arrow_back
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ! அத்தியாயம் 5

அத்தியாயம் 5

visibility 651
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (12 மதிப்பீடுகள்)
பகிர்

பூத்திருந்த செண்பகப்பூயையும் பவளமல்லியையும் முகர்ந்தபடியே, அந்த ரம்மியமான அதிகாலைப் பொழுதில், தன் விரல்களால் செடிகளில் துளிர்த்திருந்த புதுத் தளிர்களைத் தொட்டு ரசித்தபடியே, தோட்டத்து நடைபாதையில் நிதானமாய் நடை பயின்று கொண்டிருந்தார் கார்த்தியாயினி.

 ஐந்தரை மணிக்கெல்லாம் அலாரம் வைக்காமலேயே விழித்துவிடும் பழக்கம் கொண்டவருக்கு, இந்த இளம் குளிரும், புலர்ந்தும் புலராமலும் இருக்கும் வானமும் மனதுக்கு அத்தனை பிரியமான ஒன்று. வீட்டின் கலைநயமிக்க அலங்காரங்களை தானே பார்த்துப் பார்த்துச் செதுக்கியவர், காலையில் மலர்ந்திருக்கும் பூக்களோடு தன் ரசனையைப் பகிர்வதில் அத்தனை அலாதிப் பிரியம் காட்டுவார்.

நடைப்பயிற்சியை முடித்தவர், வீட்டுக்குள் போனார்.

அதிகாலையிலேயே அவசர அவசரமாக எழுந்து மருத்துவமனைக்கு ஓடும் ஜீவா, மணி ஏழாகியும் கூட கீழே இறங்கி வராமல் இருந்தது அவரது புருவத்தை வியப்பில் உயர்த்தியது.

சமையலறை நோக்கித் திரும்பியவர், “சரோஜா… ஜீவா தம்பி இன்னும் கீழே வரலையா?” எனக் கேட்க,

“இல்லீங்கம்மா…” என்ற பதிலில் கார்த்தியாயினி நேராக மாடிக்கு விரைந்தார்.

அறைக் கதவைத் திறந்து, அவர் உள்ளே நுழைந்த சத்தம் கேட்டே விழித்தான் ஜீவா.

“ஹாய் மா… குட் மார்னிங்…” தூக்கக் கலக்கத்தோடு அவன் ஒரு கண்ணைத் திறந்து பார்க்க, மகனது தலைமாட்டில் அமர்ந்து அவன் கேசத்தை வாஞ்சையாய் வருடினார் கார்த்தியாயினி.

“என்னப்பா கண்ணா… நைட் வர ரொம்ப லேட்டாச்சா?”

ஜீவா தலையணையிலிருந்து மெல்லத் தன் தலையை நகர்த்தித் தாயின் மடியில் வசதியாகப் படுத்துக் கொண்டான்.

“ஆமாம்மா… நேத்து ஒரு கிரிட்டிக்கலான பிரைன் டெட் கேஸ். ஆர்கன் டொனேஷனுக்கு அவங்க அம்மா ஒத்துக்கிட்டாங்க. கெடாவர் வெயிட்டிங் லிஸ்ட்ல நிறைய ஃபார்மாலிட்டீஸ் முடிக்க வேண்டியிருந்தது. நைட் முழுக்க தியேட்டர்லயே நிக்க வேண்டியதா போச்சு…”

மருத்துவத் தொழிலுக்குள் நுழைந்துவிட்டால் தூக்கத்தைத் தொலைப்பது வாடிக்கைதான் என்பதைப் புரிந்து வைத்திருந்தாலும், மகனின் இந்த ஓயாத உழைப்பைக் கண்டு தாயுள்ளம் மெல்லக் கசிந்தது.

“எத்தனை மணிக்குப்பா இன்னைக்கு அங்க இருக்கணும்?”

“ஏழு மணிக்கு போகணும்மா…” அவன் தாயின் மடியில் இன்னும் செல்லமாகப் புதைந்து கொள்ள,

“அப்படியா தம்பி… இப்போ மணி என்னன்னு பாரு?”

இதழோரப் புன்னகையோடு கார்த்தியாயினி கேட்க, ஒரு கண்ணைச் சுருக்கிக் கொண்டு சுவரில் இருந்த டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்த ஜீவா, ‘ஸ்பிரிங்’ போல எகிறி எழுந்தான்!

“ஓ மை காட்! மணி ஏழரையா? என்னம்மா நீங்க… என்னை மாட்டீங்களா?”

“சரி சரி… ரொம்பப் படபடன்னு குதிக்காம சீக்கிரம் கிளம்பு. விஷ்வா என்ன பண்றான்னு தெரியல. அவனும் லேட்டாதான் படுத்தான்…” என்று எழுந்தவரைப் பார்த்து, “அம்மா… இன்னைக்கு என்ன டிபன்?” எனச் சோம்பல் முறித்தபடியே வழக்கம் போல மெனுவைக் கேட்டான்.

“உனக்கும் விஷ்வாவுக்கும் பிடிச்ச சோளப் பணியாரமும் தக்காளி பஜ்ஜியும் தான்…”

“சூப்பர் மா. ஜஸ்ட் டென் மினிட்ஸ்..!” என்றவன் பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

கீழே கார்த்தியாயினி தட்டுகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அவர் தோளில் தன் நீண்ட கையைப் போட்டு உரிமையோடு அணைத்துக் கொண்டான் விஷ்வா.

“டிபன் ரெடியா அத்தை? பசியில வயித்த கிள்ளுது…”

விஷ்வா, கார்த்தியாயினியின் கணவர் சக்திவேலின் தங்கை மகன். சிறு வயதிலேயே தாயின் அரவணைப்பை இழந்து நின்ற விஷ்வாவையும் அவனது தங்கை மதிமலரையும், சொந்தக் கருவில் சுமந்த பிள்ளைகளை விடவும் ஒருபடி மேலாகவே சீராட்டி வளர்த்தெடுத்தவர் கார்த்தியாயினி. ஜீவாவைப் போலவே மருத்துவத்தில் நரம்பியல் நிபுணத்துவம் பெற்று, மருத்துவமனையில் ஜீவாவின் வலது கரமாய் இயங்கி வருகிறான்.

“உட்காரு விஷ்வா… டிபன் வைக்கிறேன்…”

“சீக்கிரம்த்த… இன்னைக்கு செம வேலை இருக்கு!” விஷ்வா நாற்காலியில் அமர்ந்து விரல்களால் மேஜையில் தாளமிட்டான்.

“மதி எழுந்தாளா விஷ்வா? அவ காலேஜ் கிளம்ப வேண்டாமா?”

“அவளாச்சு நீங்களாச்சு அத்தை! காலங்காத்தால அந்தத் தூங்குமூஞ்சியை எழுப்பி, நான் எதுக்கு நாலு அர்ச்சனை வாங்கிக் கட்டிக்கணும்? அந்த சோலிக்கு நான் வரல!” சிரிப்பை அடக்கிக் கொண்டு விஷ்வா பவ்யமாய் நழுவப் பார்க்க,

“காலைலயே ஆரம்பிச்சாச்சா… நடத்துங்க நடத்துங்க…” கார்த்தியாயினி செல்லமாய்க் கடிந்து கொண்டார்.

மின்னல் வேகத்தில் மாடியிலிருந்து இறங்கி வந்த ஜீவா, விஷ்வாவின் காதருகே குனிந்து ஏதோ கிசுகிசுக்க, விஷ்வா தன் இரு கைகளையும் உயர்த்திப் பெரிய கும்பிடு போட்டான்!

“என் சோலியை முடிக்க வந்த சீடரே, நீங்கள் இங்கே வர வேண்டாம்!”

“வந்தா?”

“வந்தால் வகுந்து விடுவேன்…”

“என்ன விஷ்வா? உனக்கு நல்லது பண்ற என்னை வரவேண்டாம்ன்னு இப்படி ஈசியா சொல்லிட்டியே?” ஜீவா கிண்டலாக சிரிக்க, விஷ்வா கண் சிமிட்டினான்.

“ஆமா நீ அப்பாவி…” என்று சிரித்தான்.

அவர்களுக்குள் ஏதோ அடல்ட் ஜோக் போல என்று கார்த்தியாயினி தனக்குள் சிரித்துக் கொண்டார்.

சுடச்சுட சோளப் பணியாரத்தை மேஜையில் வைத்தவர், இருவரையும் பார்த்தார்.

“ரெண்டு பேரும் பேசிட்டே நாளைக் கடத்துங்க… உருப்படியா கல்யாணம் பண்ணீடாதீங்க.ரெண்டும் முப்பது வயச தாண்டின கழுதைங்களா இருக்கு. சொந்தக்காரங்க வழில பார்த்தா, ‘உன் பசங்களுக்கு எப்ப பத்திரிகை வைப்ப’ன்னு என் வாயைப் பிடுங்குறாங்க. பொண்ணு பேச்சை எடுத்தாலே ரெண்டு பேரும் ஆஸ்பத்திரியே கதின்னு ஓடிப்போயி ஒளிஞ்சுக்கிறீங்க…”

விஷ்வாவின் முகத்தில் சட்டென்று ஒரு கசந்த புன்னகை வந்து மறைந்தது. திருமணத்தைப் பற்றி அவனுக்கு இருக்கும் கசப்பான மதிப்பீடுகள் கார்த்தியாயினி அறியாதது அல்ல; அவனால் வலிகளை இன்னமும் எளிதில் கடக்க முடியவில்லை என்பதும் அவருக்கு தெரியும். ஆனாலும் அப்படியே விட்டுவிட முடியுமா?

“கார்த்தி மாமி! இன்னைக்கு லேட்டாகிடுச்சு… தயவுசெஞ்சு மேரேஜ் பஞ்சாயத்தை அப்புறம் வச்சுக்கலாமா?” ஜீவா நைசாக நழுவப் பார்த்தான்.

“மதிக்கு இன்னும் ஒரு வருஷத்துல படிப்பு முடிஞ்சிடும்டா… அவளுக்கு முன்னாடி நீங்க ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வர வேண்டாமா? அவளை விட நீங்க ஏழு, எட்டு வயசு மூத்தவங்க… உங்களை அப்படியே விட்டுட்டு அவளுக்கு எப்படி மாப்பிள்ளை பாக்குறதாம்?”

“அத்த ப்ளீஸ்… அவளுக்கு நல்ல மாப்பிள்ளையை நானே தேடிக் கொண்டு வந்து முன்னாடி நிறுத்துறேன். இப்போதைக்கு இந்த டாபிக்கை விடுங்க…” விஷ்வா தட்டைத் தள்ளி வைக்க, கார்த்தியாயினி பெருமூச்சுடன் அமைதியானார்.

“சரி… அந்த குண்டு கத்தரிக்கா எங்க? இன்னுமா அவ எழல?” ஜீவா கடமை உணர்வோடு குரலை உயர்த்த, விஷ்வாவுக்கும் கைகள் இப்போது பரபரத்தது.

“பெட்ஷீட்டை இழுத்துப் போத்திட்டுத் தூங்கறாடா மச்சான்!”

“ஜீவா… விஷ்வா… வேணாம்டா! நைட் ரொம்ப நேரம் படிச்சிட்டு இருந்தா… அவளை வம்புக்கு இழுக்காதீங்க…” கார்த்தியாயினி பதற,

“அதெல்லாம் முடியாது செல்லம்… காலையில அவகிட்ட அடி வாங்கலன்னா நமக்கு நாளே ஓடாது!” ஜீவா பூனை நடை நடந்து மதியின் அறைக்குள் நுழைந்தான். விஷ்வா பின்னால் நின்றுகொண்டு வாயாலேயே பின்னணி இசை எழுப்பினான்.

படுக்கையில் சுருண்டு கிடந்த மதியின் அருகே சென்ற ஜீவா, மேஜையில் இருந்த ஜில்லென்ற தண்ணீர் கப்பை எடுத்தான். பாதி தண்ணீர் இருந்தது.

விஷ்வாவைப் பார்த்துத் திருட்டுத்தனமாய் ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, ஒட்டுமொத்தத் தண்ணீரையும் மதியின் முகத்தில் படாரெனக் கவிழ்த்தான்!

“ஹெய்ய்ய்ய்யி…!”

மதி பேயறைந்தது போல அடித்துப் பிடித்துத் துள்ளி எழுந்தாள்! முகமெல்லாம் தண்ணீர் வழிய, கண்களைக் கசக்கியபடி எதிரே நின்ற இருவரையும் கோப வெறியில் வெறித்துப் பார்த்தாள்.

“சூப்பர் மேக்கப் குண்டு கத்தரிக்கா! இன்னைக்கு டாஸ்க் ஓவர்!” ஜீவா விழுந்து விழுந்து சிரித்துவிட்டு எஸ்கேப் ஆக,

“டேய்ய்ய்ய்… எருமை மாடு! பரதேசி! கைல கிடைச்சா செத்தடா…” கையில் கிடைத்த தலையணையைத் தூக்கிக்கொண்டு ஜீவாவைத் துரத்தினாள் மதி!

ஹாலுக்குள் பாய்ந்து ஓடிய ஜீவா சோபாவைத் தாண்ட முயல, மதி நைசாகத் தன் காலை நீட்டி அவனை இடறினாள். ஜீவா ‘பொத்தெ’ன்று சோபாவில் விழ, அவன் மீது ஏறி அமர்ந்து கொண்டு தலையணையால் சரமாரியாக விளாசினாள்!

“அத்த… சீக்கிரம் வாத்த… இவன் வாயில அந்த இட்லிய அப்படியே திணிச்சு சாகடிக்கணும்!”

“இட்லி இல்ல பாப்பா. பணியாரம் தான் இருக்கு…” என்று அவளிடம் பணியாரம் ஒன்றை தந்தார் கார்த்தி.

“ஏய் குண்டு கத்தரிக்காய்… விடுடி… வெயிட் தாங்கலடி… ஏய் யம்மா நீயெல்லாம் என்னை பெத்த தாயா?” ஜீவா மூச்சுத் திணறி அலற,

“நீ எதுக்கு அவ மேல தண்ணிய ஊத்தின?” சிரித்தபடி அவர் கேட்க

“கும்பகர்ணி மாதிரி தூங்கிட்டு இருந்தா தண்ணிய ஊத்தாம?” பேச முடியாவிட்டாலும் பதில் கூறியவனின் வாயில் பணியாரத்தை திணித்தாள் மதி.

“ஏய் போதும்… அவனை விடு…” தங்கையை கீழிறக்க முயன்றான் விஷ்வா.

“நீயும் தானடா அவன் கூட சேர்ந்துகிட்டு வம்பிழுத்த…” என்றவள், ஜீவாவை விடுத்து விஷ்வாவை துரத்தினாள்.

சிரிப்பொலி அடங்குவதற்குள், பால்கனியிலிருந்து கையில் கோப்புகளுடன் வந்தார் சக்திவேல்.

அறுபத்திரண்டு வயதானாலும் சற்றும் தளராத கம்பீரம். ஜீவன் மருத்துவக் கல்லூரி மற்றும் அறக்கட்டளையின் சேர்மன். தோழமை கலந்த கண்டிப்போடு பிள்ளைகளை வளர்த்தெடுத்தவர். அவர் உள்ளே வந்ததும் மூவரின் சேட்டைகளும் தானாக மட்டுப்பட்டு, முகங்களில் ஒரு பவ்யமான மரியாதை குடியேறியது.

“என்னடா… காலைலயே நல்லா தர்ம அடி வாங்குற போலிருக்கு?” சக்திவேல் சிரித்தபடியே சோபாவில் அமர்ந்தார்.

“இதெல்லாம் ஜுஜுபி…” சிரித்தபடியே கூறியவன், தன் சட்டையைச் சரிசெய்தபடி அவர் பக்கத்தில் அமர்ந்தான், மதி எதுவும் செய்ய மாட்டாள் என நம்பி!

“யாரு ஜுஜுபி?” அவனது முடியை பிடித்துவிட்டாள் மங்காத்தா!

“ஏய் உன்ன சொல்லல… உன்ன சொல்லல… தயவு செஞ்சு முடிய மட்டும் விட்ருடி…” ஜீவா கெஞ்ச,

“இத நீ முன்னாடியே பண்ணிருக்கணும்ல…” என்றவள் முடியை பிடித்து மாவாட்டினாள்.

“ஏய் விடுடி… அவன் பாவம்…” விஷ்வா பரிந்து கொண்டு வர,

“டேய் நீ வந்துறாத. அவனோட சேர்ந்து நீயும் தான வம்பிழுத்த?”

“என்ன தங்கம் பண்ணான்?” மாமன் பரிவாய் கேட்க,

“நைட் புல்லா படிச்சுட்டு அப்ப தான் மாமா தூங்கிட்டு இருந்தேன். மூஞ்சிலையே ஒரு வாளி தண்ணிய ஊத்தி விட்டுட்டான்…” சிணுங்கினாள் மதி.

“அடப்பாவி… அப்படீன்னா நீ வாங்க வேண்டியதுதான்.”

“ப்பா… அவ சொல்றான்னு நீங்களும் நம்பறீங்க? கொஞ்சூண்டு தண்ணிய லேசா தெளிச்சேன். அவ்வளவுதான்…”

“டேய் பரதேசி அது கொஞ்சூண்டு தண்ணியா?” ரவுத்தரமாக கேட்டாள் மங்காத்தா!

“பின்ன அது என்ன ஒரு வாளியா எரும?” விட மாட்டேன் என்று ஜீவாவும் பதிலுக்கு கத்த,

“சரிடி அவனை விடு. இன்னைக்கு முக்கியமான மீட்டிங்க்ஸ் எல்லாம் இருக்கு.” விஷ்வா தான் ஜீவாவுக்காக பரிந்து கொண்டு வந்தான்.

“சரி பாப்பா… விட்டுடு… போனா போகுது… இனிமே எதாவது பண்ணா அத்தை கிட்ட வந்து சொல்லு…” கார்த்தி இருவரையும் பிரித்துவிட்டார்.

“அத்த சொன்னதால விடறேன் எரும மாடே…” என்றவள் ஒருவாறாக சமாதானமாகி சக்திவேல் பக்கத்தில் தொப்பென்று அமர்ந்தாள்.

“ச்சே… எனக்கு யாருமே சப்போர்ட்டுக்கு இல்ல…” பாவமாக ஜீவா கூற,

“நீயே வம்பிழுப்பியாம்… நீயே சப்போர்ட் இல்லைன்னு சொல்லுவியாம்… போடா…” கார்த்தி சிரித்தபடி நகர,

“டேய் நான் இருக்கேன்டா மச்சான் உனக்கு…” என்று விஷ்வா ஜீவாவுக்கு ஹைபை கொடுத்தபடி அவனருகே அமர,

அவனுக்கு தன் கையை ஹைபைக்கு கொடுத்தவன்,

“எனக்கு என் மச்சான் இருக்கான்…” என்று சிரித்தான் ஜீவா.

“போங்கடா…” என்று அழகு காட்டினாள் மதி.

சக்திவேல் தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, குரலைச் சற்றே நிதானப்படுத்தினார். “சரி, சீரியஸான விஷயத்துக்கு வருவோம். நேத்து ஹாஸ்பிட்டல்ல என்ன ஆச்சு?”

அடுத்த வினாடி, விளையாட்டு மறைந்து ஜீவாவின் முகம் கூர்மையானது.

“அப்பா… அந்த ராமகிருஷ்ணன் ஆர்கன் ட்ரேடிங் பண்ணிருக்காப்ல!”

சக்திவேலின் கண்கள் சுருங்கின.

“ராமகிருஷ்ணனா அப்படி பண்ணான்?”

“ஆமா மாமா. கொஞ்ச நாளாவே அந்த ஆள் மேல சந்தேகம் இருந்துட்டு இருந்துது. நேத்து மாட்டிகிட்டாப்ல… இதெல்லாம் சும்மா விட முடியாது மாமா. உடனே அவரை சஸ்பென்ட் பண்றேன்னு ஜீவா சொன்னான். ஐ ஸ்டான்ட் பை ஹிஸ் டெசிஷன்.” தான் ஜீவா எடுத்த முடிவுக்கு உறுதுணையாக நிற்பதை உறுதியாக விஷ்வா கூற, சக்திவேல் புருவம் சுருங்கியது.

இதன் பின்விளைவுகளை என்னவாக இருக்குமென்று தான் அவர் யோசித்தார். இதனால் பிள்ளைகளுக்கு எந்த பிரச்சனையும் வர கூடாது என்பதுதான் அவரது எண்ணம்!

ஜீவா தொடர்ந்தான், ” டிரான்ஸ்டான் வெயிட்டிங் லிஸ்ட்ல ஃபர்ஸ்ட் பிரையாரிட்டியா இருந்த அந்த மாணிக்கத்துக்கு சிக்ஸ் அவுட் ஆஃப் சிக்ஸ் HLA மேட்சிங் இருந்துதுப்பா. பெர்ஃபெக்ட் நெகட்டிவ் கிராஸ்-மேட்ச். ஆனா, அவருக்கு ரிஜெக்ஷன் ரிஸ்க் இருக்குன்னு ஃபேக் ரிப்போர்ட்ட போர்ட்டல்ல அப்லோட் பண்ண பார்த்திருக்கான்! ராஜசேகர்கிட்ட எக்கச்சக்கமா வாங்கிக்கிட்டு, அந்த கிட்னியை அவனுக்குத் தள்ளிவிட டீல் பேசியிருக்கான்!”

“அப்புறம் என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்?” சக்திவேல் எந்தப் பதட்டமுமின்றி மிக நிதானமாகக் கேட்டார்.

“போலீஸ் கமிஷனருக்கும், மெடிக்கல் கவுன்சிலுக்கும் அதிகாரப்பூர்வமா கம்ப்ளைன்ட் ஃபார்வர்ட் பண்ணியாச்சு…” என்று ஜீவா கூற, சக்திவேல் தலையாட்டியபடி,

“ம்ம்ம் அப்புறம்?”

“மாணிக்கத்துக்கு நேத்து நைட்டே டிரான்ஸ்பிளான்ட்டேஷன் முடிச்சாச்சு. இப்போ பேஷன்ட் ஐசியூல ஸ்டேபிளா இருக்கார்…” விஷ்வா கூறினான்.

மேலும் தொடர்ந்தவன், “மாமா, இது சாதாரணம் இல்ல. இதுக்கு பின்னாடி ஒரு பெரிய ஆர்கன் ட்ரேடிங் மாஃபியாவே இயங்கிட்டு இருக்கு. ராமகிருஷ்ணன் அதுல ஒரு சின்னப் பகடைக்காய் மட்டும்தான்!”

சக்திவேல் சில நொடிகள் ஆழ்ந்த அமைதியில் மூழ்கினார். இருவரின்  தார்மீகக் கோபத்தையும், மருத்துவ தர்மத்திற்காக அவர்கள் துணிந்து நின்ற நேர்மையையும் கண்டபோது, தந்தையாக அவரது நெஞ்சில் பெருமிதம் அலைமோதியது. ஆனால், அனுபவம் அவருக்கு அடுத்த கட்டத்தின் விபரீதத்தை உணர்த்தியது.

அவர் ஜீவாவின் தோளை ஆதரவாகத் தட்டினார்.

“பசங்களா, உங்க முடிவுல அணு அளவு கூடத் தப்பில்லை. நியாயமா நடக்கும் போது பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது. ஆனா… நீங்க கை வச்சிருக்கிறது ஒரு தேன்கூட்டுல! ராமகிருஷ்ணனை விட, அந்த ராஜசேகர் ஆபத்தானவன். அரசியல் பலமும், பண பலமும், குண்டர் படையும் வச்சிருக்கிற ஆளு அவன். அவனுக்கு கிடைக்க வேண்டிய ஒன்னை நீங்க தடுத்திருக்கீங்க… அவனோட கௌரவம் அடிபட்டிருக்கு. அவன் சும்மா இருக்க மாட்டான். நிச்சயம் நம்ம ஹாஸ்பிடல் மேல அடுத்த அடியை இறக்கப் பார்ப்பான்…”

“அவன் என்ன பண்ணிடுவான்பா? வி ஆர் லீகலி ஸ்ட்ராங்!” ஜீவா அழுத்தமாகக் கூற,

சக்திவேல் நிதானமாய் புன்னகைத்தார்.

“அரசியல்வாதிகளும் மாஃபியாவும் நேருக்கு நேர் மோத மாட்டாங்கப்பா. குறுக்கு வழிலதான் வருவாங்க. முதல்ல, நம்ம ஹாஸ்பிட்டலோட ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட் லைசென்ஸை சஸ்பெண்ட் பண்ண கவர்மெண்ட்க்கு அழுத்தம் கொடுப்பாங்க. ரெண்டாவது, நம்ம மெடிக்கல் காலேஜுக்கு வர்ற ஃபண்டிங், டிரஸ்ட் அப்ரூவல்ஸ்ல கை வைக்கப் பார்ப்பாங்க. அதனால நீங்க ரெண்டு பேரும் செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்…”

ஜீவாவும் விஷ்வாவும் கூர்ந்து கவனித்தனர்.

“அந்த மாணிக்கத்தோட ஒரிஜினல் டிஷ்யூ டைப்பிங் ரிப்போர்ட், வீடியோ ஆதாரம், ராமகிருஷ்ணனோட ஃபேக் டாக்குமென்ட்ஸ்… இது எல்லாத்தையும் ஃபைலா போட்டு லாயர்கிட்ட குடுத்து வைங்க. டிரான்ஸ்டான் ஹெட்டுக்கும், ஹெல்த் செக்ரட்டரிக்கும் நாமளே முன்னாடியே நேரடியா ஃபேக்ட்ஸ் ஃபைல் பண்ணிடணும். அவன் நம்ம மேல பழி போடுறதுக்கு முன்னாடி, நாம அரசாங்கத்தின் மேஜைல உண்மையை வச்சிருக்கணும். எந்த மிரட்டல் வந்தாலும் தியேட்டரையும், ஐசியூவையும் ஒரு நிமிஷம் கூடப் பாதிக்க விடக் கூடாது. புரிஞ்சுதா?”

கூறியவரின் குரலில் அத்தனை உறுதி!

***

ஜீவன் மருத்துவமனையின் பிரதான நிர்வாகக் கட்டிடத்தின் நான்காம் தளத்தில் அமைந்திருந்த எம்ஆர் மெமோரியல் கூட்ட அரங்கத்தில் ஊசி விழுந்தால் கேட்குமளவு அமைதி!

அந்தப் பெரிய மர மேஜையைச் சுற்றிலும் அனைத்துத் துறைத் தலைவர்களும், மூத்த மருத்துவர்களும், இளம் பயிற்சி மருத்துவர்களும் அமர்ந்திருந்தனர். மேஜையின் தலைமை நாற்காலியில், மருத்துவமனையின் நிறுவனத் தலைவரான சக்திவேல் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

அவருக்கு வலதுபுறம் நிர்வாக இயக்குநர் ஜீவானந்தனும், இடதுபுறம் தலைமை இதயவியல் நிபுணர் விஷ்வஜித்தும் அமர்ந்திருக்க, இன்னும் சில முக்கியமான தலைமை மருத்துவர்கள் அமர்ந்திருக்க, கூட்டத்தின் கடைசி வரிசையில் ப்ரவலிகாவும் மதுபாஷினியும் அமைதியாகக் குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தனர்.

“நேற்றிரவு நெப்ராலஜி பிரிவில் நடந்த சம்பவம் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்…” சக்திவேலின் குரல் அந்தப் பரந்த அறையில் எதிரொலித்தது.

“ஒரு மருத்துவமனையோட உண்மையான தூண்கள் அதன் நவீனத் தொழில்நுட்பக் கருவிகளோ, மல்டி-ஸ்பெஷாலிட்டி கட்டிடங்களோ அல்ல; இங்கே பணிபுரியும் மருத்துவர்களின் நேர்மையும் தார்மீக விழுமியங்களும்தான். அரசு உறுப்பு மாற்று ஆணையத்தின் விதிகளை மீறி, பணத்திற்காக மருத்துவ தர்மத்தையே விற்கத் துணிந்த மூத்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மீது நிர்வாகம் தயவுதாட்சண்யமின்றி மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறது…”

சக்திவேல் ஒரு கணம் பேச்சை நிறுத்தி, அரங்கில் அமர்ந்திருந்த அனைவரையும் வாஞ்சையோடு ஏறிட்டார். அவரது குரலில் ஒரு தலைமுறையின் தியாகமும் அனுபவமும் இழைந்தோடியது.

“என்னைக்கும் இந்த மருத்துவமனையோட வேர்களை நான் மறக்க மாட்டேன். மறக்கவும் கூடாது. எங்கப்பா இந்த ஹாஸ்பிட்டலை சின்னதா இங்க ஆரம்பிச்சப்ப, இதெல்லாம் கிராமம். நல்ல ஹெல்த் பெசிலிட்டி இல்ல. அதனால அவங்க கண் முன்னையே நிறைய பேரை பறிகொடுத்து இருக்காங்க. அதனால அவங்களுக்கு கிடைக்காத மருத்துவ வசதி தங்களோட பிள்ளைகளுக்கு கிடைக்கனும்ன்னு தான் இந்த ஹாஸ்பிட்டலை அப்பா ஆரம்பிச்சாங்க. நான் என்னால முடிஞ்சளவு சேவையா கொண்டு போனேன்…”

சக்திவேலின் பார்வை ஜீவாவின் மீதும் விஷ்வாவின் மீதும் மென்மையாய்ப் படிந்தது.

“எனக்கப்புறம் பசங்களும் அந்த சேவைய தொடரணும்ன்னு தான் மெடிக்கல் படிக்க வெச்சேன். அதை இப்ப காப்பாத்திட்டாங்க, ரெண்டு பேருமே…” என்று புன்னகைத்தவர், “இந்த ஜீவன் மருத்துவமனை க்கு எந்த பாகுபாடும் இல்ல. அப்படி எதுவும் அது பார்க்காது. மனுஷங்க உயிர் மட்டும் தான் நமக்கு முக்கியம். என்ன விலை கொடுத்தாவது அந்த விழுமியங்களை நாம் இறுதிவரை கட்டிக் காப்போம்!”

சக்திவேல் பேசி முடிப்பதற்குள், கூட்ட அரங்கின் கனத்த தேக்குமரக் கதவு ‘படார்’ என்று திறக்கப்பட்டது!

அரங்கில் இருந்த அத்தனை மருத்துவர்களும் ஒருசேரத் திரும்பிப் பார்த்தனர்.

மருத்துவமனையின் சீருடை அணிந்த இரண்டு தனியார் செக்யூரிட்டி காவலர்களைத் தனது முரட்டுத் தோள்களால் பிடித்துத் தள்ளிவிட்டு, திமிரோடு உள்ளே நுழைந்தான் செல்வம்! அவனுக்குப் பின்னால் வேட்டியை மடித்துக் கட்டியபடி இரண்டு அடியாட்கள் விறைப்பாக உள்ளே நுழைந்து கதவை அடைத்தனர்.

“என்ன நடக்குது இங்க? பர்மிஷன் இல்லாம எப்படி உள்ளே வந்தீங்க?” மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் அருண் பதட்டத்துடன் எழுந்து நிற்க,

“நீ உட்காருய்யா…” என்று கையை நீட்டி அதட்டிய செல்வம், கடுப்பாக மேஜையின் முன்னால் வந்து நின்றான்.

மடித்து விட்டிருந்த முழுக்கை சட்டையை இழுத்து விட்டுக் கொண்டு, “என் பேரு செல்வம்… ராஜசேகர் அண்ணனோட ரைட் ஹேண்ட்!”

அவனது குரலிலும், நின்ற தோரணையிலும் தெரிந்த ரவுடித்தனம் அங்கிருந்த பல இளம் பெண் மருத்துவர்களைப் பதட்டமடைய வைத்தது. மது ப்ரவாவின் கையை பயத்துடன் பற்றிக்கொள்ள, ப்ரவாவின் கண்கள் மட்டும் மேஜையின் முன்னால் அமர்ந்திருந்த ஜீவா மற்றும் விஷ்வாவின் மீது அசைவின்றி நின்றன.

சக்திவேல் தனது மூக்குக் கண்ணாடியைக் கழற்றி மேஜை மீது வைத்தார். அவரது முகத்தில் எந்தப் பதட்டமும் இல்லை; மாறாக, அமைதியாக பார்த்தார்.

“தெரியும் செல்வம். இது மீட்டிங் ஹால். மீட்டிங் போயிட்டு இருக்கு. நாம தனியா பேசலாம்…” சக்திவேலின் குரல் மிக அமைதியாக, ஆனால் கனமாக ஒலித்தது.

செல்வம் நக்கலாகச் சிரித்தான். தன் கையிலிருந்த கறுப்பு நிற லெதர் ஃபைலை சக்திவேலின் முன்னால் மேஜை மீது ‘டப்’பென்று தூக்கிப் போட்டான்.

” நேத்து நைட் அந்த ராமகிருஷ்ணன் சாரை சஸ்பெண்ட் பண்ணிட்டு, எங்க அண்ணனுக்கு வர வேண்டிய கிட்னியை வேற யாருக்கோ தூக்கிக் கொடுத்துட்டாங்களாமே? அண்ணன் படுக்கைல கிடந்தாலும் அவரோட பவர் என்னன்னு உங்களுக்குத் தெரியாதா?”

செல்வம் மேஜையின் மீது இரு கைகளையும் ஊன்றி, ஜீவாவை நோக்கி விரலை நீட்டினான்.

“இன்னும் கரெக்டா 24 மணி நேரம்! இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள டாக்டர் ராமகிருஷ்ணன் மேல குடுத்த அலிகேஷன வாபஸ் வாங்கணும். சஸ்பென்ஷன கேன்சல் பண்ணனும். எங்க அண்ணனுக்கு கிட்னி ரெடி பண்ணனும்…”

அவன் அரங்கில் இருந்த அத்தனை மருத்துவர்களையும் ஒரு சுழற்று சுழற்றிப் பார்த்தான்.

“இல்லைன்னா…” என்று அவன் இடைவெளி,

“இல்லைன்னா?” விஷ்வா அமைதியாக கேட்டான்.

“இந்த ஹாஸ்பிடல் இருக்காது. அடுத்த 24 மணி நேரத்துல இந்த ஹாஸ்பிடலோட ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட் லைசென்ஸை கவர்மெண்ட் கேன்சல் பண்ணும்! உங்க மெடிக்கல் காலேஜுக்கு வர்ற ஃபண்டிங் அத்தனையும் கேன்சல் ஆகும்! சென்னை ஹெல்த் செக்ரட்டரில இருந்து மினிஸ்டர் ஆபீஸ் வரைக்கும் அண்ணன் ஒரு போன் போட்டா போதும்! மொத்தமும் காலி. ஹாஸ்பிடல் இருக்காது. சொல்லிட்டேன்…”

மது பயத்தில் ப்ரவாவை இன்னும் கெட்டியாகப் பிடித்தாள்.

ஆனால், அடுத்த நொடி…

நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு எழுந்தான் விஷ்வா.

அவனது ஆறு அடி கம்பீரமும், கூர்மையான கண்களும் செல்வத்தை அசைத்து பார்த்தன. அவனது முகத்திற்கு மிக அருகில் குனிந்த விஷ்வாவின் தோரணை அங்கிருந்த மொத்த கூட்டத்தையும் ஸ்தம்பிக்க வைத்தது.

“இருபத்து நாலு மணி நேரத்துல ஹாஸ்பிடலை மூடுவியா? அந்தப் பகல் கனவை எல்லாம் அப்புறம் வச்சுக்கலாம் செல்வம்…”

விஷ்வா கத்தவில்லை, ஆனால் அழுத்தம்திருத்தமாக உரைத்தான்!

“முதல்ல உங்க அண்ணன் இன்னும் இருபத்து நாலு நாளைக்கு உயிரோட இருப்பானான்னு கார்டியாக் ஐசியூல போய் கேட்டுட்டு வா!”

செல்வத்தின் முகம் சட்டென்று வெளுத்துப் போனது. “என்… என்ன சொல்ற?”

விஷ்வா தன் உதட்டோரம் ஒரு கசப்பான புன்னகையை உதிர்த்தான்.

” ராஜசேகரோட ஹார்ட் ஹிஸ்டரி என் டேபிள்ல இருக்கு. மூணு வருஷத்துக்கு முன்னாடி அவருக்கு மேசிவ் ஆன்டீரியர் வால் எம்ஐ (Anterior Wall Myocardial Infarction) வந்திருக்கு… லெப்ட் ஆன்டீரியர் டிசென்டிங் ஆர்ட்டரி தொண்ணூறு சதவீதம் பிளாக் ஆகி, அவரோட இதயத் தசைகள்ல முக்கால்வாசி ஏற்கனவே செத்துப் போச்சு!”

விஷ்வா செல்வத்தின் கண்களை ஊடுருவி பார்த்தான்.

“இப்போ அவரோட ஹார்ட்டோட பம்பிங் எஃபிசியன்சி… அதாவது எஜெக்ஷன் ஃபிராக்ஷன் (Ejection Fraction – EF) வெறும் இருபத்தைஞ்சு சதவீதம் தான்! எல்.வி ஃபங்ஷன் பாதாளத்துல இருக்கு. ஒரு மேஜர் கிட்னி டிரான்ஸ்பிளான்ட் அறுவை சிகிச்சையைத் தாங்குற அளவுக்கு அவரோட ஹார்ட்டுக்கு எனர்ஜி கிடையாது. அனஸ்தீசியால ஜெனரல் அனஸ்தீசியா இன்டக்ஷன் பண்ணி தியேட்டர்ல படுக்க வச்சா… அடுத்த பத்தாவது நிமிஷம் மேசிவ் கார்டியாக் அரெஸ்ட் வந்து அவரோட பாடி தியேட்டரை விட்டு வெளியே போகாது, மார்ச்சுவரிக்கு தான் போகும்!”

செல்வமும், அவனுடன் வந்தவர்களும் மிரண்டுப் போய் பார்த்தனர்.

“இதையெல்லாம் உங்க ராமகிருஷ்ணன் உங்ககிட்ட சொல்லலையா?” விஷ்வா நக்கலாகக் கேட்டான். “அவனுக்குத் தேவை ராஜசேகர்கிட்ட இருந்து ஐம்பது லட்ச ரூபாய் பணம்! பேஷன்ட் தியேட்டர்லயே செத்துப் போயிட்டா, ‘கிட்னி சரியா வேலை செய்யல, ஹார்ட் ஃபெயிலியர் ஆயிடுச்சு’ன்னு டெத் சர்டிஃபிகேட் எழுதி உங்க கையில கொடுத்துட்டு அவன் தப்பிச்சிருப்பான்! உண்மையிலேயே அந்த அறுவைசிகிச்சையைத் தடுத்து, உங்க அண்ணனை காப்பாத்தி இருக்கோம்!”

விஷ்வாவின் அந்த சம்மட்டி அடி செல்வத்தின் மண்டையில் இடியாக இறங்கியது. அவன் பேச வார்த்தையின்றித் திணறினான்.

அப்போது ஜீவா தனது நாற்காலியிலிருந்து நிதானமாக எழுந்து வந்தான். மேஜையில் கிடந்த அந்தக் கோப்பை எடுத்து செல்வத்தின் நெஞ்சில் அழுத்தமாகத் தட்டினான்.

“லைசென்ஸை கேன்சல் பண்ணுவியா? மெமோ அனுப்புவியா? முடிஞ்சா பண்ணு! அதையெல்லாம் எப்படி பேஸ் பண்ணனும்ன்னு தெரியாமையா நாங்க இங்க இருக்கோம்? ராமகிருஷ்ணன் மேல கிரிமினல் ஆக்ஷன் எடுக்கத்தான் போறோம். நடுவுல நீங்க வந்தா, லாஸ் உங்களுக்குத்தான், எங்களுக்கு இல்ல. இந்த நிமிஷம் நீங்க வெளிய போகலைன்னா, போலீஸ் வரும். எப்படி வசதி?” என்றவன், சற்று நிதானித்து, “கெட் அவுட்!” என்றான்.

செல்வத்தால் எதுவும் பேச முடியவில்லை. முறைத்தபடியே வெளியேறினான்.

அவர்கள் சென்றதும், அந்த போர்டு ரூமில் ஒரு சில நொடிகள் பெரும் நிசப்தம் நிலவியது.

அடுத்த வினாடி…

அங்கிருந்த மூத்த மருத்துவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டத் தொடங்கினர்! கரவொலி அந்த அரங்கம் முழுமைக்கும் எதிரொலித்தது.

சக்திவேலின் முகத்தில் பெருமிதம் சுடர்விட்டது.

கடைசி வரிசையில் நின்றிருந்த ப்ரவலிகாவின் விழிகள் விரிந்து, ஜீவாவையும் விஷ்வாவையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன.

“பார்த்தியாடி ப்ரவி…” மது ஆச்சரியத்தில் மூழ்கி ப்ரவாவின் காதருகில் முணுமுணுத்தாள். “மிரட்ட வந்தவங்களையே மிரட்டி ஓட விட்டுட்டாங்க! செம மாஸ் இல்ல?”

ப்ரவா எதுவும் பேசவில்லை. ஆனால், அவளது இதழ்களில் ஒரு மெல்லிய, அழகான புன்னகை அரும்பியது. மதுவின் கண்களில் பிரகாசம்!

“நாத்தனாரே…” என்று பாசமாக அழைத்த மதுவை ஆனந்தமாக அதிர்ந்து பார்த்தாள் ப்ரவா!

“அடிப்பாவி…” என்று வலது கையால் வாயை மூடியபடி!

அவளது கண்களும் முகமும் சந்தோஷத்தில் ஜ்வலித்தது!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 6

காலை மணி பத்துஜீவன் மருத்துவமனையின் பிரதான வாயிலில் சிவப்பு நிற சுழல் விளக்கு பொருத்தப்பட்ட இரண்டு அரசு இன்னோவா கார்கள் ஆராவாரமாக வந்து நின்றன.காரிலிருந்து இறங்கியவர்கள், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் மட்ட அதிகாரிகள்!அவர்களுக்குத்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 4

  1. Anbuselvan பத்தி 19 “உனக்கும் விஷ்வாவுக்கும் பிடிச்ச சோளப் பணியாரமும் தக்காளி பஜ்ஜியும் தான்…”Anbuselvan

    சோளப்பணியாரம்... தக்காளி பஜ்ஜியா 😮 epdi panratunu sona nala irukum 😀

  2. Vinna Vinna பத்தி 1 பூத்திருந்த செண்பகப்பூயையும் பவளமல்லியையும் முகர்ந்தபடியே, அந்த ரம்மியமான அதிகாலVinna Vinna

    வாவ் ஒவ்வொரு எபி மாஸ் பண்றீங்க சிஸ்...ஹீரோ ரெண்டு பேர் ஓகே.. ஹீரோயின் ரெண்டு பேர் யாரு.. மதுக்கு ப்ரவா நாத்தனாரா ரைட்டு 😂🤣... மிரட்ட வந்தவங்களை செமையா தெறிச்சி ஓட விட்டீங்க யோசனா மஞ்சு வாங்குது🥰

  3. Girijapriya பத்தி 160 அவளது கண்களும் முகமும் சந்தோஷத்தில் ஜ்வலித்தது!Girijapriya

    Nice intresting ud sis ❤️

  4. Gowri Srinivasanபொதுக் கருத்துGowri Srinivasan

    Sis விஷ்வா cardiologist தானே?????இந்த எபில நரம்பியல் நிபுணர்னு போட்டு இருக்கீங்க......
    ரெண்டு பேரும் விளையாட்டு எவளோ இருந்தாலும் வேலையில் 🔥🔥🔥🔥🔥🔥
    அதும் விஷ்வா🥰🥰🥰🥰🥰
    மதுக்கு யாரு அண்ணன்?????
    விஷ்வா வா இல்ல ஜீவா வா?????

உங்கள் கருத்தைப் பகிருங்கள்