arrow_back
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ! அத்தியாயம் 3

அத்தியாயம் 3

visibility 501
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (8 மதிப்பீடுகள்)
பகிர்

ஜமீன் ஊத்துக்குளி

வானம் கறுத்திருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சிகரங்களைத் தொட்டுத் தடவி வந்த கருமேகங்கள், ஆனைமலைக் காடுகளின் மீது சற்றே தங்கி இளைப்பாறிவிட்டு, பொள்ளாச்சியின் தென்னந்தோப்புகளின் மீது சட்டென்று இறங்கித் தன் பாரத்தை இறக்கி வைக்கத் தொடங்கின.

மெல்லிய சாரலாக ஆரம்பித்த மழை, நேரமாக ஆக தன் வீரியத்தைக் கூட்டி ஆக்ரோஷமான பெருமழையாக உருவெடுத்தது. சாலையின் இருபுறமும் வானைத் தொட்டு நின்றிருந்த நெடிய தென்னை மரங்கள், காற்றின் சுழற்சிக்கு ஏற்பத் தங்களின் தலைகளை அங்கும் இங்கும் ஆட்டி ஆவேசமாய் நடனமாடிக் கொண்டிருந்தன.

ஆம்பிராம்பாளையம் ஆற்றில் நீர் செந்நிறக் குழம்பாய் நுரை பொங்கப் பெருக்கெடுத்து ஓட, கிராமத்து மண் சாலைகளில் மழை நீர் சிறு சிறு ஓடைகளாக ஓடித் தடம் பதித்துக் கொண்டிருந்தது. மரங்களின் இலைகளிலெல்லாம் மழைத்துளிகள் தாளமிட்டு விழ, அந்தச் சத்தத்தை உடலைச் சிலிர்த்துக் கொண்டே மரப்பொந்துகளில் ஒதுங்கியிருந்த சிட்டுக் குருவிகளும் கிளிகளும் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

அந்தக் குளிரிலும், ஜமீன் ஊத்துக்குளியின் பரந்து விரிந்த தென்னந்தோப்புக்குள் அவசர அவசரமாகப் பிரவேசித்தன இளம் பிஞ்சுக் கால்கள்!

அந்த நான்கு வயதுக் குட்டித் தளிர், சேற்று நீரில் தன் பாவாடை நனைவதைக் கூடப் பொருட்படுத்தாமல் அடியெடுத்து வைக்க, பின்னால் அவளது தாய் மழைக்காகப் பிடித்திருந்த பெரிய கறுப்புக் குடையோடு அவளைத் தொடர முடியாமல் மூச்சிரைக்க ஓடி வந்துகொண்டிருந்தார்.

“இன்னும் எவ்வளவு தூரம் பாப்பி கூட்டிட்டுப் போவ? மழை வெளுத்து வாங்குது… வீட்ல பெரியவங்க தேடுவாங்கடி… காலையில வந்து பார்த்துக்கலாம், வா போலாம்!”

குடையைத் தன் கையால் கெட்டியாகப் பிடித்தபடி அந்தத் தாய் மகளை அழைக்க, குடையின் விளிம்பைத் தாண்டித் தெறித்த மழைத்துளிகளால் நனைந்து போயிருந்த அந்த பிஞ்சின் முகத்திலோ சொல்ல முடியாத தவிப்பும் பதைபதைப்பும் அப்பியிருந்தது.

“இல்லம்மா… இங்கதான் விளையாடினோம்… பாவம்மா அது… மழையில நடுங்கிட்டே இருக்கும்… குளிரும்ல… ப்ளீஸ் மா…”

அந்த நான்கு வயதுப் பாப்பி தன் பெரிய விழிகளை நாலாபுறமும் சுழற்றி எதையோ தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தாள். ஆசையாகப் பார்த்துப் பார்த்து வைத்திருந்த தன் உடமை அந்தப் பெருமழையில் அடித்துக்கொண்டு போய்விட்டிருக்குமோ என்ற பயம் அவளது உதடுகளை நடுங்க வைத்தது.

அப்போது, எதிரே இருந்த தென்னமரக் கூட்டங்களுக்கு நடுவிலிருந்து ஒரு உருவம் சேற்றைக் கிழித்துக் கொண்டு ஓடி வந்தது!

தலைக்கு மேல் மழைக்காகப் போட்டிருந்த காய்ந்த கோணிச் சாக்கிலிருந்து சொட்டுச் சொட்டாக வழிந்த மழை நீர் அவனது முகத்தில் வழிந்து இறங்கிக் கொண்டிருந்தது.

அவன் பத்து வயதுச் சிறுவன்… தம்பி மாமா!

“ஹை! தம்பி மாமா வந்துட்டான்!”

அவனைக் கண்ட அடுத்த வினாடி, பாப்பியின் முகத்தில் உலகத்து வெளிச்சமெல்லாம் ஒன்றாகக் குடியேறியது போல ஒரு பிரகாசம்! சேற்றுத் தரையையும் மறந்து துள்ளித் குதித்தாள்.

“டேய் தம்பி மாமா… அணில் பிள்ளை பத்திரமா இருக்கா?” கண்களில் தேங்கியிருந்த கலக்கமும் எதிர்பார்ப்புமாய் அவனை நோக்கிக் கத்தினாள்.

அந்தப் பத்து வயதுச் சிறுவனோ, அவளோடு நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்துச் சற்றே தயங்கி நின்றான். அந்தத் தயக்கத்தை உதறிவிட்டு, தன் முகத்து நீரை ஒற்றைக் கையால் வழித்துப் போட்டுவிட்டு,

“இருக்கு பாப்பி… நான் மழை வர்றதுக்கு முன்னாடியே வந்துட்டேன். தென்னமட்டைக்கு அடியில கூட்ட பத்திரமா வச்சு, சுத்தி காய்ஞ்ச சருகும் செத்த புல்லும் போட்டு மூடி வச்சுட்டேன்… தண்ணி ஒரு சொட்டு கூட உள்ள போகாது, பயப்படாத…” என்றான் சிறுவனுக்கே உரிய பொறுப்புடன்.

அவன் சொன்னதைக் கேட்டு அவன் கிளம்பப் பார்க்க, அந்தப் பெண் தன் உள்ளார்ந்த பாசத்தோடு அவனை இடைமறித்தார்.

“தம்பி… எப்ப ஊர்லருந்து வந்தீங்க?”

அதுவரை தயங்கி நின்றிருந்த அவனது முகம், அந்தப் பாசமான விசாரிப்பில் சட்டென்று மலர்ந்தது. உதட்டோரம் ஒரு அழகான புன்னகை விரிய,

“பத்து நாளாச்சுத்தை… லீவு விட்ட ஒடனே அப்பா கூட்டிட்டு வந்துட்டாரு…” என்றான் பவ்யமாக.

“ஓஹோ… அதான் இந்தக் கழுதை காலையில இருந்து வீட்ல நிக்காம சுத்திட்டு இருக்காளா?” அந்தப் பெண் மெல்லச் சிரிக்க, அந்த இளம் குருத்தும் அசட்டுச் சிரிப்பு சிரித்தது.

“சரி, அணில் பிள்ளையை எங்க பத்திரப்படுத்தி வச்சிருக்கீங்கன்னு காட்டிடுங்க தம்பி… இல்லைன்னா இவ இன்னைக்கு நைட்டு முழுக்க என்னை நிம்மதியா தூங்க விட மாட்டா… விடிய விடிய உலுக்கி எடுத்துடுவா…”

அவர் கூறியதும், அதற்காகவே காத்திருந்தவன் போலத் தன் முகத்தில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, அவர்களைத் தோப்பின் சற்றே மேடான பகுதிக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே ஒரு பெரிய தென்னை மரத்தின் வேர்ப்பகுதியில் விழுந்து கிடந்த அகலமான மட்டையின் அடியில், மிகவும் சாமர்த்தியமாகச் சருகுகளையும் காய்ந்த புற்களையும் அடுக்கி ஒரு சிறிய கூடாரம்போல அமைத்திருந்தான். மெதுவாகத் தன் சிறு விரல்களால் புற்களை அவன் விலக்க, அங்கே உருண்டையாகப் பின்னப்பட்டிருந்த சிறிய கூடு தெரிந்தது.

உள்ளே நாலைந்து பச்சிளம் அணில் குஞ்சுகள், மழையின் சில்லிப்பை அறியாமல், உள்ளே கிடைத்த வெதுவெதுப்பில் ஒன்றுடன் ஒன்று ஒண்டிக்கொண்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்தன! அதன் தாய் அணில், மரத்தின் கிளையிலிருந்து பயமில்லாமல் இறங்கி வந்து அவன் கைக்கு அருகிலேயே அமர்ந்து வாலை ஆட்டியது. அந்தச் சிறுவனுக்கும் அந்த ஜீவன்களுக்குமான ஆழமான நேசத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண்.

மிகவும் ஜாக்கிரதையாக அந்தக் கூட்டைத் தன் இரு கைகளிலும் ஏந்தி அவன் பாப்பியிடம் நீட்ட, உலகத்துச் செல்வங்களை எல்லாம் மொத்தமாக அள்ளித் தன் மடியில் போட்டுக் கொண்டது போல அத்தனை பரவசத்தோடு அந்தக் கூட்டைத் தன் கைகளில் வாங்கிக் கொண்டாள் பாப்பி!

“ஹை தம்பி மாமா! சூப்பரா ஹவுஸ் செஞ்சுட்டியே… இதே மாதிரி நாளைக்கு நாம இன்னும் பெரிய ஹவுஸா கட்டலாம் மாமா…” ஆசையோடு கண்கள் விரியப் பாப்பி கேட்க,

“கட்டலாமே… இப்போ நீ இந்தக் கூட்டை மறுபடியும் பத்திரமா வச்சுட்டு, அத்தை கூட ஒழுங்கா வீட்டுக்குப் போய் சாப்பிட்டுப் படுத்துத் தூங்கணும். நாளைக்கு மழை விட்டதும் நாம இன்னும் பெரிய வீடு கட்டலாம், சரியா பாப்பி?” பெரிய மனிதத் தோரணையில் அவன் பொறுப்பாகக் கூறினான்.

அவனது அந்தப் பேச்சையும் பொறுப்பையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண், “அப்படியே நங்கை மாதிரியே பொறுப்பு…” என்று தன்னுள் சொல்லிப் பெருமூச்சு விட்டார்.

“தேங்க்ஸ்த்தை…” சிறுவன் புன்னகைத்தான்.

ஆனால், அடுத்த நொடியே அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு மெல்லிய தயக்கமும் சோகமும் கைகோர்த்துக் கொண்டன. குரலைத் தாழ்த்தி,

“ஆனா தம்பி… ஒரு விஷயம்…” என்றார்.

“சொல்லுங்கத்தை…”

“நாலு பேருமா சேர்ந்து பெரியவங்க கண்ணுல பட்டுடாதீங்க தம்பி… நீங்களும் பாப்பியும் இப்படி ஒண்ணா சேர்ந்து விளையாடுறீங்கன்னு தெரிஞ்சா அப்புறம் வினையாகிடும்… வீட்ல நிலைமை சரியில்ல… பாப்பி அப்பாயி குழம்புக்கு பதிலா என்னை தாளிச்சுரும்…” இறைஞ்சும் குரலில் அவர் கேட்டுக் கொள்ள,

அதுவரை பூத்துக் குலுங்கிய அந்தச் சிறுவனின் முகம் சட்டென்று வாடிப்போனது. பெரியவர்களின் உலகமும் அவர்களின் பகையும் அந்தப் பிஞ்சு மனதுக்குப் புரியவில்லை என்றாலும், அந்த வார்த்தைகளில் இருந்த பாரம் அவனை அழுத்தியது. தன் ஏமாற்றத்தை விழுங்கிக்கொண்டு,

“சரிங்கத்தை…” என்று அவன் தலைகுனிந்து சொல்ல, அவனது கண்களிலிருந்து நழுவி விழுந்த ஒரு துளிக் கண்ணீர், மேலிருந்து விழுந்த மழைநீரோடு கலந்து சுவடில்லாமல் மறைந்தது.

பாப்பி எதையும் அறியாமல், தன் கையில் இருந்த அணில் குஞ்சுகளைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள்!

***

மழை விட்டபாடில்லை; ஆனால் தோப்பின் மறுபுறம் அந்தக் குட்டிப் பட்டாளத்தின் உற்சாகம் மழையை விடவும் வேகமாகப் பெருக்கெடுத்து ஓடியது.

மதிய உணவுக்குப் பின் பெரியவர்கள் அசந்திருந்த அந்த வேளையில், தம்பி மாமாவின் பின்னால் ஒரு குட்டிப் படையே அணிவகுத்து நின்றது. பாப்பி, அவளது அண்ணன், அவன் தோளிலிருந்த இரண்டு வயதுச் சிறுமி, இன்னும் சில வாண்டுகள் என ஒரு கூட்டமே துள்ளிக் கொண்டிருந்தது!

அந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கியது தம்பி மாமாதான்.

“தம்பி மாமா… கால் வலிக்குது… இன்னும் எங்கடா கூட்டிட்டுப் போற?” சேற்றுத் தரையில் காலை எடுத்து வைக்க முடியாமல் சிணுங்கினாள் பாப்பி.

“கொஞ்சம் பொறுடி பாப்பி… இதோ வந்துட்டோம் பனந்தோப்புக்கு…”

ஜமீன் ஊத்துகுளியின் வளமான செம்மண் பூமி மழையில் ஊறிச் சொதசொதவெனக் சிவந்து கிடக்க, பிள்ளைகள் கவனமாக அடியெடுத்து வைத்தனர்.

“அய்யே… எல்லாம் சேறா இருக்கு… காலெல்லாம் அழுக்காகிடும்…” பாப்பி மீண்டும் தன் சிணுங்கலை ஆரம்பிக்க,

“உனக்கு இன்னைக்கு சேவா வேணுமா வேண்டாமா? ஒழுங்கா வாயை மூடிட்டு வர்றவங்களுக்குத்தான் சேவா சீவிக் கொடுப்பேன்…” அவன் சற்றே அதிகாரக் குரலில் மிரட்ட, அடுத்த நொடியே பாப்பியின் சிணுங்கல் காணாமல் போனது!

“பாப்பி… அழாம வாடி… அண்ணன் இருக்கேன்ல…” என்று அவளது அண்ணன் ஆறுதல் சொன்னான். அவனது தோளில் இரண்டு வயதுக் குட்டித் தங்கை உட்கார்ந்து கொண்டு அவனது காதை ஆட்டிக் கொண்டிருந்தாள்.

“நீ இவளை மட்டும் தூக்கிட்டுப் போற… என்னையும் தூக்குண்ணா…” பாப்பி அழுகையின் விளிம்பிற்குச் செல்ல,

“உஷ் பாப்பி! இப்போ நீ அழுதீன்னா உனக்கு சேவா கிடையாது… என்ன சொல்ற?” தம்பி மாமாவின் மிரட்டல் இன்னும் கொஞ்சம் பலமாக விழுந்தது.

“ம்ம்ம்… என்னையும் அண்ணன் தூக்கணும்…” என்று அவள் கால்களை உதைத்துக் கொண்டு அழுது அடம் பிடிக்க, தோளில் தங்கையை வைத்திருந்தவன் பரிதாபமாகத் தம்பி மாமாவைப் பார்த்தான்.

“சரி வா… நீ என் தோள்ல ஏறிக்கோ…” என்று தன் பலத்தை எல்லாம் திரட்டி பாப்பியைத் தன் தோள் மீது ஏற்றிக் கொண்டான் தம்பி மாமா!

பனந்தோப்பை அடைந்ததும் குதூகலம் கரைபுரண்டது.

“ஹை! பனங்கொட்டை எல்லாம் முளைச்சுடுச்சு!” என்று ஒருவன் கத்த, வாண்டுகள் முளைத்திருந்த பனங்கிழங்குகளைப் பிடுங்கத் தொடங்கின.

காய்ந்த மட்டைகளையும் சுள்ளிகளையும் பொறுக்கி வந்து மேடான இடத்தில் குவித்து வைத்தனர்.

“எங்கடா மண்ணெண்ணெய்?” தம்பி மாமா கேட்க,

வீட்டிலிருந்து ரகசியமாக எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பெட்டியால் தீ மூட்டினான். அந்தத் தணலில் பனங்கிழங்குகளையும், பழுத்து விழுந்திருந்த பனம்பழங்களையும் போட்டனர். பனம்பழம் தீயில் ‘பட்… பட்…’ என்று வெடித்துக் கொண்டே கருகி வேக, அந்தப் பகுதியே பனம்பழ மணத்தால் நிறைந்தது.

நெருப்பு அணைந்ததும், சுட்ட பனங்கிழங்குகளை பியைத்து ஆளுக்கு ஒன்றாகப் பிரித்துக் கொடுத்தான் தம்பி மாமா. பின், சுட்ட பனம்பழத்தைத் தன் விரல்களால் சூடு தாங்கிக்கொண்டு தொட்டுடைத்தான். உள்ளே வெந்திருந்த அந்தப் பழத்தின் நறுமணம் வாண்டுகளின் நாவில் எச்சிலை ஊற வைத்தது.

“உஷ்… யாரும் சண்டை போடக் கூடாது! வரிசையில வாங்க… எல்லாருக்கும் சேவா தருவேன்…” அவன் உத்தரவிட, முதல் ஆளாக முந்தினாள் பாப்பி!

தம்பி மாமா பனைமட்டையின் நாரைக் கொண்டு அந்த வெந்த பழத்தை மிக நேர்த்தியாகச் சீவி ‘சேவா’ எடுத்துக் கொடுத்தான். அதை வாங்கிய பாப்பி எப்படித் தின்பது என்று தெரியாமல் கையில் வைத்துக்கொண்டு விழித்தாள்.

“பாப்பிகுட்டி… ஏன்டி தின்னாம முழிக்கிற?”

“எப்படிடா திங்கறது?”

அவளிடமிருந்து அதை வாங்கியவன், மேலே ஒட்டியிருந்த கரியை நீக்கிவிட்டு, சிறு துண்டைப் பிட்டு அவளது வாயில் ஊட்டினான்.

“ஹை… சூப்பரா இருக்குடா!” வாயைச் சப்புக் கொட்டி ருசித்தாள் பாப்பி.

“என்னது ‘டா’வா? போடி… உனக்கு இனிமே சேவா கிடையாது…” அவன் செல்லமாக முரண்டு பிடிக்க,

“நீ மட்டும் ‘டி’ சொல்ற…”

“நான் பெரிய பையன்… நான் ‘டி’ சொல்லலாம். நீ என்னை ‘மாமா’ன்னு தான் கூப்பிடணும்… புரியுதா?” அவன் மீசையே இல்லாத உதடுகளை முறுக்கிக் கொண்டு அதிகாரமாய்ச் சொல்ல,

பாப்பியும் அவசரமாய் தலையாட்டி, “சரி மாமா… இப்ப எனக்கு ஊட்டிவிடு…” என்று சரணடைந்தாள்!

வயிறு நிறைந்த கையோடு அடுத்த விளையாட்டு தொடங்கியது.

தோப்பில் காய்ந்து விழுந்து கிடந்த ஒரு பெரிய பனைமட்டையை இழுத்து வந்தான் தம்பி மாமா. அதன் அகலமான ஓலைப் பகுதி இருக்கை போலவும், நீண்ட காம்பு வண்டியின் நுகத்தடி போலவும் இருந்தது.

“பாப்பி… நீ இந்த ஓலை மேல உட்கார்ந்துக்கோ… குட்டியை உன் மடியில கெட்டியா பிடிச்சுக்கோ!” தம்பி மாமா உத்தரவிட்டான்.

பாப்பி ஓலையின் மீது அமர்ந்து கொண்டு, குட்டிப் பெண்ணை தன் மடியில் இறுக அணைத்துக் கொண்டாள்.

“டேய் மச்சான்… நீ பின்னாடி தள்ளு, நான் முன்னாடி இழுக்குறேன்!”

இரு சிறுவர்களும் முழு பலத்தையும் போட்டு அந்தப் பனைமட்டையை இழுக்க, சேற்றுப் பாதையில் ‘சர்ர்ர்’ என்று சறுக்கிக்கொண்டு நகர்ந்தது அந்த ஜமீன் பனை வண்டி!

“ஹை… ஜாலி! மாமா வேகமா இழு மாமா!” பாப்பியின் மழலைச் சிரிப்பும், குட்டியின் கைதட்டலும் அந்தத் தென்னந்தோப்பையே நிறைத்தன. மேடு பள்ளங்களில் வண்டி ஏறி இறங்கும்போது, சேறு தெறித்து அவர்களின் முகமெல்லாம் அப்பியது.

திடீரென வண்டி ஒரு சேற்றுப் பள்ளத்தில் சிக்கி நிற்க, தம்பி மாமா முழு வேகத்தோடு இழுக்க முயன்றான். பிடி நழுவி அவன் குப்புறச் சேற்றில் விழ, பாப்பியும் பெரியவனும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“டயர் பஞ்சர் ஆயிடுச்சுடா!” என்று அவன் முகத்தைத் துடைத்துக் கொள்ள, அந்த மழைக் காற்றில் குழந்தைகளின் சிரிப்பொலி பட்டாம்பூச்சியாய்ப் பறந்தது.

சேற்றில் விழுந்த தம்பி மாமா எழுந்து நின்ற கோலத்தைப் பார்த்து, பாப்பியும் பெரியவனும் வயிறு குலுங்கச் சிரித்துக் கொண்டே இருந்தனர். மீசை அரும்பாத அவனது மூக்கின் நுனியில் ஒரு பொட்டுச் சேறு அப்பியிருக்க, அதைத் தன் சட்டைக் கையால் துடைத்துவிட்டு,

“சிரிக்காதீங்கடி… வண்டி ஓட்டுனா இதெல்லாம் சகஜமப்பா!” என்று கூற, சிரிப்பொலி இன்னும் அதிகமானது.

வண்டி விளையாட்டின் களைப்பு அடங்கியதும், அடுத்த வால் தானாக முளைத்துக் கொண்டது.

பனந்தோப்பின் ஒரு மூலையில், மழை நீரில் அடித்து வரப்பட்டு ஒதுங்கிக் கிடந்த தேங்காய் மட்டைகளும், தட்டையான சில்லுக் கற்களும் வரிசையாய் இருக்க, தம்பி மாமாவின் கண்கள் மின்னின.

“ஏய்… வாண்டுங்களா! பாண்டி ஆடலாமா?”

“பாண்டியா? சேத்துல எப்டிடா ஆடுறது?” பாப்பி இடுப்பில் கை வைத்து முறைத்துக் கேட்டாள்.

“நீ சும்மா நில்லுடி…” என்றவன், ஒரு நீண்ட குச்சியைக் கையில் எடுத்து, மழை நனைத்த ஈரத் தரையில் கிடுகிடுவெனக் கட்டங்களை வரைந்தான். கையில் ஒரு தட்டையான ஓட்டுச் சில்லை எடுத்து, “இந்தா பாப்பி… கரெக்டா முதல் கட்டத்துல போடணும். ஒத்தக் கால்ல நொண்டி அடிச்சுட்டே போய், கோடு மிதிக்காம காலை வச்சு எடுக்கணும். அவுட்டானா வத்திக்குச்சி பந்தயம்!”

“நான் ஒண்ணும் அவுட்டாக மாட்டேன் போடா!” என்று சவால் விட்டுச் சில்லை எறிந்தாள் பாப்பி. அது கரெக்டாகக் கோட்டின் மேலேயே போய் நின்றது.

“அவ்ளோதான்… அவுட்டு! அவுட்டு! வரிசையில பின்னாடி போ…” தம்பி மாமா கத்த,

“இல்லடா… மழையில கல்லு நழுவிப்போச்சு… நான் ஒத்துக்க மாட்டேன்!” பாப்பி தரையில் காலை உதைத்து அடம் பிடித்தாள்.

“முடியாது போடி… ரூல்ஸ்னா ரூல்ஸ்தான்! டேய் மச்சான்… நீ போடுடா!”

“பாவம்டா… போனா போகுது… இந்த ஒரு வாட்டி விட்டுடலாம்…” பெரியவன் பெரிய மனதோடு கூற, ‘என் அண்ணனை பார்’ என்று பெருமிதமாக இல்லாத காலரை ஏற்றி விட்டுக் கொண்டது வாண்டு.

கூட்டத்தில் கூச்சலும் சிரிப்பும் ஒரேயடியாகப் பறந்தது.

அடுத்ததாகத் தென்னந்தோப்பு வாய்க்கால் பக்கம் போனார்கள். மழைக் காரணமாய் வரப்பெல்லாம் வழவழப்பு.

“யாரெல்லாம் இந்த வாய்க்கால் வரப்புல வழுக்காம ஒரே ஓட்டமா ஓடி வந்து அந்தக் கடைசித் தென்னை மரத்தைத் தொடுறீங்கன்னு பாப்போம்!” தம்பி மாமா சவால் விட,

“நான் தான் ஃபர்ஸ்ட்!” என்று பாப்பி சேற்றுப் பாவாடையைத் தூக்கிக்கொண்டு முந்தினாள். அடுத்த நொடியே ‘சொதக்’கென்று கால் வழுக்கி, குப்புறச் சேற்றில் விழுந்தாள். முகமெல்லாம் சேறு! பாப்பி அழத் தொடங்குவதற்குள், “அடடே… நம்ம பாப்பி சேத்துல நீச்சல் அடிக்குது பாரு!” என்று தம்பி மாமா அவளை வார, அவள் அழுகையை மறந்து எழுந்து அவன் மேல் சேற்றை வாரி வீச, பிள்ளைகள் நால்வரின் உடம்பிலும் சேறும் சகதியும் அப்பி, பன்றிக்குட்டி போல அடையாளம் தெரியாமல் மாறினார்கள்.

“அடடா… இந்த லட்சணத்துல வீட்டுக்குப் போனா அத்தை விளக்குமாத்தைத் திருப்பி வச்சு பின்னி எடுத்துடுவாங்கடா!” தம்பி மாமா தலையில் கை வைத்தான்.

“அப்ப என்ன பண்றது?” பெரியவன் அப்பாவியாய்க் கேட்டான்.

“ஆத்துல போயி கழுவிட்டுப் போயிரலாம், வாங்கடா!”

தம்பி மாமா வழிகாட்ட, நால்வர் பட்டாளமும் தோப்பின் எல்லையைக் கடந்து ஆற்றங்கரைப் பாதையை நோக்கி விரைந்தது.

மழை நீர் ஆம்பிராம்பாளையம் ஆற்றில் செந்நிறக் குழம்பாகப் பெருக்கெடுத்து, கரைகளைத் தொட்டு உரசியபடி ‘ஹொய்ங்’ என்ற இரைச்சலோடு ஆவேசமாக ஓடிக் கொண்டிருந்தது. சில்லென்ற காற்று முகத்தில் அறைய, புது வெள்ளத்தின் மண் வாசனை மூக்கைத் துளைத்தது.

ஆற்றைக் கண்டதும் பையன்கள் இருவரின் கண்களும் உற்சாகத்தில் மின்னின. சட்டையைக் கழற்றி ஒரு காய்ந்த பாறையின் மீது எறிந்த தம்பி மாமா, “டேய் மச்சான்… வாடா!” என்று கூவிக்கொண்டே ஆழமில்லாத, படித்துறைப் பாறைப் பகுதிக்கு ஓடினான்.

பெரியவனும் தன் மேல் சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு, ஆற்று நீரில் குதித்தான். “தண்ணி சும்மா ஜில்லுன்னு இருக்குடா!” இருவரும் ஒருவரை ஒருவர் தண்ணீரை வாரி இறைத்து, முங்கி முங்கி எழத் தொடங்கினர். உடம்பில் ஒட்டியிருந்த சேறெல்லாம் ஆற்று வெள்ளத்தில் அடித்துப் போக, இருவரும் ஆம்பல் பூப்போல மிதந்து கும்மாளமிட்டனர்.

கரையில் நின்றிருந்த பாப்பிக்கும், அவளது விரலைப் பிடித்தபடி நின்ற குட்டிக்கும் அதைப் பார்த்ததும் சும்மா இருக்க முடியவில்லை.

” நானும் ஆத்துல குளிக்கிறேன்!” பாப்பி தன் பாவாடையைத் தூக்கிப் பிடித்தபடி ஆற்றுப் படியை நோக்கி முதல் காலை எடுத்து வைத்தாள்.

அவள் காலை வைத்த வேகத்தில், குட்டியும் “நானும்… அண்ணா… நானும் வர்றேன்!” என்று தன் பிஞ்சுக் கால்களை ஆற்றில் நனைக்க முன்னோக்கி நகர்ந்தாள்.

அவ்வளவுதான்! தண்ணீருக்குள் இருந்த தம்பி மாமாவின் முகம் ஒரு நொடியில் வெளுத்துப் போனது. விளையாட்டெல்லாம் மறைந்து, அவனது கண்களில் மரண பயமும், அதீதப் பொறுப்பும் சட்டென்று குடியேறின!

“பாப்பி! நில்லுடி அங்கே! ஒரு அடி முன்னாடி வச்ச… அப்புறம் நடக்குறதே வேற!”

தம்பி மாமா இடுப்பளவு ஆற்றுத் தண்ணீரைப் பிளந்து கொண்டு, மின்னல் வேகத்தில் படித்துறையை நோக்கி ஓடி வந்தான். அதே வேகத்தில் பெரியவனும் நீந்தி வந்து கரையோரம் நின்றான்.

“ஆத்துல எவ்வளவு வேகம் போகுதுன்னு கண்ணு தெரியல? வெள்ளம் சுளுவா இழுத்துட்டுப் போயிடும்டி! ஒழுங்கா அந்தப் பாறை மேல போய் நில்லுங்க ரெண்டு பேரும்!” தம்பி மாமாவின் குரல் அத்தனை அதிகாரமாகவும் மிரட்டலாகவும் வெடித்தது. அவனது பத்து வயது முகத்தில் பெரிய மனிதனின் கண்டிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது.

பாப்பிக்கு ஏமாற்றம் தாங்கவில்லை. உதட்டைப் பிதுக்கிக் கொண்டு சிணுங்கினாள்.

“இல்ல… நானும் குளிக்கணும்…”

“வேண்டாம்… அடி வாங்குவ…” தம்பி மாமா கோபமாக கையை வீச,

“அண்ணா…” என்று அண்ணன் பக்கம் தாவினாள் பாப்பி.

“டேய்… மிரட்டாதடா…” என்ற அண்ணனிடம் ஒண்டியவள், “ண்ணா ப்ளீஸ் ண்ணா… நானும் குளிக்கறேன்…” என்று கெஞ்ச,

“வேணாண்டா பாப்பிக்குட்டி. அண்ணன் சொன்னா கேப்பீல்ல…” அனுசரணையாக கேட்க, அவளது பிதுங்கிய உதடு இன்னும் பிதுங்கியது.

“இல்ல… நானும் குளிப்பேன்…” தரையை உதைத்துக் கொண்டு அழ ஆரம்பிக்க, சின்னது அவளை பின்பற்றிக் கொண்டு, அதுவும் உதைத்தது.

“ஏய் கழுத… உன்னால பாரு. குட்டியும் அடம் பண்றா… ஒழுங்கா இருக்க மாட்ட?” தம்பிமாமா கண்களை உருட்டி மிரட்டினான்.

“போடா… நீங்க மட்டும் ஜாலியா குளிக்கிறீங்க… நாங்க மட்டும் சும்மா வேடிக்கை பார்க்கணுமா? எனக்கும் குளிக்கணும்… குட்டிக்கும் குளிக்கணும்!” அவள் முரண்டு பிடித்துத் தன் மற்றொரு காலையும் தண்ணீருக்குள் விடப் பார்த்தாள்.

பெரியவன் சட்டென்று படியின் மீது ஏறி வந்து, பாப்பியின் கையை அழுத்தமாகப் பிடித்துப் பின்னுக்கு இழுத்தான்.

“பாப்பி… மாமா சொல்றான்ல? வாயை மூடிட்டு சமத்தா நில்லு! இது நம்ம வீட்டுத் தொட்டித் தண்ணி இல்லடி, ஆத்து வெள்ளம்! சின்னப் புள்ளைங்க எல்லாம் இதுல எறங்கக் கூடாது. சுத்து போட்டு இழுத்துட்டு போயிடுச்சுன்னா என்ன பண்றது? உனக்கு நீச்சல் தெரியுமா முதல்ல?” பெரியவனின் குரலிலும் அண்ணனுக்கே உரிய கோபமும் பதட்டமும் கலந்திருந்தது.

குட்டி மதி தன் அண்ணனின் கண்டிப்பான முகத்தைப் பார்த்து மிரண்டுபோய், பாப்பியின் பின்னால் ஒண்டிக் கொண்டாள்.

“அடிச்சா தான் புத்தி வரும்டி உங்களுக்கு! ஆத்துல இறங்குனா தண்ணிக்குள்ள பேய் இருக்கு… பிடிச்சு உள்ள இழுத்துட்டுப் போயிடும்!” தம்பி மாமா அவசரமாய் ஒரு பொய்யைத் தட்டிவிட்டான்.

“பேயா?” பாப்பி மிரட்சியோடு அவனைப் பார்த்தாள்.

“ஆமா… இந்த மாதிரி செவப்புத் தண்ணில, சொல் பேச்சுக் கேக்காத சின்னப் பாப்பாங்களை முழுங்குறதுக்குன்னே ஒரு பெரிய ஆத்துப் பேய் உள்ள இருக்கு. அதுவும் பாவாடை போட்ட பாப்பாவைத்தான் முதல்ல பிடிக்கும்! இப்போ நீ ஆத்துல எறங்கப் போறியா, இல்ல ஒழுங்கா பாறை மேல உக்காரப் போறியா?” அவன் கண்களை உருட்டிப் பயமுறுத்த,

பாப்பி மிரண்டுபோய் சட்டென்று தன் கால்களை நீரிலிருந்து பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்! குட்டியும் அவளது கையை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது.

“அடிப்பாவிங்களா… உங்களை வச்சுட்டு நாங்க நிம்மதியா ஒரு முழுக்கு கூடப் போட முடியாது போலிருக்கே!” என்று சலித்துக் கொண்ட தம்பி மாமா, ஆழமில்லாத கரையின் ஓரத்தில் நின்றுகொண்டு, தன் இரு கைகளிலும் தெளிந்த ஆற்று நீரை அள்ளி அள்ளி, கரையில் நின்றிருந்த பாப்பியின் மீதும் குட்டியின் மீதும் ‘விசுக் விசுக்’கெனத் தெளிக்கத் தொடங்கினான்.

“இந்தா… இதுலயே உங்க சேத்தை எல்லாம் கழுவிக்கோங்க… தண்ணிக்குள்ள மட்டும் காலை வைக்கக் கூடாது, சொல்லிட்டேன்!”

மிரட்டல் ஒருபுறம் இருந்தாலும், அந்தத் தண்ணீர் முகத்தில் பட்டதும் பாப்பியின் உதட்டோரம் மீண்டும் சிரிப்பு எட்டிப்பார்த்தது. “ஹை…!” என்று கைகளை விரித்துக் கொள்ள, பெரியவனும் சேர்ந்து அவர்களுக்குத் தண்ணீரை அள்ளித் தெளித்துச் சேற்றைக் கழுவினான்.

நீரில் விளையாடி முடித்துக் களைத்துப் போய் நால்வரும் வரப்பில் நடந்து வந்துகொண்டிருந்தனர்.

அப்போது, வழியில் இருந்த ஒரு வரப்புப் பள்ளத்தைக் கடக்க முயன்ற பாப்பியின் பிஞ்சுப் பாதம் சேற்றில் சறுக்கியது. ‘தபக்’கென்று கீழே விழுந்தாள் பாப்பி. வரப்பில் நீட்டிக் கொண்டிருந்த கூர்மையான பனங்கொட்டையின் முளை அவளது வலது முழங்காலில் கிழிக்க,

ரத்தம் ‘சுளீர்’ என்று கொஞ்சமாக பீறிட்டு வெளியேறியது!

“அம்மாஆஆ…” என்று வீறிட்டு அழத் தொடங்கினாள்.

பெரியவன் பதறிப்போய் அவளருகே ஓடிவர, தம்பி மாமா மின்னல் வேகத்தில் அவளருகில் மண்டியிட்டான்.

ரத்தத்தைக் கண்டதும் பாப்பி பயத்தில் கத்திக் கதற, தம்பி மாமாவின் முகத்தில் பதட்டம் துளியும் இல்லை; மாறாக, பெரிய மனிதனின் நிதானம்…

“பாப்பி… அழாத… மாமா இருக்கேன்ல… ஒன்னும் ஆகாது…”

அவன் சற்றும் யோசிக்காமல், தான் போட்டிருந்த அழுக்குச் சட்டையின் நுனியைத் தன் பற்களால் கடித்து, ‘சரக்’கென்று ஒரு துண்டைக் கிழித்தான்.

அருகில் ஓடிக்கொண்டிருந்த தெளிந்த மழைநீரில் தன் கைகளை அவசரமாகக் கழுவியவன், அந்தக் கிழித்த துணியால் பாப்பியின் முழங்காலில் வழிந்த ரத்தத்தைத் துடைத்தான். பின், ரத்தம் கசிந்த காயத்தின் மீது மற்றொரு துணியை வைத்து, பக்குவமாக அழுத்தி ஒரு முடிச்சுப் போட்டுக் கட்டினான்.

அவனது சிறு விரல்கள் காட்டிய அந்த நேர்த்தியும் அக்கறையும் பாப்பியின் அழுகையை மெல்லக் குறைத்தது. அவன் தன் கைகளால் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

“பாரு… ரத்தம் நின்னுடுச்சு. அவ்வளவுதான்!” அவன் அவளது கன்னத்தைத் தட்டிச் சிரித்தான்.

பாப்பி விம்மிக்கொண்டே, “ரொம்ப வலிக்குது மாமா…” என்றாள்.

அவன் அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்து, மிக ஆழமான குரலில் சொன்னான்:

“நான் பெரியவனானதும் பெரிய டாக்டராகப் போறேன் பாப்பி… நீயும் என்னை மாதிரியே டாக்டராகணும்! ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பெரிய ஆஸ்பத்திரி கட்டி எல்லாருக்கும் உடம்பு சரியாக்கணும்! இப்ப நீயே இப்படி ரத்தத்தைப் பார்த்துப் பயந்து அழுதா அப்புறம் எப்படி டாக்டராவ?”

அவனது முகத்தில் இருந்த அந்தத் தீர்க்கமும், அவன் சொன்ன அந்த வார்த்தைகளும் பாப்பியின் பிஞ்சு இதயத்தில் மிக ஆழமாகப் போய் அமர்ந்து கொண்டன.

“நீயும் டாக்டராவியா மாமா?”

“ஆமா… ரெண்டு பேரும் டாக்டராவோம்… நான் ஊசி போடுவேன், நீ மருந்து கொடுப்ப… சரியா?”

“சரி மாமா… நானும் டாக்டராகுறேன்!” பாப்பி தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.

“நீங்க ரெண்டு பேரும் தான் டாக்டராவீங்களா? நானும் தான் ஆவேன்…” என்று பெரியவனும் தன் பங்குக்கு கூற,

குட்டி குதித்துக் கொண்டு, “நானும் நானும்…” என்று மழலை மாறாத குரலில் குதூகலித்தது.

மழை மீண்டும் மெல்லிய தூறலாக மாறத் தொடங்க, தென்னை மரங்களின் நிழல் வழியே தம்பி மாமா பாப்பியைத் தன் கைகளில் அள்ளித் தூக்கிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தான். தோளில் தங்கையோடு பெரியவன் நடந்தான்!

அது ஒரு அழகிய கனாக் காலம்!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 4

நியூரோ தீவிர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடிக் கதவுகளுக்குப் பின்னால், அந்த அறையின் அமைதியை மெக்கானிக்கல் வென்டிலேட்டரின் சன்னமான சப்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது.கடிகாரத்தின் முட்கள் நகர்ந்து நகர்ந்து, விதித்த அந்த ஆறு மணி நேர இடைவெளியை விழுங்கி முடித்திருந்தன.மருத்துவமனை நிர்வாகக் குழு,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 2

  1. Vinna Vinna பத்தி 2 வானம் கறுத்திருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையின் சிகரங்களைத் தொட்டுத் தடவி வந்த Vinna Vinna

    வாவ் 🤗விஷ்வா தான் ப்ரவவுக்கு மாமா வா சூப்பர் சூப்பர்.. ஓரே பொண்ணுன்னு சொன்னிங்க?... இந்த எபி முழுக்க இந்த பசங்களுக்கு எதுவும் ஆகிட கூடாது பயந்துட்டே படிச்சி அருமை எபி🥰

  2. Gowri Srinivasanபொதுக் கருத்துGowri Srinivasan

    அப்ப விஷ்வா தான் இந்த தம்பி மாமாவா?????
    அதே தீர்க்கம் இப்பையும் இருக்கே❤️❤️❤️❤️
    ப்ரவா ஒரே பெண் போல சொன்னீங்க 🤔🤔🤔🤔🤔
    ஆன இந்த அண்ணன், தங்கை எல்லாம் என்ன ஆனாங்க?????
    ஒரு வேலை அந்த அண்ணன் தான் ஜீவா வா?????

உங்கள் கருத்தைப் பகிருங்கள்