அத்தியாயம் 11
மதிய வேளையின் பரபரப்பு மெல்லத் தணிந்து, அவுட்பேஷன்ட் பிரிவின் ஹால் அமைதியாகத் தொடங்கியிருந்தது. கன்சல்டிங் அறையில் அடுத்த நோயாளியின் கேஸ் ஷீட்டைப் புரட்டிக்கொண்டிருந்தான் ஜீவா.
அப்போது கதவைத் திறந்து உள்ளே வந்த டியூட்டி நர்ஸ், “சார்… உங்களைப் பார்க்க சந்திரன்னு ஒருத்தர் வந்திருக்காரு. ஊத்துக்குளில இருந்து வராராம்…” என்றாள்.
‘ஓஓ… சந்திரன் சித்தப்பாவா?’
ஜீவாவின் புருவங்கள் லேசாக உயர்ந்தன. அடுத்த கணமே அவன் உதடுகளில் ஒரு மெல்லிய சலிப்பு எட்டிப்பார்த்தது.
ஊத்துக்குளியில் நிலத்தரகு, கூடவே கல்யாணத் தரகு என ஊர் முழுக்கச் சுற்றும் ஆள். ஜீவாவுக்கும் விஷ்வாவுக்கும் பெண் பார்க்கிறேன் என்கிற பெயரில், அவ்வப்போது கார்த்தியாயினி அம்மாவிடம் ஜாதகக் கட்டுகளைக் கொண்டுவந்து குவிப்பது இவரது வழக்கம். இவர்கள் இருவரும் பிடி கொடுக்காமல் நழுவிக்கொண்டே இருந்ததால், அம்மா இவரை நேரடியாகவே ஆஸ்பத்திரிக்குத் துரத்திவிட்டிருப்பார் என்பது ஜீவாவுக்குப் புரியாததா என்ன? சிகிச்சை பார்த்த மாதிரியுமாயிற்று, தரகு வேலையுமாயிற்று என்று கிளம்பி வந்திருக்கிறார்.
‘ஆஹா… மாட்டிகிட்டோம் போலயே!’ என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவன், “உள்ள வரச் சொல்லுங்க…” என்றான்.
வெள்ளை வேட்டி, முழுக்கைச் சட்டை, தோளில் ஒரு துண்டுடன் உள்ளே நுழைந்தார் சந்திரன். கையில் ஒரு சின்ன ஃபைல் பை இருந்தது.
“வாங்க சித்தப்பா… என்ன இந்த பக்கம்?” ஜீவா நாற்காலியை விட்டு எழுந்து, முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு வரவேற்றான்.
“எல்லாம் இந்த வயித்துப் பாடுதான் ஜீவா தம்பி…” சந்திரன் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி பெருமூச்சு விட்டார். “ரெண்டு நாளா நெஞ்சுக்குள்ள காந்தல் தாங்கல. சாப்பிட்டதும் ஏப்பமா வருது, எதுக்களிக்குது. வயிறு வேற உப்புசமா இருக்கு. ஒரு எட்டு நம்ம தம்பியைப் பார்த்துட்டு போயிடலாம்னு வந்தேன்.”
ஜீவா அவரது நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, பிரஷரையும் அளந்தான். “ரொம்ப ஒண்ணுமில்ல சித்தப்பா. அசிடிட்டிதான்… கேஸ்ட்ரிக் இரிட்டேஷன். நேரத்துக்கு சாப்பிடாம ஊர் ஊரா நிலம் பார்க்க அலைஞ்சா இப்படித்தான் ஆகும். சாப்பாட்டுல காரத்தைக் குறைக்கணும்.”
ஒரு மருந்துச் சீட்டை எடுத்து மாத்திரைகளை எழுதினான். கூடவே வழக்கமான பரிசோதனைக்கான சீட்டையும் இணைத்தான்.
“நர்ஸைக் கூப்பிட்டு ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேனும், பேசிக் பிளட் டெஸ்ட்டும் எடுக்கச் சொல்றேன். ரிப்போர்ட் வந்ததும் மாத்திரையை ஆரம்பிச்சுக்கலாம்…” என்றவன் இன்டர்காமில் பேசி நர்ஸை அழைத்தான்.
நர்ஸ் வந்து மருந்துச் சீட்டை வாங்கிக்கொள்ள, சந்திரனும் அவரோடு கிளம்பினார். மரியாதை நிமித்தமாக அவரை வழியனுப்ப அறைக் கதவைத் திறந்து தாழ்வாரம் வரை கூடவே வந்தான் ஜீவா.
இருவரும் அறையை விட்டு வெளியே வந்து சில அடிகள் நடந்தபோது, எதிரே சற்றுத் தொலைவில் ஃபைல்களை அடுக்கிக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்தாள் ப்ரவலிகா. அவளுக்குப் பக்கத்தில் லேப் ரிப்போர்ட்டைப் பார்த்தபடி பேசிக்கொண்டே வந்தாள் மதுபாஷினி.
சந்திரனின் கண்கள் சட்டென்று அவள் மீது நிலைத்தன. கால்கள் நின்றன. தலையை லேசாகச் சாய்த்து, கண்களைச் சுருக்கி அவளை உற்றுப் பார்த்தார்.
“ஏம்பா ஜீவா… அது நம்ம செந்தில்நாதன் பொண்ணு தான?”
ஜீவா நின்றான். அவனது உதட்டோரத்தில் ஒரு மெல்லிய, நமுட்டுச் சிரிப்பு அரும்பியது. எதுவும் பேசாமல் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“மகாலட்சுமி!” சந்திரன் உரத்த குரலில் உரிமையோடு அழைத்தார்.
அந்தக் குரல் தாழ்வாரத்தில் எதிரொலித்த விநாடி, ப்ரவாவின் கால்கள் சட்டென்று தரையோடு ஒட்டிக்கொண்டன. தூக்கிவாரிப் போட்டது போல இருந்தது அவளுக்கு.
சந்திரன் மாமா!
பக்கத்திலிருந்த மது புரியாமல் அவளைப் பார்க்க, ப்ரவாவின் முகம் ரத்தமில்லாமல் வெளுத்துப் போனது. உடனே இடது பக்கத் தாழ்வாரத்தில் திரும்பி நைசாக நழுவிவிடலாமா என்று அவளது கால்கள் பின்வாங்கின. ஆனால் சந்திரனின் பார்வை அவளது முகத்திலேயே நிலைத்திருந்தது; கூடவே ஜீவாவும் கைகளைக் கட்டிக்கொண்டு, உதட்டில் குறும்பான புன்னகையோடு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
தப்பிக்க வழியில்லை என்பதை உணர்ந்த ப்ரவா, தொண்டையைச் செருமிக்கொண்டு, மனதைத் தேற்றிக்கொண்டாள்.
“வாடி…” என்று மதுவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, தயங்கித் தயங்கி அவர்கள் முன்னால் வந்து நின்றாள்.
“சித்தப்பா…” ப்ரவா மிகத் தணிந்த குரலில் சொன்னாள்.
“அட, நீதானா! நான் தூரத்துல இருந்து பாத்துட்டு வேற யாரோன்னு நெனச்சேன்…” சந்திரன் முகமெல்லாம் பற்களாகச் சிரித்தார். விசேஷ வீடுகளில் பார்த்த பழக்கம் அவருக்கு. ஆனால் அவளை செந்தில்நாதனின் மகள் என்கிற அளவில் மட்டுமே அவருக்குத் தெரியும்.
“என்னம்மா… என்ன பண்ணிட்டு இருக்க இங்க? டாக்டராவா இருக்க?” அடுத்தடுத்துக் கேள்விகளை அடுக்கினார் சந்திரன்.
ப்ரவா ஜீவாவை ஏறிட்டுப் பார்க்கவே பயந்தாள். ஆனால் அவனது பார்வை தன் மீதுதான் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது என்பதை அவளது உள்ளுணர்வு சொன்னது. கண்களை உருட்டி, ஜீவாவைப் பார்த்தும் பார்க்காமல் ஒதுக்கி, சந்திரனை மட்டுமே பார்த்தாள்.
“எம்பிபிஎஸ் முடிச்சிருக்கேன் சித்தப்பா… இங்க ஜூனியர் டாக்டரா இருக்கேன்…” வார்த்தைகளை அளந்து போட்டாள்.
“அப்படியா விஷயம்! செந்தில் பொண்ணு டாக்டராவே ஆயிடுச்சா… ரொம்ப சந்தோஷம்மா. அப்புறம்? அடுத்து என்ன பண்ணப் போற? எம்டி படிக்கப் போறியா, இல்ல கவர்ன்மென்ட் எக்ஸாம் எதுவும் எழுதப் போறியா?” சந்திரன் விடாமல் விசாரித்தார்.
“அ… அடுத்து பிஜி என்ட்ரன்ஸ் எழுதணும் சித்தப்பா. அதுக்கு அப்புறம்தான் யோசிக்கணும்…” ப்ரவா எப்படியாவது இந்தப் பேச்சை முடித்தால் போதும் என்பது போல நின்றாள்.
பக்கத்தில் நின்ற மதுவுக்குப் பொறுமை பறந்து கொண்டிருந்தது. ‘சிக்கிடுச்சு சிக்கனு’ என்று மனதுக்குள் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டவளுக்கு, ஜீவாவின் ரியாக்ஷன் எப்படி இருக்குமென்று தெரியவில்லை. அதனோடு, ‘யார்டா இந்த ஆளு? நடு ஹால்ல நின்னுகிட்டு பொண்ணு பாக்குற மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்காரு… இவளும் திருட்டு முழி முழிச்சுட்டு பதில் சொல்லிட்டு நிக்கிறா!’ என்று மனதுக்குள் திட்டிக் கொண்டுமிருந்தாள்.
சந்திரன் தன் தோள் துண்டை உதறிப் போட்டுக்கொண்டு, “ரொம்ப சந்தோஷம்மா… நல்லா படி…” என்று முடித்துவிட்டு, பக்கத்தில் புன்னகையோடு நின்று எல்லாவற்றையும் ரசித்துக் கொண்டிருந்த ஜீவாவின் பக்கம் திரும்பினார்.
“பரவால்ல ஜீவா. புள்ளைய உங்க ஆஸ்பத்திரியிலேயே புடிச்சு போட்டுட்ட போலருக்கு… அப்படியே ஊரு பக்கம் பத்து ஏக்கரா வாங்கி போடறது…” அடுத்த வியாபாரத்துக்கு பிள்ளையார் சுழியிட்டார்.
“கண்டிப்பா பண்ணிடலாம் சித்தப்பா. நீங்க அப்பா கிட்ட பேசுங்க…” என்றான், புன்னகை மாறாமல்!
“அப்புறம்… செந்தில் வீட்டோட இருந்த பிரச்சனையெல்லாம் முடிஞ்சுது போல… புள்ளைய இங்கயே கூப்ட்டுகிட்ட…” அவரது தூண்டிலை விடவில்லை அவர்.
“எந்த குடும்பத்துல தான் பிரச்சனை இல்லாம இருக்கு சித்தப்பா? அதெல்லாம் எதுவுமில்ல… இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டலை விட்டுட்டு பாப்பிய எதுக்கு வெளிய அனுப்பனும்?” சாதாரணமாகக் கேட்டவனை கண்கள் விரியப் பார்த்தாள் ப்ரவா. மதுவுக்கு உதட்டுக்குள் நக்கல் சிரிப்பு வேறு.
“அதுவும் சரிதான்…” என்று சிரித்தவர், “செந்தில கேட்டேன்னு சொல்லு மகாலக்ஷ்மி…” என்றார்.
“சரிங் மாமா…” என்றவளின் குரல் அதள பாதாளத்தைத் தொட்டது.
“கோயில் வேலையெல்லாம் போயிட்டு இருக்கு ஜீவா. இன்னும் ரெண்டு மாசத்துல கும்பாபிஷேகம்… மகாலக்ஷ்மி சொன்னியா?” என்று கேட்க, ஜீவா முந்திக் கொண்டு,
“தெரியும் சித்தப்பா. சொல்லிட்டா. அதெல்லாம் அப்பா பார்த்துட்டு தான இருக்காங்க…” என்று அவன் சொல்ல சொல்ல, ப்ரவாவுக்குப் புரையேறியது.
“நல்லா வெய்ட்டா செய்ய சொல்லு ஜீவா. இனிமே அதெல்லாம் நீங்கள்லாம் தான பார்க்கணும்…” என்று கூற,
“கண்டிப்பா சித்தப்பா…” என்று புன்னகைத்தான்.
திரும்பி அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது ப்ரவாவுக்கு. அவளது தைரியமெல்லாம் எங்கு போய் ஒளிந்து கொண்டது என்று புரியவில்லை. மதுவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
தன் கையிலிருந்த ஃபைல் பையை லேசாகத் தட்டிய சந்திரன், ஜீவாவின் தோளைத் தொட்டு ரகசியக் குரலில் சொன்னார்,
“அப்புறம் ஜீவா தம்பி… உங்க அம்மா கார்த்தி அண்ணி உன்கிட்டயும் விஷ்வாகிட்டயும் பேசச் சொல்லிதான் என்னை இங்க அனுப்பிச்சுது. நாலு நல்ல எடத்துல ஜாதகம் வந்துருக்குப்பா. நான் போயிட்டு வரதுக்குள்ள அந்த ஃபைலை ஒரு எட்டு பாத்து வை. மனசுக்கு பிடிச்ச பொண்ணை செலக்ட் பண்ணுங்க தம்பிங்களா… விஷ்வா தம்பிகிட்டயும் கொஞ்சம் காட்டி பேசச் சொல்லு. வயசு பாட்டுக்கு போயிட்டு இருக்குல்ல… சீக்கிரம் ரெண்டு பேருக்கும் ஒண்ணா முடிச்சு பாக்கணும்னு அண்ணி ரொம்ப ஆசைப்படுது.”
இப்போது அதிர்வது மதுவின் முறையாயிற்று. ‘இன்னாது விஷ்வாவுக்கு ஜாதகமா? மவனே… என்கிட்டருந்து தப்பிக்கவா பார்க்கற…” என்று பற்களை கடித்தாள்.
ப்ரவா மிரண்டுபோய் திருதிருவென விழித்தாள். அவளது விழிகள் அனிச்சையாக ஜீவாவின் முகத்திற்குத் தாவின.
ஜீவாவோ, இதற்கெல்லாம் சற்றும் அலட்டிக்கொள்ளாமல், சந்திரனைப் பார்த்து, “சரிங்க சித்தப்பா, நீங்க முதல்ல டெஸ்ட்டை முடிங்க… அப்புறம் பாத்துக்கலாம்…” என்று வழியனுப்பி வைத்தான்.
சந்திரன் நர்ஸோடு நகர்ந்ததும், தாழ்வாரத்தில் ஒரு விசித்திரமான அமைதி நிலவியது.
மது ஒரு முறை ஜீவாவையும் ப்ரவாவையும் பார்த்துவிட்டு, “நான் லேபுக்கு போறேன் ப்ரவா…” என்று விறுவிறுவென நடக்கத் தொடங்கினாள்.
“ஏய் நில்லுடி…” ப்ரவாவின் குரலில் தவிப்பு. தனியாக விட்டுவிட்டு போகிறாளே என்று!
“நீயாச்சு, உன்ர மாமனாச்சு… ஆளை விடு ஆத்தா…” என்றவள் எஸ்கேப்பியிருந்தாள்.
நடு தாழ்வாரத்தில் ஜீவாவும் ப்ரவாவும் மட்டும் நின்றிருந்தனர்.
திருதிருவென விழித்தபடி மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.
ஜீவா தன் கைகளை அப்ரானின் பாக்கெட்டுகளுக்குள் விட்டுக்கொண்டு, அவளைப் பார்த்து உதட்டோரப் புன்னகையுடன் புருவத்தை உயர்த்தி நின்றான். அவனது கண்கள் ‘என்ன மேடம்… இப்ப என்ன பண்ண போறீங்க?’ என்று நக்கலாகக் கேட்பது போல அவளுக்குத் தெரிந்தது.
ப்ரவாவோ, என்ன சொல்வதென்றே தெரியாமல், தன் விரல்களைப் பிசைந்தபடி திருட்டு முழியுடன் தரையைப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
“உள்ளே வா…”
ஜீவா குரலை உயர்த்தவில்லை. சாதாரணமாகத்தான் சொன்னான். ஆனால், அந்த ஒற்றைச் சொல்லில் இருந்த அழுத்தம் மறுக்க முடியாததாக இருந்தது. அவன் திரும்பித் தனது அறையை நோக்கி நடக்க, அவனது நிழலைப் போலப் பின்னால் தயங்கித் தயங்கி காலடிகளை எடுத்து வைத்தாள் ப்ரவலிகா.
உள்ளே நுழைந்ததும் கதவு மென்மையாக அடைபட்டது. வெளிப்புறச் சத்தங்கள் அனைத்தும் சட்டென்று துண்டிக்கப்பட்டு, அறையின் ஏசி மெல்லிய இரைச்சலோடு இயங்கிக்கொண்டிருந்தது.
ஜீவா தனது சுழல் நாற்காலியை நோக்கிப் போகவில்லை. கதவுக்குப் பக்கத்திலேயே இருந்த சுவரோரமாகத் திரும்பி, மேஜையின் விளிம்பில் சாய்ந்து கைகளைக் கட்டிக்கொண்டான். அவனது உதடுகளில் அந்த நமுட்டுச் சிரிப்பு இன்னும் அகலவில்லை.
“இப்ப சொல்லுங்க டாக்டர் ப்ரவலிகா மகாலட்சுமி…” அவனது நாவிலிருந்து ஒவ்வொரு சொல்லும் மெதுவாக, நக்கலாக உதிர்ந்தன.
அந்த நொடி, ப்ரவாவின் உடம்பில் நடுக்கம் பரவியது. கண்களை உயர்த்தி அவனைப் பார்க்க அவளுக்குத் துணிச்சல் வரவில்லை. இரு கைகளின் விரல்களையும் ஒன்றுக்குள் ஒன்றாகப் பிசைந்துகொண்டு நின்றாள்.
“என்னென்ன பொய்? இத்தனைக்கும் விதவிதமா கேட்டு பார்க்கறேன். உண்மைய சொல்லுவாளான்னு… அவ்வளவு அழுத்தம் உனக்கு?” விடாமல் கேட்டாலும், வம்பிழுப்பதற்காகவே வார்த்தைகளைச் சுவைத்துப் பேசுவது போன்ற தோரணை அவனது முகத்தில் வழிந்தது.
தொண்டை வறண்டு போக, விரல்களை மேலும் இறுக்கிக் கொண்டு, “ஜீவா சார்… அது…” என்று திக்கினாள். அவளது குரல் அடைத்துக்கொண்டு வந்தது.
கட்டுக் கைகளை அசைக்காமல் தலையை மட்டும் லேசாகச் சாய்த்தவன், காதை அவள் புறம் காட்டி, “ஹலோ… என்ன சொன்ன?” என்று அவளது வாயைக் கிளறினான்.
அவனது கூர்மையான பார்வையின் சூடு தாங்காமல், “ஜீ… வ்… வா… ஸா …ர்…” என்றவளுக்கு வந்தது குரல் அல்ல, வெறும் காற்று தான்.
முகத்தில் போலியாக விறைப்பை ஏற்றி, கண்கள் சுருங்க அவளைப் பார்த்தவன், “இன்னொரு தடவை சொல்லு…” என்றான். அவனது குரலில் கடுமை ஏறியிருந்தது.
அவனது மிரட்டலில் மிரண்டுபோய் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டவள், “இல்ல… மா… மா…” என்று முணுமுணுத்தாள்.
அவளது அசட்டு வழியலை ரசித்தபடி உதட்டை வளைத்தவன், “ம்ம்ம்… இப்பத்தான் ஞாபகம் வருதா?” என்றான் கேலியாக.
அவனது கிண்டலைத் தாங்க முடியாமல், உதட்டைக் கடித்துக்கொண்டு, “இ… இல்ல…” என்று தலையசைத்தாள்.
“அப்படீன்னா வர்றவ நேரா வர வேண்டியதுதான?” என்று நெஞ்சை நிமிர்த்திக் கேட்டான் ஜீவா.
அவன் விடுவதாக இல்லை என்பதை உணர்ந்தவள், ஒரு நீண்ட பெருமூச்சை இழுத்துவிட்டாள். இனி எதையும் மறைக்க முடியாது; இவனிடம் இனி நடிக்கவும் முடியாது. மெல்லத் தலையை நிமிர்த்தினாள்.
“என்னை உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” அவள் நேராக அவனது கண்களைப் பார்த்து மெல்லிய குரலில் கேட்டாள்.
ஜீவா சத்தமாகச் சிரிக்காமல், உதடுகளை மடித்து, புருவத்தை உயர்த்தித் தலையை அசைத்தான்.
“உன்னையெல்லாம் எனக்குத் தெரியலைன்னா தான் தப்பு! சின்னப் பிள்ளையில என்னையே பிடிச்சுக்கிட்டு ‘தம்பி மாமா… தம்பி மாமா’ன்னு சுத்திட்டு இருந்தவளை நான் மறப்பேனா? இல்லை, இவ்வளவு பெரிய ஹாஸ்பிட்டல்ல எம்.டியா இருக்கிறவன், யாரோ ஒரு பொண்ணு உள்ள வந்து சேரும்போது அவளைப் பத்தி பேக்ரௌன்ட் செக் பண்ணாம இருப்பேனா?”
அவனது பதிலில் திகைத்து நின்றவள், சந்தேகமும் குழப்பமுமாக, “எப்படித் தெரியும்? எப்பருந்து தெரியும்? அண்ணனுக்கு தெரியுமா?” என்று அடுத்தடுத்துக் கேட்டாள்.
“ம்ஹூம் அவனுக்கு தெரியாது. ஆன்போர்டிங் ப்ராசஸ் நான் தான் பார்ப்பேன். ஆனா நீ இங்க அப்ளிகேஷன் போடுறதுக்கு முன்னாடியே உன்னை எனக்கு நல்லாத் தெரியும்…” ஜீவா சுவரிலிருந்து லேசாக நகர்ந்து மேஜை மீது இருந்த பேப்பர் வெயிட்டைக் கையில் எடுத்தான். “இன்ஃபாக்ட்… அப்பப்ப உன்னைப் பார்த்துட்டுதான் இருந்தேன். நீ கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ்ல படிக்கும்போதே ரெண்டு மூணு தடவை கேம்பஸ்ல உன்னைப் பார்த்திருக்கேன். நீதான் என்னை கவனிக்கல.”
ப்ரவா திகைத்துப் போய் நின்றாள். இவன் தன்னைத் தூரத்திலிருந்து கவனித்துக் கொண்டேதான் இருந்திருக்கிறானா?
அவளது திகைப்பைப் பார்த்துவிட்டு ஜீவாவின் முகம் சற்றுத் தீவிரமடைந்தது. “ஆனா எனக்கு ஒரே ஒரு விஷயம்தான் புரியல பாப்பி… உனக்கு என்னை நல்லாத் தெரியும். இந்த ஹாஸ்பிட்டல் நம்மளோடதுன்னு தெரியும். நாங்க இங்கதான் இருக்கோம்னு தெரியும். ஆனா இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட எங்களைப் பார்க்கணும்னு உனக்குத் தோணவே இல்லையா?”
அந்தக் கேள்வி சுளீரென ப்ரவாவின் நெஞ்சில் இறங்கியது. அவளது கண்களில் சட்டென்று மெல்லிய ஈரம் படர்ந்தது.
“தோணாம எப்படி மாமா இருக்கும்?” ப்ரவாவின் குரல் தழுதழுத்தது. “ஒவ்வொரு நாளும் தோணும். ஆனா… எனக்கு இருந்த ஒரே பயம் அப்பாயிதான். நான் ஏதாவது பண்ணி, அது தெரிஞ்சு, அப்பாயி மனசு இன்னமும் நோகக் கூடாதுன்னு நினைச்சுட்டுதான் ஒதுங்கி இருந்தேன். அந்தப் பழைய காயம் இன்னும் அங்க ஆறாம அப்படியேதான் இருக்கு. இங்க வேலைக்கு வர்றது கூட அப்பாயிக்குத் தெரியாது மாமா. நான் சொல்லல… ஏதோவொரு ஹாஸ்பிட்டல்ல வேலைன்னு நினைச்சிட்டு இருக்கு.”
ஜீவா அவளையே உற்றுப் பார்த்தான். அவளது பேச்சில் இருந்த உண்மையும் வலியும் அவனுக்குப் புரிந்தது.
“அப்பாயிக்கு உடம்புக்கு ரொம்ப முடியல மாமா…” ப்ரவா தொடர்ந்தாள், அவளது உதடுகள் லேசாக நடுங்கின. “வயசாயிடுச்சு. சுகர், பிரஷர் எல்லாம் ஏறிப் போச்சு. இப்போல்லாம் ராத்திரில சரியா தூங்குறதே இல்ல. அப்பப்ப அழுதுட்டே இருக்கு. அந்த காலத்துல தான் செஞ்ச தப்பு, அந்தப் பிடிவாதம், வாய்த் துடுக்கு… இதெல்லாம் நெனச்சு நெனச்சு உள்ளுக்குள்ளேயே குமைஞ்சு போயிருக்கு. வெளிய யார்கிட்டயும் சொல்ல முடியாம, அந்த மனக்குமுறலிலேயே உடம்பைக் கெடுத்துட்டு நிக்குது.”
அவள் மூச்சிரைத்தாள். கண்களை லேசாக துடைத்துக்கொண்டு அவனை ஏறிட்டாள்.
“நான் சித்தப்பாவுக்காகவோ, இல்ல அப்பாயிக்காகவோ வக்காலத்து வாங்க வரல மாமா… தப்பு அவங்க பக்கமும் தான். இல்லைன்னு சொல்லல. ஆனா அவங்க இன்னைக்கு அனுபவிக்கிற வேதனை இருக்கு பாருங்க… பெத்த பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளைப் பிரிஞ்சு வாழ்ற அந்தத் தனிமை… அது ஒரு நரகம் மாமா. சித்தாவும் அப்பாயியும் மனசளவுல செத்துப் போயிருக்காங்க.”
ஜீவா அமைதியாக அவளைக் கவனித்தான். அறையின் ஏசி இரைச்சல் மட்டுமே அந்த மௌனத்தை நிரப்பியது.
“அதனாலதான் நான் இங்க வந்தேன்…” ப்ரவா தனது இறுதி முடிவை உடைப்பது போல உறுதியாகச் சொன்னாள். “விஷ்வா அண்ணனையும் மதியையும் சித்தாகிட்ட சேர்க்கணும். எப்படியாவது அதுக்கு ஒரு வழி இருக்கான்னு பார்க்கத்தான் என் அடையாளத்தை மறைச்சுட்டு இங்க சேர்ந்தேன். சித்து படுற வேதனை எனக்குத் தெரியும் மாமா. அதுக்கும் மேல… எனக்கு என் அண்ணன் வேணும். எனக்கு விஷ்வா அண்ணன் வேணும் மாமா. மதிக்குட்டி வேணும்… அதுக்காக நான் என்ன வேணா செய்வேன்.”
அவள் பேசி முடித்தபோது அவளது முகம் சிவந்திருந்தது. கண்களில் கண்ணீரும், அதே சமயம் அசைக்க முடியாத ஒரு பிடிவாதமும் கலந்திருந்தது.
ஜீவா அவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தான்.
சின்ன வயதில் அணில் குஞ்சு விழுந்து கிடந்தபோது, அதைத் தன் பாவாடை மடியில் அள்ளிப் போட்டுக்கொண்டு, ‘தம்பி மாமா… இதைக் காப்பாத்து’ என்று அழுத அதே சிறு பெண்! இன்று வளர்ந்து, ஸ்டெதாஸ்கோப் மாட்டிக்கொண்டு, உடைந்த ஒரு பெரிய குடும்பத்தின் சுவர்களைத் தன் பிஞ்சு விரல்களால் ஒட்ட வைக்கத் துடிக்கிறாள்.
அவளது இந்தத் தீவிரம், அவளது இந்த பாசம் எல்லாமே ஜீவாவின் மனதை ஒரு மெல்லிய சிலிர்ப்போடு அசைத்துப் பார்த்தது. ஆனால், அதை முகத்தில் காட்டிக்கொள்ளாமல், அவன் தனது வழக்கமான புன்னகைக்குத் திரும்பினான்.
பேப்பர் வெயிட்டைக் கீழே வைத்துவிட்டு, கைகளை மீண்டும் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு அவளை நோக்கி ஓரடி எடுத்து வைத்தான்.
முகத்தில் சின்னதாக ஒரு அதிருப்தியை வரவழைத்துக்கொண்டு, “அப்படீன்னா நானு?” என்று அவன் கேட்க,
‘ங்கே’ என்று விழித்தாள் பெண். தன் காதுகளைத் தானே நம்ப முடியாதது போன்ற ஒரு பார்வை அது.
அவளது முகபாவனையைப் பார்த்து நக்கலாக உதட்டைச் சுழித்தவன், “என்ன முழிக்கற?” என்றான் ஜீவா.
கண்களை உருட்டி, தோள்களை லேசாகக் குறுக்கியபடி, “இல்ல… புரில…” என்று மெல்லிய குரலில் முனகினாள்.
“நான் என்ன ஸ்பானிஷ்லையா கேட்டேன்?” அவளது மிரட்சியை ரசித்தபடியே புருவத்தை ஏற்றி இறக்கினான்.
குழப்பத்தின் உச்சத்துக்கே போனவள் தன் விரல்களைப் பிசைந்து, “என்ன கேட்டீங்க?” என்றாள் அப்பாவியாக.
அவளது முகத்திற்கு நேராகக் குனிந்து, கண்களை உற்றுப் பார்த்து, “நான் உனக்கு வேண்டாமா?” என்று அழுத்தந்திருத்தமாகக் கேட்டவனைப் புரியாமல் தான் பார்க்க முடிந்தது அவளுக்கு.
திடீரென இவன் எங்கே போகிறான் என்று திகைத்துப்போய், “மாமா… என்ன சொல்றீங்க?” என்று தடுமாறினாள்.
அவளது குழப்பத்தை ரசித்தபடியே நிமிர்ந்து நின்றவன், “அப்பாயி பாவம், சித்தப்பா பாவம், உனக்கு உங்க அண்ணன் வேணும்… மதி வேணும்… ஆனா நான் மட்டும் வேண்டாமா?” என்று கேட்க, அவன் தன்னை வம்பிழுக்கிறான் என்பதை உணர்ந்து சற்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.
உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்க்க, “அண்ணன் வேணும்ன்னு சொன்னா, அதுல நீங்களும் தான மாமா இருக்கீங்க…” என்று லாஜிக்கை பிடித்து சொல்ல, அவனது முகம் சட்டென்று ஏமாற்றத்தைப் போல மாறியது.
கைவிரல்களை விரித்து நெஞ்சில் கைவைத்து, “அதெப்படி… உனக்கு உன் அண்ணன் பர்ஸ்ட் ப்ரையாரிட்டி. நான் பத்தோட பதினொன்னு… இல்லையா?” என்று வாதாடினான்.
அவன் வேண்டுமென்றே தகராறு செய்கிறான் என்று தெரிந்தாலும், பதற்றத்துடன் கைகளை அசைத்து, “ஐயோ அப்படில்லாம் இல்ல மாமா…” என்று அவசரமாக மறுத்தாள்.
“இல்ல அப்படித்தான்…” தன் முடிவில் உறுதியாக நிற்பவன் போல முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
அவனது முகத்தையே தவிப்போடு பார்த்தபடி, “இல்ல மாமா…” என்று தலையை ஆட்டினாள்.
“உனக்காக சின்ன வயசுல என்னென்ன தியாகம் பண்ணிருக்கேன். ஆனா என்னை ஒரு பொருட்டா கூட கன்சிடர் பண்ணல. இல்லையா?” பழைய கணக்குகளைத் தூசு தட்டுவது போலப் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டான்.
அவனை எப்படிச் சமாளிப்பது என்று புரியாமல் திணறியவள், “அப்படி இல்ல மாமா…” என்று கெஞ்சினாள். எவ்வளவு மறுத்தாலும் அவனை சமாதானப்படுத்த முடியவில்லை.
அவளது தவிப்பை ரசித்து முடித்தவன், “எல்லாம் சரி. இந்த கதைய விடு. மெய்ன் ஸ்டோரிக்கு வருவோம். அப்புறமா உன்னை வெச்சுக்கறேன்…” என்று சிரித்தவன், “நீ நினைக்கிற மாதிரி விஷ்வா அவ்வளவு சுலபமான ஆள் இல்ல பாப்பி. அவன் ஒரு பாறாங்கல். அவனை மாத்துறது சாதாரண காரியம் இல்ல. சுத்தமா சின்ன மாமாவை வெறுக்கறான்.”
“எவ்வளவு கஷ்டமா இருந்தாலும் நான் முயற்சி பண்ணுவேன் மாமா… நீங்க எனக்கு உதவி பண்ணுங்க…” ப்ரவா நடுக்கத்தோடு அவனது கையைப் பிடிக்கும் பாவனையில் முன்னே வந்தாள்.
ஜீவா நமுட்டுச் சிரிப்புடன் அவளைப் பார்த்தான். அவனுக்கு அவளது இந்தப் பதற்றமும் கெஞ்சலும் அத்தனை ரசனைக்குரியதாக இருந்தது. அவளோடு பேசும் ஒவ்வொரு கணமும், அவளது முகத்தில் மாறும் பாவங்களை ரசிப்பதே அவனுக்கு பெரிய விளையாட்டாகத் தோன்றியது.
“ஹ்ம்ம்… உதவி பண்ணலாம். எனக்கும் அந்தப் பாறாங்கல்லை கொஞ்சம் உருட்டிப் பார்க்கணும்னு ஆசைதான்…” என்று இழுத்தவன், சற்று இடைவெளி விட்டு, அவளது கண்களை நேராகப் பார்த்துக் குறும்பாகக் கேட்டான்,
“ஆனா… அதுக்கு எனக்கு என்ன தருவ?”
அவன் முகத்தில் மின்னிய குறும்பைப் பார்த்து மருண்டவளாய், ப்ரவா புரியாமல் விழித்தாள். “என்ன… என்ன வேணும் மாமா?”
“அதான் கேக்குறேன்… ஒரு சீனியர் கன்சல்டன்ட், இந்த ஹாஸ்பிட்டலோட எம்.டி உனக்காகக் களத்துல இறங்கி, தன் சொந்த மச்சானை வழிக்குக் கொண்டு வர ரிஸ்க் எடுக்கப் போறான். சும்மாவா? இந்த டீலுக்கு நீ என்ன ஃபீஸ் குடுக்கப் போற?”
அவனது முகத்தில் வழிந்த அந்த அப்பட்டமான விஷமத்தைப் பார்த்ததும் ப்ரவாவுக்கு உதறலெடுத்தது. இத்தனை பெரிய குடும்பப் பாரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, இவன் எந்தக் கவலையுமில்லாமல் விளையாடிக்கொண்டிருக்கிறான்!
கண்களை உருட்டி, கால்களை லேசாகத் தரையில் உதைத்தபடி, “மாமா… நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்!” என்று அவள் சிணுங்கினாள்.
“நானும் ரொம்ப சீரியஸாத்தான் கேக்குறேன்…” ஜீவா சிரிப்பை அடக்கிக்கொண்டு முகத்தை விறைப்பாக வைத்துக்கொண்டான். “டீல்னா சும்மாவா? விஷ்வாவை நாம மாத்தணும்னா, நாம ரெண்டு பேரும் கூட்டு சேரணும். அதுக்கு நான் சொல்ற பேச்சுக்கெல்லாம் நீ தலையாட்டணும். நான் சொல்ற கண்டிஷன்களுக்கு ஓகே சொல்லணும். ஒத்துக்கிட்டா… நானும் உன் டீம்!”
அவன் காட்டிய அந்த நிபந்தனையில் பழைய தம்பிமாமா மீண்டிருந்தான். இவன் தன்னோடு நிற்பதே தனக்குப் பாதி பலம் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
அவனது நிபந்தனைகளைத் தெரிந்துகொள்ளும் ஆவலில், “சரி… என்ன கண்டிஷன்?” என்று அவள் பணிவாகக் கேட்டாள்.
அவளது முகத்தையே இமைக்காமல் கூர்ந்து கவனித்தவன், “முதல்ல… ஹாஸ்பிட்டல்ல என்னை முறைச்சுப் பார்க்கக் கூடாது. எல்லாரும் இருக்கும்போது மரியாதை கொடுக்கணும். அப்புறம், நான் எப்பவெல்லாம் டீ, காபி குடிக்கக் கூப்பிடுறேனோ அப்பல்லாம் மறுவார்த்தை பேசாம வரணும்… என்ன ஓகே வா?”
அவனது சிறுபிள்ளைத்தனமான நிபந்தனைகளைக் கேட்டு உதட்டைக் கடித்துக்கொண்டு லேசாகச் சிரித்தாள் ப்ரவா. “சரிங்க சார்… வேற எதுவும் இல்லையே?”
கன்னத்தில் விரல் வைத்து யோசிப்பது போலப் பாவனை செய்தவன், “இப்போதைக்கு இவ்வளவுதான். பாக்கி போகப் போக சேர்த்துக்கலாம்…” என்று திருப்தியோடு தலையசைத்தான். “இப்ப கிளம்பு… சந்திரன் சித்தப்பா டெஸ்ட் முடிஞ்சு வர நேரம் ஆச்சு. அந்த ஜாதக ஃபைலை வேற டேபிள்ல வச்சுட்டு போயிருக்காரு. நான் பொண்ணு பார்க்கணும்!”
அவன் சொன்ன விதத்தில் ப்ரவாவின் முகத்தில் இருந்த அத்தனை இறுக்கமும் உடைந்து, இயல்பான புன்னகை மலர்ந்தது.
கதவைத் திறந்து கொண்டு அவள் வெளியேற முயன்றபோது, ஜீவா அவளைப் பார்த்துக் கண்ணடித்தான்.
“ஆல் தி பெஸ்ட் பார்ட்னர்…!”
அவனது உற்சாகம் தொற்றிக்கொள்ள, வாசற்படியில் நின்றவள் திரும்பி, “உங்களுக்கும் ஆல் தி பெஸ்ட். நல்ல பொண்ணா சூஸ் பண்ணுங்க…” என்று விஷமமாகப் பதில் கண்ணடித்தாள்.
“ஹலோ அதெல்லாம் நாங்க பார்த்துக்கறோம்…” என்று வாய்விட்டுச் சிரிக்க, அந்த இதமான சிரிப்பு அவளிடமும் பரவியது!






Wow.... lovely epi sis ❤️
☺️🫶🍨
Lovely update😍😍
Nice
அருமை
Next ud innum varala sis 🧐
Next episode pls
Very nice
nice
என்னடா நடக்குது இங்க.. மலரும் நினைவுகள் எப்போது காதலாவது...? ஆனா இப்படி தத்தி காதல் பழகுவது கூட நல்ல தான் இருக்கு.. 💫🥰