arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 17

என் வீட்டு தோட்டத்தில் 17

visibility 701
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (5 மதிப்பீடுகள்)
பகிர்

17

“என்னங்க தம்பி. மாப்பிள்ளை நம்ம அபியவிட ரொம்ப பெரியவரா இருப்பார் போலயே?”

“இல்ல அண்ணி! போன மாசம் தான் இருபத்து ஒன்பது முடிஞ்சு முப்பது தொடங்கியிருக்கு!”

சர்வசாதாரணமாக சொன்னதும் திக்கென்றானது இந்துமதிக்கு‌. மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் பனிரெண்டு வயது வித்யாசம். அவருக்கே அதை ஏற்றுக்கெள்ள மனம் முரண்டியது. அபிக்குத் தெரிந்தால். அவள் இந்தக் காலத்துப் பிள்ளை. 

“நம்ம பாப்பாக்கு பதினேழுதானே தம்பி!” என்றவர் குரல் பதறியது. 

பரந்தாமன் பார்வை சுற்றும் முற்றும் ஒரு தரம் பரபரப்பாக அலசியது. அதிகாலை முகூர்த்தம் என்பதால் வெளியூர் சொந்தங்கள் எல்லாம் இப்பொழுதே ஓரளவுக்கு வந்துவிட்டனர். பந்தி நடந்து கொண்டிருந்தது. ரேடியோ சத்தத்தில் இவர் கேட்டது யார் காதிலும் விழுந்திருக்க வாய்ப்பில்லை என்றதும்‌ முகம் ஆசுவாசமானது. 

“சத்தமா சொல்லாதீங்கண்ணி! எவன் காதுலயாவது விழுந்து மைனர் பொண்ணுக்கு கல்யாணம் பண்றாங்கனு கம்ப்ளைன்ட் பண்ணிறப் போறானுங்க. அப்பறம் குடும்பத்தோட போய் ஜெயில்ல உக்காரணும். அபிக்கு பதினெட்டுன்னு சொல்லி வச்சிருக்கேன். இன்னும் ஆறு மாசத்துல பதினெட்டு வயசு பொறக்கப் போதுதானே?” என்று கேட்க இந்துமதிக்குதான்‌ மனம் சமாதானமாகவில்லை. பனிரெண்டு வயது வித்யாசம். தோற்றத்தில் சித்தப்பாக்களுக்கு சின்னத்தம்பி மாதிரி தான் இருந்தான் மாப்பிள்ளை சுதாகர். 

நிச்சயத்தன்று மாப்பிள்ளையை நேரில் பார்த்துக் கொள்ளட்டும் என்று சொன்னதோடு சரி. நிச்சயத்திற்கும் மாப்பிள்ளை வரவில்லை. அவனுக்கு முக்கியமான வேலை வந்துவிட்டதாக வந்தவர்கள் கூறினர். தனது திருமண நிச்சயத்தைவிட அப்படியென்ன முக்கியமான வேலை. இந்துமதி மனதிற்குள் தோன்றிய கேள்வியை சபையில் வைத்து கேட்க முடியவில்லை. ஏனெனில் மாப்பிள்ளை வீட்டார் வந்திறங்கிய பிறகுதானே மாப்பிள்ளை வரவில்லை என்பதே தெரியும்.

“அப்படியென்னப்பா இதைவிட முக்கியமான வேலை. தாலி கட்டவாவது மாப்பிள்ளை வருவாப்டியா? இல்ல அன்னைக்கும் முக்கியமான வேலை வந்துருமா?” வந்தவர்கள் சிலர் சிரித்தபடியே கேட்க, 

“நம்ம காலத்துல எல்லாம் மாப்பிள்ளைய கூட்டிட்டாப் போனாங்க. நம்ம பக்கத்துல அது பழக்கமில்லையே?” மாப்பிள்ளை வீட்டாராலும் சிரித்தே மலுப்பப்பட்டது.

“அதான் ஃபோட்டோ கொடுத்தோமே?” என்றனர் பொதுவில் வைத்து. இத்தனைக்கும் மாப்பிள்ளை ஊர் அத்தனை தொலைவில்லை. பக்கத்து ஊர்தான். எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் தலையைக் காட்டிவிட்டு கூடப் போகலாம். 

பட்டு, சீர் வரிசை, தட்டு வரிசையென படோபடமாக வேனிலும், காரிலுமாக வந்திறங்கியவர்களிடம் மாப்பிள்ளை ஏன் வரவில்லை என அதட்டிக் கேட்போர் யாருமில்லை இவர்கள் பக்கம். கேட்டால் சித்தப்பாக்கள்தான் அதிகாரமாகக் கேட்க வேண்டும். அவர்கள்தான் நாங்க மாப்பிள்ளையைப் பார்த்துவிட்டோமே என பெண் வீட்டாராக பெருந்தன்மையைக் காட்டினர். இந்துமதி அண்ணன்களைச் சொல்லவே வேண்டாம். தாய்மாமன்களாக கடமைக்கெனெ வந்திருந்தனர். 

நிச்சயம் முடித்த பதினைந்து நாளில் திருமணம் என தேதியும் குறித்தனர். இந்துமதியிடம் கலந்து கொள்ளவில்லை. சபையில் வைத்து உங்களுக்கு சம்மதமா என்று மட்டுமே இந்துமதியிடம் கேட்கப்பட்டது. எதற்கு சம்மதம் என்று அவருக்கு இன்று வரை புரியவில்லை. 

“பதினஞ்சு நாள்ல எப்படி தம்பி முடியும்?” எல்லோரும் சென்றபிறகு கேட்டவரிடம், 

“என்ன அண்ணி? நாம என்ன இனிமேதான் எல்லாம் வாங்கணுமா என்ன? ஏற்கனவே நகையெல்லாம் இருக்கு. பத்தாததுக்கு உங்க நகை இருக்குல்ல. அது ரெண்டு பொண்ணுகளுக்கும் தானே? கல்யாணச் செலவப்பத்தி கவலைப்படாதீங்க. நம்ம வீட்ல நடக்குற மொத விசேஷம். அண்ணன் இருந்தா என்னவெல்லாம் அவர் பொண்ணுக்கு பண்ணனும்னு ஆசைப்படுவாரோ அதைவிட சிறப்பா சித்தப்பாக்கள் நாங்க பண்றோம்.”

அவர்களுக்குப் பேசவா சொல்லித் தரவேண்டும். இந்துமதியை வார்த்தைகளாலே தலை முதல் கால் வரை குளிர வைத்தனர். சித்தப்பாக்கள் இருவரும் சொன்னபடியே அத்தனை பொறுப்பாக திருமணத்தையும் எந்த குறையுமில்லாமல் எடுத்து நடத்தினர். இந்துமதி கூட உள்ளாற நெகிழ்ந்து போனார். 

இதோ திருமணத்தின் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பில் தான் மாப்பிள்ளையவே பார்த்தார் இந்துமதி. 

அபிநயா, “யார்றா மாப்பிள்ளை?” கொழுந்தியா முறைக்கு மாப்பிள்ளையை வரவேற்க ஆலத்தி தட்டோடு வந்து மண்டப வாயிலில் நின்றவள் பக்கத்தில் நின்ற அரவிந்தனிடம் கேட்டாள். 

“எனக்கும் தெரியல!” என்றவன் கையில் மாலையைக் கொடுத்து மாப்பிள்ளை கழுத்தில் போடச் சொன்னபோதுதான் அவனும் மாப்பிள்ளையைப் பார்த்தான். அரவிந்தனுக்கு சிறுவயது‌. வயது, தோற்றமெல்லாம் அவனுக்குக் கணிக்கத் தெரியவில்லை. பேன்ட், முழுக்கை சட்டையென மாப்பிள்ளை தோரணையாக இருப்பதாகவே பட்டது.

ஆனால், அபிநயா பார்த்தவுடன் இவரா என்றாள் வாய்விட்டே. இந்துமதியுமே அப்பொழுதுதான் நேரில் பார்க்கிறார். ஃபோட்டோவில் பார்த்ததுக்கும் நேரில் பார்ப்பதற்கும் ரொம்பவே வயது வித்யாசம் தெரிந்தது. தனக்குக் காட்டியது சிறுவயது ஃபேட்டோவாக இருக்கவேண்டும் என்பது மூளைக்கு உரைத்தது. முப்பது வயதிற்கான முதிர்ச்சி முகத்தில் தெரிந்தது.

ஆனால், இது வயது முதிர்ச்சி மாதிரியும் தெரியவில்லை. முப்பது என்பதொன்றும் பெரிய வயதில்லை. திருமணம் முடிக்கும் வயதுதான். முப்பது வயது தான் முழு ஆண்மகனாக தோற்றம் உருமாற்றம்‌ பெரும் வயது. அந்த வயதில் தான் ஆண்களுக்கு தோற்றத்தில் தனி கம்பீரமும், முகத்தில் தேஜஸும் கூடித் தெரியும். ஆனால், ஏதோ ஒரு தெளிவற்ற தன்மை சுதாகரிடம்‌. கண்களுக்கு கீழே கருவளையம். பழுப்பேறிய அலைபாயும் கண்கள். 

“பனிரெண்டு வயசு தம்பி! அபி எப்படி எடுத்துப்பாளோ?” என்றவர் குரலில் சுரத்தையில்லை. அவர் உள்ளுக்குள் சுணங்குவது தெரிந்தது. 

அதைக் கண்டுகொண்ட பரந்தாமன், “உங்களுக்கும் அண்ணனுக்கும் எத்தனை வயசு வித்யாசம் அண்ணி?”

“பத்து வருஷம்! ஆனா அது அந்தக்காலம் தம்பி!” என்றார் சோபையாக.

“எங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பதினஞ்சு வருஷம் வித்யாசம். அவங்க சந்தோஷமா வாழலையா, குழந்தை குட்டி பெத்துக்கலையா? நம்ம அபி மட்டும் என்ன? பதினேழு வயசு மாதிரியா இருக்கா. நெடுநெடுன்னு வளந்திருக்கா. ஒரு குழந்தை பெத்துட்டா மாப்பிள்ளைக்கு அக்கா மாதிரி ஆயிறுவா?” அவர் முகம் தெளிவில்லாமல் இருப்பதைப் பார்த்த பரந்தாமன் மேலும்,

“மனசப் போட்டு ஒழப்பாதீங்கண்ணி. நீங்க தான் பிள்ளைக்கு பக்குவமா எடுத்துச் சொல்லணும். சின்னப்பிள்ளைக்கு என்ன தெரியும்? இவ்ளோ சொத்து சுகத்தோட ஒரே பையன் அண்ணி. பிக்கல் பிடுங்கலில்லாத சம்பந்தம். வர்றப்பவே வளச்சுப் போட்டுக்கணும். வயசப் பாத்தா இப்படி சம்பந்தம் அமையாது. மாப்பிள்ளைக்கு என்ன, பாக்க நல்லாத்தானே இருக்காப்ல?”

பரந்தாமன் கண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டாரின் சொத்து மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. தென்னந்தோப்பு, கரும்பு வயல் என பல ஏக்கர் சொத்துக்கு ஏகபோக வாரிசு சுதாகரன். அது போக வெல்லம் காய்ச்சும் ஆலை வேறு. மண்டைவெல்லம்‍, அச்சு வெல்லம் என மொத்த விற்பனையும்‌. 

மாப்பிள்ளைக்கு வயது தவிர குறை சொல்லும்படி எதுவும் இல்லைதான். வாட்டசாட்டமாக அம்சமாகத்தான் இருந்தான். ஆனால் அபிராமி பக்கத்தில் நின்றால் கண்டிப்பாக வயது வித்யாசம் தெரியும். அவள் நெடுநெடுவென வளர்ந்திருக்காளே ஒழிய ஒடிசலான சிறுபிள்ளை தேகம்‌. முகத்தில் இன்னும் பேதமை மாறவில்லை. சேலை தான் அவளை பெரிய பெண்ணாகக் காட்டியது. 

பேச்சுதான் பெரிய மனுஷி தோரணையில் இருக்கும். எதற்கும் பயப்படாமல் எதிர்த்து கேள்வி கேட்பாள். அது இளங்கன்றின் பயமறியா, பக்குவமில்லாத மனப்பாங்கு. தகப்பனில்லாத பிள்ளைக்கு சித்தப்பாக்கள் தகப்பனாக இருந்து நல்ல படியாக பார்த்து வைப்பார்கள் என்று நம்பியிருந்தார். அதனால் தான் எதைப் பற்றியும் அதிகம் கேட்டுக் கொள்ளவில்லை. அண்ணன் பிள்ளைக்கு கெட்டதா நினைக்கப் போகிறார்கள் என பெருந்தன்மையாக எண்ணியிருந்தார். தான் பார்க்காத காரியம் தம்பி பார்த்தால் மத்துவம்தான் என்பதை நிரூபித்தனர்.  

அதற்குள் அரவிந்தன் வந்து சித்தப்பாவை யாரோ அழைப்பதாகக் கூற, அவன் பின்னாலே சென்றுவிட்டார்.

விடிந்தால் கல்யாணம். மணப்பெண்ணும், மாப்பிள்ளையும் மண்டபம் வந்தாயிற்று எனும் பொழுது இப்பொழுது இதைப்பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை. 

திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இவளுக்கும் உடம்பு வைத்துவிடும். மாப்பிள்ளைக்கி ஈடாக வந்துவிடுவாள் என்று மனதை தேற்றிக் கொண்டார். 

பனிரெண்டு வயதெல்லாம் அவரது காலத்தில் சர்வசாதாணம்தான். அவங்க எல்லாம் குழந்தை குட்டினு வாழலையா? இப்பொழுது இவர்களை சடைத்துக் கொண்டால், அப்போ நாங்க என்ன அண்ணன் பிள்ளைகளுக்கு கெடுதல் நினைப்போமா. எங்க மேல நம்பிக்கை இல்லைனா இரண்டாவது பொண்ணுக்கு நீங்களே பாத்துக்கோங்க. முடிவு பண்ணிட்டுக் கூப்பிடுங்க, விசேஷத்துக்கு வர்றோம் என ஒதுங்கிக் கொள்வார்கள் என பலவாறாக யேசித்து தனக்குதானே சமாதானம் செய்து கொண்டார். வயதைப் பார்த்து மண்டபம் வரை வந்த திருமணத்தை நிறுத்தவா முடியும். ஏன் முதல்லயே இது தெரியாதா என்ற கேள்வியும், கேலியும் தான் மிஞ்சும். 

அதற்குள் வந்தவர்களை வரவேற்க, அவர்களை சாப்பிட அழைத்துச் செல்ல, படுக்க இடம் ஒதுக்கிக் கொடுக்க என வேலை அவரை இழுத்துக் கொண்டது.

“அக்கா மாப்பிள்ளையப் பாத்தியா? எனக்கென்னவோ வயசு அதிகம் மாதிரி தெரியுதுக்கா!” அபிநயா கேட்டதற்கு, 

“பாத்தா மட்டும். புடிக்கலைன்னு சொல்லவா முடியும்?” என்றவள் குரலில் அதற்கான வருத்தம் துளியும் இல்லை.

திருமணமே பிடிக்கவில்லை எனும் பொழுது மாப்பிள்ளை கருப்பா… சிவப்பா? நெட்டையா… குட்டையா? குண்டா… ஒல்லியா? இளசா… முத்தலா? எப்படியிருந்தால் என்ன என்ற எண்ணம் தான் அவளுக்கு. யாருக்கு வந்த விருந்தோ என்றுதான் அவளது கல்யாண விருந்தை உண்டு கொண்டிருந்தால். 

சாப்பிட்டு முடித்தவள் கை கழுவச் சென்றாள். “டேய் சுக்கு! நீ என்னடா இங்க?” ஆச்சர்யமாக முகம்‌மலரக் கேட்டவளிடம், 

“எனக்கும் அதுதான் ஆச்சர்யமா இருக்கு அபி! நீதான் கல்யாணப் பொண்ணா?” என்றவன் குரலில் அலப்பரிய சந்தோஷமே. 

“பாத்தா எப்படித் தெரியுது!” இடுப்பில் கைவைத்து கேட்டவளை‌ மேலும் கீழும் பார்த்தான். இளஞ்சிவப்பு வண்ணத்தில் கோபுர பார்டர் போட்ட மயில் பச்சை பட்டுச் சேலையில் பெரிய பெண்ணாகத் தெரிந்தாள். தலை நிறைய‌ மல்லிச்சரம். மிதமான அலங்காரத்தோடு நெற்றிச்சுட்டி. அது மட்டுமே மணப்பெண் என அடையாளம் காட்டியது. கல்யாணக்கலை என்பது அடையாளத்திற்கு கூட துளியும் முகத்தில் இல்லை. ஆவலாக திருமணத்தை எதிர்பார்த்து கலியாணக் கனவில் மிதப்பவளுக்குதானே உடலும் உள்ளமும் பூரித்து, கன்னம் செம்மை பூசி கலியாணக்கலை முகத்தில் தாண்டவமாடும். 

கேலியாக, “கல்யாணப் பொண்ணுமாதிரி தான் தெரியுது” என்றவன், “அழகா இருக்க அபி!” என்றார் உள்ளார்ந்து. 

“ஏதோ உன் புண்ணியத்துல எனக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்குதுடா!” என்றதும் சட்டென அவன் முகம் வாடிப் போயிற்று. 

“சாரி அபி! நிஜமாவே உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்ட்டமா?” என்றவன் குரலில் உண்மையான வருத்தமே. தன்னுடைய அவசர புத்தியினால் தான் இவளுக்கு இவ்வளவு சீக்கிரம் திருமணம் முடிப்பதை உணர்ந்தவனாக உண்மையாகவே வருந்தினான். 

பள்ளி முடிந்ததும், இனிமேல் இவளைப் பார்க்க முடியாதோ என்ற பதட்டம். அவன் வயதிற்கு அப்படித்தான் யோசிக்க முடியும். அந்த அவசரத்தில் தான் செய்த செயல் அவளது படிப்பை காவு வாங்கிவிட்டதாகவே எண்ணி வருந்தினான். 

“எங்க அம்மாகூட புடிச்சிருக்கானு கேக்கலடா. நீ கேக்குற. சரி அதைவிடு. நீயென்னடா இங்க?” என்றவளிடம், 

சிரித்தபடி, “மாப்பிள்ளை வீட்டுக்காரவங்களுக்கு மரியாதை கொடுங்க அண்ணியாரே!” என்றான் காலரைத் தூக்கிவிட்டு. 

“அண்ணியா… மாப்பிள்ளை வீட்டுக்காரனா?” என்றவளின் அஞ்சனம் தீட்டிய கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, 

“மாப்பிள்ளைக்குத் தம்பி. கொழுந்தனாராக்கும்.” அவன் சொன்னவிதத்தில் பக்கென சிரித்துவிட்டாள்.

சிரித்தபடி கேலியாக, “என்ன நாரு?” என்று‌ கேட்க, 

“கொழுந்தனாரு” என்றுவிட்டு அவனும் சிரித்தான்.

“மாப்பிள்ளை ஒரே பையன்னு சொன்னாங்க!” 

“ஏன்… மாப்பிள்ளைக்கு பெரியப்பா, சித்தப்பா பசங்க இருக்கக் கூடாதா?”

“இருக்கலாமே… யார் வேண்டான்னது.” கேலியாக தலையை உருட்டினாள். 

இப்பொழுதும் இவன், தனக்கு காதல் விண்ணப்பம் போட்டவன் என்ற குறுகுறுப்போ, அவனிடம் தனியாக நின்று பேசுகிறோமே, யாராவது பார்த்தால் தவறாக நினைப்பார்களோ என்ற பதட்டமோ துளிகூட அவளிடம் இல்லை. நெல்முனையளவாவது அவனது தாக்கம் அவளுக்குள் இருந்தால் தானே அவன் கண் பார்த்துப் பேச தயக்கம் தடை போடும்‌. அவளைப் பொறுத்தவரை அவன் சக மாணவன். தோழமை என்ற லிஸ்ட்டில் கூட இல்லை. சகமாணவனிடம் சகஜமாகப் பேசுவது போலத்தான் பேசிக் கொண்டிருந்தாள். அதுதான் அவளது இயல்பும் கூட. சூதுவாது தெரியாது. யார்கிட்ட என்ன பேசணும், பேசினா யார் என்ன நினைப்பாங்க என்று யோசித்துப் பேசும் பக்குவமெல்லாம் கிடையாது. மனதில் பட்டதை பட்டென பேசிவிடுவாள். பேசிவிட்டு யோசிக்கும் ரகமும் இல்லை. சரியாகத்தான் பேசினேன் என தீர்க்கமாக இருப்பாள்.

“ஆனா நீங்க யாரும் நிச்சயத்துக்கு வரலியே? இவ்வளவு உரிமையா சொல்ற. நீயும் தானே வரல!”

அவள் கேட்டதும் சற்று தயங்கியவன், “அதுவந்து… எங்களுக்கு நிச்சயத்துக்கு சொல்லல… கல்யாணத்துக்குதான் அழைப்பு சொன்னாங்க!” 

“ஏன்” என‌ கேட்டவளிடம், அடுத்து ஏதோ அவன் சொல்ல வர, 

மாலதி, “அபி, இங்க என்ன பண்ற?” என அதட்டியபடியே வந்தார். 

கைகழுவ வந்தவர் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, அபியை அதட்டிவிட்டு சுகுமாரனை முறைக்க, “வர்றேன் அபி” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றான்.

அபி, கையை கழுவச் சென்றாள். 

“அறிவில்லையா அபி! இவன்தானே உனக்கு லெட்டர் கொடுத்தான். அவன்கிட்ட நின்னு சிரிச்சு சிரிச்சு பேசிட்டிருக்க. யாராவது பாத்து மாப்பிள்ளை வீட்டாளுககிட்ட சொல்லிட்டா என்ன பண்றது?” கோபமாக இவளை கண்டிக்க, 

“அவன் மாப்பிள்ளையோட தம்பியாம் சித்தி. இனிமே எப்படி அவன்கிட்ட பேசாம இருக்க முடியும்?”

மாலதியிடம் நின்று கூட பேசவில்லை. போறபோக்கில் சொல்லிக் கொண்டே கையைக் கழுவிக் கொண்டு மணமகள் அறைக்குள் சென்றுவிட்டாள். இவர்கள் சிரித்துப் பேசியதை மாலதி மட்டும் கவனிக்கவில்லை. அந்தப் பக்கமாக வந்த சுதாகரனும் பார்த்தான். அபியின் வருங்கால கணவன். அதனால் தான் மாலதி அவளை அதட்டியது.

வந்தவன் தண்ணீர் பாட்டில் மட்டும் எடுத்துக் கொண்டு மணமகன் அறைக்கு சென்றுவிட்டான். 

“என்னங்க… அந்தப் பையன் மாப்பிள்ளையோட தம்பியாம்ல. அந்த குடும்பத்துல எப்படி சம்பந்தம் பேசுனீங்க? அவனால நம்ம அபிக்கு ஏதாவது பிரச்சினை வந்தா?” என்னதான் கடமையை முடிக்க திருமணம் முடித்து வைத்தாலும் சுகுமாரனால் ஏதாவது பிரச்சினை வருமோ என்ற பயம் மாலதிக்கு. 

“அதெல்லாம் ஒன்னும் வராது. அவன் ஒன்னும் கூடப் பொறந்த தம்பியில்ல. சித்தப்பா மகன்தான்! போய் வேலையப் பாரு. ஆளுக்கொரு பிரச்சினைய கொண்டு வராதீங்க!” இவ்வளவு நேரமாக இந்துமதி வயதைப் பற்றி பேசியது அவருக்குள் எரிச்சலை உண்டு பண்ணியது.

அதை மாலதியிடம் காட்ட, “வேற யாரு பிரச்சினைய கொண்டு வந்தது?”

“அண்ணிதான்… மாப்பிள்ளைக்கு அபியவிட வயசு அதிகமாம்!” 

“நான்தான் அப்பவே சொன்னேன். நீங்க தான் ஒத்தப்பையன், வேணுங்கறளவுக்கு சொத்து கெடக்குன்னு சொன்னீங்க! ” என்றவளை வேண்டுமட்டும் முறைத்துவிட்டு, 

“வெள்ளனா முகூர்த்தம். நான் கொஞ்ச நேரம் படுத்து எந்திரிக்கணும். தலை வலிக்குது. இங்க முடியாது. வீட்டுக்குப் போய்ட்டு காலைல வர்றேன்!” 

“அப்போ நாங்க மட்டும் எப்படி தூங்கறது. நாங்களும் வர்றோம்” என்று மாலதியும் உடன் கிளம்ப, எனக்கு மட்டும் வேண்டுதலா என வினோதினியும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு உடன் கிளம்பிவிட்டாள். மண்டபத்திலிருந்து பத்து நிமிட கார் பயணத்தில் தான் வீடு. அதனால் காலையில் சீக்கிரம் வந்துவிடலாம் என கிளம்பினர். 

“அண்ணி, பிள்ளைகளுக்கு தூங்க, குளிக்க இங்க வசதிப்படாது. காலையில குளிச்சு, கிளம்பி வந்துர்றோம். புருஷோத்தமன் இங்கதான் இருப்பான்.” இந்துமதியிடம் சொல்லிக்கொண்டு பதிலைக் கூட எதிர்பார்க்கவில்லை. தம்பியை மட்டும் அங்கு விட்டுவிட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றுவிட்டனர். 

அபிநயாவும், அரவிந்தனும் கூட சிறுபிள்ளைகள் தான். வர்றீங்களா என்று ஒரு வார்த்தை கூட அவர்களை கேட்கவில்லை. காரில் அவர்கள் மட்டும் கிளம்பிவிட்டனர். 

தாங்களும் சென்றுவிட்டால் நன்றாக இருக்காதென இந்துமதி அண்ணன் குடும்பத்தினர் அங்குதானிருந்தனர். எல்லாருமே பக்கத்து பக்கத்து ஊர்கள் தான். 

ஏதோ தானும், தன் பிள்ளைகள் மட்டுமே தனித்து விடப்பட்டது போல் இந்துமதி, முதன் முறையாக உணர்ந்தார். உணர்ந்து எந்தப் பயனுமில்லை. அவர்களை உதறிவிட்டு தனியே வரும் தைரியம் அவருக்கு என்றுமே வரப்பேவதில்லை. 

*****

“டேய்… என்னடாயிது. இப்படி மானத்தை வாங்குற. யாராவது பாக்கங்குள்ள இவனை படுக்க வைடீ! யாரு‌ இவனுக்கு வாங்கிட்டு வந்து கொடுத்தது. பொண்ணு வீட்டுக்காரவுங்க கண்ல பட்டுறப்‌ போகுது. கதவச் சாத்தி தூங்க வை!” மணமகன் அறைக்குள் பாட்டிலும் கையுமாக இருந்தவனைப் பார்த்த தயாளன் ஆத்திரத்தில் மனைவியிடம் கோபத்தைக் காட்டிக் கொண்டிருந்தார். 

அவர் கோபத்தை உணரும் நிதானத்தில் இல்லை சுதாகரன். போதையில் கண்கள் கோவைப்பழமாய் சிவந்திருந்தது. 

“டேய்…‌சுதா! என்னடாயிது?” கண்ணைக் கசக்கினார் அன்னபாக்கியம். 

“ஆமா… அவன்கிட்ட கொஞ்சிட்டிரு. நிச்சயத்தன்னைக்கும் நிதானமில்லாம வந்துதான் வீட்டுக்குள்ள போட்டு பூட்டிட்டுப் போனோம்‌. இன்னைக்கும் இப்படி வந்து மானத்தை வாங்குறான்! கலியாணம் முடியறவரைக்கும் இவனை கவனமாப் பாத்துக்கோ.” அவன் மீதிருந்த கோபத்தை மனைவியிடம் திருப்பினார். 

“ஏங்க, இன்னும் அவன் சாப்பிடல!”

“இப்ப அதுதான் ரொம்ப முக்கியம். இவன் இப்ப பந்திக்கு போனா நம்ம மானம் சந்தி சிரிச்சுறும். வேணும்னா உன் அருமை மகனுக்கு இங்கேயே எடுத்து வந்து கொடு. எவன் கண்லயாவது பட்டுத் தொலஞ்சுறப் போறான்!” வேகமாக கதவைச் சாத்திவிட்டு வெளியே வர, புருஷோத்தமன் எதிர்பட்டார். ஒரு கணம் அதிர்ந்த தயாளன் சட்டென முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டார். அவரைப் பார்த்து சிரித்து வைக்க, 

“மாப்பிள்ளை என்ன பண்றாப்ல?”

“காலையில வெள்ளனா எந்திருக்கணும்னு நான் தான்‌ தூங்கச் சொல்லிட்டேன். ஏதாவது சொல்லணுமா? எழுப்பவா?” முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் பக்குவமாய் கையாண்டார். 

“இல்லையில்ல… எல்லாம் வசதியா இருக்கான்னு கேட்க வந்தேன்!” 

“எல்லாம் வசதிதான். நீங்களும் போய் படுங்க. கொஞ்ச நேரமாவது தூங்கி எந்திருச்சதான் நல்லாருக்கும்!” அக்கறையாகச் சொல்ல, 

“எங்க தூங்க முடியும்? காலை சமையல் ஆரம்பிச்சாச்சு‌. இனிமே தான் அது இல்ல இது இல்லைன்னு ஒன்னொன்னா கேட்டு வருவாங்க.  நீங்க போய் தூங்குங்க” என்றுவிட்டு செல்ல, ஒரு நெடிய பெருமூச்சு தயாளனிடம். 

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 18

18“என்னடீ இது.‌ இப்படி மானத்தை வாங்கிட்ட? ஒன்றும் புரியாமல் மாலதி அதட்ட,“என்ன சித்தி பண்ணிட்டேன்? உள்ளே ஒரே சிகரெட் நாத்தம். குமட்டிட்டு வந்துருச்சு!” என்றவள் குரலிலும், உடலிலும் மெல்லிய நடுக்கம். அதை அவர்கள் கண்டு கொண்டதாகவேத் தெரியவில்லை. அப்படியே கண்டு கொண்டிருந்தாலும்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 8

  1. Manju Mohan பத்தி 87 “எங்க தூங்க முடியும்? காலை சமையல் ஆரம்பிச்சாச்சு‌. இனிமே தான் அது இல்ல இது இல்லைManju Mohan

    Hi, interesting...indhumathiku Evalo patalum ....varadhu..pavam abhi

  2. SM Eshwari பத்தி 87 “எங்க தூங்க முடியும்? காலை சமையல் ஆரம்பிச்சாச்சு‌. இனிமே தான் அது இல்ல இது இல்லைSM Eshwari

    சிலர் அப்படித்தான்மா... ஒன்னும் பண்ண முடியாது..😔
    Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

    1. SM Eshwari பத்தி 89SM Eshwari

      ❤️❤️❤️❤️❤️

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  3. KAMSY_777பொதுக் கருத்துKAMSY_777

    site work panala enaku one week. ipothan read panren. ipdithan last story mukkaniyum sakkaraiyum koda nan read pannitu irunthen thideernu site ilama poitu. apdi ayirumo nu romba kavala paten.

    story line super , kudikara maplai ku enna kuraipaaadam?

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      அது நெட்வொர்க் ப்ராப்ளம் மா. இப்போ சரியாயிடுச்சு.

      இந்தக்கதை அப்படி பாதியில கட்டாகாது. ஆனாலும் பழைய‌சைட்ல போடுவேன்.
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  4. Thaniபொதுக் கருத்துThani

    பணத்துக்காக மைனர் பொண்ணு எனறும் பாக்காமல் திருமணத்தை நடத்துறாங்களே .

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      பணம் தான் இங்கு எல்லாமே 😔😔

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்