அத்தியாயம் 4
நியூரோ தீவிர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடிக் கதவுகளுக்குப் பின்னால், அந்த அறையின் அமைதியை மெக்கானிக்கல் வென்டிலேட்டரின் சன்னமான சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.
கடிகாரத்தின் முட்கள் நகர்ந்து நகர்ந்து, விதித்த அந்த ஆறு மணி நேர இடைவெளியை விழுங்கி முடித்திருந்தன.
மருத்துவமனை நிர்வாகக் குழு, சிகிச்சை அளித்த மருத்துவர், சுயேச்சையான மூத்த மருத்துவர் மற்றும் நரம்பியல் அறுவைசிகிச்சை நிபுணர் என நான்கு பேர் கொண்ட அதிகாரப்பூர்வ மருத்துவக் குழு, இரண்டாவது முறையாகவும் அத்தனை மூளைத்தண்டு அனிச்சைச் சோதனைகளையும், அப்னியா பரிசோதனையையும் (Apnea Test) செய்து முடித்துவிட்டிருந்தது. இரண்டு முறையும் ஒரே முடிவுதான். கண்கள் ஒளிக்குச் சுருங்கவில்லை; சுவாசத்தை உடல் தானாக எடுக்கவில்லை. ‘படிவம்-10’ (Form 10) சான்றிதழில் நான்கு மருத்துவர்களின் கையெழுத்துக்களும் பதிந்துவிட்டன.
அந்த இருபத்தியிரண்டு வயது இளைஞன் சட்டப்படியும் மருத்துவப்படியும் மூளைச்சாவு அடைந்துவிட்டான்.
அதை வெளியே தவிப்போடு காத்திருக்கும் ஒரு தாயிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் சுமை ப்ரவலிகாவின் தோள்களில் வந்து விழுந்தது. மருத்துவக் கல்லூரியின் பாடப் புத்தகங்கள் எதுவும் ஒரு மருத்துவரின் இதயத்தை இத்தகைய தருணங்களுக்குப் பழக்குவதே இல்லை.
ப்ரவா கனத்த காலடிகளோடு ஐசியூவின் காத்திருப்போர் கூடத்தை நோக்கி நடந்தாள். அங்கே, ஒரு மூலையில், வெள்ளைச் சேலை அணிந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி அமர்ந்திருந்தார். அரசு மருத்துவமனையில் பல வருடங்களாகப் பணியாற்றும் மூத்த செவிலியர் அவர். எத்தனையோ மனிதர்களின் பிறப்பையும் இறப்பையும் தன் கண்களால் கண்டவர்; ஆனால் இன்று, தன் சொந்த மகனுக்காக இறைவனை வேண்டியபடி அமர்ந்திருந்தார்.
ப்ரவா மெல்ல அவர் அருகே சென்று அமர்ந்தாள். அவளது விரல்கள் சில்லிட்டு நடுங்கின.
“மேம்…”
ப்ரவாவின் குரல் கரகரத்து வெளிவந்தது. அந்த ஒற்றை அழைப்பிலேயே, அவர் திடுக்கிட்டு நிமிர்ந்து ப்ரவாவின் கண்களைப் பார்த்தார். அந்தப் பார்வையில் இருந்த தவிப்பு ப்ரவாவின் நெஞ்சை அறுத்தது. மருத்துவத் தொழில் பழகியவர் என்பதால், அந்த ஆறு மணி நேரத்தின் முடிவில் ஒரு ஜூனியர் டாக்டர் வந்து இப்படி அமர்வதன் குரூரமான அர்த்தம் அவருக்குப் புரியாமல் இல்லை.
“மேடம்… ரி… ரிசல்ட்… வந்துடுச்சா?”
அவரது உதடுகள் நடுங்கின. தொண்டைக்குள் வார்த்தைகள் சிக்கி, மூச்சுத் திணறலோடு வெளிவந்த அந்தக் குரலிலிருந்த நடுக்கம் அவளையும் நடுங்க செய்தது. எவ்வளவுதான் ஆயிரமாயிரம் மரணங்களைப் பார்த்த செவிலியராக இருந்தாலும், இன்று அங்கே வென்டிலேட்டரில் கிடப்பது தன் சொந்த ரத்தம்… தன் கருவறையில் சுமந்த பிள்ளை எனும் போது அவரால் தாள முடியவில்லை!
“மேம்… செகண்ட் டெஸ்ட்டும் முடிஞ்சுது. பிரைன் ஸ்டெம்ல எந்த ரெஃப்ளக்ஸும் இல்லை. பியூப்பிள்ஸ் பிக்ஸட். அப்னியா டெஸ்ட்டும் நெகட்டிவ்… இட்ஸ்… இட்ஸ் கன்ஃபர்ம்டு……”
சொல்லி முடித்த நொடியில் ப்ரவாவின் குரல் முற்றிலும் உடைந்து போனது.
அந்த வார்த்தைகள் காதில் விழுந்த அடுத்த கணம், அவரது உடம்பிலிருந்து அத்தனை நரம்புகளும் ஒருசேர அறுந்து விழுந்தது போலானது!
“ஆஆஹ்…” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உள்ளுக்குள் குமுறியவர், அப்படியே இருக்கையிலிருந்து சரிந்து கீழே விழப் பார்த்தார். ப்ரவா பதறிப்போய் அவரைத் தன் தோள்களோடு தாங்கிப் பிடித்துக்கொண்டாள்.
“ஈஸ்வரா…”
அந்தத் தாயின் வாய்விட்டு எழத் துடித்த பெருங்கதறல் தொண்டைக்குள்ளேயே குமுறலாய் வெடித்தது. மருத்துவமனையின் கண்ணியமும் செவிலியர் என்கிற அடையாளமும் அந்தப் பெரும் அலறலைத் தொண்டைக் குழியிலேயே அடக்கப் போராட, அவரது மொத்த உடலும் அதிர்ந்தது. கைகள் நடுங்கித் துடித்தன. கன்னங்களில் கண்ணீர் அருவியெனக் கொட்டியது. நெஞ்சில் அறைந்து அழத் துடித்த கைகளைத் தானே இறுக மூடி, உதட்டைக் கடித்து ரத்தம் வரும் அளவுக்கு அழுத்தி, சப்தமிடாமல் தன் தீராத பெருந்துயரத்தை, தன் கைகளால் வாயை மூடி அடக்க முயன்றார்.
தன் வாழ்நாளில் எத்தனையோ முறை பிறர் மரணத்திற்கு ஆறுதல் சொன்னவர், தன் மகனின் மரணத்தை ஏற்றுக்கொண்டு ஒரு வார்த்தை கூடப் பேச முடியாமல் வறண்டு விறைத்துப் போனது.
சுமார் இரண்டு நிமிடங்கள்… அந்தத் தாய் அந்தப் பெரும் பிரளயத்தில் மூழ்கித் தத்தளித்தார். அவர் வாய்விட்டு கதறவில்லை. ஆனால் அந்த மௌன கதறலை ப்ரவா உணர்ந்தாள். அதை அவளால் தாள முடியவில்லை.
பிறகு… தன் மகனின் உடலைத் தொட்டுப் பார்க்கும் அந்த இறுதி வினாடிக்காக, நடுங்கும் கைகளால் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டவர், உதடுகள் இன்னமும் துடித்துக் கொண்டிருக்க, தள்ளாடும் கால்களோடு எழுந்து ப்ரவாவின் தோளைப் பற்றிக்கொண்டார்.
தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டவர் போல, “என் மகனைப் பார்க்கணும்…” கண்களில் கண்ணீர் வழிந்தாலும் திடமான குரலில் கூறினார். அந்தத் திடமான நடை ப்ரவாவை நிலைகுலையச் செய்தது.
ஒரு தாய் தன் மகனின் இறுதிப் பயணத்தை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எத்தனை கோடி வலிகளைச் சுமந்திருக்கும் என்பதை உணர்ந்து ப்ரவா உள்ளுக்குள் உறைந்து போனாள்.
இருவரும் நியூரோ ஐசியூவிற்குள் நுழைந்தனர்.
கட்டிலில், தலையைச் சுற்றிப் பெரிய வெள்ளைக் கட்டுடன், வாயில் எண்டோட்ரக்கியல் டியூப் பொருத்தப்பட்டு, மெலிந்த உடலோடு கிடந்தான் அந்த இளைஞன். அவனது முகம் ஒரு குழந்தையைப் போல அமைதியாக இருந்தது.
எதுவும் பேசாமல் மகனையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். அவரது கண்களில் கண்ணீரை தவிர வேறொன்றுமில்லை. வேறெங்கும் அவரது பார்வை போகவுமில்லை. அவரை எந்தவிதமாகவும் ப்ரவா தொந்தரவு செய்யவில்லை. அவசரப்படுத்தவுமில்லை. அவளும் அந்த சூழ்நிலையை கடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு இது முதல் அனுபவம்… முதல் நாளிலேயே இந்த அனுபவத்தையும் சம்பவத்தையும் அவள் எதிர்பார்க்கவில்லை.
ஐசியூவின் கதவைத் தள்ளிவிட்டு ஜீவா உள்ளே நுழைந்தான். அவனது முகத்தில் எப்போதும் தவழும் குறும்போ, புன்னகையோ இல்லை. ஒரு பெரும் இழப்பிற்குத் தலைவணங்கும் ஆழ்ந்த மரியாதையும், அமைதியும் அவன் கண்களில் தேங்கியிருந்தன. அவன் அமைதியாக ப்ரவாவின் பக்கத்தில் வந்து நின்றான். அந்தத் தாயைப் பார்த்து லேசாகத் தன் தலையைத் தாழ்த்தினான்.
அந்தத் தாய் மெதுவாகக் கட்டிலருகே சென்றார். தன் நடுங்கும் விரல்களால், பையனின் நெற்றியை வருடினார். அவனது சில்லிட்ட கன்னத்தைத் தொட்டார்.
“கண்ணா… அம்மா வந்திருக்கேன்டா…”
அவரது குரல் ஒரு தாலாட்டைப் போல ஒலித்தது.
“என்னை பார்க்க மாட்டியாடா கண்ணா…” என்று அவர் கேட்க, பதில் சொல்லத்தான் பிள்ளை இல்லையே!
அவரது உதடுகளில் இருந்து ஒரு பாடல் மெல்லிய முணுமுணுப்பாய் எழத் தொடங்கியது:
“நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க… இமைப்பொழுதும் என்தெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க… கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க… ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள்வாழ்க…”
சிவபுராணம்!
அவர் தன் மகனின் தலையைத் தடவிக்கொடுத்தபடியே, கண்களை மூடி அந்த வரிகளைப் பாடப் பாட, ஐசியூவில் நின்றிருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரின் கண்களும் கலங்கின. தன் இமைகளைத் தாண்டி வழியும் கண்ணீரை விரல் நுனியால் கூடத் துடைக்காமல், நெஞ்சில் இறங்கிய பெருந்துயரத்தை சிவநாமத்தின் சரணாகதியில் கரைத்துக் கொண்டிருந்தார் அந்தத் தாய்.
அதே நேரத்தில், கட்டிலின் தலைமாட்டில் இருந்த மல்டி-பாரா மானிட்டரில் ரீடிங்க்ஸ் ஓடிக் கொண்டிருந்தது.
மூளை செயலிழந்த பிறகு, உடலின் தானியங்கி நரம்பு மண்டலம் மெல்ல மெல்லத் தன் கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருப்பதை அந்தத் திரையின் எண்கள் அப்பட்டமாகக் காட்டின.
ரத்த அழுத்தம் 90/60… 80/50… 70/40… எனக் கீழிறங்கிக் கொண்டிருந்தது. இதயத் துடிப்பு 120-லிருந்து 90, 70, 50 என சீரற்று நழுவத் தொடங்கியது.
“ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க… வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க… பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க…”
ப்ரவா அந்த மானிட்டரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். மருத்துவக் கருவிகள் உயிரைக் காப்பாற்றப் பயன்படும் எந்திரங்கள் அல்ல; அவை ஒரு மனிதனின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து செல்லும் ஒவ்வொரு நொடியையும் குரூரமாக எண்ணிக்காட்டும் கண்ணாடிகள் என்பதை அவளது உள்ளம் முதல்முறையாக அத்தனை நெருக்கத்தில் உணர்ந்தது. அவளது விரல்கள் தன்னிச்சையாக நடுங்கின. தொண்டைஅடைத்துக் கொண்டது.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்.
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்…”
மானிட்டரில் நீண்ட, ‘பீப்பப்பப்பப்…’ என்ற ஒற்றை அபாய ஒலி ஒலித்தது.
ஈசிஜி அலைவரிசையின் வளைவுகள் அனைத்தும் ஒரே நொடியில் மடிந்து, திரையில் ஒரு நேரான வெண்ணிறக் கோடு ஓடத் தொடங்கியது.
இதயமும் தன் துடிப்பை முழுமையாக நிறுத்திவிட்டது.
ஐசியூவில் நின்ற அத்தனை செவிலியர்களும் தலைகுனிந்து நின்றனர்.
ஜீவா தன் கையை உயர்த்தி, “டைம் ஆஃப் அசெஸ்டோல்… ஃபைவ்-ஃபோர்ட்டி-ஃபைவ் பிஎம்…” என்று மிக மெல்லிய குரலில் நேரத்தைக் குறித்துக் கொண்டான்.
வென்டிலேட்டரின் சத்தம் அணைக்கப்பட்டது. அந்த அறையில் நிசப்தம் கவிழ்ந்தது.
அவர் மெல்லத் தன் கண்களைத் திறந்து, ஜீவாவை ஏறிட்டுப் பார்த்தார். அவரது முகத்தில் இருந்த வைராக்கியம் ஜீவாவையே ஒரு கணம் நிலைகுலைய வைத்தது.
“டாக்டர்… ஒரு ஹெல்ப்…”
“சொல்லுங்கம்மா…” ஜீவாவின் குரல் கீழிறங்கியது.
“நான் ஒரு நர்ஸ். எத்தனையோ பாடிஸ நானே வென்டிலேட்டர்ல இருந்து பிரிச்சு, டியூப்ஸ் எல்லாம் கழட்டி, காட்டன் வச்சு பேக் பண்ணிக் கொடுத்திருக்கேன்.ஆனா, இன்னைக்கு என் புள்ளை… என் சொந்த புள்ளையை வேற யார் கையாலயும் பேக் பண்ண எனக்கு மனசு வரல… அவனை நானே என் கையால பிரிச்சு, கடைசியா தொடைச்சு, பேக் பண்ணித் தரட்டுமா?”
அவரது அந்தக் கோரிக்கை, அங்கே நின்றிருந்த அனைவரையும் அதிர செய்தது!
ப்ரவாவால் அந்த வார்த்தைகளைத் தாங்கவே முடியவில்லை. மிகவும் முயற்சித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள போராடினாள். தன் சொந்த மகனின் உயிரற்ற உடலை, தாய் தன் கைகளாலேயே ஒரு செவிலியராகப் ‘பேக்’ செய்வதை விடவும் ஒரு பெண்ணுக்கு இந்த உலகில் கொடுமையான நரகம் வேறெதுவும் இருக்க முடியுமா?
ஜீவாவின் கண்கள் கலங்கின. ஆனால், அந்தத் தாயின் வேண்டுகோளை அவன் மறுக்க விரும்பவில்லை.
“ஓகேம்மா… உங்களுக்கு நாங்க உதவி பண்றோம்…” ஜீவா தன் தலையை ஆமோதிப்பாக அசைத்தான்.
ஜீவாவின் சம்மதத்தைக் கண்டவர், தன் சேலை முந்தானையை இடுப்பில் செருகிக்கொண்டு, கையுறைகளை மாட்டிக்கொண்டு, தன் மகனின் வாயில் இருந்த சுவாசக் குழாயை மிக மென்மையாக, வலித்துவிடக் கூடாது என்பது போல ஒவ்வொன்றாக உருவி எடுத்தார். கைகளிலிருந்த கேனுலாக்களை நீக்கி, பஞ்சால் ரத்தக் கசிவை அடைத்தார்.
அனைத்தும் முடிந்து, அந்த இளைஞனின் உடல் துணியால் மூடப்பட்ட அந்தத் தருணத்தில்… ஜீவா ப்ரவாவின் பக்கம் மெல்லத் திரும்பினான். அவளது கண்களைப் பார்த்துச் சைகை செய்தான்.
இதுதான் அந்தத் தருணம்… மிகக் கடினமான இறுதிப் பேச்சுவார்த்தை!
ப்ரவா தன் கண்ணீரைத் தன் உள்ளங்கைகளால் அழுத்தித் துடைத்துக் கொண்டாள். தன் நடுக்கத்தைத் தொண்டைக்குள்ளேயே அடக்கிக்கொண்டு, அந்தத் தாயின் அருகில் சென்றாள்.
“மேம்…”
அவர் அவளை ஏறிட்டார்.
“உங்க பையன் நம்மளை விட்டுப் போயிட்டாலும்… அவரோட உடம்புல இருக்கிற உறுப்புகள் இன்னும் ஆரோக்கியமா இருக்கு. கிட்னி, கல்லீரல், கண்கள்… இது எல்லாமே இன்னும் சில உயிர்களை வாழ வைக்க முடியும். அரசு முறைப்படி உறுப்பு தானத்துக்கு…” ப்ரவாவின் வார்த்தைகள் முழுமையடைவதற்கு முன்பே,
அவர் ப்ரவாவின் கைகளைப் பிடித்துக்கொண்டார்.
“நான் நர்ஸ் மேடம். அவனோட உறுப்புகள் மூலமா இன்னும் நாலு பேரு உயிரோட வாழ்ந்தா, என் புள்ளை இந்த உலகத்துல எங்கேயோ ஒரு மூலையில சுவாசிச்சுட்டு இருக்கான்னு நான் நிம்மதியா நெனச்சுப்பேன்… எல்லா உறுப்புகளையும் எடுத்துக்கங்க. ஃபார்ம் கொண்டு வாங்க, நான் இப்பவே கையெழுத்துப் போடுறேன்…”
அந்தத் தாயின் பரந்த மனதைக் கண்டு ப்ரவா மௌனமாய் நன்றி கூறினாள். அரசு ஆவணங்களில் கையெழுத்துப் பெற்று, அவரை உறவினர்களோடு வழியனுப்பி வைக்கும் வரை ப்ரவா ஒரு இயந்திரமாகவே இயங்கினாள்.
எல்லாம் முடிந்தது.
அவசரப் பிரிவிலிருந்து நேராக வந்த ப்ரவா, மருத்துவர்கள் ஓய்வறையின் தனி அறைக்குள் நுழைந்து கதவைத் மூடிய, அடுத்த நொடி… அப்படியே சுவரோரம் சரிந்து தரையில் அமர்ந்து, முழங்கால்களைக் கட்டிக்கொண்டு கதறி அழத் தொடங்கினாள்!
அவள் கண்முன்னே நிகழ்ந்த அனைத்தும் அவளது இதயத்தை ரத்தக் களறியாகக் கிழித்துக் கொண்டிருந்தன. இத்தனை கொடூரமான உணர்ச்சிப் போராட்டங்களைத் தாங்கிக்கொண்டுதான் ஒரு மருத்துவன் வாழ வேண்டுமா என்ற இயலாமை அவளது கதறலில் வெளிப்பட்டது. அந்த முதல் அனுபவத்தை அவளால் தாள முடியவில்லை
அப்போது, அறையின் கதவு மெல்லத் தட்டப்பட்டுத் திறந்தது.
உள்ளே நுழைந்த ஜீவா, தரையில் அமர்ந்து தேம்பி அழுது கொண்டிருக்கும் ப்ரவாவைப் பார்த்தான்.
அவன் எதுவும் பேசவில்லை. அவளிடம் எதையும் கேட்டு அவளது துயரத்தைக் கிளறவும் இல்லை. நிதானமாக அவளருகே வந்தான். தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளது நடுங்கும் வலது கையைத் தன் இரு கரங்களுக்குள் எடுத்துப் பொதிந்து கொண்டான்.
அவனது வலிமையான கைகளின் இதமான வெப்பம் அவளது விரல்களில் பரவியது.
ஜீவா அவளது கையை மென்மையாக, அதே சமயம் உறுதியோடு தட்டிக் கொடுத்தான். அவனது கண்களில் எந்தவித அறிவுரையும் இல்லை; “நீ தனியாக இல்லை… இந்த வழியைக் கடந்துதான் நாம் மருத்துவர்களாக வேண்டும்” என்ற ஆழமான சிநேகமும் ஆறுதலும் மட்டுமே ததும்பி நின்றது.
அவன் எந்தவொரு வார்த்தையும் பேசாமல், அவளது கையை இன்னும் ஒரு முறை ஆதரவாக அழுத்திவிட்டு, எழுந்து கதவை நோக்கி நடந்து வெளியேறினான்.
ஜீவாவின் அந்த ஒற்றைத் தொடுதலும் அவனது அந்த அமைதியும், ப்ரவாவை அமைதியடைய செய்தன. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அவள் நிமிர்ந்து அமர்ந்தாள்.
இவ்வளவுதானா வாழ்க்கை?
இந்த வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம்?
***
மருத்துவமனையின் மூன்றாம் தளத்திலிருந்த நெப்ராலஜி (சிறுநீரகவியல்) பிரிவின் பிரத்யேக ஆய்வகம் அமைதியாக இருந்தது.
அங்கே, தலைமை நெப்ராலஜிஸ்ட் டாக்டர் ராமகிருஷ்ணன் தனது தனி அறையில் அமர்ந்திருந்தார். ஐம்பத்தைந்து வயதைக் கடந்த அவரது முகத்தில் வழக்கமான களைப்பு இல்லை; மாறாக அவசரம் கலந்த நடுக்கம் விரல்களில் தெரிந்தது.
மேஜையில் இருந்த கணினித் திரையில் தமிழ்நாடு அரசின் உறுப்பு மாற்று ஆணையத்தின் (TRANSTAN) அதிகாரப்பூர்வ பதிவுப் பக்கம் திறந்திருந்தது. அதன் அருகே, இரண்டு நோயாளிகளின் மருத்துவக் கோப்புகள் வைக்கப்பட்டிருந்தன.
முதல் கோப்பு: மாணிக்கம், வயது 48. பொள்ளாச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த விவசாயி. இரு சிறுநீரகங்களும் செயலிழந்து, வாரத்திற்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்து, கடந்த இரண்டு வருடங்களாக அரசு உறுப்பு தானப் பதிவுப் பட்டியலில் முதல் இடத்தில் (Priority 1) காத்திருப்பவர்.
இரண்டாவது கோப்பு: ராஜசேகர், வயது 52. கோவையின் முன்னணி ரியல் எஸ்டேட் தொழிலதிபர். பதிவுப் பட்டியலில் இருபதாவது இடத்தில் இருப்பவர்.
முந்தைய தினம் பேருந்து விபத்தில் மூளைச்சாவு அடைந்ததாக உறுதி செய்யப்பட்ட அந்த இளைஞனின் உடலிலிருந்து தானமாகப் பெறப்படும் சிறுநீரகங்களில் ஒன்றை, இந்த இருவரில் யாருக்குப் பொருத்துவது என்பதை தீர்மானிக்கும் ஆவணம் அது.
ராமகிருஷ்ணன் தனது மூக்குக் கண்ணாடியைச் சரிசெய்தபடி, கையில் இருந்த ஹெச்.எல்.ஏ மேட்சிங் (HLA Tissue Typing) மற்றும் கிராஸ்-மேட்ச் (Cross-match) ஆய்வக அறிக்கைகளை எடுத்துப் பார்த்தார்.
உண்மையான அறிக்கையின்படி, மாணிக்கத்திற்கு 6/6 HLA மேட்ச் ஆகியிருந்தது! ஆண்டிபாடி சோதனையில் எந்தவிதப் பின்விளைவுகளுமின்றி (Negative Cross-match) அந்தச் சிறுநீரகம் அவருக்கு நூறு சதவீதம் பொருந்தக்கூடிய நிலையில் இருந்தது.
ஆனால், ராமகிருஷ்ணனின் விரல்கள் கணினியில் வேறு கதையை சொல்லிக் கொண்டிருந்தது.
“மாணிக்கம் – சிவியர் பாசிட்டிவ் கிராஸ்-மேட்ச் (Severe Positive Cross-match), ஹை ரிஸ்க் ஆஃப் அக்யூட் ரிஜெக்ஷன் (High risk of acute graft rejection). அன்ஃபிட் ஃபார் டிரான்ஸ்பிளான்ட்.”
அடுத்த சில நிமிடங்களில், ராஜசேகருக்கு அந்தச் சிறுநீரகம் மிகக் கச்சிதமாகப் பொருந்துவது போல போலியான தரவுகள் மாற்றியமைக்கப்பட்டன. அரசின் உறுப்பு மாற்று விதிகளின்படி, முதல் முன்னுரிமையில் இருக்கும் நோயாளிக்குத் திசுப் பொருத்தம் அமையாவிட்டால் மட்டுமே அடுத்தவருக்குச் செல்ல முடியும் என்ற ஓட்டையை ராமகிருஷ்ணன் மிகச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
போலி அறிக்கையை அச்சிட்டு, அதில் தனது கையெழுத்தையும் அதிகாரப்பூர்வ முத்திரையையும் பதித்தபோது அவரது கைகள் லேசாக நடுங்கின.
“டாக்டர் சர்… வேலையை முடிச்சுட்டீங்களா? சென்னைல இருந்து ஸ்பெஷல் சர்ஜன்ஸ் இன்னும் ஒரு மணி நேரத்துல நம்ம தியேட்டருக்கு வந்துடுவாங்க… ராஜசேகர் சாரோட ஃபேமிலி அட்வான்ஸ் அமௌன்ட்டை அக்கவுண்ட்ல போட்டாச்சு…”
அறையின் ஓரத்தில் நின்றிருந்த மருத்துவமனையின் பிஆர்ஓ தனசேகரன் குரலைத் தாழ்த்திக் கிசுகிசுத்தான்.
“முடிஞ்சுது தனசேகரன். ட்ரான்ஸ்டான் போர்ட்டல்ல இந்த ஃபேக் ரிப்போர்ட்டை இப்போவே அப்லோட் பண்ணிடுவோம். மாணிக்கத்துக்கு மேட்ச் ஆகலன்னு என் சைன் போட்டாச்சு. இனி யாரும் எதுவும் கேட்க முடியாது. ராஜசேகரை உடனே ப்ரீ-ஆப் தியேட்டருக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லு…” ராமகிருஷ்ணன் அந்த ஃபைலை மூடி வைத்தார்.
“ஓகே டாக்டர்!” தனசேகரன் சிரித்தான்.
ஆனால், அந்தச் சிரிப்பு அடுத்த வினாடியே அவனது தொண்டையிலேயே உறைந்து போனது!
அறையின் கதவு மிக மென்மையாக, அதே சமயம் அழுத்தமாகத் திறக்கப்பட்டது.
உள்ளே நுழைந்த உருவத்தைக் கண்டதும் ராமகிருஷ்ணனின் நாற்காலி ஒரு அங்குலம் பின்னோக்கி நகர்ந்தது. தனசேகரனின் முகம் சட்டென்று வெளுத்துப் போனது.
டாக்டர் ஜீவானந்தன் சக்திவேல்!
முழங்கை வரை மடித்துவிடப்பட்ட வெண்ணிறக் கோட், முகத்தில் சலனமற்ற ஓர் அமைதி. ஆனால், அவனது கண்களில் கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது. அவனுக்குப் பின்னால், மருத்துவமனையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியும், ஜீவன் மருத்துவமனையின் பிரதான ஆய்வகத் தலைவர் டாக்டர் பரசுராமனும் நின்றிருந்தனர்.
“ஜீ… ஜீவா… என்ன இந்த நேரத்துல?” ராமகிருஷ்ணன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு குரலில் நடுக்கத்தை மறைக்க முயன்றார்.
ஜீவா ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவன் நிதானமாக அடி எடுத்து வைத்து மேஜைக்கு முன்னால் வந்து நின்றான். அவனது வலது கை சாதாரணமாக மேஜையின் மீது விழுந்தது. விரல்கள் மேஜை மரத்தின் மீது ‘டக்… டக்…’ எனத் தாளமிட்டன.
அந்த மௌனம் அறையிலிருந்த இருவருக்கும் நடுங்க செய்தது.
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா டாக்டர்?” ஜீவாவின் குரல் மிக இயல்பாக, புயலுக்கு முந்தைய அமைதியோடு ஒலிக்க,
“ஆ… ஆமா ஜீவா… அந்த கேடவர் கிட்னி மேட்சிங் ரிப்போர்ட்ஸ் பார்த்துட்டு இருந்தேன். அன்பார்ச்சுனேட்லி, லிஸ்ட்ல ஃபர்ஸ்ட் இருந்த மாணிக்கத்துக்கு டிஷ்யூ மேட்ச் ஆகல… பாசிட்டிவ் கிராஸ்-மேட்ச் வந்திருக்கு. அதான் நெக்ஸ்ட் கேண்டிடேட்டான ராஜசேகருக்கு அலாட் பண்ணலாம்னு…” ராமகிருஷ்ணன் பேசி முடிப்பதற்குள்,
ஜீவா தன் இடது கையில் வைத்திருந்த ஒரு நீல நிறக் கோப்பை மேஜையின் மீது ‘படார்’ என்று போட்டான்!
“எந்த ரிப்போர்ட்டைச் சொல்றீங்க டாக்டர்? உங்க கம்ப்யூட்டர்ல நீங்களா டைப் பண்ணி வச்சிருக்கீங்களே, இந்த குப்பையையா? இல்ல… அரை மணி நேரத்துக்கு முன்னாடி நம்ம சென்ட்ரல் லேப்ல டாக்டர் பரசுராமன் முன்னிலையில வந்த இந்த ஒரிஜினல் ரிப்போர்ட்டையா?”
ஜீவாவின் குரலில் இருந்த அழுத்தம் ராமகிருஷ்ணனை நிலைகுலைய வைத்தது.
அவரது முகம் வியர்வையில் நனைந்தது. “ஜீவா… அது… வந்து…”
“மாணிக்கத்துக்கு சிக்ஸ் அவுட் ஆஃப் சிக்ஸ் HLA மேட்ச்! நெகட்டிவ் கிராஸ்-மேட்ச்! அந்த மனுஷனுக்கு இந்த கிட்னியை வச்சா நூறு வருஷம் உசுரோட வாழ்வார்! ஆனா, அவர்கிட்ட காசு இல்ல… அதனால அவருக்கு ரிஜெக்ஷன் ரிஸ்க்குன்னு பொய் ரிப்போர்ட் தயாரிச்சு, இருபதாவது இடத்துல இருக்கிறவருக்கு கிட்னியை விக்கப் பார்க்குறீங்களா?”
ஜீவாவின் குரல் இப்போது அனலாக வெடித்தது! அவன் நாற்காலியில் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணனை நோக்கி முன்னோக்கிச் சாய்ந்தான். அவனது கூரிய கண்கள் அவரை ஊடுருவின.
“ஜீவா… நான் இந்த ஹாஸ்பிடல்ல உங்க அப்பா காலத்துலருந்து சீனியர் டாக்டரா இருக்கேன். என்னை இப்படி அக்யூஸ் பண்ணக் கூடாது… ஒரு சின்ன டெக்னிக்கல் எர்ரர்…” ராமகிருஷ்ணன் சமாளிக்கப் பார்த்தார்.
“சீனியர் டாக்டர்ங்கிற முகமூடிக்குப் பின்னாடி இப்படி ஒரு டர்ட்டி ட்ரிக்ஸ் ஒளிஞ்சிட்டு இருக்கும்னு எங்கப்பா நினைச்சு கூடப் பார்த்திருக்க மாட்டாரு ராமகிருஷ்ணன்!” ஜீவா கறாராக அவரது பெயரை மட்டுமே உச்சரித்தான். அவனது நாவில் இருந்து ‘டாக்டர்’ என்ற வார்த்தை கூட வரவில்லை.
“மெடிக்கல் கவுன்சிலோட எத்திக்ஸயெல்லாம் தூக்கிப் போட்டுட்டு, பணத்துக்காக இந்த வேலைய பார்த்திருக்கீங்க. ட்ரான்ஸ்டான் சிஸ்டம ஏமாத்தலாம்னு பார்த்தீங்களா? இந்த ஜீவன் ஹாஸ்பிடலோட சர்வர்ல நீங்க டைப் பண்ண ஒவ்வொரு கீ-ஸ்ட்ரோக்கும், மாத்தின ஒவ்வொரு டேட்டாவும் லாக் ஆகி என் டேபிளுக்கு வந்துடுச்சு!”
ஜீவா தன் கைபேசியை எடுத்து மேஜை மீது வைத்தான். அதில் ராமகிருஷ்ணனும் தனசேகரனும் ராஜசேகரின் குடும்பத்தோடு பேசிய தொலைபேசி உரையாடலின் ஆடியோவும், தனசேகரனின் பினாமி வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்ட ஐம்பது லட்சம் ரூபாய் முன்பணத்தின் ஆவணங்களும் திரையில் பளிச்சிட்டன!
தனசேகரன் நடுங்கிவிட்டான். “சார்… என்னை மன்னிச்சுடுங்க சார்… இவர்தான் என்னை வற்புறுத்தினார்…”
ராமகிருஷ்ணன் நாற்காலியில் நிலைகுலைந்து சாய்ந்தார். அவரிடம் பேசுவதற்கு எந்த வார்த்தையும் மிஞ்சியிருக்கவில்லை.
ஜீவா நிமிர்ந்து நின்றான். அவனது முகம் ஒரு அசைக்க முடியாத வைரத்தைப் போல இறுகியிருந்தது.
“மிஸ்டர் ராமகிருஷ்ணன்… யூ ஆர் சஸ்பெண்டட் வித் இம்மீடியட் எஃபெக்ட்! அடுத்த பத்து நிமிஷத்துல தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலுக்கும், சிட்டி கமிஷனர் ஆபீஸுக்கும் இந்த ஃபைல்ஸ் போகும். உங்க மெடிக்கல் லைசென்ஸ் கேன்சல் ஆகுற வரைக்கும் நான் விட மாட்டேன். ஜீவன் ஹாஸ்பிடலோட வாசல்படியை இனி நீங்க மிதிக்கக் கூடாது. செக்யூரிட்டி… இவங்க ரெண்டு பேரையும் என் கண் முன்னாடி இருந்து அப்புறப்படுத்துங்க!” ஜீவா உத்தரவிட்டான்.
பாதுகாப்புப் படையினர் ராமகிருஷ்ணனையும் தனசேகரனையும் அறையிலிருந்து வெளியேற்றிச் சென்றனர்.
அறைக்குள் மீண்டும் ஒரு நிசப்தம் நிலவியது.
ஜீவா மேஜையின் மீது கிடந்த அந்த ஒரிஜினல் ரிப்போர்ட்டை தன் கைகளில் எடுத்தான். இன்டர்காம் போனை எடுத்தான்.
“சிஸ்டர்… மேஜர் ஓடி-யை இம்மீடியட்டா பிரிப்பேர் பண்ணச் சொல்லுங்க. அனஸ்தீசியா டீமை கூப்பிடுங்க. மாணிக்கத்தோட அட்டெண்டர்ஸை உடனே வரவழைச்சு கன்சென்ட் ஃபார்ம் வாங்குங்க. கிட்னி டிரான்ஸ்பிளான்ட் சர்ஜரியை நானே லீட் பண்றேன்… விஷ்வாவை கார்டியாக் ஸ்டேட்டஸ் செக் பண்ண தியேட்டருக்கு வரச் சொல்லுங்க!”
அடுத்த அரை மணி நேரத்தில், ஜீவன் மருத்துவமனையின் மேஜர் ஆபரேஷன் தியேட்டர் தயாரானது.
டயாலிசிஸ் வார்டில் பரிதாபமாகப் படுத்திருந்த மாணிக்கத்தின் கட்டிலருகே ஜீவா நேரில் சென்றான். மாணிக்கத்தின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. அருகில் நின்ற அவரது மனைவியும் மகனும் அழுது கொண்டிருந்தனர்.
“டாக்டர்… எனக்கு ஒண்ணும் புரியல… ஆஸ்பத்திரில இருந்து திடீர்னு வந்து கையெழுத்து போடச் சொல்றாங்க… என்கிட்ட இப்ப காசு பணம் எதுவும் இல்ல… என் தோட்டம் தொரவு எல்லாம் வித்துதான் இத்தனை நாளா டயாலிசிஸ் பண்ணினேன்…” மாணிக்கம் தழுதழுக்க,
ஜீவா அவரின் கரங்களை மென்மையாகப் பற்றிக் கொண்டான். அவனது முகத்தில் இளகிய புன்னகை விரிந்தது.
“அய்யா காப்பீட்டுத் திட்டத்துலயும், நம்ம ஜீவன் ட்ரஸ்ட் மூலமாவும் உங்களுக்கு இந்த ஆபரேஷன் முழுசா இலவசமா நடக்கும். தானமா வந்த சிறுநீரகம் உங்களுக்கு நூறு சதவீதம் பொருந்தியிருக்கு. கடவுள் உங்களுக்குக் கொடுத்த வரம் இது… தைரியமா தியேட்டருக்குள்ள வாங்க, உங்களை உங்க குடும்பத்துக்கிட்ட நல்லபடியா மீட்டுக் கொடுக்க வேண்டியது என் பொறுப்பு…”
ஜீவாவின் அந்த வார்த்தைகளைக் கேட்ட மாணிக்கத்தின் குடும்பத்தினர் அவனது கால்களில் விழப் பார்க்க, ஜீவா அவர்களைத் தடுத்துத் தன் கரங்களால் தாங்கினான்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த ப்ரவா, மதுவின் முகத்தில் பெருமிதம்!
ஆபரேஷன் தியேட்டரில் ஜீவா தயாராக, அவனருகே விஷ்வா இதய மானிட்டரைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
தியேட்டரின் ஒரு மூலையில், ஜீவாவின் அறுவைசிகிச்சைக் குழுவில் முதல்முறையாக அசிஸ்ட் செய்வதற்காக நின்றிருந்தார்கள் ப்ரவலிகாவும் மதுபாஷினியும்.
ஜீவா ஸ்கால்பலை (Scalpel) கையில் எடுத்தான். அவனது விரல்கள் துல்லியமாக இயங்கத் தொடங்கின. மாணிக்கத்தின் அடிவயிற்றில் நடுக்கமில்லாத ஒரு நேர்த்தியான கீறல் இடப்பட்டது. ரத்தக் குழாய்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டன. ரீனல் ஆர்ட்டரியும், ரீனல் வெயினும் மிக நுட்பமாக இணைக்கப்பட்டு, இறுதியாக கிளாம்புகள் தளர்த்தப்பட்டன.
அடுத்த சில நொடிகள்… தியேட்டரே மூச்சடக்கி நின்றது!
புதிதாகப் பொருத்தப்பட்ட அந்தச் சிறுநீரகம், மாணிக்கத்தின் உடலிலிருந்து பாய்ந்த ரத்தத்தை உள்வாங்கி, வெளிர் நிறத்திலிருந்து நல்ல ஆரோக்கியமான இளஞ்சிவப்பு நிறத்திற்கு மாறியது. அடுத்த சில விநாடிகளில், யூரிட்டர் (Ureter) வழியே சொட்டுச் சொட்டாக வெளிர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வடியத் தொடங்கியது!
“யூரின் அவுட்புட் ஸ்டார்ட் ஆயிடுச்சு ஜீவா! கிராஃப்ட் இஸ் பர்ஃபெக்ட்லி ஃபங்ஷனிங்!” அனஸ்தீசியாலஜிஸ்ட் உற்சாகமாகக் குரல் கொடுத்தார்.
தியேட்டரில் இருந்த அனைவரின் முகங்களிலும் புன்னகை!
ஜீவா தன் முகமூடியைக் கழற்றிவிட்டு, நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டான். அவனது கண்கள் விஷ்வாவைப் பார்த்தன. விஷ்வாவின் முகத்திலும் பெருமிதம்.
“நல்லபடியா முடிஞ்சது ஜீவா… பேஷன்ட் வைட்டல்ஸ் எல்லாமே ஸ்டேபிளா இருக்கு,” விஷ்வா நிதானமாகக் கூறிவிட்டு வெளியேறினான்.
தியேட்டரை விட்டு வெளியே வந்த ப்ரவலிகாவின் கண்கள் ஜீவாவையே பார்த்துக் கொண்டிருந்தன.
பணத்திற்கும் அதிகாரத்திற்கும் வளைந்து கொடுக்காமல், தன் சொந்த மருத்துவமனையின் மூத்த மருத்துவரையே தயவுதாட்சண்யமின்றித் தூக்கியெறிந்த அவனது தார்மீகக் கோபமும், மேஜையில் நின்று அவன் காட்டிய அந்த அசாத்திய அறுவைசிகிச்சை நேர்த்தியும் ப்ரவாவின் மனதில் அவன் மீதான மரியாதை வானளவு உயர்ந்தது!
“என்ன ப்ரவி… எம்.டி சாரோட இந்த அதிரடியைப் பார்த்து இன்னும் ஆடிப்போய்த்தான் இருக்கியா?” மது சிரித்தபடி அவளது தோளை உலுக்கினாள்.
ப்ரவா தன் உதட்டோரம் அரும்பிய பெருமிதமான புன்னகையை மறைக்காமல்,
“இல்ல மது… ஒரு உண்மையான டாக்டருக்கு என்ன தகுதி வேணும்னு இன்னைக்கு நேராவே பார்த்தேன்…” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.
அவளது பார்வை, தூரத்தில் ஐசியூவை நோக்கி கம்பீரமாக நடந்து சென்று கொண்டிருந்த ஜீவாவின் மீது நிலைத்திருந்தது.






ஹலோ
எவ்ளோ பீலிங்காக கொண்டு போறீங்க.. சிஸ் அங்க ப்ரவா நான் நிற்கிறேன் என் கண்ணு நிக்காம கண்ணீர் வழியுது🥺... இன்னும் எபிய விட்டு வெளிய வர முடியல.. ஜீவா பேசுவது எல்லாம் எதார்த்தம்... உங்கள் வரிகள்..வர மாட்டேனு நின்னாலும் கதைக்குள் இழுத்து நிக்க வைக்குது.. ரொம்ப எமோஷனல்னா எபி 🥺கடைசியா கேட்டீங்களே இந்த வாழ்க்கையோட அர்த்தம் தான் என்ன? படிக்கிற எல்லாரும் மனதில் தேங்கி நிற்கும் இந்த ஒற்றை கேள்வி❤️❤️❤️
மிகவும் உருக்கமான , அழுத்தமான சூழ்நிலைகள் ஆழமான சிந்தனைகள் கூட .அருமையான எழுத்து.
ப்பா.....very emotional epi🥺🥺🥺🥺🥺🥺 அதும் அந்த தாய் கேட்ட உதவி😭😭😭😭😭......ஏன் இப்படி😔😔😔😔
டாக்டர்ஸ் கடவுளுக்கு சமம்னு சும்மா சொல்லல❤️❤️❤️❤️❤️