என் வீட்டு தோட்டத்தில் 16
16
“பொண்ணுங்க வயசுக்கு வந்ததை ஊருக்கே சொல்ற மாதிரி ஆண்களுக்கும் சொன்னா நல்லா இருக்கும்ல!”
இதுதான் குருவின் மண்டைக்குள் இப்பொழுது வண்டாய் குடைந்து கொண்டிருந்தது. அவனது கையிலிருந்த கைபேசி வழியாக இன்று மாலில் எடுத்த புகைப்படத்தைதான் பார்த்துக் கொண்டிருந்தான்.
இந்தக் கேள்வியை அவள் கேட்கும் பொழுது எவ்வித உணர்ச்சியுமில்லை. குரலும் முகமும் நிச்சலனமாய் இருந்தது. அக்கா மகன்கள் கேட்டது போல் அபிராமி கேட்டதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.
ரோஹித்தும், பிரணவும் ஒரு இருக்கையிலும், சாய் மற்றும் குரு ஒரு இருக்கையிலும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். அது தனித்தனியாக இல்லாத நீள் சோபா அமைப்பிலான இருக்கை. சக்தியை அழைத்த பிரணவ் அவன்தான் தள்ளி அமர்ந்து அவனுக்கு பக்கத்தில் இடம் கொடுத்திருந்தான். சாய், குருவுக்குப் பக்கத்தில் நகர்ந்து அபிராமிக்கு இடம் கொடுத்தான்.
ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருக்கும் நேரத்தில் அவன் பார்வை டேபிளில் அமர்ந்திருந்த அபிராமியைத்தான் ஆராய்ந்தது. அவளோ தனக்கு எதிரே அமர்ந்திருந்த பிரணவைத்தான் பார்த்திருந்தாள். இருவரையும் அருகருகே பார்த்தவள் கண்களில் கனிவு கலந்த தாய்மையின் ஏக்கம்.
இருவரையும் ஒரு சேரப் பார்க்க குருவுக்குமே எப்படி என்று சொல்ல முடியாதொரு உணர்வு.
இன்ஸ்டன்ட்டாக பத்து வயதில் தனக்கு இப்படியொரு மகன் இருப்பதை சில மாதங்களுக்கு முன்பு தான் அறிந்து கொண்டாலும், உணர்வுப் பூர்வமாக அதை உணர முடியுமா என்ற குழப்பம் அவனுக்குள் பல நாட்கள் எழுந்ததுண்டு. பிறந்தவுடன் கையிலேந்தி, தோளில் போட்டு வளர்ப்பவர்களுக்கே சில சமயம் பாசம் அற்றுப் போய்விடுகிறது.
இவனோ முகமறியா ஒரு பெண்ணிற்கு தன் மூலமாகக் கூட இல்லை, தன் உயிரணு மூலமாக உருவாக்கப்பட்டவன். ஷைலாஜாவிடம் சொன்னது போல்தான், ஆர்டர் கொடுத்து வாங்கின மாதிரி வாங்கினா எப்படி பாசம் வரும் என பலமுறை யோசித்திருக்கிறான். அவளிடம் இதற்காகவே பலமுறை சண்டை போட்டிருக்கிறான்.
“நீங்களா சுமந்து பெத்துக்கறீங்க. நாங்கதானே பெத்து தர்றோம். அதுவும் ஆர்டர் கொடுத்து வாங்கின மாதிரி தானே. மனபிட்டைங்கிற (நம்ம பிள்ளைங்கற) ஃபீல்தான் இக்கட முக்கியம் பாவா! பாசம் தன்னால வரும்” என்று அவள் வாதிட்டது எந்தளவிற்கு உண்மை என இப்பொழுது புரிகிறது. சக்தியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு உணர்வு அவனுக்குள். ஒரு வேளை தன்னைப் போல் இருப்பதாலா என்று கூட யோசித்திருக்கிறான்.
உண்மை தெரிந்து சக்தியை முதன் முதலில் அவன் பார்த்ததே மருத்துவமனையில் வைத்துதான். அதுவும் அவன் அவசர சிகிச்சை பிரிவில் இருக்க, இவனோ பிரசவ வார்டில் வெளியே நிற்பது போல்தான் தவித்துக் கொண்டிருந்தான். யாரோ என்றுதான் மருத்துவமனைக்கு வந்தான். அங்கு அபிராமியைப் பார்த்ததும்தான் உள்ளிருப்பவன்தான் தான் தேடிச் சென்றவன் எனத் தெரிய, அப்பொழுதே முதன் முதலாக அவனைப் பார்க்கப் போகும் ஆர்வம் அவனுக்குள் குடி கொண்டது. கிட்டத்தட்ட பிறந்த குழந்தையை பார்க்கப் போகும் சுவாரஸ்யம்தான். யாரைப்போலிருப்பான் என்ற கற்பனை ஓடியது அபிராமியைக் கொண்டு. பிரணவ் அப்படியே அபிராமி சாயல் தானே. இவனும் அவளைப் போலிருப்பானோ என்ற எண்ணம்.
முதன் முதலில் சக்தியைபப் பார்த்ததே பெட்பேன் வைத்த நர்சிடம் அதில் போக மறுத்து பாத்ரூம் போக வேண்டும் என அடம் பண்ணிய சிறுவனாகத்தான். குருதான் கையிலேந்தி கொண்டு போய் ஓய்வறையில் விட்டான். என்னவோ அவனுக்கு அது அப்பொழுதுதான் பிறந்த குழந்தையை முதன்முதலாக மருத்துவமனையில் பார்த்து அவனுக்கு சேவகம் செய்வது போன்றதொரு உணர்வு. என்ன கொஞ்சம் பெரிய சைஸ் குழந்தை. அப்படித்தான் நினைத்துக் கொண்டான்.
குரு, மேஜையில் எதிரெதிரே அமர்ந்திருந்த மூவரையும் ஒரு சேரப் பார்த்திருந்தான்.
சக்தி, ரோஹித் மற்றும் சாய்கிரணிடம் சகஜமாகப் பேசினான். சட்டென யாரிடமும் பழகி, நட்பு பாராட்டி விடும் குணம் அவனுக்கு. அதனால் தான் முதன் முறையாக பிரணவுக்கு ஜுஸ் கொடுத்து அவன் மறுத்த பொழுது, நீ பெரிய இவனா என்ற வீம்பு இவனுக்கு. அபிராமி பழகுவதும் அதனால் தான் சக்திக்குப் பிடிக்கவில்லை.
அவரவர்களுக்குப் பிடித்ததை ஆர்டர் செய்திருந்தாலும் உணவு வந்ததும் மூவருமே பகிர்ந்து கொண்டனர். பிரணவுக்கு மட்டும் வெஜ் சான்ட்விச்சும், வெஜ் சூப்பும் ஆர்டர் செய்திருந்தான். குருவுக்கும் அதுவே. மகனுக்கு கம்பெனி கொடுக்க.
சாப்பிடும் பொழுதே மீண்டும் அவர்களுக்குள் வயதுக்கு வருவது பற்றி பேச்சு எழுந்தது. பிரணவ் கேட்க, சக்திக்கும் அதே சந்தேகம் எழுந்தது. இதுவரை அவனுக்குள் இப்படியொரு கேள்வி எழுந்ததில்லை.
ரோஹித் விபரம் அறிந்தவன் என்பதால், “டேய்… பேசாம சாப்பிடுங்கடா!” என்று அதட்டியவன், அபிராமியைப் பார்த்து பட்டும் படாமல் அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான். மாமா மட்டும் என்றால் கூட பரவாயில்லை. அவனும் கூட சேர்ந்து கலாய்த்திருப்பான். கூடவே அபிராமி இருக்க பதின் வயதினனாக ரோஹித் சங்கோஜப் பட்டான்.
“அப்போ உனக்குத் தெரியுமா பாவா?” பிரணவ் விடுவதாக இல்லை. ரோஹித் மாமனைப் பார்த்தான். அபயம் கேட்டது அவன் பார்வை.
வீட்ல அவ்ளோ பேசின… இப்ப பேசுடீ மாப்ளே! என்பது போல் குருவும் நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சிரித்துக் கொண்டான்.
சக்தி, அபிராமியிடம், “வயசுக்கு வர்றதுன்னா என்னம்மா” என்று எதிர்புறமிருந்து சத்தமாகவே கேட்க, அதில் பக்கத்து இருக்கையில் இருப்பவர்களும் திரும்பிப் பார்த்து சிரித்துக் கொண்டனர். அதில் வயதுப் பெண்களும் இருக்க ரோஹித் தவிப்பாய் நெழிந்தான். பதின் பருவத்தினனாக அவ்வப்பொழுது அந்த இருக்கையில் இருந்த பருவப் பெண்களை சைட் சீயிங் கோயிங்.
பிரணவ், “மீசை முளைக்கிறதாம் சக்தி!”
சாய்கிரண் அவனுக்கு சொன்ன பதிலை சக்தியிடம் கூற, அவன் பக்கத்திலிருந்த இருவரையும் திரும்பிப் பார்த்தான். ரோஹித்துக்கு இப்பொழுதுதான் அரும்புகட்டிய மீசை என்றால் சாய்க்கு கருப்பு மையால் தேய்த்தது போல் இப்பொழுது தான் உதட்டுக்கு மேல் கருமை படறத் தொடங்கியிருந்தது.
சக்தி, “அப்போ இவங்க ரெண்டு பேரும் வயசுக்கு வந்துட்டாங்களா? எனக்கு எப்போ மீசை முளைக்கும்?” கேட்டதோடு நில்லாமல் உதட்டுக்கு மேலே தடவிப் பார்த்துக் கொண்டான். இப்பொழுது பக்கத்தில் இருந்தவர்கள் பலமாகவே சிரித்தனர். இவர்கள் அலும்பில் சிறுவர்கள் மட்டுமன்றி குரு முகத்தில் கூட சிறுநாணம்.
ரோஹித், “நீயுமாடா!” என்றவன் மாமாவை தவிப்பாகப் பார்த்தான். குரு, இவனுங்க மானத்தை வாங்காம விடமாட்டானுக போலயே என்று நினைத்தவன், “வேற என்ன வேணும்” என்று கேட்க, பேச்சு மாறியது. அப்பாடா என்ற பாவணை ரோஹித்திடம். மும்மரமாக சாப்பிடுவது போல் சாப்பாட்டில் கவனம் வைத்தான்.
சக்தி, “ஐஸ்க்ரீம்!” என்றதும், அபிராமி கண்ணைக் காண்பித்தாள். அதுவே வேண்டாம் என்பதற்கான அதிகாரப்பூர்வமான சமிக்ஞை. மீறி கேட்டால் வீட்டுக்குப் போய் பூஜை விழும் என்பதை பிள்ளை சமத்தாக புரிந்து கொண்டது. வெளி ஆட்களுடன் மறுக்காமல் சாப்பிட விட்டிருப்பதே அவனுக்குள் ஆச்சர்யம். விபத்தினால் வந்த பழக்கம் என்பதே இதுவரை அவனது கணிப்பு. மருத்துவமனையில் இரண்டு நாட்கள் குருவும் உடனிருந்தானே.
அவனுக்கு போகும் வழியில் வாங்கித் தருவதாக எதிர்புறம் அமர்ந்திருந்தவனிடம் யாரும் கவனிக்காத போது மெதுவாகக் கூறினாள்.
இவள் காஃபி மட்டும் என்பதால் நால்வரும் சாப்பிட்டு முடிந்ததும் கை கழுவச் சென்றனர். சாய்க்கு எழுந்து வழிவிட்டு அமர, இப்பொழுது அபிராமியும், குருவும் மட்டுமே. குரு, இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“சமத்துப் பசங்க!” என்றாள் எழுந்து சென்றவர்களைப் பார்த்து.
“அட நீங்க வேற. அவ்வளவு சீக்கிரம் சர்டிஃபிகேட் கொடுக்காதீங்க. நீங்க நினைக்கிறளவுக்கு இவனுக அம்புட்டு நல்லவனுக எல்லாம் இல்ல. நீங்க கூட இருந்ததால அடக்கி வாசிச்சானுங்க. வீட்ல சீர் கேட்டு அம்மாவை ஒரு வழி பண்ணிட்டானுங்க!” என்றான் சாப்பிட்டபடி.
“எதுக்கு சீர்?” என்றாள் புருவம் சுருக்கி.
“வயசுக்கு வந்ததுக்குதான். பொம்பளப்பிள்ளைகளுக்கு மட்டும் செய்றீங்க. அதே மாதிரி எங்களுக்கும் செய்ங்கன்னு அம்மாவை ஓட விட்டானுங்க!” என்றதும் வாய்விட்டு சிரித்தாள்.
அவளோடு அவனும் சேர்ந்து சிரித்தான் இவர்கள் ஜமுனாவை மிறளவிட்டதை நினைத்து. அவர் வயதுக்கு இப்படி வெளிப்படையாக பேரன்கள் பேசுவார்கள் என எதிர்பார்த்திருக்க மாட்டார். பெண்கள் வயதுக்கு வருவதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதே அவருக்கு அதிகப்படி.
“வீட்டுக்குள்ளேயே தான் இருக்கணும். வெளியே எங்கும் போக்கூடாது. அப்பதான் மாமா சீர் செய்வேன்னு சொன்னதும் தான் ஆளவிட்டானுங்க.”
“பொண்ணுகளுக்கு மட்டும் ஊரைக் கூட்டி மேடையில வச்சு பகிரங்கமா சொல்றாங்க. ஆனா… ஏன் ஆம்பளைங்க வயசுக்கு வந்துட்டாங்கன்றதை வீட்டளவுக்கு கூட சொல்றதில்ல? அதையும் ஊரறிய சொன்னா நல்லா இருக்கும்ல?” என்றவளை சாப்பிடுவதை விடுத்து இதழ் விரிந்த சிரிப்போடு, பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான்.
அவளும் அப்படிக் கேட்டதில், “ஏங்க… நீங்களுமா? விட்டா ப்ளக்ஸ், பேனரெல்லாம் வைக்கச் சொல்லுவீங்க போலயே” என விளையாட்டாக கேட்க விழைந்தவன், திரும்பி அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் முகத்தில் இப்பொழுது சிரிப்பை துடைத்து விட்டது போல் இருந்தது. இது பிரணவ் மற்றும் சக்தியைப் போல் விபரமில்லாமல் கேட்பது போல் தெரியவில்லை. கேட்கும் பொழுது அவள் குரலில் வெறுமை குடி கொண்டிருந்தது.
பெண்கள் வயதுக்கு வந்ததை ஊரைக்கூட்டி விழா எடுத்து, மேடையில் வைத்து எங்கள் வீட்டுப் பெண் திருமணத்திற்கு தயார் என்பதை பகிரங்கமாக அறிவிப்பது போல் ஆண்களுக்கு ஏன் எந்தச் சடங்கும் செய்வதில்லை. மீசை முளைத்தாலே அவன் ஆண் மகன் ஆகிவிடுகிறானா என்ன?
குரு அவளையே புருவம் சுருக்கிப் பார்த்தான். மேஜை மீது இரண்டு கைகளையும் மடக்கி வைத்து அமர்ந்திருந்தவள் பார்வை இலக்கின்றி வெறித்திருந்தது. அவள் நினைவு இங்கில்லை எனத் தெரிந்தது. ஏதோவொரு சிந்தனையில் சிக்கியிருப்பது போல் இருந்தது. அடர் குங்குமக் கலரில் கருப்பு பிரிண்ட் போட்ட ஷார்ட் காட்டன் குர்தியும், வெளிர் நீலநிறத்தில் மாம் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். கிளிப்பில் அடங்காத முடிகள் கன்னத்தோரமும், பின் கழுத்திலும் சுருட்டி நின்றன. உணவகத்தில் மிதமாகப் பரவியிருந்த மஞ்சள்நிற ஒளியில் சன்ஸ்கிரீம் உபயத்தோடு, ஒப்பனையற்ற மூக்கின் நுனியும், கன்னக்கதுப்பும், தாடையும் பளபளத்தது. பார்வை மட்டும் இலக்கின்றி வெறித்திருந்தது.
குரு, அவளையே பார்த்திருக்க சட்டென சுதாரித்தவள், “ஒரு நிமிஷம். இதோ வந்துர்றேன்” என்றவள் கைப்பையை எடுத்துக் கொண்டு வேகமாக வெளியே சென்றாள்.
சுற்றிலும் பார்வை தேட, எதிரிலிருந்த ஃபாஸ்ட் ட்ராக் கண்ணில் பட்டது. உள்ளே சென்றவள் ஒரு பார்சலோடு வந்தாள்.
அதற்குள் ஐவரும் உணவகம் விட்டு வெளியே வந்திருந்தனர்.
“ஹேப்பி பெர்த் டே!” என சாய்கிரணுக்கு கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தாள். அவனிடம் பார்சலை நீட்டியவள், “சட்டுனு வாங்கினதால என்னால முடிஞ்சது” என்று சொல்லியே கொடுத்தாள்.
அவன் மாமாவைப் பார்த்தான். “தீஸ்க்கோரா” என்றதும் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டான். என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் சிறுவர் நால்வருக்கும். அவர்கள் பார்வை அதிலேயே நிலைக்க,
“பாவா… ஓபன் செய்யவா?” என்றான். குரு தலையாட்ட, அங்கேயே பிரித்தவன் கண்களில் சந்தோஷ மின்னல்.
“வாவ்… சூப்பர் ஆன்ட்டி. தாங்க்ஸ் ஆன்ட்டி” என்றான் கூலரை கண்களில் மாட்டியவாறே. கருப்ப வண்ணத்தில் தங்க கலர் பிரேமிட்ட முட்டை வடிவ குளிர்கண்ணாடி. அவனுக்கு அது எடுப்பாக இருக்க, அங்கேயே செல்ஃபி எடுத்துக் கொண்டான்.
“பாவா எனக்கு” என்றபடி பிரணவும் வாங்கிப் போட்டுப் பார்த்தான். அடுத்து ரோஹித்திடமும், சக்தியிடமும் கூட சென்று வந்தது. எல்லோரும் போட்டுப் பார்த்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
“ஆன்ட்டீ…. நீங்களும் வாங்க… எல்லாரும் சேந்து ஒரு செல்ஃபி எடுக்கலாம்!” சாய் அழைக்க, அபிராமி தயங்கி நின்றாள்.
“வேண்டாம்… நீங்க மட்டும் எடுங்க!” என்றதும்,
“ஆன்ட்டீ, பெர்த் டே பாய் விஷ்” என்றதும், மறுக்க முடியாமல் வந்து நின்றாள்.
“ஒரு கூலர் என்ன வேலையெல்லாம் பாக்குது பாரு?” ரோஹித் கமெண்ட் கொடுக்க.
“உனக்கு பொறாமைடா” என்றதும் அனைவரிடமும் வெடிச் சிரிப்பு.
குரு ஒதுங்கி நிற்க, “பாவா, நீங்களும் தான்!” என அவனையும் இழுத்து சேர்த்துக் கொண்டான். அனைவரது புன்சிரிப்பையும் தன் கைபேசிக்குள் அடக்கினான் சாய்கிரண்.
“ஆன்ட்டீ உங்க நம்பர் கொடுங்க. இமேஜ் சென்ட் பண்றேன்!” என்றவனிடம்,
“நீ எனக்கு பம்பிச்சேய்ரா. நான் அனுப்பிக்கறேன்!” என்றதும் அவனும் மாமனுக்கு அனுப்ப, குரு, அபிராமிக்கு அனுப்பி வைத்தான்.
மெசேஜ் டோன் கேட்டது. “டைமாச்சு… வீட்ல போய் பாத்துக்கறேன்” என்றவள்,
கிளம்பும் முன், “அரவிந்த் கிட்ட பேசிட்டு சொல்றேன்!” என்றுவிட்டு மகனோடு கிளம்பினாள். மூவரும் சக்திக்கு கையசைத்தனர். குரு, அவர்களை கார் பார்க்கிங் போகச் சொன்னான்.
டூவீலர் பார்க்கிங்கில் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள். மாலைவிட்டு(mall) வெளியேறும் இடத்தில் குரு நின்றிருந்தான். அவன் கையில் ஐஸ்கிரீம் கோன். இவனைப் பார்த்ததும் அவள் வண்டியின் வேகத்தை குறைத்தாள்.
“அவங்கள எங்க?”
“காருக்கு போய்ட்டாங்க” என்றபடி ஐஸ்கிரீமை சக்தியிடம் நீட்டினான்.
“நோ அங்கிள்” என்றதும், குரு, அபிராமியைப் பார்த்தான். “வாங்கிக்கோ சக்தி!” என்றதும் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டான்.
“சின்னாவுக்காகத்தான் நீங்க வேண்டாம்னு சொன்னீங்கனு தெரியும். அவன் அதெல்லாம் புரிஞ்சுப்பான். அவனும் உடம்புக்கு பிரச்சினை இல்லைனா லைட்டா ஐஸ்க்ரீம் சாப்பிடுவான். மழை காலம், பனி காலம்தான் ரொம்ப சிரமம். அவனுக்காகன்னு எதையும் பாக்க வேண்டாம். அதுதான் அவனை நார்மலா ஃபீல் பண்ண வைக்கும். ஒவ்வொன்னையும் பாத்து பாத்து செஞ்சா மத்த பசங்ககிட்டருந்து அவனை ஒதுக்கி வைக்கிற மாதிரி இருக்கும்” என்றதும் அவளிடம் ஆமோதிப்பாய் சிறு புன்னகை.
அதற்குள் பின் வந்த வண்டிகள் ஹாரன் ஒலிக்க, தலையசைத்துவிட்டு பைக்கை கிளப்பினாள்.
*****
சாய், வீட்டிற்கு வந்ததும் ஜமுனாவுக்கும் கூலரைக் மாட்டிவிட்டு அவரையும் ஃபோட்டோ எடுத்தான்.
“மாமா வாங்கித் தந்தானாடா?” கண்களில் இருந்து கழட்டியபடி கேட்க,
“இல்ல… ஒரு ஆன்ட்டீ!”
“ஆன்ட்டியா… யார்ரா அது!” ஆச்சர்யமாக கேட்டதும், கை பேசி எடுத்து, எடுத்த படத்தைக் காட்டினான்.
ஜமுனா, மகளைப் பார்க்க, அவளும் யாராயிருக்குமென எட்டிப் பார்த்தாள். இமேஜைப் பார்த்து இருவரும் பார்த்துக் கொண்டனர்.
“இவங்க எப்படிடா?”
“தெரியலம்மா… நம்ம பிரணவுக்கு ஃப்ரென்ட்டோட அம்மா போல. மாமாகிட்டக்கூட நல்லா பேசினாங்க! இந்த பிக்சர்ல பாருங்களே. சக்திக்கு டிட்டோ நம்ம மாமா மாதிரி கண்ணுல்ல!” என்றதும்,
அவர்களிடம், “டேய்… எல்லாரும் ஃப்ரெஷ்ஷாகிட்டு வாங்க!” என்று ரூமுக்கு அனுப்பினான்.
மகனுக்கு பிறந்த நாள் என்பதால் அதை முன்னிட்டு சத்யநாராயணணும் வந்திருந்தான். நாளையோடு விடுமுறை முடிகிறது. மகன்களையும் மனைவியையும் அழைத்துச் செல்ல வந்திருந்தான்.
மூவரும் உடை மாற்றச் செல்ல, குரு மாமனோடு அமர்ந்து விட்டான். சத்யநாராயணன் அப்பொழுது தான் வந்திருப்பான் போல. உடை கூட மாற்றவில்லை. டீ எடுத்து வந்தாள் விஷாலி. தம்பிக்கும் வேண்டுமா எனக் கேட்க மறுத்துவிட்டான்.
இருவரும் பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருக்க, “குரு, அவங்ககிட்ட பேசிட்டியா? என்ன சொன்னாங்க?” சத்யநாராயணன் விபரம் கேட்க,
“சொல்லிட்டேன் பாவா. அவங்க தம்பிகிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாங்க!”
“ஏன் குரு? தம்பிட்டன்னா அவங்க குடும்பத்துல வேற யாரெல்லாம் இருக்காங்க? அவங்க ஹஸ்பன்ட் ஒருவேளை இதுக்கு மறுத்துட்டா?” சத்யநாராயணன் இதைக் கேட்டதும் அடுப்படியிலிருந்த ஜமுனா காதை தீட்டி வைத்துக் கொண்டார். மகன் பதில் என்னவாக இருக்கும் என அறிய ஆர்வம்.
“தெரில பாவா… தம்பி வெட்னரி டாக்டரா இருக்கான். அவங்க ஹஸ்பன்ட் கூட இல்ல. அது மட்டும் தெரியும். அதுக்கு மேல நாம விசாரிக்கறது நாகரீகமில்ல. அதுவும் அவங்க ஊருக்கு போனப்பதான் தெரியும்” என்றவன் உடைமாற்றி வருவதாக சொல்லிக் கொண்டு எழுந்தான்.
தான் எதிர்பார்த்த பதில் வராத ஏமாற்றம் ஜமுனா முகத்தில். சட்டென முகம் கூம்பிப்போன அம்மாவைப் பார்த்து சிரித்தவள், “என்னம்மா, இருக்கு… ஆனா இல்லையா?”
“போடீ… அவ புருஷன் கூட இல்லையாம். ஆனா முழுசா விசாரிக்கலையாம். யார்கிட்ட காது குத்துறான். நம்மகிட்ட அவளப் பத்தி சொல்ல விருப்பமில்ல போல.”
“அடுத்தவங்க விஷயம்னு அதிகமா தோண்டி துருவியிருக்க மாட்டான்மா! யாராயிருந்தாலும் லிமிட் கிராஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்லுவான். அவ விஷயத்துலயும் அதை ஃபாலே பண்ணுவானா இருக்கும்.”
“க்கும்… நீ நெனச்சிட்டு இரு. சின்னதா பிசினஸ் பண்ணனும்னு இவன்கிட்ட யோசனை கேட்டு வந்தாலே இடம், போக்குவரத்துனு நேர்லயே போய் பாத்து ஆயிரத்தெட்ட அலசி ஆராய்ஞ்சு சொல்றவன், மகனுக்காக எவ்வளவு தூரம் விசாரிச்சுருப்பான். ஆஸ்பத்திரில வச்சே அவளுக்குத் தெரியாம அத்தனை டெஸ்ட்டும் எடுத்தவன். பெத்தவளுக்கு தெரியாதா பிள்ளையப் பத்தி. இந்நேரம் அவளப் பத்தி முழு விபரம் தெரிஞ்சிருப்பான். இல்லைனா அடுத்தவன் பொண்டாட்டி கூட நின்னு இப்படி ஃபோட்டோ புடிக்கிறானாக்கும் உன் தொம்பி!
“யம்மோவ்… உங்கள என்னமோன்னு நெனச்சேன். துப்பு துலக்குறதுல ஷெர்லாக் ஹோம்ஸ்க்கே டஃப் கொடுப்பீங்க போலயே? ஃபோட்டோ எடுத்ததற்கெல்லாம் இன்னைக்கி பெரிய விஷயமா?”
“ஃபோட்டோ எடுக்கறது பெரிய விஷயமில்ல. ஆனா தன் பொண்டாட்டிகிட்ட நிக்கறது பிள்ளையோட அப்பான்னு தெரிஞ்சா எந்த ஆம்பளைக்கும் உள்ளுக்குள்ள பொசுங்கும். என்னத்த பேசி என்னத்துக்கு ஆகப்போகுது. சாப்பாத்தி மாவ எடு. நம்ம வேலையப் பாப்போம். உங்க வீட்டுக்காரருக்கு ட்ரெஸ் எடுத்து கொடுத்துட்டு வா. வந்ததோட உக்காந்திருக்காரு.”
மகளை அனுப்பிவிட்டு இரவு உணவுக்கான வேலையில் ஆயத்தமாக, விஷாலி கணவனை அழைத்துக் கொண்டு அறைக்கு சென்றாள். “ஏன்டீ, உங்க அம்மாவா போகச் சொன்னாதான் வருவியா? நீயா வந்து எடுத்துக் கொடுப்பேனு எவ்வளவு நேரமா உக்காந்திருக்கறது?” என்றவனை திரும்பி முறைத்துப் பார்த்தாள்.
“நீங்க என்ன நேத்து கல்யாணம் முடிச்சு இன்னைக்கி மறுவீடு வந்த புது மாப்பிள்ளையா. இந்த ரூம்ல எது எங்க இருக்குனு உங்களுக்குத் தெரியாதா?” நொடித்தபடி கைலியையும், ஒரு டீ சர்ட்டும் எடுத்துக் கொடுக்க, நீட்டிய கையை பிடித்து இழுத்தவன், “என்னடீ இன்னும் கோபம் போகலியா. சாரி விஷா” என்றவன் விரல் குவித்து கொஞ்சுவது போல் தாவாய் பிடித்ததும் முகத்தை வெடுக்கெனத் திருப்பினாள்.
இன்று மகனின் பிறந்த நாளுக்காக இவன் வந்து அனைவரையும் வெளியே அழைத்துப் போவதாகத்தான் இருந்தது. போன இடத்தில் வேலை இழுத்துக் கொண்டது. இவர்களை மட்டும் போய் வரச் சொன்னான். விஷாலி மறுத்துவிட, சிறுவர்களை மட்டும் குரு வெளியே அழைத்துச் சென்றுவந்தான்.
“என்ன விஷா! புரிஞ்சுக்காம பேசுற. இப்ப என்ன நாளைக்கி எல்லோரும் வெளியே போலாம்.”
“இன்னைக்கிதான் சாயோட பெர்த் டே. நாளைக்கி இல்ல. அதானே… கலியாணத்தப்பவே முகூர்த்தம் தப்பி வந்த ஆள்தானே நீங்க?”
“நீங்க மாப்பிள்ளை அழைப்புக்கு அனுப்பின காரோட லட்சணம் அப்படி. ஜானவாசக் காரை மாப்பிள்ளை அழைப்புக்கு அனுப்பினா முகூர்த்தத்துக்கா வரமுடியும்? சாந்தி முகூர்த்தத்துக்குதான் வரமுடியும். அதுக்கு கரெக்டா வந்தேனா இல்லையா?”
கண்சிமிட்டி சரசமாடிக் கொண்டே அவளே அறியாமல் கைவளைக்குள் கொண்டு வந்திருந்தான்.
“பேச்சுக்குதான் புது மாப்பிள்ளையான்னு கேட்டேன். உடனே மாப்பிள்ளை நெனப்பு வந்திருச்சோ? ட்ரெஸ்ஸ மாத்திட்டு வாங்க. எனக்கு வேலையிருக்கு!” பிடியிலிருந்து நழுவப் பார்த்தவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.
“பத்து நாளா வந்து அம்மா வீட்ல உக்காந்துக்கிட்ட. சரியா சாப்பாடில்லாம காஞ்சு போய் வந்திருக்கேன் விஷா!”
“ஆமாமா… தொப்பையப் பாத்தாலே தெரியுது. பத்து நாள்ல இரண்டு இஞ்ச் கூடியிருக்கும் போல!”
“பார்றா… கண்ணாலயே எம் பொண்டாட்டி என்னை அளந்துருக்கா?” என்றவன் பார்வை மனைவியை மேலிருந்து கீழாக அளந்து கொண்டிருந்தது. வெளியே போகவேண்டுமென புடவை, பூவென அலங்காரத்தில் இருந்தாள்.
“நான் வருவேன்னு தெரிஞ்சு தானே இன்னும் நீ சேலைய மாத்தல? உன் கண்ணுல ஏக்கம் தெரியுதே?” என்றவன் பிடி இடையில் வலுத்தது.
“உங்களுக்காக யாரும் இங்க ஏங்கிட்டு இல்ல! பத்து நாளா இவரைப் பாக்கலைங்கவும் ஏங்குறாங்களாம். நெனப்புதான்!” என்றதும் அணைத்த கைகளை விலக்கிக் கொண்டு,
“சரி, போ!” என்றான். விடுவித்த கையையும் அவனையும் முறைத்துப் பார்த்தாள்.
“அதானே… நீங்க வான்னா வரணும். போன்னா போகணுமா? பொண்டாட்டிய சமாதானப்படுத்த தெரியல. இதுல இவருக்காக ஏங்குறாங்களாம்!” முகத்தை வெட்டிச் சென்றவளை இழுத்துப் பிடித்து,
“எங்களுக்கு அதெல்லாம் நல்லாத் தெரியும். ஆனா உனக்குதான் கோபப்படுற மாதிரி நடிக்கக்கூடத் தெரியல!”
“யாரு… நான் நடிக்கிறேனா?”
“அப்போ விட்டதும் போக வேண்டியதுதானே. எதுக்கு இன்னும் நிக்கிற?” இடுப்பில் கை வைத்து மிடுக்காய் கேட்டவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.
“ம்ம்ம்… வேண்டுதல்!” என்றவளை சரசமாகப் பார்த்தபடி,
“பொம்பளப்பிள்ளை வேணும்னு தானே? அதுக்கு வேண்டுதல் வச்சா மட்டும் பத்தாதுங்க மேடம். புருஷனையும் கொஞ்சம் கவனிக்கணும். பிள்ள வரம் புருஷன்தான் கொடுக்கணும்.” கண்சிமிட்டி சில்மிஷம் கொஞ்சியவனை எவ்வளவு முறைத்தும் கோபமாகப் பார்க்க முடியவில்லை. பக்கென சிரித்துவிட்டாள்.
இவன் வந்து அழைத்துப் போகவில்லை என்ற கோபம் கழுத்துவரை இருந்ததுதான். இவளும் புடவைகட்டி கிளம்பி தயாராக இருந்தாள். வெளிநாட்டு ஆர்டர் விஷயமாக பேச போன இடத்தில் நேரம் கடந்துவிட, இவர்களை மட்டும் போய்வரச் சொன்ன கோபம். எவ்வளவுதான் இழுத்துப் பிடித்தும் அவன் வரும்வரை இருந்த கோபம் அவன் வந்த பிறகு ஒரு மணி நேரம் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
அவனைப் பற்றி நன்கு தெரியும். குடும்பம், மனைவி, மக்களென அதீத அன்பும், அக்கறையும் கொண்ட, அதை ஆர்ப்பாட்டமாகவோ ஆடம்பரமாகவோ காட்டத் தெரியாத எய்ட்டீஸ் கணவன். எப்பொழுதாவது தான் இது மாதிரி வெளியே போகலாம் என முடிவெடுப்பான். அதுவும் இன்று சொதப்பிவிட்டது.
இவர் சொன்ன மாதிரி நமக்குதான் நடிக்கத் தெரியவில்லை போல என்று உள்ளுக்குள்ளே திட்டிக் கொண்டாள்.
“உங்க மகன் வயசுக்கு வந்துட்டேன் சீர் செய்ங்கன்னு எங்க அம்மாட்ட கேக்குறான். உங்களுக்கு பொம்பளப்பிள்ள கேக்குதா. கூடிய சீக்கிரம் உங்க மகன் உங்களுக்கு பேத்தி பெத்து கொடுப்பான். நல்லா கொஞ்சுங்க!”
“என்னடீ நமக்கு அவ்வளவு வயசா ஆயிடுச்சு. பேத்திய கொஞ்சச் சொல்ற?”
“இல்லையா பின்ன… தலைய கண்ணாடில பாக்கறதில்லையா?”
“அது பித்த நறைடீ!” என்றவன் கண்களில் சல்லாபம் குடிகொண்டது.
பார்வை மாற்றத்தை உணர்ந்தவள், “மொத்தமும் நறைக்கப் போகுது. பித்த நறையாம். ட்ரெஸ்ஸ மாத்திட்டு சாப்பிட வாங்க. அங்க அம்மா தனியா வேலை பாத்துட்டிருப்பாங்க!”
“இன்னைக்கு ஒருநாள் பாப்ப. நாளைக்கு அவங்கதானே பாத்தாகணும்!”
“இருக்கறவரை பாக்க வேண்டியதுதான். ஆள் வச்சுக்க சொன்னாலும் சின்னாவுக்காக பாக்குறாங்க. வேலைக்கு வர்றவங்க நம்மளவுக்கு க்ளீனா பாப்பாங்களா? அவங்களுக்கு ஏதாவது இன்ஃபெக்ஷன் இருந்தாலும் கஷ்ட்டம்.”
“அதுக்காக அவங்களே எத்தனை நாளைக்கு பாக்க முடியும். அவங்களுக்கும் வயசாகுதுல்ல.”
“நமக்குத் தெரியுது. குரு ஒத்துக்கணுமே. சின்னாவுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைனா இந்நேரம் இவனை புடிச்சு இன்னொரு கல்யாணத்துக்குள்ள தள்ளிருக்கலாம்!”
“அனுபவப்பட்டவன்டீ… சிக்க மாட்டான். ஒரு தடவை கல்யாண வாழ்க்கையிலிருந்து தப்பிச்சவன். மறுபடியும் அதுக்குள்ள தலையக் கொடுக்க அவனென்ன முட்டாளா?” மீண்டும் அவனது பேச்சில் எகத்தாளம் எக்களிக்க,
“உங்களுக்கும் ஆசையிருந்தா தப்பிச்சு ஓடிப் போங்க. யாரு வேண்டாம்னா?”
லுங்கியை தலையோடு போட்டுக் கொண்டு, பேன்ட் சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டியபடியே, “சாப்பாட்டப் போடுங்க. சாப்பிட்டு தெம்பா ஓடுறேன்!” என்று சொல்ல,
“அடப்பாவி… நீங்களும் எப்போ எப்போனுதான் இருப்பீங்க போல?”
“வாய்ப்பு கெடச்சா யூஸ் பண்ணிக்கணும் விஷா! கிடச்ச வாய்ப்ப தவறவிட்டுட்டு போச்சேனு புலம்பக்கூடாதுல்ல!”
“போங்க… போங்க… யாரும் உங்கள புடிச்சு வைக்கல!” என்றபடி கதவைத் திறந்து வெளியே வர,
“அதானே… எங்க நம்மல விட்டுப் போயிறுவானோங்கற பயமிருந்தா புடிச்சு வைக்கத் தோணும். போக மாட்டேன்ற தைரியம் தானே!” இடுப்பில் லுங்கியை இறுக்கிக் கட்டியவாறே பின்னாலே வந்தான்.
“எங்கப்பா போகப் போறீங்க?” பின்னாலே வந்தான் ரோஹித்.
“நம்ம வீட்டுக்குதான்டா. காலையில சாப்பிட்டதும் கிளம்பணும்னு சொல்லிட்டிருந்தேன்!”
“சமாளிக்கறது எப்படின்னு உங்க அப்பாகிட்ட தான்டா க்ளாஸ் போகணும்!” என்றவள் அடுப்படி சென்றாள்.
ஜமுனா, அதற்குள் மாவு பிசைந்து வைத்து விட்டு குருமாவுக்கு வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தார். மற்ற காய்கறிகளையும் நறுக்கிக் கொடுக்க, விஷாலி தேங்காய் அரைத்துவிட்டு குருமா தயார் செய்தவள், சாப்பாத்தியை தேய்க்க ஆரம்பித்தாள். ரோஹித், சப்பாத்தி கல்லில் போட்டு எடுக்க உதவிக்கு வந்தான்.
பேரன் வரவும், ஜமுனா அங்கேயே சேரில் அமர்ந்து கொண்டார்.
குரு, தனதறைக்கு வந்தவன் உடை மாற்ற பேன்ட் பாக்கெட்டில் இருந்த ஃபோனை எடுத்து டேபிளில் வைக்கப் போனவன், கை பேசி திறையை திறந்தான்.
அதில் வாட்சப் சென்றவன் சாய் அனுப்பிய பிக்சரை பார்த்தான்.
சாயும், ரோஹித்தும் இருபுறமும் நிற்க, நடுவில் குருவை இழுத்து நிற்க வைத்ததில் சக்திக்குப் பின் நின்றவள், அவனுக்கு இடம் விட்டு அபிராமி ஒதுங்கி நிற்க, பிரணவின் பின்னால் தோளின் கை வைத்து அவளும், அதே போல் சக்தியின் பின்னால், தோளில் இருபுறம் கை வைத்து குருவும் நின்றனர்.
அப்பொழுது தான் அவள் கேட்டது அவனுக்கு நினைவிலாடியது.
அதே படத்தைதான் அபிராமியும் பார்த்துக் கொண்டிருந்தாள். தங்கள் முன் நின்ற இரு பிள்ளைகள் முகத்தையும் திரையை விரிவு படுத்திப் பார்த்தவளது விரல்கள் தொடு திரையை வாஞ்சையாய் தடவிப் பார்த்தது.
*****
“ம்மா… கன்னி கழியறதுனா என்னம்மா?”
“அடியேய்… கூறுகெட்ட கூதரை… இப்படியா கேப்ப?” அடிக்காத குறையாக பல்லைக் கடித்தபடி, மகளை கை பிடித்து உள்ளே இழுத்துச் சென்றார் இந்துமதி.
“ஏம்மா… தெரியாமத்தானே கேக்குறேன்?”
“மானத்தை வாங்காதடீ… உன் சித்திக எல்லாம் சிரிக்கிறாளுக! வயசுக்கு வந்தவளுக்கு இது கூடத் தெரியாதா?”
“ம்மோவ்… வயசுக்கு வர்றது எப்படின்னு கேட்டதுக்கும் இதையேதான் சொன்னீங்க. நெஞ்சுல கட்டி வளருதும்மான்னு பயந்து போய் அழுதுட்டே சொன்னதுக்கும் திட்டுனீங்க. படிக்கறவளுக்கு இதெல்லாம் தெரியாதான்னு. இதெல்லாமா ஸ்கூல்ல சொல்லிக் கொடுப்பாங்க?”
“என்னக்கா… இவள வச்சு எப்படி சுதா சமாளிக்கறாப்லைனு தெரியலையே? ஆம்பள மாதிரி ஊரச் சுத்துறான்னு சொன்னோமே. அது உண்மைதானோ? எனக்கென்னமோ சந்தேகமாவே இருக்கு. இவ என்னைக்கி குழந்தை பெத்துக்கப் போறா. இன்னும் கன்னி கழியறதுனா என்னான்னு சந்தேகம் கேட்குறா?” வெளியே சித்திகள் கை கொட்டி சிரிக்காத குறையாக எள்ளி நகையாடியது உள்ளே இருவருக்கும் கேட்காமல் இல்லை. கேட்க வேண்டும் என்றுதானே சத்தமாக பேசிக் கொள்கிறார்கள்.
அழாத குறையாக இந்துமதி தலையில் அடித்துக் கொண்டார். இன்று மகப்பேறு மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்தவள் தான் அம்மாவிடம் ஆகப் பெரிய சந்தேகத்தை கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
“இது தெரியாம என்னானுடி கல்யாணம் பண்ணி குடித்தனம் பண்ற?”
“கல்யாணம் பண்றதுக்கு முன்னாடி சமைக்கணும், கூட்டணும், பெருக்கணும், துவைக்கணும்னு எல்லாம் கத்துக்கச் சொன்னீங்க. ஆனா, இதைப் பத்தி நீங்க ஒன்னுமே சொல்லிக் கொடுக்கலையே? இன்னைக்கு அந்த டாக்டர் சொன்ன எதுவுமே எனக்குத் தெரியல” என்ற மகளைப் பார்த்த இந்துமதி தலையில் அடித்துக் கொண்டார்.
திருமணம் முடித்து, முதலிரவு அறைக்குள் அனுப்பிய அடுத்த பத்தாவது நிமிடத்தில் வாந்தி எடுத்து வெளியே ஓடி வந்தவள் தான். தனக்கு அவமானமாகிவிட்டதாக புது மாப்பிள்ளையும் இரவோடு இரவாக கோபித்துக் கொண்டு சென்றுவிட்டான். அதன் பிறகு சித்தப்பாக்கள் இருவரும், அவன் காலைப் பிடிக்காத குறையாக கெஞ்சி இவளை புகுந்த வீடு அனுப்பி வைத்தது பெரிய கதை.
இப்பொழுது நினைத்துப் பார்க்க சிரிப்பு வந்தது அபிராமிக்கும். அம்மா சொன்னது போல உண்மையிலேயே கூறுகெட்ட கூதரையாத்தான் இருந்திருக்கோம். அதனால் தான் அவன் தன்னையும், தன் குடும்பத்தையும் ஏமாற்றியது கூட தெரியவில்லை இவளுக்கு.





Epdi...en manasula irunda ella questions um apadiye kekara abi...nanum idha ellam panirken...rombave kastapatuta pola...vishwlini husband semmaya pesarar...avar sona example girls kum porudhum nu yar solrathu ..oru vati vela vandutha thirumba.... interesting episode
உங்க மனசாட்சியா அபி மாறிட்டா போல...
எல்லாரு பெண்களுக்குள்ளும் இந்த கேள்வி இருக்குன்னு தெரியுதும்மா...
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Very nice. ஏமாற்ற பட்டிருக்காள் போல தெரிகிறது.
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
இருவருக்கும் முதல் வாழ்க்கை சிறக்கவில்லை இனிமேலாவது நல்லா இருக்கணும் இருவரும்.
சூப்பர் ஆத்தர் ஜி❤️
நாமலும் அதுக்கு தான் முயற்சி பண்றோம்மா 😉
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Neenga romba late..jammuma kita kodhuta ,avanga irukara speed ku....no. 3 ready agidum pola.