arrow_back
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ! அத்தியாயம் 6

அத்தியாயம் 6

visibility 631
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (6 மதிப்பீடுகள்)
பகிர்

காலை மணி பத்து

ஜீவன் மருத்துவமனையின் பிரதான வாயிலில் சிவப்பு நிற சுழல் விளக்கு பொருத்தப்பட்ட இரண்டு அரசு இன்னோவா கார்கள் ஆராவாரமாக வந்து நின்றன.

காரிலிருந்து இறங்கியவர்கள், தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் உயர் மட்ட அதிகாரிகள்!

அவர்களுக்குத் தலைமை தாங்கி வந்தவர், மண்டல இணை இயக்குநர் டாக்டர் சண்முகசுந்தரம். அமைச்சரின் பிரத்யேகத் தனிச் செயலாளரின் அவசர உத்தரவு கையில் இருந்ததால், அவரது முகத்தில் அதிகாரம் வெளிப்படையாக தெரிந்தது.

அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்திற்கு எந்தவொரு முன் அறிவிப்பும் தராமல் நேராக உள்ளே நுழைந்தனர்.

நிர்வாக இயக்குநர் அறைக்குச் சென்ற சண்முகசுந்தரம், மேஜையில் அமர்ந்திருந்த ஜீவாவின் முன்னால் ஒரு அரசு ஆணைக் காகிதத்தை வைத்தார்.

“ஹலோ டாக்டர் ஜீவா…”

“ஹலோ டாக்டர்… வெல்கம்…” என்று புன்னகைக்க,

“சாரி ஜீவா, அரசுக்கு உங்க ஹாஸ்பிடல் மேல சில தீவிரமான புகார்கள் வந்திருக்கு. குறிப்பாக, பயோ-மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பிளட் பேங்க், ஃபார்மஸி ஸ்டாக் விதிமுறைகள் இங்க ஒழுங்கா பின்பற்றப்படலன்னு புகார். அதனால இப்போவே ஒரு விரிவான ஸ்பாட் இன்ஸ்பெக்ஷன் பண்ண வந்திருக்கோம்!”

அழுத்தமான குரலில் அவர் கூற, ஜீவா தன் இருக்கையிலிருந்து மிக நிதானமாக எழுந்து நின்றான். அவனது உதட்டோரம் மெல்லிய புன்னகை அரும்பியது.

எந்தப் பக்கமிருந்து காய் நகர்த்தப்படுகிறது என்பதை அவன் புரிந்துகொள்ள ஒரு விநாடி கூட ஆகவில்லை. ஆனால் அதை செய்வது ராஜசேகரா? ராமகிருஷ்ணனனா அல்லது இவர்களுக்கு பின்னால் வேறு யாரோவா?

“டாக்டர், அரசு அதிகாரிகளுக்கு எப்போ வேணும்னாலும் ஆய்வு செய்ய முழு உரிமை இருக்கு. நம்ம மருத்துவமனை நிர்வாகம் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தரும். வாங்க, எங்கிருந்து ஆரம்பிக்கலாம்?”

நிதானமான அவனது பதில் சண்முகசுந்தரத்திற்கு லேசான ஏமாற்றத்தையே தந்தது. அவன் பதறுவான், காலில் விழுவான், சமரசம் பேசுவான் என்று எதிர்பார்த்து வந்தவருக்கு அவனது பொறுமை சுள்ளென்று உறைத்தது.

முதலில் அவர்கள் சென்றது அவசரப் பிரிவு மற்றும் அறுவைசிகிச்சை அரங்கின் மத்திய மருந்தகம் (Central Pharmacy & Narcotic Store)!

மூன்றாம் தளத்திலிருந்த பிரதான மருந்தகத்திற்குள் அதிகாரிகளின் பட்டாளம் நுழைந்தது. அங்கே தலைமை மருந்தாளுநர் மற்றும் ஊழியர்கள் மருந்துகளின் பட்டியலைச் சரிபார்த்துக் கொண்டிருந்தனர்.

சண்முகசுந்தரத்தின் குழுவில் இருந்த உதவி மருந்து ஆய்வாளர், நேராகச் சென்று தீவிர சிகிச்சைப் பிரிவுகளுக்குப் பயன்படுத்தப்படும் அதீத வலி நிவாரணிகள் மற்றும் மயக்க மருந்துகள் வைக்கப்பட்டிருக்கும் பூட்டப்பட்ட இரும்புக் கண்ணாடி அலமாரியைத் திறக்கச் சொன்னார்.

ஷெட்யூல்டு ‘ஹெச்1’ அன்ட் நார்கொட்டிக்ஸ் ட்ரக் ரிஜிஸ்டர உடனே எடுங்க!” அதிகாரியின் குரலில் அதிகாரத் தோரணை கொப்பளித்தது.

ஷெட்யூல்டு ‘ஹெச்1’ என்பது தூக்க மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் மாத்திரைகள். போதைக்காக தவறுதலாக பயன்படுத்தக் கூடிய மாத்திரைகளின் ஸ்டாக் லிஸ்ட் தான் ஷெட்யூல்டு ‘ஹெச்1’ ரெஜிஸ்டர். அவைகளில் ஒன்று மிஸ் ஆனாலும், மருந்தகத்தையே பூட்டி சீல் வைக்க முடியும்.

மருந்தாளுநர் பதட்டத்துடன் பதிவேட்டை எடுத்து நீட்ட, ஆய்வாளர் அதன் பக்கங்களை வேகவேகமாகப் புரட்டினார்.

“நேத்து நைட் மேஜர் ஓடில நடந்த எமர்ஜென்சி கிட்னி டிரான்ஸ்பிளான்ட் சர்ஜரிக்கு மூணு ஆம்பூல் ஃபென்டனில் எடுத்ததா என்ட்ரி போட்டிருக்கீங்க… ஆனா, அதுக்கான அனஸ்தீசியாலஜிஸ்ட்டோட பிரத்யேகக் கவுண்டர்-சைன் (Counter-signature) இந்த லாக் புக்ல இன்னும் பதியப்படலையே? நைட்டே பேஷன்ட்டுக்கு மருந்து கொடுத்துட்டு, டாக்டர் கையெழுத்து வாங்காம மெத்தனம் காட்டியிருக்கீங்க… இது மிகத் தீவிரமான குற்றவியல் விதிமீறல்! என்.டி.பி.எஸ் (NDPS Act) சட்டப்படி உங்க சென்ட்ரல் ஃபார்மஸியை இப்போவே சீல் வைக்க ஆணை பிறப்பிக்க முடியும்!”

ஆய்வாளர் குரலை உயர்த்தி, அறையில் இருந்த ஊழியர்களை மிரட்டும் தொனியில் பேச, மருந்தாளுநர் நடுங்கிப் போனார்.

ஆனால், அந்த அறையின் வாசலில் சாய்ந்து நின்ற ஜீவா அமைதியாக உள்ளே நுழைந்தான்.

“டாக்டர்… ஒரு குற்றச்சாட்டை வைக்கிறதுக்கு முன்னாடி முழு நடைமுறையையும் தெரிஞ்சுக்கிட்டு பேசுங்க…”

ஜீவாவின் குரல் மிகத் தெளிவாக, அந்த அறையின் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது. அவன் தனது கோட்டின் பாக்கெட்டிலிருந்து தனது மருத்துவமனை ஐடி கார்டையும், டேப்லெட் கணினியையும் எடுத்தான்.

“ஜீவன் மருத்துவமனை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஒரு கார்ப்ரேட் மருத்துவக் கல்லூரி நிறுவனம். எங்களோட பார்மசி ‘ஹெச்.ஐ.எம்.எஸ்’ (Hospital Information Management System) க்ளவுட் சர்வரோட இணைக்கப்பட்டிருக்கு. இதோ பாருங்க…”

ஜீவா டேப்லெட்டின் திரையை அந்த ஆய்வாளரின் முகத்திற்கு முன்னால் திருப்பினான்.

“நேத்து நைட்டு மேஜர் ஓடில சீஃப் அனஸ்தீசியாலஜிஸ்ட் டாக்டர் ராஜேந்திரன் டிஜிட்டல் கீ கார்டு (Digital Biometric Key) மூலமாதான் அந்த நார்கோடிக் லாக்கரை அன்லாக் பண்ணியிருக்காரு. மருந்து எடுக்கப்பட்ட அதே நொடியில் அவரோட டிஜிட்டல் சிக்னேச்சரும் (Digital Signature), டைம் ஸ்டாம்பும் (Time Stamp) மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தோட ஆன்லைன் போர்ட்டலுக்கே ஆட்டோமேட்டிக்கா சிங்க் (Sync) ஆயிடுச்சு!

நீங்க கையில வச்சிருக்கிற இந்த மேனுவல் ரெஜிஸ்டர் வெறும் பேக்-அப் காப்பி மட்டும்தான். ஒரு எமர்ஜென்சி சர்ஜரி நடுராத்திரியில நடக்கும்போது, பேஷன்ட்டோட உயிரைக் காப்பாத்துறது முதன்மையான வேலையா… இல்ல உடனே பேப்பரைத் தேடிப் போய் கையெழுத்துப் போடுறது வேலையா?”

ஜீவாவின் கேள்விக்கு அந்த ஆய்வாளரிடம் எந்தப் பதிலும் இல்லை.

ஜீவா அங்கிருந்த இணை இயக்குநர் சண்முகசுந்தரத்தைப் பார்த்துக் கறாராகச் சொன்னான், “சுகாதாரத் துறை விதிகளின்படி, அவசர காலங்களில் 24 மணி நேரத்திற்குள் மேனுவல் பதிவேட்டில் ஒப்புதல் கையெழுத்து வாங்கினா போதும். அறுவைசிகிச்சை முடிஞ்சு இன்னும் பன்னிரண்டு மணி நேரம் கூட ஆகல… இதுல என்ன விதிமீறலைக் கண்டுபிடிச்சுட்டீங்க டாக்டர்?

உங்க பிளான் படி ஃபார்மஸியை சீல் வைக்க நினைச்சா வையுங்க… அடுத்த அரை மணி நேரத்துல சென்னை உயர்நீதிமன்றத்தோட வெக்கேஷன் பெஞ்ச்ல இந்த டிஜிட்டல் லாக்கை சமர்ப்பிச்சு, உள்நோக்கத்தோடு செயல்பட்ட அதிகாரிகளுக்கு எதிரா நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க எனக்கும் என் லீகல் டீமுக்கும் நல்லாவே தெரியும்!”

அதிகாரிகள் வாய் அடைத்துப் போயினர். சண்முகசுந்தரம் கனைத்துக் கொண்டு, “சரி… இதுல எந்தப் பிரச்சனையும் இல்ல… அடுத்த வார்டுக்குப் போவோம்…” என்று நழுவப் பார்த்தார்.

அடுத்ததாக, அவர்கள் போனது மருத்துவக் கழிவுகள் மேலாண்மை (Bio-Medical Waste Management) கூடம்.

எந்த ஒரு பெரிய மருத்துவமனையையும் மிக எளிதாக முடக்கிவிடக்கூடிய ஒரு சென்சிடிவான துறை. சிறிய தவறு நடந்தால் கூடப் பொது சுகாதாரத்திற்குக் கேடு விளைவித்ததாகக் கூறி மருத்துவமனையின் லைசென்ஸையே ரத்து செய்ய முடியும்.

அதிகாரிகள் குழு நேராக அடித்தளத்தில் இருந்த மத்திய மருத்துவக் கழிவு சேமிப்பு வளாகத்திற்குச் சென்றது. அங்கே, மஞ்சள், சிவப்பு, நீலம் மற்றும் கறுப்பு நிறங்களில் பெரிய அளவிலான மறுசுழற்சித் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

சண்முகசுந்தரம் ஒரு கறுப்பு நிறக் கையுறையை மாட்டிக்கொண்டு, மஞ்சள் நிறத் தொட்டியின் அருகே சென்றார். மனிதத் திசுக்கள், ரத்தம் படிந்த பஞ்சுகள் மற்றும் பிளாசன்டா போன்ற ஆபத்தான உடல் கழிவுகள் பிரத்யேகமாக எரிக்கப்படுவதற்காக சேகரிக்கப்படும் தொட்டி அது.

திடீரென, அந்தத் தொட்டியின் விளிம்பில் கிடந்த ஒரு பாலிதீன் பையைத் தனது இடுக்கிகளால் வெளியே எடுத்தார் ஆய்வாளர்.

உள்ளே… ரத்தம் தோய்ந்த சில பிளாஸ்டிக் சிரிஞ்சுகளும், கூர்மையான ஊசிகளும் கிடந்தன!

சண்முகசுந்தரத்தின் முகத்தில் ஒரு குரூரமான வெற்றிக் களிப்பு மின்னியது.

“ஜீவா! பயோ-மெடிக்கல் வேஸ்ட் ரூல்ஸ் 2016-ன் படி, கூர்மையான ஊசிகள் வெள்ளைக் கொள்கலனில் (White Translucent Puncture-Proof Container) மட்டுமே போடப்படணும்! அதை இந்த மஞ்சள் பைக்குள்ள ரத்தக் கழிவுகளோடு கலந்து போட்டு வச்சிருக்கீங்க! இது மிக மோசமான அஜாக்கிரதை. இந்த ஒரு ஆதாரமே போதும்… பொள்ளாச்சி மற்றும் கோவை சுற்றுவட்டாரத்தின் நிலத்தடி நீரை மாசுபடுத்திய குற்றத்திற்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலமா உங்க ஆஸ்பத்திரியோட மொத்த செயல்பாட்டையும் முடக்குறதுக்கு நான் இப்போவே நோட்டீஸ் இஸ்யூ பண்றேன்!”

சண்முகசுந்தரம் தன் பேனாவை எடுத்து நோட்டீஸில் கையெழுத்திட ஆயத்தமானார்.

அங்கே நின்றிருந்த மேற்பார்வையாளர் பயந்து போய், “சார்… நாங்க காலையில வரைக்கும் இதை ஒழுங்காதான் மெயின்டெயின் பண்ணினோம்… இது எப்படி உள்ள வந்ததுன்னு தெரியல…” என்று நடுங்க,

சண்முகசுந்தரம் ஏளனமாகச் சிரித்தார். “அதெல்லாம் கோர்ட்டுல போய் சொல்லுங்க…”

அப்போது, அடித்தளத்தின் வாயிலில் இருந்து கம்பீரமான ஒரு காலடிச் சத்தம் கேட்டது.

விஷ்வா! அவனுடன் மருத்துவமனையின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியும், ஐடி பிரிவின் மேலாளரும் கையில் ஒரு லேப்டாப்போடு வந்து நின்றனர்.

விஷ்வா நிதானமாக நடந்து வந்து சண்முகசுந்தரத்தின் முன்னால் நின்றான். அவனது கைகள் பாக்கெட்டுக்குள் இருந்தன.

“நோட்டீஸ்ல கையெழுத்துப் போடுறதுக்கு முன்னாடி… இந்த சிசிடிவி ஃபுட்டேஜை ஒருவாட்டி பார்த்துட்டா உங்க எதிர்கால அரசு வேலைக்குப் பாதுகாப்பா இருக்கும் டாக்டர்!” இறுக்கமாக கூறினான் விஷ்வா.

ஐடி மேலாளர் லேப்டாப் திரையை அதிகாரிகளுக்கு முன்னால் திறந்தார்.

அதில், அன்று காலை ஒன்பது மணிக்கு… அதாவது அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதற்குச் சரியாக நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு முன்னால் பதிவான காட்சி ஓடியது.

மருத்துவமனையின் ஹவுஸ் கீப்பிங் சீருடை அணிந்த ஒரு மர்ம நபர், தனது பாக்கெட்டிலிருந்து ரகசியமாக ஒரு பாலிதீன் பையை எடுத்து, அந்த மஞ்சள் நிறத் தொட்டிக்குள் போடுவதும்… அடுத்த சில விநாடிகளில் அவன் அடித்தளத்தின் அவசர வழி வழியே தப்பி ஓடுவதும் மிகத் துல்லியமான 4K தரத்தில் பதிவாகியிருந்தது!

விஷ்வா லேப்டாப் திரையை சுட்டிக்காட்டித் தொடர்ந்தான்: “இன்னைக்கு காலையில எங்க ஹாஸ்பிடல் ஷிப்ட்ல இல்லாத ஒரு ஆள், போலி அடையாள அட்டையை மாட்டிட்டு உள்ளே நுழைஞ்சு இந்த வேலையைப் பண்ணியிருக்கான். அவனை எங்க செக்யூரிட்டி டீம் ஏற்கனவே கேம்பஸ் மெயின் கேட்ல வச்சுப் பிடிச்சு விசாரிச்சாச்சு. அவன் பெயர் குமார்… ராஜசேகரோட ரியல் எஸ்டேட் ஆபீஸ்ல டிரைவரா வேலை பார்க்கிறவன்!”

சண்முகசுந்தரத்தின் முகம் சாம்பல் நிறத்தில் வெளுத்துப்போனது. அவரது கையில் இருந்த பேனா நழுவி கீழே விழப் பார்த்தது.

விஷ்வா அதிகாரியின் முகத்திற்கு மிக அருகில் வந்து நின்றான்.

“சுகாதாரத் துறையோட இணை இயக்குநர்ங்கிற கௌரவமான பதவியில உட்கார்ந்துகிட்டு… ஒரு கிரிமினல் அரசியல்வாதி சொல்றான்னு கேட்டு, ஹாஸ்பிடலுக்குள்ள ஆளை விட்டு ஆதாரத்தை பிளான்ட் பண்ணி ஃபிரேம் பண்ணப் பார்த்தீங்களா டாக்டர்?”

விஷ்வாவின் அந்தக் கடுமையான அதட்டலில் ஆய்வுக் குழுவே நடுங்கிப் போனது.

ஜீவா முன்னேறி வந்தான். அவனது குரல் மிகத் தீர்க்கமாக ஒலித்தது:

“இந்த வீடியோ ஆதாரம், அந்த ஆள் கொடுத்த வாக்குமூலம், இப்போ நீங்க கையில் வச்சிருக்கிற நோட்டீஸ்… அத்தனையையும் எடுத்துட்டு என் லாயர் இப்போவே சிபிசிஐடி ஆபீஸுக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் கிளம்பிட்டாரு. அரசுப் பணியைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு முன்னணி மருத்துவமனையின் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியதற்காக, உங்க சர்வீஸ் இன்னையோட முடிவுக்கு வரப்போகுது மிஸ்டர் சண்முகசுந்தரம்!”

சண்முகசுந்தரத்திற்கு நாக்கு வறண்டு போனது. கைகள் தன்னிச்சையாக நடுங்கின. யாரோ கொடுத்த வாக்குறுதியை நம்பி வந்து, தன் முப்பது வருட அரசுப் பணியையே பணயம் வைத்துவிட்டோமே என்ற பயம் அவரது கண்களில் வழிந்தது.

“டா… டாக்டர் ஜீவா… தப்பா எடுத்துக்காதீங்க… மேலிடத்துல இருந்து வந்த பிரஷர்… எனக்கு வேற வழி தெரியல…” அவர் பதட்டத்துடன் கைகூப்பினார்.

“மேலிடத்துல பிரஷர் இருந்தா ராஜினாமா பண்ணிட்டுப் போங்க… அதை விட்டுட்டு லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் வந்து போற ஒரு ஹாஸ்பிடல கெடுக்க பார்க்காதீங்க!” ஜீவா மிகக் கறாராக எச்சரித்தான்.

“வந்த வழியைப் பார்த்துட்டு, ‘ஆய்வு திருப்திகரமாக இருந்தது’ன்னு என்ட்ரி போட்டுட்டு மரியாதையா கிளம்புங்க… இல்ல, இன்னைக்கு நைட்டு உங்க வீட்டு வாசல்ல போலீஸ் ஜீப் வந்து நிக்கும்!” விஷ்வா வழியைக் காட்டினான்.

சண்முகசுந்தரத்துக்கும் அவரது குழுவினருக்கும் அடுத்த வினாடி அங்கே நிற்கத் துணியவில்லை. ஒரு வார்த்தை கூடப் பேச முடியாமல், தலைகுனிந்தபடி காரை நோக்கி சென்றனர்.

அவர்கள் சென்றதும், அடித்தளத்தின் வாயிலில் நின்றிருந்த ஜீவாவும் விஷ்வாவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“முதல் அடி வச்சிருக்கானுங்க விஷ்வா…” ஜீவா பெருமூச்சு விட்டான்.

“அடுத்தது என்ன பண்ணுவானுங்கன்னு நம்ம யோசிக்கணும்…” விஷ்வா நிதானமாகக் கூறினான்.

***

கார்டியாலஜி எச்.ஓ.டி கேபினில் ஏர் கண்டிஷனரின் மெல்லிய இரைச்சலைத் தவிர வேறு சத்தமில்லை.

மேஜையின் மீது அடுக்கப்பட்டிருந்த ஆவணங்களின் மேல் விஷ்வாவின் விரல்கள் அழுத்தமாகப் படிந்திருந்தன. ஜெர்மனியிலிருந்து சென்னை துறைமுகம் வந்து சேர்ந்த ‘பைபிளேன் கார்டியாக் ஆஞ்சியோகிராபி’ மற்றும் எக்மோ (ECMO) மெஷின்கள் கோவைக்கு வந்து சேர வேண்டிய நேரம் கடந்து போயிருந்தது.

மத்திய அரசின் கதிரியக்கப் பாதுகாப்பு தணிக்கை (AERB) வரை எல்லாம் கச்சிதமாக முடிந்திருந்த கோப்பில், மாநில சுகாதாரத் துறையின் ‘லோக்கல் சைட் கிளியரன்ஸ் சர்ட்டிஃபிகேட்’ மட்டும் திடீரென ‘ஹோல்ட்’ செய்யப்பட்டிருந்தது. எந்தக் காரணமும் இல்லை.

‘உயர் மட்ட தொழில்நுட்ப மறுஆய்வு நிலுவையில் உள்ளது’ என்ற ஒற்றை வரி மட்டுமே சென்னை இயக்குநரகத்திலிருந்து வந்த குறிப்பில் இருந்தது.

கதவைத் தள்ளிவிட்டு உள்ளே வந்த ஜீவா, எதிரில் இருந்த சுழல் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவனது கையில் ஒரு பைல் இருந்தது.

“விஷ்வா… டி.எம்.எஸ் ஆபீஸ்ல இருந்து நம்ம லீகல் டீமுக்கு வந்த நோட் இது. இன்ஸ்பெக்ஷன்ல ஒண்ணும் புடுங்க முடியலன்னதும், நேரா உன்னோட டிபார்ட்மென்ட்ல கை வச்சிருக்கானுங்க ராஜசேகர், ராமகிருஷ்ணன் அன்ட் கோ.”

விஷ்வா நிமிர்ந்து பார்க்கவில்லை. கையிலிருந்த பேனாவை மேஜை மீது ‘டக்’கென்று வைத்தான். அவனது முகத்தில் எந்தப் பதட்டமும் இல்லை; மாறாக, அவனுக்கே உரிய அந்த இறுக்கம் படர்ந்திருந்தது.

“அவன் கை வச்சது என் டிபார்ட்மென்ட்ல இல்ல ஜீவா… தியேட்டருக்குப் போக வேண்டிய அந்த ஆறு வயசுப் பையன் கவின் மேல. காம்ப்ளக்ஸ் கன்ஜெனிட்டல் அனோமலி… அந்த மிஷின் இல்லாம அந்தப் பிஞ்சோட ஹார்ட்ல என்னால கை வைக்க முடியாது. ஒரு அசிங்கமான ஈகோவுக்காக ஒரு குழந்தையோட உயிரை பணயம் வைக்கிற அளவுக்கு நம்ம சிஸ்டம் கேவலமாப் போச்சு.”

விஷ்வா கத்தவில்லை. ஆனால், அதில் இருந்த அழுத்தம் எதிரில் அமர்ந்திருந்த ஜீவாவுக்கே சுள்ளென்று உறைத்தது.

“விடுடா… நம்ம சுந்தரராஜன் சார் ஹைகோர்ட்டோட மெடிசினல் எமர்ஜென்சி பெஞ்ச்ல இத மென்ஷன் பண்ணிட்டாரு. ஆல்ரெடி சென்ட்ரல் போர்டு என்.ஓ.சி இருக்கிறதால, ஸ்டேட் கவர்மெண்ட்டோட இந்த அனாவசியமான தாமதத்துக்கு எதிரா நாளைக்கு மதியத்துக்குள்ள ஸ்பெஷல் டைரக்ஷன் வாங்கிடுவாரு. கோர்ட் ஆர்டரை மீறி அவனுங்களால ஒரு மணி நேரம் கூட அந்த லாரியை போர்ட்ல தடுத்து நிறுத்த முடியாது. நீ ரிலாக்ஸ்டா இரு.”

“ஆர்டர் வர்ற வரைக்கும் அந்தப் பையனோட பல்ஸ் நிக்காம இருக்கணுமே ஜீவா…”

விஷ்வா நாற்காலியில் பின்னால் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டான். அவனது தாடை இறுகியிருந்தது. எந்தச் சூழலிலும் உணர்ச்சிகளை வெளியில் காட்டாத அவனது அந்த இறுக்கம், அவன் எவ்வளவு பெரிய அழுத்தத்தைச் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதைக் காட்டியது.

அறைக்கதவை மெல்ல தட்டினாள் மது!

“மே ஐ கம் இன் சார்…”

“எஸ்…” என்று விஷ்வா குரல் கொடுக்க வந்தார்கள், ப்ரவலிகாவும் மதுபாஷினியும். இருவரது கைகளிலும் ஐசியூ ரவுண்ட்ஸ் எடுத்த கேஸ் ஷீட்கள் இருந்தன.

ஜீவா நிமிர்ந்து, “கேஸ் ஷீட்ஸ் எல்லாம் என்ட்ரி போட்டாச்சா ப்ரவா?” எனக் கேட்டான்.

“எஸ் சார். போஸ்ட்-ஆப் வார்டுல மாணிக்கத்தோட கிராஃப்ட் ஃபங்ஷன் நார்மலா இருக்கு. சீரம் கிரியேட்டினின் 1.2 க்கு டிராப் ஆயிடுச்சு. ஐசியூல அந்த கவினுக்கு மட்டும் ஆக்சிஜன் சாச்சுரேஷன் லேசா ஃப்ளக்சுவேட் ஆகுது… டாக்டர் விஷ்வா சாரோட நோட்ஸுக்காக ஃபைல் கொண்டு வந்தோம்…”

ப்ரவா ஃபைலை நீட்ட, ஜீவா அதை வாங்கிப் பார்த்தான்.

அப்போது, மதுவின் பார்வை விஷ்வாவின் மீது நிலைத்திருந்தது. காலையிலிருந்தே அவன் யாரோடும் பேசாமல், முகத்தில் ஒருவிதக் கடுகடுப்புடனே வலம் வருவது அவளுக்கும் தெரிந்திருந்தது. அவனது இறுக்கமும், கறாரான சுபாவமும் அவளைக் கவர்ந்தன. ஆனால் அதே நேரத்தில், அதை உடைத்து அவனிடம் ஒரு மெல்லிய புன்னகையையாவது வரவழைத்துவிட வேண்டும் என்ற பைத்தியக்காரத்தனமான ஆசையும் அவளுக்குள் துளிர் விட்டிருந்தது.

மது மெல்ல ஓரடி முன்னால் வைத்தாள். வழக்கமான தன் குறும்பான குரலில்,

“சார்… கவின் பையனோட அம்மா காலையில இருந்து அழுதுட்டே இருக்காங்க. நீங்க ஒருவாட்டி வந்து அந்தப் பையனைப் பார்த்தா அவங்களுக்கு நம்பிக்கை வரும்னு சொன்னாங்க. நீங்க அங்க போறதுக்கு முன்னாடி… கொஞ்சம் உங்க முகத்துல இருக்கிற இந்த ரியாக்ஷனை மாத்திட்டுப் போனா தேவலை… இல்லைன்னா அவங்க இன்னும் பயந்துடப் போறாங்க…”

அவள் பேசி முடித்து லேசாகச் சிரித்தாள்.

அவனது மௌனத்தை உடைத்து, இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம் என்று நினைத்துதான் அவள் அப்படிச் சொன்னாள்.

ஆனால், அவள் பேசி முடித்த அடுத்த வினாடி…

விஷ்வா கண்களைத் திறந்து அவளைப் பார்த்தான்!

அந்தப் பார்வையில் துளியும் புன்னகையோ, தோழமையோ இல்லை. அவளை சுட்டுப் பொசுக்கின.

“டாக்டர் மதுபாஷினி…”

அவனது குரல் மிகத் தாழ்ந்த ஸ்தாயில் ஒலித்தது.

“இது ஹாஸ்பிடல். இங்கே ஒவ்வொரு நிமிஷமும் சாகக் கிடக்கிற உயிர்களை மீட்டெடுக்க நாம போராடிட்டு இருக்கோம். அதுக்கு நடுவுல நின்னுகிட்டு… என் முகத்துல என்ன எக்ஸ்பிரஷன் இருக்கணும்னு சொல்றதுக்கு நீங்க யாரு?”

மதுவின் முகத்திலிருந்த புன்னகை அடுத்த கணமே உறைந்து போனது.

“சார்… இட்ஸ் ஜஸ்ட் எ…” அவள் திணறிப் பின்வாங்கப் பார்க்க,

விஷ்வா அவளது பேச்சை அப்பட்டமாக வெட்டி எறிந்தான்.

“ஜோக் அடிக்கிறதுக்கு இது காலேஜ் கேன்டீன் இல்ல! அங்கே ஐசியூல ஒரு குழந்தையோட சாச்சுரேஷன் இறங்கிட்டு இருக்குன்னு ஃபைல் கொண்டு வந்திருக்கீங்க. ஒரு டாக்டரா அந்தப் பையனோட ஏபிஜி (ABG) வேல்யூ என்ன, பொட்டாசியம் லெவல் என்னன்னு என்கிட்ட டிஸ்கஸ் பண்ணத் துப்பில்ல… ஆனா என் முகத்தைப் பத்தி கமென்ட் அடிக்கிறீங்க? திஸ் இஸ் நாட் எ ஜோக்! சீனியர் டாக்டர்ஸ்கிட்ட எப்படி பிஹேவ் பண்ணனும், ப்ரொஃபஷனலிசம்னா என்னன்னு இன்னும் கத்துக்கலன்னா… யூ ஆர் அன்பிட் டு பி இன் மை கார்டியாலஜி யூனிட்! கெட் அவுட்!”

விஷ்வா கத்தவில்லை. ஆனால், அவன் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் செருப்பாலடிப்பது போல மதுவின் கன்னத்தில் அறைந்தது.

அவன் நாற்காலியை விட்டு எழுந்து, மேஜை மீது கிடந்த கவினின் ஃபைலை கையில் எடுத்துக்கொண்டு, யாரையும் திரும்பிப் பார்க்காமல் நீண்ட எட்டுகளோடு அறையை விட்டு வெளியேறினான்.

அவன் போன வேகத்தில் கேபினின் கதவு ‘டப்’பென்று சாத்திக்கொண்டது.

அறையில் நிசப்தம் கவிழ்ந்தது.

மது அப்படியே சிலையாக நின்றுவிட்டாள். அவளது கண்கள் கலங்கி, கண்ணீர் துளிகள் கன்னங்களில் வழியத் தொடங்கின. ப்ரவா, ஜீவாவின் முன்னிலையில் அவன் தன்னை இந்த அளவுக்கு அசிங்கப்படுத்துவான் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவளது உதடுகள் அவமானத்திலும் அழுகையிலும் நடுங்கின.

ஜீவா ஒரு கணம் சங்கடத்தோடு அவளைப் பார்த்தான்.

“மது… அவன் மிஷின் விஷயத்துல ரொம்ப டென்ஷன்ல இருக்கான். மத்தபடி வேற ஒண்ணுமில்ல… நீங்க கிளம்புங்க…” ஜீவா இதமாகச் சொல்லிச் சூழலை மாற்ற முயன்றான்.

ஆனால் மதுவால் அங்கே ஒரு நொடி கூட நிற்க முடியவில்லை. தலையைக் குனிந்தபடி, கண்ணீரைத் துடைத்துக்கொண்டு கேபினை விட்டு வெளியேறினாள்.

“சாரி சர்…” ஜீவாவை பார்த்துக் கூறிய ப்ரவா, “மது… நில்லு…” என்றபடி பதறியடித்துக்கொண்டு அவளது பின்னால் ஓடினாள்.

நான்காம் தளத்தின் ஃபயர் எக்சிட்டின் படிக்கட்டு பகுதிக்கு வந்த மது, சுவரில் சாய்ந்து நின்று கொண்டு, முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டு கதறி அழத் தொடங்கினாள்.

“மது… ஏய் லூசு, எதுக்குடி இப்ப இப்படி அழுது சீன் போடுற?” ப்ரவா அவளது தோளைப் பற்றித் திருப்பினாள்.

“நான் என்ன அப்படி தப்பா கேட்டுட்டேன் ப்ரவி?” மதுவின் குரல் விம்மலில் உடைந்தது. “ஜஸ்ட் ஜோக் தான? அதுக்கு இவ்வளவு அசிங்கப்படுத்தணுமா? ராட்சசன் அவன்… மனுஷனே இல்ல!”

மது தன் இடுப்பில் சொருகியிருந்த ஸ்டெதாஸ்கோப்பை ஆத்திரத்தோடு கழற்றி எறியப் பார்க்க, ப்ரவா சட்டென்று அவளது கையைப் பிடித்துத் தடுத்தாள்.

“லூசு மாதிரி பண்ணாத மது! அவரோட நிலைமை உனக்கு புரியல…”

“என்ன புரியல? எனக்கு ஒண்ணுமே புரிய வேண்டாம்…” மது உதட்டைக் கடித்துக்கொண்டு மீண்டும் அழுதாள்.

ப்ரவா அவளது தோள்களை ஆதரவாக அணைத்துக்கொண்டாள். அவளது கண்களில் மதுவின் மீதான பரிவும், விஷ்வாவின் குணம் மீதான ஆழமான புரிதலும் தெரிந்தன.

“மது… அழறதை நிறுத்திட்டு நான் சொல்றதைக் கொஞ்சம் காது குடுத்துக் கேளு. அவர் கோபப்பட்டது உன் மேல இல்ல… அந்த கவின் பையனுக்கு ஏதாவது ஆனா, அந்த வலியை அவர் மனசுதான் காலம் முழுக்கச் சுமக்கும். அந்தத் தவிப்புல டாக்டர் விஷ்வா இருக்கும்போது, நீ போய் அப்படி ஜோக் பண்ணலாமா?”

“அதுக்காக… இவ்வளவு ரூடா பேசணுமா ப்ரவி?” மது கண்ணீரைத் துடைத்தபடி கேட்டாள்.

ப்ரவா மெல்லிய குரலில் சொன்னாள், “அவரோட பௌண்டரிஸை நீ ஒரு ஜோக் அடிச்சு ஒரே நாள்ல உடைச்சிட முடியாது மது. மத்த ஜூனியர்ஸ் எல்லாருமே அவர்கிட்ட இருந்து ஒரு இடைவெளி விட்டுத்தான் நிக்கிறாங்க. ஆனா நீ அந்த எல்லைக்கோட்டைத் தொட நினைக்கும்போது, அவர் இப்படி டிபன்ஸிவா ரியாக்ட் பண்றது சகஜம்தான்… இல்லையா?”

மது ப்ரவாவை இமைக்காமல் பார்த்தாள். “அப்போ அவரை என்னால…” என்று ஆரம்பித்தவள், முடிக்காமல் ஒரு மெல்லிய புன்னகையோடு பார்க்க,

ப்ரவா லேசாகப் புன்னகைத்தாள்.

“உனக்கு சூடு, சொரணையே இல்லைன்னு காட்டுற! ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் மது… நீ டாக்டர் விஷ்வாவை நெருங்கணும்னா, அவருக்கு முன்னாடி ஜோக்கரா போய் நிக்கக் கூடாது. ஒரு திறமையான டாக்டரா அவரோட டென்ஷனைப் புரிஞ்சிட்டு, அந்த கேஸுக்கு என்ன தேவையோ அதைத் துல்லியமா செஞ்சு அவரோட நம்பிக்கையை சம்பாதிக்கணும். அவர் ஹார்ட் வொர்க்கர்… தன் வேலையில நேர்மையா, பெர்ஃபெக்ட்டா இருக்கிறவங்களை மட்டும்தான் அவர் மதிப்பார். அதை விட்டுட்டு அவரோட மூட் சரியில்லாத நேரத்துல போய் இப்படி வம்பிழுத்தா, இப்படித்தான் வாங்கிக் கட்டிக்கணும்!”

ப்ரவாவின் அந்தத் தெளிவான பார்வை மதுவையும் தெளிவாக்கியது. அழுததால் சிவந்திருந்த முகத்தைத் துடைத்துக்கொண்டு, அவள் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டாள்.

“நான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேனோ…” மது மெதுவாகக் கேட்டாள்.

“கொஞ்சம் இல்ல… ரொம்பவேதான்! இப்போ ஒழுங்கா முகத்தைக் கழுவிட்டு வா. ஐசியூல கவினுக்கு எக்கோ எடுக்கிறப்போ நீயும் கூட இரு. விஷ்வா சார் திட்டுனதை மனசுல வச்சுக்காம, வேலையில பெர்ஃபெக்ட்டா இரு. எல்லாம் தானா மாறும்…” ப்ரவா அவளது கன்னத்தைத் தட்டிச் சிரித்தாள்.

மது தலையசைத்தாள்.

காதலுக்குக் கண், காது, மூக்கு, வாயோடு சுரணையும் இல்லை போல!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 7

அன்றைக்கு ஊரில் கொண்டாட்டம் களைக்கட்டிக் கொண்டிருந்தது. பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரத்தின் பெருமை பேசும் ரேக்ளா பந்தயம்!வீட்டில் பெரியவர்கள் அனைவரும் ஊத்துக்குளி பங்காளி வீட்டு விசேஷத்திற்குக் காலையிலேயே கிளம்பிவிட்டதால், தோப்பு முழுக்க இந்த மூன்று வாண்டுகளின் கைவசமாகியிருந்தது.வரப்பில் காய்ந்த பனைமட்டையை இழுத்துப் போட்டு,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 7

  1. Vinna Vinna பத்தி 1 காலை மணி பத்துVinna Vinna

    😂🤣செம விஷ்வா செமை திட்டுனான் அதுல ஒரு அர்த்தம் இருந்தது... ஜோக் அடிக்க இதுவா நேரம்.. நீங்க நர்சா டாக்டரா?சிஸ்.. இவ்ளோ விஷயம் செமைய எக்ஸ்பிளைன் பண்ணுகிறீர்கள் ❤️❤️செமையா போகுது ஸ்டோரி.. விஷ்வாக்கு மது ஜோடிதான் தாங்க முடியல 🤧பப்பியா போட்டு இருக்கலாம்...

  2. Girijapriya பத்தி 31 உங்க பிளான் படி ஃபார்மஸியை சீல் வைக்க நினைச்சா வையுங்க… அடுத்த அரை மணி நேரத்துல Girijapriya

    Jeeva❤️❤️❤️

  3. Girijapriya பத்தி 51 விஷ்வா லேப்டாப் திரையை சுட்டிக்காட்டித் தொடர்ந்தான்: “இன்னைக்கு காலையில எங்க ஹாஸGirijapriya

    Vishwa❤️❤️❤️

  4. Girijapriya பத்தி 126 காதலுக்குக் கண், காது, மூக்கு, வாயோடு சுரணையும் இல்லை போல!Girijapriya

    Yes...kadhal ku suranai irrukadhu😏 nice intresting ud sis ❤️

  5. amuthu gowri பத்தி 99 “ஜோக் அடிக்கிறதுக்கு இது காலேஜ் கேன்டீன் இல்ல! அங்கே ஐசியூல ஒரு குழந்தையோட சாச்சamuthu gowri

    Nice conversation

  6. Gowri Srinivasanபொதுக் கருத்துGowri Srinivasan

    அப்ப விஷ்வா - மது தான் ஜோடியா🤔🤔🤔🤔
    நா கூட ப்ரவா - விஷ்வா ஜோடி ஆவாங்கனு நினைச்சிட்டேன்......

உங்கள் கருத்தைப் பகிருங்கள்