arrow_back
வந்தாயே உறவாக இந்நாள்! அத்தியாயம் 3

அத்தியாயம் 3

visibility 72
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

தனது தந்தை மற்றும் கணவனின் இறப்பு இரண்டுமே வேதவள்ளியை மனதளவில் உடையச் செய்து, அவளை இறுகிப் போகச் செய்து விட்டிருந்தது எனலாம்! 

 

தன்னுடைய பூவையும், பொட்டையும் நீக்கிய சமயத்திலும் கூட அவளுக்கு எந்தவித ஸ்ரமனையும் இல்லை. 

 

கற்சிலையைப் போல் இருந்து கொண்டு அனைத்தையும் ஏற்றுக் கொண்டாள் வேதவள்ளி. 

 

அவையெல்லாம் முடிந்த பின்னர் சில மாதங்கள் கழிந்ததும் தனது குழந்தைத்தனம் மற்றும் வெள்ளந்தித்தனமான நடவடிக்கைகள் அனைத்தையும் கைவிட்டு விட்டுத் தன்னுடைய முகத்தில் எப்பொழுதும் ஒரு கடுமையைப் பூசிக் கொண்டு அனைவரையும் தன்னிடமிருந்து சில தூரங்கள் தள்ளி வைத்துப் பார்க்கத் தொடங்கினாள். 

 

அதேபோல், தன்னுடைய பளிங்கு முகத்தில் இருக்கும் பிறை நெற்றியில் திருநீற்றை ஒற்றைக் கோடாக மட்டுமே பூசிக் கொண்டு வளைய வந்தாள் வேதவள்ளி. 

 

தனது இழப்புகளில் இருந்து மீண்டுக் கொள்ள வேண்டித் தந்தையின் நிலபுலன்களின் மொத்தப் பொறுப்புகளையும் தன்னுடையதாக்கிக் கொண்டு அதில் தன் கவனத்தை முழுமையாகப் பதித்துக் கொண்டவளை, 

 

அவளுடைய தாய் வனக்கிளியும், தமையன் வைரமணி மற்றும் அண்ணி இளவரசியாலும் கூட மீட்டெடுக்க முடியவில்லை!

 

அதனாலேயே அவளின் போக்கில் விட்டு விட்டார்கள் மூவரும்.

 

அதே சமயம் தானும் தனது சோம்பேறித்தனத்தை விடுத்து தன் தங்கைக்குத் தொழிலில் உறுதுணையாக இருக்கத் துவங்கி விட்டிருந்தான் வைரமணி. 

 

ஆனால் வேதவள்ளித் தனது நெற்றியில் தினமும் திருநீற்றை மட்டும் பூசிக் கொள்வதைப் பார்த்தாலே அவளது குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்! 

 

அது மட்டுமின்றி வேதவள்ளியின் அவளை நோகடிக்கும் விதமாக அந்த ஊரில் இருக்கும் அனைவரிடமும் தங்களது மருமகளின் ராசியால் தான் தங்கள் மகன் இறந்து விட்டான் என்பதை தம்பட்டம் அடிக்காத குறையாகச் சொல்லி மாய்ந்தார்கள் குமரிமுத்து மற்றும் பாண்டியம்மாள். 

 

அவர்களின் இந்தச் செயல் பிடிக்காமல்,”ஏன் அந்தப் பொண்ணைப் பத்தி இப்படியெல்லாம் சொல்லிட்டு இருக்கீயம்மா? ப்பா? சிவமலையோட இழப்பு அவளையும் கூறு போட்டு இருக்கும் தானே? அதுவும் இல்லாமல் அவளோட அப்பாவும் இறந்து போயிட்டாரு! அதோட வலியும் அவளைத் தூங்க விடாமல் இருக்கையில் நீங்களும் இப்படி செய்யலாமா?”என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லிப் பார்த்து விட்டான் அமுதினியன். 

 

“நாங்க முதல்லயே நீ இந்த விஷயத்தில் தலையிடாத – ன்னு உங்கிட்ட சொல்லியாச்சு. அதுக்கு அப்பறமும் அவளுக்குக் கொடி பிடிச்சிட்டு வந்தால் என்ன அர்த்தம்?”என்றத் தன்னுடைய கணவரிடம், 

 

“அது ஒன்னும் இல்லங்க! இவனோட பொஞ்சாதியும் செத்துப் போச்சுல்ல? அதனால் தன்னைப் போலத் தானே அவளும் அப்படின்ற எண்ணத்தில் அவ மேலே பாவப்பட்டு இப்படி பரிஞ்சுப் பேசிட்டுத் திரியுறியான்!”என்று அமுதினியனை ஏளனமாகப் பார்த்து மொழிந்தார் பாண்டியம்மாள். 

 

அவரது வார்த்தைகள் தன் மனதைச் சரியாகத் தாக்கி விட்டதை உணர்ந்து கொண்டு அதற்குப் பிறகு அவர்கள் வீட்டிற்கு வந்து போவதைக் குறைத்துக் கொண்டான் அமுதினியன். 

 

அதையும் அவதானித்து விட்டு,”என்னமோ ஆதங்கத்தில் ஒரு வார்த்தைப் பேசிட்டா நீ வீட்டுக்கே வராமல் இருந்துட்றதா? அப்படின்னா நீ எங்களை உன்னோட நண்பனோட அப்பா, அம்மாவாகப் பார்க்கலை அப்படித் தானே?”என்று அதற்கும் அவனிடம் வாதம் புரிந்தனர் சிவமலையின் பெற்றோர். 

 

அதில் மனதில் மிகவும் அடி வாங்கி விட்டிருந்தவனோ, 

 

“என்ன இப்படி பேசுறீய? அப்படியெல்லாம் ஒன்னுமில்லை!”என அவர்களுக்கு விளக்கம் அளிக்க முயன்றான் அமுதினியன். 

 

“பொய் சொல்லாதலே! நீ எம்முகத்தைப் பார்க்காமல் பேசும் போதே நான் சொன்னது தான் நெசம்ன்னு எனக்குப் புரிஞ்சிடுச்சு!”என்று அவனிடம் கடிந்து கொண்டார் குமரிமுத்து. 

 

“அப்போ இப்போவே வீட்டுக்கு வந்து உங்கம்மைக் கையாலே ஒரு வாய்ச் சாப்பாடு! அப்போ தான் நாங்க உன்னை நம்புவோம்”என்று தன்னை உரிமையாக அழைப்பவர்களிடம் எப்பொழுதுமே மறுத்துப் பேசும் பழக்கம் இல்லை என்பதாலேயே அவர்களுக்கு இசைந்து கொடுத்து அவர்களின் இல்லத்திற்குச் சென்று உணவருந்தினான் அமுதினியன். 

 

“நீ அவளை எப்போதாவது பார்த்தது உண்டா?”என்று மெல்ல அவனிடம் பேச்சை ஆரம்பித்தார் பாண்டியம்மாள். 

 

“யாரைம்மா?”என்றான் குழப்பமாக. 

 

“நான் யாரைப் பத்திக் கேட்கிறேன்னு உனக்கு உண்மையிலேயே தெரியாதுல்ல?”என்று அதட்டலாக கேட்டிருந்தார் பாண்டியம்மாள். 

 

அதில் புன்னகையை உதிர்த்து விட்டு,”அப்பப்போ போற, வார வழியில் பார்க்கிறது உண்டும்மா. அவ்வளவு தான். மத்தபடி அவுகளை உன்னிப்பாக எல்லாம் கவனிச்சது இல்லை”என்றவனோ, 

 

“இப்போ எதுக்குத் திடீர்னு அவுகளைப் பத்தி விசாரிக்கிறீய?”என்று பெரியவர்கள் இருவரிடமும் வினவினான் அமுதினியன். 

 

“சும்மா தான். நாங்க அவளைப் பார்க்கிறது இல்லை. அவ மூஞ்சியில் முழிக்கக் கூட எங்களுக்கு விருப்பமில்லை தான்! ஆனாலும் அவ எப்படி இருக்கா – ன்னுத் தெரிஞ்சிக்கத் தோணுது. அதேன் கேட்டோம்”என அவனுக்குப் பதிலளித்தார் பாண்டியம்மாள். 

 

“ஓஹோ! மருமகன்றப் பாசம் இன்னும் உங்களுக்குள்ளே ஒட்டிக்கிட்டு இருக்குப் போலவே?”என்று அவர்களைக் கேலியாக கேட்கவும், 

 

அதற்கு,“அதெல்லாம் ஒரு பாசமும் இல்லை! எங்க மயனை…”என ஆரம்பித்தக் குமரிமுத்துவை அதற்கு மேலே பேச அனுமதிக்கக் கூடாது என்றெண்ணிக் கொண்டு, 

 

“சரி விடுங்க. அதான் உங்களுக்கும், அவுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லைன்னும் போது அந்தப் பொண்ணு எப்படி போனால் என்ன? விட்ருங்க!”என்றுரைத்து விட்டான் அமுதினியன். 

 

“நீயும் அவ கிட்டே இருந்து தள்ளியே இருடே! அவ ஒரு ராசியில்லாதவ! தெரிஞ்சே போய்ப் பாழுங்கிணத்துல விழுந்துடாதே!”என்று அவனுக்குச் சூசகமாக அறிவுறுத்தினார் பாண்டியம்மாள். 

 

“ஏன் இப்படி சொல்லுதீய? அந்தளவுக்கு அவுக ஒன்னும் பண்ணலையே?”எனக் கேட்டவனை, 

 

“இவேன் ஒரு கூறு கெட்டவன்!”என்று தன்னுடைய கணவரிடம் சலித்துக் கொண்டு, 

 

“இங்கே பாரு இனியா! நீயும் உம்பொஞ்சாதியை இழந்துட்டு இருக்கிற, அவளும் அவளோட தாலியைப் பறி கொடுத்துட்டு நிக்கிதா! உங்க ரெண்டு பேருக்கும் இப்போ ஒரே நிலைமை தான்! அதேன் சொல்றோம்! அந்த ராசியில்லாதவளோட நிழலைத் தொட்றதுக் கூட ஆபத்து தான்! புரிஞ்சு சூதானமாக நடந்துக்கோ”என்று அவனிடம் விஷயத்தைப் போட்டுடைத்து விட்டார் பாண்டியம்மாள். 

 

“அவுக ராசியில்லாதவக – ன்னா அப்போ நானும் ராசியில்லாதவன் தானேம்மா?”என்று அவரிடம் பட்டென்று கேட்டிருந்தான் அமுதினியன். 

 

ஏனெனில் தானும் தனது மனைவியை இழந்துள்ளானே? அப்படியென்றால் தானும் வேதவள்ளியின் நிலையில் தானே இருக்கிறோம்? 

 

அப்படி இருக்கும் போது ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணிற்கு ஒரு நியாயமா? என்றெண்ணி அவனது மனம் வருந்தியது! 

 

“நீயும், அவளும் ஒன்னாடா? உம்பொஞ்சாதி மஞ்சள் காமாலை வந்து, முடியாமல் இருந்து இறந்து போனாள்! ஆனால் எங்க மயன் எப்படி திடீர்னு உயிரை விட்டான் – னு உனக்கே தெரியுமே! அப்பறமும் இப்படி கோட்டித்தனமாக கேள்விக் கேட்டுட்டு இருக்கிற!”என அவனிடம் நியாயம் பேசினார் குமரிமுத்து.

 

“ஓஹோ! சரிப்பா. நான் போயிட்டு வர்றேன்!”என்றவனோ, 

 

தன்னுடைய இல்லத்திற்குச் செல்லும் வழியெல்லாம் ஒரு யோசனையில் ஆழ்ந்து போய், இறுதியாகத் தன்னுடைய வீட்டை அடைந்ததுமே தனக்கும் தனது யோசனைக்கும் ஒரு நல்ல தீர்வுக் கிடைத்து விட்டதை நினைத்து நண்பனின் வீட்டில் வயிறார உணவுண்டு விட்டிருந்ததால் சிறிது நேரம் உறங்கி எழ முடிவெடுத்துக் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டான் அமுதினியன். 

 

அந்தி சாயும் வேளையில் தான் அவனுடைய உறக்கம் முழுமையாக களைந்து இருந்தது. 

 

நன்றாகப் புத்துணர்ச்சியாக உணர்ந்தவனோ, தன் வீட்டு வேலையாட்கள் கிணற்றில் இருந்து நீரை இறைத்து வைத்திருப்பதை அறிந்து அதை உபயோகித்து குளித்து முடித்துப் புது உடை ஒன்றை உடுத்திக் கொண்டுத் தன்னுடைய ஜீப்பை இயக்கிச் சென்று இறங்கியது வேறு எங்கும் இல்லை வேதவள்ளியின் ஆலைக்குத் தான்! 

 

அங்கே தங்களது தேநீரைப் பருகிக் கொண்டு இருந்தார்கள் வேதவள்ளியும், அவளது அன்னை, அண்ணன் மற்றும் அண்ணியும்.

 

இவனது வருகையைக் கண்டதுமே இந்தச் செய்தியைத் தங்களது முதலாளிகளிடம் தெரிவித்து விட்டிருந்தார் அங்குப் பணிபுரிந்து கொண்டிருந்த வேலையாள் ஒருவர். 

 

அதைக் கேட்டதும்,”இவுக நம்மப் பக்கமே வர மாட்டாகளே! இப்போ என்னத்துக்கு வந்து இருக்காக? ஒருவேளை வள்ளியோட புகுந்த வீட்டுக்காரவுக ஏதாவது தாக்கலைச் சொல்லி விட்டு இருப்பாகளோ?”என்று தன்னுடைய எண்ணவோட்டத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டாள் இளவரசி. 

 

அதைத் தானும் ஆமோதித்து,”அப்படியும் இருக்கலாம்! அவுக என்ன ஏழரையைக் கூட்டி இருக்காகளோ! தெரியலையே!”எனக் கலக்கத்துடன் கூறினார் வனக்கிளி. 

 

இவர்கள் இருவருடைய இந்த உரையாடலைக் கேட்டு விட்டு,”நீ ஏன் அமைதியாக இருக்கிற வள்ளி? உனக்கு என்னத் தோணுது?”என்றத் தன் தமையன் வைரமணியிடம், 

 

“எனக்கு எதுவும் தோனலை அண்ணா. அவுக முதல்ல வந்து விஷயத்தைச் சொல்லட்டும்”என்றவளோ, 

 

“எம் புகுந்த வீட்டாளுக என்னத்தப் பத்த வச்சு வெடிக்க வைக்கப் பாக்குறாக – ன்னு முதல்லத் தெரிஞ்சிப்போம்”என அனைவருக்கும் பொதுவாக உரைத்து விட்டாள் வேதவள்ளி. 

 

அதற்குத் தாங்களும் சம்மதித்து விட்டு அமுதினியனைத் தங்களது அறைக்குள் வரச் சொல்லுமாறுத் தங்களது பணியாளிடம் கூறி அனுப்பி வைக்க அவரும் அந்த தகவலை அவனிடம் தெரிவித்து விடவும், 

 

அதைக் கேட்டவுடனேயே அவனும் தாமதிக்காமல் அந்த அறைக் கதவை மரியாதை நிமித்தமாகத் தட்டி விட்டுக் காத்திருந்தான். 

 

அதை அவதானித்து விட்டு,“உள்ளே வாங்க”என அவனுக்கு அனுமதி அளித்தான் வைரமணி. 

 

உடனே அந்த அறைக்குள் நுழைந்து, அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வைப் பார்த்து விட்டு,

 

“நான் உங்க எல்லார் கிட்டேயும் ஒரு முக்கியமான விஷயம் பேசனும்”என்று அவர்களிடம் தீர்க்கமாக கூறியிருந்தான் அமுதினியன். 

 

“முதல்ல உட்காருங்க”என அவனுக்கு அறிவுறுத்தி விட்டு அவனுக்கும் சேர்த்து தேநீரை வரவழைத்து உபசரித்தான் வைரமணி.

 

அதை வாங்கிப் பருகிக் கொண்டே அவர்கள் மூவரும் தன்னை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டு இருப்பதைக் கவனித்தவனோ, தனது தேநீரைத் துரிதமாக குடித்து முடித்திருந்தான் அமுதினியன். 

 

“என்ன விஷயமாகப் பேச வந்து இருக்கீய?”என அவனிடம் கேட்டிருந்தார் வனக்கிளி. 

 

“உங்க நண்பனோட வீட்டாளுக ஏதாவது தாக்கல் சொல்லி விட்டாகளா?”என்றிருந்தாள் இளவரசி.

 

ஆனால் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை அவனிடம் கேள்விகளைக் கேட்க விட்டு, விட்டுத், தான் மட்டும் அமைதியாக அவனைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் வேதவள்ளி.

 

அவன் இங்கு வந்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் ஒரு வார்த்தைக் கூட உதிர்க்கவில்லை அவள்! 

 

இதற்கு மேலும் இவர்கள் அனைவரையும் தவிக்க விடுவது நியாயமற்றது என்ற உறுதியுடன், 

 

“உங்க வீட்டுப் பொண்ணு வேதவள்ளியை எனக்குக் கல்யாணம் கட்டி வைக்கிறீயளா?”என அந்தக் குடும்பத்தாரிடம் தடாலடியாக வினவி இருந்தான் அமுதினியன். 

 

அதைக் கேட்டதுமே உடல் விதிர்விதிர்த்துப் போய், வியர்வை வழிய அவனை அதிர்ச்சியுடன் நோக்கினாள் வேதவள்ளி. 

 

                       – தொடரும்

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 4

“என்னய்யா சொல்றீய?”என அவனிடம் பதறிப் போய்க் கேட்டிருந்தார் வனக்கிளி.  அவரது மகனும், மருமகளும் கூட இதை எதிர்பார்க்கவே இல்லை என்பதை அவர்களது முக பாவனைகளே எடுத்துக் காட்டிற்று.  அவர்கள் இருவரும் வேதவள்ளியைத் தான் நோக்கினர்.  அவளோ இம்மையும், மறுமையும் புரியாமல் உடலெங்கும் உதறத் தனக்கு எதிரில்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்