அத்தியாயம் – 2
கொண்டவன் கொடுத்தானடி – 2
கிராமத்துக்கே உண்டான குளிர்ச்சியை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தது வாடிப்பட்டி கிராமம்.கதிரவன் தனது ஆதிக்கத்தைத் தொடங்க தருணம் பார்த்துக் கொண்டிருந்த நேரம் போலும்.வள்ளி மற்றும் மருது களையெடுக்கக் கிளம்பி கொண்டிருந்தனர்.இப்பொழுது சென்றால் தான் காலை பத்து மணி போல் வீடு திரும்ப முடியும் என்பதால், காலை வேளைக்கு மட்டும் கஞ்சியைத் தூக்கில் ஊற்றி எடுத்து கொண்டிருந்தாள் வள்ளி.
“ஏலேய் மருது!” வெளியில் யாரோ அழைக்கும் குரல் கேட்டு மருது வள்ளியை பார்த்து.
“இந்நேரம் யாருப்புள்ள?” கேட்டுக் கொண்டே வெளியில் செல்ல
“தெரியலையே மாமா” என்ற வள்ளியும் அவன் பின்னே சென்றாள், வெளியில் சொக்கப்பனை கண்ட மருது.
“அண்ணே! வாண்னே! வா! என்ன சங்கதி விடியலுக்கே வந்திருக்க?”
“விடியல்தேன், ஆனா உமக்குத்தேன் நல்ல விடியல் என்றவர் கொஞ்சம் தளர்வாக அமர்ந்து கொண்டு.ஆத்தா! கொஞ்ச குடிக்கத் தண்ணீ முக்கி வா சாமி. வேலைக்குப் போகக்குள்ள உம்ம கிட்ட சங்கதிய சொல்லிப்புடனுமேன்னு வண்டிய வேகமாக அழுத்தி கிட்டு வந்தது, மேல் மூச்சு வாங்குது” என்றவர் பேசி முடிக்கும் முன்னே அவரிடம் தண்ணியை நீட்டி இருந்தாள் வள்ளி.
அதனை வாங்கி அவர் குடிக்கும் வரை பொறுமையாக இருந்த இருவரும், “என்ன அண்ணே செய்தி?”
“எல்லாம் நல்ல செய்தித்தேன் மருது, நம்பக் கொட்டாம்பட்டி பச்சையப்பன் இருக்காருல்ல”
“ஆரு? ஆளு புடிபடல”
“ப்ச்! உம்ம பங்காளி மாடசாமி பொண்ணு எடுத்த இடம்” என்றதும் கண்டு கொண்ட மருது.
“ஆமா! அண்ணே! சொல்லு! சொல்லு! சிங்காரம் தலைக்கட்டு அவீங்க மவேன் பேரு கூட முனியசாமி”
“ஹ்ம்ம்! அவீங்கதேன் இரண்டு வாரம் முன்னுக்கு சந்தையில கண்டு பேசிக்கிட்டோம்.அப்போ பொண்ணு இருந்தா சொல்ல சொல்லி கேட்டாக எமக்கு நம்ப மங்கலநாச்சி நியாபகந்தேன் வந்துச்சு.சொல்லி வச்சேன் இப்போ விடியலுக்குக் கூப்புட்டு பொண்ணு பார்க்க வர்ரதா செய்தி சொல்லி வச்சாக” என்றதும் வள்ளியும், மருதுவும் அதிர்ந்தனர்.
அன்று முனியசாமியை சொக்கப்பன் சந்தையில் பார்த்து பேசும் போது. அவர்களுக்குப் பின் தான் பேச்சியும், அவளது தந்தையும் நின்று கொண்டிருந்தார்கள்.முனியசாமி அவர்களை கவனிக்கவில்லை, பாண்டியனும் கவனிக்கவில்லை பேச்சி மட்டுமே முனியசாமி குரலை கண்டு கொண்டாள் . அவர்கள் பேச்சை கேட்டுவிட்டு தான் பேச்சி அவளது தாயிடம் சொல்லி அழுதது.
“அண்ணே! உமக்கு எங்க நிலை தெரிஞ்சும் நீ பேசுறியே.அவீங்க கொஞ்சம் உசரம் கண்டவீங்க.நம்ப வசதிக்கு தோது பண்ண முடியாது அண்ணே”
“இந்தாரு மருது நம்பக் கிட்ட காசு பணந்தேன் இல்லை, ஆனா அதுக்கு மேல ஒசத்தியா குணம் கண்ட புள்ளைய வச்சிருக்கோம் அதை எண்ணி வைடே நானே நம்பப் புள்ளைக்கு எதாவது நல்ல இடம் செய்ய வேண்டி அலைஞ்சுக்கிட்டு கிடந்தேன். முனியசாமி சொல்லவும் காதுல போட்டு வச்சேன்.
எமக்கு நாச்சி புள்ள கணக்கு நியாபகம் வச்சுக்கோ.கருத்துள்ள புள்ள எம்ம பொஞ்சாதிக்கு அம்புட்டு விருப்பம்.எங்களுக்கு மட்டும் பொண்ணு உறவு கண்டுச்சு? என் வூட்டுப் பசங்களுக்கு எடுத்துருப்பேன்.எங்களுக்கு அப்பன், ஆத்தா உறவா போச்சு ” விடாமல் பேசியவரை மருது தடுத்து எதோ பேச வர.-
அதற்குள் முந்தி கொண்ட சொக்கப்பன் மருதின் பேச்சை தடுத்து, “கொஞ்சம் பொறுமையெடு மருது பார்க்காம, பேசாம நீயே முடிவு கண்டா எப்படி? இன்னைக்குப் பொழுது சாய அவீங்க வாராய்ங்க அதுக்கு ஏற்பாடு பண்ணு” என்றதும் மருது வள்ளியை பார்க்க.
அவளுக்கும் சிறு நெருடல் இருத்தாலும் வரட்டும் என்ற எண்ணம் இருக்க, கணவனை பார்த்து சரி என்பது போல் தலையசைத்து வைக்க, “சரிங்க அண்ணே!” என்ற மருது ஆக வேண்டியது என்ன? என்று பார்க்க தொடங்கி விட்டான்.நல்ல சம்மந்தம் தான் என்றாலும்.இது முடிய வாய்ப்பில்லை என்ற மனநிலையில் இருந்தனர் இருவரும்.
வள்ளிக்கும் அத்தனை உறுதி இல்லை வரட்டும் வந்து பார்த்துவிட்டு போகட்டும் என்ற நிலை தான்.இருவரும் வேலைக்குச் செல்லாமல் அந்தக் குடிசை வீட்டை ஒழுங்கு செய்யத் தொடங்கினர்.சரியாக ஆறு மணி போல் எழுந்த மங்கலநாச்சி தனது நெஞ்சில் படுத்து உறங்கும் ஆறு வயது தம்பியை குனிந்து பார்த்து அவனது நெற்றியில் முத்தமிட சிணுங்கி கொண்டான் சின்னவன்.
அவனை லேசாக அனைத்து தட்டி கொடுத்தவள் மீண்டும் அவன் உறங்கிய பின் மெதுவாக அவனைக் கீழே படுக்க வைத்தவள்.எழுந்து கொல்லைக்குச் சென்று முகம் கழுவி வந்தாள்.அப்போது தான் தனது தாய், தந்தை வேலைக்குச் செல்லத்தைப் கண்டு வள்ளியை நெருங்கியவள்.
“ஆத்தா காட்டுக்கு போகல நீ?”
“இல்லப்புள்ள என்றவள் நாச்சி இங்கன வா” என்றதும் தாயின் அருகில் சென்று அமர.
“நீயும் வேலைக்குப் போக வேணாம்”
“ஏன்?”
“பொழுதுக்கு உம்ம பொண்ணு கேட்டு வர்றாய்ங்க”
“ஓ! ஆரும்மா?”
“சொக்கப்பன் மச்சான் சொல்லி வாராக, உமக்கு அவீங்கள தெரிய வாய்ப்பில்லை புள்ள, ஆனா உங்க அப்பாருக்கு தொலைவுல உறவு வரும் போல”
“சரி!”
“பாவாடை சட்டை வேணாம் உம்ம சோட்டுக்காரி அங்கை புள்ள இருக்குல்ல அதுகிட்ட போயி நல்ல பாவாடை தாவணி வாங்கிக் கட்டிகிடு நான் பூசாரி பொஞ்சாதி கிட்ட பூ வாங்கி வாரேன் என்ன?”
“ஆத்தா நான் ஆருகிட்டையும் இரவல் வாங்கி உடுத்திக்க மாட்டேன் இருக்குற துணியைக் கட்டிக்கிட்டு நிக்கிறேன்” என்றவள் எழுந்து செல்ல அவளது பேச்சை கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் மருது.
“என்ன வள்ளி?”
“அங்கை புள்ள கிட்ட நல்ல உடுப்பு வாங்கி உடுத்திக்கச் சொன்னேன் முடியாதுனு போகுது”
“உமக்கு நம்ப புள்ளையைப் பத்தி தெரியதாக்கும், வுடு இருக்கிறதை கொண்டு காரியம் பண்ணுவோம்” என்றவர் கருப்பட்டியும், கறந்த பால்லையும் கொடுத்தார், அதனை வாங்கி அடுப்பில் வைத்து விட்டு அடுத்து என்ன செய்ய என்பது போல் இருவரும் பேசி கொண்டனர்.
மாலை ஆறு மணி இருக்கும் சரியாக அந்நேரம் முனியசாமி, சாந்தா தனது மகனுடன் மருது வீட்டுக்குள் நுழைந்தனர்.கூடவே சொக்கப்பன்னும் அவரது மனைவியும் வந்திருந்தனர்.
“வாங்க! வாங்க ஐயா!” மருது வெகு மரியாதையாக அழைத்து வைக்க.வள்ளியும் வரவேற்று அவர்களுக்கு ஓலை பாய்யை விரித்து அமர வைத்தாள். முதல் பார்வையிலே கந்தசாமியை கண்டு பயந்து வள்ளியின் பின்னில் ஒழிந்து கொண்டான் சங்கமுத்து வள்ளி, மருதுவின் கடைக்குட்டி.
மருது, “வள்ளி குடிக்க, கடிக்க எடுத்துப்புட்டு வா சாமி” என்றதும் முனியசாமி சொக்கப்பனை பார்க்க. அவரது பார்வையை உணர்ந்தார் போல் பேச்சை தொடங்கினார் சொக்கப்பன்.
“அம்மாடி வள்ளி இரு, இப்போதேன் வந்தோம் முதல பேசிக்கிடுவோம்” என்றதும் வள்ளி கணவனுடன் வந்து நின்று கொண்டாள்.
“முனியசாமி நான் படக்குனு பேச்சுக்கு வாரேன். நான் முன்னுக்கு நின்னு இந்தக் கண்ணாலத்தைப் பேச காரணமே நாச்சி புள்ளத்தேன். நீ எப்படி என் ஆத்தா வழி உறவோ, அது போலதேன் எனக்கு மருது ஐயா வழி உறவு.மருது வள்ளிக்கு அஞ்சு பொட்ட புள்ளைங்க, ஒரு பொடியன்” என்றதும் அதுவரை அமைதியாகப் பேசுவதை கேட்டு கொண்டிருந்த கந்தசாமி நிமிர்ந்து அவர்களைப் பார்த்தான். அவனது பார்வையை சங்கடமான புன்னகையுடன் தாங்கி நின்றார்கள் மருது தம்பதியினர்.
சொக்கப்பன் மேலும், “வசதி குறைவா இருந்தாலும் அவனுக்குத் தோது படுற இடத்துல நாலு பிள்ளைகளைக் கரையேத்தி வச்சுப்புட்டான்.அதுக்குக் கை கொடுத்து நின்னது நம்ப மங்கலநாச்சிதேன் கருத்துள்ள புள்ள.
சொக்கப்பன் மனைவியோ, “முகம் சுளிக்காம தேனியாட்டம் சுத்தி வருவா, நல்ல குணம் கண்ட புள்ள” என்றதும் முனியசாமி சாந்தா வை பார்க்க. பேச்சியின் எண்ணம் இருந்தாலும் சொக்கப்பன் கொடுத்த சான்றில் கொஞ்சமாக மயங்கி.சாந்தா பெண்ணைப் பார்க்கும் ஆவலில் தடுப்புக்கு அந்தப் பக்கம் எட்டி பார்த்து கொண்டிருந்தாள்.
மனைவி செயலில் சிறு புன்னகை கொண்டு திரும்பி மகனையும் ஒரு பார்வை பார்த்த முனியசாமி,”வசதி என்ன? வசதி? பொண்ணு குணம் கண்டிருந்தா போதும்” என்றதும் சொக்கப்பன் முகம் கொள்ளா மகிழ்ச்சியில் வள்ளியிடம் திரும்பி.
“வள்ளி புள்ளைய கூட்டியாத்தா” என்றதும் உள்ளே சென்று மகளை அழைத்து வந்தாள்.
“காப்பித் தண்ணி குடு சாமி” என்றதும் எல்லாருக்கும் காப்பியை கொடுத்துவிட்டு நின்று கொண்டாள். நாச்சி கோதுமை நிறம் என்றாலும் முகம் கோவிலில் உள்ள துர்க்கையின் சிலை போல் அத்தனை லட்சணமாக இருந்தது.ஏனோ, தானோ என்று இரண்டங்கெட்டான் மனநிலையில் வந்த சாந்தா வுக்குப் பெண்ணைக் கண்டு மனம் சமன் கண்டது போல ஆனது.
முனியசாமிக்கு வெகு திருப்தி.அவர் மகனை பார்க்க, அவனோ நாச்சியை தலை மயிர் தொடங்கிப் பாவாடைக்குள் பதுங்கி நிற்கும் கால் வரை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.அவனது பார்வையைக் கண்டு என்ன எண்ணினானோ பொடியன்.
தனது அக்காளை காக்கும் பொருட்டு வள்ளியிடம் இருந்து வேகமாக வந்தவன் நாச்சியின் இடுப்பை கட்டி கொண்டு புருவத்தைச் சுருக்கி கந்தசாமியை முறைக்க. அதில் தனது ஆராச்சியை விட்டவன் பொடியன் செயலில் சிரிப்பு வர பார்த்தது. இருந்தும் அவனை சீண்டி பார்க்க எண்ணம் வர பொடியனை பார்த்து நாக்கை கடித்து மிரட்ட. ஓர், நொடி அதிர்ந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு அவளுள் புதைந்து கொண்டான்.
அதுவரை மகனது மனநிலையைக் கணிக்கப் போராடி கொண்டிருந்த முனியசாமி மகனது பார்வையும், அதன் பின் அவனது சிறு சீண்டலும் கண்டு சிரிப்புடன் மனைவியைப் பார்க்க.அவளோ அதிர்வுடன் மகனை பார்த்து கொண்டிருந்தாள்.மற்றவர்கள் பேச்சில் இருக்க இவர்கள் கூத்து அவர்கள் கண்ணில் படவில்லை.மாப்பிள்ளை பொண்ணைப் பார்க்க வேண்டி சில நொடிகள் கொடுத்த சொக்கப்பன் கந்தசாமியை பார்த்து.
“என்னய்யா கந்தா?” என்று மட்டும் கேட்டு விட்டு வெகு ஆர்வமாக அவன் முகம் பார்க்க.
“பேசி முடிங்க மாமா” என்றதும் அப்படிச் சந்தோஷம் அவருக்கு, அதுவரை வரைக்கும் நிமிர்ந்து பார்க்காமல் நின்ற மங்கலநாச்சி இப்போது கந்தசாமியை பார்த்தாள் எல்லாம் ஓர் நொடி தான். அதற்குள் வள்ளி அவளை உள்ளே போகச் சொல்ல உள்ளே சென்று விட்டாள்.
“அப்பா மனசு அம்புட்டு இனிச்சு கிடக்கு உமக்கு ஒன்னு தெரியுமா முனிசாமி? இவீங்களுக்கு நான் உம்மப் பத்தின தகவலே தரல” என்றதும் முனியசாமி புருவம் சுருக்கி பார்த்து.
“என்ன சொல்லுதீக?”
“வள்ளிக்கும், மருதுக்கும் நான் கந்தசாமியை நாச்சிக்கு பார்த்தது தெரியாது. எல்லாம் முடிவு சொன்ன பிற்பாடு பாத்துக்கலாம்னு கிடந்தேன்” என்றதும் மங்கலநாச்சி மீது அவர் வைத்திருந்த அன்பில் நெகிழ்ந்து போனார்கள்.
“பொண்ணு புள்ள மேல அம்புட்டு பாசமோ?” சாந்தா .
“எங்களுக்குப் பொண்ணு புள்ள இல்லங்குற குறையே இல்லை சாந்தா எம்ம வூட்டுல அந்தக் குறையா தீர்க்க வந்தவ நாச்சி ” என்றதும் அவர்களது பாசமும் பிணைப்பும் புரிந்தது.
“சரி அடுத்து என்ன?” என்றதும் பட்டென எழுந்து கொண்ட கந்தசாமி.
“மாமா! கண்ணாலத்துக்குத் தேதி பார்த்துப்புடுங்க இன்னொரு நாள் நான் அப்பத்தா, அப்புச்சி கூட வாரேன்” என்றதும் எல்லாரும் எழுந்து கொண்டனர்.
முனிசாமி மருதுவை பார்த்து, “சோலி கிடக்கு அதேன் நீக கண்ணாலம் வேலையைப் பாருக” என்றதும் தயங்கிய மருது.
“மேற்படி சங்கதிய பேசலையே” அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பதை அறிந்த முனியசாமி மகனை பார்க்க.
“உங்க தோதுபடி பாருக கண்ணாலம் மட்டும் அப்பத்தா, அப்புச்சி முடிவுத்தேன்” என்றவன் எல்லாருக்கும் பொதுவாக ஒரு வணக்கத்தை வைத்து விட்டு செல்ல, அவர்களும் அவன் பின்னே சென்றனர், அவர்களை முறையாக வழியனுப்பி வைத்துவிட்டு உள்ளே வந்தவர்கள் தரையில் அமர்ந்து கொண்டே,
“என்னபுள்ள கானா கண்ட கணக்கா கிடக்கு?”
“ஆமா மாமா!” என்றவள் முகத்திலும் அத்தனை மகிழ்ச்சி.
“மாமா புள்ளைக்கு நிறைக்கச் செஞ்சுப்புடுனும்” என்றதை கேட்டுக் கொண்டே வந்த நாச்சி தம்பி மடியில் அமர வைத்து விட்டு அவனுக்குச் சொத்தை ஊட்ட தொடங்கினாள்.
“சொக்கன் அண்ணே கிட்ட வட்டிக்கு வாங்கி!” என்று தொடங்கும் முன்னே அத்தனை கோபமாகத் தனது தந்தையின் பேச்சை தடுத்திருந்தாள்.
“இந்தாருப்பா என்ன பேச்சு இது? அப்படிக் கடன் வாங்கித்தேன் கண்ணாலம் பண்ணனும்னு எண்ணி வச்சா எமக்குக் கண்ணாலமே வேணாம்”
“ஏய்! என்ன புள்ள பேசுற?” வள்ளி பதற.
“நீ வெளில கை நீட்டி வச்சா நான் இப்படித்தேன் பேசுவேன். நான் சேர்த்து வச்சிருக்கிற காசை தாரேன் நீ உன்னால முடிஞ்சதை குடு அது போதும் அதேன் முடியும்” என்றவள் குணம் தான் அறிந்தாயிற்றே.
“நாச்சி அவீங்க பெரிய தலைக்கட்டு சாமி அவீங்க சனம் முன்னுக்கு நம்பச் செய்ய வேணாமா?” என்றதும் அழுத்தமாக.
“வேணாம்! அப்போ நமக்கு எதுக்கு பெரிய சனக்கட்டு?” வெடுக்கெனக் கேட்டதும் மருது கோபமாக மகளை பேச போக.கணவனைப் பாய்ந்து தடுத்த வள்ளி நாச்சி அறியாதவாறு வேண்டாம் என்று மருதுவின் பேச்சை நிறுத்தி விட்டு.
“சரி நாங்க எதுவும் செய்யல உள்ளதை கொண்டு காரியம் பண்ணிக்கிடுறோம்”
“ஹ்ம்ம் என்றவள் அதற்குள் சின்னவனுக்கு உணவை ஊட்டி விட்டு வாய் தொடைத்துக் கொண்டே பெற்றவர்களை கூர்மையாக பார்த்தவள் “கண்ணை மறைச்சுக் காரியம் பண்ண பார்த்தீக, அப்புறம் நான் மனுசியா கிடக்க மாட்டேன்” என்றவள் பொடியினை இடுப்பில் இடுக்கி கொண்டு வெளியில் சென்று விட்டாள்.






Very nice
THANKS MA