arrow_back
வந்தாயே உறவாக இந்நாள்! அத்தியாயம் 4

அத்தியாயம் 4

visibility 79
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

“என்னய்யா சொல்றீய?”என அவனிடம் பதறிப் போய்க் கேட்டிருந்தார் வனக்கிளி. 

 

அவரது மகனும், மருமகளும் கூட இதை எதிர்பார்க்கவே இல்லை என்பதை அவர்களது முக பாவனைகளே எடுத்துக் காட்டிற்று. 

 

அவர்கள் இருவரும் வேதவள்ளியைத் தான் நோக்கினர். 

 

அவளோ இம்மையும், மறுமையும் புரியாமல் உடலெங்கும் உதறத் தனக்கு எதிரில் இருந்தவனிடம், 

 

“ஒழுங்காக இங்கே இருந்து கிளம்பிப் போயிருங்க”என்று அவனுக்கு அறிவுறுத்தினாள். 

 

ஆனால்,”என்னைக் கல்யாணம் செய்துக்க உனக்கு விருப்பம் இருக்கா? இல்லையா? அதை மட்டும் சொல்லு”என்று அவளிடம் அழுத்தத்துடன் வினவினான் அமுதினியன். 

 

அதில் அவனைக் கசந்த முகத்துடன் ஏறிட்டுப் பார்த்து விட்டு, 

 

“நீங்க ஏன் இந்த முடிவை எடுத்தீயன்னுத் தெரிஞ்சிக்கலாமா?”எனக் கேட்டிருந்தாள் வேதவள்ளி. 

 

அதற்கு அவனோ,”எனக்கு உன்னைக் கட்டிக்க விருப்பம்! அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன். போதுமா?”என்று தடாலடியாக உரைத்து விட்டிருக்க, 

 

“பொய் சொல்லாதீய!”என அவனிடம் இரைய, 

 

“நான் எதுக்குப் பொய் சொல்லப் போறேன். என்னோட பேச்சில் உனக்கு நம்பிக்கை இல்லைன்னா என் கண்ணைப் பாரு! அதில் பொய் தெரியுதான்னுப் பார்த்துச் சொல்லு”எனத் தீர்க்கமாக மொழிந்தான் அமுதினியன்.

 

அவளுக்கு அவனது முகத்தைப் பார்க்கவே பதட்டமாக இருந்தது. அவன் என்னவென்றால் தனது கண்களைப் பார்க்கச் சொல்கிறானே? என்று பொருமிக் கொண்டு,

 

“இங்கே பாருங்க. எனக்கு உங்களை – ன்னு இல்லை, வேற யாரையுமே கல்யாணம் செஞ்சிக்க விருப்பமில்லை! இது தான் என்னோட பதில்!”என்று அவனிடம் ஒரு வழியாகத் தட்டுத் தடுமாறிச் சொல்லி விட்டிருந்தாள் வேதவள்ளி. 

 

“அப்படியா? அதை ஏன் இப்படி பதட்டத்தோட, பயத்தோட சொல்ற? என் மூஞ்சியைப் பார்த்து நேராகச் சொல்லு”என்றிருந்தான் அமுதினியன்.

 

அதில் மிகவும் எரிச்சல் உண்டாகி விட்டதால்,

 

“ப்ச்! என்னை எதுக்கு இப்படி போட்டுப் படுத்தி எடுக்கிறீய? எனக்கு உங்களைக் கட்டிக்கச் சம்மதம் இல்லைன்னுச் சொல்லியும் இப்படி விடாப்பிடியாக கேட்கிறது நியாயமா?”என்றாள் வேதவள்ளி. 

 

அவளது அந்த வார்த்தைகள் அவளின் மற்றக் குடும்ப உறுப்பினர்கள் மூவருக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை எனலாம்!

 

ஏனென்றால் அவளது வாழ்க்கையை மீண்டுமொரு முறை வண்ணமயமாக்கும் வாய்ப்புத் தானாகவே தேடி வரும் போது அதை தட்டிக் கழிப்பது அவ்வளவு உவப்பானதாய் இல்லை என்பதாலேயே, 

 

“இதைப் பத்தி நாங்க எங்களுக்குள்ளே கலந்து பேசிட்டுச் சொல்றோம். அதுவரைக்கும் நீங்க காத்திருப்பீங்களா?”என்று அமுதினியனிடம் தீர்க்கமாக வினவினான் வைரமணி. 

 

“கண்டிப்பாக காத்திருப்பேன்”என்றவனின் உறுதியில் அங்கிருந்தப் பெண்களுக்கு ஆயாசமாக இருந்தது! 

 

“அப்போ சரி. இப்போ நீங்கப் போயிட்டு வாங்க. கூடிய சீக்கிரமே நாங்க உங்களுக்குச் சேதியைச் சொல்லி அனுப்புறோம்”என்ற வைரமணியிடம், 

 

“அதுக்கு முன்னாடி நான் உங்களைத் தனியாகச் சந்திக்க விருப்பப்பட்றேன்”எனக் கேட்டுக் கொண்டான் அமுதினியன். 

 

அதில் அவனை யோசனையுடன் பார்த்து,”சரி. சாயந்தரமாக இங்கே வாங்க. நாமப் பேசலாம்”என்றுரைத்து அவனை அனுப்பிய தமையனிடம்,

 

“நீ எதுக்குண்ணே அவர்கிட்ட இப்படியெல்லாம் பேசி வச்சிருக்கிற? ஒரேயடியாக கட்டிக் கொடுக்க முடியாதுன்னுச் சொல்லி அனுப்ப வேண்டியது தானே? இனி அடுத்து சாயந்தரமாக வேறப் பேசப் போறீயாக்கும்?”என்று பொரிந்து தள்ளினாள் வேதவள்ளி. 

 

“ஆமாம். பேசத் தான் போறேன். அதுக்கென்ன இப்போ?” என்றவனை எரித்து விடுவதைப் போல் பார்க்கவும்,

 

“நீ இப்போ எதுக்கு இவியள முறைக்கிற? அந்த அமுதினியன் என்னத் தப்பாக கேட்டுப்புட்டாருன்னு நீ இந்தக் குதிக், குதிக்கிறவ?”என்று தன்னுடைய நாத்தனாரிடம் வாதாடினாள் இளவரசி. 

 

உடனே அவளிடம் தழுதழுத்தக் குரலில்,”அண்ணி! நீங்களும் இப்படி…”என்றவளை இடைமறித்து, 

 

“நானும் இப்படி பேசுறேன்னுக் கேட்கப் போற அம்புட்டுத் தானே? என்னை விடு, உங்கம்மையைக் கேட்டுப் பாரு! அவுகளுக்கும் இதில் விருப்பம் தான் – னுச் சொல்லுவாக!”எனத் தன்னுடைய மாமியாரைப் பார்த்துக் கூறியவளைத் தொடர்ந்து, 

 

தானும் தன் அன்னையைத் தான் நோக்கினாள் வேதவள்ளி.

 

தன்னுடைய அண்ணனின் மனைவிச் சொன்னதைப் போலவே தன தாய்க்கும் இந்தச் சம்பந்தத்தில் பிடித்தம் இருக்கிறது என்பதை அவரது முகத்தில் காணக் கிடைத்தப் பிரகாசத்தை வைத்தே புரிந்து கொண்டவளுக்கு மனம் சோர்ந்து போயிற்று! 

 

“என்னம்மா அண்ணிச் சொல்றது நெசஞ்தானா?”எனத் தாயிடம் கலக்கத்துடன் கேட்கவும், 

 

அதில் அவருக்குக் கிலி படர்ந்தாலும் கூட,”ஆமாம் வள்ளி! இந்தச் சம்பந்தம் அமைஞ்சா எனக்கும் சந்தோஷம் தான்”என்று மகளிடம் மறைக்காமல் சொல்லி விட்டிருந்தார் வனக்கிளி. 

 

அதைக் கேட்டதுமே,”ம்மா! உங்களுக்கு எல்லாமே தெரியும் தானே? எனக்கு எப்படி இன்னொரு வாழ்க்கை? அதுவும் எம்புருஷனோட நண்பனையே கட்டிக்கிறதுன்னா எனக்கு ஒரு மாதிரி இருக்காதா?”என்றாள் ஆற்றாமையுடன். 

 

“நாம இதைப் பத்தி நம்ம வீட்டுக்குப் போயிட்டுப் பேசிக்கலாம்த்தா. இங்கே வேண்டாம்”என்றுரைத்து அந்தப் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான் வைரமணி. 

 

“ஆனாலும் இன்னைக்குச் சாயந்தரமாக நீ அவரைப் பார்த்துப் பேசத் தானே போறண்ணே?”என்றத் தங்கையிடம், 

 

“ஆமாம். அவனைப் பார்த்துப் பேசத் தான் போறேன்”என அழுத்தமாக கூறி அந்த அறையை விட்டு வெளியேற, 

 

“அப்போ நீங்க மூனுப் பேரும் என்னை, என் உணர்வுகளைப் புரிஞ்சிக்கவே மாட்டீங்கள்ல?”என்று மற்ற இருவரிடமும் ஆதங்கமாக வினவினாள் வேதவள்ளி. 

 

அதற்கு,”வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம்”என்று அவளுக்கு அறிவுறுத்தி விட்டாள் இளவரசி. 

 

அதற்கு மேல் அந்த அறைக்குள் இருப்பது மிகவும் புழுக்கமாகத் தோன்றியது போலும் அவளுக்கு. 

 

அதனாலேயே தனது இருக்கையில் இருந்து எழுந்து தானும் அவ்வறையை விட்டு வெளியேறினாள். 

 

அவளை முகம் சுருங்கப் பார்த்துப் பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டார் வனக்கிளி. 

 

“அவளோட மனசு இதையெல்லாம் சுளுவாக ஏத்துக்கிடாது அத்தை. அதேன் இப்படி கெடந்து தவிக்குறா! இவுக தான் அந்த அமுதினியன் கிட்டே பேசப் போறாகள்ல? நல்ல முடிவாகத் தான் சொல்லுவாக. அதே மாதிரி வள்ளிக்கும் எப்படியாவது இதைப் புரிய வச்சிடலாம்! நீங்க வெசனப்படாதீய!”என்று அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லித் தேற்றினாள் இளவரசி. 

 

அதே சமயம் தன்னுடைய தமையன் வைரமணி நின்றிருந்த இடத்திற்கு நேரெதிராகச் சென்று அங்கு நடக்கும் வேலைகளை மேற்பார்வையிடுவதாகச் சப்பைக் கட்டுக் கட்டிக் கொண்டு ஒரு ஓரமாக நின்று விட்டவளோ, 

 

அங்கே காளை மாடுகளைக் கட்டப்பட்டு அவற்றால் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்தச் செக்கு இயந்திரம் சுழல்வதைப் போன்று தனது மனமும் சுழல ஆரம்பித்ததை உணர்ந்தாள் வேதவள்ளி. 

 

சற்று முன்பாகத் தங்களைப் பார்க்க அமுதினியன் வந்து போனதையும், அதை தொடர்ந்து அவன் கேட்டுக் கொண்ட விஷயத்திற்குத் தனது குடும்ப உறுப்பினர்கள் ஆற்றிய எதிர்வினையையும் அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை எனலாம்.

 

அதுவும் தன்னுடைய கணவனின் நண்பனை எப்படி திருமணம் செய்து கொள்வது என்ற ஒரு வித தயக்கமும், நடுக்கமும் அவளுக்குள் அதிகமாகவே இருந்தது. 

 

தனக்கும், சிவமலைக்கும் திருமணம் ஆவதற்கு முன்பும், அதற்குப் பின்பும் கூட அந்த அமுதினியனை அவ்வப்போது மரியாதை நிமித்தமாகப் பார்த்தும், பேசியும் உள்ளாள் தான்!

 

அதேபோல் அவன் தங்களது திருமணத்தின் போது மண்டபத்தில் ஓடியாடி வேலை செய்ததையும் கண்ணாரக் கண்டிருக்கிறாள் வேதவள்ளி. 

 

அதற்கும் மேலாகத் தங்கள் திருமணம் நடந்த சில வாரங்களிலேயே அவனுடைய திருமணமும் நடந்தேறியது. அதற்குத் தானும், தன்னுடைய கணவனும் கூடப் போய் அவர்களை வாழ்த்தி விட்டு வேறு வந்ததை நினைத்துப் பார்த்துச் சங்கடப்பட்டுக் கொண்டாள். 

 

ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் தன் குடும்பத்தார் எதற்காக இதற்குச் சம்மதம் தெரிவித்து விட்டார்கள்? என்றக் கேள்வியே அவளைக் குடையத் தொடங்கி விட்டிருந்தது. 

 

அவர்களது ஆலையில் இருந்து வெளியே வந்து நேராகத் தன்னுடைய ஆலைக்குத் தான் வந்து சேர்ந்திருந்தான் அமுதினியன்.

 

ஏதோ ஒரு வேகத்தில் வேதவள்ளியிடமும், அவளது குடும்பத்திடமும் அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகச் சொல்லி அவர்களது சம்மதத்தைக் கேட்டு விட்டு வந்து விட்டாலும் அவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள்? என்ற எண்ணத்தில் உழன்று போனான்.

 

இன்னும் சில மணி நேரங்களில் வைரமணியிடம் உரையாடிய பின்னர் தனது குழப்பம் மற்றும் தயக்கம் களையப்படலாம் என்றெண்ணிக் கொண்டான் அமுதினியன்.

 

தன்னுடைய தங்கையின் நிலையைக் கண்டதும் பதறிப் போய் அவளருகே சென்று, 

 

“என்னத்தா! ஏன் இப்படி இடிஞ்சுப் போய் நிற்கிறவ? என்னாச்சு?”என அவளிடம் கலக்கமாக வினவி இருந்தான் வைரமணி. 

 

உடனே அவனை வலி நிறைந்தப் பார்வையுடன் ஏறிட்டுப் பார்த்து,

 

“இன்னும் என்னண்ணே ஆவனும்?”என்றவளின் குரலில் வெளிப்பட்ட ஆதங்கம் தன்னை அசைத்துப் பார்க்க முயன்றாலும் கூட, 

 

அதை ஒதுக்கித் தள்ளி வைத்து விட்டு,”நாங்க மூனுப் பேரும் உனக்கு நல்லதை தானே நெனைப்போம்த்தா? இல்லைன்னா, இதில் எங்க மேல் உனக்கு ஏதாவது சந்தேகம் இருக்குதா? எதுவாக இருந்தாலும் உடைச்சுப் பேசுத்தா? நாங்கத் தெரிஞ்சிக்கிறோம்”என்று அவளிடம் தீர்க்கமாக கேட்டான் வைரமணி. 

 

அதில் தமையனைக் கண்டனப் பார்வைப் பார்த்தவளோ,”என்னண்ணே இப்படி பேசுற நீயி? நான் எப்போ இப்படி சொல்லி இருக்கேன்? நீங்க மூனுப் பேரும் எனக்கு எப்பவுமே நல்லதை தான் யோசிச்சு, செய்வீகன்னுத் தெரியாமத் தான் நான் இத்தனை வருஷக் காலமாய் வாழ்ந்துட்டு இருக்கேனா என்ன?”என்றாள் ஆற்றாமையுடன். 

 

தங்கையின் கரத்தை ஆறுதலாகப் பற்றி,”அப்பறம் எதுக்கு இந்தளவுக்கு வருத்தப்பட்றத்தா? அவரு நம்மளோட விருப்பத்தைத் தானே கேட்டுட்டுப் போயிருக்காரு? நாங்களும் இன்னும் பேசி முடிவெடுக்கவே இல்லையே? அதுக்குள்ள நீயே ஏன் எல்லாத்தையும் முடிவுச் செஞ்சிட்டு இப்படி இருந்தால் என்ன அர்த்தம்த்தா?”என்று அவளிடம் கனிவுடன் வினவ, 

 

“ஆனால் நீங்களும், அம்மாவும், அண்ணியும் இந்தச் சம்பந்தப் பேச்சில் உறுதியாக இருக்கிறா மாதிரித் தானே நடந்துக்கிறீய? அப்படி இருக்கும் போது எனக்கு மனசு அடிச்சிக்காதா – ண்ணே?”என்றிருந்தாள் வேதவள்ளி. 

 

“எனக்கு உன்னோட மனநிலைப் புரியுதுத்தா! நான் அமுதினியன் கிட்டே பேசிட்டு வந்து உங்கிட்டேயும், நம்ம வீட்டு ஆளுங்க கிட்டேயும் கலந்து பேசியதுக்கு அப்பறம் எல்லாருக்கும் இதில் சம்மதம்ன்னா மட்டும் தான் இதை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டுப் போவோம். சரியா?”என்று அவளுக்கு வாக்களித்து விட்டுச்,

 

சிறிது நேரம் பேசி அவளது மனநிலையை மாற்றி விட்டு மாலையில் தனது மனைவி, அன்னை மற்றும் தங்கையை மட்டும் வீட்டிற்குப் பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு அங்கேயே காத்திருக்கலானான் வைரமணி. 

 

அதேபோல், தானும் அவனிடம் சொன்னதைப் போலவே அவனை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல் அங்கே பிரசன்னம் ஆகி விட்டிருந்தான் அமுதினியன். 

 

                       – தொடரும்

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 5

அவனைக் கண்டதும்,”ஏதாவது சாப்பிட்றீயளா?”என்று விசாரித்தான் வைரமணி.  அதற்கு,”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்ங்க. நான் வரும் போது பலகாரம் சாப்பிட்டுட்டுத் தான் வந்தேன்”என்றுரைத்து விட்டிருந்தான் அமுதினியன்.  “சரிங்க. உங்களுக்குத் திடீர்னு எப்படி என் தங்கச்சியைக் கட்டிக்கனும்னு யோசனை வந்துச்சு?”எனக் கேட்கவும்,  அதில் அவனது கண்ணைப் பார்த்து,”எனக்கு ஏற்கனவே கல்யாணம்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்