உயர்ந்திருந்த சுருதி படிப்படியாகக் குறைந்து கடைசியில் கிசுகிசுப்பானது.

“என் வாய் எப்போதும் போல அப்படியேதான் மாமா இருக்கு… வேணும்னா டெஸ்ட் பண்ணிப் பாருங்க…” அவனைப்போலவே அவளும் கிசுகிசுப்பாகக் கூற,

“உன்னை இவ்வளவு திட்றேன்… கொஞ்சமாவது ஏதாவது சீரியஸ் ரியாக்ஷன் காட்டறியா? உன்னையெல்லாம் பெத்தாங்களா இல்லை செஞ்சாங்களா?”

“அதையும் நீங்களே பார்த்துச் சொல்லுங்க மாமா…”

அவனைத் தன்னால் முடிந்தவரை வம்பிழுக்க, தலையில் அடித்துக்கொண்டு வாகனத்தைக் கிளப்பினான். வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு வெற்றியின் விருந்துண்டுவிட்டு, மாலையில் கல்லூரிக்கு மீண்டும் அழைத்துச் சென்றான்… ஹாஸ்டலில் ஒப்புவிக்க.

கடைசியாக ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று மீண்டும் அவனிடம் பேச்சு கொடுத்தாள் நந்தினி.

“ஹாஸ்டல்லதான் இருக்கணும்ன்னு சொல்லிட்டீங்க… அட்லீஸ்ட் தினமும் பார்க்கவாவது வரட்டா? ப்ளீஸ்…” முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்க, நிர்தாட்சண்யமாக மறுத்தான்.

“முடியாது… நான் இனிமே காலேஜ் ட்ரிப் ஓட்டமாட்டேன். அதனால இங்க வரவும் மாட்டேன்…” கறாராக அவன் சொல்வதைக் கேட்டபோது நந்தினிக்கு ஏமாற்றமாக இருந்தது.

“ஏன்… ஏன் ஓட்ட மாட்டீங்க?” அதே ஏமாற்றத்தோடு அவள் கேட்க.

“இனிமே எந்த முகத்தை வெச்சுட்டு அந்தப் பொண்ணுங்களைப் பார்க்கச் சொல்ற? ‘உங்க பொண்ணை நம்பி அனுப்புங்க’ன்னு ஒவ்வொரு பேரண்ட்ஸ் கிட்டவும் என்னால எப்படிக் கேட்க முடியும்? செந்தில்தான் இனிமே வருவான்… நான் எடுக்கமாட்டேன்…” வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் தாளித்துக் கொண்டிருந்தவனைப் பரிதாப முகத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவள், சக்திவேல் இப்படிக் கூறவும் சட்டென மலர்ந்தாள்.

“நிஜமாவா… இனிமே காலேஜ் ட்ரிப்புக்கு வர மாட்டீங்களா? வாவ்…” அநியாயத்திற்குச் சந்தோஷப்பட்டவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான் சக்திவேல்… இவளுக்கு என்னவாயிற்று என்று!

“ஹப்பா… ‘அவ உங்களை சைட் அடிப்பாளே, இவ உங்களை சைட் அடிப்பாளே’ன்னு கவலை இல்லாம இங்க இருக்கலாம்… தேங்க்ஸ் மச்சி…” கண்ணடித்துவிட்டு நந்தினி போக,

‘அடக்கடவுளே எந்தப் பக்கம் பால் போனாலும் கோல் போட்டுத் தாக்கறாளே… இவளை எப்படித்தான் சமாளிப்பது’ என்று புரியாமல் அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டுப் புறப்பட்டான் சக்திவேல். இருபத்தி நான்கே மணி நேரத்தில் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கையை நினைத்துப் பெருமூச்சுவிட்டபடி வாகனத்தைச் செலுத்தியவனுக்கு, அடுத்து என்ன செய்வது என்பது மிகப்பெரிய கேள்வியாகத் தன் முன் நின்றது.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பன்னிரண்டு

ஹாஸ்டலில் சேர்ந்துவிட்ட நந்தினிக்கு நேரத்தை நெம்பித் தள்ள வேண்டியிருந்தது. பகல் நேரங்களில் பெரும்பாலும் வகுப்பறையிலும் பரிசோதனை கூடத்திலும் நூலகத்திலும் கழிந்தாலும், இரவில் சக்தியின் நினைவு வருவதை அவளால் தவிர்க்க முடியவில்லை.அவன் எங்குத் தங்கியிருப்பான்... என்ன உண்டிருப்பான்... என்று மனம் தவிக்க, ஹாஸ்டல்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்