arrow_back
இலக்கணம் மாறுதோ இலக்கியமானதோ! அத்தியாயம் 8

அத்தியாயம் 8

visibility 567
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

படுக்கையறைக் கதவை அடைத்த அந்த நொடியில், கூடத்துத் தரையில் ஒரு மூலையில் அப்படியே மண்டியிட்டு அமர்ந்துவிட்டான் விஷ்வா. அவனது உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் நடுக்கம். வெறித்த பார்வை… வெளியே எதையும் சொல்ல முடியாத நிலை!

அவனது மார்போடு புதைந்திருந்த நான்கு வயதுப் பாப்பி, விஷ்வாவின் சட்டைக் காலரைத் தன் பிஞ்சுக் கைகளால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, விழி பிதுங்க அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அண்ணா… என்னாச்சுணா? ஏன்ணா இப்படி நடுங்குற?” அவளது குரலில் அச்சம் தொற்றிக் கொண்டது.

அவளுக்குப் பதில் சொல்ல அவனிடம் வார்த்தைகள் இல்லை. அவனது விரல்கள் பாப்பியின் பிஞ்சுத் தோள்களை இறுகப் பற்றிக் கொண்டன.

அப்போதுதான் கிணற்றடியில் கை, கால் கழுவிவிட்டுத் துண்டால் தலையைத் துவட்டியபடி கூடத்திற்குள் நுழைந்தான் தம்பி மாமா ஜீவா. வாசலில் விஷ்வா தரையில் அமர்ந்திருப்பதையும், பாப்பியை நெஞ்சோடு இறுக்கிப் பிடித்திருப்பதையும் பார்த்த அடுத்த கணம் அவனது முகம் மாறியது.

“டேய்… என்னடா ஆச்சு? எதுக்குடா இப்படி உக்காந்துருக்க?” ஜீவா பதற்றத்துடன் ஓடிவந்து விஷ்வாவின் தோளைத் தொட்டான்.

விஷ்வா நிமிர்ந்து பார்க்கவே இல்லை. அவனது உதடுகள் ஏதோ முனகத் துடித்தன; ஆனால் ஓசையே வரவில்லை. அவனது கண்கள் அந்த மூடிய படுக்கையறைக் கதவின் மீதே நிலைகுத்தி நின்றன. ஜீவா அவனது நிலையைப் பார்த்துப் பயந்து போய், விஷ்வாவின் இன்னொரு கையைத் தன் இரு கரங்களுக்குள்ளும் எடுத்துப் பொதிந்து கொண்டான்.

” என்னடா இது? கை இவ்வளவு சில்லுன்னு போயிருக்கு… என்னடா ஆச்சு உனக்கு?” ஜீவாவின் குரலில் தவிப்பு கூடியது. விஷ்வாவின் கை விரல்கள் ஜீவாவின் கையைத் தளராமல் கவ்விப் பிடித்தன.

வீட்டின் வெளி வாசலில் கார் நிற்கும் சப்தமும், மனிதர்களின் பேச்சுக் குரல்களும் கேட்டன.

விசேஷத்திற்குப் போயிருந்தவர்கள் திரும்பிவிட்டார்கள்!

செந்தில்நாதனும் சுப்பிரமணியும் முன்னால் வர, அவர்களுக்குப் பின்னால்ஒன்றரை வயது மதிமலரை இடுப்பில் சுமந்தபடி காயத்ரியும், கம்பீரமான நடையோடு மகாலட்சுமி பாட்டியும் படி ஏறி உள்ளே வந்தனர். வெயிலின் அலுப்பும், விருந்து சாப்பாடு தந்த களைப்பில் எல்லோருடைய முகமும் வதங்கியிருந்தது. மகாலட்சுமிக்கு வயது அறுபத்திமூன்றை தொட்டிருந்தாலும் நடை தளர்ந்துவிடவில்லை; குடும்பத்தின் அதிகாரத்தை விரல் நுனியில் வைத்திருக்கும் ஆளுமை அந்த முகத்தில் எப்போதும் அப்பியிருக்கும்.

“வீடே என்னமோ சுடுகாடு மாதிரி கிடக்கு… காலங்காத்தால உடம்பு சரியில்லன்னு படுத்துக்கிட்டவ இன்னுமா எந்திரிக்கல? இந்நேரத்துக்கு அடுப்புல ஒரு வாய் வெந்நீராவது வெச்சு வெச்சிருக்க வேண்டாமா?” மகாலட்சுமி உள்ளே நுழையும்போதே குரல் கொடுத்தார்.

உள்ளே நுழைந்த சுப்பிரமணி, ஹாலில் விஷ்வாவும் பாப்பியும் ஜீவாவும் தரையில் அமர்ந்திருப்பதைப் பார்த்து முகம் சுளித்தான்.

“என்னடா பெரியவனே… மூணு பேரும் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? உங்கம்மா எங்க?” சுப்பிரமணி சாதாரணமாகக் கேட்டுக்கொண்டே, தனது தோளில் கிடந்த துண்டால் நெற்றி வியர்வையைத் துடைத்தபடி படுக்கையறையை நோக்கி நடந்தான்.

விஷ்வாவின் கண்கள் ஒரு கணம் பிதுங்கிப் போயின. அவன் எழ முயன்றான்; ஆனால் கால்கள் மரத்துப் போய் எழவே முடியவில்லை.

சுப்பிரமணி தனது வலது கையால் படுக்கையறைக் கதவைத் தள்ளினான். தாழ்ப்பாள் போடப்படாத கதவு மிக எளிதாக, மெதுவாக உள்பக்கம் நகர்ந்து திறந்தது.

அடுத்த விநாடி… அதிர்ச்சியில் உறைந்து போனான் சுப்பிரமணி!

அவசர அவசரமாகப் புடவையை உடம்பில் சுற்றிக்கொண்டு, கூந்தல் அவிழ்ந்து தோள்களில் சரிய, நெற்றிப் பொட்டு அழிந்து முகமெல்லாம் வியர்வையில் வழிய… வாசலை நோக்கி நின்றிருந்தாள் வாகீஸ்வரி! அவளுக்குப் பின்னால், கட்டிலின் ஓரத்தில் சட்டையின் பொத்தான்களைக் கூட முழுமையாகப் போட முடியாமல், கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடனைப் போலப் பயந்து பதுங்கி நின்றிருந்தான் வாசு!

அவர்களது அந்தக் கோலத்தைப் பார்த்த மாத்திரத்தில், சுப்பிரமணியின் கண்கள் சிவந்து ரத்தக் களறியாயின. அவன் நின்ற இடத்திலேயே ஒரு கணம் ஸ்தம்பித்து, அடுத்த கணம் அவனது தொண்டையிலிருந்து ஒரு வெறிபிடித்த மிருகத்தின் கர்ஜனை கிளம்பியது!

“அடி பாவி மூதேவி…!”

சுப்பிரமணி பாய்ந்தான்! அவன் பாய்ந்த வேகத்தில் படுக்கையறையின் கதவு சுவரில் மோதி அதிர்ந்தது. முன்னால் நின்ற வாகீஸ்வரியின் கூந்தலை ஒரே பிடியாகப் பற்றி இழுத்தவன், அவளது முகத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

‘பளார்’ என்ற சத்தம் வீட்டின் கூரையைப் பிளந்தது. வாகீஸ்வரி நிலைதடுமாறித் தரையில் விழுந்தாள். விழுந்தவளைத் தன் காலால் எட்டி உதைத்தான் சுப்பிரமணி.

“வாழ்ற வீட்டுக்குள்ள என்ன காரியம் பண்ணிருக்க? நீயெல்லாம் பொம்பளையாடி?” மூர்க்கத்தனமாக அடித்தான்.

அவனது வெறியை பார்த்த வாசு, வாகீஸ்வரியை காப்பாற்ற வேண்டி, நடுவே நுழைய, அவனை பன்மடங்கு அதிக வெறியோடு தள்ளி விட்டான் சுப்பிரமணி.

“என் குலத்த நாசம் பண்ண வந்த சண்டாளி! என் தாலியக் கட்டிக்கிட்டு எவனோடயோ படுத்திருக்கியே? உனக்கு வெக்கமால்ல?” நரம்புகள் புடைக்கக் கத்தினான். அவன் அவளைக் கண்மண் தெரியாமல் மிதித்தான், நடுவே வந்த வாசுவை அறைந்தான்.

மற்றவர்களோ அதிர்ச்சியிலிருந்தே மீளவில்லை. காயத்ரி கால்கள் வேரோடிப் போய் நின்றிருந்தாள். மகாலக்ஷ்மியின் முகம் கோபத்தில் சிவந்தது.

சுதாரித்த  செந்தில்நாதன் மின்னல் வேகத்தில் அறைக்குள் பாய்ந்தார். கட்டிலின் ஓரத்தில் நின்ற வாசுவை நோக்கிப் பாய்ந்தவர், அவனது சட்டைக் காலரைத் தூக்கி அவனைச் சுவரோடு சேர்த்தடித்து முகத்திலேயே குத்தினார்.

“நாயே… யார் வீட்டுக்குள்ள வந்து என்ன வேலை பாக்குற? உன்னை இன்னைக்கு உசுரோட விட மாட்டேன்டா!” செந்தில்நாதனின் ஆவேசம் வாசுவின் முகத்தைச் சிதைத்துக் கொண்டிருந்தது.

வாசு முகமெங்கும் ரத்தம். அவனால் செந்தில்நாதனை எதிர்கொள்ள முடியவில்லை. மீறி அடித்தால், அவன் அவ்வளவுதான் என்பதும் தெரியும் என்பதால், பேசாமல் அடியை வாங்கிக் கொண்டிருந்தான்.

செந்தில்நாதனின் பார்வை தன் தம்பி சுப்பிரமணியின் பக்கம் திரும்பியது. சுப்பிரமணி வெறிபிடித்தவனைப் போல வாகீஸ்வரியின் கழுத்தை நெரித்துக் கொல்லப் பார்த்தான்.

“தம்பி… சுப்பிரமணி! விட்டுடுடா… அவளைக் கொன்னுராதடா… டேய், கைல ரத்தக்கறை படிய வச்சுக்காதடா, விட்றா!” என்று செந்தில்நாதன் வாசுவை அடிப்பதை விட்டுவிட்டு, சுப்பிரமணியைப் பிடித்து இழுக்க முயன்றார். ஆத்திரத்தில் சுப்பிரமணி தன் மனைவியைக் கொன்றுவிட்டால் தம்பியின் வாழ்க்கை ஜெயிலில் முடிந்துவிடுமே என்ற பதைபதைப்பு செந்தில்நாதனை உலுக்கியது.

“ண்ணா என்னை விடு… இந்தக் நாய இன்னைக்கு உசுரோட வெச்சிருக்கக் கூடாது! என் மானத்தையே வாங்கீட்டாளே…!” சுப்பிரமணி வெறிபிடித்துத் திமிறினான்.

ஹாலில் நின்றிருந்த காயத்ரியின் கை கால்கள் நடுங்கின. இடுப்பில் இருந்த கைக்குழந்தை மதிமலர், அடிதடிச் சத்தத்தை கேட்டு ‘வீல்’ என்று வாய்விட்டு அழத் தொடங்கியது. அதை சமாதானப்படுத்துவதா, இருவரும் சேர்ந்து ஆளை கொன்றுவிட போகிறார்களோ என்ற பயத்தை பார்ப்பதா என்பது அவருக்குப் புரியவில்லை.

காயத்ரி குழந்தையை ஒரு கையால் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, படுக்கையறை வாசலுக்கு ஓடினாள். “தம்பி… வேணாம் தம்பி! கைய எடுங்க முதல்ல… கொல பாதகம் வந்து விழுந்துடும் தம்பி! ஊரு சனம் கூடிடப் போகுது… விட்ருங்க தம்பி!” என்று சுப்பிரமணியின் கைகளைப் பிடித்து விலக்கப் போராடினாள்.

“அண்ணி… குறுக்க வராதீங்க! இவளை நான் சும்மா விட மாட்டேன்!” சுப்பிரமணி உறுமினான்.

“தம்பி சொல்றதைக் கேளுங்க… நீங்க எது பண்ணினாலும் நம்ம குடும்பம்தான் தலைகுனியணும். ஏங்க, தம்பிய முதல்ல இழுத்துப் பிடிங்க!” காயத்ரி கதறினாள்.

ஒரு கையால் குழந்தையைத் தாங்கியபடி சுப்பிரமணியின் ஆவேசத்தைத் தடுக்க முடியாமல் திணறினாள். குழந்தையின் அழுகைச் சத்தமும், அடிதடியும், அலறலும் அந்தப் பெரிய வீட்டை ஒரு போர்க்களமாய் மாற்றியிருந்தது.

கூடத்தில் நின்றிருந்த மகாலட்சுமி முன்னால் வந்தார். அவரது முகம் கோபத்திலும் அவமானத்திலும் இறுகி, கண்களில் அனல் தெறித்தது. நெருப்புக் கங்குகள் அவரது நாவிலிருந்து பொழிந்தன.

“அடி நாசமாப் போறவளே! எங்கண்ணன் பொண்ணுன்னு நம்பி… பிறந்த வீட்டுப் பெருமை பேசி என் மவனுக்குக் கட்டி வெச்சதுக்கு… என் குடும்ப மானத்தையே நடுத்தெருவுல ஏலம் போட்டுட்டியேடி சோரம்போனவளே! எவனோ ஒரு கூலிப் பயலை என் வீட்டுக்குள்ள இழுத்துட்டு வந்துட்டாளே இந்த முண்ட! உன்னை எல்லாம் கண்டந்துண்டமா வெட்டி ஆத்துல வீசணும்டி!”

மகாலட்சுமியின் குரல் நரம்புகளை அறுப்பது போலக் கூர்மையாய் ஒலித்தது.

“அண்ணன் பொண்ணுன்னு பாசம் காட்டி வச்சிருந்தேனே… உள்ளுக்குள்ள இப்படியொரு அசிங்கத்தை வளர்த்துட்டு இருந்தியாடி? என் மகனுக்கு துரோகம் பண்ணிட்டு எவனுக்கோ படுக்கை விரிச்சவளே… நீயெல்லாம் உருப்படுவியா? புழு புழுத்து சாவடி நீ!”

அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் நஞ்சாகப் பாய்ந்தது.

ஹாலில் அமர்ந்திருந்த விஷ்வாவின் காதுகளில் பாட்டியின் அத்தனை கொடூரமான வார்த்தைகளும் விழுந்தன. அவனது முகம் செத்துப் போயிருந்தது. கண்களிலிருந்து ஒரு துளிக் கண்ணீர் கூட வரவில்லை.

பாப்பி பயத்தில் விஷ்வாவின் மார்புக்குள் தன் முகத்தை இன்னும் ஆழமாகப் புதைத்துக் கொண்டு நடுங்கினாள். “அண்ணா… பயமா இருக்குணா…” என்று அவனது சட்டையைத் தன் பற்களால் கடித்தபடி விம்மினாள். விஷ்வா அவளது தலையைத் தன் கையால் அழுத்தி, அவளது பிஞ்சுக் காதுகளைத் தன் உள்ளங்கைகளால் பொத்திக் கொண்டான்.

ஜீவா விஷ்வாவின் தோளை அணைத்துக் கொண்டு, அவனது நடுங்கும் கையை இன்னும் கெட்டியாகப் பிடித்திருந்தான். ஜீவாவின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. தன் சொந்த அத்தையின் இந்தக் கோலத்தை பார்த்து அந்தப் பத்து வயதுச் சிறுவனால் எதுவும் பேச முடியவில்லை. அவனது கைகள் விஷ்வாவை ஒரு கணம் கூட விடவில்லை.

வாகீஸ்வரியை ஒருவாறாகத் தன் தம்பியிடமிருந்து பிரித்து வெளியே தள்ளிய செந்தில்நாதன், ரத்தம் வழியத் தரையில் சுருண்டு கிடந்த வாசுவை எட்டி உதைத்தார்.

மூச்சு வாங்க அந்த நோக்கியா போனை எடுத்தவர், சக்திவேலை அழைத்தார்.

“சொல்லுங்க மச்சான்…” எப்போதும் போல சக்திவேலின் குரலில் புன்னகை வழிந்தது.

“சக்தி… இன்னும் பத்து நிமிஷத்துல இங்க இருக்க…” செந்தில்நாதனின் குரலில் அத்தனை கோபம். இன்னும் மூச்சு வாங்கியது.

“என்ன மச்சான்? என்னாச்சு?” எதுவும் புரியாமல் சக்திவேல் கேட்க,

“வர்றன்னா வர்ற…”

“இல்ல மச்சான்…” என்று ஆரம்பித்தவரை இடைமறித்தது செந்திநாதனின் குரல்.

“டேய்… சொன்னா கேளு டா… உன் தங்கச்சி பண்ணி வெச்சுருக்க கூத்த வந்து பாரு…” உச்சஸ்தாயியில் அவர் இறைய, சட்டென,

“இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன் மச்சான்…” என்று வைத்து விட்டார் சக்திவேல்.

சக்திவேலின் பூர்வீகம் ஜமீன் ஊத்துக்குளி தான். அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தியும் மகாலக்ஷ்மியும் அண்ணன் தங்கை. திருமண பேச்சு வந்தபோது வாகீஸ்வரி வாசுதேவனுடனான தன் காதலை சொல்லி பிடிவாதம் பிடிக்க, ஜாதி வேறுபாட்டால், ஈஸ்வரமூர்த்தி ஒப்புக்கொள்ளவில்லை. உடனே தன் தங்கையின் மகன் சுப்பிரமணியுடன் திருமணம் பேசி முடித்துவிட்டார். வாகீஸ்வரி எப்படியெல்லாமோ பிடிவாதம் பிடிக்க, ஈஸ்வரமூர்த்தி விஷத்தை கையிலெடுத்து திருமணத்தையும் முடித்து விட்டார்.

சக்திவேலுக்கு தன் தந்தையின் செய்கையில் உடன்பாடு இல்லையென்றாலும் வாசு தங்கைக்கு ஈடில்லை என்பதில் சந்தேகமில்லை. அதனால் தந்தையை அவர் எதிர்க்கவில்லை. அதுவுமில்லாமல் எதிர்க்கும் ரகமுமில்லை.

தந்தை உயிரோடு இருந்தவரை வாகீஸ்வரியின் வாழ்க்கை சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஈஸ்வரமூர்த்தியின் இறப்புக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் பழைய பழக்கம் தொடர ஆரம்பித்தது. பேச்சில் ஆரம்பித்து, எல்லை மீறுவது வரை இப்போது தொடர்ந்திருந்தது.

இத்தனை நாளும் யாரும் அறியாவண்ணம் வெளியே தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த முறை அதிகபட்ச தைரியத்தில் வீட்டுக்கே வர சொல்லியதில் தான் பிரச்சனை!

இப்போது என்ன பிரச்சனை செய்திருக்கிறாளோ என்று பதைபதைத்தபடி ஜீப்பை எடுத்தார். கோவையில் படித்துக் கொண்டிருந்த ஜீவனுக்கு விடுமுறை விடும் போதெல்லாம் ஊத்துக்குளியிலிருக்கும் பூர்வீக வீட்டுக்கு வந்து விடுவார். இரண்டு மாதமும் அவனுக்கு கொண்டாட்டமாக இருக்கும். தங்கை பிள்ளைகள் விஷ்வா, மதி, அதன் பின் ப்ரவா, அதுவுமில்லாமல் ஊர் முழுக்க சொந்தம் தான். அவனுடைய கொண்டாட்டத்தை அவரால் எப்படி தடுக்க முடியும்? அதனால் விடுமுறை என்றவுடன் மருத்துவமனை மற்றவர் பொறுப்பில் விட்டுவிட்டு பெட்டியை கட்டி விடுவார்கள்.

“இந்த சக்தி வரட்டும்… அவன் தங்கச்சி லட்சணத்தை அவனும் அவன் பொண்டாட்டியும் வந்து பாக்கட்டும்!” மகாலக்ஷ்மி இங்கு சீறிக் கொண்டிருந்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில்… வீட்டின் வாசலில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு சக்திவேலின் ஜீப் வந்து நின்றது.

வண்டியிலிருந்து அடித்துப் பிடித்து இறங்கி ஓடிவந்தார்கள் சக்திவேலும், கார்த்தியாயினியும்!

வந்தவர்களின் முகம் வெளுத்திருந்தது. சக்திவேல் தன் வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு கூடத்திற்குள் நுழைய, பின்னால் கார்த்தியாயினி பதட்டத்துடன் ஓடிவந்தாள்.

உள்ளே நுழைந்த சக்திவேலின் கால்கள் வேரோடியது.

ஹாலில் ரத்தம் வழிய தலையைக் குனிந்து நின்றிருந்தான் வாசு. இன்னொரு பக்கம், தலைவிரி கோலமாய், முகம் வீங்கி, உதடு கிழிந்து தரையில் அமர்ந்திருந்தாள் வாகீஸ்வரி. சுப்பிரமணி கையில் அரிவாள்மனையோடு நின்றிருக்க, செந்தில்நாதன் அவனைப் பிடித்துக் கொண்டிருந்தார்.

மகாலட்சுமி சக்திவேலைப் பார்த்ததும் ஆவேசமாய் அவனருகே வந்தார்.

“வாடா சக்திவேலு! வந்து பாருடா உன் தங்கச்சியோட யோக்கியதையை!” இரைந்ததில் மூச்சிரைத்தது.

“அத்தை… இருங்க இருங்க… கொஞ்சம் பொறுமையா இருங்க…” அவரை ஆசுவாசப்படுத்த முயன்றார் சக்திவேல்.

 “என்னடா பொறுமை வேண்டியிருக்கு? உங்கப்பன், பெரிய மனுசன் தான? ஏன்டா இவள என் மவன் தலையில கட்டுனீங்க? இவ பண்ணி வெச்சிருக்கிற காரியத்தைப் பாருடா! ஊரே விசேஷத்துக்குப் போன நேரத்துல எவனோ ஒருத்தன வீட்டுக்குள்ள கூட்டிட்டு வந்து கும்மாளம் போட்டுட்டு இருக்காடா இந்த முண்ட! நீதான்டா இதுக்கு பதில் சொல்லணும்…”

மகாலட்சுமியின் அந்தக் குரூரமான வார்த்தைகள் சக்திவேலின் நெஞ்சில் ஈட்டியாகப் பாய்ந்தன. அந்த மனிதரின் தலை முதன்முறையாகக் குற்ற உணர்ச்சியில் தரை நோக்கித் தாழ்ந்தது. கைகள் நடுங்கின.

காதலை தடுத்து மிரட்டிஉருட்டி திருமணம் செய்துவைத்து விடலாம். ஆனால் வழிமாற வேண்டும் என்று அந்த பெண் நினைத்துவிட்டால் யாராலும் தடுக்க முடியாது என்பதை சக்திவேல் அப்போதுதான் உணர்ந்து கொண்டார். வாகீஸ்வரியின் மனதுக்குள் கனன்றுகொண்டிருந்த அந்தத் தீ, இன்று மொத்தக் குடும்பத்தின் கௌரவத்தையும் சுட்டுச் சாம்பலாக்கிவிட்டது என்பதை நேரில் பார்த்தபோது அவரால் தாள முடியவில்லை.

சக்திவேல் சுப்பிரமணியின் முன்னால் கைகூப்பி நின்றார். அவரது கண்களில் நீர் திரண்டது.

“சுப்பிரமணி… மாப்ள… என்னைய மன்னிச்சுடுங்க… இப்படி ஒரு அசிங்கம் நடக்கும்னு நான் கனவுல கூட நினைக்கல… என் தங்கச்சி பண்ணின காரியத்துக்கு நான் என்ன பிராயச்சித்தம் பண்றதுன்னே எனக்குத் தெரியல மாப்ள…” சக்திவேலின் குரல் நடுங்கியது.

“நீ என்னடா பிராயச்சித்தம் பண்ணுவ சக்திவேலு? என் வாழ்க்கையே போச்சுடா!” சுப்பிரமணி தரையில் அரிவாள்மனையை தூக்கி ஓங்கி அடித்தான். “இந்த அசிங்கத்தை வெச்சிகிட்டு நான் இந்த ஊர்ல எப்படி தலைநிமிர்ந்து நடப்பேன்?” அவன் ஆங்காரமாய் கேட்டான்.

சக்திவேலுக்கும் புரிந்தது. ஆனால் தங்கையாயிற்றே!

“கொஞ்சம் பொறுமையா இரு மாப்ள… பேசி ஒரு முடிவுக்கு வரலாம்…” சக்திவேல் தழுதழுத்தார்.

“என்னத்தடா பேசுறது? பொண்டாட்டி வேறொருத்தனோட இருந்ததை கண்ணால பார்த்தப்புறமும் பேச என்னடா இருக்கு?” சுப்பிரமணி ஆத்திரத்தில் கத்தினான்.

செந்தில்நாதன் இடையில் புகுந்தார், “சக்திவேலு… அன்னைக்கே இவளுக்கு புத்தி சரியில்லன்னு தெரிஞ்சுதான் அடக்கி வைக்கப் பாத்தீங்க… எனக்கும் தெரியும், ஆனா கல்யாணமானா மாறிக்குவான்னு தான பண்ணி வெச்சோம். இப்படியொரு காரியத்தை பண்ணுவான்னு நான் கனவுல கூட நினைக்கலடா…!”

” நான் என்ன சொல்றதுன்னே புரியாம நிக்கிறேன் செந்திலு…” சக்திவேல் தலைகுனிந்தார்.

கார்த்தியாயினி அழுதுகொண்டே காயத்ரியின் அருகே சென்றாள். “அண்ணி… குழந்தை பயந்து நடுங்குது… உள்ள கூட்டிட்டுப் போங்க அண்ணி…”

“எங்க போறது கார்த்தி? என்ன பண்றதுன்னே புரியல…” காயத்ரி கண்ணீரோடு மதியை அணைத்துக்கொண்டாள்.

“மன்னிச்சுக்க சுப்பிரமணி… ரெண்டு புள்ளைங்க இருக்கு. அதுங்களுக்காக கொஞ்சம் கோவத்தை கம்மி பண்ணிக்க… நிதானமா உட்கார்ந்து பேசலாம்…” மிகவும் தணிந்த குரலில் சக்திவேல் கேட்டார். அவர் கேட்பதும் சரியென்று அவனுக்கு தோன்றியது.

ஆழமாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான்.

“புரியுது மச்சான்… ஆனா இந்த அசிங்கத்தை என்ன பண்றது? எனக்கு இவள பாக்கும்போதே வெட்டிக் கொல்லனும் போல இருக்கே…” என்றவனின் குரலில் அத்தனை சோகம்.

அவனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“புரியுது மாப்ள… வாகீ கிட்ட நான் பேசறேன்…” என்ற சக்திவேல், வாகீஸ்வரி புறம் திரும்பி,

“என்ன வாகீ சொல்ற? இனிமே இந்த நாயோட சகவாசம் வெச்சுக்க மாட்டேன்னு சொல்லு…” என்றவரின் குரலிலும் உஷ்ணம். எப்படியாவது சமாதானப்படுத்தி வாழ வைக்க வேண்டுமே என்ற தவிப்பு!

“சக்தி… இது சரியில்ல… இந்த குப்பையெல்லாம் நான் என் குடும்பத்துல வெச்சு அழகு பார்க்கனுமா?” மகாலக்ஷ்மி சீறினார்.

வாகீஸ்வரி விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள். அவளது கண்களில் கோபம் கொழுந்து விட்டெரிந்தது.

“அத்த… எரியற தீயில இன்னும் எண்ணைய ஊத்தாதீங்கத்த. நம்ம குடும்பத்துக்கு நீங்கதான் இப்ப பெரிய மனுஷி. நீங்க தான அரவணைச்சு போகணும்…” என்றவரின் குரல் அத்தனை கெஞ்சுதலாக ஒலித்தது.

சக்திவேலின் அந்த வார்த்தைகளில் மகாலக்ஷ்மி கொஞ்சம் தணிந்து தான் போனார்.

“சரி நீயாச்சு மணியாச்சு… எனக்கு அசிங்கமா இருக்கு…” என்று சற்று நகர்ந்துவிட்டார். அவருக்கும் புரிந்தது. இரண்டு குழந்தைகள் இருக்கிறது, அதுகளுக்காக மருமகள் தேவை தான் என்று புரிந்தது. சக்திவேல் சுப்ரமணியின் முகத்தை பார்த்தார்.

“சரி… போனது போய் தொலையுது… இந்த **** கூட எனக்கு வாழ விருப்பமில்ல. ஆனா ரெண்டு புள்ளைங்க இருக்கு. அதுங்களுக்காக…” என்றவுடன் சக்திவேலின் முகத்தில் சிறிய நம்பிக்கை பிறந்தது…

“அந்த புள்ளைங்களுக்காகத்தான் நானும் கேக்கறேன் மாப்ள… உங்க கால்ல கூட விழறேன்…” என்றவரின் கண்கள் கலங்கிவிட்டது. சுப்ரமணியின் காலில் விழ போனார் சக்திவேல்.

அனைவரும் பதைபதைத்து விட்டனர்.

“டேய் சக்தி… என்னடா பண்ற?” செந்தில்நாதன் பதறிக் கொண்டு வந்தார்.

“இல்ல மச்சான்… எனக்கு வேற வழி தெரியல…” என்றவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. பார்த்துக் கொண்டிருந்த கார்த்தியாயினியின் கண்களிலும் கண்ணீர்.

தரையில் அமர்ந்திருந்த வாகீஸ்வரி சட்டென்று தலையை நிமிர்த்தினாள். அவளது கண்களில் துளியும் பயமோ, வெட்கமோ, குற்ற உணர்ச்சியோ இல்லை! மாறாக, ஒரு கொடூரமான ஆங்காரம் கொழுந்துவிட்டு எரிந்தது.

“அண்ணே… யார் கால்ல விழற? போதும் உன் நாடகத்தை நிறுத்து!” வாகீஸ்வரி கத்தினாள்.

அவளது அந்தக் குரல் கூடத்தில் இருந்த அனைவரையும் அதிர வைத்தது.

“என்னடி கூசாம பேசுற?” சுப்பிரமணி ஆத்திரத்தில் பாய வர, சக்திவேல் கையமர்த்தினார்.

“வாகீ… வாயை மூடு! தப்பு பண்ணிட்டு இன்னும் என்ன திமிரு உனக்கு?” சக்திவேல் கத்தினார்.

வாகீஸ்வரி தன் புடவையை இழுத்து இடுப்பில் செருகிக்கொண்டு எழுந்து நின்றாள். அவளது பார்வை தன் அண்ணன் சக்திவேலையும், அத்தை மகாலட்சுமியையும் சுட்டெரித்தது.

“ஆமா… நான் பண்ணினது தப்புதான்! ஆனா இதுக்கு முழு முதல் காரணம் நீயும் உங்கப்பனும்தான்!” வாகீஸ்வரி ஆங்காரமாக கத்தினாள்..

“அடிப்பாவி… எங்க அண்ணன் என்ன பண்ணாருடி? இந்த விளங்காத வெளக்குமாறு வேணான்னு நல்ல வாழ்க்கைய உனக்கு அமைச்சு குடுத்தாரு. அது தப்பா?” மகாலட்சுமி சீறினார்.

மகாலக்ஷ்மிக்கு அவள் பதிலளிக்கவில்லை. சக்திவேலை பார்த்தவள், “அன்னைக்கே நான் சொன்னேன்ல… எனக்கு இவனை பிடிக்கல, இந்த கிராமமும், சேறும் சகதியுமான இந்த நரகமும் எனக்கு வேண்டாம்னு உங்க கால்ல விழுந்து கதறுனேன்ல… அப்போ எங்கடா போச்சு உங்க பாசம்? சொந்த பந்தம்னு சொல்லி என் கழுத்துல இந்தத் தாலியைக் கட்டித் தொங்கவிட்டீங்களே… என் மனசு செத்துப் போன அன்னைக்கே நான் இந்த வீட்டை விட்டுப் போயிருக்கணும்! இந்த மனுஷனோட ஒரு நாள் கூட என்னால வாழ முடியலடா!”

வாகீஸ்வரி தன் கழுத்தில் கிடந்த தாலிக் கொடியை ஆத்திரத்தோடு கொத்தாகப் பற்றியவள், கழட்டி சுப்ரமணியின் முகத்தில் தூக்கி எறிந்தாள்.

“வாகீ… என்ன பண்ற நீ? குழந்தைகளுக்காக கொஞ்சம் பொறுமையா இரு…” கார்த்தி அதிர்ந்து சீறினாள்.

இதன்பின் இவள் வாழ்க்கை என்னவாகுமோ என்ற பயம் தான் அவளுக்கு!

“எனக்கு இந்த நரகத்துல ஒரு நிமிஷம் கூட இருக்கப் பிடிக்கல. எனக்கு வாசுதான் வேணும்… அவன்கூடத்தான் என் வாழ்க்கை!”

“அடிப்பாவி… இந்தப் புள்ளைங்களை நெனச்சாவது உனக்கு இரக்கம் வரலையா? அந்தப் பிஞ்சுகள நடுத்தெருவுல விட்டுட்டுப் போறேன்னு சொல்றியே!” காயத்ரி கதறினாள்.

“புள்ளைங்களா? அவங்களை நீங்களே வெச்சுக்கோங்க… நீங்களே வளர்த்துக்கோங்க. வளர்க்க முடியலைன்னா அநாதை ஆஸ்ரமத்துல விடுங்க. எனக்கு என் வாழ்க்கைதான் முக்கியம்!” வாகீஸ்வரி கொஞ்சமும் ஈவிரக்கமின்றித் துப்பினாள்.

“வாகீ… கொஞ்சமாவது இரக்கத்தோட பேசு ராசாத்தி. நாங்க பண்ணதே தப்பா இருக்கட்டும். விஷ்வாவ பாரு எப்படி உக்காந்துருக்கான்னு!” சக்திவேல் கைகாட்டி அழுகையோடு கெஞ்சினார்.

அவனைப் பார்க்கையில் குற்றவுணர்ச்சி இன்னும் பலமடங்காகியது. அதுவே அவளை இன்னும் இரும்பாக்கியது.

“எனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்ல! என்னை இப்ப இங்கேயே கொன்னு புதைச்சாலும் சரி… நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன்!” அவள் வெறிபிடித்தவளாய் நின்றாள்.

சுப்பிரமணி கையில் இருந்த அரிவாள்மனையைத் தரையில் ‘டங்’கென்று எறிந்தான். அவனது கண்களில் இருந்து அவமானக் கண்ணீர் வழிந்தது.

“அவளைப் போகச் சொல்லு சக்திவேலு… என் கண் முன்னாடி இவ ஒரு நிமிஷம் கூட நிக்கக் கூடாது. எவனோடவோ போயி நாசமாப் போகட்டும்… என் வீட்டு வாசப்படியை இனி இவ மிதிக்கக் கூடாது!” சுப்பிரமணி தலையில் கையை வைத்துக்கொண்டு சுவரோரம் சரிந்தான்.

அதற்கும் மேல் எதுவும் பேசவில்லை அவன்!

மௌனமாகினான், மொத்தமாக!

“ஒரு நிமிஷம் பொறுமையா இரு மாப்ள…” சக்திவேல் தடுத்தார்.

“இல்ல சக்திவேலு… இனி யோசிக்க ஒண்ணுமில்ல. அவளை போகச் சொல்லு!” செந்தில்நாதன் கறாராகச் சொன்னார்.

வாகீஸ்வரி ஒரு கணம் கூடத் தயங்கவில்லை. அங்கே ரத்தம் வழிய நின்ற வாசுவின் கையைப் பற்றினாள்.

“வா வாசு… போலாம்!”

ஒரு முறை கூடத் திரும்பிப் பார்க்கவில்லை!

கூடத்துத் தரையில் பித்துப்பிடித்து அமர்ந்திருந்த தன் மூத்த மகன் விஷ்வாவையோ… காயத்ரியின் இடுப்பில் கிடந்து கதறி அழுதுகொண்டிருந்த ஒன்றரை வயது மகள் மதிமலரையோ… அவள் ஒரு துளி கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை.

பெற்ற பாசத்தையும், குடும்பத்தின் மானத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, வாசுவோடு அந்த வீட்டின் வாசற்படியைத் தாண்டினாள் வாகீஸ்வரி!

வீடே மயான அமைதியில் மூழ்கியது.

காயத்ரி அழுகையோடு குழந்தையைத் தன் மார்போடு அணைத்துத் தேற்றிக்கொண்டிருக்க, மகாலட்சுமி நெஞ்சில் அடித்துக்கொண்டு வீடதிர அழுதார்.

“என் குடும்பத்தை இப்படி நடுத்தெருவுல நிறுத்திட்டுப் போயிட்டாளே சண்டாளி…”

சக்திவேல் தன் முகத்தைக் கைகளில் புதைத்துக்கொண்டு அந்தத் தூணில் சாய்ந்து நின்றார். கார்த்தியாயினியின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

அந்தப் பெரும் புயலின் மையத்தில்…

விஷ்வா இன்னும் அதே இடத்தில், அதே பாறையைப் போல அசைவற்று அமர்ந்திருந்தான். அவனது விரல்கள் பாப்பியின் கைகளை ஒரு விநாடி கூடத் தளர்த்தாமல் பிடித்திருந்தன. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த பாப்பியின் கன்னங்களைத் தன் கைகளால் மூடியிருந்தான். அவனது இன்னொரு கையை, கண்களில் கண்ணீரோடு ஜீவா இன்னும் விடாமல் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்தான்.

தாயை இழந்த அந்தப் பதினோரு வயதுச் சிறுவனின் நெஞ்சில், உலகத்தின் மீதான அத்தனை நம்பிக்கைகளும் சுக்குநூறாக உடைந்து போயிருந்தன.

இனி என்ன என்ற கேள்வி அனைவர் முன்பும் பூதாகரமாக நின்றது!

அன்று தங்கையின் பிள்ளைகளை அங்கேயே விட்டுவிட்டுத்தான் போனார் சக்திவேல். அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அலமலந்து நிற்கும் பிள்ளைகளை இன்னமும் வருத்த கூடாது என்ற எண்ணம் மட்டும் தான் அவருக்குள் இருந்தது.

ஆனால் பிள்ளைகளை பார்க்கும் போதெல்லாம் மகாலக்ஷ்மிக்கு அவர்களது அன்னை செய்த காரியம் தான் நினைவுக்கு வந்து தொலைத்தது. பிள்ளைகளை வார்த்தையால் வறுத்தெடுக்க தொடங்கினார். அவருக்கும் புரியாமலில்லை. ஆனாலும் அவரையும் மீறி பேசிய பேச்சுகளை கேட்டவுடன் சக்திவேலால் பிள்ளைகளை அங்கே விட்டு வைக்க மனம் வரவில்லை.

விடுமுறை முடிந்து கிளம்பும் போது விஷ்வாவையும் மதிமலரையும் அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.

பிள்ளைகள் இருவரும் கிளம்புவதை மெளனமாக கண்களில் நீரோடு பார்த்திருந்தான் சுப்பிரமணி.

ப்ரவா விடமாட்டேன் என்று கதறினாள். தங்கையை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று அவனுக்கும் புரியவில்லை. இன்னமும் அவனும் குழந்தை தானே!

தந்தையின் முகத்தை ஏக்கமாக பார்த்தான் விஷ்வா.

ஆனால் மணி எதுவும் பேசவில்லை. மௌனத்தை உடைக்கவில்லை. மனம் புண்பட்டு கிடந்தது!

அண்ணனை விட மாட்டேன் என ப்ரவா கதற கதற, கண்களில் கண்ணீர் வழிய தந்தையை ஏக்கத்தோடு பார்த்தபடி தாய்மாமனுடன் கிளம்பினான் விஷ்வா!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 9

முன்னிரவுப் பொழுதில் ஜீவன் மருத்துவக் கல்லூரி வளாகத்தின் பின்கோடியில் அமைந்திருந்த குவார்ட்டர்ஸ் அமைதியாக இருந்தது.இரண்டாம் தளத்து பி-பிளாக் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தால், மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டின் வெளிச்சமும், ஆம்புலன்ஸ்களின் நிழல்களும் தெரியும். ஹாலில் சுழன்ற மின்விசிறியின் காற்றில், மேஜை மேல் கிடந்த மருத்துவக்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 3

  1. Vinna Vinnaபொதுக் கருத்துVinna Vinna

    சக்திவேல் தங்கச்சியோட காதலுக்கு துணை நின்னு இருக்கலாம் இப்படி ஒரு அசிங்கம் நடக்காம இருந்திருக்கும்... இதுனால பாதிக்கப்படுறது விஷ்வா மாதிரி குழந்தைங்கதான்..ஆனாலும் சுயநலமா போனவ எதுக்கு ரெண்டு புள்ளைய பெத்தா புருஷன் கிட்ட விவாகரத்து வாங்கிட்டு காதலனோட போய் இருக்க வேண்டியது தான்.. 🤦‍♀️

    1. Sashi Muraliபொதுக் கருத்துSashi Murali

      தப்பு பண்றவங்க, அந்த தப்பு வெளிய தெரியும் போது செய்யற முதல் வேலை gaslighting தான் மா. வாகீஸ்வரிக்கு தான் செய்றது தப்புன்னு தெரியும். ஆனா அந்த தப்பை அண்ணன் மேல தூக்கி போடறது அவளுக்கு பெரிய விஷயம் இல்ல. அதுதான் guilt trap. அந்த குற்ற உணர்வுல அண்ணனால பேச முடியாதுன்னு தெரியும். அதை தான் பண்றா. emotional abuse பண்ற எல்லாருமே செய்யற விஷயம் தான் இந்த gaslighting

  2. Girijapriyaபொதுக் கருத்துGirijapriya

    Vaa vasu pogalam....Yenna amma iva....pasangala thirumbi kuda parkama pora😈😈😈 appa yedhuvum solluvangala nu vishwa partha mani kandukala😥 mahalakshmi amma vaageswai mela irrukura kovatha pasanga kitta kaatalama😈

உங்கள் கருத்தைப் பகிருங்கள்