arrow_back
தித்திக்குதே அத்தியாயம் இருபத்து ஐந்து
தித்திக்குதே chevron_right பகுதி 25 / 26

அத்தியாயம் இருபத்து ஐந்து

visibility 3
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அதிர்ச்சியோடு தனித்து அமர்ந்திருந்த சித்ராவின் தோளைத் தொட்டான் சுஷாந்த்! அந்தத் தீண்டலில் மின்சாரம் தாக்கியது போலத் துடித்துப் போய் நகர்ந்து அமர்ந்தாள் சித்ரா. அவளது கண்கள் அனிச்சையாகக் கீர்த்திவாசனைத் தேடின. அங்கே அவன் கௌஷலின் மனைவியோடு மிக நெருக்கமாக, நாகரிகத்தின் எல்லைகளைத் தாண்டிக்கொண்டிருந்தான். தன் மனைவியை வேறொருவன் தீண்டுவதைக் கண்டும், அவன் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை; மாறாக, ஒரு வக்கிரமான திருப்தியே நிலவியது.

“ரிலாக்ஸ் சித்ரா… இது ஜஸ்ட் ஒரு பார்ட்டி தான். கம் ஆன், ஹேவ் எ சிப்” என்று சுஷாந்த் அவளது காதருகே வந்து கிசுகிசுக்க, அவனது மது வாடை அவளுக்கு குமட்டலை ஏற்படுத்தியது.

சித்ராவுக்குத் தலை சுற்றியது. சுற்றி நடக்கும் அசிங்கங்களை அவளது கண்கள் நம்ப மறுத்தன. ஒருபுறம் கௌஷல், சுஷாந்தின் மனைவியைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டு மது அருந்திக் கொண்டிருந்தான். அந்தப் பெண்களும் இதைச் சாதாரணமான ஒன்றாக ஏற்றுக்கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது, சித்ராவுக்குப் பெரும் அருவருப்பைத் தந்தது.

“ப்ளீஸ்… எனக்குத் தலை வலிக்குது. நான் ரூமுக்குச் போறேன்” என்று சித்ரா தழுதழுத்த குரலில் கீர்த்திவாசனை நோக்கிக் கூறினாள்.

அவளது சொற்களைக் கேட்டதும் ஆடிக்கொண்டிருந்த கீர்த்திவாசன் சட்டென நின்றான். அவனது கண்கள் சிவந்திருந்தன. மெல்ல அவளருகே வந்தவன், அவளது தோளை இறுக்கமாகப் பற்றி, “இன்னும் பார்ட்டியே ஆரம்பிக்கல சித்து… அதுக்குள்ள கிளம்பினா எப்படி? என் பிரண்ட்ஸ் உன்னைப் பத்தி ரொம்ப ஹையா பேசிட்டு இருக்காங்க. உன்னோட வீடியோஸ் அவங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுச்சு. அவங்களை டிஸ்ப்பாயிண்ட் பண்ணாதே” என்று எச்சரிக்கும் தொனியில் மெல்லிய குரலில் கூறினான்.

அவளது காலடியில் நிலம் பிளந்து விடாதா என்று சித்ராவுக்கு தோன்றியது. குமட்டிக் கொண்டு வந்தது. தோள் கழண்டு விடும்போல வலித்தது.

அவளது கண்களில் கண்ணீர் வெள்ளம்!

சுஷாந்த் இப்போது சித்ராவினருகே இன்னும் நெருங்கி வந்து அமர்ந்தான். “கீர்த்தி, உன் ஒய்ப் ரொம்ப ஷையா இருக்கா… ஐ லைக் இட்” என்று கூறிக்கொண்டே அவளது கூந்தலை வருடினான்.

சித்ராவுக்குத் தன் உடம்பே எரியத் துவங்கியது. பெற்றோர்கள் அவசரமாக அவளை இந்த நரகத்தில் தள்ளிவிட்டுச் சென்றதை நினைத்து மனதிற்குள் கதறினாள். ‘மிருகம்… இவர்கள் மனிதர்களே இல்லை’ என்று அவளது உள்மனம் அலறியது.

சுற்றி இருந்தவர்களின் சிரிப்பொலியும், அந்த மேற்கத்திய இசையும் அவளுக்குச் சாவு மேளமாக ஒலித்தன. தப்பிக்க வழியில்லாத பாழுங்கிணற்றில் விழுந்தது போன்ற உணர்வு அவளை ஆட்கொள்ள, கண்களில் இருந்து நீர் வழிந்து அவளது கன்னங்களை நனைத்தது.

***

அவளைப் பிழைத்துத் தின்னக் காத்திருந்த வல்லூறுகளிடம் போராட முடியாமல் உடலில் தெம்பில்லாமல் பின்வாங்கத் துவங்கியிருந்தாள் சித்ரா. ஆனாலும் மூளை ‘விட்டுவிடாதே போராடு’ என்று கதறிக் கொண்டிருந்தது. தன் தாய் பெற்று வளர்த்தது இதற்குத்தானா? தாவணி சிறிது நெகிழ்ந்தாலும் அவசரமாகச் சரி செய்வாளே, காப்பாற்றிய அந்த கண்ணியம் எல்லாம் இந்த ராட்சசர்களிடம் தோற்றுப் போகத்தானா?

அரக்கனிடம் வாழ்க்கைப்பட்டு அவனிடம் பட்டுக் கொண்டிருந்த துன்பங்கள் போதாது என, இந்த அசுர கூட்டத்திடமும் தன்னை விளையாட்டுப் பொருளாக்கிய அந்தக் கயவனை எதிர்க்க முடியாமல் எரித்து விடுவதைப் போலப் பார்த்தாள்.

சுற்றுப்புறம் மங்கலாகத் தெரிய, சுஷாந்தின் அருவருப்பான தீண்டல் அவளை வெறி கொள்ளச் செய்தது. எங்கிருந்து வந்ததென்றே தெரியாத ஆவேசத்தில், தன் கால்களைச் சுருட்டி அவன் வயிற்றை நோக்கி ஓங்கி உதைத்தாள். எதிர்பாராத அந்தத் தாக்குதலில் நிலைதடுமாறிய அவன், பின்னால் இருந்த டீபாயின் மீது சரிந்தான்

சுஷாந்தின் மனைவி அலங்கோலமான உடைகளோடு அவனை அவசரமாகத் தூக்க வர, சித்ரா விட்ட உதை மிகச்சரியான இடத்தைத் தாக்கியிருக்க, அந்த உயிர் போகும் வலியோடு அவன் விழுந்ததில் டீபாயின் முனை பின் மண்டையைத் தாக்கியிருக்க, அந்த வலியோடும் கத்தினான்.

“யு டர்ட்டி பிட்ச்… ஹவ் டேர்…”

அதற்கு மேலும் கத்த முடியாமல் வலி அவனைக் கட்டிப் போட, நடந்தவைகள் சில நொடியில் நிகழ்ந்து முடிந்திருக்க, கீர்த்திவாசன் சித்ராவை நோக்கிப் கோபமாக வந்தான். அவனது முகத்தில் வெறி தாண்டவமாடிக்கொண்டிருந்தது! அப்போது அவன் முன்னர் நின்று கொண்டிருந்தது அவனது மனைவியாகக் கூட அவனுக்குத் தென்படவில்லை; குறைந்தபட்சம் மனிதப் பெண்ணாகக் கூட அவனால் நினைக்க முடியவில்லை. தனது மகிழ்ச்சியைக் குலைக்க வந்தவளாக மட்டுமே பார்த்தான்.

அவனுக்குள் இருந்த அதிபயங்கரமான மிருகம் அவளைத் துண்டாடும் வெறியோடு அவளது முடியைக் கற்றையாகப் பிடித்துப் பக்கத்தில் இருந்த சுவரில் மோதியது.

“அம்ம்ம்மாஆஆ…” வலி தாங்க முடியாமல் உயிர் கூட்டிலிருந்து விடுதலை கிடைக்காதா என்று ஏங்கினாள். அவன் சுவரில் இடித்ததில் நெற்றியிலிருந்து ரத்தம் வடிய, அந்த அரக்கன் கலங்கலாகத் தெரிந்தான் அவளுக்கு. அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தாலும் சிறு சப்தமோ, தப்பிக்க நினைக்கும் மனோபாவமோ கூட அவளுக்குள் இருக்கவில்லை!

மூன்று பேரிடம் சோரம் போவதற்கு இறந்து போய்விடுவதே மேலல்லவா? அவள் அறிந்ததெல்லாம் உயிரை விட மானம் பெரிதாயிற்றே!

ஆனால் கற்புக்குச் சிறப்பே அதைத் தன்னவன் காக்கும் போதுதானே? வேலியாய் இருக்க வேண்டியவனே கறுப்பாடுகளைத் துணைக்கழைத்துச் சீரழிக்க நினைத்தால், கற்புக்கு என்ன மதிப்பு வந்துவிடப் போகிறது? ‘ஆண்களுக்கும் வேண்டும் கற்பு’ என்று கல்லூரியில் வாதாடியது எல்லாம் கலங்கலாக அவளது கண்களுக்குள் வந்து போனது; இவன் மனிதனாக இருந்தாலல்லவா அந்த நியதிகள் பொருந்தும்?

எந்த எதிர்ப்பும் காட்டாமலிருந்த மனைவியைக் கண்டபோது வெறி ஏறியது அவனுக்கு! பற்றியிருந்த முடியோடு சேர்த்து வீசித் தள்ளி விட, அங்கிருந்த டைனிங் டேபிளின் மேல் விழுந்தாள்.

உடனிருந்தவர்களுக்கு ‘இவன் சித்ராவைக் கொன்று தாங்களும் சிக்கலில் சிக்கிவிடுவோமோ’ என்ற பயம் பீடித்துக் கொள்ள, அவசரமாக அவனை ஆசுவாசப்படுத்தத் துவங்கினர்!

“வாஷ்… கூல் டவுன்… ப்ளீஸ் கூல் டவுன்”

அந்த வார்த்தைகளெல்லாம் அவன் காதுகளில் விழுந்தால் தானே? வெறி தலைக்கேற, டைனிங் டேபிளின் மேல் விழுந்திருந்த மனைவியை நோக்கிச் சென்றான்.

தலையில் வழிந்த காயத்தோடு கிளாஸ் டாப் டேபிளில் மோதியது வேறு வலி உயிர் போக, மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தாள். பழம் வெட்டும் கூர்மையான கத்திகள் கொண்ட ஸ்டாண்ட் நடுநாயகமாக வீற்றிருந்தது.

மின்னல் வேகத்தில் சக்தியைத் திரட்டிக்கொண்டு எழுந்தவள் கத்தியை எடுத்தாள். விளைவுகள் எதுவாக இருந்தாலும் சரி, என்னவென்றாலும் பார்த்துவிட வேண்டியதுதான் என்று அந்த நொடியில் முடிவு செய்தாள் சித்ரா! அந்த விளைவு என்பது தன் உயிரே போவதானாலும் என்பதுதான்!

“ஏய் கத்தியைக் கீழ போடு” கோபமாகக் கீர்த்திவாசன் அவளை நோக்கி வந்தான்!

“முடியாது” தன்னைத் குத்திக் கொள்வதற்காகக் கத்தியைத் தன்னை நோக்கிப் பிடித்துக் கொண்டாள்.

“உன் கூட வாழறதுக்கு பேசாம உயிரை விடறதே பெட்டர்”

உயிர் போகும் வலியிலும் அவள் உறுதியாக நின்று கொண்டு கூறிய விதம் அவனுக்குள் இருந்த மிருகத்தை மிக மோசமாகத் தட்டி எழுப்ப, நண்பர்கள் என்று கூறிக்கொண்டிருந்தவர்கள் அந்த இடத்திலிருந்து மாயமாகும் வழியை ஆராய்ந்து கொண்டிருந்தனர்.

“ஏய்… கத்தியைக் கீழ போடு. இல்லைன்னா நானே கொன்னுடுவேன்டி” வெறிப்பிடித்த மிருகமாக அவளை மிரட்ட,

“ஹா… இதுக்கு மேலவும் என்னைக் கொல்றதுக்கு மிச்சம் வேற இருக்கா உனக்கு? பக்கத்துல வந்தா நானே குத்திக்குவேன். பக்கத்துல வராத”

“எப்படியோ சாவு. ஆனா என் வீட்ல சாவாத. எங்கயோ போய் சாவுடி” என்று மிக அருகில் வர, அவனது வார்த்தை அவளைத் துண்டாடிவிட்டுச் செல்ல, சட்டென்று முடிவை மாற்றினாள். தான் எதற்காக இறக்க வேண்டும்? இந்த மிருகம், அரக்கன், அசுரனே வதம் செய்யப்பட வேண்டியவன் அல்லவா? இந்த வெறிப்பிடித்த மிருகம் உயிரோடு இருக்கவே கூடாத ஜந்துவாயிற்றே!

தன்னை நோக்கி நீட்டிக் கொண்டிருந்த கத்தியைத் திருப்பி அவனை நோக்கினாள். கத்தியைப் பறிக்கும் நோக்கில் அவளது உறுதியைப் பற்றிக் கவலைப்படாமல் அருகில் வந்தவனது வயிற்றில் கண்ணிமைக்கும் நேரத்தில் கத்தியை இறக்கினாள்.

“ஹக்…” சிறு சப்தம் மட்டுமே அவனிடமிருந்து வர, அதே கத்தியை உருவி அவளால் ஆன மட்டும் வெறியோடு மீண்டும் சொருகினாள்.

அவள் கீர்த்திவாசனை கத்தியால் குத்தியதைக் கண்ட அவனது நண்பர் குழாம் அலறியடித்துக் கொண்டு வாசலை நோக்கி ஓடியது. அவளுக்கிருந்த வெறியை எல்லாம் அந்த நேரத்தில் ஒன்று திரட்டி கீழே விழுந்த அவனை மாறி மாறித் குத்தினாள்.

நெஞ்சிலும் வயிற்றிலுமாக அவள் குத்திக் கொண்டே இருக்க, ரத்த வெள்ளத்தில் மிதந்த அவன் கடைசியாகக் கண்டது கண்ணீர் வழிய கத்தியை ஏந்திய தன் மனைவியை மட்டுமே!

அவனது நண்பர்கள் ஓடியிருக்க, பிணமாகத் தன் முன் இருந்த கீர்த்திவாசனை வெறுமையாகப் பார்த்துச் சிரித்தாள் சித்ரா. சிரித்தாள்… சிரித்துக் கொண்டே இருந்தாள்.

சிறிது நேரம் போகக் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாகப் பெருக, அவளையும் அறியாமல் வாழ்க்கையை நினைத்துக் கதறத் துவங்க, கீர்த்திவாசனின் செல்பேசி அழைக்கத் துவங்கியது. எடுத்துப் பார்த்தாள்; அழைத்தது தன் தந்தை. கசப்பாகப் பார்த்தவள் செல்பேசியை விட்டெறிந்தாள். விழுந்து உடைந்து சுக்குநூறானது!

மெதுவாக எழுந்தவள், கீர்த்திவாசன் ஒளித்து வைத்த தனது செல்பேசியைத் தேடி எடுத்தாள். கைகள் தாமாகச் சக்தியின் எண்ணை அழுத்தின.

“அண்ணா…” ஈனஸ்வரத்தில் அவனை அழைக்க, ஒரு நிமிடம் பேச்சற்று இருந்த சக்தி அதிர்ந்திருக்க வேண்டும்.

“அண்ணா…” சக்தியைத் திரட்டிக்கொண்டு அவள் அழைக்க,

“சித்ரா… என்னம்மா என்னாச்சு?” அதிர்ந்த குரலில் சக்திவேல் கேட்க,

“வீட்டுக்கு வாங்கண்ணா. கொஞ்சம் சீக்கிரம்… ப்ளீஸ்” அடக்கி வைக்கப்பட்ட அழுகையோடு அவள் கூறுவது தெரிய, அடுத்த நொடி சக்தி கிளம்பியிருந்தான் நந்தினியோடு!

***

செலுத்தப்பட்ட மருந்துகளின் தாக்கத்தில் சித்ரா உறங்கிக்கொண்டிருக்க, அவளது முகம் நிர்மலமாக, நிம்மதியாக இருந்தது விடுதலை உணர்வோடு! அருகில் அமர்ந்திருந்த நந்தினி அழுது களைத்திருக்க, தேவையான மருந்துகளை வாங்கி வந்த சக்தி கண்ணில் வலியோடு அங்கிருந்த டேபிளில் வைத்தான்.

நந்தினிக்கு வாங்கி வந்த உணவும் சீண்டப்படாமல் இருக்க, அவனுமே உண்ணவில்லை. கிழிந்த நாராக நினைவு திரும்பாமல் படுக்கையிலிருந்த சித்ராவைப் பார்க்கையில் உணவு உள்செல்ல மறுத்தது. அறைக்குள் நுழைந்த செவிலிப்பெண் உடல் இயக்கங்களைச் சரிபார்க்க, நந்தினிக்கு மீண்டும் மீண்டும் சித்ராவின் வீட்டில் கண்ட காட்சியும் சம்பவங்களுமே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வரவேற்ற சித்ராவைப் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்குச் சென்றனர் இருவரும். நெற்றியில் வழிந்த ரத்தத்தோடு கைகளும் ரத்தத்தில் குளித்திருக்க, தள்ளாடிக்கொண்டு நின்றவளை ஓடிச் சென்று தாங்கிக்கொண்டாள் நந்தினி.

“சித்ராஆஆஆ…”

“நந்து…” அவளது கண்களில் அருவி!

“என்னாச்சும்மா?” அதிர்ந்த குரலில் கேட்ட சக்தியைப் பார்த்து வெறுமையாய் புன்னகைத்தாள்.

“கொன்னுட்டேன். அவனை கொன்னுட்டேன்” உறுதியான குரலில் அவள் கூற, அவசரமாக உள்ளே ஓடினான் சக்தி!

ரத்த வெள்ளத்தில் கீர்த்திவாசன். மனம் பகீரென்றது! மீண்டும் சித்ராவிடம் ஓடினான்.

“பிரெண்ட்ஸ்ன்னு சொல்லிட்டு ரெண்டு பேரை கூட்டிகிட்டு வந்தான். எல்லாருமா சேர்ந்து…” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தள்ளாட,

“வேணாம்மா. சொல்ல வேணாம்” அவசரமாக மறுத்துவிட்டு, “முதல்ல நீ கிளம்பு. ஹாஸ்பிடல் போகலாம்” அவளது நிலையைப் பார்த்துப் பதற்றமாக உரைத்தான்.

அவளிடம் சக்தி பேசிக்கொண்டிருக்கும் போதே மயக்கத்தில் ஆழத் துவங்கினாள். அவள் கீழே விழுவதைப் பார்த்து இருவரும் அவசரமாகத் தாங்கிப் பிடிக்க, நந்தினியோ சித்ராவின் நிலையைக் கண்டு கண்ணீரில் மிதந்தாள்.

“பத்திரமா பிடிச்சுக்கோ நந்தினி. ஆட்டோவைக் கூட்டிகிட்டு வரேன். ப்ச்… அப்புறமா அழுதுக்கலாம்”

அவளோடு சரிந்து சிட் அவுட் சோபாவில் அமர்ந்தவள், கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் துடைத்துக்கொண்டே இருந்தாள். தோளில் அவளது தோழி மயங்கிக் கிடக்க, அவளது நிலை நந்தினிக்கு ஆற்றாமையாக இருந்தது. சிறு வயது முதலே ஒன்றாகச் சுதந்திரமாகப் பறந்து திரிந்த அந்த காலம் வராதா என்று ஏங்கினாள்!

வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் எதை வைத்திருக்கிறது என்பதை அறிந்துவிட்டால் அவர்தாம் கடவுளன்றோ!

அவசரமாகச் செல்பேசியை உயிர்ப்பித்து, முக்கியமாகத் தகவல் கூற வேண்டியவனுக்குக் கூறிவிட்டு, 100-க்கு அழைத்து கொலை நடந்ததைத் தெரிவித்தான்.

அவசரமாக ஆட்டோவை அழைத்து வந்தவன், நந்தினியிடமிருந்து சித்ராவைப் பிரித்துத் தன் கைகளில் ஏந்திக்கொண்டான். நந்தினி கண்களைத் துடைத்தவாறே பின்தொடர, வெளிச்சத்தை நோக்கிச் சென்றான் சக்திவேல் கையில் அவளை ஏந்திக்கொண்டு!

***

கம்பீரமாக அந்த மருத்துவமனைக்குள் நுழைந்தான் அவன்!

ஆறடி உயரம், கூர்மையான கண்கள், ஒவ்வொரு அங்குலத்திலும் சுத்தம், மழித்த தாடை, அளவான மீசை, திமிறும் தோள்கள், இறுக்கமான டி-ஷர்ட், படிய வாரிய போலீஸ் கிராப்! அவன் நந்தன் ஐபிஎஸ், அசிஸ்டன்ட் கமிஷனர்!

அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்த சக்திவேலைப் பார்த்தவுடன் புன்னகைத்தவன், அருகில் சென்று அணைத்துக் கொண்டான்! தள்ளி நின்று அவனைப் பார்த்து ரசித்த சக்தி,

“கொஞ்சம் கூட மாறவே இல்லடா நீ…”

“நீயும் தான் சக்தி” இருவரின் புன்னகையும் பெரிதானாலும் சக்தியின் முகத்தில் இருந்த சிந்தனை புரிந்தவன்,

“சக்தி, இந்த கேஸை அந்த லோக்கல் இன்ஸ்பெக்டரே முடிச்சிருக்கலாம். ஆனா, இது வெறும் ஒரு கொலையா மட்டும் எனக்குத் தெரியல. இதுக்கு பின்னாடி இருக்கிற அந்த ஊர் ஜாதி அரசியல், கௌரவக் கொலைகள் எல்லாத்தையும் வேரோட எடுக்கணும்னு நினைக்கிறேன். அதான் நானே பெர்சனலா இன்டர்வைன் பண்றேன்.”

நந்தன் கூறிக்கொண்டிருக்கும் போதே அறைக்குள் தலைமை மருத்துவர் நுழைவதைக் கண்டவர்கள், பேசுவதை நிறுத்திவிட்டு அவரைத் தொடர்ந்தனர்!

“ஹவ் இஸ் ஷி டாக்டர்?” கூர்மையான பார்வையோடு அவன் கேட்க,

“கண்டிஷன் ஸ்டேபிள் தான். பட் பேட்லி இஞ்சுர்டு… லக்கிலி தலைல அடிபட்டது ஹெமரேஜ்ல கொண்டு போய் விடல. ஆனா உடம்பு முழுக்க காயம். இந்த அளவு புரூட்டலா ஒருத்தரை ட்ரீட் பண்ண முடியுமா? காட்… உப்ப்ப்…” அந்த வயதான மருத்துவரின் முகம் சித்ராவுக்காக மிகவும் பரிதாபப்பட்டது!

அதைக் கேட்ட சக்திவேலுக்கு ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்பைச் சொல்ல வார்த்தைகள் குறைவே! இறந்துவிட்ட கீர்த்திவாசனுக்காகச் சிறிதளவும் மனம் இறங்கவில்லை. இந்த அரக்கனை இன்னும் கொடுமையாகக் கொன்றிருக்க வேண்டுமென்று நினைத்தான் சக்தி.

அன்று சித்ராவின் வேண்டுகோளுக்கு இணங்கி அவளது வீட்டில் விட்டதுதான் தவறு என்று நினைத்தான் சக்திவேல். எப்படியிருந்தாலும் தன் கையால் இறந்திருக்க வேண்டியவன்; சித்ரா முந்திக்கொண்டாள். முடிவு என்பது அவள் கையினால் இருக்க வேண்டுமென்பதை இயற்கை விரும்பியிருக்கிறது போலும். ஆனாலும் அதற்கு முன் அவள் பட்ட வேதனை… மனம் அதை நினைத்துக் கொதித்தது!

“டாக்டர்… இதையெல்லாம் கம்ப்ளீட் ரிப்போர்ட்டா தந்திடுங்க. கோர்ட்ல சப்மிட் பண்ண சௌகரியமா இருக்கும்” நந்தன் அவரிடம் கேட்க,

“சியூர்… கண்டிப்பா” என்று மொழிந்துவிட்டுச் சென்றார்.

“நந்தா… வேற வழியே இல்லையா? சித்ராவை கோர்ட்ல புரொடியூஸ் பண்ணித்தான் ஆகணுமா?” கண்களில் எதிர்பார்ப்போடு அவன் கேட்க,

“ஆமா சக்தி. ஆனா நான் பார்த்துக்கறேன். சட்டத்துல ஆயிரம் ஓட்டை; அதுல ஒண்ணுல நம்ம பொண்ணைத் தப்பிக்க வெச்சா போகுது. எவன் எவனுக்கோ சட்டம் வளையும் போது நல்லதுக்காக கொஞ்சம் வளைஞ்சா தப்பில்ல. ஆனா அதுக்கு முன்னாடி சார்ட் அவுட் பண்ண வேண்டியது இன்னொன்னு இருக்கு சக்தி. அதை அந்தப் பொண்ணுகிட்ட பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம்” சக்திவேலிடம் திடமாகக் கூறியவன் சித்ராவை நோக்கிச் சென்றான்.

அருகில் இருந்த நந்தினி சித்ராவுக்குக் கஞ்சியை மெதுவாகப் புகட்டிக் கொண்டிருக்க, வெறுமையான கண்களோடு மறுக்காமல் பருகினாள். நந்தினியின் கண்களும் கலங்கியிருக்க, சக்தியைப் பார்த்துவிட்டு அவசரமாகக் கண்களைத் துடைத்தாள். சித்ராவுக்கு முன் அழுதுகொண்டிருந்தவளைச் சிறிது நேரம் முன்புதான் கோபத்தில் வாட்டியெடுத்து விட்டுப் போயிருந்தான்!

“நந்து! அழுது அழுது கரையாத. அந்தப் பொண்ணு பலவீனமாகிடும்ன்னு சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டியா? அழுகறதுன்னா தனியா போய் அழுது வைடி. இதே தெரியாம நீ எப்படி ஐஏஎஸ் ஆகி… பிரச்சனையெல்லாம் சமாளிச்சு…?” என்று இடைவெளி விட்டவன், “இன்னொரு தடவை அது முன்னாடி அழுகறதைப் பார்த்தேன்… உன்னை முதல்ல பேக் பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுவேன். ராஸ்கல்!”

அவன் கடித்து விட்டுச் சென்றதில் உணர்வுகளை அடக்கிக்கொண்டு சித்ராவைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவ்வப்போது அவளையும் அறியாமல் வழியும் கண்ணீரை எதைக்கொண்டு அடக்குவது என்று நந்தினிக்குப் புரியவில்லை.

வெறுமையான பார்வையோடு உள்ளே வந்த இருவரையும் பார்த்தாள். ஒருவன் அவளது கணவன், இன்னொருவன் யார் என்ற கேள்வியில் நந்தினியின் புருவம் உயர்ந்தது.

மெளனமாக அவர்களை நோக்கி வந்த நந்தன், கட்டிலுக்கு அருகில் இருந்த சேரை இழுத்து அமர்ந்து, கூர்மையாகச் சித்ராவை ஆராய்ந்தான். அவளது கண்களில் வெறுமை மட்டுமே குடிகொண்டிருக்க, நந்தனை நேர்பார்வையாகப் பார்த்தாள்; குற்றவாளிகளிடம் காணப்படாத பார்வை!

“எஸ்… சொல்லுங்க சித்ரா… வாட் ஹேப்பன்ட்?” நேரடியாக விஷயத்திற்கு வர,

“அவனை கொன்னுட்டேன். அவ்வளவுதான்” சித்ராவும் நேரடியாகச் சுருக்கமாக முடிக்க,

“யாரை?” விடை தெரிந்திருந்தாலும் அவள் என்ன கூறுகிறாள் என்பதை ஆராய்ந்தான் நந்தன்!

“என் கழுத்துல தாலி கட்டுனவனை” குரல் மெலிதாக இருந்தாலும் அவளது குரலின் உறுதியும் தெளிவும் அவள் தனது செயலுக்குச் சிறிதும் வருத்தப்படவில்லை என்பதைக் கூறின.

“அப்படீன்னா உங்க ஹஸ்பண்ட்…” வேண்டுமென்றே அந்த வார்த்தையை நந்தன் கூற, கோபமாக நிமிர்ந்தாள்!

“இல்லை… அரக்கன்!” நறுக்கென்று அவள் கூறியது நந்தனை நிமிர்ந்து அமர வைத்தது!

“ஓகே… சோ… அவரை எதுக்கு கொன்னீங்க? டெல் மீ தி ரீசன்”

“அது உங்களுக்குத் தேவையில்லை”

“கோர்ட்ல அப்படிச் சொல்ல முடியாதே மிஸஸ் கீர்த்திவாசன்”

“நிறுத்துங்க சார்! என்னை மிஸஸ் கீர்த்திவாசன்ன்னு கூப்பிடாதீங்க” கோபத்தில் முகம் சிவந்து சித்ரா கத்தத் துவங்க, சக்தி நந்தனை குற்றப் பார்வை பார்க்க, நந்தினி அவளை அவசரமாக ஆசுவாசப்படுத்தினாள்!

“இப்படி மறுத்துப் பேசற தைரியம் உங்களுக்கு முதல்லையே இருந்திருந்தா இந்த சிச்சுவேஷன் வந்திருக்காதே சித்ரா. அதோட உங்க அக்காவுக்கு தைரியம் இருந்திருந்தா தங்கவேல் அநியாயமாக் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டானே”

நிதானமாக அவளது விழிகளை நேராகப் பார்த்து நந்தன் உரைக்க, சித்ராவோடு நந்தினியும் திடுக்கிட்டுப் பார்த்தாள்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் இருபத்து ஆறு

முதல்கட்டமாகத் தன் மகள் புனிதாவைக் கொன்ற வழக்கில் முத்துவேல் கைது செய்யப்பட்டிருந்தார். இன்னும் சில ஊர்ப் பெரியவர்கள் சட்டத்தின் பார்வையில் இருந்தனர்; ஆனால் அவர்களுக்கு எதிரான குற்றங்கள் வரையறுக்கப்படாததால் அவர்கள் கைது செய்யப்படாமல் இருந்தனர்.தப்பித்துச் சென்ற கீர்த்திவாசனின் நண்பர்கள் மேல் கற்பழிக்க…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

உங்கள் கருத்தைப் பகிருங்கள்