அத்தியாயம் 7
அன்றைக்கு ஊரில் கொண்டாட்டம் களைக்கட்டிக் கொண்டிருந்தது. பொள்ளாச்சி, ஆனைமலை வட்டாரத்தின் பெருமை பேசும் ரேக்ளா பந்தயம்!
வீட்டில் பெரியவர்கள் அனைவரும் ஊத்துக்குளி பங்காளி வீட்டு விசேஷத்திற்குக் காலையிலேயே கிளம்பிவிட்டதால், தோப்பு முழுக்க இந்த மூன்று வாண்டுகளின் கைவசமாகியிருந்தது.
வரப்பில் காய்ந்த பனைமட்டையை இழுத்துப் போட்டு, அதில் குதிரை ஓட்டுவது போல ஏறி அமர்ந்து ‘டக் டக்’ என சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் தம்பி மாமா.
அருகில், வாய்க்கால் வரப்பில் அமர்ந்து கையில் இருந்த குச்சியால் மண்ணில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான் பெரியவன். அவனது தோளைப் பிடித்தபடி நின்றிருந்தாள் நான்கு வயதுப் பாப்பி. அவளது குட்டி இரட்டை ஜடைகள் காற்றில் முன்னும் பின்னும் ஆடின.
“டேய் மச்சான்… சத்தம் கேக்குதா இல்லையா? பந்தய மாடுங்க எல்லாம் களத்துக்கு வந்துடுச்சு போலிருக்குடா! இன்னும் இங்கயே நின்னுகிட்டு என்ன பண்றது? கெளம்புடா!” பனைமட்டையைத் தூக்கி எறிந்துவிட்டுத் துள்ளினான் தம்பி மாமா.
“இருடா… நாம போறது வீட்ல தெரிஞ்சா பொளந்துடுவாங்க. விசேஷத்துக்குப் போனவங்க எப்ப திரும்பி வருவாங்கன்னு தெரியாது…” பெரியவன் நிதானமாய் யோசித்தான்.
“அவங்க வர சாயந்தரம் ஆகிரும்டா! நாம அதுக்குள்ள பந்தயத்தைப் பார்த்துட்டு ஓடி வந்திரலாம். வாடா…”
அவர்கள் பேசியதைக் கேட்ட பாப்பியின் கண்கள் படபடவென விரிந்தன.
“பந்தயத்துக்கா போறீங்க? நானும் வருவேன்!”
அவளது பிஞ்சுக் குரல் அந்த அமைதியான தோப்பில் அதிகாரமாய் ஒலித்தது.
தம்பி மாமா முறைத்தான். “நீ எங்கடி வர்ற? அங்கெல்லாம் ஒரே கூட்டமா இருக்கும். மாடுங்க மிரண்டு ஓடும்… உன்னை மாதிரி குட்டிப் பாப்பாங்களை எல்லாம் அங்க கூட்டிட்டுப் போக மாட்டாங்க. ஒழுங்கா மாரியாத்தா கூட விளையாடு போ!”
“மாட்டேன்! போடா… நீ என்னை கூட்டிட்டுப் போகலன்னா, நான் அப்பாயிகிட்ட சொல்லிடுவேன்!” பாப்பி தன் கறுப்பு விழிகளை உருட்டி மிரட்டினாள். அவளது கீழ் உதடு அழுகையின் எல்லைக்குச் சென்று பிதுங்கியது.
“அடிப்பாவி… என்னை மிரட்டுறியா? போன வாரம் ஆத்துப்பக்கம் போனதை கெழவிகிட்ட போட்டுக் கொடுத்து எனக்கு அர்ச்சனை வாங்கித் தந்த… இன்னைக்கும் அதே வேலையப் பாக்கறியா?” தம்பி மாமா தலையிலடித்துக் கொண்டு எகிறினான்.
“ஆமாடா… கூட்டிட்டுப் போனா மாட்டி விட மாட்டேன்… விட்டுட்டுப் போனா, ‘தம்பி மாமாதான் அண்ணாவ கூட்டிட்டு போனான்’னு ரெண்டு மடங்கு சேத்துச் சொல்லுவேன்!” பாப்பி இடுப்பில் இரு கைகளையும் வைத்துச் சவால் விட்டாள்.
“டேய் மச்சான், இவள லேசுல சமாளிக்க முடியாதுடா… இவ சத்தம் போட்டு அழுதுட்டா மாரியாத்தா வேற ஓடிவந்துடுவா, அப்புறம் நம்ம பிளானே மொத்தமா அம்போதான்!” பெரியவன் ரகசியக் குரலில் எச்சரித்தான்.
“அண்ணா… மாடு பாக்க நானும் வரணும்… என்னையும் தூக்கிட்டுப் போண்ணா!” என்று பாப்பி சட்டென்று பெரியவனின் காலைக் கட்டிக்கொண்டு செல்லமாகப் சிணுங்கினாள்.
பெரியவன் குனிந்து பாப்பியின் கையைப் பற்றினான். “பாப்பிக்குட்டி… அங்கே பயங்கரமான புழுதியா இருக்கும்டா. மாடுங்க பக்கத்துல போனா உனக்கு பயமா இருக்கும்…”
“எனக்கு பயமே இல்லண்ணா! நான் உன் கைய கெட்டியா பிடிச்சுப்பேன்… ப்ளீஸ் ண்ணா… நானும் மாடு பாக்கணும்…” அவள் பெரியவனின் சட்டைக் காலரைப் பிடித்துத் தொங்கினாள்.
அவளது கெஞ்சலுக்கு முன்னால் பெரியவனின் அத்தனை கண்டிப்பும் கரைந்து போனது. அவன் தம்பி மாமாவைப் பார்த்து, “சரிடா… சைக்கிள்ல நடுவுல உட்கார வச்சு கூட்டிட்டுப் போயிரலாம். அவளை விட்டுட்டுப் போனா அழுதுட்டே இருப்பா…” என்றான்.
“உன் செல்லம் தான்டா அவளை இப்படி ஆக்கி வச்சிருக்கு! சரி தொலைங்க… எதாவது ஆச்சுன்னா நீதான் அத்தைக்கிட்ட அடி வாங்கணும்!” தம்பி மாமா முணுமுணுத்தபடி, மோட்டார் கொட்டகையில் சாய்ந்து நின்றிருந்த பழைய அட்லஸ் சைக்கிளை உருட்டி வந்தான்.
முன்னால் கம்பியில் பாப்பியை வசதியாக அமர வைத்து, அவள் கீழே நழுவிவிடாதபடி பெரியவன் தனது உடலோடு அவளை அரணாய் அணைத்துப் பிடித்துக்கொள்ள, தம்பி மாமா சீட்டின் மீது அமர்ந்து விசைத்துப் பெடலை மிதித்தான்.
செம்மண் புழுதியைக் கிளப்பியபடி அந்த சைக்கிள் ஆனைமலை எல்லையை நோக்கிப் பறந்தது.
ரேக்ளா களம் அமைக்கப்பட்டிருந்த அந்தப் பரந்த தார்ச்சாலைக்கு வந்தபோது, அங்கே ஒரு மனிதக் கடல் திரண்டிருந்தது. சாலையின் இருபுறமும் தென்னை மரங்களின் நிழல்களிலும், வரப்புகளிலும் மக்கள் முண்டியடித்துக் கொண்டு நின்றனர்.
அங்கே நின்ற காளைகள் ஒவ்வொன்றும் சிம்மங்களைப் போலத் திமிறிக் கொண்டிருந்தன. கொம்புகளில் பூசப்பட்டிருந்த மஞ்சள், சந்தனம்… கழுத்துச் சலங்கைகளின் ‘கலீர் கலீர்’ ஒலி… மூக்கணாங்கயிற்றை இழுத்துப் பிடித்து அடக்க முடியாமல் நின்ற வர்களின் வியர்வை வழியும் முகங்கள்… அனைத்தும் அந்த இடத்தையே கொண்டாட்டத்தின் உச்சத்தில் வைத்திருந்தன.
“ஹை… மாடு! எவ்வளவு பெருசா இருக்கு!” பாப்பி பெரியவனின் கையைப் பிடித்துக்கொண்டு எம்பினாள்.
“பாப்பி… காலை ஆட்டாதடி… இங்கேயே நில்லு…” பெரியவன் அவளைத் தன் உடலோடு இன்னும் நெருக்கமாக இழுத்துப் பிடித்துக்கொண்டான்.
அப்போது, தூரத்தில் பந்தயத் தொடக்கப் புள்ளியில் வெடிச் சத்தம் ‘டமார்’ என வெடித்தது!
பச்சைக்கொடி காற்றில் மின்னியது.
அடுத்த வினாடி… பூமி அதிர்வது போல மாபெரும் இரைச்சல் கிளம்பியது!
“ஹொய்… ஹொய்… வுட்ரா… வுட்ரா!”
இளைஞர்களின் வெறித்தனமான கூச்சலோடு, வரிசையாக நின்ற ரேக்ளா வண்டிகள் புழுதியைக் கிழித்துக்கொண்டு சீறிப் பாய்ந்தன!
காளைகளின் குளம்படி ஓசை நிலத்தை அதிர வைத்தது. இரு சக்கர வண்டிகள் தரையோடு தரையாகப் பறக்க, திமில்கள் குலுங்க, கண்களில் வெறியோடு காளைகள் அந்தத் தார்ச்சாலையைத் தங்களின் காலடியில் சுருட்டிக் கொண்டிருந்தன.
மக்கள் எழுப்பிய ஆரவாரமும், விசிலும் வானைப் பிளந்தது.
தம்பி மாமா கூட்ட நெரிசலில் எம்பி எம்பிக் குதித்தான்.
பாப்பியின் கண்கள் ஆச்சரியத்திலும் லேசான திகைப்பிலும் விரிந்திருந்தன. அந்த மாடுகளின் வேகமும், கூட்டத்தின் அலைக்கழிப்பும் அவளுக்குப் புது உலகமாய் இருந்தது. பயத்தில் அவள் பெரியவனின் சட்டையைத் தன் பிஞ்சுக் கைகளால் சுருட்டிப் பிடித்துக் கொண்டாள்.
பெரியவன் அவளது தலையைக் கோதி, “பயப்படாத பாப்பிக்குட்டி… அண்ணன் இருக்கேன்ல…” என்று அவளது செவிகளில் கிசுகிசுத்தான்.
பந்தய எல்லைக் கோட்டை ஊத்துக்குளி வண்டி புழுதி பறக்க முதல் ஆளாகக் கடந்த போது, அந்த இடமே ஆர்ப்பரிப்பில் மூழ்கியது.
பந்தயம் முடிந்து, வெற்றியாளர்களின் ஆரவாரம் அடங்கத் தொடங்கியபோது, உச்சி வெயில் தலைக்கு மேலே சுள்ளென்று இறங்கியது. உடம்பெல்லாம் புழுதியும் வியர்வையுமாக மூவரும் நின்றனர்.
“அப்பாடா… தாகம் தொண்டையை அடைக்குதுடா. வா சீக்கிரம் போகலாம்…” தம்பி மாமா சட்டைக் கையால் நெற்றி வியர்வையைத் துடைத்தான்.
“ஆமாடா… எல்லாரும் வர்றதுக்குள்ள நாம வீட்டுக்குப் போயிடணும். கிளம்பு…” பெரியவன் அவசரப்படுத்தினான்.
பாப்பியை மீண்டும் சைக்கிள் கம்பியில் ஏற்றி அமர வைத்தனர். பந்தயத்தைப் பார்த்த பிரமிப்பும், மதிய வெயிலின் அயர்ச்சியும் அவளது கண்களில் மெல்லிய தூக்கமாய் இறங்கத் தொடங்கியிருந்தது.
ஆனால், அந்தப் பிஞ்சுகளுக்குத் தெரிந்திருக்கவில்லை…
மண்ணைக் கிளறிப் பாய்ந்த அந்த ரேக்ளா காளைகளின் புயலை விடவும், பல மடங்கு கொடூரமான புயல், தங்களின் வாழ்வை சுழன்றடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை அறியாமல் மூவரும் வீட்டை நோக்கிச் சைக்கிளில் பறந்து கொண்டிருந்தனர்.
***
வெகு நாட்களுக்குப் பின் அவனை கண்ட சந்தோஷத்தில் ஓடிவந்து அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு அவன் மேல் தொங்கினாள் அவள்.
“ஹேய் பார்த்து பார்த்து…” என்று சொன்னாலும் அவனது குரலிலும் சந்தோஷம் ததும்பி வழிந்தது.
“அதெல்லாம் முடியாது மாமா… உன்ன பார்த்தாலே சில்லுன்னு இருக்கு…” என்றவளின் குரலில் போதை. அவளது அந்த குரலுக்காகவே ஓடி வருவான் அவன்.
வேறென்ன வேண்டும் அவனுக்கு. அவளின் இந்த அண்மையை விட!
அவளது அண்மைக்காக துடிக்கும் அவனது ஆண்மையை அவனால் இத்தனை நாட்களாக கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அவள் வேண்டும் வேண்டும் என்று கேட்கும் அவனது நெஞ்சத்தை என்ன சொல்லி சமாளிப்பது?
“எனக்கு மட்டும் என்னவாம்…” என்று கேட்டவனின் குரலில் மயக்கம்!
அவனது காது மடலில் அவளது சூடான மூச்சுக் காற்று அவனை இன்னும் சூடேற்றியது. அவனது மீசை அவளது கழுத்தில் கோலமிட, அவள் உடல் சிலிர்த்தாள்.
“ஹேய் கூசுது…” சிணுங்கினாள்.
“அப்படியா?” என்றவனின் குரல் அவளை கபளீகரம் செய்ய காத்திருந்தது.
“ச்சே எத்தனை நாளாச்சுல்ல…” என்றவளின் குரலில் ஏக்கம் அப்பட்டமாய் தெரிய,
“மகாராணியார் உத்தரவு கொடுத்தா அடியேன் உடனே ஓடி வந்துற மாட்டேனா?”
“எங்க? வீட்ல எப்ப பார்த்தாலும் கூட்டம். வெளிய போகலாம்ன்னா கூடவே நண்டுங்க தொங்குதுங்க… ப்ச்… எனக்கு வாழ்க்கையே வெறுத்து போச்சு…”
“வேலைக்காரங்க கூட இல்ல போலருக்கு…” குறும்பாக அவன் கேட்க,
“எதுக்கு? சாட்சிக்கா?” என்று சிரித்தாள்.
“ஆமா… இதையெல்லாம் பாக்க வெச்சுட்டா பண்ண முடியும்?” என்றவனின் குரலில் என்ன இருந்ததோ, அவளை அப்படியே மயக்கியது.
“சரி நீ பேசியே நேரத்தை ஓட்டிடுவ…” என்றவள், அவனது உதட்டை கவ்விக் கொள்ள, அவளது வேலையை தனதாக்கிக் கொண்டான் அவன்.
களைத்து வீழும் வரை காமன் அங்கே விளையாடினான்!
போர்வையால் தன்னை போர்த்திக் கொள்ள கூட நினைக்காமல், வாசுவின் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருந்தாள்.
அவளது விரல்கள் அவனது முரட்டுத் தோள்களைத் தழுவி, கழுத்துச் சங்கிலியை உருட்டிக் கொண்டிருந்தன. நெற்றியில் கலைந்து விழுந்திருந்த தலைமுடி அவளது கன்னங்களில் வியர்வையோடு ஒட்டியிருக்க, ஏசி காற்றிலும் மூச்சுக் காற்று அனலாய் அவனது நெஞ்சில் பட்டுத் தெறித்தது.
வாசு அவளது தோளை வளைத்துப் பிடித்து, கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.
“என்னடி ஓகே வா? சந்தோஷமா?” அவனது உதடுகள் அவளது காதோரம் உரசி கிசுகிசுத்தது.
அவள் பெருமூச்சு விட்டாள். அவளது முகம் அவனது மார்பை விட்டு விலகி அவனை ஏறிட்டது. அவளது கண்களில் ஒருவிதக் கலக்கமும், அதே சமயம் அடக்க முடியாத ஆதங்கமும் ஒருங்கே தெரிந்தன.
“சந்தோஷம் இல்லாமலா வாசு… நீ என் பக்கத்துல இருக்கிற இந்த ஒரு மணி நேரம் தான் நான் உயிரோட இருக்கிற மாதிரியே இருக்கு. மத்த நேரமெல்லாம் இந்த வீட்ல நான் நடைப்பிணமாத்தான் வாழ்ந்துட்டு இருக்கேன்,” அவளது குரலில் கசப்பு அப்பட்டமாய் வழிந்தது.
“எல்லாரும் வர எப்படியும் சாயந்திரம் ஆயிடும்ல. அதுவரைக்கும் எதைப் பத்தியும் நினைக்காத…” என்றவன் அலட்சியமாய் அவளது கன்னத்தைத் தட்டிச் சிரித்தான்.
“அவங்க வர்றதைப் பத்தி எனக்கு என்ன கவலை? இங்க இருக்கறத நெனச்சா தான் எனக்கு எரியுது…” அவள்தன் ஆத்திரத்தை வார்த்தைகளால் கொட்டினாள்.
“ம்ம்ம் தெரியும்… டென்ஷனாகாத…” வாசு அவளது கூந்தலை வருடினான்.
“எனக்குத் தேவை உன்னோட அன்பு மட்டும் தான்… உன் கூட இருக்கிற நிம்மதி மட்டும்தான்…” என்றவள் அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு இன்னும் நெருக்கமாகச் சாய்ந்தாள்.
அவன் அவளது இடையை வளைத்துத் தன்பக்கம் இழுத்தான்.
“எனக்கும் நீ இல்லாம வாழப் பிடிக்கல… ஆனா நாம இப்படித் திருட்டுத்தனமா எத்தனை நாள் தான் பார்த்துக்கறது? இன்னைக்கு நீ உடம்பு சரியில்லை, தலைவலிக்குதுன்னு படுத்துட்டதால எல்லாரும் நம்பிட்டு போயிட்டாங்க. ஆனா இதுவே எப்பவும் நடக்குமா? எனக்கு நீயில்லாம வாழ்க்கை இல்ல…” என்றவனின் குரலில் அழுத்தமிருந்தது.
“ம்ம்ம்… எனக்கும் புரியுது…!” என்றவளின் குரலில் குற்ற உணர்வு.
“நீ தான் முடிவு பண்ணனும்…” என்றான் அவன்!
“எனக்கு நீ வேணும்…” என்றாள் அவள்!
அந்த உறுதியை பார்த்தவனின் மனதுக்குள் மத்தாப்பு. அவளது உதட்டை குத்தகைக்கு எடுத்துக் கொண்டவன், அவளை இறுக அணைத்துத் தன் வசப்படுத்தினான்.
அறைக்கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருக்கவில்லை. தாழ்ப்பாள் முழுமையாகப் போடப்படாமல், ஒரு மெல்லிய இடுக்கோடு லேசாக மூடப்பட்டிருந்தது. ஊருக்குப் போனவர்கள் எப்படி இருந்தாலும் மாலை வரை திரும்ப மாட்டார்கள் என்ற அதீத தைரியமும், அஜாக்கிரதையும் அவர்களை கவனக் குறைவாக இருக்க செய்திருந்தது. வெளிக்கதவு பூட்டபட்டிருக்கிறது என்ற தைரியம் வேறு, ஆனால் மோகம் அவளது புத்தியை மழுங்க செய்திருந்தது. வெளிக்கதவு பூட்டப்படவில்லை.
சைக்கிளை நிறுத்திய பெரியவன், ஸ்டான்ட் போட்டுவிட்டு பாப்பியை கீழே இறக்கி விட்டான். பின்னால் அமர்ந்திருந்த தம்பிமாமா,
“கசகசன்னு இருக்குடா. மேலாக்க தண்ணி ஊத்திட்டு வர்றேன்…” என்று கிணற்றை நோக்கி போனான்.
“தம்பி மாமா… நானும் வர்றேன்…” என்ற பாப்பி அவனை வாலாக பற்றிக் கொண்டே ஓடினாள்.
“பாத்துடி… சேறு…” என்றவன், அவளை கைப்பிடித்து அழைத்து சென்றான்.
எப்படியும் இது விடாது என்ற முடிவுக்கு வந்தவன், இதுக்கும் சேர்த்து இரண்டு வாளி இறைக்க வேண்டியதுதான் என்று சொல்லிக் கொண்டான். அதுதான் வழக்கம் வேறு!
இவர்கள் இங்கே போக, பசி வயிற்றை கிள்ள, வீட்டினுள் போனான் பெரியவன்.
கதவெல்லாம் திறந்தே கிடந்தது.
மாடியில் பெரியப்பா இருந்தார். அவர்களது ஜாகை கீழே தான். அதுவும் அவன் அப்பாயியுடன் தான் இரவு உறங்குவான். விதவிதமாக கதைகளை கேட்டுக் கொண்டே உறங்குவது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அவ்வப்போது பாப்பியும் கூட வந்து படுத்துக் கொள்ளும். அண்ணனை விட்டு பிரியாது. என்னதான் பெரியப்பா மகள் என்றாலும் அவனது சின்னதை விட பாப்பி தான் அதிக நேரம் அவனோடு இருப்பது. அவனுக்கும் அவள் மேல் பொறுப்பும் பாசமும் அதிகம்!
அவனுக்கும் பாப்பிக்கும் சின்னத்துக்கும் மட்டும் தான் அவனது அப்பாயி உயிர். மற்றவர்களுக்கு எல்லாம் பாட்டியை பார்த்தாலே உதறல் எடுத்துவிடும். நெருப்பை கொட்டியபடி பேசுவதில் அப்படியொரு ஸ்பெஷலிஸ்ட். பெற்றவள் பார்க்கவில்லை, அப்பாயியுடன் ஒட்டிக் கொண்டான் பெரியவன்.
அன்றைக்கும் கூட அப்பாயி, பெரியப்பா, பெரியம்மா விசேஷத்துக்கு கிளம்ப, பெற்றவள் போக முடியாது என்று சொல்லி விட்டாள். அது எப்போதுமே நடப்பதுதான் என்பதால், சின்னதை மட்டும் பெரியம்மா தூக்கிக் கொண்டாள். அதனால் விசேஷம் முடிந்து வர மாலை அல்லது இரவும் கூட ஆகிவிடும். இந்த மூன்றுக்கும் அவ்வளவு பொறுமை இல்லை என்பதால் விளையாட தோப்புக்கு போகிறோம் என்று கழன்று கொண்டதுகள்.
தண்ணீரை மொண்டு மடக் மடக்கென்று குடித்தவன், “ம்மா… பசிக்குது…” என்றபடி குரல் கொடுக்க, படுக்கையறைக்குள் தடதடவென்ற சப்தம்.
“என்ன மா? என்னாச்சு?” அடுத்து என்ன செய்து வைத்திருக்கிறாளோ பெற்றவள் என்று சோர்வாக கேட்டபடி படுக்கையறை கதவை திறக்க, பேயறைந்து நின்றான் பெரியவன்.
அவன் வந்த சப்தம் கேட்டவுடன் அடித்துபிடித்து எழுந்திருந்தார்கள் இருவரும். அவசரம் அவசரமாக தன்னை திருத்த முயன்றாலும் முடியவில்லை. அதற்குள் கதவைத் திறந்திருந்தான் மகன்.
அவள் கோலம்… அலங்கோலம்!
படுக்கையறைக் கதவை லேசாக அவன் திறந்த அடுத்த விநாடி… பெரியவனின் காலடியில் பூமி பிளந்து பாதாளத்திற்குள் இழுப்பது போலிருந்தது.
அவனது மூளை இயங்குவதை நிறுத்தியது. கண்கள் அகல விரிந்து, இமைகள் கூடச் சிமிட்ட மறந்து, பார்த்த காட்சியிலேயே உறைந்து போயின.
அவன் தன் சட்டையைத் தேடித் துழாவ, அவளோ புடவையை அள்ளித் தன் மார்போடு சேர்த்துப் போர்த்திக்கொண்டு, பயத்திலும் பதட்டத்திலும் மகனைப் பார்த்தாள்.
அந்த விநாடியில் மகனுக்கும் தாய்க்குமிடையே நிகழ்ந்த அந்தப் பார்வை மோதல்… அவனது பிஞ்சு நெஞ்சம் அனல் கக்கியது!
அவனது கண்களில் தெரிந்த அதிர்ச்சியும், அருவருப்பும், அவளது முகத்தில் சுள்ளென்று அறைந்தன. அவளுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது.
“விஷ்வா…” என்று அவளது உதடுகள் வார்த்தைகளை தேடித் துடித்தன.
அவன் பேச நினைத்தான்; ஆனால் நாக்கு வறண்டு, தொண்டைக்குழியில் வார்த்தைகள் ரத்தமாய் உறைந்து போயிருந்தன.
அப்போதுதான்…
அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு, கூடத்தின் வாசலிலிருந்து கேட்டது அந்தக் குரல்!
“அண்ணா… தம்பி மாமா கிணத்துல தண்ணி மொண்டு என் கால்ல ஊத்துனான்ணா… ஐஸ் மாதிரி ஜில்லுனு இருந்துச்சு தெரியுமா…”
ஈரக் கால்களைத் தரையில் ‘சளக் புளக்’கென்று பதித்தபடி, குட்டி இரட்டை ஜடைகள் முன்னும் பின்னும் ஆட, தன் பிஞ்சுப் பற்கள் தெரியச் சிரித்த முகத்தோடு அறை வாசலை நோக்கி ஓடிவந்து கொண்டிருந்தாள் பாப்பி!
அந்தக் குரல் பெரியவனின் செவிகளில் விழுந்த அடுத்த நொடி… அவன் உடம்பில் இருந்த அத்தனை நரம்புகளும் மின்சாரம் தாக்கியது போலத் துடித்தன.
உறைந்து போயிருந்த அவனது சுயநினைவு மின்னல் வேகத்தில் மீண்டது.
இந்த அசிங்கம்… இந்த சாக்கடை… கடவுள் போலத் திரியும் இந்த நான்கு வயதுப் பிஞ்சின் கண்களில் ஒரு துளி கூடப் பட்டுவிடக் கூடாது!
அவன் தன் தாயைப் பார்க்கவில்லை, எதிரே நின்ற அந்த எவனோ ஒருவனைப் பார்க்கவில்லை. சற்றும் யோசிக்காமல், உடம்பில் இருந்த அத்தனை பலத்தையும் திரட்டி, தன் முன்னாலிருந்த படுக்கையறைக் கதவை ஒரே தள்ளாகத் தள்ளி ‘படார்’ என்று அறைந்து மூடினான்!
மரக்கதவு மோதிய சத்தம் வீடெங்கும் இடியென எதிரொலித்தது.
அடுத்த விநாடி, கதவுக்கு முன்னால் பெரும் சுவரெனத் திரும்பி நின்றவன், ஓடிவந்த பாப்பியை வாரித் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
அவளது குட்டி முகம் அவனது சட்டைக்குள்… அவனது நெஞ்சின் கூட்டுக்குள் முழுமையாகப் புதைந்தது.
“அ… அண்ணா… என்னாச்சுணா?” அவனது மார்புக்குள்ளிருந்து பாப்பியின் மழலைக் குரல் திணறி வெளிவந்தது.
பெரியவனால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. அவனது மொத்த உடலும் தாள முடியாத நடுக்கத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. நெஞ்சில் இதயத் துடிப்பு வெடித்துக் கொண்டிருந்தது.
அவனது இரு கரங்களும் பாப்பியின் குட்டி உடலை… அவளது பிஞ்சுத் தோள்களையும், கைகளையும் நசுக்கி விடுவது போல அத்தனை ஆவேசமாக, அத்தனை பயத்தோடு இறுகப் பற்றிக் கொண்டன. அவளது கை விரல்கள் அவனது உள்ளங்கைக்குள் நசுங்க,
“அண்ணா… வலிக்குதுணா… கையை விடுணா…” பாப்பி சிணுங்கினாள்.
ஆனால், அவனால் கையைத் தளர்த்த முடியவில்லை. ஒரு நடுக்கடலில் மூழ்கிப் போகிறவன் தனக்குக் கிடைத்த ஒரே மூங்கில் துண்டைப் பிடித்துக் கொள்வது போல, மண்டியிட்டு அமர்ந்தவன், அவன் அவளை விடாமல் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
தன் தாயின் முகத்தை நினைத்துப் பார்க்கக்கூட அவனது மனம் கூசியது. உலகமே பொய்யாகிப் போன அந்த நொடியில், அவன் கைகளில் இருந்த அந்தப் பிஞ்சு மட்டுமே நிஜமாகத் தெரிந்தது.
அவனது கண்களிலிருந்து கண்ணீர் அருவியெனக் கொட்டி, பாப்பியின் ஈரத் தலையில் சொட்டுச் சொட்டாக விழுந்தது.
“அண்ணா, ஏன்ணா அழுவற? வலிக்குதா?” என்று அப்பாவியாக கேட்டு, அவனது கண்களை துடைத்து விட்டாள் அந்த பட்டுக் குட்டி.
“ப்ரவா குட்டி…” என்று கதறியவனால் அதற்கும் மேல் பேச முடியவில்லை.
அதே நேரம்… பூட்டியிருந்த அந்தக் கதவின் உள்பக்கத்திலிருந்து, ஆடைகளை அவசர அவசரமாகச் சரிசெய்யும் பதட்டமான அரவங்களும், பயத்தில் எழுந்த விம்மல்களும் மெலிதாகக் கசிந்து கொண்டிருந்தன.
வெளியே நின்ற பெரியவனோ, தன் பிஞ்சுத் தங்கையின் கண்களை மூடிப் பாதுகாத்து நின்ற அந்த நிலையிலேயே, கல்லாகச் சமைந்து போயிருந்தான்!






Nice intresting ud sis ❤️
Vishwa mananilai😭😭😭...Yenna amma iva😈😈😈
thanks ma
thanks ma
ஆரம்பத்தில் இருந்து பயங்கர கன்ஃபியூஷன் இப்போதான் புரியுது... இந்த மது எதுக்கு ப்ரவா நாந்தனர்னு சொன்னானு..
ஜீவதான் தம்பி மாமா..வா.. விஷ்வா அண்ணா 😂சூப்பர் ஆனா உள்ள இருக்குற பெரியவங்க உறவு முறைகள் தான் புரிஞ்சிக்க முடியல போக போக அதுவும் வெளங்கும்னு நினைக்கிறேன் ❤️💫
ப்ரவா தான் பாப்பி.....
அப்ப தம்பி மாமா ஜீவா வா????
அவனுக்கு ஏன் பாப்பியை தெரியல?????
விஷ்வா சொந்த தங்கை மதி.....அந்த சின்னது.....
என்ன அம்மா இது?????
கருமம் கள்ள காதலா🤦🤦🤦🤦🤦