அத்தியாயம் பதினைந்து
யாருக்காகவும் நிற்காதது நேரம்… எதற்காகவும் காத்திருக்காதது காலம். நேரமும் காலமும் கடமையைச் செய்ய, நாட்கள் உருண்டோடின. தெய்வா அவளுக்கு வசதிப்படும் போதெல்லாம் கல்லூரி அலுவலக தொலைபேசியில் அழைப்பாள்; அதுவும் இல்லாமல் ஏதாவது ஸ்பெஷல் உணவு செய்தால் வேன் தோழிகளிடம் கொடுத்து விடுவாள்.
பெற்றோரின் ஆதரவும் இல்லாமல் கணவனின் அருகாமையும் இல்லாத பெண்ணுக்கு இந்த ஆதரவாவது இருக்கட்டுமே என்ற அவளது எண்ணம் நந்தினிக்கு புரியவே செய்தது. இது போன்ற நல்ல மனிதர்களைச் சம்பாதித்துள்ளான் தன் கணவன் என்ற பெருமையும் கொண்டது அவளது உள்ளம்.
சக்தி அவ்வப்போது கைபேசியில் அவளது நலம் விசாரிப்பான். அவனது எண்ணமெல்லாம் படிக்கின்ற பெண்ணைத் தொந்தரவு செய்யக் கூடாது என்றிருக்க, நந்தினிக்கோ புத்தகத்தை மூடி வைத்து விட்டால் சக்திவேலின் நினைவு படுத்தியெடுத்தது. நந்தினியின் உணர்வுகள் சக்திக்குப் புரியவில்லை; சக்தியின் மனமோ நந்தினிக்குத் தெரியவில்லை.
அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் எனச் சபரி மலைக்குப் போகும் போதும் அவளை அழைக்காமல் சென்று விட, நந்தினிக்கு அது பெரும் அதிர்வாக இருந்தது. மலைக்குச் செல்பவர்களது மனைவி பாத பூஜை செய்து அனுப்பி வைப்பது என்பது ஒரு உரிமையாகக் கருதப்பட்டு இருக்க, சக்தியோ அவளிடம் வெறும் செய்தியாக மட்டும் கூறிச் சென்றது நந்தினியின் மனதை வருத்தியது.
ஒரு விஷயத்தில் மட்டும் உறுதியாக இருந்தாள் நந்தினி. கண்டிப்பாகத் தன்னைத் தவிக்க விட்டுவிட மாட்டான் என்பதில், மனைவியாக ஏற்று கொள்கிறானோ இல்லையோ, கண்டிப்பாகத் துணையாக இருப்பான் என்பதில் மட்டும் அவளுக்குச் சந்தேகம் இருக்கவில்லை. எப்படியும் அவனை மாற்றி விட முடியும் என்பதிலும் உறுதியாகவே இருந்தாள்.
நடுவில் வளர்மதி அழைத்திருந்தாள்.
“என்னடி இப்படி பண்ணிட்ட?”
“ஏன் வளரு?”
“சக்தி அண்ணனை… சித்ரா லவ் பண்ணதுக்கே அவளுக்கு அவ்வளவு அட்வைஸ் பண்ண நீ, எப்படிடி?”
“வளரு, உனக்காவது நம்பிக்கை இருக்கா நான் நல்லா இருப்பேன்னு?” குரல் நெகிழ நந்தினி கேட்க, வளர்மதியின் கண்கள் கலங்கி விட்டன.
“ஏன்டி அப்படிச் சொல்ற? நீ எப்படி இப்படிச் செய்தன்னு தான் எனக்குக் கேள்வியே தவிர, அண்ணனை கொஞ்சம் கூடக் குறைவாகச் சொல்ல முடியாதே நந்து. அவரோட நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா வருவார்டி. நீ எதுக்கும் கவலைப்படாத.” தோழி தேற்றிய விதத்தில் நந்தினியின் கண்கள் ஊற்றெடுக்கத் துவங்கின; கைகளில் வைத்திருந்த கைப்பேசியையும் மீறி அவளது கண்ணீர் வளர்மதிக்கு எட்டியது.
“ஏன் அழற நந்து?”
“வளரு, நம்ம சித்ரா என்னை ரொம்ப மோசமா நினைச்சுட்டு இருக்காடி. என்னால அவ கிட்ட பேசவே முடியல.” அழுது கொண்டே அவள் பேசியதை எல்லாம் வளர்மதியிடம் கூறினாள்.
“விடு நந்து. யாருக்கு எங்கேன்னு கடவுள் தான் தீர்மானம் செய்யணும்; நம்ம கைல இல்ல. அவளுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு நந்து. மாப்பிள்ளை சென்னைல ஐடில தான் இருக்காப்லயாம்.” அவளுக்குத் தெரிந்த தகவலை நந்தினியிடம் கூறினாள் வளர்மதி.
“அவ கண்டிப்பா நல்லா இருக்கணும் வளரு.”
பெருந்தன்மையாக நந்தினி கூறியதைக் கேட்ட வளர்மதிக்குப் புன்னகை அரும்பியது.
“இப்போதான் அவ அப்படிப் பேசுனா, இப்படிப் பேசினான்னு அழுதுட்டு… இப்போ இப்படி ஒரு வசனமா? உனக்கெல்லாம் செண்டிமெண்டல் குயின்னு பட்டம் கொடுக்கலாம்டி!” வளர்மதி நந்தினியை ஓட்டினாள்.
“அவ நல்லா இருந்தாத்தான் என் புருஷனைப் பற்றி நினைக்க மாட்டா வளரு. அதை என்னால டைஜஸ்ட் பண்ண முடியாது. சக்தியைப் பற்றி நான் மட்டும் தான் நினைக்கணும்.” தீர்மானமாக அவள் கூறியதைக் கேட்ட வளர்மதி திகைத்துச் சிரித்தாள்.
“ஓவர் பொஸசிவ்னஸ் உடம்புக்கு ஆகாது மச்சி!” கூறிவிட்டு அவள் சிரித்தாள்.
நாட்கள் உருண்டோட, அவ்வப்போது அழைக்கும் சக்திவேலின் அழைப்பை ஆர்வமாக எதிர்பார்த்து இருப்பாள் நந்தினி. அதுவும் தினம் அழைப்பான் என்றெல்லாம் சொல்ல முடியாது; வாரம் ஒரு முறை அல்லது இருமுறை என்றிருக்கும். தானாக அவனுக்கு அழைக்கக் கூடாது என்பதையும் அவ்வப்போது நினைவில் வைத்துக் கொள்வாள் நந்தினி.
சக்தி அழைக்கும் போதும் அவளது படிப்பைப் பற்றி மட்டுமே விசாரணை செய்வான். கல்லூரி இறுதித் தேர்வு மற்றும் சிவில் சர்வீஸ் முதல் நிலைத் தேர்வு என இரு வகையான தேர்வுகளுக்குப் படிக்க வேண்டி இருந்ததால் பெரும்பாலான நேரங்களில் புத்தகத்தை விட்டு அசையாமல் படித்து வந்தாள். அதுவே அவளது குழப்பங்களுக்கும் வடிகாலாக இருந்து வந்தது. கல்லூரி இறுதித் தேர்வு அவளைப் பொறுத்தவரை வெகு சுலபமாகத் தோன்றியது; ஆனால் பிரிலிமினரி தேர்வு அவளைப் பெரும் பீதியில் ஆழ்த்தி இருந்தது என்றே சொல்ல வேண்டும்.
அவளது தோழி வாயிலாகப் பிரின்சிபாலின் அனுமதியுடன் லேப்டாப் வந்து சேர்ந்தது நந்தினிக்கு சக்திவேலிடமிருந்து. அன்று இரவு அவன் அழைக்க,
“எதுக்குங்க லேப்டாப் எல்லாம்? அதான் கம்ப்யூட்டர் லேப் இருக்கே, அதை யூஸ் பண்ணிக்குவேனே.” அவனிடம் குறைபட்டாள் அவனது மனைவி.
“இல்லம்மா, உனக்குச் சப்ஜெக்ட் பிரவுஸ் பண்ண யூஸ் ஆகும். அதோட கரண்ட் அஃபேர்ஸ்ல நிறைய விஷயம் கத்துக்கணும். எல்லாத்துக்கும் புக்க டிபெண்ட் பண்ண முடியாதுன்னு இங்க ஸ்டடி சர்க்கிள்ல சொன்னாங்க. எல்லா நேரத்துலயும் லேப நம்ப முடியாதே.” அவன் கூறியதிலிருந்து தனக்காகச் சிரத்தை எடுத்து ஒவ்வொன்றையும் விசாரித்துக் கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது. அவளது மனம் நன்றியில் நனைந்தது.
“ரொம்ப தேங்க்ஸ்ங்க.” மனம் நிறைய நன்றியுரைத்தாலும் ‘இப்போது இந்தச் செலவு தேவையா’ என்று குடும்பத் தலைவியாக யோசித்தாள். சக்தியால் சமாளிக்கக் கூடியதா என்பதும் அவளுக்குத் தெரியவில்லையே.
“இவ்வளவு பணம் போட்டு இதை இப்போ வாங்கணுமா?” என்று அவள் கேட்க,
“இது உனக்குத் தேவை, அதான் வாங்கித் தந்தேன். நீ உன்னோட மண்டைல எதையும் போட்டு குழப்பிக்காம ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பார் நந்தினி. ஓகேவா?” கறாராக அவன் முடித்து விட, அவளால் மேற்கொண்டு எதையும் கேட்க முடியவில்லை.
கல்லூரி இறுதித் தேர்வு அடுத்த வாரத்தில் இருக்க, படிப்பதற்கான விடுமுறையிலும் அவளை அவன் அழைத்துக் கொள்ளவில்லை. அவளுக்கும் எங்குச் சென்று தங்குவது என்பது புரியாத ஒன்றாக இருந்ததால் ஒரே முடிவாகக் கல்லூரியிலேயே இருந்து விட்டாள். ஆனால் இறுதித் தேர்வு முடிந்தவுடன் அப்படி இருக்க முடியாதே! எங்குச் செல்வது? இந்த ஒற்றைக் கேள்வி அவளை அரட்டிக் கொண்டு இருந்தது.
“இன்னும் ஒரு வாரத்துல பைனல் எக்ஸாம் வருது.” தயங்கியபடியே அவள் கூற,
“அப்படியா? ஆல் தி பெஸ்ட் நந்தினி.” சக்தியோ அவளது உணர்வு புரியாமல் வாழ்த்து மட்டும் கூறினான்.
“தேங்க்ஸ். ஆனா எக்ஸாம் நாலு நாள் தான். அதுவும் லீவே விடாம ஷெட்யூல் போட்டிருக்காங்க.”
“ஏன்ம்மா, படிக்க நாள் பத்தாதா?” புரியாமல் சக்தி கேட்ட போது பற்களைக் கடித்துக் கொண்டு கோபத்தை அடக்கிக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது நந்தினிக்கு.
“ம்ம்ம்ம், அதெல்லாம் நாங்க நல்லாத்தான் படிச்சிருக்கோம்,” கடுப்பாக அவள் கூறினாள்.
“அப்புறம் என்ன?”
“எக்ஸாம் முடிஞ்சுட்டா லீவ் விட்டுடுவாங்க சக்தி.” கோபமாக ஆரம்பித்து பரிதாபமாக முடித்தாள் நந்தினி.
“ம்ம்ம்… ஓ, அப்படியா?” என்று சிந்தனையில் ஆழ்ந்தான்.
“ம்ம்ம்ம்.”
“நீ எம்.எஸ்.சி ஜாயின் பண்ணனும் தானே?” சந்தேகமாக அவன் கேட்டான்.
“அதுக்காக இப்போவே மெட்ராஸ் யுனிவர்சிட்டி வாசல்ல போய் உட்கார்ந்துக்கச் சொல்றீங்களா?”
அவள் கோபமாகக் கேட்க நினைத்தாலும் அவளால் கோபப்பட முடியவில்லை. ஒரு வீட்டினைப் பார்க்க முடியாதா? ஒரு சிறிய வீடாக இருந்தாலும் போதுமே. அவனைப் பார்த்துக் கொண்டு அவன் துணையாக இருந்தால் ஏழு கடலையும் தாண்டிவிட முடியுமே! லேப்டாப் வாங்கித் தருகிறான் ஆனால் வீடு பார்க்க முடியாது என்ற நிலை அவளுக்குக் கோபத்தை வரவழைத்தது.
“ஓகே நந்தினி, என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். இதைப்பற்றியே நினைச்சுட்டுப் படிப்பை விட்டுடாதம்மா. இதையெல்லாம் நான் பார்த்துக்குவேன். சரியா?” என்று அவன் கேட்ட போது மனதிற்கு நிறைவாகத்தான் இருந்தது; ஆனால் என்ன செய்வானோ என்ற எண்ணம் தோன்றாமலும் இல்லை.
அடுத்த நாளே தெய்வா அழைத்தாள்.
“நந்து, உனக்கு எக்ஸாம் முடியுதாமே?”
“ஆமா அண்ணி,” சற்றுச் சோர்வாக அவள் பதில் கூறினாள்.
“ஹை, அப்படீன்னா எக்ஸாம் முடிஞ்சதும் இங்க வாடா.” ஆசையாக அவள் அழைக்க, அழைத்துச் செல்ல வேண்டியவனோ ஒன்றும் கூறாமல் இருந்ததில் அவளது மனது சோர்வடைந்தது. ஆனால் அண்ணியாவது அழைத்தாரே என்ற எண்ணமும் மனதில் ஓடாமலில்லை.
“அவங்க என்ன சொன்னாங்க அண்ணி?” கணகாரியமாக அவன் என்ன சொல்லியிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முயன்றாள்.
“அவன் கிடக்கிறான் விடு நந்து. உன்னைப் பார்க்கணும்னு பசங்க ரெண்டும் ரொம்பப் பிரியப்படறாங்க. இன்னும் ஒன் வீக்ல அவங்களுக்கும் லீவ் வந்துடும். இங்க வாயேன.”
அவரது பாசத்தில் நெக்குருகிப் போனாள் நந்தினி. பிள்ளைகள் இருவரும் ஊட்டியில் படித்துக் கொண்டிருந்தனர். அதனால் திருமணம் நடக்கும் சமயத்தில் அவர்கள் இருவரும் அங்கு இல்லையென்பதை முன்பே தெய்வா கூறியிருந்தாள்.
“அவங்க என்ன சொல்றாங்களோ அப்படிச் செய்துக்கறேன் அண்ணி. அவங்க அழைச்சுட்டு வந்தா கண்டிப்பா வந்துடறேன்,” என்று கூறி முடித்தாள்.
“அய்யோ என்ன நந்து இது? என் தம்பியா இருந்தாலும் உனக்கு ஒன்னு சொல்லித் தர்றேன், நினைப்புல வெச்சுக்கோ. நாம சொல்றதைத்தான் நம்ம வீட்டுக்காரங்க கேட்கணும்; அவங்க சொல்றதை நாம கேட்கற மாதிரி ஆக்ட் கொடுத்துக்கணுமே தவிர இப்படிப் பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிடக் கூடாது. புரியுதா?” நகைச்சுவையாகத் தெய்வா கூறி முடிக்க, நந்தினி வாய் விட்டுச் சிரித்தாள்.
தேர்வுக்குச் செல்வதற்கு முன்பு வாழ்த்துவதற்காகச் சக்தி அழைக்க, அவனிடம் தெய்வா வீட்டிற்கு அழைத்ததைப் பகிர்ந்து கொண்டாள். பதில் பேசாமல் கேட்டுக்கொண்டு ‘கடைசியில் பார்க்கலாம்’ என்று சக்தி முடித்து விட, சிறு மனத் தாங்கலுடனே தேர்வறைக்குச் சென்றாள். அங்கு சென்றதும் அனைத்தும் மறந்துவிடத் தேர்வில் மொத்தமாக ஆழ்ந்தாள்.
திருப்தியாகத் தேர்வுகளை முடித்து விட்டு வந்தவளை அணைத்துக் கொண்டனர் அவளது தோழிகள்.
பிரிவுத்துயரம்!
மூன்று வருடங்களாக ஒன்றாகப் படித்து, ஒன்றாக உணவருந்தி, ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டு, ஒரு கூட்டுக் கிளிகளாக இருந்தவர்கள் அவரவர் ஊரைத் தேடிப் போகும் சோகம். வெற்றிகரமாகக் கல்லூரியின் ஒரு நிலையைத் கடந்துவிட்டோம் என்ற சந்தோஷம் இருந்தாலும், தோழிகளைப் பிரிந்து செல்லும் துக்கம், இனி எங்கு காண்போமோ என்ற ஏக்கம் அனைவரின் கண்களிலும் தெரிந்தது. அந்த ஏக்கம் கண்ணீரை வரவழைக்க, தன்னை அணைத்த தோழிகளை அணைத்துக் கொண்டு அழுதாள், கண்ணீர் வற்றும் வரை!
எத்தனையோ சண்டைகள், எத்தனையோ சந்தோஷங்கள், எத்தனையோ தோழமைகள்! அத்தனையும் இன்றோடு முடிவுக்கு வருவது கொடுமையாகத் தோன்றியது. எவ்வளவு துக்கங்கள் மனதில் இருந்தாலும், வருத்தங்கள் இருந்தாலும், தோழிகளைப் பார்க்கும் போது அத்தனையும் காணாமல் போய்விடும்.
அந்தக் கல்லூரிச் சுவர்கள் தான் எத்தனை எத்தனை அனுபவங்களைக் கண்டிருக்கும்? நட்புகள், விரோதங்கள், ஏக்கங்கள், வெற்றிகள், தோல்விகள் எவ்வளவோ இருக்கலாம். ஆனால் முற்றுப்புள்ளியா காற்புள்ளியா என்று தெரியாத நிலையில்?
அணைத்துக் கொண்டு அழுத தோழிகளுக்கு வீட்டிற்குச் செல்கிறோமே என்ற துக்கம். ஆனால் நந்தினிக்கோ எங்குச் செல்வது என்ற துக்கம்! அவளிடமிருந்த கைபேசியில் சக்தியின் அழைப்பு வருகிறதா என்று பார்த்துச் சலித்துப் போனாள். ஒவ்வொருவராகக் கண்ணீருடன் விடைபெற்றுப் போகும் போது, உள்ளுக்குள் பயப்பந்து உருண்டது.
சக்தியிடமிருந்து வராத அழைப்பு அவளது பயத்தை அதிகப்படுத்த, என்ன செய்வது என்று புரியாமல் தன்னுடைய பொருட்களைக் கட்டிவைக்கத் துவங்கினாள்.
அதிகமாக எதுவும் இல்லாததால் விரைவில் வேலை முடிந்துவிட, அவனுடைய அழைப்புக்காகக் காத்திருக்கத் துவங்கினாள்.





