அத்தியாயம் 9
முன்னிரவுப் பொழுதில் ஜீவன் மருத்துவக் கல்லூரி வளாகத்தின் பின்கோடியில் அமைந்திருந்த குவார்ட்டர்ஸ் அமைதியாக இருந்தது.
இரண்டாம் தளத்து பி-பிளாக் பால்கனியிலிருந்து எட்டிப்பார்த்தால், மருத்துவமனையின் எமர்ஜென்சி வார்டின் வெளிச்சமும், ஆம்புலன்ஸ்களின் நிழல்களும் தெரியும். ஹாலில் சுழன்ற மின்விசிறியின் காற்றில், மேஜை மேல் கிடந்த மருத்துவக் குறிப்பேடுகளின் தாள்கள் மெல்லப் படபடத்துக் கொண்டிருந்தன.
சோஃபாவில் ஒரு காலை மடக்கிப் போட்டுக்கொண்டு, கையில் சூடான தோசை தட்டோடு அமர்ந்திருந்தாள் மதுபாஷினி. அவளுக்கெதிரே இருந்த டீபாயில் மடிக்கணினியைத் திறந்து வைத்துக்கொண்டு அன்றைய அறுவைசிகிச்சை அட்டவணையின் நகலை சரிபார்த்துக் கொண்டிருந்த ப்ரவாவின் முகத்தில் எப்போதுமிருக்கும் அந்த நிதானமும், அழுத்தமும்!
வயதுக்கு மீறிய தலைமைப் பண்பும், சுற்றியிருப்பவர்களை இயல்பாக வழிநடத்தும் தன்மையும் அவளது அசைவுகளிலேயே தெரிந்தது. யார் மீதும் எக்காரணத்தைக் கொண்டும் கடிந்து பேசாத பொறுமைசாலி; ஆனால் அவள் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதற்குப் பின்னாலிருக்கும் நியாயத்தை யாராலும் அசைக்க முடியாது.
அவளுக்கு நேர்மாறாக, ஒரு காலை நாற்காலியின் மீது மடக்கிப் போட்டுக்கொண்டு, தோசையைத் தக்காளி தொக்கில் தொட்டு வாயில் போட்டபடி மும்முரமாக மென்று கொண்டிருந்தாள் மது.
எந்தவொரு இறுகிய சூழலையும் ஒரே நிமிடத்தில் கலகலப்பாக்கிவிடுவாள். மருத்துவமனையின் வாட்ச்மேனில் தொடங்கி டீன் வரை எல்லோரிடமும் ஒரே நாளில் தோழமையோடு பேசிவிடும் அசாத்திய சாமர்த்தியசாலி. எதையும் எளிதாக எடுத்துக்கொள்வது அவளது இயல்பு என்றாலும், அவளது சுயமரியாதையையோ அல்லது மருத்துவத் தொழில்முறையையோ யாராவது காரணமின்றிச் சீண்டினால், அடுத்த நொடியே அதே இடத்தில் சுளீரென்று திருப்பித் தரும் தன்மானமும் அவளது ஸ்பெஷாலிட்டி.
“ஏய் ப்ரவி… அந்த அனஸ்தீசியா டாக்டர் ஆனந்த்தை கவனிச்சியா இன்னைக்கு?” மது வாயைத் துடைத்துக்கொண்டே பேச்சைத் தொடங்கினாள்.
“ஏன்… அவருக்கென்னவாம்?” ப்ரவா மடிக்கணினியிலிருந்து கண்களை எடுக்காமல் சாதாரணமாகக் கேட்டாள்.
“என்னவாமா? மனுஷன் எப்ப பார்த்தாலும் தியேட்டருக்குள்ள வரும்போதே ஏதோ போர் முனைக்கு வர்ற மாதிரி முகத்தை உர்ருன்னு வச்சுட்டு வருவாரு. ஆனா, புதுசா வந்த கார்டியாக் டெக்னீஷியன் சுஜிதா ‘குட் மார்னிங் சார்’னு சொன்னதும், அப்படியே ஐஸ்கிரீம் மாதிரி உருகிப் போயிட்டாரு பாரு… ஒரே வழிசல்…” கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள் மது.
லேசாக சிரித்த ப்ரவா, “நீ யாரைதான் சும்மா விட்டிருக்க? பாவம் அவரு…” என்று மெல்லிய குரலில் பரிந்து பேசினாள்.
“என்னடி பாவம்? ஜொள்ளு விட்டா விட்டுட்டு போகட்டும். ஆனா மனுஷனுக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தைங்க இருக்காம்…” என்றவளின் குரலில் அப்பட்டமான காரம் தெரிந்தது.
“ஏன் கல்யாணமானவங்க சைட் அடிக்க கூடாதா? ஜொள்ளு விட கூடாதா?” கண்ணடித்தபடி குறும்புடன் கேட்ட ப்ரவாவை சிரித்தபடி பார்த்தாள் மது.
“தாராளமா அடிக்கலாம். ஆனா அது நாமளா மட்டும் தான் இருக்கணும் ப்ரவிக்குட்டி…” என்று சொல்லி அவளது தாடையைப் பிடித்து செல்லமாகக் கொஞ்சினாள் மது.
“நமக்கு இன்னும் கல்யாணம் ஆகல மேடம் ஹைனஸ்…” என்று நினைவூட்டினாள்.
“ஆனாக்காவும்…” மது உதட்டைப் பிதுக்கி அசட்டையாக இழுக்க,
“கஷ்டம் மதுகுட்டி… ஆனா ஆவன்னான்னு நல்லாத்தான் பாட்டு படிக்கற…” என்று அவளது பாவனையைக் கண்டு தலையசைத்தாள் ப்ரவா.
“அவரு மட்டுமா… அந்த ஓபிடி டாக்டர் சாந்தி மேடத்தை இன்னைக்குப் பாத்தியா? மார்னிங் ரவுண்ட்ஸ்ல அந்த நர்சிங் சூப்ரண்ட்டை வச்சு வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு இருந்தாங்க. என்னடான்னு பார்த்தா, ஓபிடில உட்கார வச்சிருக்கிற சேர் ஹைட் கம்மியா இருக்காம்! இவங்களுக்கு முழங்கால் வலிக்குதாம்…”
மது தலையையசைத்து அலுத்துக்கொள்ள, ப்ரவா கலகலவெனச் சிரித்துவிட்டாள்.
“அட நீ வேற, மார்னிங் ரவுண்ட்ஸ்ல வந்து நின்னுட்டு, ‘நான் கேன்டீன்ல சுகர் லெஸ் டீ கேட்டா சர்க்கரையைப் போட்டுக் குடுத்துட்டாங்க’ன்னு நர்ஸ்ங்ககிட்ட கத்திட்டு இருக்காங்க. பாவம் அந்த நர்ஸ்…” ப்ரவா நிலவரத்தைச் சொல்லிச் சிரிக்க, மதுவாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
வாய்விட்டு சிரித்தவள், “அப்புறம் நம்ம நியூரோ அரவிந்த் பண்ணின வேலை தெரியுமா?” என்று ஆர்வத்தைத் தூண்டுவது போல் கேட்க,
ப்ரவா, “என்ன…” என்று கேட்டாள் சுவாரசியமாக! இருவரும் உட்கார்ந்து காஸிப் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே இருவருக்கும் தெரியாது.
“நேத்து நைட் பேஷன்ட்டுக்கு கானுலா போடப் போயி, நடுக்கத்துல தன் விரல்லயே குத்திட்டு நின்னுட்டு இருந்தான். நர்ஸ்ங்க எல்லாம் சிரிக்கிறதைப் பார்த்துட்டு இன்னும் வெலவெலத்துப் போயிட்டான். அப்புறம் ஜீவா சார்தான் கூப்பிட்டு, ‘ரொம்ப டென்ஷன் ஆகாதடா, முதல்ல தண்ணி குடி’ன்னு கூல் பண்ணி அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வச்சாரு.” என்று மது விவரித்துச் சிரித்தபடி கூறவும்,
“ஜீவா சாரா! பரவால்லையே…” என்று அவளும் சிரிக்க,
மது, உதட்டோரம் குறும்புச் சிரிப்புடன், “ஜீவா உனக்கும் சாரா?” என்று நக்கலாகக் கேட்டாள்.
ப்ரவா சளைக்காமல், “பின்ன மோரா?” என்று திருப்பிக் கேட்டாள்.
“எல்லார் கிட்டயும் நீ நடிக்கலாம். ஆனா என்கிட்ட முடியாது ப்ரோ…” என்று கிண்டலாக விரல் நீட்டினாள் மது.
“என்ன நடிப்பை பார்த்துட்ட?” தோள்களைக் குலுக்கி அலட்டிக்கொள்ளாமல் கேட்டாள் ப்ரவா.
“ஏய், உனக்கு ஜீவா மாமா இல்லையா?” ப்ரவாவின் கண்களை ஊடுருவி நேரடியாகவே கேட்டாள் மது.
ப்ரவாவின் முகம் சட்டென நிதானத்துக்குத் திரும்பியது. “அதை பத்தியெல்லாம் கொஞ்சம் கூட நான் யோசிக்கல மது. முதல்ல என்னோட அண்ணன், மதி… எனக்கு திரும்பவும் அவங்க வேணும். அவங்க சித்தா கூட பேசறாங்களோ இல்லையோ, எனக்கு திரும்பவும் அண்ணன் வேணும் மது…” என்றவளின் விழிகளில் மெல்லிய திரையெனக் கண்ணீர் கரை கட்டியது.
அவளது கைமேல் தன் கையை வைத்து அழுத்திய மது, “எல்லாம் பண்ணலாம். அதுக்காக லைஃப்பை எஞ்சாய் பண்ணாம இருக்கனுமா?” என்று சூழலை மாற்றும் தோரணையில் கேட்டாள்.
“நான் என்ன எஞ்சாய் பண்ணாம இருக்கேன்?” தன் உணர்வை மறைத்துக் கொண்டு இயல்பாகக் கேட்டாள் ப்ரவா.
“என்ன பண்ற? செம மேன்லியா இருக்கான் உன் ஆளு. அவனை கவர் பண்ணி சம்திங் சம்திங் பாக்கலாம்ல…” என்று மது ஒற்றைக் கண்ணை அடித்து குறும்பாக சீண்டினாள்.
“அது எவன்டி என் ஆளு?” புருவங்களை உயர்த்தி முறைத்தாள் ப்ரவா.
“உன்னோட தம்பிமாமா தான். வேற யாரு?” அசால்ட்டாகச் சொல்லி சிரித்தாள் மது.
“லூஸு… மாமான்னா உடனே ரொமான்ஸா? பைத்தியமே…” ப்ரவா தலையில் அடித்துக் கொண்டாள்.
“ஏன்? எனக்கெல்லாம் அப்படியொரு மாமா இருந்தா எப்படி இருக்கும் தெரியுமா?” என்று வானத்தைப் பார்த்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் ப்ரவா.
“ஏன், இப்பவே அவரை உனக்கு மாமாவா தத்தெடுத்துக்க…” ப்ரவா போகிற போக்கில் வழிகாட்ட,
“ச்சை முறைய மாத்தாதடி… எனக்கு விஷ்வான்னு பிக்ஸ் ஆகிட்டேன்… நான் உனக்கு அண்ணி…” என்று மது தன் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள,
“என்னவோ பண்ணு…” என்று தாளாமல் சிரித்தாள் ப்ரவா. அவளுக்குத் தெரியும், மது இதுபோலக் கூறும் எதுவுமே தீவிரமான திட்டம் இல்லை, வெறும் வம்புப் பேச்சுதான் என. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு ஆறுதலான சந்தோஷம் படரத்தான் செய்தது.
“ஆனாலும் ஜீவா சார் எப்பவுமே செம… மனுஷனுக்கு என்ன டென்ஷன் இருந்தாலும் மிஸ்டர் கூலா இருக்கார். அதே சமயம் ஸ்ட்ரிக்ட் சிங்காரமாவும் இருக்கார்…” மது மெச்சலாகச் சொன்னாள்.
“அவர் சின்னதுலையே அப்படித்தான் மதுக்குட்டி.” என்றவளின் கண்களில் அந்தக் கடந்த காலத்தின் வாசம்!
அவளது முக மாற்றத்தைக் கவனித்த மதுவின் குரல் சட்டெனக் கனிந்தது. “விஷ்வா தான் ரொம்ப பாவம்ல…” என்றவளுக்கு உண்மையிலேயே நெஞ்சில் பாரம்!
முன்தினம் தான் பழைய சம்பவங்களை எல்லாம் அழுதபடி சொல்லியிருந்தாள் ப்ரவா.
“ம்ம்ம்…” என்றவள் தன் மார்பில் ஏறிய பாரத்தை ஒரு பெருமூச்சோடு இறக்கி வைத்தாள்.
அவளது கையை இறுகப் பற்றிக் கொண்ட மது, “நான் இருக்கேன் ப்ரவி. ரெண்டு பேரும் சேர்ந்து அந்த அசால்ட் ஆறுமுகத்தை அட்டாக் பண்ணுவோம்…” என்றாள். வார்த்தைகளில் குறும்பு இருந்தாலும், அவளது கண்களில் அதுவொரு ஆழமான தீர்மானமாகவே ஒளிர்ந்தது.
“ஹோய் என்ன எங்கண்ணன் உனக்கு அசால்ட் ஆறுமுகமா?” தன் அண்ணனுக்காகப் போலியாக வரிந்துகட்டிக்கொண்டு கேட்டாள் ப்ரவா.
“பின்ன பட்ஜெட் பரந்தாமனா?” சற்றும் தயங்காமல் மது பதிலடி கொடுத்தாள்.
“உனக்கிருக்க கொழுப்புக்கு கண்டிப்பா நல்லா குடுப்பான்…” எச்சரிக்கும் தொனியில் சொன்னாள் ப்ரவா.
“கொடுத்தா வேண்டாம்னா சொல்ல போறேன்…” என்று இமைகளைச் சிமிட்டி ஒரு மாதிரியாகச் சொன்னாள் மது.
“அடியே வேண்டாம்…” மிரட்சியோடு தலையசைத்தாள் ப்ரவா.
“ஆமா, உங்கண்ணனை இப்படியே இருக்க வேண்டாம்ன்னு சொல்லு… இல்லைன்னா கடிச்சு வெச்சுருவேன்…” உதட்டைக் கடித்துக்கொண்டு சவடாலடித்தாள் மது.
அவளது தோரணையில் ஏதோ விபரீதம் மணக்கவே, “இப்ப புதுசா என்ன வம்பு பண்ண?” என்று சந்தேகத்தோடு கேட்டாள் ப்ரவா.
“நான் என்ன பண்ணேன்? உன் நொண்ணன் தான் பண்ணான்…” என்று மது படாரெனக் குண்டைத் தூக்கிப் போடவும், லேசாக ஜெர்க்கானாள் ப்ரவா.
“ஒய்… என்னடி?” படபடப்போடு நிமிர்ந்தமர்ந்தாள் ப்ரவா.
“ஐசியூல கவினோட போஸ்ட்-ஆப் மானிட்டரிங் ஷீட்ல ஒரு சின்ன பொட்டாசியம் வேல்யூ ரீடிங்… லேப்லருந்து பிரிண்ட் வர ஒரு பத்து நிமிஷம் லேட். அதுக்கு என்னை கடிக்கறாரு.” என்றவள், குரலையும் முகபாவத்தையும் அப்படியே மாற்றி, விஷ்வாவைப் போல விழிகளை உருட்டி முறைத்தபடி, “டாக்டர் மதுபாஷினி, பேஷண்ட்டோட பல்ஸ் நிமிஷத்துக்கு நூறு தடவை துடிக்கும்போது, நீங்க பத்து நிமிஷம் லேட்டா யோசிச்சா பேஷன்ட் எங்க போவாரு? யூ ஆர் அன்பிட் ஃபார் திஸ் கார்டியாக் ஐசியூ’ன்னு எல்லாரும் முன்னாடியும் மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்றாரு!” என்று நடித்துக் காட்டினாள். அவளது வார்த்தைகளில் கொப்பளித்த கடுப்பை ப்ரவாவால் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது.
“பதிலுக்கு நீ என்ன பண்ணின?” எப்படியும் இவள் சும்மா வந்திருக்க மாட்டாள் என்று நன்றாகவே தெரியும் ப்ரவாவுக்கு.
“நான் என்ன சும்மாவா விடுவேன்? தப்பு லேப் நெட்வொர்க்ல இருக்கு. அதுக்கு என் எஃபீசியன்சியை குறை சொல்ல அவருக்கென்ன உரிமை இருக்கு? ஃபைலை டேபிள்ல ‘டப்’புன்னு வச்சுட்டு, ‘சார்… என் டியூட்டில நான் என்ன செய்யணுமோ அதை பெர்ஃபெக்ட்டா செஞ்சிருக்கேன். சீனியர்னா ஒரு சக டாக்டரை எப்படி நடத்தணும்னு கத்துக்கோங்க’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன்!” கையை வீசி வீராப்பாகச் சொன்னாள் மது.
ப்ரவா கண்களை விரித்துப் பார்த்தாள். “அடிப்பாவி… அவனை எல்லாரும் முன்னாடியும் அப்படி பேசினியா?” அதிர்ச்சியில் அவளது குரல் கிசுகிசுப்பானது.
“பின்ன என்ன? எச்.ஓ.டியா இருந்தா எதை வேணாலும் பேசலாமா? ஆனா… அவன் அப்ப திட்டுனது கூட எனக்குப் பெருசா வலிக்கல ப்ரவி. அதுக்குப் பிறகு ஈவினிங் நடந்ததை நினைச்சாத்தான் மனசு வலிக்குது…” மதுவின் குரல் சட்டெனத் தன் வேகத்தை இழந்து தணிந்தது.
“என்ன ஆச்சு மது?” மடிக்கணினியை ஒதுக்கிவிட்டு, மிகவும் சீரியஸாகக் கேட்டாள் ப்ரவா.
“ரவுண்ட்ஸ் முடிஞ்சு எல்லாரும் கிளம்பின பிறகு, அவரு எச்.ஓ.டி ரூம்ல தனியா நின்னுட்டு இருந்தாரு. சரி, நாமும் கொஞ்சம் கோபத்துல பேசிட்டோமோன்னு தோணிச்சு. மெதுவா உள்ள போய், டேபிள்ல ஒரு கப் காஃபியை வச்சுட்டு, ‘சார்… எதுக்கெடுத்தாலும் கோபப்படாதீங்க. கூலா இருங்க. குறைஞ்சு போய்ட மாட்டீங்க…’ன்னு ரொம்ப எதார்த்தமா, அக்கறையோடதான் சொன்னேன் ப்ரவி…”
ப்ரவாவின் இதயம் ஒரு கணம் விதிர்த்தது. விஷ்வாவின் சுபாவம் தெரிந்தவளாய், ‘அடிப்பாவி…’ என்று நினைத்துக் கொண்டவள், “அதுக்கு அவன் என்ன சொன்னான் மது?” என்று படபடப்புடன் கேட்டாள்.
“ம்ம்ம் வெங்காயம்னான்…” என்று முகத்தைச் சுளித்துக் கடுகடுத்தவள், மீண்டும் அவனைப் போலவே குரலை இறுக வைத்துக்கொண்டு, “டாக்டர் மதுபாஷினி… இந்த மாதிரி அட்வைஸ் பண்ற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க. என் எல்லைக்குள்ள கால் வைக்க முயற்சி பண்ணாம, உங்க வேலையை மட்டும் பார்த்துட்டுப் போங்க’ன்னு சொல்றான்!” என்றவளுக்கு அந்த அவமானம் நினைவுக்கு வந்து மூச்சிரைத்தது.
அதை மட்டுமா சொன்னான்? இன்னும் அவன் கேட்ட கேள்விகளும் பேசிய வார்த்தைகளும் கொஞ்சமா நஞ்சமா?
‘என்ன ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க மதுபாஷினி? ஆர் யூ ஹிட்டிங் ஆன் மீ? சான்ஸே இல்ல. சோ டோன்ட் ட்ரை. என்னை பொறுத்தவரைக்கும் லவ்வெல்லாம் இல்ல… அது ஜஸ்ட் லஸ்ட். மேரேஜ் இஸ் எ ஸ்காம். இன்ஸ்டியுஷனலைஸ்ட் ப்ராஸ்டியுஷன். உனக்கு வேணும்னா சொல்லு, வி கேன் ஹேவ் எ ஒன் நைட் ஸ்டான்ட். ஆனா நோ ஸ்ட்ரிங்ஸ் அட்டாச்ட். ரைட்? என்ன ஓகே வா?” கொஞ்சமும் கருணையே இல்லாமல் அவன் பேச பேச முகமெல்லாம் சிவந்து, கண்கள் கலங்கி, தனியே ஒரு பாடு அழுது முடித்தாள்.
நெஞ்சமெல்லாம் நசநசவென பிராண்டிக் கொண்டிருந்தது அவனது வார்த்தைகள்! அவன் அப்படியெல்லாம் பேசுவது, அவளை தன் எல்லைக்குள் நுழைய விடாமல் தூக்கி எறியத்தான் என்பதையும் அவள் உணர்ந்துதான் இருந்தாள்.
ஆனால் அதையெல்லாம் ப்ரவாவிடம் அவள் சொல்ல விரும்பவில்லை. ரொம்பவுமே காயப்பட்டு போய்விடுவாள்.
“அவன் கிட்ட அளவா வெச்சுக்கடி. தேவையில்லாம வம்பிழுக்காத…” என்று ப்ரவா உண்மையான அக்கறையுடனும் பயத்துடனும் எச்சரித்தாள்.
“அப்படி விட்டுட்டா என் கெத்து என்னாகறதுடி?” மூக்கை விடைத்துக்கொண்டு எகிறினாள் மது.
“நீயே ஒரு வெத்து… உனக்கெதுக்கு கெத்து?” சலிப்பாகக் கையை அசைத்தாள் ப்ரவா.
“நான் வெத்தா? பாக்கலாம்… நானா உன் நொண்ணனனான்னு…” மது இடுப்பில் கையை வைத்துக்கொண்டு கறுவினாள்.
“அப்புறம் தேவையில்லாம அழுதுட்டு நிக்காத. சொல்லிட்டேன்…” ப்ரவா கவலையோடு அவளது ஆவேசத்தைக் கட்டுப்படுத்தப் பார்த்தாள்.
“நான் அழறேனா, உன் நொண்ணன் அழறானான்னு நானும் பாக்கறேன்…” பற்களை நறநறவெனக் கடித்தாள் மது.
“இப்ப எதுக்கு ஓவரா சீன் போடற?” அவளது வீம்பைத் தாள முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டாள் ப்ரவா.
“பின்ன கொஞ்சநஞ்சமா என்னை அசிங்கப்படுத்துறான்? இதுக்கெல்லாம் அவன் பதில் சொல்லியே ஆகணும்…” வீர ஆவேசத்துடன் சபதம் செய்தவளைப் பார்த்துப் பரிதாபமாகத் தலையசைத்தாள் ப்ரவா. இவளது ஒவ்வொரு சபதமும் எங்கே போய் முடியும் என்று அவளுக்குத் தெரியாதா?
“என்ன பதில் சொல்லணும்?” அவளது ஆவேசத்தை மழுங்கடிக்கும் விதமாக அலட்டிக்கொள்ளாமல் கேட்டாள் ப்ரவா.
“லவ்வு லவ்வுன்னு என் பின்னாடியே சுத்தணும். நீ இல்லைன்னா எனக்கெதுவுமே இல்ல மதுக்குட்டின்னு என்னை கெஞ்சனும்…” தன் கற்பனையில் மிதந்தபடி கண்களை விரித்துச் சொன்னாள் மது.
“போதுமா?” நக்கலாகக் கேட்டாள் ப்ரவா.
“இப்போதைக்கு போதும்… அப்புறமா யோசிச்சு சொல்றேன்…” மிகவும் சீரியஸான முகபாவத்தோடு சொன்னவளைப் பார்த்து நெற்றியில் அடித்துக் கொண்டாள் ப்ரவா.
“கனவு கண்டுகிட்டே இரு…” என்று உதட்டை வளைத்தவளைப் பார்த்து சுள்ளென்று முறைத்தாள் மது.
“உன் நாத்தனார் கெத்த காட்டதடி. கொன்றுவேன். இதுக்கெல்லாம் நீ தான் ஹெல்ப் பண்ணனும்.” அடுத்த கணமே தன்னுடைய முந்தைய வீரம் வடிந்து, கெஞ்சும் பூனையாக ப்ரவாவின் தோளைப் பிடித்து உலுக்கினாள் மது.
“பிச்சை எடுக்குதாம் பெருமாளு… அதைப் புடுங்குச்சாம் அனுமாரு… நானே என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருக்கேனாம். இதுல இவளுக்கு லவ் வேற… ச்சீ பே…” என்று சலித்துக் கொண்டவள், மீண்டும் லேப்டாப்பில் ஐக்கியம் ஆக முயன்றாள்.
மது அவளது லேப்டாப் திரையை இழுத்து மூடிவிட்டு, நாடகப் பாணியில் விரலை நீட்டி, “அசோக்… இந்த தேதிய குறிச்சு வெச்சுக்கோ. நீ எப்படி என்னை கலாச்சு, ச்சீ பே சொன்னியோ, அதே மாதிரி… அதே மாதிரி… உன் நொண்ணன கைக்குள்ள போட்டுக்கிட்டு நான் உனக்கு ச்சீ பே சொல்றேன்…” என்று அண்ணாமலை ரஜினியாக விஸ்வரூபம் எடுத்து சபதம் செய்தவளைப் பார்த்துத் தன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு வாய்விட்டுச் சிரித்தாள் ப்ரவா.
சிரித்து முடித்து மதுவின் தலையில் செல்லமாக ஒரு தட்டு தட்டிய ப்ரவா, “ஐ அம் வெய்ட்டிங்…” என்று சவால் விட்டாள்.
அவளது நக்கலான அந்தப் பார்வையை முறைத்துப் பார்த்த மது, “உண்மைய சொன்னா இந்த உலகம் எங்க நம்புது?” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
மதுவின் அந்தப் பிடிவாதமான, கள்ளமில்லாத பாசத்தைப் பார்த்தபோது ப்ரவாவின் நெஞ்சிலொரு பெருத்த நிம்மதிப் பெருமூச்சு எழுந்தது. அண்ணன் தன்னைச் சுற்றி எழுப்பி வைத்திருக்கும் அந்த முரட்டுப் பாறைக்கு மருந்து போட, இந்த மதுவின் அசாத்தியமான துடுக்குத்தனத்தாலும் எதிர்பார்ப்பில்லாத அன்பாலும் மட்டுமே முடியும் என்ற நம்பிக்கை அவளது உள்ளுணர்வில் ஆழமாக வேரூன்றியது.
“சரிதான்டி… முதல்ல நாளைக்கு மார்னிங் கவினோட கேஸ் ஃபைலை ஒழுங்கா ரெடி பண்ணு. அங்க போயி ஏதாவது தப்பு நடந்துச்சுன்னா விஷ்வா சார் மறுபடியும் பொளந்து கட்டிடுவாரு!” புன்னகையோடு எச்சரித்தபடி மடிக்கணினியை மீண்டும் திறந்தாள் ப்ரவா.
“அதை நான் பாத்துக்குறேன்டி!” மது வழக்கம் போலத் தன் அழகிய விழிகளைச் சிமிட்டித் தைரியமாகச் சிரிக்க, அந்த அறையின் அமைதியில் இருவரும் அடுத்த நாள் பணிகளுக்கான குறிப்புகளை நோக்கித் திரும்பினர்.
***
மூன்றாம் தளத்தில் இருந்த கார்டியாலஜி புறநோயாளிப் பிரிவு (ஓபிடி) வழக்கம் போலப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பளபளக்கும் மார்பிள் தரை, செவிலியர்களின் காலடிச் சத்தங்கள், டோக்கன் அழைக்கும் மின்னணுத் திரையின் மெல்லிய ஒலி என ஓபிடிக்கான அத்தனை அலங்காரத்துக்கும் குறைவில்லாமலிருந்தது.
எச்.ஓ.டி கேபினில் ஏசியின் மெல்லிய இரைச்சல் மட்டுமே. சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்த விஷ்வாவின் தோற்றத்தில் எஃகு போன்ற உறுதி. அலைபாயாத நிதானம், கூர்மையான பார்வை, கச்சிதமாக மடிக்கப்பட்ட முழுக்கை சட்டை. அவனது கழுத்தில் தொங்கிய லிட்மேன் ஸ்டெதாஸ்கோப் கூட அவனது கம்பீரத்திற்கு மேலும் மெருகூட்டியது.
அவனுக்கு இடதுபுறம் சற்றுத் தள்ளி, நாற்காலியில் குறிப்பேடும் கையுமாக அமர்ந்திருந்தாள் மதுபாஷினி.
விளையாட்டுத்தனங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஒரு முழுமையான ஜூனியர் டாக்டராக, எச்.ஓ.டியின் கவனிப்பு வளையத்திற்குள் எந்தத் தவறும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அவளது கவனம் முழுவதும் குவிந்திருந்தது. விஷ்வா கேட்கும் ஒவ்வொரு ஃபைலை எடுத்து தருவது முதல், அவனது கை அசைவுகளையும் கூட தீவிரமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தாள்.
கதவு தட்டப்பட்டு, முதல் பேஷன்ட் உள்ளே நுழைந்தார். அறுபது வயதைத் தொட்ட பெரியவர், மூச்சுத் திணறலோடு தன் மகனின் தோளைப் பற்றியபடி மெல்ல நடந்து வந்து நாற்காலியில் அமர்ந்தார்.
விஷ்வா ஃபைலைத் திறந்து பார்த்தான். அவனது கண்கள் இசிஜி தாளிலும், முந்தைய எக்கோ கார்டியோகிராம் அறிக்கையிலும் மின்னல் வேகத்தில் ஓடின.
“பெரியவரே… எப்பத்துலருந்து நெஞ்சுல பாரம் இருக்கு? படுத்தா இருமல் வருதா?” விஷ்வாவின் குரல் கனிவாக இல்லை என்றாலும், அதில் மருத்துவரின் அழுத்தமான அதிகாரமிருந்தது.
“ரெண்டு நாளா ராத்திரியில படுக்கவே முடியல தம்பி… காலு ரெண்டும் பயங்கரமா வீங்கிருக்கு. மூச்சு வாங்கிக்கிட்டே இருக்கு…” பெரியவர் திணறினார்.
விஷ்வா எழுந்து வந்து, ஸ்டெதாஸ்கோப்பை அவரது மார்பில் வைத்து இருதய ஒலிகளையும், நுரையீரலின் அடிவாரத்தையும் சோதித்தான். அவனது விரல்கள் பெரியவரின் கால்களில் இருந்த வீக்கத்தை மெல்ல அழுத்திப் பார்த்தன. குழி விழுந்து மெதுவாக மீண்டது.
“பைலேட்டரல் பேசல் கிரெபிட்டேஷன்ஸ் இருக்கு… சிவியர் எல்வி டிஸ்ஃபங்க்ஷன். எஜெக்ஷன் பிராக்ஷன் வெறும் முப்பது சதவிகிதம் தான்…” என்று விஷ்வா திரும்பி மதுவைப் பார்த்து மிக மெல்லிய குரலில் சொன்னான்.
மது உடனே தலையசைத்துத் தன் நோட்பேடில் குறித்துக் கொண்டாள்.
“இன்ஜெக்ஷன் ஃப்யூரோசிமைட் நாற்பது எம்ஜி ஐவி ஸ்டாட்… கூடவே ஸ்பைரனோலாக்டோன் இருபத்தைந்து எம்ஜி டேப்லெட் ஸ்டார்ட் பண்ணுங்க. பிளட் பிரஷர் நூற்றியிருபதுக்கு எண்பது இருக்கு… சோ, ஏசிஇ இன்ஹிபிட்டர்ஸ்ல எனாலப்ரில் ரெண்டரை எம்ஜி லோ டோஸ்ல ஆரம்பிச்சு டைட்ரேட் பண்ணனும்…” விஷ்வா சொல்லச் சொல்ல, மதுவின் பேனா வேகமாக ஓடியது.
“சார், ஒரு சந்தேகம்…” மது பணிவோடு குரலைத் தணித்துக் கேட்டாள்.
விஷ்வா அவளை ஏறிட்டான். “கேளுங்க.”
“பேஷன்ட்டுக்கு எஜெக்ஷன் பிராக்ஷன் இவ்வளவு கம்மியா இருக்கும்போது, பீட்டா பிளாக்கர்ஸ் உடனே ஆரம்பிக்கக் கூடாதா சார்?”
“நோ…” விஷ்வாவின் பதில் தட்டையாக வந்தது. “பேஷன்ட் இப்போ அக்யூட் டீகம்பன்சேட்டட் ஹார்ட் ஃபெய்லியர்ல இருக்காரு. நுரையீரல்ல தண்ணி தேங்கி மூச்சுத் திணறும் போது பீட்டா பிளாக்கர் கொடுத்தா மயோகார்டியல் கான்ட்ராக்டிலிட்டி இன்னும் குறைஞ்சு கார்டியோஜெனிக் ஷாக்ல கொண்டு போய் விட்டுடும். முதல்ல டையூரெடிக்ஸ் குடுத்து, லங்ஸ்ல இருக்கிற ஃப்ளூயிடை வெளியேத்தி, பேஷன்ட் யூவோலெமிக் ஸ்டேட்டுக்கு வந்த பிறகுதான் பீட்டா பிளாக்கர்ஸை லோ டோஸ்ல ஆரம்பிக்கணும். புரிஞ்சதா?”
“புரிஞ்சது சார்…”
அவளது விரல்கள் அந்த விளக்கத்தைத் தெளிவாகப் பதிவு செய்தன. விஷ்வாவின் கடுகடுப்புக்கு அப்பால், அவனது மருத்துவ ஞானத்தை, ‘சரியான மண்டை தான்…’ என்று அவள் மீண்டும் ஒருமுறை உள்ளுக்குள் மெச்சிக் கொண்டாள். பெரியவரை ஐசியூவில் அட்மிட் செய்ய உத்தரவிட்டு அடுத்த கேஸுக்கு நகர்ந்தான்.
அடுத்ததாக உள்ளே வந்தது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு நடுத்தர வயதுக்காரர். படபடப்பும் வியர்வையுமாக அமர்ந்தார்.
“சார்… நேத்து ராத்திரியில இருந்து நெஞ்சு ஏதோ படபடன்னு அடிக்குதுங்க. கூண்டுக்குள்ள அடைபட்ட குருவி மாதிரி சிறகடிக்குது… தலை வேற சுத்துதுங்க…” என்று பதறினார்.
விஷ்வா அவரது நாடியைப் பிடித்துப் பார்த்தான். நாடித் துடிப்பு ஒரு சீரான தாளமின்றி, தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தது.
“இசிஜி பாருங்க டாக்டர் மதுபாஷினி…” விஷ்வா தாளை அவளிடம் நீட்டினான்.
மது கூர்ந்து கவனித்தாள். “பி வேவ்ஸ் மிஸ்ஸிங் சார்… ஆர்-ஆர் இன்டர்வல்ஸ் ஒழுங்காவே இல்ல. ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் வித் ரேபிட் வென்ட்ரிகுலர் ரெஸ்பான்ஸ்… ஹார்ட் ரேட் நூற்று நாற்பது வரைக்கும் போகுது.”
“குட். அடுத்த ஸ்டெப் என்ன?” விஷ்வா அவளைச் சோதிக்கும் தொனியில் கேட்டான்.
“ரேட் கண்ட்ரோலுக்கு மெட்டாப்ரோலால் அல்லது டில்டியாசெம் கொடுக்கலாம் சார்… கூடவே கார்டியோவர்ஷன் பத்தி யோசிக்கலாம்…” மது சொன்னாள்.
“அவசரப்படாதீங்க…” விஷ்வா தலையசைத்தான். “இந்த அரீத்மியா ஆரம்பிச்சு நாற்பத்தெட்டு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. இப்போ நாம அவசரப்பட்டு கார்டியோவர்ஷன் பண்ணி நார்மல் சைனஸ் ரிதம்க்குக் கொண்டு வர நினைச்சா, ஏட்ரியல் அப்பென்டேஜ்ல ஏதாவது ரத்த உறைவு ஃபார்ம் ஆகியிருந்தா அது நேரா மூளைக்குத் தள்ளப்பட்டு ஸ்ட்ரோக் வர வாய்ப்பிருக்கு. சோ, இப்போதைக்கு ரேட் கண்ட்ரோல் மட்டும் தான். அப்புறம் எக்கோ பண்ணி த்ராம்பஸ் எதுவும் இல்லைன்னு உறுதி பண்ணிட்டு, சிஏசிஹெச்ஏடிஎஸ்-விஏஎஸ்சி ஸ்கோர் கால்குலேட் பண்ணி ஓரல் ஆன்டிகோவாகுலண்ட்ஸ் ஆரம்பிக்கணும்.”
மதுவின் பேனா மீண்டும் குறிப்புகளை அள்ளியது. விஷ்வாவின் ஒவ்வொரு அணுகுமுறையும் புத்தகப் படிப்பை விடவும் கள அனுபவத்தின் ஆழத்தைப் பறைசாற்றியது.
அந்த நோயாளிக்கு மருந்துச் சீட்டை எழுதிக் கொடுத்து அனுப்பியதும், மூன்றாவது டோக்கன் அழைக்கப்பட்டது.
உள்ளே நுழைந்த தம்பதியினரைக் கண்டதும் கேபினின் சூழல் மெல்ல மாறியது. இருவருக்கும் முப்பது வயதுக்குள் தான் இருக்கும். பயமும் தயக்கமும் அப்பிய முகத்தோடு வந்து அமர்ந்தனர்.
கணவன் தயங்கித் தயங்கித் தன் மனைவியின் மெடிக்கல் ஃபைலை விஷ்வாவிடம் நீட்டினான். “சார்… என் மனைவி கவிதா. போன மாசம் மாடிப்படி ஏறும் போது மயங்கி விழுந்துட்டான்னு பக்கத்து ஊர்ல செக் பண்ணினோம். அவங்களுக்கு ஹார்ட்ல ஏதோ பிரச்சனைன்னு சொல்லி உங்ககிட்ட அனுப்பி வச்சாங்க…”
விஷ்வா ஃபைலை வாங்கிப் பிரித்தான். முந்தைய மருத்துவமனையின் எக்கோ ரிப்போர்ட், டிரான்ஸ்தொராசிக் கார்டியோகிராம் படங்கள் எல்லாவற்றையும் அவனது கண்கள் ஊடுருவின. அவனது புருவங்கள் லேசாக முடிச்சிட்டன.
“சிவியர் மைட்ரல் ஸ்டெனோசிஸ்… வால்வ் ஏரியா ஒரு சதுர சென்டிமீட்டருக்கும் குறைவா இருக்கு. கூடவே மாடரேட் பல்மனரி ஆர்ட்டீரியல் ஹைபர்டென்ஷன்…” விஷ்வா ஃபைலை மூடிவிட்டு அவர்களை ஏறிட்டான்.
கணவன் அவனது முகத்தையே ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது குரலில் ஒரு பெரும் ஏக்கம் கலந்திருந்தது. “சார்… எங்களுக்குக் கல்யாணமாகி மூணு வருஷம் ஆகுதுங்க. சொந்த பந்தமெல்லாம் குழந்தை இல்லையேன்னு கேட்டு நாலா பக்கமும் குடையறாங்க. என் மனைவிக்கும் ஒரு குழந்தையைப் பெத்துக்கணும்னு ரொம்ப ஆசை… இப்போ இந்த ஹார்ட் பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சதும் ரொம்ப உடைஞ்சு போயிட்டா. நாங்க குழந்தை பெத்துக்கலாமா சார்? அதுக்கு ஏதாவது வழி இருக்கா?”
அந்தக் கேள்வியைக் கேட்டதும் விஷ்வாவின் கண்கள் ஒரு கணம் இறுகின.
மது தன் கையில் இருந்த நோட்பேடை மடியில் வைத்தபடி, விஷ்வாவின் முக மாற்றத்தைக் கூர்ந்து கவனித்தாள்.
விஷ்வா நிதானமாக மேஜை மேல் கைகளைக் கோர்த்துக் கொண்டான்.
“சர்… உங்க ஆசை எனக்குப் புரியுது. ஆனா மெடிக்கல் ரியாலிட்டியை நீங்க புரிஞ்சுக்கணும். உங்க மனைவிக்கு இருக்கிற சிவியர் மைட்ரல் ஸ்டெனோசிஸ் சாதாரணமானது இல்ல. ஒரு பெண் கர்ப்பமாகும் போது, அவங்களோட உடம்புல ரத்தத்தின் அளவு நாற்பதுலருந்து ஐம்பது சதவிகிதம் வரைக்கும் அதிகமாகும். கார்டியாக் அவுட்புட் எகிறும். சாதாரண இதயமே அதைத் தாங்குறதுக்கு ரொம்பக் கஷ்டப்படும். இவங்களுக்கு இருக்கிற இந்த வால்வ் சுருக்கத்துல அவ்வளவு ரத்த ஓட்டத்தை இந்த இதயத்தால பம்ப் பண்ணவே முடியாது. பிரக்னன்சி முன்னேற முன்னேற, நுரையீரல்ல ரத்தம் தேங்கி ‘பல்மனரி எடிமா’ வந்து உயிருக்கே ஆபத்தாகிடும். டெலிவரி நேரத்துல தாய், குழந்தை ரெண்டு பேரோட உயிருக்குமே ஆபத்து.”
அந்தப் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழியத் தொடங்கியது. “டாக்டர்… எனக்குக் குழந்தை வேணும் டாக்டர்… என் உசுரே போனாலும் பரவாயில்ல…” என்று விம்மி அழுதாள்.
விஷ்வாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் மாறவில்லை. அவன் ஒரு பாறையைப் போல அமர்ந்திருந்தான்.
“உயிர் போனா அப்புறம் குழந்தையை யார் வளர்ப்பா? சினிமா டயலாக் எல்லாம் பேசாதீங்க…” விஷ்வாவின் குரல் கறாராக இருந்தது. “முதல்ல உங்களை நாங்க காப்பாத்தணும். இந்த வால்வ் சுருக்கத்தை பலூன் மைட்ரல் வால்வுலோபிளாஸ்டி (BMV) பண்ணி சரி பண்ண முடியுமான்னு பாக்கணும். அதுக்கும் முன்னாடி உங்க ஹார்ட் ரிதமையும், பல்மனரி பிரஷரையும் கண்ட்ரோலுக்கு கொண்டு வரணும். அதுவரைக்கும் எந்தக் காரணத்தைக் கொண்டும் பிரக்னன்சி பத்தி யோசிக்கவே கூடாது. ஸ்ட்ரிக்ட் கான்ட்ராசெப்ஷன் ஃபாலோ பண்ணனும்.”
கணவன் தர்மசங்கடத்தோடு தலையைக் குனிந்தான். “சார்… அப்போ… எங்களோட தாம்பத்திய வாழ்க்கை…?” அவன் இழுத்தான்.
விஷ்வா துளியும் கூச்சமின்றி, மிகத் தீவிரமான மருத்துவக் கண்ணோட்டத்தோடு பேசத் தொடங்கினான்.
“தாம்பத்தியமும் ஒரு உடற்பயிற்சி மாதிரிதான். செக்ஷுவல் இன்டர்கோர்ஸ் நடக்கும் போது ஹார்ட் ரேட் நூற்றி இருபது, நூற்றி நாற்பது வரைக்கும் எகிறும். சிஸ்டாலிக் பிபி தாறுமாறா ஏறும். அது உங்க மனைவியோட இதயத்துக்கு ரொம்பப் பெரிய ஸ்ட்ரெயின். இப்போதைக்கு அவங்களோட இருதயத் துடிப்பு கட்டுப்பாட்டுல இல்ல. அதனால அடுத்த மூணு மாசத்துக்கு நீங்க ரொம்பவே ஜாக்கிரதையா இருக்கணும். தீவிரமான உடலுறவுகளைத் தவிர்க்கணும். அப்படியே உறவு வச்சிக்கிட்டாலும், அவங்களுக்கு மூச்சுத் திணறலோ, படபடப்போ வராத அளவுக்கு ரொம்ப லேசான முறையிலதான் இருக்கணும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவங்க மேல பிசிகல் எக்சர்ஷன் இருக்கக் கூடாது. பீட்டா பிளாக்கர் மருந்து எடுத்துக்கிட்டு, ஹார்ட் ரேட் எழுபதுக்குள்ள மெயின்டெய்ன் ஆகும் போது மட்டும்தான் அதுவும் சாத்தியம். நான் சொல்றது புரியுதா?”
கணவன் முகம் சிவக்கத் தலையசைத்தான். விஷ்வா சில மருந்துகளையும், அடுத்த கட்ட பரிசோதனைகளையும் எழுதிக்கொடுத்து அவர்களை அனுப்பி வைத்தான்.
அவர்கள் கதவைத் திறந்து வெளியேறும் வரை, மது மிக அமைதியாக, கையில் இருந்த குறிப்பேட்டையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கதவு ‘டப்’பென்று அடைபட்டது.
கேபினில் மீண்டும் அந்த அமைதி திரும்பியது. விஷ்வா தனது கண்ணாடியைக் கழற்றி மேஜை மீது வைத்துவிட்டு, கண்களை மூடி நெற்றிப் பொட்டுகளைத் தன் விரல்களால் மெல்லத் தேய்த்துக் கொண்டான். நீண்ட நேர ஓபிடியின் களைப்பு அவனது முகத்தில் தெரிந்தது.
“சார்…”
விஷ்வா கண்களைத் திறந்து பார்த்தான். மது தன் நாற்காலியை லேசாக அவனது மேஜையை நோக்கி இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்திருந்தாள். அவளது கண்களில் ஒரு விஷமத்தனமான ஒளி மின்னியது. உதட்டோரம் குறும்புப் புன்னகை நெளிந்து கொண்டிருந்தது.
“என்ன டாக்டர் மதுபாஷினி? அடுத்த ஃபைலை எடுக்கலையா?” விஷ்வா கடுகடுத்தான்.
“இல்ல சார்… அடுத்த பேஷன்ட் வரதுக்கு இன்னும் அஞ்சு நிமிஷம் இருக்கு. அதுக்குள்ள எனக்கு ஒரு சில கிளினிக்கல் டவுட்ஸ்… ஜூனியர் டாக்டர்னா சீனியர்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கணும்ல?” மது மிகவும் அப்பாவியாகக் கண்களை விரித்தாள்.
விஷ்வா அவளது முகபாவனையைப் பார்த்து லேசாக எச்சரிக்கையானான். “என்ன டவுட்?”
மது தனது நோட்பேடைத் திருப்பி விரலால் தட்டினாள். “இல்ல சார்… நீங்க இப்போ அந்த பேஷன்ட்டுக்கு கவுன்சிலிங் கொடுத்தீங்கல்ல… அதுல சில கார்டியாக் ஃபார்முலா எனக்கு சரியா புரியல.”
“என்ன புரியல?”
“இல்ல… இன்டர்கோர்ஸ் அப்போ ஹார்ட் ரேட் நூற்றி நாற்பது வரைக்கும் போகுதுன்னு சொன்னீங்க. அதுல மெட் வேல்யூ (Metabolic Equivalent of Task) எவ்வளவு சார் வரும்? ஒரு ஸ்டேண்டர்ட் கார்டியாக் பேஷன்ட்டுக்கு அந்த நேரத்துல சிஸ்டாலிக் ஃப்ளோ கூடுமா, இல்ல டயஸ்டாலிக் பிரஷர் குறையுமா?”
விஷ்வா அவளைக் கூர்மையாகப் பார்த்தான். “மெட் வேல்யூ அப்ராக்ஸிமேட்டா மூணுல இருந்து நாலு வரைக்கும் வரும். டயஸ்டாலிக் ஃபில்லிங் டைம் குறையும். இதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?”
மது விடவில்லை. அவளது குரலில் விவகாரமான நக்கல் எட்டிப் பார்த்தது. “அப்போ… ஒருத்தர் ரொம்ப ஆழமா காதலிச்சு, உணர்ச்சிவசப்பட்டு அந்த வேலையில இறங்கும்போது… அந்த கார்டியாக் லோட் இன்னும் அதிகமாகும்ல சார்? அப்போ நீங்க சொன்ன மாதிரி ‘ரொம்ப லேசான முறை’ன்னா… அது எந்த போசிஷன்ல சார் கார்டியாக் எக்ஸர்ஷன் கம்மியா இருக்கும்? ஒரு கார்டியாலஜிஸ்ட்டா நீங்க அதுக்கு என்ன மாதிரியான ஸ்பெசிபிக் பொசிஷன்ஸ் பிரஸ்கிரைப் பண்ணுவீங்க?”
அந்தக் கேள்வியைக் கேட்ட அடுத்த விநாடி… விஷ்வாவின் முகம் லேசாக மாறிப் போனது!
அவள் கேட்பது மருத்துவ ரீதியான சந்தேகம் போலத் தோன்றினாலும், அவளது தொனியும், பார்வையும், உதட்டோரச் சிரிப்பும் அதை அப்பட்டமான இரட்டை அர்த்தத்தில் தன்மீது வீசப்படும் ஒரு சீண்டலாக மாற்றியிருப்பதை அவனது மூளை நொடியில் உணர்ந்து கொண்டது.
அவனால் அவளைத் திட்டவும் முடியவில்லை; ஏனென்றால் அவள் கேட்டது அத்தனையும் அக்மார்க் கார்டியாலஜி சந்தேகங்கள் தான்! அதே சமயம், அவளது குறும்புப் பார்வை அவனை நாற்காலியில் நெளிய வைத்தது.
விஷ்வா தொண்டையைக் கனைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தான். “டாக்டர் மதுபாஷினி… நீங்க மெடிக்கல் டவுட் கேக்குறீங்களா இல்ல தேவையில்லாம எல்லை மீறி விளையாடுறீங்களா?”
“ஐயோ சார்… என்ன வார்த்தை சொல்லிட்டீங்க!” மது தலையில் கைவைத்துக் கொண்டாள். அவளது முகத்தில் அப்படியொரு கள்ளமற்ற பாவனை. “ஒரு கார்டியாக் பேஷன்ட்டுக்கு நாம கம்ப்ளீட் லைஃப்ஸ்டைல் மாடிஃபிகேஷன் சொல்லித் தரணும்னு நீங்கதானே சார் நேத்து மார்னிங் ரவுண்ட்ஸ்ல கிளாஸ் எடுத்தீங்க? பெட்ரூம்ல பேஷன்ட்டுக்கு லெப்ட் வென்ட்ரிக்கிள் ஓவர்லோட் ஆகாம பாதுகாக்குறது ஒரு டாக்டரோட தார்மீகக் கடமை இல்லையா சார்? இதுல நான் என்ன தப்பா கேட்டுட்டேன்?”
விஷ்வாவின் தாடை இறுகியது. அவளது நக்கலை அடக்க முடியாமல் அவனது விரல்கள் மேஜை மேல் தாளமிட்டன. “பேஷன்ட்டுக்கு சுப்பைன் பொசிஷன்ல எக்ஸர்ஷன் கம்மியா இருக்கும்… பார்ட்னர் மேல வொர்க்லோட் குறைவா இருக்கணும். போதுமா உங்க கிளினிக்கல் டவுட்?”
“ஓ… பார்ட்னர் மேல வொர்க்லோட் குறைவா இருக்கணுமா?” மது வார்த்தைகளை மென்று சுவைத்தபடி தலையசைத்தாள். “அப்போ… ரெண்டு பேருமே கார்டியாக் பேஷன்ட்டா இருந்தா என்ன சார் பண்ணுவாங்க? கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க இந்த மாதிரி டெக்னிக்கல் கால்குலேஷன் போட்டு, பிபி மெஷினை பக்கத்துல வச்சுகிட்டு, பல்ஸ் ஆக்ஸிமீட்டரை விரல்ல மாட்டிக்கிட்டுதான் அந்த ரொமான்ஸ் பண்ண முடியுமா சார்?”
விஷ்வா அவளைச் சுட்டெரிப்பது போலப் பார்த்தான். “டாக்டர் மதுபாஷினி!”
“இல்ல சார்… சீரியஸாத்தான் கேக்குறேன்…” மதுவின் குரல் சட்டென்று ஒரு துளி தணிந்து, ஆனால் கூர்மை குறையாமல் ஒலித்தது. “கல்யாணம்னா வெறும் உடம்போட தேவைக்கான ஒரு லைசென்ஸ்னு நேத்து ரொம்பக் கம்பீரமா ஒரு தியரி சொன்னீங்களே… இப்போ பாத்தீங்களா, அந்த லைசென்ஸைக் காப்பாத்திக்கவே இவ்வளவு பெரிய கார்டியாக் இன்ஜினியரிங் தேவைப்படுது! அந்தப் பொண்ணு தன் உயிரே போனாலும் பரவாயில்ல, புருஷனுக்காக ஒரு குழந்தையைப் பெத்துக்கணும்னு அழுதுச்சே… அதுக்கு பேரு என்ன சார்? வெறும் காமமா? இல்ல நீங்க சொல்ற அந்த ‘ ப்ராஸ்டியுஷன்’ங்கிற முத்திரை இதுக்கும் பொருந்துமா சார்?”
அட்சர சுத்தமாக அது சவுக்கடி தான்!
விஷ்வா உறைந்து போனான். அவனது கண்கள் விரிந்தன.
தான் முந்தைய தினம் எச்.ஓ.டி அறையில் ஆங்காரத்தோடு கக்கிய அந்த விஷ வார்த்தைகளை, இன்று அதே மருத்துவமனை ஓபிடியில், ஒரு நோயாளியின் உண்மையான தவிப்பை வைத்தே தனக்குத் திருப்பித் தந்திருக்கிறாள் இந்தச் சிறு பெண்! அவனால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை. அவனது தொண்டைக்குழியில் வார்த்தைகள் அடைத்துக் கொண்டன.
அவளது பார்வையில் கோபமோ, எகத்தாளமோ இல்லை. காயம் பட்ட வலி தெரிந்தது.
விஷ்வாவின் நாசித் துவாரங்கள் விரிய மூச்சு வாங்கியது. அவனது நெற்றி நரம்புகள் புடைத்தன. தனது கோட்டையின் வாசற்படியில் அவள் சம்மட்டியோடு வந்து நிற்கிறாள் என்பதை அவனால் உணர முடிந்தது. ஆனால், அந்த உண்மையின் கனம் அவனைப் பேசவிடாமல் தடுத்தது.
அவன் தனது கோட்டைச் சரிசெய்து கொண்டு, சுவரில் இருந்த காலிங் பெல்லை ‘டப்’பென்று அழுத்தினான்.
“அடுத்த பேஷன்ட்டை உள்ளே அனுப்புங்க…” என்று வாசலை நோக்கி உறுமினான்.
மது மெல்லப் புன்னகைத்தாள். அவளது உதட்டோரம் விரிந்த அந்தப் புன்னகையில் எந்தவிதப் பயமும் இல்லை. அவனது மௌனமே தனக்குக் கிடைத்த முதல் வெற்றி என்பதை அவள் மிகத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தாள்.
‘இன்ஸ்டியுஷனலைஸ்ட் ப்ராஸ்டியுஷனா? ஒன் நைட் ஸ்டான்ட் கேக்குதா? இருடா பரதேசி… சாவடிக்கறேன் பாரு…’ உள்ளுக்குள் கருவிக் கொண்டாள்.






👍👍👍
நன்றி
👏Detailing😯🫶
Nice epi 🍬🌷
நன்றி
🤣🤣🤣🤣செம இந்த எபி🤣🤣யம்மா மது பின்னியேடுக்குறீயே... முதல்வன் படத்துல ரகுவரன் நாக்குல கொக்கிப் போட்ட மீமிக்ஸ் தான் ஞாபகம் வருது.. உனக்கு வேணும் டா விஷ்வா... 😂 ரைட்டர்ஜி செமையா எழுதுறீங்க❤️வாழ்த்துக்கள் 💫💫
நன்றி ம்மா
😂😂😂
நன்றி
Avvvvva....enna thaan avala thalli nirutha pesinalum konjam over thaan vishwa😈
ஹஹஹா நன்றி
Avana vachi seiren nu nee avan kitta maatikkapora😏
ஆமா முழிக்க போறா
Nice intresting ud sis ❤️
நன்றி
😂 ha ha ha ,2Nd time reading
Intellectual convo😁👍🏻