அத்தியாயம் இருபத்து ஆறு
முதல்கட்டமாகத் தன் மகள் புனிதாவைக் கொன்ற வழக்கில் முத்துவேல் கைது செய்யப்பட்டிருந்தார். இன்னும் சில ஊர்ப் பெரியவர்கள் சட்டத்தின் பார்வையில் இருந்தனர்; ஆனால் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் வரையறுக்கப்படாததால் அவர்கள் கைது செய்யப்படாமல் இருந்தனர்.
தப்பித்துச் சென்ற கீர்த்திவாசனின் நண்பர்கள் மேல் கற்பழிக்க முயன்ற குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது; அதன் அடிப்படையில் அவர்களும் சிறை கம்பிகளுக்குப் பின் இருக்க, முத்துவேலுக்கு ஒத்துழைத்த குற்றம் வேணி மேல் இருந்தாலும் அவர் மேல் குற்றம் சுமத்த சித்ரா விருப்பப்படாத காரணத்தால் அவர் கைது செய்யப்படவில்லை. தங்கவேலைக் கொலை செய்தவர்கள் என்று போலீசார் சந்தேகப்படுபவர்களை விசாரித்துக் கொண்டிருந்தனர். ஊர் மயான அமைதியைச் சுமந்திருந்தது; ஒவ்வொரு சந்தேகத்துக்கு இடமான இறப்பும் தோண்டப்பட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்தவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது!
வேணிக்கு மகளின் நிலையை நினைத்துக் கதறுவதா, கைதாகிப் போன கணவனை நினைத்து வருந்துவதா என்று புரியாமல் குழம்பி இருந்தார். கணவனே குடும்பத்தின் அச்சு என்று அவர் காலம் காலமாக நம்பி வந்ததை அன்றும் அவரால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. ‘இவர்கள் இப்படித்தான் என்பது இந்தப் பெண்களுக்குத் தான் பொருந்தும்’ என்று நந்தன் நினைத்துக் கொண்டான்.
“டேய்! கை வைக்கக்கூடாத இடத்துல வெச்சுட்ட. இதுக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்” வேலுச்சாமி மிரட்டலாக நந்தனிடம் எகிற, அவனோ அலட்டிக்கொள்ளாமல் அவருக்கு அருகில் வந்து மிகவும் உறுதியான குரலில்,
“நீ நினைச்சா எரிக்க நான் ஒன்னும் நந்தனார் இல்ல வேலுச்சாமி. இந்த நந்தன் உங்க ஜாதி வெறியை எரிக்க வந்த நந்தன்.”
அவனது உறுதி எதிரில் இருந்தவர்களுக்குக் கிலியைப் பரவச் செய்தது! இவை அனைத்திற்கும் காரணம் சித்ரா நந்தனிடம் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம்.
“உங்க அக்காவுக்குத் தைரியம் இருந்திருந்தா தங்கவேல் அநியாயமாக் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டானே” சித்ராவிடம் நந்தன் கூர்மையாகக் கேட்க, திடுக்கிட்டனர் பெண்கள் இருவரும்.
“தங்கவேல் மாமா என்னவாகறாங்க உங்களுக்கு?” மெலிதான குரலில் சித்ரா கேட்க,
“ஏன்? ரிலேஷனா இருந்தாதான் நியாயத்தைக் கேட்கணுமா? நந்தினிக்கு அநியாயம் நடக்கப் பார்த்தப்போ சக்தி எந்த உறவு அடிப்படையில் காப்பாத்திக் கூட்டிட்டு வந்தான்?” அவளால் மறுத்து ஒரு வார்த்தையும் கூற முடியாதபடி அவனது கேள்வி அமைய, அமைதியாக இருந்தாள் சித்ரா.
இதை இருவருமே எதிர்பார்க்கவில்லை. புனிதா, தங்கவேலின் அத்தியாயங்கள் முடிந்து போன ஒன்று என்றுதான் நினைத்திருந்தனரே தவிர, அதைத் துருவும் நாளும் வரும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. தங்களது பெற்றோர் பாதிக்கப்படுவார்களே என்று ஒரு மூலையில் தோன்றினாலும், இது களையெடுக்கப்பட வேண்டிய பிரச்சனை என்பதில் சித்ராவுக்கும் நந்தினிக்கும் எள்ளளவும் ஐயமில்லை!
“நீங்க சொல்றது கரெக்ட் தாண்ணா. நியாயத்தைக் கேட்க உறவுமுறை அவசியமில்லை. நாங்க கூட புனிதாக்காவைத்தான் பாவம்ன்னு நினைச்சிருக்கோம். அப்பாவியா நடுவில மாட்டின அந்த அண்ணனை மறந்துட்டோம். இப்போ ரொம்ப கில்ட்டியா ஃபீல் பண்றேன்”
சங்கடமாக நந்தனையும் சக்தியையும் பார்த்தபடி நந்தினி கூறியதை மென்மையாகப் பார்வையால் அங்கீகரித்தான் சக்தி! அருகில் வந்தவன் நந்தினியை ஆதரவாக அணைத்து, ‘நான் இருக்கிறேன் உனக்காக’ என்று கூறாமல் கூறினான்.
“நந்து! உங்க ரெண்டு பேரையும் தப்பு சொல்லவே இல்லை. ஆனா காலம் காலமா கண் முன்னாடி நடக்கற அநியாயத்துக்கு ஒரு முடிவு தெரிய வேண்டாமா? சித்ரா செய்தது நியாயம்ன்னு நாம உணருறோம் இல்லையா, அந்த நியாயத்தைச் சட்டமும் உணரணும். அதுக்காகத்தான் நந்தன் சித்ராகிட்ட ஒப்புதல் வாக்குமூலம் கேட்கறான்… ஐ மீன் கம்ப்ளீட்டா. சித்ராவும் இந்தப் பிரச்சனைல இருந்து வெளிய வரணும்; அதே சமயத்துல கௌரவத்தைக் காப்பாத்தறோம் பேர்வழின்னு சிலர் செய்த கொலைகளும் வெளிய வரணும்” மென்மையாக ஆனால் உறுதியாகச் சக்தி சொன்னதை நெற்றி சுருங்க மனதில் பதிய வைத்துக்கொண்டாள் சித்ரா.
நந்தன் சித்ராவை கேள்வியாகப் பார்க்க, அவளது முகத்தில் முடிவெடுத்துவிட்டதற்கான அறிகுறி தெரிந்தது.
“ஓகே சார். நீங்க என்னவெல்லாம் கேட்கணும்ன்னு நினைக்கறீங்களோ அத்தனையும் கேளுங்க. எனக்குத் தெரிஞ்ச அத்தனையும் சொல்றேன்” மிக மிகத் தீர்க்கமாக அவள் கூற, நந்தன் ஜன்னல் வழியே தெரிந்த காட்சிகளைப் பார்த்துக் கொண்டே அமைதியாகத் திரும்பினான்.
“சித்ரா, தங்கவேல் அநியாயமாகக் கொல்லப்பட்டப்போ, அவனை ஒரு அனாதையா நினைச்சு அந்த ஊர் அப்படியே மூடி மறைச்சிருச்சு. ஆனா, சட்டம் யாரையும் அனாதையா விடாது. அன்னைக்குத் தங்கவேல், புனிதா, நாளைக்கு உங்களை மாதிரி இன்னொரு பொண்ணு… இதெல்லாம் தொடரக்கூடாது. ஜாதிங்கிற பேர்ல ஒருத்தர் உயிரை எடுக்க யாருக்கும் உரிமை இல்லைன்னு இந்த ஊருக்குச் சொல்லிக் கொடுக்கணும். அதற்காகத்தான் நான் இப்போ உங்க முன்னாடி நிக்கிறேன். உங்க வாக்குமூலம் ஒரு தனிமனிதனுக்கானது இல்ல, இந்தச் சமூகத்துக்கானது.”
யோசனையாகச் சுருங்கியிருந்த அவளது முகத்தைக் கூர்ந்து பார்த்தவன், இடைவெளி விட்டு,
“உங்களைப் பற்றிக் கவலைப்படாதீங்க சித்ரா. நான் இருக்கேன்… விட்டுட மாட்டேன்… ஐ மீன் இந்த கேஸ்ல” என்று முடிக்கவும் தெளிவான முகத்தோடு நிமிர்ந்தாள். உடலில் ஒவ்வொரு பாகமும் வலியை உணர்ந்தாலும் அதைப் பற்றிச் கொஞ்சமும் கவலைப்படவில்லை அவள்.
“சார்! என்னைப் பற்றிக் கவலைப்பட்டிருந்தா அவனைக்கொல்ற தைரியம் வந்திருக்காது. எனக்கு என்ன ஆகும்ன்னு நான் கவலைப்படலை. அந்த அசுரனை வதம் செய்த திருப்தி போதும் எனக்கு” என்று வெகு தெளிவான குரலில் மென்மையாக உரைத்துவிட்டுப் புனிதா விவகாரம் முதற்கொண்டு அனைத்தையும் கூறி முடித்தாள்.
கீர்த்திவாசன் சம்பந்தப்பட்ட சிற்சில சம்பவங்களைக் கூறும்போது நந்தனின் முஷ்டி இறுகியது; சக்திக்கு ரத்தம் கொதித்தது; நந்தினிக்கோ உடல் நடுங்கிக் கண்ணீர் பெருகியது. சித்ராவை நெருங்கிச் சற்று இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்!
வேறு எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டவன், பின் நிமிர்ந்து அமர்ந்து,
“இது அத்தனையையும் கோர்ட்ல சொல்ற தைரியம் இருக்குமா சித்ரா உங்களுக்கு?”
சற்று நேரம் யோசித்த சித்ரா கண்களை மூடி, மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு உறுதியான குரலில் கூறினாள்,
“கண்டிப்பா சார். என்னோட கேஸைப் பார்த்து கொஞ்சம் பேருக்காவது கண்ணைத் திறக்கணும். இந்த மாதிரி கஷ்டப்படற பொண்ணுங்களை தைரியமா வெளிய வர வைக்கணும்” அவளது உறுதி நந்தனை அசைத்தது.
“நல்லா யோசிச்சுக்கோ சித்ரா. கோர்ட்ல எப்படி வேணும்னாலும் கேள்வி இருக்கும். புரோஸிகியூஷன் தரப்புல கேள்வி எல்லாம் ரொம்ப அசிங்கமாக் கூடத் தோணலாம். ஏன்னா பதிவு செய்யப்படப் போற வழக்கோட தன்மை அந்த மாதிரி. இப்போ நீ முன் வெச்சுட்டா காலைப் பின் வைக்க முடியாதுடா” நடக்கப் போவதை அவளிடம் கூறித் தெளிவாக்க விரும்பினாள் நந்தினி.
“யோசிச்சுட்டேன் நந்து. நீதான் அடிக்கடி சொல்வ ‘நோ’ சொல்ல வேண்டிய இடத்துல ‘எஸ்’ சொல்லாதடின்னு. ‘நோ’ சொல்ல பயந்து, எதையும் சொல்ல முடியாமல் தவிச்சு எல்லாத்தையும் மிஸ் பண்ணது போதும்” மெல்லிய குரலில் வலியோடு அவள் கூறியது நந்தினியின் மனதை ஏதோ செய்ய, தவிப்பாகச் சக்தியைப் பார்க்க அவனோ கண்களால் ஆற்றுப்படுத்தினான்!
இடைவெளி விட்ட சித்ரா,
“இனிமே எதைப் பத்தியும் கவலைப்பட மாட்டேன் நந்து. எல்லாத்தையும் தைரியமா ஃபேஸ் பண்ண முடிவு செய்துட்டேன்” உணர்வைத் துடைத்த முகத்தோடு அவள் கூற,
சக்தி சூழ்நிலையை மாற்ற விரும்ப வேண்டிச் சிறு புன்னகையோடு,
“தைரியத்தைக் கத்துக்கணும்னா இதோ இந்தப் பிசாசுகிட்ட கத்துக்கோ சித்ரா. இவளை மாதிரி ஒரு தைரியம் புடிச்சவளை எங்க தேடினாலும் பார்க்கவே முடியாது” நந்தினியைக் காட்டிச் சித்ராவிடம் சிரிக்காமல் சொன்ன சக்தியைப் பார்த்து முறைத்தாள் நந்தினி.
“ஹலோஓஓ… யார் சார் பிசாசு?” சக்தியை நோக்கி வந்துகொண்டே அவள் நக்கலாகக் கேட்க,
“அச்சோ! பிசாசுன்னா சொன்னேன்? டேய் நந்தா! உன் காதுல பிசாசுன்னா விழுந்துது?” வேண்டுமென்றே நந்தனிடம் சிரிக்காமல் கேட்க, அவனும் அதே பாணியில்,
“பிசாசா? தேவதைன்னு தானே என் காதுல விழுந்துது” அதுவரை ஒழுங்காகக் கூறியவன் சக்தியைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டி, “ஆனா அன்னைக்குக் கொள்ளி வாய் பிசாசுன்னு என்கிட்ட சொன்னியே, அது நந்தினியைத் தானா சக்தி?” நந்தனும் சிரிக்கவே சிரிக்காமல் போட்டுக்கொடுக்க, நந்தினி கடுப்பாகச் சக்தியைப் பார்த்தாள்.
“டேய்! குடும்பத்துல கும்மியடிச்சுட்டுப் போகாதடா. இந்தப் பத்திரகாளி லுக் விடறதைப் பார்த்தாலே பயமா இருக்கு” சக்தி நடுங்குபவனைப் போலக் கூற,
“யாரு? உனக்கு பயமா? காதுல கடுக்கன் குத்திட்டு கோயில் வாசல்ல உட்கார்ந்து இருப்பான் பாரு, அவன்கிட்ட சொல்லு நம்புவான்” நந்தன் சக்தியின் காலை வாரிவிட, இவர்களின் சம்பாஷணைகளைக் கவலைகளை மறந்து கேட்டுக் கொண்டிருந்தவள் அதற்கு மேலும் தாள முடியாமல் வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பித்தாள்.
நந்தினிக்கும் சக்திக்கும் அவளது சிரிப்பு நிம்மதியைத் தர, நந்தன் சித்ராவை வாஞ்சையோடு பார்த்தான்!
***
அன்று மிகவும் பதற்றமாக உணர்ந்தாள் நந்தினி. அவளோடு சேர்த்து சக்திக்கும் அந்தப் பதற்றம் தொற்றிக்கொள்ள, அவனது கைகளை இறுக்கமாகச் சேர்த்துப் பிடித்துக் கொண்டாள்! நெற்றியில் வியர்வை பூக்கள். காத்திருக்கும் நேரம் ஏதோ ஒரு பயத்தோடு கழிய, கையில் கட்டியிருந்த கடிகாரத்தையும் சக்தியின் முகத்தையும் மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவளை வெகு நேரம் காத்திருக்க வைத்துப் பின்னர் அந்தத் குரல் கேட்டது.
“வழக்கு எண் நாற்பத்தேழின் கீழ் ஒன்பது… சித்ரா!”
டவாலி அழைப்பது காதில் விழ, சித்ராவை அழைத்து வந்தனர் பெண் போலீசார். அன்று சித்ராவுக்கான தீர்ப்பு தினம்! ஒரு வருடம் கழிந்த வழக்கில் சித்ரா தனக்கான நியாயத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த தினம்!
தற்காப்புக்காக நடந்த கொலை என்பதால் வழக்கில் ஜாமீன் வாங்கிக் கொள்ளலாம் என்று சற்று நிம்மதியாக அனைவரும் இருந்தபோது, கண்டிப்பாக மறுத்து அதிர வைத்தாள் சித்ரா.
“ஏன் சித்ரா? எல்லாமே ஈஸியான கிளாஸஸ்ல தான் கொண்டு போயிட்டு இருக்கோம். செல்ஃப் டிபென்ஸ் பேசிஸ்ல பெயில் ஈஸியா கிடைச்சுடுமே… ஏன் வேண்டாம்ன்னு சொல்றீங்க?” மனம் ஆறாமல் நந்தன் கேட்டுவிட,
“இல்ல சார். என்னோட மனசாட்சிப்படி நான் செய்தது சரிதான்; ஆனா சட்டத்தோட பார்வைல நான் இப்போ குற்றவாளி. சட்டத்தின் படியும் நான் வெளிய வரணும். அதுக்குப் பின் தான் எனக்கு விடுதலை நந்தன் சார்” என்று அவனிடம் கூறிவிட்டு, அதே கருத்தை வலியுறுத்திக் கொண்டிருந்த நந்தினியிடம்,
“இத்தனை நாள் அவனோட குடும்பம் நடத்தி இருக்கேனே நந்து… அதை நினைச்சா அருவருப்பா இருக்குடி. இந்த பீரியட் எனக்கு கண்டிப்பா வேணும். என்னோட மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கணும் நந்து” என்று அவளிடம் முடிக்க, அதற்கு மேலும் யாராலும் பேச முடியாமல் போய்விட்டது.
அவ்வப்போது சிறைச்சாலைக்குச் சென்று சித்ராவைப் பார்த்து வந்தாலும், தன்னுடைய ஐஏஎஸ் கனவையும் நந்தினி கைவிட்டுவிடவில்லை. பிரிலிமினரி தேர்வை வெற்றிகரமாகக் கடந்து வந்தவளை, அதற்கு முன்னரே சென்னை பல்கலைக்கழகத்தில் சேர்த்து விட்டிருந்தான் சக்தி. அடுத்த கட்டத் தேர்வுக்கு நந்தனும் பெரிய அளவில் உதவினான்.
“இவரைப் பற்றி ஒண்ணுமே நீங்க சொன்னதில்லையே சக்தி?” சக்தியும் நந்தனும் நெருக்கமாக இருந்த சந்தர்ப்பத்தில் நந்தனைப் பற்றிய நினைவு வந்தபோது அவள் கேட்க,
“சின்ன வயசுல இருந்தே நல்ல நண்பன். பன்னிரெண்டாவதோட நம்ம படிப்புக்கு சுபம் போட்டாச்சு. ஆனா அவன் வெறியோட படிச்சான் நந்து… ஐபிஎஸ் ஹோம் கேடர்லையே பிளேஸ் ஆகிட்டான்” சிறு சிறு சில்மிஷங்களுக்கு இடையில் அவன் கூறிக்கொண்டிருக்க, லாவகமாக அவனது கைகளிலிருந்து தப்பித்தவாறே,
“அப்புறம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணலை? உனக்கே நாலு கழுதை வயசாச்சே சக்தி?” அவளது இயல்பான குறும்பு தலைதூக்க, கண்ணைச் சிமிட்டி அவள் கேலி செய்ய, அவளது பளபளக்கும் கன்னத்தில் ஆழமாகத் தன் பல் தடம் பதித்தான் அந்த கள்வன்!
“ஆஆஆ… ஐயோ!” வலி சற்று அதிகமாக இருக்க, கன்னத்தைச் செல்லமாகப் பிடித்துக்கொண்டவளைப் பார்த்துத் தன் ஒற்றைப் புருவத்தை உயர்த்திச் சிரித்தான் சக்தி.
“சிரிக்காதடா வலிக்குது… எருமைமாடு!” அவனைச் செல்லமாக முறைத்தபடி அவள் திட்டிக்கொண்டிருக்க, அவளது கண்கள் மட்டும் அவனது முகத்திலேயே நிலைத்திருந்தன.
“சரிடி… தப்புதான். வேணும்னா ஒத்தடம் கொடுக்கறேன். அதுக்குத்தானே இப்படி ஓவரா சீன் போடுற?” என்று குறும்புச் சிரிப்புடன் கூறியவன், சட்டென்று அவளது இடையில் கை கொடுத்துத் தன் பக்கம் இழுத்தான். எதிர்பாராத அந்த நெருக்கத்தில் நந்தினி அவனது மார்பில் மோதித் தஞ்சம் புகுந்தாள்.
“ச்சீ போடா பிசாசு! இவனோட ஒத்தடத்துக்காகத்தான் காத்துட்டு இருக்கமாக்கும்” என்று பொய்யாகக் கோபித்துத் தோளில் இடித்துக்கொண்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள முயன்றாள். ஆனால் அவனது அணைப்பு அவளைச் சிறைபிடித்திருந்தது.
“ம்ம்ம்ம்… வர வர மரியாதை ரொம்பக் குறையுது. இதுக்கும் சேர்த்துதான் இப்போ உன்னைப் பனிஷ் பண்ணணும்டி” என்று அவன் கிசுகிசுக்க, அவனது இதழ்கள் அவளது காது மடல்களை உரசிச் சென்றன. அந்தச் சிறு தீண்டலில் நந்தினியின் உடல் மெலிதாக நடுங்கிச் சிலிர்த்தது. அவனது கரங்கள் அவளது இடை வளைவின் மென்மையை அளந்து அத்துமீறிக் கொண்டிருக்க, அவனது அனல் மூச்சு அவள் பிடரியில் பட்டு அவளை நிலைகுலையச் செய்தது.
நெளிந்த நந்தினி, தப்பிக்க வழிதேடி, “சரி சரி… நான் வேணும்னா பழையபடி ‘வாங்கண்ணா போங்கண்ணா’ன்னு சொல்றேன்” என்று அவனது கண்களைப் பார்த்துப் பாவமாக ஊடல் செய்ய, அவளது நெற்றியில் தன் நெற்றியால் முட்டி அந்த நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கினான்.
“அடிப்பாவி! இந்த நேரத்துலயா அந்தப் பழைய பகையைத் தீர்த்துப்ப? ஏண்டி இந்த கொலைவெறி?”
“நீதானே மாமா முன்னாடி அப்படிச் சொல்லச் சொல்லி என்னை மிரட்டுவ? இப்போ என்னவாம்?” அவளுடைய அந்த மயக்கும் பார்வையை விலக்காமல் அவள் கேட்க, சக்தியின் கட்டுப்பாடு மெல்லக் கைநழுவியது. அவளது இதழோரம் படர்ந்திருந்த அந்தச் சிறு புன்னகை அவனை முழுவதுமாகச் சாய்த்தது.
“ம்ம்ம்… அப்போ சொன்னது வேற, இப்போ நான் கேட்கப்போறது வேற… இப்போ சொல்லு பார்க்கலாம்” என்று அதரங்களால் அவளது வினாவிற்கு விடை சொன்னான் சக்தி! அவளது இதழ்களைத் தன் இதழ்களால் சிறைபிடித்து, ஒரு நீண்ட கவிதையை அங்கேயே எழுதத் தொடங்கினான்.
நந்தினியின் கைகள் அனிச்சையாக அவனது சட்டையைச் சுருட்டிப் பிடித்துக் கொள்ள, அவனது ஆழமான முத்தத்தின் போக்கில் அவள் தன்னை முழுவதுமாக மறந்தாள். காலம் அந்த நொடியில் உறைந்து போக, இருவர் என்ற நிலை மாறி, உணர்வுகள் ஒன்றிணைந்து அவர்கள் ஒருவராகவே மாறினர்.
வெகு நேரம் கழித்து அவளை மெதுவாக விடுவித்தவனை, முகம் சிவக்க, கண்கள் கிறங்கச் சோர்வாகப் பார்த்துப் புன்னகைத்தாள் நந்தினி. அவளது கலைந்திருந்த கூந்தலும், சிவந்த இதழ்களும் அவளது அழகை இன்னும் மெருகேற்றிக் காட்டின.
“இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதிலே வரலை” மென் புன்னகையோடு அவனைப் பார்த்துக் கேட்க,
“அநியாயம் பண்ணாதடி. அவனுக்கு இன்னும் இன்ட்ரஸ்ட் வரலையாம் போதுமா?”
“போதாதே மாமா போதாதே!” சிரித்தபடி அவள் கூற, சக்தியும் அந்தப் புன்னகையில் இணைந்து கொண்டு மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்!
***
“தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி கீர்த்திவாசனைக் கொன்றதைக் குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டிருந்தாலும், கொலை நடந்த இடத்தையும் சூழலையும் கருத்தில் கொண்டு, இது தற்காப்புக்கான நடவடிக்கை மட்டுமே என்பதை நீதிமன்றம் பூரணமாக நம்புவதால், சித்ராவை இந்த வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவிக்கிறது”
நீதிபதி தீர்ப்பைப் படிக்க, நந்தினியின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்! நிமிர்ந்து சித்ராவைப் பார்க்க, ‘எவற்றாலும் நான் பாதிக்கப்பட மாட்டேன்’ என்பது போல நிர்மலமான முகத்தோடு நின்றிருந்தாள். அருகில் அவளையே பார்த்தபடி நந்தன்!
தீர்ப்பு முடிந்து, சில நடைமுறைகள் முடிந்து அவள் வெளியே வர, காற்று சுதந்திரமாக வீசியது. கண்களை மூடி அதன் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்தாள் சித்ரா. அவளது மனதைப் புரிந்த நந்தினி கண்ணீரோடு அவளை அணைத்துக் கொண்டாள்.
நந்தினியை அணைத்தபடியே சித்ரா சிறிது நேரம் மௌனமாக நிற்க, அந்தத் தருணங்கள் இருவருக்குமே தேவையாக இருந்தன. வார்த்தைகள் தேவை இல்லாத நட்பின் ஆழத்தில் பயணித்திருந்த இருவரையும் பார்க்கையில், உடனிருந்த மற்ற இருவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை தடைகளைத் தாண்டும் போதும் உடனிருக்கும் நட்பல்லவா!
முத்துவேலுக்கும் அவர் சார்ந்த மற்றவர்களுக்கும் சில நாட்களுக்கு முன்னர் தண்டனை உறுதி செய்யப்பட்டிருந்தது. முத்துவேலுக்குப் புனிதாவிற்கு விஷம் கொடுத்துக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை கிடைக்க, மற்றவர்களுக்குத் தங்கவேலைக் கொன்ற வழக்கில் அதே ஆயுள் தண்டனை கிடைக்க, நந்தினிக்கும் சித்ராவுக்கும் மனதில் நிம்மதி பரவியது.
அந்த ஊரின் ஜாதிப் பிடிமானத்தை உடைப்பது நந்தனுக்கு எளிதாக இருக்கவில்லை. ஆனால், சித்ராவின் துணிச்சலான வாக்குமூலமும், நந்தன் சேகரித்த அறிவியல் ரீதியான ஆதாரங்களும் (Forensic Evidence) குற்றவாளிகள் தப்பிக்க முடியாதபடிச் செய்தன. ‘கௌரவம்’ என்ற பெயரில் ஒளிந்திருந்த கொடூர முகங்களுக்குச் சட்டம் இறுதியாக விலங்கு பூட்டியது.
மௌனமாக வந்தவர்களைச் சந்தோஷமாக வரவேற்றது சக்தியின் வீடு! அப்போது நந்தனின் செல்பேசி அழைத்தது. மறுமுனை கூறுவதைக் கேட்டவன், முகம் முழுக்கப் பிரகாசமாக நிமிர்ந்து சக்தியைப் பார்த்துக் கட்டை விரலை உயர்திக் காட்டினான்!
அந்தப் பிரகாசம் சக்தியையும் தொற்றிக்கொள்ள, முகம் முழுக்கச் சிரிப்போடு அவனது மனைவியைப் பார்த்தான். நந்தினி என்னவென்று புரியாமல் சக்தியையும் நந்தனையும் ஏறிட, நந்தன் சக்தியின் காதில் கிசுகிசுத்தான். சக்தியின் முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது!
“என்னாச்சு? உங்களுக்குள்ள பேசிக்கறீங்க? ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க?” கடுப்பாக அவள் கேட்க, அனைத்தையும் மௌனமாகப் பார்த்துச் சிரித்தபடி நின்றிருந்தாள் சித்ரா!
“சரி, இன்னைக்கு என்ன தேதி?”
“மே நான்கு” அவளுக்கு அப்பொழுதும் புரியவில்லை. தோழியைப் பார்த்த மகிழ்ச்சியில் மறந்திருந்தாள்!
“இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” சக்தியும் விடாமல் கேட்க,
“ம்ம்ம்… இன்னைக்கு சித்துவுக்கு ரிலீஸ்… அப்புறம்…” என்று யோசிக்க,
“மக்கு! உன்னோட எக்ஸாம் ரிசல்ட் ஞாபகம் வரலையா?” அவளது தலையில் சக்தி கடுப்பாகத் தட்ட, தலையைத் தேய்த்துவிட்டவாறே சக்தியைப் பரிதாபமாகப் பார்த்தவளின் முகத்தில் பயம் அப்பிக்கொண்டது!
“மாமா… இன்னைக்கு ரிசல்ட் இல்ல?” அழும் நிலைக்குச் சென்றுவிட்ட குழந்தையைப் போல அவள் கேட்க,
“பின்ன?” வெகு சாதாரணமாக அவன் கூறிவிட்டு அவளைப் பார்க்க, அவளது மனது பந்தயக் குதிரையாக ஓடியது! அவசரமாக அவளது லேப்டாப்பைத் தேடினாள். பதட்டமாகத் தேடியவளைக் கைப்பிடித்துத் தடுத்தவன்,
“எங்கடி போற?”
“ரிசல்ட் பார்க்கத்தான் மாமா. பயமா இருக்கே… ஆண்டவா!” நெஞ்சில் கைவைத்துத் பதட்டத்தைத் தணித்துக் கொண்டிருந்தவளைப் பார்க்கச் சக்திக்குச் சிரிப்பாக இருக்க, தம்பதியர் இருவரையும் நந்தன் ரசித்துக் கொண்டிருந்தான்.
சித்ராவுக்கும் ரிசல்ட் என்னாகுமோ என்று பயம் பிடித்துக்கொள்ள, சக்தியை என்னவென்று கண்களால் கேட்க, அவன் சிரித்துக்கொண்டு நந்தினிக்குத் தெரியாமல் கட்டை விரலை உயர்த்திக் காட்டினான். அதை அறியாமல் ஊரில் இருக்கும் தெய்வங்களுக்கு எல்லாம் நந்தினி மனதுக்குள் வேண்டுதல் வைத்துக் கொண்டிருந்தாள்!
“சரி, ரிசல்ட்ட நான் சொன்னா எனக்கு என்ன தருவ?” வியாபாரியாகச் சக்தி நந்தினியிடம் பேரம் பேச, நந்தன் அவனது வயிற்றில் குத்தினான்.
“அடப்பாவி! இது போங்காட்டம்” நந்தன் சிரிக்க, சக்தியும் அவனுடன் இணைந்து கொண்டான்.
“மாமா ப்ளீஸ்… சொல்லுங்க” விட்டால் அழுதுவிடுபவள் போலக் கேட்க, அவளைத் தன் பக்கம் இழுத்துக்கொண்டு,
“என் செல்லக்குட்டி எக்ஸாம்ல பாஸ் பண்ணிட்டாங்களாம். ஓகேவா?” என்று செல்லமாகக் கூறி அவளது மூக்கைப் பிடித்து ஆட்ட, நந்தினியின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்ப் போல ஒளிர்ந்தது!
“மா… மா…” அவளால் அடுத்த வார்த்தையைப் பேச முடியவில்லை.
“ஆமா. அதோட என்ன ரேங்க் தெரியுமா?” சக்தி சந்தோஷமாகக் கேட்க, அவள் என்னவென்று பார்வையாலேயே கண்ணீரோடு கேட்க,
“ஆல் இந்தியா லெவல்ல நம்பர் ஃபைவ் நந்துக் குட்டி!” எல்லையில்லா மகிழ்வோடு அவன் கூற, அதைக் கேட்ட நந்தினிக்கு மகிழ்ச்சியில் அழவே தோன்றியது. சித்ரா கண்ணீரோடு அணைத்துக்கொண்டு,
“சாதிச்சுட்டடி… சாதிச்சுட்ட” முதுகைத் தட்டிக் கொடுக்க, சித்ராவை அணைத்தவள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
கண்ணீரும் தித்திக்குமா? அந்தத் கணத்தில் நந்தினியும் சக்தியும் அதை மனப்பூர்வமாக உணர, கண்களில் அதே கண்ணீரோடு நின்றிருந்த சக்தியைத் தன் விழிகளால் பருகி நிரப்பிக் கொண்டிருந்தாள் நந்தினி!
“கங்க்ராட்ஸ் நந்தினி!” தன் வாழ்த்தைக் கூறிவிட்டுச் சித்ராவைச் சைகை காட்டி அழைத்துக்கொண்டு போனான் நந்தன். அவளிடம் தனித்துப் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் அவனுக்கு; அதே சமயத்தில் அவர்களுக்கும் தனிமை தர நினைத்தான்!
“என்ன சார்? எங்க கூட்டிகிட்டுப் போறீங்க?” அவனோடு நடந்து கொண்டே சித்ரா கேட்க,
“ம்ம்ம்… குரங்கை வெச்சு வெளிய வித்தை காட்டிகிட்டு இருக்காங்களாம். போய் பார்க்கலாமா?” நக்கலாக நந்தன் கேட்க,
“அதான் குரங்கு இங்கயே இருக்கே” பழைய குறும்பு தலைதூக்க, ஒரு வருடமாக அவனைப் பார்த்துப் பழகிய பழக்கத்தில் அவளுக்குள்ளாக முனகிக் கொண்டாள்!
மென்மையாகச் சிரித்துக் கொண்டான் நந்தன்!
***
“மாமா…” என்னவென்று யோசிப்பதற்குள் சக்திவேலின் இறுகிய அணைப்பில் கட்டுண்டிருந்தாள் நந்தினி!
கண்ணீர் நிற்காமல் பெருக, அவளால் அந்தச் சந்தோஷத்தைத் தாங்க முடியவில்லை. சிறு வயது முதலே கண்ட கனவு… ஊரைப் பகைத்து, உறவைப் பகைத்து, பெற்றோரைப் பகைத்து, காதலே இல்லாத காதலனோடு வந்து, உயிரைக் கொடுத்துப் படித்து, அதற்கான விடையைப் பார்க்கும்போது கண்கள் பனித்தன!
“ஹே குட்டி… என்னடா இது… அழுதுட்டு…” அவளைத் தேற்ற முயன்றவனின் கண்களிலும் தன்னவளின் கண்ணீர்… சந்தோஷக் கண்ணீர்!
“இதுக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டேன்… உங்களையும் கஷ்டப்படுத்தினேன். தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்டா அம்முக்குட்டி” அவனது முகமெங்கும் முத்தத்தால் அர்ச்சனை செய்தவளின் அன்பைத் தாக்குபிடிக்க முடியாமல் திணறினான் சக்தி. அவளை இறுக்கி அணைத்துக் கொண்டவனின் மனம் என்றுமில்லாத பேரமைதியில் ஆழ்ந்திருந்தது!
அவனது செல்பேசியை எடுத்துத் தனது வீட்டிற்கு அவள் அழைக்க, அழைப்பை எடுத்தது அவளது தாய்!
“மா… ஜெயிச்சுட்டேன்மா. நான் ஜெயிச்சுட்டேன்”
மௌனமாகத் கேட்டுக்கொண்டிருந்தார் செல்வி. இவ்வளவு நாட்களுக்குப் பின் நந்தினியின் குரலைக் கேட்பது ஒன்றே அவருக்குப் போதுமானதாக இருந்தது. வேலுச்சாமியையும் தனது மாமியாரையும் ஓரக்கண்ணால் பார்த்தார்; வாழ்க்கையில் தோற்றுக்கொண்டிருக்கின்ற சோர்வு அவரது கணவரின் கண்களில் தெரிந்தது!
“எதுலன்னு கேட்க மாட்டியாம்மா?”
“கண்டிப்பா நீ ஜெயிச்சுக் காட்டுவன்னு எனக்குத் தெரியும் நந்தினி. அது எந்த விஷயமா இருந்தாலும்… என் மருமகன் இருக்கும்போது நான் எதுக்குக் கண்ணு கவலைப்படணும்?”
அவர் பேசுவதைச் ஸ்பீக்கரில் கேட்ட சக்தி, பெருமையாகக் காலரைத் தூக்கிவிட, கணவனைப் பெருமையாகப் பார்த்த நந்தினி காதலாகப் புன்னகைத்தாள்!
செல்வி நந்தினியின் பெயரைக் கூறியவுடன், ஹாலில் அமர்ந்திருந்த வேலுச்சாமி ஒரு நிமிடம் அப்படியே சிலையாக உறைந்து போனார். பல மாதங்களாக அவர் முகத்தில் தேங்கியிருந்த அந்த இறுக்கம் மெல்லக் கலைந்து, ஒருவித தவிப்பு குடிகொண்டது.
ஆனால், அவர் ஓடி வந்து போனைப் பறிக்கவில்லை. ஜாதிப் பெருமையும், தன் பிடிவாதமும் அவரை இருக்கையோடு சேர்த்து அழுத்தியது. செல்வி ஸ்பீக்கரில் போட்டிருந்ததால், நந்தினியின் ஒவ்வொரு வார்த்தையும் அவருக்கு ஈட்டியாகத் தைத்தது.
““மா, நான் ரிசல்ட் பார்த்துட்டேன்… ஆல் இந்தியா ரேங்க் ஐந்து!” என்று நந்தினி விம்மியபோது, மறுமுனையில் நீண்ட மௌனம்.
மகள் கம்பீரமாகக் கூறியபோது, வேலுச்சாமியின் கண்கள் கலங்கின. அந்தச் சொற்கள் அவரது ஈகோவின் மீது விழுந்த பலத்த அடி! தான் தோற்றுவிட்டதை அவர் உணர்ந்தாலும், அதை அத்தனை சீக்கிரம் ஒப்புக்கொள்ளும் பக்குவம் அவருக்கு வரவில்லை.
செல்வியின் அழுகை குரலாக வெளியே வரவில்லை. “உன்னை அனுப்பிட்டு ஒவ்வொரு நாளும் தவிச்சேன் நந்தினி. உன் பிடிவாதம் ஜெயிச்சுடுச்சு. சக்தியைத் தப்பா நினைச்சவங்களை நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து தோற்கடிச்சுட்டீங்க…” என்றவர் ஓரக்கண்ணில் தனது கணவரை பார்த்தார். அவரது கூனிக் குறுகிய நிலை, ஏதோவொரு வகையில் ஆத்மதிருப்தியை தந்தது.
அதே உணர்வோடு, “காலம் முழுக்க நீங்க ரெண்டு பேரும் இதே சந்தோஷத்தோட நூறு வருஷம் வாழனும் சித்து…” என்று வாழ்த்தினார்.
‘இது இங்கிருந்திருந்தால் சாத்தியமாகி இருக்குமா? காரணம் அவளது கணவன் தானே!’ தன் மகள் கொடுத்து வைத்தவள் என்று எண்ணிக் கொண்டார்.
அவருக்கும் கண்ணீர் இனித்தது!
“உன்னோட இந்த ஆசீர்வாதம் மட்டும் எனக்குப் போதும்மா” என்று செல்பேசியை வைக்கப் போக,
“அப்பாருகிட்ட பேசறியா தங்கம்?” தயக்கமாகச் செல்வி கேட்க,
“அவர் யாருன்னே எனக்குத் தெரியாதும்மா” என்றவள் அலைபேசியை வைத்து விட்டாள்.
அவர் மெல்ல எழுந்து வாசலுக்குச் சென்று இருட்டில் தனியாக நின்றார். போனில் நந்தினி, “அவர் யாருன்னே எனக்குத் தெரியாதும்மா” என்று தந்தையைப் பற்றிச் சொன்ன வார்த்தைகள் காற்றோடு வந்து அவர் காதில் விழுந்தபோது, ஒரு நிமிடம் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு தூணில் சாய்ந்தார்.
“பார்த்தீங்களா… உங்க பொண்ணு ஜெயிச்சுட்டா…” என்று செல்வி பெருமையோடு அவரைப் பார்த்துச் சொன்னபோது கூட, அவர் பதில் பேசவில்லை. ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தவர், தன் அறையை நோக்கி மௌனமாகச் சென்றார். அந்த மௌனத்தில் மகளைப் பற்றிய பெருமையும் இருந்தது, அவளைத் தொலைத்துவிட்டோமே என்ற தீராத வலியும் இருந்தது!
தந்தையிடம் பேச விரும்பாமல் அலைபேசியை வைத்துவிட்டவளைப் கோபமாக பார்த்தான் சக்தி!.
“ஏன் அவர்கிட்ட பேசலை?”
“எனக்கு அவங்க வேணாம் மாமா” மென்மையாக ஆனால் உறுதியாக அவள் கூற,
“பழசை மறந்துடணும் நந்து. என்ன இருந்தாலும் அவர் உன்னைப் பெற்றவர். அம்மா அப்பா இல்லாம அனாதையா நிக்கறது என்னோட போகட்டும்டா” மனதால் உணர்ந்து அவன் கூற, சரமாரியாக அடிக்க ஆரம்பித்தாள் அவனது தர்மபத்தினி.
“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா இப்படிச் சொல்லுவ?” அடிக்கும் படலம் தொடர்ந்து கொண்டே இருக்க,
“எப்படிடி… பிசாசு… ஏன்டி அடிக்கற?” அவளைத் தடுத்துக்கொண்டே அவன் கேட்க,
“பின்ன? அனாதைன்னு எதுக்குச் சொல்ற? ஏன் நான் இல்லையா உனக்கு?” கோபாவேசமாக அவள் கேட்க, அவளை அடக்கும் வழி அறியாது கைகளோடு சேர்த்து முரட்டுத்தனமாக இடையோடு கட்டிக் கொண்டான்.
“நீ இல்லைன்னு நான் சொன்னேனா? நமக்கு பெரியவங்களும் வேணும்னு தானே சொல்றேன்” பேச்சு நல்லபிள்ளைத்தனமாக இருக்க, கைகள் எப்போதும் போல அதன் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்க,
“இப்போதைக்கு என் மனசோட வலி குறையப் போறதில்லை மாமா. எனக்கா நம்பிக்கை வரட்டும் அவங்க மேல; அப்புறமா பார்த்துக்கலாம்”
தெளிவாக முடித்தவளைக் காதலாகப் பார்த்தான் அந்த முரட்டு காதலன். அவனது பார்வை சொன்ன செய்திகளைப் புரிந்தவள், அவனது மூக்கைப் பிடித்துத் திருகி, “என்ன… சைட்டெல்லாம் ஓவரா இருக்கு?” என்று குறும்புடன் கேட்டாள். சக்திக்கு அவளை வம்பிழுக்கத் தோன்றியது.
“ஒரு மேட்டரை மட்டும் இன்னும் சார்ட் அவுட் பண்ணாம ட்ரைனிங் கிளம்பப் போறீங்களே கலெக்டரம்மா… அதான் என்ன பண்றதுன்னு யோசிக்கறேன்” மிகவும் சீரியஸாகக் கூறியவனைச் சற்று குழப்பத்தோடே பார்த்தாள்.
“என்ன மாமா சொல்றீங்க? அது என்ன மேட்டர்?”
அவளது ரியாக்ஷனைப் பார்த்துச் சிரித்துக்கொண்டவன், அவளிடம் கண்ணைச் சிமிட்டி, “அந்தத் த்ரீ மந்த் மேட்டர் கலெக்டரம்மா… த்ரீ மந்த் மேட்டர்” அவன் கூறிய தோரணையில் சட்டென்று முகம் சிவந்தவள்,
“ச்சீ” வெட்கப் புன்னகையோடு அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு, “இன்னுமா அதை ஞாபகம் வெச்சுருப்பீங்க? போங்க மாமா! எப்படியாவது உங்களைக் கட்டிக்கணும்ன்னு நானே ஆயிரம் சாமியை வேண்டிக்கிட்டு கஷ்டப்பட்டு ஒரு பொய் சொன்னா, இப்படி அதையே சொல்றீங்க” சிறுகுழந்தையாகச் சிணுங்கியவளை இறுக அணைத்துக் கொண்டான்!
“அந்த அளவு படிப்பு மேல ஆர்வம்… இல்லையா?” என்று அவன் சிரிக்க,
“இல்ல” ஒரே வார்த்தையில் அவள் முடிக்க,
“பின்ன?”
“இந்தப் பிசாசு மேல வந்த ஓவர் ஆர்வம். அவனை விட்டுடக் கூடாதேன்னு ஒரு தவிப்பு… அந்த முசுட்டு முருகேசன் கூட எப்போவுமே இருக்கணும்ங்கிற ஃபீலிங்ஸ்… இந்த முரடன் மேல எனக்கு இருந்த கன்னாபின்னா லவ்ஸ்தான் அந்த முடிவை எடுக்க வெச்சுது மாமா”
“புஜ்ஜி! எப்படிடி… நீ அதுக்கு முன்ன என்கிட்டே வம்பிழுப்ப, வாயாடுவ… ஆனா எப்படிடி இந்த அளவு லவ்? எனக்கு இன்னும் புரியவே இல்ல” காதலாகக் கேட்டவனைப் புன்னகையோடு பார்த்தாள் நந்தினி.
“தெரியலையே… எப்படின்னே தெரியல. முன்னமே உங்க மேல அட்ராக்ஷன் இருந்துச்சான்னும் தெரியல… ஆனா நான் என் லவ்வை ஃபீல் பண்ணவுடனே உங்ககிட்ட சொல்லிட்டேன் மாமா” அவளது மனதை மறையாமல் கூற,
“அதான் தெரியுதே… அவசரக்குடுக்கை” மூக்கைத் திருகி அவளிடம் அத்துமீற ஆரம்பிக்க, அவனிடம் பாந்தமாக அடங்கிக் கொண்டே,
“ஆனா நான் அப்போ ஃபீல் பண்ணதெல்லாம் லவ்வே கிடையாதுன்னு தான் தோணுது மாமா. மனசு விட்டுச் சொல்றதுன்னா எனக்கு ஒரு சேஃப் ஹைட் அவுட்… படிக்க வேண்டி… ஆனா கல்யாணத்துக்கு அப்புறம், சென்னை வந்ததுக்கு அப்புறம் ஃபீல் பண்ணிருக்கேன் பாருங்க… நிஜமா அதுதான் லவ்” உண்மையைக் கூறினாள்.
உண்மையை மறைக்காமல் அவனிடம் கூறியவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து மென்மையாக அணைத்துக் கொண்டான்.
“எனக்கும் அதே பீலிங் தான் புஜ்ஜி. கல்யாணத்துக்கு முன்ன நீ என்னை அட்ராக்ட் பண்ணின… ஒத்துக்கறேன். ஆனா கல்யாணம் பண்ணப்போ அவ்வளவு கோபம் தான் இருந்தது. ஆனா நாள் போகப் போக எப்படின்னே தெரியலடி… என்னோட உயிரா ஆகிட்ட நந்து” என்று அவளை இறுக்கிக் கொண்டவனிடம் இன்னமும் ஒன்றினாள் அவனது மனையாள்!
அவனது வார்த்தைகளிலும் செய்கைகளிலும் மயங்கி இருந்தவள், திடீரென்று நினைவு வந்தவளாக, “ட்ரைனிங் போகப் போறதை நினைச்சா ஒரு பக்கம் பெருமையா இருக்கு மாமா, ஆனா உங்களை விட்டுட்டு இருக்கணுமேங்கிற தவிப்புதான் அதிகமா இருக்கு” என்றவளின் கைகளை அழுத்திப் பிடித்தான் சக்தி.
“நீ தேடின லட்சியம் இதுடா. எனக்காக நீ கலங்கக் கூடாது. நீ ட்ரைனிங் முடிச்சுட்டு திரும்பி வர்ற வரைக்கும் உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பேன் நந்து…” மனதார அவன் கூற, அவன் கொடுத்த ஊக்கம் அவளுக்குப் பெரும் பலத்தைத் தந்தது.
பெருமையாக அவனைப் பார்க்க, முகம் முழுக்க புன்னகையோடு அவளது இடையை இறுக்கிக் கொண்டான் சக்தி!
இரவும் நிலவும் வளரட்டுமே!
***
அந்தப் பெண்கள் கல்லூரி விழாக்கோலம் பூண்டிருந்தது! இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டின் பட்டமளிப்பு விழா. பட்டாம்பூச்சிகளாகக் கல்லூரிப் பெண்கள் சுறுசுறுப்பாகப் பறந்து கொண்டிருந்தனர். ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சி பூ பூத்திருக்க, சிறப்பு அழைப்பாளராகக் கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் அழைக்கப்பட்டிருந்தார்!
கல்லூரி வாசல் பரபரப்பானது. ஆட்சியரின் வாகனம் வளாகத்தினுள் நுழைய, இறங்கியது நந்தினி ஐஏஎஸ்! கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர்!
தெளிவும் கம்பீரமுமாக இறங்கியவளை வரவேற்றார் கல்லூரி முதல்வர், முகம் முழுக்கப் பூரிப்பாக! அவரது கண் முன் குழந்தைத்தனமும் அனுபவமும் இல்லாத பழைய நந்தினி தோன்றினாள். அவளுக்குத் துடிப்பும் அதிகம், குறும்பும் அதிகம்; அதே சமயத்தில் குருட்டுத் தைரியமும் அதிகம். ஆனால் இப்போதைய நந்தினி அமைதியான, அமரிக்கையான, நிதானமான நந்தினி!
அளவான புன்னகையோடு முதல்வரிடம் பேசியவாறே உள்ளே சென்ற நந்தினியை ஆச்சரியமாகப் பார்த்தனர் அந்த விரிவுரையாளர்களான முன்னாள் மாணவிகள்!
முதல் வரிசையில் செல்வி, வேலுச்சாமியோடு, வெற்றி, தேவசேனா, வளர்மதி ஆகியோர் பெருமையாகப் பார்த்திருக்க, உடன் அமர்ந்திருந்தது சக்தியோடு அவர்களது மகன் அருணாசலம்!.
சக்திவேல் இப்போது வெற்றிகரமான தொழிலதிபர். அவனது மளிகைப் பொருட்கள் மொத்த விற்பனை மையம் மிகச் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தமிழகம் மட்டுமல்லாது தென்னிந்தியா முழுவதற்கும் அவன் சரக்குகளை விநியோகம் (Supply) செய்து கொண்டிருந்தான். பழைய முரட்டுத்தனமான சக்திவேலுக்கும், இன்று ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் இந்தத் தொழிலதிபருக்கும் இடையே இருந்த இடைவெளியை அவனது உழைப்பு நிரப்பியிருந்தது. அவனது உடையில் ஒரு நேர்த்தியும், பேச்சில் ஒரு பக்குவமும் கூடியிருந்தது.
அவனை அடையாளம் கண்ட முன்னாள் மாணவியர் பெருமையாக விழிகள் உயர்த்திச் சென்றனர். அவனது மகன் புறம் குனிந்து, அந்த ஐந்து வயது பெரிய மனிதனின் கேள்விகளுக்குப் பதில் கூறிக்கொண்டே மேடையில் அமர்ந்திருந்த மனைவியைப் பெருமையாகப் பார்த்தவனின் கண்களில் காதல் பொங்கியது!
திக்கற்றுத் திரிந்து கொண்டிருந்த புயல் காற்றை, அவளையும் அறியாமல் குடுவையில் அடைத்து முறைப்படுத்தியவள் நந்தினி. யாருக்காக உழைப்பது என்ற சக்தியின் நிலையை மாற்றி, ‘உனக்கு நான் இருக்கிறேன்’ என்று அவனை முதன்முதலாகத் தூண்டியவள் அவளே; அது அவளும் அறியாதது! தேவைகளே மனிதனை உழைக்கத் தூண்டுகிறது அல்லவா? ‘நம்மைச் சார்ந்து மனைவி இருக்கிறாள், நமக்குக் குடும்பம் இருக்கிறது’ என்ற அந்த நினைவு சக்திவேலைத் தூண்டிவிட்டது; உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
ஆக, அவனுக்கு அடையாளம் கொடுத்தவள் நந்தினி; ஆனால் அவளுக்கு அடையாளம் கொடுத்தது சக்தி. ‘காம்ப்ளிமெண்டரி டூ ஈச் அதர்’ என்பார்களே, அது போல! அனுபவம் இல்லாத நந்தினியை முறையாகச் செயல்படுத்தி, ஊக்கப்படுத்தி, அவளது சக்தியாகப் பின்னால் இருந்து அவளை முன்னிலைப்படுத்தியவனாக, மகனது கேள்விகளுக்குப் பதில் கூறிக்கொண்டிருந்த சக்தியைப் பெருமையாகப் பார்த்தார் செல்வி!
வேலுச்சாமிக்கும் நந்தினிக்கும் இன்றும் பேச்சுவார்த்தையில்லை. அவள் பேசுவதெல்லாம் தனது அன்னையிடம் மட்டுமே!
“ஒரு தடவை வீட்டுக்கு வாயேன் கண்ணு” என்று ஏக்கமாக அழைத்தவரை உணர்வில்லாத பார்வை பார்த்தாள் நந்தினி.
“எப்ப அப்பா எங்களுக்குச் சாப்பாட்டுல விஷத்தை வைக்க மாட்டார்ன்னு நம்பிக்கை வருதோ, அப்ப வரேன் மா”
நறுக்கென்று முடித்துவிட்டவளை நெஞ்சம் முழுக்க வலியோடு பார்த்தார் வேலுச்சாமி. சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிட்டாலும், எத்தனையோ பெண்களுக்குக் கௌரவத்தின் பெயரைக் கொண்டு காரியம் செய்ய உறுதுணையாக இருந்தவருக்கு அவரது மகள் கொடுத்த தண்டனை அது!
கவிதையாக நிகழ்வுகள் சக்தியையும் நந்தினியையும் ரசிக்க வைக்க, படித்துக் கொண்டிருந்த நந்தினியை மணந்து ‘இனி இந்தக் கல்லூரிக்கு வேன் ஓட்ட மாட்டேன்’ என்று அவளிடம் வெடித்துவிட்டுத் தலைகுனிந்து சென்றது எல்லாம் சக்தியின் நினைவுக்கு வந்தது. காலம் அருமையான நாடக ஆசிரியனாகத் தோன்றினான் சக்திக்கு! மேடு பள்ளமாவதும், பள்ளம் மேடாவதும் இயற்கையான ஒன்றல்லவா!
நிகழ்ச்சி முடிந்து ஒவ்வொருவரிடமும் விடைபெற்று ஆட்சியரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு வந்து சேர்ந்த போது, இருவருக்குமே மனம் என்றுமில்லாத அமைதியில் ஆழ்ந்து இருந்தது! சக்தி இரவு உடைக்கு மாறிக்கொண்டு மகனுக்கும் மாற்றிவிட்டு அவனோடு ஹாலில் அமர, செல்பேசி அழைத்தது. அழைத்தது நந்தன்.
“டேய் மாப்பு! என்னடா இந்த நேரத்துல?” சக்தி சிரித்தவாறே கேட்க,
“உன் தங்கச்சிக்கு என் தங்கச்சிகூட பேசணும்ன்னு தோணிட்டா நேரம் என்ன, காலம் என்ன ராசா? நாமதான் மோட்டுவளையைப் பார்த்துட்டு உட்கார்ந்துட்டு இருக்கணும்” நந்தன் நக்கலாகக் கூறிய விதத்தில் சிரிப்பு பீறிட்டது சக்திக்கு!
“சரிடா. வீட்ல எப்படி இருக்காப்ல? செஷல்ஸ் எல்லாம் சௌக்கியமா இருக்கா?” மிக மிகச் சிரமப்பட்டுப் பெண்ணைச் சம்மதிக்கச் செய்து, பத்து நாட்களுக்கு முன் திருமணம் செய்து, புது மனைவியோடு செஷல்ஸ் தீவிற்குத் தேனிலவு சென்று வந்த கையோடு சக்தியிடம் பேசிக் கொண்டிருந்தான் நந்தன்!
“அதெல்லாம் ரொம்ப ரொம்ப சௌக்கியமா இருக்காப்ல. நம்ம சௌக்கியம் தான் கேள்விக்குறியா ஆகிடுச்சே மச்சான்” நக்கலை கைவிடாமல் அவன் பேசிக்கொண்டிருக்க,
“வேற வழி? நீயும் நம்ம அப்பாவி ஹஸ்பண்ட் கிளப்ல ஜாயின் பண்ணிட்ட இல்லையா? இனிமேதான் ஆப்பு ஆப்பா கொடுப்பாங்க மச்சி. கெட் ரெடி டு கலெக்ட் ஆல் ஆப்பு”
சக்தியிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே அவனது முதுகில் படாரென்று அடி விழ, அப்பாவி லுக்கை மாற்றாமல் திரும்பிப் பார்க்க, வேறு யார்? அவனுடைய பதிவிரதை சித்ரா அல்லவா முறைத்துக் கொண்டிருந்தாள்!
“இல்லம்மா… சும்மா பேசிட்டு இருந்தேன்… ஹிஹி” என்று கூறும் போதே செல்பேசி பறிக்கப்பட்டது.
“சிங்கம் சிதைஞ்சு போச்சே” என்று புலம்பிக் கொண்டே இடத்தை காலி செய்ய, அந்தப் பக்கத்தில் சக்தியிடமிருந்து செல்பேசியைச் சுவாஹா செய்திருந்தாள் நந்தினி!
இருவருமாக அன்றைய நிகழ்ச்சியைப் பற்றியும் ஊர்வன, நகர்வன, பறப்பன என அனைத்தைப் பற்றியும் பேசிவிட்டு ஒரு வழியாகச் செல்பேசியை வைக்க, சக்தி வேண்டுமென்றே வானத்தைப் பார்த்து வேண்டிக் கொண்டான் குறும்பாக! அவனுக்கு ‘பத்திரம்’ எனக் காட்டிவிட்டு, நிறைந்த மனதுடன் இரவு உணவை எடுத்து வைத்துக் கொண்டே ஹாலை நோட்டம் விட்டாள் நந்தினி.
மகன் அருணாச்சலத்துடன் அமர்ந்து, அவன் விரும்பும் கார்ட்டூனைப் பார்த்துக்கொண்டு, கையில் பொம்மை காருடன் மகனிடம் பேசிக்கொண்டிருந்த சக்திவேலைப் பார்க்கையில் மனம் கசிந்தது. குழந்தையுடன் இருக்கும் போது குழந்தையாகவே ஆகிவிடும் கணவன் அவளுக்கு மிகவும் பிரியமானவன்!
அவளது பார்வையை உணர்ந்து, “என்னோட குழந்தைப்பருவத்தை என்னால அனுபவிக்க முடியல நந்து. இப்போ என் மகனோட சேர்ந்து அனுபவிக்கறேன். சந்தோஷமா இருக்கேன். ஐ லவ் இட்” என்று இயல்பாக அவளிடம் கூறிவிட்டு, மகனோடு சேர்ந்து ரிமோட் காரைப் பிரித்து ஒன்று சேர்க்கும் முயற்சியில் இருந்தவனைப் பார்த்து,
“பழசையே நினைச்சுட்டு இருக்காதீங்க மாமா” அவளது தாயுள்ளம் அவனைத் தனது மூத்த மகனாக நினைத்துத் தேற்றப் பார்த்தது.
“இல்லடா. பழசை நினைச்சு நான் வருத்தமே படலை; ஆனா அதை மறக்கவும் மாட்டேன். மறந்துட்டா மமதை நம்ம தலைல ஏறி உட்கார்ந்துடும். நம்ம அடிப்படையான குணம் மாறிடும்; அது தப்பு”
“மா! நம்ம அட்வைஸ் ஆறுமுகம் கிளம்பிட்டாரும்மா கிளம்பிட்டாரு” அந்த ஐந்து வயது பொடுசு தன் தந்தையைத் தாயைப் போலவே கிண்டலடிக்க,
“ஆமா குட்டியப்பா… ஆமா. இந்த முசுட்டு முருகேசன் அட்வைஸ் ஆறுமுகமா அவதாரம் எடுத்துட்டாரே” பொங்கிய சிரிப்பை அடக்க முடியாமல் மகனுக்கு ‘ஹை-ஃபை’ கொடுத்தபடி அவனுக்கு இரவு உணவு ஊட்ட ஆரம்பித்தாள். இருவரையும் பொய்க் கோபத்துடன் பார்த்தான் சக்தி.
“இதுல மட்டும் ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துடுவீங்களே” முகத்தை வேண்டுமென்றே சுளித்துக்கொண்டு கூற,
“எதுல அப்புப்பா?” வேண்டுமென்றே கொஞ்சிக்கொண்டு கேட்ட மகனை இழுத்துத் தன்னோடு அணைத்துக்கொண்டு,
“என்னைக் கிண்டலடிக்கறதுன்னா அம்மாவுக்கும் பையனுக்கும் ஏக குஷி” மகனை கிச்சு கிச்சு மூட்டிக் கொஞ்சிக் கொண்டே கூற, குழந்தை பெரிய குரலில் சிரிக்க, நந்தினி இருவரின் பிணைப்பைப் பார்த்து மனம் நெகிழ்ந்தாள்!
“பின்ன… எங்களுக்குக் கிடைச்ச ஒரே அடிமை நீங்கதானே மாமா. வேற யாரைக் கிண்டலடிக்கறதாம்?”
“இருடி. இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு என் பொண்ணு வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கறேன். என் குட்டிப் பொண்ணு எனக்குத்தான் சப்போர்ட் பண்ணுவா” குறும்பாகக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு கூற,
“பொண்ணா? ரெடிமேட் பொண்ணு கடையில விற்கறாங்களா மாம்ஸ்?” அவளும் குறும்பு மாறாமல் கேட்க, சக்திவேல் மூக்கைச் சுருக்கிக்கொண்டு முகம் முழுக்கச் சின்னக் கண்ணனின் புன்னகையை ஏந்தி மகனை நோக்கி,
“டேய் குட்டியப்பா! நாம விளையாட நமக்குக் குட்டிப் பாப்பா வேணுமா வேணாமா?” பிடிக்க வேண்டிய இடத்தைப் பிடித்துக் கேட்க, சின்னது அவசரம் அவசரமாகத் தலையாட்டியது.
“ஆமா அப்புப்பா. நமக்கு விளையாடக் குட்டியூண்டு பாப்பா வேணும்”
“அப்போ அம்மாகிட்ட கேளு” குறும்பு மாறாமல் மகனிடம் போட்டுக்கொடுக்க,
“மா! எனக்குக் குட்டிப் பாப்பா வேணும்” தீவிரமாகக் கேட்க ஆரம்பித்தவனைப் பார்த்துச் சிரித்தாள் நந்தினி.
“டேய்! அது என்ன விளையாட்டு சாமானா? உடனே வாங்கித் தர?”
“அதெல்லாம் தெரியாது. எனக்குக் குட்டிப் பாப்பா வேணும். தந்தாதான் சாப்பிடுவேன்” மூக்கைச் சுருக்கி அழத் தயாரானவனைத் தன்னோடு அணைத்துக்கொண்டான் சக்தி. நந்தினியைக் குறும்பாகப் பார்த்துக்கொண்டே,
“அச்சோ குட்டியப்பா! அழாதடா. அம்மா கண்டிப்பா இன்னும் கொஞ்ச நாள்ல குட்டிப் பாப்பா தந்துடுவா. அதுவரைக்கும் நாம ஒரு பாட்டைப் பாடிக்கிட்டே இருக்கலாம்… ஓகேவா?” தந்தை கூறிய சமாதானத்தை ஒத்துக்கொண்ட அந்தப் பெரியவர், “என்ன பாட்டு அப்புப்பா?” என்று கேட்க,
“குச்சி குச்சி ராக்கம்மா பொண்ணு வேணும்… கூடசாலி ராக்கம்மா பொண்ணு வேணும்…”
அவனது மகனும் உடன் சேர்ந்து கொண்டு பாட, இருவரையும் செல்லமாக முறைத்தாள் நந்தினி.
“நீங்க கெட்டதும் இல்லாம பையனையும் கெடுக்குறீங்களா? பிசாசு!” முதுகில் அடி வைத்துவிட்டுத் தப்பித்து ஓடப் பார்க்க, அவளது நீண்ட பின்னலைப் பிடித்து இழுத்தவனின் இழுப்பில் நந்தினி சக்தியின் மேலே வந்து விழுந்தாள். அவள் விழுந்ததைப் பார்த்து குட்டி சிரிக்க ஆரம்பித்தான்.
சக்தி மனைவியையும் மகனையும் ஒரு சேர அணைத்துக்கொண்டு சிரித்தான்!
இந்தச் சந்தோஷத் தருணம் எப்போதும் நீடிக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இயற்கையை வேண்டிக்கொண்டு நாமும் விடைபெறுவோமாக!





