அத்தியாயம் 10
அவசரச் சிகிச்சைப் பிரிவு வழக்கம்போலப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ரிசப்ஷனில் நோயாளிகளின் உறவினர்கள் சிலர் மருந்துச் சீட்டுகளோடு காத்திருக்க, செவிலியர்கள் ஃபைல்களை அடுக்கிக் கொண்டிருந்தனர்.
திடீரென வெளியே அடுத்தடுத்துக் கூச்சலிட்ட ஆம்புலன்ஸ்களின் தொடர்ச்சியான சைரன் சத்தம் அந்தச் சூழலை அப்படியே தலைகீழாக மாற்றியது.
ஆனைமலை மெயின் ரோட்டில் பள்ளி வேன் ஒன்று நிலைதடுமாறிக் கவிழ்ந்துவிட்டதாகவும், உள்ளே இருந்த பள்ளிச் சிறார்களுக்குப் பலத்த காயம் என்றும் தகவல் வந்த அடுத்த நொடி, எமெர்ஜென்சியில் பதட்டம் தொற்றிக்கொண்டது.
தகவல் கேட்டு அவசரப் பிரிவுக்குள் புயலென நுழைந்தான் ஜீவா. அவனது முகத்தில் எப்போதுமிருக்கும் அந்தத் தளர்வான புன்னகை மறைந்து, எச்சரிக்கை உணர்வு குடியேறியிருந்தது.
“டிரையாஜ் ஷீட் எடுங்க… நர்ஸிங் ஸ்டாஃப் எல்லாரும் அலர்ட்டா இருங்க!” என்று உரக்கக் குரல் கொடுத்து, முழு எமர்ஜென்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான்.
உடனடியாக அவசரக் கட்டுப்பாட்டுத் தொலைபேசியை எடுத்து, “ஆன்-கால் ட்ராமா டீமை உடனே எமர்ஜென்சிக்கு வரச் சொல்லுங்க. நியூரோசர்ஜன் டாக்டர் சுந்தர், சீஃப் சர்ஜன் டாக்டர் பாஸ்கர், அனஸ்தீசியாலஜிஸ்ட் டாக்டர் ஆனந்த்… எல்லாரையும் உடனடியா ஓடிக்கு ரிப்போர்ட் பண்ணச் சொல்லுங்க. கோட் ரெட்!” என்று கட்டளையிட்டான்.
அவனுக்குப் பக்கத்திலேயே ஸ்டெதாஸ்கோப்பும் கையுமாக விரைந்து வந்து நின்றாள் ப்ரவலிகா.
வாசலில் முதல் ஆம்புலன்ஸ் வந்து நின்ற அடுத்த நொடி, ஸ்ட்ரெச்சரை உருட்டிக்கொண்டு துணை மருத்துவப் பணியாளர்கள் உள்ளே ஓடிவந்தனர். முதல் ஸ்ட்ரெச்சரில் எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் கிடத்தப்பட்டிருந்தான். அவனது தலையின் வலது பக்கத்தில் பலத்த அடிபட்டு ரத்தம் காது வழியே வடிந்து கொண்டிருந்தது. உடல் முழுவதும் வெட்டி வெட்டி இழுத்துக் கொண்டிருந்தது.
“பீடியாட்ரிக் ஹெட் இன்ஜுரி! ஜிசிஎஸ் ஸ்கோர் சிக்ஸ்… தொடர்ந்து கன்வல்ஷன்ஸ் வருது!” பணியாளர் கத்தினார்.
ஜீவா உடனே பாய்ந்து வந்து சிறுவனின் கண்களைத் திறந்து பார்த்தான். “பைலேட்டரல் பியூபில்ஸ் அன்ஈக்குவல்… லெப்ட் பியூபில் டைலேட் ஆகியிருக்கு. எக்ஸ்ட்ராடியூரல் ஹெமரேஜ் இருக்க வாய்ப்பிருக்கு. நர்ஸ், ஐவி லோராசெபம் பாயிண்ட் ஒன் எம்ஜி பர் கேஜி உடனே லோட் பண்ணுங்க!” என்று உத்தரவிட்டான்.
மருந்தை ஏற்றத் தயாரான நர்ஸ் சிரிஞ்சை எடுக்கத் திரும்பிய அந்த நொடியில், குழந்தையின் சுவாசம் விசித்திரமான தாளத்தில் இழுக்கத் தொடங்கியது. தொண்டைக்குள் சளியும் ரத்தமும் அடைத்து மூச்சு நின்றுவிடும் அபாயம்!
ஜீவா ஒரு நொடியும் தாமதிக்காமல் குழந்தையின் தாடையை மட்டும் லாவகமாக முன்னால் தூக்கிப் பிடித்தான். தலையையோ கழுத்தையோ அசைக்காமல் ஏர்வேயைத் திறக்க அவன் போராடிய அதே விநாடியில், அவன் கேட்காமலேயே பக்கத்திலிருந்த சக்ஷன் டியூபை லாவகமாக எடுத்து அவனது கைக்கு நேராக நீட்டினாள் ப்ரவா.
“குட்… சக்ஷன் பண்ணுங்க ப்ரவலிகா!” ஜீவா கட்டளையிட, ப்ரவா அடுத்த நொடியே குழந்தையின் வாயிலிருந்த ரத்தத்தையும் சளியையும் ஒரு சொட்டு கூட நுரையீரலுக்குள் போகாதபடி சக்ஷன் செய்து வெளியேற்றினாள்.
தலையை உயர்த்தி ஜீவாவைப் பார்த்தவள், “ஏர்வே கிளியர் சார்…” என்றாள்.
“நர்ஸ், லோராசெபம் போட்டுட்டு மேனிடால் 20% ஐவி ஸ்டாட் ஏத்துங்க… பிரைன் எடிமாவை உடனே குறைக்கணும். ஸ்ட்ரெச்சரை உடனே சிடி ஸ்கேனுக்கு தள்ளுங்க, சுந்தர், நீங்க இதை கவனிங்க…” என்று ஜீவா துரிதமாக உத்தரவிட, ட்ராமாலஜிஸ்ட் சுந்தர் ஸ்ட்ரெச்சரை இழுத்துக் கொண்டு ஓடினான். ஜீவா அடுத்த ஸ்ட்ரெச்சரை நோக்கிப் பாய்ந்தான்.
அங்கே இரண்டாவது ஸ்ட்ரெச்சரில் ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கொண்டுவரப்பட்டான். அவனது மார்புக் கூட்டில் வேனின் இரும்பு ராடு பலமாக மோதியிருந்தது. குழந்தை மூச்சுத் திணறி நீல நிறமாக மாறிக் கொண்டிருந்தது. அவனது கழுத்து நரம்புகள் புடைத்துப் பிதுங்கி நின்றன.
ஜீவா ஸ்டெதாஸ்கோப்பை வைத்து அவனது மார்பை சோதித்தான். “லெப்ட் சைட் ஏர் என்ட்ரி சுத்தமா இல்ல… ட்ரக்கியா ரைட் சைடு தள்ளப்பட்டிருக்கு! டென்ஷன் நியூமோதொராக்ஸ்… இம்மீடியட் நீடில் டீகம்ப்ரஷன் பண்ணனும். நர்ஸ், லார்ஜ் போர் நீடில் எடுங்க!” என்று ஜீவா கத்தினான்.
நர்ஸ் எமர்ஜென்சி ட்ரேயைத் தேடித் திரும்பிய அந்த நொடித் தாமதத்தைக் கவனித்த ப்ரவா, தன் அப்ரானின் பாக்கெட்டிலிருந்து ஏற்கெனவே தயாராக வைத்திருந்த 14-கேஜ் கானுலாவை எடுத்து, ஜீவா கைநீட்டிய அடுத்த நொடியே அவனது விரல்களில் லாவகமாகக் கொடுத்தாள்.
“ஹியர் சார்!” அவளது குரலில் ஒரு விநாடி கூடப் பதற்றமில்லை.
ஜீவா அவளது வேகத்தைக் கவனித்தபடியே, குழந்தையின் இடது பக்க மார்பில், இரண்டாவது விலா எலும்பு இடைவெளியைத் துல்லியமாகக் கணித்து அந்த ஊசியை ஒரே அழுத்தாக உள்ளே இறக்கினான்!
‘புஸ்ஸ்ஸ்…’ என்று பெருங்காற்று சீறிக்கொண்டு வெளியேறியது.
அடுத்த கணமே, குழந்தையின் நெஞ்சு சீராக விரிந்தது. மானிட்டரில் எண்பதாகக் கிடந்த ஆக்ஸிஜன் அளவு மளமளவெனத் தொண்ணூற்று எட்டாக உயர்ந்தது. நீல நிறமாக இருந்த குழந்தையின் உதடுகள் இயல்பான இளஞ்சிவப்புக்குத் திரும்பின.
ஜீவா நெற்றியைத் துடைத்துக்கொண்டான். “செஸ்ட் டியூப் போடுற வரைக்கும் பேஷன்ட் இப்போ ஸ்டேபிள். நர்ஸ், இவனை ஐசியூக்கு ஷிப்ட் பண்ணுங்க…” என்று உத்தரவிட்டவன், ப்ரவாவைத் திரும்பிப் பார்த்தான்.
இக்கட்டான தருணத்தில் ஒரு சீனியர் அடுத்து என்ன கேட்பான் என்பதை முன்கூட்டியே உணர்ந்து, கையில் தேவையானதை நொடியில் எடுத்து நீட்டிய அவளது கூர்மையான சுறுசுறுப்பும் பிரசன்ஸ் ஆஃப் மைண்டும் ஜீவாவை இம்ப்ரஸ் செய்தது.
‘கிரேட் டைமிங்’ என்று நினைத்தபடி மூன்றாவது ஸ்ட்ரெச்சரை நோக்கி ஓடினான்.
அங்கே மூன்றாவது ஸ்ட்ரெச்சரில் அந்த ஆறு வயதுப் பெண் குழந்தை உள்ளே கொண்டுவரப்பட்டது. பள்ளிச் சீருடை முழுவதும் ரத்தக் கறையில் நனைந்திருக்க, தலையிலும் இடது தொட எலும்பிலும் பலத்த அடிபட்டுச் சுயநினைவின்றிப் பிஞ்சுக் குழந்தை கிடந்தது.
ஜீவா குழந்தையின் நாடியைப் பிடித்துப் பார்த்தான். “பிபி எய்டி பை பிப்டி, பல்ஸ் ஒன் சிக்ஸ்டி… ஹைபோவோலெமிக் ஷாக்!”
அங்கு விரைந்து வந்த சீஃப் சர்ஜன் டாக்டர் பாஸ்கர் அல்ட்ராசவுண்ட் ப்ரோபை குழந்தையின் வயிற்றில் வைத்தார். திரையைப் பார்த்துவிட்டு அவரது முகம் இறுகியது. “ஸ்ப்ளீனிக் ரப்சர்… இன்டர்னல் ப்ளீடிங் அதிகமாயிட்டு இருக்கு. உடனடியா லேபரோடமி பண்ணலன்னா கார்டியாக் அரெஸ்ட் ஆயிடும். இமிடியட்டா ஓடிக்கு ஷிப்ட் பண்ணுங்க, மயக்க மருந்து டீமை கூப்பிடுங்க!” என்று பாஸ்கர் உத்தரவிட்டார்.
குழந்தை அவசர அறுவைசிகிச்சைக் கூடத்திற்கு மாற்றப்பட்டது. விளக்குகள் எரிய, மானிட்டரின் எண்கள் பயமுறுத்தத் தொடங்கின.
அப்போதுதான் பிளட் பேங்கிலிருந்து லேப் டெக்னீஷியன் ஃபைலுடன் பதற்றமாக ஓடிவந்தார்.
“ஜீவா சார்… பெரிய சிக்கல்!” மூச்சிரைக்கக் கூப்பிட்டார் டெக்னீஷியன்.
“என்ன ஆச்சு?” ஜீவா அவசரமாகத் திரும்பினான்.
“சார்… குழந்தையோட பிளட் குரூப், ‘ஓ-நெகட்டிவ்’. விபத்துல வந்த மத்த ரெண்டு பேஷன்ட்ஸ்க்கு இருந்த ஸ்டாக்கை எமர்ஜென்சி ரிலீஸ் பண்ணிட்டோம் சார். இப்போ நம்மகிட்ட ஓ-நெகட்டிவ் ஒரு யூனிட் கூட இல்ல!”
அங்கிருந்த மருத்துவர்கள் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றனர். ஜீவாவின் முகம் சுருங்கியது.
“வாட்? சிட்டில மத்த பிளட் பேங்க்ஸுக்குக் கேட்டீங்களா?” ஜீவாவின் குரலில் ஆத்திரமும் தவிப்பும் ஒருங்கே வெளிப்பட்டது.
“கேட்டுட்டோம் சார்… ஜிஹெச், கேஎம்சிஹெச் எங்கயுமே ஓ-நெகட்டிவ் கையிருப்பு இல்ல. பக்கத்து டிஸ்ட்ரிக்ட்ல இருந்து வரவழைக்க குறைஞ்சது ரெண்டு மணி நேரமாவது ஆகும்னு சொல்றாங்க.”
“ரெண்டு மணி நேரமா?” ஜீவா பற்களைக் கடித்தான்.
ஓ-நெகட்டிவ் உள்ள நோயாளிக்கு மாற்று ரத்தமாக வேறு எந்த ரத்தப் பிரிவையும் ஏற்ற முடியாது; ஏற்றினால் ரத்த அணுக்கள் சிதைந்து உயிருக்கே ஆபத்தாகிவிடும். குழந்தையின் பிபி சிக்ஸ்டி பை ஃபார்ட்டியாகக் குறைந்திருந்தது.
“இன்னும் டுவென்டி மினிட்ஸ்ல பிளட் ட்ரான்ஸ்ஃபியூஷன் பண்ணலன்னா வாஸ்குலர் கொலாப்ஸ் ஆயிடும்… சர்ஜரியை ஸ்டார்ட் பண்ண முடியாது…” அறுவைசிகிச்சை மருத்துவர் எச்சரித்தார்.
வெளியே தாழ்வாரத்தில் குழந்தையின் பெற்றோரின் கதறல் சுவர்களைத் துளைத்துக் கொண்டு கேட்டது. ஜீவா செய்வதறியாது யோசனையோடு நெற்றியைத் தேய்த்தான்.
“என் பிளட் எடுத்துக்கங்க.”
அந்த அமைதியை உடைத்துக் கொண்டு வந்த குரலைக் கேட்டு ஜீவா நிமிர்ந்தான்.
ப்ரவலிகா நின்றிருந்தாள். கையில் இருந்த கையுறையைக் கழற்றிவிட்டு, தன் அப்ரானின் வலது கையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டிருந்தாள்.
“என் பிளட் குரூப் ஓ-நெகட்டிவ் தான் சார். உடனே கிராஸ் மேட்சிங் பண்ணிட்டு ரத்தத்தை எடுங்க. டைம் வேஸ்ட் பண்ண வேணாம்…” எந்தத் தயக்கமுமின்றி இயல்பாகச் சொன்னாள்.
ஜீவா அவளை ஏறிட்டுப் பார்த்தான். “டாக்டர் ப்ரவலிகா… நீங்க மார்னிங்ல இருந்து தொடர்ந்து மூணு கேஸை அட்டென்ட் பண்ணிட்டு நிக்கிறீங்க. சரியா சாப்பிடக் கூட இல்ல. இப்போ பிளட் டொனேட் பண்ணா உங்களுக்கு வாசோவேகல் அட்டாக் வர சான்ஸ் இருக்கு…”
அவனது ஆட்சேபத்தை ஏற்க மறுப்பது போலக் கையை அசைத்தவள், “அங்க குழந்தைக்கு பல்ஸ் டிராப் ஆகுது சார். இந்த நேரத்துல என் உடம்பைப் பத்தி யோசிக்க முடியாது. பிளட் பேங்க் ஸ்டாஃபை உடனே எடுக்கச் சொல்லுங்க…” என்று குரலில் மெல்லிய பிடிவாதத்தோடு பேசினாள்.
அவளது உறுதியைக் கண்டு டாக்டர் பாஸ்கரும் ஜீவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஜீவாவால் அதற்கு மேல் மறுத்துப் பேச முடியவில்லை. “சரி… உடனே அரேஞ்ச் பண்ணுங்க…” என்று டெக்னீஷியனிடம் தலையசைத்தான்.
அடுத்த சில நிமிடங்களில், அறுவைசிகிச்சைக் கூடத்திற்கு அருகிலிருந்த சிறிய அறையில் கட்டிலில் படுத்திருந்தாள் ப்ரவா.
செவிலியர் அவளது கையில் ஊசியைச் செலுத்த, ரத்தம் குழாய் வழியே பைக்குள் இறங்கத் தொடங்கியது. பக்கத்திலேயே நின்றிருந்த ஜீவா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது முகத்தில் லேசான சோர்வு தெரிந்தாலும், எந்தத் தயக்கமுமின்றி அமைதியாக இருந்தாள்.
“தலை சுத்துதா டாக்டர்?” ரத்தப் பையை லேசாக ஆட்டியபடி செவிலியர் கேட்டாள்.
“இல்ல… நார்மலாதான் இருக்கு. த்ரீ பிஃப்டி எம்எல் முழுசா எடுத்துக்கோங்க…” மெல்லிய குரலில் ஆனால் தெளிவாகச் சொன்னாள் ப்ரவா.
ரத்தப் பை நிரம்பியதும், செவிலியர் அதை அவசரமாக எடுத்துக்கொண்டு அறுவைசிகிச்சைக் கூடத்திற்குள் ஓடினாள். குழந்தைக்கான ரத்த ஓட்டம் தொடங்கப்பட, டாக்டர் ஆனந்த் மயக்க மருந்தை ஏற்றித் தலையசைக்க, சர்ஜன் பாஸ்கரின் தலைமையில் அறுவைசிகிச்சை முழு வீச்சில் தொடங்கியது.
அறையில், கட்டிலில் படுத்திருந்த ப்ரவாவின் முகம் ரத்த இழப்பாலும் காலையிலிருந்து சாப்பிடாத சோர்வாலும் லேசாக வெளிறிப் போயிருந்தது. எழுந்து உட்கார முயன்றவளுக்குக் கண்கள் லேசாக இருட்டிக்கொண்டு தலை சுற்றியது.
“டாக்டர் ப்ரவலிகா… உடனே எந்திரிக்காதீங்க, அப்படியே ரிலாக்ஸ்டா படுங்க…” என்று எச்சரித்தபடி வந்த டியூட்டி நர்ஸ், அவளது பிபியைப் பரிசோதித்துவிட்டு, நரம்பில் ஒரு பாட்டில் நார்மல் சலைன் திரவத்தை மெதுவாக ஏறும்படி இணைத்துவிட்டு, கையில் ஒரு குவளை ஆப்பிள் ஜூஸையும் கொடுத்தாள்.
“காலையில இருந்து ஒரு வாய் தண்ணி கூட குடிக்காம நின்னா இப்படித்தான் பிபி டிராப் ஆகும்… முதல்ல ஜூஸைக் குடிங்க…” என்று நர்ஸ் நகர, கண்களை மூடி தலையணையில் சாய்ந்தாள் ப்ரவா.
பக்கத்திலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தான் ஜீவா.
எமர்ஜென்சியில் மூத்த மருத்துவர்கள் பலரும் பதற்றத்தோடு வேலை செய்துகொண்டிருந்த சூழலில், தடுமாறிவிடாமல் சரியான நேரத்தில் அவர்களுக்குத் துணையாக நின்று தேவையானதை நொடியில் கணித்து உதவிய அவளது சமயோசிதம், இப்போது ரத்தம் கிடைக்காத குழந்தைக்குத் தன் சொந்த உடம்பின் பலவீனத்தையும் மீறி ரத்தத்தைக் கொடுத்து மீட்டெடுத்த இந்த அர்ப்பணிப்பு!
இத்தனை இளம் வயதில், ஒரு மருத்துவருக்குத் தேவையான அத்தனை நுட்பங்களும், துணிவும், பிரசன்ஸ் ஆஃப் மைண்டும் ஒருங்கே வாய்த்த ஒரு பெண்ணை அவன் இதற்கு முன் பார்த்ததில்லை.
“டாக்டர் ப்ரவலிகா…” ஜீவா மெதுவாக அழைத்தான்.
கண்களை மூடியிருந்த ப்ரவா, அவனது குரல் கேட்டு இமைகளைத் திறந்து பார்த்தாள்.
“இப்போ எப்படி இருக்கு? தலை சுத்தல் எதுவும் இல்லையே?” அவளது முகத்தைக் கூர்ந்து கவனித்தபடி கேட்டான்.
“இல்ல சார்… நல்லா இருக்கேன். சர்ஜரி ஸ்டார்ட் பண்ணிட்டாங்களா?” கையில் இருந்த நரம்பு ஊசி வலிக்காமல் மெதுவாகக் கேட்டாள்.
“ஆமா, பிளட் ஏத்த ஆரம்பிச்சதும் பிபி ஸ்டேபிள் ஆகிடுச்சு. சர்ஜரி போயிட்டு இருக்கு… குழந்தை தப்பிச்சிடுவா…” ஜீவா சொன்னான். அவனது உதடுகளில் மெல்லிய ஆசுவாசம் பரவியது.
அவன் அவளது முகத்தை சிறு புன்னகையோடு கூர்ந்து கவனித்தான். “நல்ல ப்ரெஸன்ஸ் ஆப் மைன்ட். ரொம்ப தைரியம் வேற. யூ ரியலி டிட் எ கிரேட் ஜாப்.”
ப்ரவா லேசாகப் புன்னகைத்தாள். “ஒரு எமர்ஜென்சி சிச்சுவேஷன்ல சீனியருக்கு அசிஸ்ட் பண்ண வேண்டியது என் டியூட்டி சார்…”
“இவ்வளவு இன்ஸ்டன்ட் கோஆர்டினேஷன்…” என்று வியப்பு மாறாமல் இழுத்தவன், “இம்ப்ரசிவ்… யூ ஆர் எ நேச்சுரல் லீடர்…” என்றான்.
அவள் எதுவும் பேசாமல் மெல்லிய புன்னகையோடு அமைதியாக இருந்தாள்.
“ஓகே டேக் கேர்… ஒன் ஹவர் ரெஸ்ட் எடுத்துட்டு குவார்ட்டர்ஸ் போங்க…” என்றவன் அவளது கைகளைத் தட்டிக் கொடுத்துவிட்டு எழுந்து நகர்ந்தான்.
போனவனின் முதுகையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரவலிகா!
***
நள்ளிரவு இரண்டு மணியைத் தாண்டியிருந்தது.
பகல் முழுக்கப் பதட்டமாக இயங்கிக் கொண்டிருந்த தீவிர சிகிச்சைப் பிரிவு, இப்போது மெல்லிய நீல நிற வெளிச்சத்தில் ஆழ்ந்த அமைதியைக் கண்டிருந்தது. பகலில் நடந்த பள்ளி வேன் விபத்தின் அதிர்வலைகள் அடங்கி, அறுவைசிகிச்சை முடிந்து தனித்தனிப் படுக்கைகளில் அந்த மூன்று குழந்தைகளும் சீரான சுவாசத்துடன் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அன்றைய இரவுப் பணிப் பட்டியலில் ப்ரவலிகாவின் பெயர் இல்லை. மதியம் ரத்தம் கொடுத்து முடித்து, சலைன் ஏறியதும் அவளை விடுதிக்குச் சென்று ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தார்கள்.
கட்டிலில் படுத்துப் புரண்டு பார்த்தவளுக்கு, அறுவைசிகிச்சைக் கூடத்திற்குள் போன அந்த ஆறு வயதுப் பெண் குழந்தையின் வெளிறிய முகமே கண்முன் நின்றது.
ஒரு மருத்துவருக்குத் தன் நோயாளி அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டானா என்பதைத் தன் சொந்தக் கண்களால் உறுதி செய்யும் வரை நிம்மதி கிடைக்காது.
எழுந்து முகத்தைக் கழுவிக்கொண்டு, தலைமுடியை இறுக்கமாக அள்ளி முடிந்து, எளிய காட்டன் சுடிதாரை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பியவளை நிறுத்தியது மதுவின் குரல்.
“ஏய் என்னடி இந்த நேரத்துல?” போர்வையை விலக்கி கண்களைக் கசக்கியபடி, தூக்கக் கலக்கத்தில் கேட்டாள் மது.
“சும்மா ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வரேன்டி…” அறைக் கதவின் கைப்பிடியைப் பிடித்தபடி குரலைத் தழைத்துக் கொண்டு கூறினாள் ப்ரவா.
“லூசே… ஒழுங்கா படுத்து தூங்கு எரும… ப்ளட் டொனேட் பண்ணிட்டு, ராக்கோழி மாதிரி… ச்சீ வந்து படு…” தலையணையில் முகம் புதைத்து, கடுப்பாக உறக்கத்தோடு கத்தினாள்.
“தூங்கு மது. ஒரு பத்து நிமிஷம் நடந்துட்டு வரேன். தூக்கம் வரல..” சாக்கு தான். சொல்லாவிட்டால் கண்டிப்பாக விட மாட்டாள். முடியை பிடித்து இழுத்துக் கொண்டு போகும் ரகம் அவள்.
“பேயா பொறக்க வேண்டியதுங்க அண்ணனும் தங்கச்சியும்… சை… போய் தொலை… ஆனா லேட் பண்ணா வந்து கொன்றுவேன்…” என்று தூக்கத்திலேயே பினாத்திவிட்டு மீண்டும் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள் மது.
அவளைப் பார்த்து மெலிதாகச் சிரித்த ப்ரவா, கதவைச் சத்தமின்றிச் சாத்திவிட்டு ஐசியூ நோக்கி நடந்தாள்.
ஐசியூவின் தானியங்கி கண்ணாடி கதவு மென்மையாகத் திறந்து மூடியது. காலடிச் சத்தம் கேட்காமல் ரப்பர் காலணிகளுடன் உள்ளே நுழைந்தவள், முதல் படுக்கையில் தலையில் கட்டுடன் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனின் சார்ட்டை எடுத்துப் பார்த்தாள். ஜிசிஎஸ் ஸ்கோர் இயல்பு நிலைக்குத் திரும்பியிருந்தது. பியூபில்ஸ் சீராக இருந்தன. இரண்டாவது படுக்கையில் இருந்த பையனுக்கு மார்பில் போடப்பட்டிருந்த செஸ்ட் டியூபில் காற்றுக் கசிவு நின்றிருந்தது; ஆக்ஸிஜன் அளவு தொண்ணூற்று ஒன்பது காட்டியது.
கடைசிப் படுக்கையான ஐந்தாம் நெம்பர் பெட்டை நோக்கி நகர்ந்தாள். அங்கேதான் அந்த ஆறு வயதுப் பெண் குழந்தை படுத்திருந்தாள்.
குழந்தையின் கன்னங்களில் மீண்டும் ரத்த ஓட்டத்தின் லேசான இளஞ்சிவப்பு படர்ந்திருந்தது. நெற்றியில் ஒட்டியிருந்த சென்சார் திரையில் இதயத் துடிப்பு தொண்ணூற்று இரண்டிலும், ரத்த அழுத்தம் நூற்றுப் பத்துக்கு எழுபதிலும் சீராகப் பதிவாகிக் கொண்டிருந்தன.
ப்ரவா குழந்தையின் கை மணிக்கட்டைத் தொட்டு, நாடித் துடிப்பை விரல்களால் உணர்ந்து பார்த்தாள். பலவீனமான படபடப்பு மறைந்து, துடிப்பு உறுதியாக இருந்தது. அவளையறியாமல் உதடுகளில் ஒரு மெல்லிய நிம்மதிப் பெருமூச்சு விரிந்தது.
“வைட்டல்ஸ் எல்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கு.”
பின்னாலிருந்து திடீரென ஒலித்த குரல் கேட்டு ப்ரவா திடுக்கிட்டுத் திரும்பினாள்.
படுக்கையின் மறுபுறம் வந்து நின்றிருந்தான் ஜீவா. அவனது கையில் ஸ்டெதாஸ்கோப் இருந்தது. கண்களில் சோர்வின் ரேகைகள். வழக்கமாக அவன் அணியும் பார்மல் சட்டையின் கைகள் முழங்கை வரை மடிக்கப்பட்டிருந்தன.
“ஜீவா சார்…” அசடு வழிந்த பாவனையில் ப்ரவா குரலைத் தாழ்த்தி அழைத்தாள்.
“நீ ஹாஸ்டலுக்குப் போய் தூங்க வேண்டிய ஆளாச்சே… இங்க என்ன பண்ற?” ஜீவா ஸ்டெதாஸ்கோப்பை பாக்கெட்டில் போட்டபடியே அவளது முகத்தை ஆராய்ந்தான். “மதியம் ரத்தம் குடுத்துட்டு மயக்கம் வந்து படுத்த. ஞாபகம் இருக்கா இல்லையா?”
“தூக்கம் வரல சார். போஸ்ட்-ஆப் ஸ்டேட்டஸ் எப்படி இருக்குன்னு ஒரு பார்வை பாத்துட்டு போலாம்னு வந்தேன்…” ப்ரவா எதுவும் நடக்காதது போல இயல்பாகச் சொன்னாள்.
ஜீவா குழந்தையின் சார்ட்டை எடுத்துப் புரட்டினான். “ஆபரேஷன் முடிஞ்சு நாலு மணி நேரம் ஆச்சு. இன்டர்னல் ப்ளீடிங் எதுவும் இல்ல. யூரின் அவுட்புட், ஹீமோகுளோபின் எல்லாம் நார்மலா இருக்கு. பாப்பா டேஞ்சர் ஜோனைத் தாண்டிட்டா.” சார்ட்டைத் திரும்ப மாட்டிவிட்டு அவளைப் பார்த்தான். “ஆனா நீ டேஞ்சர் ஜோனைத் தாண்டின மாதிரி தெரியல… முகம் இன்னும் வெளிறிப் போய் கிடக்கு.”
“அப்படியெல்லாம் இல்ல சார், நான் நல்லாதான் இருக்கேன்…” ப்ரவா சமாளிக்கும் குரலில் மறுத்தாள்.
“நல்லா இருக்க லட்சணம் தெரியுது…” ஜீவா லேசாக முறுவலித்தான். “வா… இந்த டைம்ல ஐசியூல நின்னுகிட்டு வெட்டிப் பேச்சு பேச முடியாது. கீழ கேன்டீன் இன்னும் ஓபன்லதான் இருக்கும்.” பேச்சு இயல்பாக ஒருமைக்கு தாவியிருந்ததை இருவருமே கவனிக்கவில்லை. இது எப்போதும் போல இயல்பு போலத்தான் பேசினான்.
“இல்ல சார், நான் ஹாஸ்டலுக்கே கிளம்புறேன்…” தயக்கத்துடன் ஓரடி பின்வாங்கினாள்.
“ப்ரவலிகா, சீனியர் டாக்டர் கூப்பிட்டா வரணும்னு உங்க மெடிக்கல் காலேஜ்ல சொல்லிக் குடுக்கலையா?” முறைப்பது போலப் பாவனை செய்து, கண்களில் விஷமத்தோடு கிண்டலாகக் கேட்டான்.
ப்ரவா ஒரு கணம் அவனைப் பார்த்துவிட்டு அமைதியாகத் தலையசைத்தாள்.
இருவரும் ஐசியூவிலிருந்து வெளியேறி, நள்ளிரவு அமைதியில் மூழ்கியிருந்த மருத்துவமனைத் தாழ்வாரத்தின் வழியே தரைத்தளத்துக்கு இறங்கினர். தரைத்தளத்தின் ஒரு மூலையில் இருபத்து நான்கு மணி நேரமும் இயங்கும் கேன்டீனில் குறைந்த மின்விளக்குகள் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன. இரண்டு செவிலியர்களும், ஒரு ஆம்புலன்ஸ் டிரைவரும் தூரத்து மேஜையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
ஜீவா கவுன்டருக்குச் சென்று, “எனக்கு ப்ளாக் காபி, சுகர் கம்மியா…” என்றவன், திரும்பி அவளைப் பார்த்து, “உனக்கு?” என்று கேட்க,
“எனக்கும் ப்ளாக் காபி, சுகர் இல்லாம…” என்றாள்.
சிறு புன்னகையோடு கேஷியரைப் பார்த்து, “அதையே குடுத்துடுங்க…” என்று சொன்னவன், மூலையிலிருந்த ஒரு மேஜையை நோக்கி நடந்தான்.
ப்ரவா அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். தன் கைகளை மடியில் கோர்த்தபடி, ஒரு ஜூனியரின் தார்மீக இடைவெளியை அவள் இயல்பாகவே கடைப்பிடித்தாள்.
சூடான பிளாக் காபி இரண்டு குவளைகளில் வந்தது. ஜீவா ஒரு குவளையை அவளுக்கு முன்னே நகர்த்தி வைத்தான்.
“தேங்க்ஸ் சார்…” என்றபடி அவள் குவளையைக் கையில் எடுத்தாள். கசப்பும் சூடும் கலந்த திரவம் தொண்டைக்குள் இறங்கும்போது உடலுக்குள் ஒரு மெல்லிய புத்துணர்ச்சி பரவியது.
ஜீவா காபியை ஒரு மிடறு குடித்துவிட்டு அவளைக் கூர்ந்து கவனித்தான்.
“அதென்ன பேர் ரொம்ப வித்தியாசமா… ப்ரவலிகா மகாலக்ஷ்மி?” எதேச்சையாகக் கேட்பது போல அவன் பேச்சைத் தொடங்கினான்.
அவள் ஒரு கணம் ஜெர்க்காகி, குவளையிலிருந்து பார்வையை உயர்த்தி ஆச்சரியமாகப் பார்க்க, “இல்ல பாத்தவுடனே அதான் தோனுச்சு…” என்று லேசாகச் சிரித்தான் ஜீவா.
“தெரியலையே…” மெல்லிய குரலில் சொன்னபடி பார்வையைத் திருப்பிக் கொண்டு நழுவினாள்.
“ப்ரவலிகாவுக்கு அர்த்தம் என்ன?” விடாமல் அவளது முகத்தையே பார்த்துக் கேட்டான்.
சிரித்தவள், “அதுவும் தெரியலையே…” என்றாள் தோள்களைக் குலுக்கி.
“அது கூடவா தெரியாம இருக்கும்?” புன்னகையோடு கிண்டலாகப் புருவத்தை ஏற்றி இறக்க, அவனது பார்வையின் கூர்மை தாங்காமல் அவளது இதயம் ஒரு கணம் விட்டுத் துடித்தது.
“இதுவரைக்கும் தெரியல. இனிமே தெரிஞ்சுக்க ட்ரை பண்றேன்…” என்று சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்து காபியைக் குடித்தாள்.
“ம்ம்ம்… ஓகே! பொதுவா ரத்தம் குடுத்த ஜூனியர்ஸ் அடுத்த நாள் டியூட்டிக்கு லீவ் லெட்டர் ரெடி பண்ணிட்டு இருப்பாங்க. ஆனா நீ நைட்டு ரெண்டு மணிக்கு டியூட்டியே இல்லாம ரவுண்ட்ஸ் வர்ற. அந்த அளவுக்கு அந்தப் பாப்பா மேல அக்கறையா? இல்ல எமர்ஜென்சி கேஸ் மேல இருக்கிற பதற்றமா?” அவளது கவனத்தைத் திசைதிருப்பும் விதமாகப் பேச்சை மாற்றினான்.
ப்ரவா காபிக் குவளையைப் பார்த்தபடியே நிதானமாகப் பேசினாள். “ரெண்டுமே இல்ல சார். ஒரு கேஸை ஆரம்பத்துலருந்து ஹேண்டில் பண்ணிட்டு, பாதியில விட்டுட்டுப் போனா மனசுல ஒரு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கும். குழந்தை கண் முழிச்சிடுச்சா, வைட்டல்ஸ் நிற்குதான்னு தெரிஞ்சாத்தான் அந்த வேலை முடிஞ்ச மாதிரி இருக்கும்.”
“ம்ம்ம் டெடிகேஷன்…” ஜீவா மெலிதாகப் புன்னகைத்தான். “எப்படி மெடிசின் மேல இவ்வளவு ஈடுபாடு வந்தது? உங்க ஃபேமிலில யாராவது டாக்டர்ஸா?” அவளது கண்களை ஊடுருவும் பார்வை அவனிடம் இருந்தது.
அந்தக் கேள்வி ப்ரவாவின் இதயத்தில் ஒரு மெல்லிய அதிர்வை உண்டாக்கியது. ‘என் குடும்பத்தில் யார் மருத்துவர் என்று உனக்குத் தெரியாதா ஜீவா?’ என்ற எண்ணம் அவளது உள்ளுக்குள் எழுந்து அடங்கியது. ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியையும் அவள் காட்டிக்கொள்ளவில்லை.
“இல்ல சார்… எங்க குடும்பத்துல யாருமே மெடிக்கல் ஃபீல்ட்ல இல்ல. நான்தான் முதல் ஆள்…” மிகச் சுருக்கமாக, அளந்து முடித்தாள்.
“அப்போ எப்படி இந்த ஃபீல்டை சூஸ் பண்ண?” ஜீவா விடாமல் கேட்டான். அவனது பார்வையில் அவளை இன்னும் துருவிப் பார்க்கும் ஆர்வம் இருந்தது. “சின்ன வயசு கனவா? இல்ல மார்க் அதிகமா வந்ததுனால வந்ததா?”
ப்ரவா குவளையை மேஜை மீது வைத்தாள். “சின்ன வயசுல இருந்தே நமக்கு முன்னாடி ஒருத்தங்க துடிச்சுப் போகும்போது, நாம கையைக் கட்டிட்டு வேடிக்கை பாக்குற நிலையில இருக்கக் கூடாதுன்னு தோணும். ஒரு இக்கட்டான சூழல்ல, நம்மகிட்ட இருக்கிற அறிவும் தைரியமும் மட்டும்தான் ஒருத்தரோட உயிரைத் தீர்மானிக்கும்ங்கிற பொறுப்பு… அதுதான் என்னை இந்தத் துறைக்குக் கொண்டு வந்தது.”
ஜீவா அவளது வார்த்தைகளை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். அவளது பேச்சில் சினிமாத்தனமான வசனங்களோ, செயற்கையான பெருமையோ துளியும் இல்லை. ஒவ்வொரு சொல்லிலும் ஒரு முதிர்ச்சியும் அடக்கமும் வெளிப்பட்டது.
“ம்ம்ம் இம்ப்ரெசிவ்…” ஜீவா சொன்னான். அவன் குரல் மென்மையாக மாறியது. நாற்காலியில் முன்னோக்கிச் சாய்ந்தபடி, “விஷ்வா என்ன சொன்னார்?” என்று கேட்டான்.
விஷ்வாவின் பெயர் வந்ததும் ப்ரவாவின் விரல்கள் அனிச்சையாகக் குவளையின் ஓரத்தை லேசாக அழுத்தின. ஆயினும் அவள் நிதானத்தை இழக்கவில்லை.
“விஷ்வா சார் அவரோட வேலையில ரொம்ப கன்சர்னா இருப்பாரு…” அவள் சாதாரணமாகச் சொன்னாள்.
ஜீவா சிரித்துவிட்டான். அவனது சிரிப்பில் கேலி கலந்திருந்தது.
“கன்சர்னா? விஷ்வாவைப் பத்தி இவ்வளவு சாஃப்ட்டா யாரும் ஒபினியன் சொல்லி நான் கேட்டதே இல்ல!” ஜீவா மேஜையின் மீது சாய்ந்து அமர்ந்தான். “அவன் கார்டியாலஜி ஓபிடில நின்னுகிட்டு ஜூனியர்ஸை வாட்டி வதைக்கிறதை நான் வருஷக் கணக்கா பாத்துட்டு இருக்கேன். அவன்கிட்ட போஸ்டிங் போற பாதிப் பேரு என்கிட்ட வந்து அழுது புலம்புவாங்க… ‘ஜீவா சார், எப்படியாவது என்னை வேற டிபார்ட்மென்ட்டுக்கு மாத்தி விடுங்க’ன்னு. உங்க ரெண்டு பேர்கிட்டயும் எப்படி? அப்படியேத்தானா?”
ஜீவா தன்னை அவனிடம் மனந்திறந்து புகார் சொல்லத் தூண்டுகிறான் என்பது ப்ரவாவுக்குப் புரிந்தது. விஷ்வாவின் குணம் அவளுக்கும் தெரியும்; அவனை விடவும் அவளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் ஒரு ஜூனியராக, இன்னொரு சீனியரிடம் தன் ஹெச்ஓடியைப் பற்றிப் புறம்பேசும் தவறை அவள் ஒருபோதும் செய்ய மாட்டாள். அதே சமயம் ஜீவாவை அலட்சியப்படுத்தவும் அவள் விரும்பவில்லை.
“விஷ்வா சார் கடுமையானவர்தான் சார்…” ப்ரவா நேராக அவனது கண்களைப் பார்த்துப் பேசினாள். குரலில் எந்தத் தயக்கமும் இல்லை. “அவரோட எதிர்பார்ப்பு ரொம்ப அதிகம். ஒரு சின்ன கவனக்குறைவைக் கூட அவர் ஏத்துக்க மாட்டாரு. ஆனா அந்த ஸ்ட்ரிக்ட்னஸ் தப்புன்னு எனக்குத் தோணல. அவரோட கடுமை ஒருவிதத்துல நம்மள தப்பு பண்ணாம இருக்க வைக்குது.”
ஜீவா ஒரு கணம் இமைக்காமல் அவளையே பார்த்தான்.
அவளது பதிலில் விஷ்வாவை நோகடிக்காத நேர்மையும் இருந்தது; அதே சமயம் அவனது குணத்தை மறுக்காத எதார்த்தமும் இருந்தது. ஒரு நல்ல ஜூனியருக்குரிய பக்குவத்தோடு அவள் எல்லை மீறாமல் நின்று பதில் சொன்ன விதம் ஜீவாவை ஆச்சரியப்படுத்தியது.
“அடடா…” ஜீவா தலையை அசைத்துச் சிரித்தான். “விஷ்வாவுக்கு வக்காலத்து வாங்குற முதல் ஜூனியர் நீயாத்தான் இருப்ப!” ஜீவா சத்தமாகவே சிரித்துவிட்டான். “இதை மட்டும் அவன் கேட்டான்னா, ஆச்சரியத்துல அவனோட பிபியே எகிறிடும்.”
ப்ரவா லேசாகப் புன்னகைத்தாள். “நான் உண்மைய சொன்னேன் சார், அவ்வளவுதான்.”
“சரி விடு… நைட்டு ரெண்டு மணிக்கு உக்காந்து அவன் புராணத்தை எதுக்கு பேசிட்டு இருக்கணும்?” ஜீவா காபிக் குவளையை மேஜை மீது வைத்துவிட்டு, நாற்காலியில் வசதியாகச் சாய்ந்து அமர்ந்தான்.
“அப்புறம்… மெடிசினைத் தவிர வேற என்ன இன்ட்ரஸ்ட்? நான் தியேட்டருக்குப் போய் படம் பாத்தே ஆறு மாசம் ஆச்சு. போன வாரம் கூட ஏதோ புது த்ரில்லர் மூவி வந்துச்சுன்னு பேசிட்டு இருந்தாங்க… பாக்கற பழக்கமிருக்கா?” ஜீவா எதேச்சையாகக் கேட்டான்.
“இல்ல சார்… நானும் தியேட்டர் போய் ரொம்ப நாளாச்சு. காலேஜ் படிக்கிறப்ப ரூம்மேட்ஸ் கூட சேர்ந்து படம் பாத்தது. இப்போலாம் டியூட்டி முடிஞ்சா தூங்கினா போதும்னு தோணுது…” என்றாள் ப்ரவா.
“கரெக்ட்… ஆனா வேறென்ன ஸ்ட்ரெஸ்பஸ்டர் இருக்கு?” என்ற ஜீவா, “ஆனா ஓடிடில ஏதாச்சும் நல்ல கொரியன் சீரிஸ் இல்ல கிரைம் த்ரில்லர் வந்தா மட்டும் மிஸ் பண்ண மாட்டேன். நைட் டியூட்டி இல்லாதப்ப ரூம்ல உக்காந்து விடிய விடிய பாக்குறது… அந்தப் பழக்கம் உண்டா?”
ப்ரவா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். மருத்துவமனையில் எப்போதுமே ஒரு கம்பீரமான மருத்துவராக, நர்ஸ்களுக்கும் ஜூனியர்களுக்கும் கட்டளை போட்டுக் கொண்டிருக்கும் ஜீவா, நள்ளிரவில் உட்கார்ந்து சீரிஸ் பார்க்கும் ஒரு சாதாரண இளைஞனாகப் பேசுவது அவளுக்குப் புதுமையாக இருந்தது.
“கொரியன் சீரிஸா? நீங்க பாப்பீங்களா சார்?” அவளையறியாமல் அவளது குரலில் ஒரு சின்ன ஆர்வம் எட்டிப்பார்த்தது.
“ஏன், டாக்டர்ஸுக்கு கொரியன் சீரிஸ் பாக்க உரிமை இல்லையா என்ன?” ஜீவா புருவத்தை உயர்த்திச் சிரித்தான். “மண்டை முழுக்க பேஷன்ட்ஸ், ரிப்போர்ட்ஸ்னு ஏத்தி வச்சிட்டு சுத்தும்போது, இந்த மாதிரி ஏதாவது பாத்தாதான் ரிலாக்ஸ் ஆகும். நமக்கு கிரிக்கெட், சினிமா, சீரிஸ்… இதெல்லாம் தான் ஸ்ட்ரெஸ் பஸ்டர். நீ பார்க்க மாட்டீயா?”
“பாப்பேன் சார்… எனக்கும் கே-டிராமாஸ், சி டிராமா எல்லாம் பிடிக்கும்…” ப்ரவா முதல்முறையாக ஒரு சின்ன தயக்கத்தோடு, ஆனால் இயல்பாக ஒப்புக்கொண்டாள்.
“அப்பாடா… நம்ம இனம் தான்!” ஜீவா நிம்மதிப் பெருமூச்சு விட்டான். “இங்க இருக்கிற சீனியர்ஸ் கூடல்லாம் கேன்டீன்ல உக்காந்தா கூட இசிஜி, எக்கோ, டயாபட்டிஸ்னு ஆரம்பிச்சிடுவாங்க. சாப்பாடு கூட ஒழுங்கா தொண்டையில இறங்காது.”
அவன் பேசிய அந்த எதார்த்தமான கிண்டல், இருவருக்கும் நடுவில் இருந்த அந்த ‘சீனியர் கன்சல்டன்ட் – ஜூனியர் டாக்டர்’ என்கிற பெரிய சுவரை உடைக்க முயன்று கொண்டிருந்தது. ஒரு சக மனிதனாக, தனக்கு இணையான ரசனையும் அலைவரிசையும் கொண்ட ஒருவனாக ஜீவா அவளுக்குத் தெரிந்தான். அவளது சொந்த மாமா மகன் என்கிற உணர்வு அவளுக்குள் இருந்ததால், அவனது இந்தத் தளர்வான குணம் அவளுக்குள் ஒரு இனம் புரியாத அமைதியையும் மகிழ்ச்சியையும் தந்தது.
“இப்ப என்ன சீரிஸ் பார்த்துட்டு இருக்கீங்க?” முகம் மலரப் புன்னகையோடு கேட்டாள் ப்ரவா.
“சி டிராமா தான். இயர்லி ஸ்ப்ரிங்… நீ பார்த்தியா?” அவனது கண்களில் ஒரு குறும்பான பிரகாசம் மின்ன, ஆர்வமாகக் கேட்டான்.
“இன்னுமில்ல. மது கூட சஜஸ்ட் பண்ணா. பார்க்கணும்…” தலையசைத்தபடி சொன்னாள்.
“கண்டிப்பா பாரு… செமையா இருக்கு…” என்று கண்களைச் சிமிட்டிச் சிரித்தான் ஜீவா.
அவனது முகபாவனையை நுட்பமாகக் கவனித்த ப்ரவா, புருவத்தைச் சுருக்கி, “இல்லையே, உங்க சிரிப்பு வேற ஏதோ சொல்லுதே…” என்றாள் சந்தேகமாக.
“இல்லல்ல… ஜஸ்ட் ஸ்ட்ரஸ் கில்லர். ரொமாண்டிக்… அவ்வளவுதான். பார்த்துட்டு சொல்லு…” என்று கையமர்த்தி அடக்க முடியாமல் சிரித்தான்.
அவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள். ‘டேய் ஜீவா… இதெல்லாம் ஓவரா இல்ல…’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவள், உதட்டைக் கடித்துச் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “கண்டிப்பா சார்…” என்று எழுந்து நின்றாள்.
“சரி, வேற ஏதாவது நல்ல சீரிஸ் பாத்தா எனக்கு சஜஸ்ட் பண்ணு ப்ரவலிகா…” ஜீவாவும் சிரித்தபடியே எழுந்து நின்றான்.
கைக்கடிகாரத்தைப் பார்த்தவன், “மணி ரெண்டரை ஆச்சு. கதை பேசினது போதும்… இப்ப ஒழுங்கு மரியாதையா போய் தூங்கு. காலையில ரவுண்ட்ஸ் இருக்கு. தூக்கம் பத்தாம வந்து நின்னா, விஷ்வா திட்டுறதை விட நான் அதிகமா திட்டுவேன்!”
அவனது குரலில் இருந்த அந்த இயல்பான கிண்டலும் தோழமையும் ப்ரவாவை உண்மையாகவே சிரிக்க வைத்தது.
“சரிங்க சார், குட் நைட்…” என்று விடைபெற்றுக்கொண்டவள் மெதுவாகக் குவார்ட்டர்ஸ் நோக்கி நடந்தாள்.
அவள் தாழ்வாரத்தின் மங்கலான வெளிச்சத்தில் நடந்து மறைவதை இமைக்காமல் ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஜீவா.
“இன்னும் எத்தனை நாள் ஒன்னும் தெரியாத மாதிரியே இருக்க போறா இவ? ஆனாலும் அசட்டு துணிச்சல் தான்… அடியே பாப்பி, உனக்கு ஊதறேன்டி பீப்பி…” என்று உதட்டோரப் புன்னகையுடன் தனக்குள் நினைத்தவன்,
‘அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
பட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ?
மூன்றாம் பிறையது முழுநிலவானதெப்போ?
மௌனத்தில் நீ இருந்தால் யாரை தான் கேட்பதிப்போ?’
பாடலை மெல்லிய குரலில் முணுமுணுத்தபடி, உதடுகளில் மாறாத சிரிப்புடன் நீண்ட காலடிகளெடுத்து வைத்து எட்டி நடை போட்டான்.






🫶Romance🍫🌹
The Yearly spring- நானும் பார்த்து கொண்டிருக்கிறேன்😍
மிகவும் detaliing, ஆன மருத்துவ முறை தெரிந்து கொள்ள வாய்ப்பாக உள்ளது
ஒரு accident emergency என்றால் எப்படி இருக்கும் என்று இப்போதுதான் புரிகிறது மிக நன்றி சசி
இப்போதான் பேசவே ஆரம்பிக்கிறாங்க... எப்போ லவ் சொல்லி,எப்போ கல்யாணம் பண்றது ஆனாலும் தெரியாத மாதிரி ஒருத்தர் ஒருத்தர் பேசிக்கிறது.. க்யூட்டா🤗🥰 இருக்கு.. அடுத்த எபி விஷ்வா மதுவை இறக்குங்க..
Yennadhu ...unakku ivala theriyatha🧐🧐🧐
Un inam thaan... marriage ku appuram remote ku sandai podama k drama's parunga😁