arrow_back
தித்திக்குதே அத்தியாயம் பதினாறு
தித்திக்குதே chevron_right பகுதி 16 / 26

அத்தியாயம் பதினாறு

visibility 2
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனமான மனதோடு விடுதி வராண்டாவை அளந்து கொண்டிருந்தவள் வெளியே காற்று வாங்க வர, பெரும்பாலான மாணவிகள் கிளம்பியிருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் சுற்றிக்கொண்டிருக்க, வாசலுக்கு வந்தாள்.

சக்திவேல் அமர்ந்திருந்தான். நந்தினியின் முகம் தவுசன்ட் வாட்ஸ் பல்பாக மாற, ஆர்வமாக அருகே சென்றாள். அப்ளிகேஷனை கொடுத்தபோது வந்தது; இப்போதுதான் பார்க்கிறாள். சற்றுச் சோர்வாக, உறக்கத்திற்கு கெஞ்சும் விழிகளுடன் அமர்ந்திருந்தவனைப் பார்க்கும் போதே அவளது பெண்ணுள்ளம் தவித்தது.

“சக்தி…” இத்தனை நாட்கள் கழித்துச் சந்திப்பதால் மனம் அவனில் லயிக்க, நேசத்தில் குழைந்து அழைத்தாள். நிமிர்ந்து பார்த்தவன் மெலிதாகப் புன்னகைத்தான். அது அவனுக்கு மிகச் சிறப்பான அழகைத் தந்தது போலத் தோன்றியது நந்தினிக்கு.

“எக்ஸாம் நல்லா பண்ணியா நந்தினி?” அவன் கண்களில் அவள் கண்டது என்ன?

“ம்ம்ம்… நல்லா பண்ணிருக்கேன். நீங்க ஏன் இவ்வளவு லேட்?”

“வேலையெல்லாம் முடிச்சுட்டுத் தானே வரணும்? நீ பேக் பண்ணிட்டியா?”

“ம்ம்ம் ஆச்சு எப்போவே”, என்று கூறிவிட்டு அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

“சரி திங்க்ஸ் எல்லாத்தையும் கொண்டு வர்றியா? கிளம்பிடலாம். எட்டுமணிக்கு ட்ரைன். சாப்பிட்டுட்டு கிளம்பச் சரியா இருக்கும். லக்கேஜ லாரில போட்டு விட்டுடலாம். ஓகேவா?” அவன் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே போக,

“நாம இப்போ எங்க போறோம்?” தெரியாத ஒன்றை கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவள் கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.

“நான் சொன்னா சொன்னதை மட்டும் செய் நந்தினி. கேள்வி மேல கேள்வி கேட்டுட்டு இருக்காத. எனக்குப் பொறுமை சுத்தமா இல்ல.”

இப்போதெல்லாம் அவனது கடினத்தன்மைக்கு ஓரளவு பழகிவிட்டாள். அவனோடு வாக்குவாதம் புரிந்து கொண்டிருக்க அவளிடமும் நேரமிருக்கவில்லை. வார்டனிடம் கூறிவிட்டு அவளது பொருட்களை விடுதி உதவியாளரோடு எடுத்து வர, சக்தி பிரின்சிபாலிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“உங்களுக்கு எவ்வளவு தேங்க் பண்ணாலும் பத்தாது மேடம். நந்தினி படிப்பை இங்க முடிச்சிருக்கான்னா அதுக்கு நீங்க மிகப் பெரிய காரணம்.” சக்தி அவனது மனதைத் திறந்து உணர்ந்து நன்றி கூற, அதற்கு அவரோ,

“நான் தான் உங்களுக்குத் தேங்க் பண்ணனும் சக்தி. நல்லா படிக்கற பொண்ணு, இப்படித் திடீர்ன்னு சிக்கல்ல மாட்டிக்கிச்சேன்னு நினைச்சேன். நல்ல வேளையா நீங்கப் பொறுப்பெடுத்துகிட்டீங்க.” அவரும் அவனிடம் நன்றி உரைக்க, இருவரும் மாற்றி மாற்றி நன்றி உரைத்துக் கொண்டிருப்பதை கண்ட நந்தினிக்குச் சிரிப்பாக இருந்தது.

“நந்தினி என்னோட ஒய்ப் மேடம். எனக்குப் போய் தேங்க் பண்ணிட்டு இருக்காதீங்க”, என்று அவன் சிரிக்க,

“எப்படியோ எங்க காலேஜுக்கு ஒரு ரேன்க் கன்பர்ம் பண்ணிக் கொடுத்துட்டீங்க சக்தி”, என்று அவரும் சிரித்தார். சற்றுத் தள்ளி நின்று கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தினியைப் பார்த்து,

“என்ன நந்தினி, கோல்ட் மெடல் வாங்கிடுவ தானே?” சிரித்துக் கொண்டே கேட்க,

“கண்டிப்பா மேம்!” என்று வேகமாகத் தலையாட்டினாள். அவளைப் புன்னகை பொங்கப் பார்த்துக்கொண்டிருந்தான் அவளது கணவன்.

அவரிடம் விடைபெற்று வெற்றியின் வீட்டை அடைந்தபோது மணி ஆறாகியிருந்தது. தெய்வாவும் வெற்றியும் சந்தோஷம் பொங்க வரவேற்க, அவர்களுடன் ஆழ்ந்து போனாள் நந்தினி.

“மொத்தமா எல்லாத்தையும் மாத்திகிட்டு அங்க போறது நல்லாவா இருக்கு சக்தி? பழகின இடம், மனுஷங்க எல்லாத்தையும் விட்டுட்டு எப்படி சக்தி? இப்போ நீ செய்துட்டு இருக்க மாதிரியே செய்யேன். தெய்வா இருக்கா நந்தினிக்குத் துணையா.” பெண்களை விட்டுத் தனியே வந்து தனிப்பட்ட முறையில் சக்தியைக் கேட்டார் வெற்றி. அவரால் சக்தியின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“எதையுமே நாம பழகிகிட்டா பழக்கமாகிறப் போகுதுண்ணா. இதுவரைக்கும் யாருக்காகவும் நான் யோசிச்சு முடிவெடுத்ததில்லை. இப்போ நந்தினிக்காகச் செய்யறோம்ன்னு நினைக்கும்போது கொஞ்சம் சந்தோஷமாத்தான் இருக்கு”, மென்புன்னகையோடு அவன் கூற, வெற்றி அவனைத் தோளோடு அணைத்துக் கொண்டார்.

“அவனுங்க மறுபடியும் உன்கிட்ட வாலாட்டலையா சக்தி?” யோசனையாக அவர் கேட்க,

“எங்கயாவது பார்க்கும் போதெல்லாம் அந்த ஊர்க்காரனுங்க முறைப்பானுங்க. போலீஸ்கிட்ட எழுதிக் கொடுத்திருக்கானுங்கல்ல? அதனால இதுவரைக்கும் வாலாட்டல. ஆனா அப்படியே இருப்பானுங்கன்னு சொல்ல முடியாதேண்ணா. ஆற விட்டு என்னை அடிக்கலாம்ன்னு அவனுங்க நினைச்சா நந்தினி படிப்பு தானே ஸ்பாயிலாகும்? அதான் கொஞ்ச நாள் படிப்பு முடியற வரைக்கும் டிஸ்டர்பன்ஸ் வேணாம்ன்னு தான்ண்ணா போறதே.”

வெளியே தோட்டத்தை வேடிக்கை பார்த்தபடியே கூறியவனை ஆச்சரியமாகப் பார்த்தார் வெற்றி. மனைவிக்காக எந்தளவு யோசித்துச் செயல்படுத்துகிறான் என்பதைப் பார்க்கும்போது வெற்றியால் சக்தியை மெச்சாமலிருக்க முடியவில்லை. வெற்றி அறிந்தவரை சக்தி நந்தினியை ஆசையாக மணமுடிக்கவில்லைதான், ஆனால் அவன் ஏற்றுக்கொண்ட கடமைக்காக என்றில்லாமல் நந்தினிக்காக ஒவ்வொன்றையும் யோசித்துச் செய்யும் போது வெற்றி மிகவும் நம்பினார், தன் சிஷ்யனின் வாழ்க்கை நன்றாகவே இருக்குமென்று!

இரவு உணவை முடித்து விட்டுத் தேவசேனாவிடமும் வெற்றியிடமும் விடைபெற்று ட்ரைனில் அமர்ந்தபோது நந்தினியின் மனம் பரபரப்பாகவே இருந்தது. தெய்வா ஆயிரம் அறிவுரை கூறித்தான் அனுப்பியிருந்தாள். வழியனுப்பும்போது அவளது கண்ணில் கண்ட கண்ணீர் நந்தினியின் மனதை என்னவோ செய்தது. உறவே இல்லாமல் சக்திக்காக உருக உள்ளங்கள் இருக்க, தன்னுடைய ரத்த உறவுகளின் நிலையும் சாதி வெறியும் அவளது மனதைக் கனக்கச் செய்தது.

அன்றைக்கென்று இரண்டாம் வகுப்பு ஸ்லீப்பர் பெட்டி வெறிச்சோடி இருக்க, இருவர் மட்டுமாக அவர்கள் பகுதியில் இருக்க, முதன் முதலாக அவனோடு கழிக்கப் போகும் அந்த இரவு அவளுக்குள் சிறு மகிழ்ச்சியைப் பூக்க வைத்தது. சக்தியோ ரயிலில் ஏறியவுடன் லுங்கிக்கு மாறிப் புத்தகத்தோடு அமர்ந்தவன் தான். நிமிர்ந்து அவளைப் பார்ப்பேனா என்று அதில் ஆழ்ந்து போயிருந்தான்.

குனிந்து புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தாள். ‘சிவகாமியின் சபதம்’! அவள் அதுவரை பாடப்புத்தகத்தைத் தவிர வேறு எதையும் படித்தது கிடையாது. லைப்ரரி சென்றாலும் பாடப்புத்தகம் மட்டுமே அவளது தேர்வாக இருக்கும்.

“நீங்க நாவல் படிப்பீங்களா?” நந்தினியே பேச்சை ஆரம்பிக்க, புத்தகத்தில் புதைத்த தலை நிமிராமல்,

“ம்ம்ம் படிப்பேன்.”

“வேறென்ன படிப்பீங்க?” அவனை அறிந்துகொள்ளும் பொருட்டு ஆர்வமாக அவள் கேட்க,

“எதுவா இருந்தாலும் படிப்பேன். படிக்கறது எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்”, இன்னமும் தலைநிமிராமல் பதில் கூறிக்கொண்டிருக்க,

“அதுல என்னத்தான் இருக்கு? இப்படிச் சீரியஸா படிக்கறீங்க?” அவள் சற்று கடுப்பாகக் கேட்க, தலை நிமிர்ந்தவன்,

“இது கல்கி எழுதுன ஒரு லவ் ஸ்டோரி. எத்தனைத் தடவை படிச்சாலும் அலுக்கவே அலுக்காது. ஒரு பொண்ணால ஒரு சாம்ராஜ்யமே எப்படி காலியாச்சுன்னு அழகா சொல்லியிருப்பார்”, என்று கூறி நிறுத்தி,

“எப்போவுமே அதுதானே நந்தினி நடக்குது? முன்ன பின்ன யோசிக்காம மடத்தனமா இந்த பொண்ணுங்க பண்ற காரியம் என்ன விளைவை எல்லாம் கொண்டு வருதுன்னு அதுங்களுக்கே தெரிய மாட்டேங்குது”, பொதுவாகக் கூறுவது போல் அவளை இடித்துரைக்க, பேந்த பேந்த விழித்தாள் நந்தினி.

திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போன்ற அவளது பார்வை அவனுக்குள் மென்மையான உணர்வை ஏற்படுத்த,

“என்ன இப்படி முழிக்கற?”

“ஒன்னும் இல்ல”, குரலே வெளிவராமல் அவள் கூற,

“ஏம்மா, நான் ஒன்னு கேட்கலாமா?” கேள்வியாக அவளைப் பார்த்தான் சக்தி. நந்தினி என்னவென்று பார்வையால் அவனைக் கேட்க,

“எப்படியொரு நிமிஷத்துல முடிவு செய்த? உனக்கே அதுச் சரின்னு படுதா? இதே என் இடத்துல வேற யாராவது இருந்து உன்னை ஏமாத்தி இருந்தா என்ன பண்ணியிருப்ப நந்தினி?”

வெகுநாட்களாக அவளே எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்விதான். அவளை அவளே கேட்டுக் கொண்டிருந்ததும் தான். ஆனால் அவளுக்கு விடை தான் தெரியவில்லை. அதை எப்படி அவனிடம் கூறுவது? ஒன்றும் கூறாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,

“சொல்லும்மா, ஏதாவது பதில் பேசு.”

“உங்க இடத்துல இன்னொருத்தனை எல்லாம் வெச்சுப் பார்க்க முடியாது”, கடுப்பாகக் கூறிவிட்டு, சற்று மௌனித்தவள், “அதென்ன அம்மா அம்மான்னு எப்போ பார்த்தாலும்? என் பேர் நந்தினி. அதை உங்ககிட்ட சொல்லிட்டே இருக்கணுமா?” கோபத்தில் பொரிய ஆரம்பிக்க,

“ஏன், அம்மான்னு சொல்றது தப்பா? மரியாதையா சொல்றதும்மா.” மறுபடியும் அம்மாவென விளிக்க, நந்தினிக்குக் கடுப்பு தலைக்கேறியது.

“அப்படியாடா மகனே? சரிடா மகனே. வேறென்னடா மகனே?” வார்த்தைக்கு வார்த்தை ‘டா’வும் ‘மகனே’வும் போட்டுப் பேச, சக்தியின் முகம் சிரிப்பில் மலர்ந்து இருந்தது.

“அட இது கூட நல்லா இருக்கே! இனிமே இப்படியே கூப்பிடும்மா”, மறுபடியும் அவளை விட்டேனா பாரென வம்பிழுக்க, கடுப்பான முகத்தோடு எழுந்த நந்தினி கழுத்தை நெரிக்க வந்தாள்.

“வேணாம். இப்படியே பேசிட்டு இருந்த கண்டிப்பா கொலை பண்ணிடுவேன். உனக்கு நான் பொண்டாட்டின்னு ஞாபகமே வராதா?”

கடுப்பில் அவள் சக்தியை அடிக்க ஆரம்பிக்க, அவளது கோபத்தை ரசித்துக் கொண்டிருந்தவன் அவளது கடைசிக் கேள்வியில், அவள் கேட்ட தோரணையில், மயங்கித்தான் போனான்.

மயக்கம் காதலின் மூலக்கூறாக இருக்கலாம், ஆனால் அஸ்திவாரமாக அமையக்கூடாதே என்பது அவனது நினைவுக்கு வந்தது. ஆனால் அவன் மறந்தது ஒன்று உண்டு. அது என்னவென்றால் அந்த மயக்கம் தான் காதலின் முதல் நிலை என்பதும், தான் அந்த நிலையைத் கடந்து கொண்டிருக்கிறோம் என்பதையும் மறந்து விட்டான்.

வார்த்தைக்கு வார்த்தை அவலுடன் பேசிக்கொண்டிருந்தவன் திடீரென மௌனமாகி விட, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் உறைந்தாள். என்ன பார்வை இது? உயிரை ஊடுருவி உள்ளத்தைக் கிள்ளும் பார்வை. கைகள் நடுங்க அவள் பின்வாங்க, சட்டெனச் சுதாரித்துவிட்ட சக்தி உணர்வுகளைத் துடைத்துக் கொண்டு எழுந்து விட, நந்தினி தலை குனிந்தவாறு அமர்ந்திருந்தாள்.

“நீ தூங்கு நந்தினி. நான் கொஞ்சம் காத்து வாங்கிட்டு வரேன்”, என்று கூறிவிட்டுக் கதவுக்கு அருகில் நின்று கொண்டான்.

அவளைப் பார்த்துக் கொண்டிருப்பது சற்றும் சரியல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தான். அவன் தப்பிக்க நினைத்துப் போக, நந்தினி அவன் பார்வையின் அர்த்தம் புரியாமல் குழம்பிக்கொண்டிருந்தாள்.

ரயில் அதிகாலையில் சென்னையை அடைந்தது.

அவளது கிராமத்தையும் கல்லூரியையும் தவிர வேறு ஊரைப் பெரிதாக அறியாத நந்தினிக்குச் சென்னையின் டாம்பீகம் அரட்டியது. ஷார்ட்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ், காதில் ஹேண்ட்ஸ்ப்ரீ அணிந்து கொண்டு ரயிலேற வந்த யுவதிகளைப் பார்த்து மிரண்டு, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை முறைத்தது போல என்ற பழமொழிக்கு உதாரணமாகினாள் நந்தினி.

“ஏய் லூசு… வேடிக்கை பார்க்காம முன்னாடி கண்ணை வெச்சு வா” சக்தியின் மிரட்டல் வேலை செய்ய, நல்ல பிள்ளையாக அவனை ஒட்டிக்கொண்டே வர, ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தனர் இருவரும்.

அமைதியாக அழகாக இருந்தது அந்த அப்பார்ட்மென்ட். விடுமுறை விட்டுவிட்டதால் குழந்தைகள் ஆரவாரமாக விளையாடிக்கொண்டிருக்க, நந்தினி புன்னகையோடு அவர்களைப் பார்த்தபடி சக்தியைத் தொடர்ந்தாள்.

அவளுக்கு அனைத்தும் புதியது, பழக்கமில்லாதது, வியப்பைத் தருவதாக இருக்க, கண்களை விரித்துப் பார்த்துக்கொண்டு வந்தாள். ஓரக்கண்ணால் அவளைப் பார்வையிட்டபடி வந்தவனுக்கு உள்ளுக்குள் சிரிப்பு பொங்கியது; அநியாயத்திற்கு அப்பாவியாக இருக்கிறாளே!

“ஏய்… வாயைக் கொஞ்சம் மூடிக்கிட்டு வா நந்தினி. இல்லைன்னா கொசு ஈ எல்லாத்துக்கும் உன் வாய்தான் அட்ரெஸ்ஸா இருக்கும்” புன்னகையோடு அவளை ஓட்டிக்கொண்டு வர, அவளுக்கு இருந்த மலைப்பில் எதையும் கவனிக்கவில்லை.

“இந்த அப்பார்ட்மென்ட்ல தான் நாம இருக்கப் போறோமா?” வியப்பாகச் சுற்றிப் பார்த்தபடி அவள் கேட்க, சக்தி புன்னகையோடு,

“இந்த அப்பார்ட்மென்ட்ல ஒரு பிளாட்ல” என்று கூற, அவனைப் பார்த்துச் சந்தோஷமாகச் சிரித்தாள்.

“தேங்க்ஸ்” என்று புன்னகையோடு உள்ளே நுழைந்தாள், வலது காலை எடுத்து வைத்து.

பிளாட் துடைத்து வைத்தது போல இருக்க, ஒன்றும் புரியாமல் சக்தியைப் பார்க்க, அவளது பார்வையைப் புரிந்துகொண்டவன்,

“இப்போதானே வந்திருக்கோம். இனிமே ஒவ்வொன்னா வாங்கிக்கலாம்” என்று ஆதரவாகக் கூற, அவள் ஒவ்வொரு அறையாகப் பார்க்க ஆரம்பித்தாள். அது ஒற்றைப் படுக்கையறை பிளாட்; இருவருக்கும் இதுவே போதுமென்றுதான் சக்தி இதைத் தேர்ந்தெடுத்து இருந்தான்.

சமையலறையில் நுழைந்தவள், ஒரே ஒரு கேஸ் அடுப்பைத் தவிர வேறு ஒன்றும் இல்லாமல் இருக்க, எதை வைத்துச் சமைப்பது என்று குழப்பம் வர, சக்தியே அதற்குப் பதில் கூறினான்.

“இப்போதைக்கு வெளிய வாங்கிக்கலாம். ஈவினிங் போய் என்ன தேவையோ வாங்கிட்டு வரலாம்” என்று அவன் கூறவும் மகிழ்ச்சி பொங்க அவனைப் பார்த்தாள்.

“ஹை! கடைவீதிக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களா?” சிறு பிள்ளையாகச் சந்தோஷிக்க, அவளது ஒவ்வொரு செய்கையையும் அவனறியாமல் ரசித்துக்கொண்டிருந்தான்.

“ஏங்க” என்று நந்தினி அவனை அழைக்க,

“என்னங்க” என்று அவளைப் போலவே குறும்பாக அவனும் அழைக்க, திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

“இந்த வீட்டுக்கு வாடகை எவ்வளவு?” அவளுக்குத் தேவையான மிக முக்கியமான கேள்வியை அவள் கேட்க, முறைத்தான் சக்தி!

“எவ்வளவா இருந்தா என்ன? என்கிட்டே இருக்குமான்னு சந்தேகமா நந்தினி?” கோபமாக அவன் கேட்க, அவனது கோபப்பார்வை அவளுக்குள் நடுக்கத்தைக் கொடுத்தது.

“அப்படியெல்லாம் நினைக்கல மாமா” என்று தலைகுனிந்தவாறு கூற, கோபத்தைக் குறைத்துக்கொண்டு,

“அதெல்லாம் கவலைப்படாத. நான் பார்த்துக்குவேன். உன்னோட வேலை படிக்கிறது ஒண்ணுதான். ஓகேவா?” என்று அவளுக்கு ஞாபகப்படுத்த, வேகமாகத் தலையாட்டினாள்.

“பார்த்து கழுத்து சுளுக்கப் போகுது” என்று சிரித்தபடி தலையில் தட்டிவிட்டுப் போக, நந்தினிக்கு மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. மனதில் வேண்டிக்கொண்டாள்,

“கடவுளே! இந்தச் சந்தோஷம் எப்போவுமே நிலைச்சு இருக்கணும்.”

கடவுள் சிரித்துக்கொண்டார்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் பதினேழு

“வல்லவா என்னை வெல்லவாகொஞ்சம் கொள்ளவா நெஞ்சை அல்லவாவல்லவா என்னை வெல்லவாஉன்னை கண்டதே வரம் அல்லவாபாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதேஉன்னை எண்ணி எண்ணியே உள்ளம்தான் வாடுதே”தொலைக்காட்சியில் பாடல் சப்தமாக ஒலித்துக் கொண்டிருக்க, சமையலறையில் அதற்கேற்றார் போலக் கையில் கரண்டியை வைத்துக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்