என் வீட்டு தோட்டத்தில் 20
20
கடந்த சில நாட்களாகவே தனக்குள் நடக்கும் மாற்றங்களுக்கு காரணம் புரியாமல் தவித்துப் போனாள் சிறுபெண்.
காரணமே இல்லாமல் கோபமும், எரிச்சலும் அவளிடம் நிரந்தரமாகக் குடி கொண்டன. ஏதோ ஒரு ஏக்கம். ஆற்றுப்படுத்தப்படாத ஆற்றாமை. ஆணின் ஸ்பரிசமும், முத்தமும், தழுவலும் பரிச்சயம் செய்யாத ஏதோ ஒன்றை ஹார்மோன் மருந்துகள் அவளுக்குள் தூண்டிவிட்டன. உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகளை உசுப்பேற்றியது போல் ஆயிற்று. காரணம் தெரியாமல் மிகவும் சோர்ந்து காணப்பட்டாள்.
சுதாகரனால் இயல்பாக ஒரு குழந்தையை உருவாக்க முடியாதென்பது தயாளனுக்கும் தெரியும். ஆனால், தன் குடும்பத்திற்கும், சொத்துக்கும் வாரிசு வேண்டும். அதுவும் மகன் உதிரத்தில் உதித்ததாக இருக்க வேண்டும். அப்போது தானே அது இந்த குடும்ப வாரிசு. இல்லையென்றால் அவனது சித்தி விட்ட சாபம் பலித்தது போல் ஆகிவிடுமே.
அதற்கான சிகிச்சை தான் இப்பொழுது அபிராமிக்கு நடைபெறுவது. சுதாகரனால் இயலாத பட்சத்தில் அவனது உயிரணுக்களை மட்டும் ஊசி மூலமாகவோ அல்லது சிறு அறுவை சிகிச்சை மூலமாகவோ (TESA/TESE போன்ற முறையில் testicular sperm retrieval) பிரித்தெடுத்து, அபிராமியின் கருமுட்டையுடன் சேர்த்து செயற்கை கருவூட்டல் மூலம் (IVF) தங்கள் குடும்பத்திற்கு வாரிசை உருவாக்குவதே தயாளன் மற்றும் சுதாகரனின் திட்டம்.
இளவயது பெண்ணாக இருந்தால் வெற்றி விகிதம் அதிகம் என்றே அபிராமியை பெண் கேட்டது. பயாலாஜிக்கலாக குழந்தை பெறத் தகுதியான வயதாம்.
அவளுக்கு சுகுமாரன் கடிதம் கொடுத்ததும் தெரியும். அவளது சித்தப்பாக்கள் சுகுமாரனை அடித்து மிரட்டியதும் தெரியும். சுகுமாரன் தயாளனது தம்பி மகன்தானே? இவர் காதுக்கும் விஷயம் வந்திருந்தது. இப்பொழுது பெண் கேட்டால் கண்டிப்பாக கொடுக்க வாய்ப்பிருப்பதை எதிர்பார்த்தார். அவருக்கு ஏற்றார்போல்தான் அவளது சித்தப்பாக்களும் பெண்பிள்ளை விவகாரம் வெளியே தெரியவிடாமல், வசதியையும், ஒரே பையன் என்றதும் யோசிக்காமல் சம்மதித்தனர்.
இப்பொழுது கூட இவளுக்கு மருத்துவமனை சென்று வந்த செலவை அவர்களிடமே கேட்டார். வருடமாகியும் குழந்தை இல்லாததால் ஏதோ குறையுள்ள பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விட்டது போலவும், அதற்கான நஷ்ட ஈடுபோல நீங்களே செலவு செய்ய வேண்டும் என்றார். முதலில் அவர்கள் பக்கம் விரலை நீட்டி விட்டால், தங்கள் பக்கம் என்ன குறையென்று யோசிக்கமாட்டார்கள் என்பது தயாளனின் குள்ளநரித் தந்திரம்.
அடுத்த மாதமும் குறித்த தேதியில் மருத்துவமனை சென்றனர். முதல் முறை சென்றபொழுது பொதுவான சோதனைகளும் ஹார்மோன் மாத்திரைகளுமே. இம்முறை கருமுட்டையை செறிவூட்ட அவளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டது.
அதன் தாக்கமே அவளை உள்ளுக்குள் உழட்டியது. அடுத்த நான்கு நாட்களில் மீண்டும் மருத்துவமனை சென்றனர். அன்று தான் அவளிடமிருந்து கருமுட்டை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
“அபிராமி…”
“அபிராமி யாருங்க இங்க?” நர்ஸ் வெளியே வந்து குரல் கொடுத்தது கூட காதில் கேட்காத வண்ணம் தனக்குள் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் அபிராமி.
“அபிராமி!” அவள் கை மீது வைத்து உலுக்கியதும்,
“ஹான்…” என்றாள் தூக்கத்தில் இருந்து விழித்தவள் போல்.
“நீங்கதானே அபிராமி!”
“ம்ம்ம்.”
“உங்களத்தான் பிலுஸ்த்துன்னாரு. சாரி… கூப்பிடறாங்க” என்றதும் யார் என பார்த்தாள். நர்ஸ் அவள் பெயரைத்தான் ஏலம் விட்டுக் கொண்டிருந்தார்.
அபிராமி நர்சைப் பார்த்ததும், “நீங்க தான் அபிராமியா? அடுத்து நீங்கதான்.” என்றதும்,
“ம்ம்ம்…” என தலையை மட்டும் ஆட்டினாள்.
அபிராமி முகத்தைப் பார்க்க அவள் பதட்டமாக இருப்பதாகத் தெரிந்தது. புது இடம். அதுவும் மருத்துவமனை எனும் பொழுது பயந்திருப்பாளோ என்ற எண்ணம். முதன் முறை வருகிறாளோ என்ற யோசனை.
அபிராமிக்குள்ளும் எதற்கு இத்தனை சோதனைகள் என்ற குழப்பம் தான். குழந்தைக்காக என்றாலும் ஆரம்பத்திலேயே இத்தனை சோதனைகள் அவசியமா என்றிருந்தது. இவர்கள் வீட்டில் பெண்கள் காய்ச்சல், தலைவலி என்று கூட மருத்துவமனை சென்றது கிடையாது. இவளுக்கு இதெல்லாம் புதிதாகவும் இருந்தது. சிறு பெண்ணிற்கு கொஞ்சம் பயமாகவும் இருந்தது.
அவளது முகம் தெளிவில்லாமல் இருப்பதைப் பார்த்தவள், “மீ கூட யாரு வந்திருக்காங்க?” மெதுவாக பேச்சுக் கொடுத்தாள்.
உடன் வந்தவர்கள் வெளியே அமர்ந்திருக்க, ஸ்கேன் எடுக்க வேண்டிய பெண்கள் மட்டும் வரிசையாக ஸ்கேனிங் அறைக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்திருந்தனர்.
“என் வீட்டுக்காரர். வெளியே இருக்காங்க. எம்பேரு எப்படி உங்களுக்குத் தெரியும்?”
“மீ கையில இருக்குற ஃபைல்ல இருக்கே. பிலுஸ்த்துன்னே உண்ட்டாரு. (கூப்டுட்டே இருந்தாங்க) நீங்க வேற யோசனையில இருந்தீங்க போல?” என்றதும் அவளது தமிழும் தெலுங்கும் கலந்தவளது பேச்சில் இவளிடம் மெல்லிய சிரிப்பு.
“நீங்க தெலுங்கா?”
“அவ்னு… நா பேரு ஷைலஜா! எனக்கு ஒரு ஹெல்ப் பண்றீங்களா?” என்றவள் முகம் அவஸ்த்தையை வெளிப்படுத்தியது.
அவளுக்கு எப்பேர்ப்பட்ட உதவியை தனக்கே தெரியாமல் செய்யப்போகிறோம் என்பதை அறியாதவளாக, இப்பதான் இவங்களப் பாக்குறோம். நாம என்ன ஹெல்ப் பண்ண முடியும் என்று அபிராமி யோசிக்க,
“எனக்கு முடியல. சீக்கிரம் கூப்புட்டுறுவாங்கனு நிறைய தண்ணி குடிச்சுட்டேன். இப்ப பாத்ரூம் போய்ட்டா மறுபடியும் தண்ணி குடிக்கணும். மறுபடியும் வெய்ட் பண்ணனும். அடுத்து நான் பேகவா? உங்களுக்கு அவசரமில்லைனாத்தான்” என்றதும் அவளது அவஸ்த்தை புரிந்தது. ஸ்கேன் எடுக்கும் முன் நிறைய தண்ணீர் குடிக்கச் சொல்லியிருந்தனர்.
“சரி போங்க!” என்றதும்,
“தாங்க்ஸ். உங்களுக்கு அவசரமில்லையே? அதுவுமில்லாம டேங்க் ஃபுல்லா இருக்கும் போது அடிவயித்துல சில்லுனு ஜெல் தடவி, டிரான்ஸ்டியூசர் வச்சு அழுத்துவாங்க பாருங்க” கண்களை இறுக மூடி உடம்பைக் குலுக்கியவள் முகம் இப்பொழுதே அந்த அவஸ்த்தையை பிரதிபலித்தது.
“நிறைய தடவை ஸ்கேன் எடுத்திருப்பீங்க போலயே?” என்றதும் ஷைலஜா முகம் உயிர்ப்பில்லாத சிரிப்பை உதிர்த்தது. எத்தனை ஸ்கேனிங். எத்தனை சோதனைகள். எல்லாம் அவளுக்க ஏமாற்றத்தையே கொடுத்தன.
அபிராமிக்கும் முதல் தடவை அப்படித்தான் இருந்தது. ஆனால், இந்த முறை அவளை தண்ணீர் குடிக்கச் சொல்லவில்லை. முதல் முறை வந்தபொழுது அவளுக்கு எடுக்கப்பட்டது பொதுவான கர்பப்பை வளர்ச்சியை சரிபார்க்கும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். அதனால் அதிக தண்ணீர் குடிக்க வேண்டி இருந்தது.
இந்த முறை கருமுட்டை வளர்ச்சியை சோதிக்கும் ட்ரான்ஸ்வெஜினல் அல்ட்ரா சவுன்டு ஸ்கேன். (Transvaginal Ultrasound / TVS) காலி வயிறாக இருக்கட்டும் என்றனர். கருமுட்டை வளர்ச்சியை சோதித்து, இன்றே கருமுட்டை சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதால் மயக்க மருந்து கொடுக்க வேண்டியிருக்கும் என்பதால் எதுவும் சாப்பிட வேண்டாம் எனவும் சொல்லப்பட்டது.
இவள் முறை வந்தபோது ஷைலஜாவை அனுப்பி வைத்தாள். ஷைலஜாவும் செயற்கை கருத்தரிப்பு முறையான ஐவிஈஃப் சிகிச்சைக்குதான் வந்திருக்கிறாள். குருபிரசாத்திற்கு விருப்பமில்லை எனினும், தொடர் தோல்வி காரணமாக இறுதி முடிவாக இவளுக்காக ஏற்றுக் கொண்டான்.
“மீ பிட்ட பாவா. நா கடுப்புல வளறப்போகுது. அப்புடு அது மன பிட்ட காதா?” (உங்க குழந்தை. என் வயித்துல வளறப்போகுது. அப்ப அது நம்ம குழந்தை தானே) கருமுட்டை யாருடையதாக இருந்தால் என்ன? இவனுடைய பிள்ளையாக இவள் வயிற்றில் தானே வளறப்போகிறது. கொஞ்சி, கெஞ்சி, நயந்து எதற்கும் அவன் மசியாமலிருக்க, இறுதியில் கண்ணீரை ஆயுதமாக்கி அவனை அடிபணிய வைத்திருந்தாள்.
ஐவிஃஎப்-ன் ஆரம்பகட்ட சிகிச்சைக்குதான் ஷைலஜாவும் வந்திருக்கிறாள்.
இந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தது அவள் தான். பல வருடங்கள் தாமதாமானவர்களுக்குக் கூட இங்கு வந்தால் கூடிய சிக்கிரம் குழந்தை வரம் கிடைத்து விடுகிறது என கேள்விப்பட்டாள்.
அபிராமி முறை வர ஷைலஜா உள்ளே சென்றாள். இவள் கொடுத்த பேஷன்ட் டீடெய்ல் ஃபைலைப் பார்த்தவர், “நீங்க அபிராமி இல்லையே?” என்றார்.
“எனக்கு முடியல டாக்டர். அவங்ககிட்ட கேட்டு வந்தேன்” என்றாள்.
“அவங்களுக்கு தான் ட்ரான்ஸ்வெஜினல் அல்ட்ரா சவுன்டு ஸ்கேன். அதுக்கு தான் ரெடி பண்ணிருக்கு! இட்ஸ் ஓகே. நீங்க அந்த பெட்ல படுங்க!” என்றவர் அங்கிருந்த இன்னொரு படுக்கையை காட்டினார். அவளை ஸ்கேனிற்கு தயார் படுத்தினர்.
மற்றொரு நர்சிடம் அபிராமியை உள்ளே அழைக்கச் சொன்னார்.
க்ஷைலஜாவிற்கு அந்த ஸ்கேன் எதற்கு என்றும், எப்படி அந்த சோதனை செய்வார்கள் என்றும் அவளது அனுபவத்தில் தெரியும். அது அடி வயிற்றின் மீது அல்ட்ரா சவுன்ட் டிரான்ஸ்டியூசர் வைத்துப் பார்க்கப் படும் சோதனை இல்லை. நேரடியாக கர்பப்பையை சோதிப்பது.
அதனால் தான் அவளை தண்ணீர் குடிக்கச் சொல்லவில்லை.
அடுத்த பத்து நிமிடங்களில் ஷைலஜா ஸ்கேனிங் முடித்து வெளியே காத்திருந்தவளிடம், அவளுக்கான ரிப்போர்ட் வந்தது. வாங்கிக் கொண்டு மருத்துவரை பார்க்கச் சென்றாள்.
அவளுக்காக குரு, காத்திருப்போர் வரிசையில் காத்திருந்தான். இவள் செய்வது பிடிக்கவில்லை. உடன் வருவான். ஆனால் உள்ளே வரமாட்டான். முதல் தடவை அவளோடு வந்து அவனது உயிரணுக்களை கொடுத்தோடு சரி. அதற்கே எல்லாரும் தன்னையே பார்ப்பது போல் உணர்ந்தவனுக்கு அடுத்து உள்ளே வரவே பிடிக்கவில்லை.
இம்முறை மட்டும் தன்னோடு வருமாறு அழைத்து வந்திருந்தாள். ஒவ்வொரு முறையும் இந்த முறை மட்டும் என்று சொல்லித்தான் அழைத்து வருகிறாள். இருவரும் மருத்துவரைப் பார்க்க சென்றனர்.
இவளது சோதனை முடிவுகளைப் பார்த்தவர், கர்பப்பை நல்ல நிலையில் உள்ளதாகவும், கூடிய விரைவில் இவர்களுக்கான கருமுட்டை கிடைத்ததும் தகவல் அனுப்புவதாக சொல்லி அனுப்பினார்.
அபிராமிக்கான சோதனை முடிவுகளும் கைக்கு வர, மருத்துவர் எதிர்பார்த்ததைவிட கருமுட்டைகளின் வளர்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. இன்றே கருமுட்டைகளை சேகரிக்கும் நிலையிலும் இருந்தது.
ஏற்கனவே சுதாகரிடம் அறுவைசிகிச்சை மூலம் உயிரணுக்கள் சேகரிக்கப்பட்டு உறைநிலையில் வைக்கப்பட்டிருந்தது. உயிரணுக்களை சோதித்த மருத்துவர் அப்பொழுதே தயாளனிடம் கால் பங்கு கூட வெற்றி வாய்ப்பு இல்லை என்றே சொல்லிவிட்டார்.
வேண்டுமானால் வேறொருவர் உயிரணுக்களை தானமாகப் பெற்று முயற்சி செய்தால் கண்டிப்பாக வாய்ப்பிருக்கு என்றும் கூறினார். ஆனால், தயாளனுக்கோ அவர் குடும்ப வாரிசுதான் வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கவே, இந்த சோதனை கருவூட்டல். ஒரு வேளை சக்சஸ் ஆகிவிட்டால் என்ற எதிர்பார்ப்பு.
மருத்துவமனை உடையை அபிராமியிடம் நீட்டும் பொழுதே அவளுக்கு படபடத்துவிட்டது. அங்கிருந்த உபகரணங்களும், அவளை தயார் செய்த விதமும் அவளுக்குள் அச்சத்தை விளைவித்தது.
படுக்கையில் ஏறி படுத்தவள் கால்கள், தாங்கிகளில் தூக்கி வைக்கப்பட, சட்டென எழுந்து விட்டாள்.
நோயாளிக்குச் சிகிச்சை முறையை விளக்கி, அவரது ஒப்புதலைப் பெறுவது மருத்துவ நெறிமுறையில் அடிப்படையானது. இவளிடம் அது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை.
“கொஞ்ச நேரம் தான். பயப்படாதீங்க! எக் கலெக்ட் பண்ண தேர்ட்டி மினிட்ஸ்தான் ஆகும். லைட்டா பீரியட்ஸ் டைம் மாதிரி பெயின் இருக்கும். ஒன் ஆர் டூ அவர்ஸ்ல வீட்டுக்குப் போய்விடலாம்” எனறாள் பயிற்சி மருத்துவராக இருந்த நந்தினி.
அவள் சொல்வது சுத்தமாகப் புரியவில்லை. ஏதோ வேற்று மொழியில் பேசுவது போலிருந்தது. “எக் கலெக்ட் பண்ணவா? அப்படினா?” என்று புரியாமல் பார்த்தவள், “என்கிட்ட வேற சொன்னாங்களே? ஏதோ ட்யூப் டெஸ்ட்னு!” என்றாள்.
அவளிடம் அப்படித்தான் சொல்லப்பட்டது. கருக்குழாயில் அடைப்பிருந்தாலும் குழந்தை உருவாக தாமதமாகும். அதற்கான சோதனை எனத்தான் சொல்லப்பட்டது. அதற்கான நடைமுறையும் இப்படித்தான் இருக்கும்.
நந்தினிக்கு உடனே சந்தேகம். ஒரு வேளை பேஷன்ட் மாறிவிட்டாரோ என.
“உங்க பேரு அபிராமி தானே. ஏஜ் ட்வென்ட்டி ஒன்? ஹஸ்பன்ட் நேம் சுதாகர்?” ஃபைலைப் பார்த்து மீண்டும் ஒரு முறை இவளிடம் கேட்டு சரிபார்த்தாள்.
“பேரு அபிராமிதான். ஆனா வயசு பதினெட்டு!” என்றாள்.
“இல்ல… இங்க பாருங்க!” என்று ஃபைலைக் காட்டினாள்.
இவ்வளவு நேரம் அவள் கையில் தான் அது இருந்தது. அதைக் கூட அவள் கவனிக்கவில்லை. ஒரு வேளை உண்மையான வயது தெரிந்தால் பிரச்சினையாகும் என வயதை கூட்டி சொல்லியிருப்பார்களோ. அவளுக்கு திருமணம் முடிந்ததிலிருந்து வயதும் ஒரு பிரச்சினையாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது.
அவள் முகம் சிந்தனை வயப்பட, நந்தினி சற்றே சுதாரித்தாள்.
மருத்துவமனையில் நடைபெறும் சட்டத்திற்கு புறம்பான சில விஷயங்கள் அவளுக்கும் தெரியும். உயிரணுக்களை மாற்றுவது, கருமுட்டையை மாற்றுவது, சில நேரங்களில் கருவூட்டப்பட்ட கருவையே மாற்றி வைப்பதுண்டு. முறைப்படி படிப்படியாக சிகிச்சை மேற்கொண்டால் பல மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். அதை இந்த மருத்துவமனையில் கடைபிடிப்பதில்லை.
இப்பொழுது ஒருவருக்கு கருமுட்டை வளர்ச்சி போதவில்லை எனில் வளர்ச்சிக்கான சிகிச்சையைத்தானே முதலில் தொடங்க வேண்டும். படிப்படியாக அடுத்தகட்ட சிகிச்சைக்கு முன்னேற வேண்டும். அதுவரை காத்திருக்க வேண்டும். இதுவேதான் உயிரணுக்கள் வீரியமற்றவர்களுக்கும். இதற்கெல்லாம் காலம் எடுக்கும். சிகிச்சைக்கு வருபவர்களிடம் சேகரிக்கும் நல்ல வளர்ச்சியடைந்த கருமுட்டைகளும், வீரியமிகக் உயிரணுக்களும் இவர்கள் தேவைக்கு பயன்படுத்திக் கொள்வதால் தான், இந்த மருத்துவமனை வருபவர்களுக்கு வெற்றி விகிதம் அதிகமாகிறது.
நம் குழந்தைதானா என டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து பார்க்காதவரை இவர்களுக்கும் லாபமே. அப்படியே சந்தேகம் வந்து பார்த்தாலும், பெற்ற குழந்தையை வேண்டாம் என்றா சொல்லமுடியும். மாறாக, இது என் குழந்தை இல்லை என உண்மையைப் பகிறங்கப் படுத்துவார்களா? பல வருடங்களாக குழந்தை இல்லையென அந்த ஏக்கத்தில் சிகிச்சைக்கு வருபவர்களின் இந்த பலவீனம்தான் இவர்களது பலம். குழந்தை கிடைத்தால் போதும் அவர்களுக்கு.
நந்தினி பயிற்சி மருத்துவர் என்பதால் எதிலும் தலையிட முடியாது. சக பயிற்சி மருத்துவரிகளிடமும் இதைப்பற்றி பேசமுடியாது. உனக்கென்ன… பயிற்சிகாலத்தில் எதிலும் தலையிட்டு உன் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடாதே என்பதுதான் அவளுக்கான ஆலோசனையாக இருக்கும். பணம்தான் இங்கு எல்லாமே.
ஆனால், அபிராமியைப் பார்க்க அவளுக்கே பாவமாக இருந்தது. நந்தினையைவிடவும் சிறு பெண். இவளிடம் சொல்லாமலே ஏதோ நடப்பதாகப் பட்டது. அவளது கையை அபிராமி பதட்டத்தில் இறுக்கமாகப் பிடித்திருந்தாள். அடைக்கலம் தேடும் சிறு பறவைபோல் தெரிந்தாள்.
இவளிடம் மட்டுமாவது என்ன செய்யப்போகிறோம் என்பதை தெளிவு படுத்திவிடலாம் என்று முடிவெடுத்தாள். இப்பொழுது அவளிடமிருந்து கருமுட்டைகளை எடுக்கப்போகிறோம் என்பதை செயல் முறைகளோடு விளக்கிச் சொல்ல அபிராமிக்குப் புரியவில்லை.
இவளுக்கு எப்படி புரிய வைப்பது என யோசித்தவள், தன் கைபேசி எடுத்து கூகுள் செய்து, அதில் விளக்கமாக எல்லாவற்றையும் காண்பித்தாள்.
எப்படி கருமுட்டை உருவாகிறது, கருக்குழாய் வழியாக வெளியேறுவது, உயிரணுக்களின் படையெடுப்பு, அதில் ஒரே ஒரு உயிரணுமட்டும் கருமுட்டையை அடைவது அணைத்தும் கைபேசியில் வீடியோவாக காண்பித்தாள்.
“இப்போ உங்ககிட்டருந்து எக் கலெக்ட் பண்ணி, உங்க ஹஸ்பன்டோட ஸ்பெர்ம இன்ஜெக்ட் பண்ணுவோம். உங்க கர்பப்பை தாயாரானதும் உள்ளே வச்சுருவோம்!”
நந்தினி கூறியதைக் கேட்டவளுக்கு மயக்க மருந்து கொடுக்காமலே தலை சுற்றியது. கணவனோடு உடலளவில் உறவு கொண்டவர்களுக்கே இது புரிந்தும் புரியாத நிலை. இவளுக்கோ, இவளிடமே கருமுட்டையை எடுத்து மீண்டும் இவள் கருப்பையில் வைப்பது தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போலிருந்தது.
அதற்குள் மருத்துவர் உள்ளே வந்தார். அபிராமி, நந்தினியைப் பார்த்த பார்வை அவளை என்னவோ செய்தது.
அபிராமிக்கு மிதமான மயக்கமருந்து செலுத்தப்பட்டது.
“பீரியட்ஸ் மாதிரி லேசா வலிக்கும். சீக்கிரம் முடிஞ்சுறும்” மருத்துவர் சொல்லி முடிக்குமுன் காற்றில் மிதப்பது போலிருந்தது.
அவளிடமிருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் முதிர்ச்சியடைந்திருந்தது மருத்துவர் விஜயலட்சுமிக்கு ஜாக்பாட் அடித்தது போல் இருந்தது. சிறு வயது. இந்த வயதுப் பெண்களின் கருமுட்டைக்குதான் தேவை அதிகமிருக்கிறது. நல்ல விலையும் கூட.
மயக்கம் தெளிந்தது. ஆனால் அவளது குழப்பம் தெளியவில்லை. உடையை மாற்றிக் கொண்டு காத்திருந்தவளை சுதாகர் வந்து கைத் தாங்கலாக அழைத்துச் சென்றான்.
அவனிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவன் மீது கடந்த சில நாட்களாகத் தோன்றிய ஈர்ப்பு கூட ஒரே நாளில் பட்டென அறுபட்டுப்போனது. அது ஹார்மோன் மருந்துகளின் பக்க விளைவு என்பது புரியவில்லை. வீட்டுக்கு வந்தவள் மிகவும் அமைதியாகிவிட்டாள். முன்பானால் அன்னபாக்கியத்திடமாவது ஏதாவது சலசலப்பாள். இப்பொழுது இவளும் ஒரு அன்னபாக்கியமாக உருவாவது போல் ஒரு மாயை. தானும் யாரிடமும் பேசப்பிடிக்காமல் அடுப்படியே கதியென மாறிவிடுவோமோ என்ற பயம் உள்ளூர எழுந்தது? அந்த அடுப்படியில் அப்படி என்னதான் இவங்களுக்கு இருக்கு என்ற கேள்வி இப்பொழுது எழுவதில்லை.
கருமுட்டை சேகரிப்பு (Ovum Pick-up) முடிந்ததும் ஷைலஜாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே உறைநிலையில் பாதுகாக்கப்பட்டிருந்த குருப்ரசாத்தின் உயிரணுக்கள் (Cryopreserved Sperm), உரிய முறையில் தயார் செய்யப்பட்டன. அபிராமியிடமிருந்து சேகரிக்கப்பட்ட முதிர்ச்சியடைந்த கருமுட்டைகள், அவற்றுடன் சேர்த்து ஆய்வகத்தில் கருவூட்டலுக்கு உட்படுத்தப்பட்டன (In-vitro Fertilization – IVF).
கருவூட்டலுக்குத் தகுதியான முதிர்ந்த கருமுட்டைகள் அனைத்தும் இந்தச் செயல்முறைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு கருமுட்டையும் கருவாக வளருமா என்பது அதன் முதிர்ச்சி நிலை, உயிரணுவின் தரம், கருவூட்டலுக்குப் பிந்தைய வளர்ச்சி ஆகியவற்றைப் பொறுத்தது. கருவூட்டல் வெற்றியடைந்த கருக்கள் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டன. செல்கள் முறையாகப் பிரிந்து, எதிர்பார்த்த வளர்ச்சி நிலையை எட்டிய கருக்களில் தகுதியானது தேர்ந்தெடுக்கப்பட்டது.
இதற்கிடையில், கருவைப் பதியவைத்துக் கொள்ள ஏதுவாக ஷைலஜாவின் கருப்பையின் உள்படலமான எண்டோமெட்ரியம் (Endometrium), ஹார்மோன் சிகிச்சையின் மூலம் தயார்படுத்தப்பட்டது. அதன் தடிமன், அமைப்பு ஆகியவை அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் மதிப்பீடு செய்யப்பட்டு, கரு பதிதலுக்கு உகந்த சூழல் உறுதிப்படுத்தப்பட்டது.
அடுத்த சில நாட்களில், கரு பிளாஸ்டோசிஸ்ட் (Blastocyst) வளர்ச்சி நிலையை எட்டியதும், தேர்ந்தெடுக்கப்பட்ட கரு ஒரு மெல்லிய வடிகுழாய் (Embryo Transfer Catheter) வழியாக ஷைலஜாவின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது.
இதற்கு முன்பே, அபிராமியிடமிருந்து கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு இரண்டு நாட்கள் கடந்திருந்த நிலையில், தயாளனுக்கு மருத்துவரிடமிருந்து அழைப்பு வந்தது.
மறுமுனையில் கேட்ட செய்தி அவ்வளவு உவப்பானதாக இல்லை. அவர் எதிர்பார்த்த நம்பிக்கையைத் தகர்ப்பதாக இருந்தது.
சுதாகரனின் உயிரணுக்களைக் கொண்டு கருவூட்டப்பட்ட அபிராமியின் கருமுட்டைகளில், எதிர்பார்த்த அளவிலான கருவளர்ச்சி காணப்படவில்லை. கருமுட்டைகள் கருவூட்டல் நிலையிலேயே நின்றுவிட, கருவாக வளர்ந்தவற்றிலும் செல்பிரிவு திருப்திகரமாக அமையவில்லை. அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளை எட்டுவதற்கான வாய்ப்பும் குறைவாக இருப்பதாகத் தெரிந்தது. சிகிச்சையின் அந்த முயற்சி தோல்வியைத் தழுவியிருந்தது.
மருத்துவமனையில் நந்தினி ஒவ்வொன்றாக ஆன்லைனில் தேடிக் காட்டி விளக்கியதை மனதில் அசைபோட்டபடியே வீடு திரும்பியவள், இதுவரை தனக்குள் புதைந்து கிடந்த சந்தேகங்களுக்கு விடை தேடி கூகுளில் மூழ்கினாள். ஒரு தகவல் மற்றொன்றுக்கு கைபிடித்து இழுத்துச் சென்றது. மருத்துவக் கட்டுரைகளையும், சிகிச்சை முறைகள் குறித்த விளக்கங்களையும் தொடர்ந்து வாசித்தாள்.
ஒவ்வொரு புதிய தகவலும் சுதாகரனைப் பற்றிய உண்மையை இன்னும் தெளிவாக்கியது.
தனக்கு என்ன சிகிச்சை நடக்கிறது என்பதைக்கூடத் தெரியாமல், எதற்காக இத்தனை ஊசிகள், எதற்காக இத்தனை பரிசோதனைகள் என்று புரியாமல், அவர்கள் சொன்னதையெல்லாம் நம்பிக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்று வந்திருக்கிறாள்.
அவளிடம் உண்மையைச் சொல்லி குழந்தைக்காகத்தான் இந்தச் சிகிச்சை என்று சொல்லியிருந்தால் கூட, அதை அவள் புரிந்துகொள்ள முயன்றிருப்பாள். சிறுபிள்ளைதானே. இறக்க சுபாவத்தில் அவனுக்கு குழந்தை பெற்றுக் கொடுக்ககூட சம்மதித்திருக்கலாம். ஆனால், தனக்கு உண்மையைச் சொல்ல வேண்டிய அவசியம்கூட அவர்களுக்குத் தோன்றவில்லை என்பதுதான் அவளை வெறுப்பின் உச்சியில் நிறுத்தியது.
என் உடம்பு! என்னிடம் ஒருவார்த்தை கேட்க வேண்டாமா? கோபமும், ஆற்றாமையும் அவளுக்குள் பதட்டத்தை தூண்ட அவளது விரல்கள் படபடப்பில் நடுங்கின.
திருமணமானவள் என்பதற்காக அவளது உடலின் மீதான உரிமையும் அவளிடமிருந்து பறிக்கப்பட்டுவிடுமா என்ன?
கடந்த சில நாட்களாக தன்னிடம் காட்டப்பட்ட அக்கறை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது, மருந்துகளை வாங்கிக் கொடுத்தது, அவளது உடல்நிலையை விசாரித்தது என்று ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன.
அத்தனையும் அன்பு என்று நினைத்திருந்தாள். சுதாகரன் பக்கம் கூட இலேசாக மனம் சாயத் தொடஙகியிருந்தது. சிறு பெண் தானே. சிறு அக்கறை போதும். மனதில் இடம்பிடிக்க. இப்போது அவற்றின் பின்னால் இருந்த சுயநலம் புரியும்போது அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
தனக்கு நடந்த அநியாயம் புரிகிறது. ஆனால் யாரிடம் நியாயம் கேட்க முடியும். தன்னிச்சையாக செயல்பட்டு பழக்கமில்லை. வீடு, பள்ளி. இந்த இரண்டைத்தவிர வெளி உலக அனுபவமும் கிடையாது. எந்த முடிவாக இருந்தாலும், சுயமாக யோசிக்காமல் மற்றவர் பொறுப்பில் விட்டுவிடும் முதுகெலும்பில்லாத தாயால் வளர்க்கப்பட்டவள். அவளுக்கும் என்ன தெரியும்? இதோ தன் கைக்குள் அடங்கியிருக்கும் கைபேசி வழியாக உலகத்தையே சுற்றி வரலாம் என்பதே இப்பொழுது தான் அறிந்து கொண்டாள்.
அடுத்து என்ன என்ற கேள்வியும், அச்சமும் அவள் முன் மலைபோல் எழுந்து நின்று பயமுறுத்தியது. யோசிக்க யோசிக்க தலைதான் வலித்தது. ஒரு முடிவும் தோன்றவில்லை.
*****
சிலநாட்கள் கடந்தது.
“என்ன அத்தை பண்றீங்க. குப்பையில புதையல் தேடுறீங்களா?”
“ஆமா..அபி. தங்கப் புதையல் தேடுறேன். தோடு திருகாணி காணாம். வீடு கூட்டும்போது குப்பையோட அள்ளிப் போட்டனான்னு தெரியல” என்றவர் கூட்டி அள்ளிப்போட்ட குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தார்.
இவளும் மாமியாருக்கு உதவியாக குப்பைகளை கிளற, பழைய பேப்பர்கள் நிறைய கிழித்து போடப்பட்டிருந்தது. எடுத்துப் பார்க்க ஏதோ மருத்துவமனை பெயர் போல் இருந்தது.
“என்னத்தை இது. ஏதோ ஹாஸ்பிடல் நேம் இருக்கு!”
“தெரியல அபி. உங்க மாமா ஏதாவது பழசெல்லாம் க்ளீன் பண்ணிருப்பாரு” என்றவருக்கு கவனம் திருகாணி தேடுவதில் தான் இருந்தது.
இவளும் சேர்ந்து தேட திருகாணி கிடைத்தது. மாமியாரிடம் கொடுக்க, சந்தோஷமாக வாங்கியவர் மீண்டும் குப்பையை கூட்டிப் பெருக்க வர, தானே சுத்தம் செய்வதாக அனுப்பிவிட்டாள். திருகாணி கிடைத்த சந்தோஷத்தில் அன்னபாக்கியம் உள்ளே சென்றுவிட்டார்.
கிழித்து போடப்பட்ட பேப்பர்களை சேகரித்தவள், மீதமிருந்த குப்பையை கூட்டிப் பெருக்கி குப்பை கூடையில் போட்டுவிட்டு வந்தாள்.
அறைக்குள் வந்தவள் கிழிந்த காகிதங்களை ஒன்று சேர்த்தாள்.
சுகாகரன் பெயர் இருந்தது. அதிலிருக்கும் மருத்துவமனை பெயரை ஆன் லைனில் போட்டுப் பார்த்தாள். அது மருத்துவமனை இல்லை. போதை மறுவாழ்வு மையம்.
*****
அடுத்த இரண்டு நாட்களில் நந்தினி இவளுக்கு அழைத்திருந்தாள். ஏதோ ஒரு பரிதாபம் இவள் மீது அவளுக்கு. சிறுபெண் என்பதாலா? சூதுவாது அறியாத பெண்ணாக இருக்கிறாளே என்பதாலா தெரியவில்லை.
கைபேசியில் நந்தினி கூறிய விபரங்களை கேட்டவளுக்கு படபடத்து வந்தது. அதை நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது. உடல் கூசிப் போயிற்று. ஏதோ மேனியெங்கும் அசிங்கம் அப்பிய உணர்வு.
என்ன செய்வது என்றே புரியவில்லை. என்னால் மருத்துவமனை வர முடியாது என்று சொல்லிவிடலாம். ஆனால் அதற்கடுத்து. இவளைத்தான் மலடி என ஊர் பேசும். ஊர் பேசினால் பேசட்டும் என உண்மையைக் கூட ஊரறியச் சொல்லி இவர்கள் முகத்தில் கரியைப் பூசி விடலாம். ஆனால் அடுத்து என்ற கேள்விதான் மலைப்பாக இருந்தது.
“அக்கா… எனக்கு ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணுங்க ப்ளீஸ்!” என்றவளின் இறைஞ்சும் குரல் நந்தினியை என்னவோ செய்தது.
“எனக்கு குழந்தை பெத்துக்கணும். ஆனா அது இந்த வீட்டு வாரிசா இருக்கக்கூடாது. என்னோட குழந்தையா மட்டும்தான் இருக்கணும” என்றவள் குரலில் இப்பொழுது இறைஞ்சுதல் இல்லை. தீர்க்கமாக ஒலித்தது.
“அது ரிஸ்க் அபி!”
“எப்படியாவது எனக்கு ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்!” என்றவள் அடுத்து மருத்துவமனை செல்லும் நாளுக்காக காத்திருந்தாள்.
அந்த நாளும் வந்தது. இத்தனைமுறை வந்து சென்றதில் நடைமுறை தெரிந்திருந்தது. பதட்டம் கூட குறைந்திருந்தது. ஏதோ ஒரு குருட்டு தைரியம் அவளிடம்.
நந்தினி, அந்த மாதம் கிரையோஜெனிக் ஸ்டோரேஜ் டேங்க் கண்காணிப்பை அவளே கேட்டு எடுத்துக் கொண்டாள்.
உறைநிலையில் பாதுகாக்கப்பட்டிருந்த உயிரணுக்களின் அடையாளங்களையும் சேமிப்பு விவரங்களையும் சரிபார்க்க வேண்டிய பணி அது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அபிராமியின் கருமுட்டையுடன் கருவூட்டப்பட வேண்டிய உயிரணுக்களுக்குப் பதிலாக, குருப்ரசாத்தின் உறைநிலை உயிரணுக்களைத் தேர்ந்தெடுத்து மாற்றி வைத்தாள்.
அது ஒன்றும் எளிதான காரியமில்லை. ஒவ்வொரு மாதிரிக்கும் தனித்த அடையாளம், சேமிப்புப் பதிவு, ஆய்வக ஆவணங்கள் எனப் பல கட்டுப்பாடுகள் இருந்தன. அவற்றை மீறி அவள் செய்தது மருத்துவ நெறிமுறைகளுக்கும் சட்டத்திற்கும் எதிரான செயல். உண்மை வெளிவந்தால், அவளது மருத்துவப் பணியும் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும். எல்லாம் தெரிந்திருந்தும் துணிந்தாள்.
அபிராமியின் மீது கொண்ட பரிதாபம் அவளை அந்த எல்லையைத் தாண்ட வைத்திருந்தது. தான் செய்தது சரியா, தவறா என்று சிந்திப்பதற்குக்கூட அவளுக்கு அப்போது நேரமில்லை. மருத்துவமனையிலேயே சட்டத்திற்குப் புறம்பாக இது நடப்பதால் துணிந்து இவளுக்காக மாற்றி வைத்தாள். கேள்வி வந்தால் அந்த உயிரணுக்களும் தோல்வியடைந்தது என்று சொல்லிவிடலாம் என்ற தைரியம் தான். அதைத்தானே இந்த மருத்துவரும் இத்தனை நாட்களாக கடைபிடிக்கிறார்.
ஒரு மாத இடைவெளியில் ஷைலஜாவும் அபிராமியும் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சையின் மூலம் கருவுற்றனர்.
*****
“முதலும் கடைசியுமா… நீங்க ஸ்ட்ரெச்சர்ல படுத்திருந்தவங்க கை பிடிச்சுட்டே ஆபரேஷன் தியேட்டர் வரைக்கும் போனதைப் பார்த்தேன்.”
தனக்கு எதிரே அமர்ந்திருந்தவனைப் பார்த்தபடியே அபிராமி மெல்ல தொடங்கினாள்.
“அதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை செக்கப்புக்காக அந்த ஹாஸ்பிடலுக்கு வந்திருக்கேன். ஆனா, அன்னைக்குத்தான் உங்களை முதன்முதலா பார்த்தேன். நீங்கதான் என் வயித்துல இருக்குற குழந்தைக்கு அப்பான்னு அப்போ எனக்குத் தெரியாது. அதே மாதிரி… அவங்க வயித்துல இருந்த குழந்தைக்கு நான்தான் அம்மான்னும் எனக்குத் தெரியாது.”
சில கணங்கள் அவளது பேச்சு தடைப்பட்டது. கனத்த அமைதி நிலவியது.
“ஆனா, அவங்க கை பிடிச்சுக்கிட்டு நீங்க கலங்கிப் போய் நின்னதைப் பார்த்தப்போ… என்னன்னு சொல்லத் தெரியாத ஒரு உணர்வு. அவங்களை உள்ளே கூட்டிட்டுப் போன பிறகும், நீங்க அந்த மூடின கதவையே கலங்கின கண்ணோட பார்த்துட்டு நின்னீங்க. ஒரு ஆம்பளை அழுது அன்னைக்குதான் பாத்தேன். ஒரு மனைவி மேல இந்த அளவுக்குப் பாசம் வைக்க முடியுமான்னு ஆச்சரியமா இருந்துச்சு.” அவளது இதழ்களில் மெல்லியதொரு புன்னகை அரும்பி மறைந்தது.
“அதே நேரம்… பொறாமையாவும் இருந்துச்சு. சாரி… அன்னைக்கு அப்படித்தான் தோணுச்சு” அவளது குரலில் இப்போது என்ன உணர்வு கலந்திருந்தது என்று அவளாலேயே பிரித்துச் சொல்ல முடியவில்லை. ஏக்கமா? வலியா? தனக்குக் கிடைக்காத ஒன்றை இன்னொருவரிடம் பார்த்தபோது ஏற்பட்ட ஆதங்கமா? தெரியவில்லை.
“அதுதான்… அவளுக்குக் கடைசி நாளும் கூட.” தொண்டையை அடைத்துக்கொண்டு வெளிவந்த குருவின் குரல் வெகுவாகக் கனத்திருந்தது.
அந்த ஒரு வாக்கியத்துக்குள் எத்தனை வலிகள்!
சில கணங்கள் இருவருக்கும் இடையே மௌனம் மட்டுமே எஞ்சியிருந்தது. அந்த மௌனத்தைக் கலைத்தவன், திடீரென நினைவுக்கு வந்தவனாக தனக்குள் தோன்றிய சந்தேகத்தைக் கேட்டான்.
“ஆனா… சுதாகரனோட ஸ்பெர்ம் தான் ஃபெயிலியர் ஆயிடுச்சே. அப்புறம் வேற யாரோடதை செலக்ட் பண்ணதா டாக்டர் நந்தினி சொன்னாங்க?”
அவன் சாதாரணமாகத்தான் கேட்டான். ஆனால், அபிராமி சொன்ன பதிலில் அவனே அறியாமல் முகம் கருத்து தாடை இறுகியது.
ஒரு கணம் அவளையே வெறித்துப் பார்த்தான்.
‘இப்படிக்கூட மனுஷங்க இருப்பாங்களா?’ மனிதர்களின் சுயநலத்தை நினைத்து மனம் கசந்துபோனது.
ஒரு பெண்ணின் வாழ்க்கை, அவளது எதிர்காலம் இவை எல்லாவற்றையும் தங்களது விருப்பத்திற்கேற்ப வளைக்கலாம் என்று நினைத்தவர்களின் மீது அவனுக்குள் அருவருப்பும் ஆத்திரமும் ஒருசேரப் பொங்கியது.
Hi friends ❣️
தொட்டது துலங்க, எண்ணிய காரியம் வெற்றியடைய அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துக்கள் மக்களே!
💐💐💐💐💐🍫🍫🍫🍫🍫
எனக்குத் தெரிந்தவரை இந்த எபியில் மருத்துவமனையில் நடப்பவற்றை கதைக்கு ஏற்றமாதிரி லாஜிக் மிஸ்டேக் இல்லாமல் கொடுத்திருப்பதாக நம்புகிறேன். நீங்களும் அப்படியே நம்பி படிங்க 😁😁😁🫣🫣🫣🥰🍫





விஜயதசமி வாழ்த்துகள் 🤩& Nice epi
வாழ்த்துக்கள் மா 💐
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Enama oru hospital kula nadara intern attend pana madri irundhuchu.. excellent...Evalo azhaga vilakama solirkeenga..unga muyarchi veen pogala....dhayalan family madri kizhtaramana manushungaluku than kalame...apuram hospital chai .ena velai pathurkanga...
இப்ப இதுதான் ட்ரென்டிங் பிசினஸே. பொட்டிக்கடை மாதிரி தெருவுக்கு ஒரு ஃபெர்டிலிட்டி சென்டர் இருக்கு...
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Abi soli thane nandini pana...ilatiyum anda hospital la ipdi panra vazhakam thane...apa kovam abi melayum than varanum nandiniyum sethu...ana ipa adala thane ivan payanuku vidivu kalam poradhurku.
நீங்க எங்கேயோ கதைய மிஸ் பண்ணிட்டீங்க. குருவோட கோபம் எதனாலன்னு கடைசி பத்திய மறுபடியும் படிச்சுப் பாருங்கம்மா...
அதுதான் அபிராமி துணிச்சலா முடிவெடுத்ததுக்கான ட்விஸ்ட்டே...
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
S,ipa puriyudhu...nan guru spermoda thane sethurkanga...ivan ena ell therinji ipdi kekarane nu edhuthen..ipa purinjidhu..
அப்பாடா புரிஞ்சுடுச்சு... 🤣🤣🤣🤣🥰
Very nice. Pathetic stage. But. முழித்து கொண்டு விட்டாள். விஜயதசமி நல் வாழ்த்துகள் மா.
அவங்க சுகுமாரனின் spem use panna sonnangala. So illai mamanarin spem ah.
சுகுமாரனைத்தான் பிடிக்காதே... 😏😏🫣
வாழ்த்துக்கள் மா 💐Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Cha enna oru asingam. Nalla vela athu nadakala.
விஜயதசமி வாழ்த்துக்கள் மா♥️♥️♥️
😔😔😔😔😔
வாழ்த்துக்கள் மா 💐
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
ஈஸ்வரி மேடம் இந்த எபிசோட் அப்படியே உயிரை உருக்குற
மாதிரி இருந்தது.
🫂🫂🫂🫂🫂
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
அந்த வயதில் அபி யோசிச்சு முடிவு எடுத்து இருக்காள்,அபி அந்த முடிவு எடுக்க காரணம் மாமனாரா இருக்கலாம் ,
ஒருவேளை அவர் வாரிசுக்காக தன்னுடையதை எடுத்துக்க சொல்லி டாக்டரிடம் சொல்லி இருக்கலாம்..? அதைக்கேட்டு அபி மனம் வெறுத்து போய் இப்படி பண்ணியிருக்கலாம்.
பண்ணியிருக்கலாம்.
கெட்டதிலும் ஒரு நல்லது நடந்து இருக்கு இவங்க இருவருக்கும் .
ஆத்தர் ஜி செம 👏❤️தகவல்களை நல்லா தெளிவா ஆராய்ந்து நமக்கும் புரியுறது போல் விளக்கமா சொல்லியிருந்தீக சூப்பர் 😀
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Hai ji
Hi ma ❣️