arrow_back
என் வீட்டு தோட்டத்தில் என் வீட்டு தோட்டத்தில் 19

என் வீட்டு தோட்டத்தில் 19

visibility 1,081
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.7/5 (7 மதிப்பீடுகள்)
பகிர்

19

“ஹேஏ…‌ சுக்கு எப்படியிருக்க?” அபியின் குரலில் உற்சாகம் ஊற்றெடுத்தது. 

கோலம் போட்டு நிமிர்ந்தவள் பைக்கில் சென்றவனைப் பார்த்ததும் சட்டென மலர்ந்த முகத்தோடு நலம் விசாரித்தாள். இவளைப் பார்த்ததும் சுகுமாரனும் பைக்கின் வேகத்தைக் குறைத்தான். காலை எழுந்ததும் தோப்புக்கு செல்வதுதான் அவனது வழக்கம். காலைக்கடன், குளியல் எல்லாம் அவனுக்கு அங்குதான். சுதாகரன் வீட்டு வழியாகத்தான் செல்ல வேண்டும். நேருக்கு நேராக அபியைப் பார்த்த பிறகு அவனாலும் பேசாமல் செல்ல முடியாது. ஒன்றாக படித்தவர்கள். இப்பொழுது சொந்தமும் கூட‌.

“நல்லாருக்கேன் அண்ணி!” வண்டியின் இருபக்கமும் காலை ஊன்றியபடி பதில் சொன்னான். 

“அண்ணியா… டேய், மானத்த வாங்காதே. அப்ப கொழுந்தன் முறைக்கு நானும் வாங்க போங்கனு உனக்கு மரியாதை தரணுமோ?” என்று சிரித்தவள், 

“எந்த காலேஜ் சேந்திருக்க? பைக் புதுசா?” என்றாள் பைக்கின் வலதுபக்க சைடு மிர்ரரை வருடியபடி. 

பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிவிட்டது. அபிராமியும் தட்டுத்தடுமாறி பாஸாகிவிட்டாள்.

அவளது சக தோழமைகள் கல்லூரி சேர்வதற்கான முன்னேற்பாட்டில் இருந்தனர். சுகுமாரனும் விழுப்புரத்திலேயே கலைக் கல்லூரி சேர்ந்துவிட்டான். கல்லூரி சென்றுவரத்தான் புது பைக் வாங்கியிருந்தான். 

அபி விசாரித்ததும் கல்லூரி பெயரும் எடுத்திருக்கும் பாடப்பிரிவும் சொல்ல சந்தோஷமாக வாழ்த்தினாள். 

“உள்ள வா சுக்கு. காஃபி குடிச்சுட்டுப் போலாம்!” மரியாதை நிமித்தம் சுகுமாரனை வீட்டிற்குள் அழைத்தாள். 

“இன்னொரு நாள் வர்றேண்ணி” என்றவன் கிளம்ப எத்தனிக்க,

இவர்கள் பேச்சு சத்தம் கேட்டு யாரென்று‌ வெளியே வந்த அன்னபாக்கியத்திடமும், “உள்ள வரச்சொல்லுங்கத்தை. நான் சொன்னா வரமாட்டேங்குறான்.” என்றாள்.

பைக்கில் அமர்ந்தவாக்கில் அபியிடம் பேசியவன், பெரியம்மாவைப் பார்த்ததும் பைக்கிலிருந்து இறங்கி நின்றான். 

“அவன் நான் சொன்னாலும் வரமாட்டான் அபி!” என்றவர், 

அவரும் அவன் படிப்பு பற்றி விசாரிக்க வாசலில் நின்றபடியே பதில் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான். அன்னபாக்கியம் பெரியம்மா என்றால் அவனுக்கு அவ்வளவு பிடிக்கும். அமைதியான சுபாவம். அதிர்ந்து கூடப் பேசமாட்டார். இப்பொழுது வீட்டுக்குள் வரக்கூட அவ்வளவு யோசிக்கிறான். 

இதென்ன பெரியப்பா வீட்டுக்குள்ள வர்றதுக்கு இவ்வளவு பாக்குறான் என்றிருந்தது அபிக்கும். சுதாகரனுக்கும் இரண்டு சித்தப்பாக்கள். இருவருக்கும் தலா இரண்டு மகன்கள். இவன் இரண்டாவது சித்தப்பா மகன். சுதாகர் மூத்த வாரிசு என்றால் சுகுமாரன் தான் இவர்கள் குடும்பத்தில் கடைக்குட்டி. சிறுவயதில் பாதி நேரம் இங்குதானிருப்பான். தயாளன் தான் சிடுசிடுவென விழுவார். அதனால் அவர் இருந்தால் மட்டுமே இங்கு வரமாட்டான். 

இவர்கள் பேசுவதை சுதாகரும் மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். பதினெட்டின் தொடக்கத்தில் நல்ல வாட்டசாட்டமாக சுகுமாரன் இருப்பதாகப்பட்டது. அவன் பைக்கின் ஹேன்ட்‌பாரைப் பிடித்து, தரையில் காலூன்றி அமர்ந்திருந்த தோரணை சுதாகரன் கண்ணை உருத்தியது. அபி வேறு ஆர்வமாக பைக்கை தடவிப்பார்த்தாள். அவளுக்கு எப்பொழுதும் கியர் வண்டிமீது ஆர்வம் அதிகம் தானே. சேலையில் இருந்தாள். சுடிதாராக இருந்திருந்தால் கண்டிப்பாக சுகுமாரனிடம் வண்டியைப் பிடுங்கி ஒரு ரவுன்ட் ஓட்டிப் பார்த்திருப்பாள். 

அபி புகுந்த வீடு வந்து ஒரு மாதமாகிறது. 

மறுநாள் சமாதானம் பேச வந்த அபி குடும்பத்தார், தயாளனிடம் நயந்து பேசி, திருமணம் முடிந்த மறுநாளே பெண் தங்கள் வீட்டில் தனித்திருப்பது ஊராருக்குத் தெரிந்தால் நாலுபேர் நாலுவிதமாகப் பேசுவார்கள் என பலவாறாக சாமாதானம் பேசி, சுதாகரனை வந்து அழைத்துப் போகுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என விண்ணப்பம் எழுதாத குறையாக கேட்டுக் கொண்டனர். 

மறு விருந்தெல்லாம் முடிந்து அபியை மருத்துவரிடம் காட்டுவதாக ஒப்புக் கொள்ள, மிகவும் முறுக்கினால் கயிறு முறிந்துவிடும் என்ற அடிப்படை தெரிந்த தயாளனும் பெரிய மனது வைத்தார்.

இவர்கள் மன்றாடி கேட்டுக் கொண்டதன் பிரகாரம், சுதாகரனே சென்று மறுவீடு விருந்தெல்லாம் முடித்து முறைப்படி அபிராமியை அழைத்து வந்தான். ஆரத்தி எடுத்து மகனையும், மருமகளையும் உள்ளே அழைத்தார் அன்னபாக்கியம். 

குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைக்கும் வரை அபிராமியை, அன்னபாக்கியத்தோடு தங்க வைத்துக் கொள்ளச் சொன்னார். 

இந்துமதி, திருமணம் முடிந்த அடுத்த ஒரு வாரத்தில் பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். 

அவளிடம் கடைசியாக மாதாந்திரம் எப்பொழுது வந்தது, எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை வரும், வயிற்றுவலி முதற்கொண்டு அடிப்படை விபரங்களை கேட்டு தெரிந்து கொண்டவர் மருந்து சீட்டில் பெயரை எழுதிவிட்டு வயதைக் கேட்டார். 

பதினேழு முடியப் போகிறது என்று சொல்ல இருபது வயது வரை இது சாதாரணம்தான். அதற்கு மேலும் இந்தப் பிரச்சினை தொடர்ந்தால் மற்ற பரிசோதனை செய்து கொள்ளலாம். இப்போதைக்கு சத்தான உணவு கொடுங்கள் என்றவர், சத்து டானிக் மட்டும் எழுதி கொடுத்தார். 

வீட்டிலேயே சொல்லி அனுப்பினர். திருமணம் முடிந்தது தெரியாமல் பார்த்துக் கொள்ளுமாறு. அதனாலே காலர் நெக் சுடி அணிந்து சென்றாள். 

“குழந்தை பிறக்குறதுல ஏதும் பிரச்சினையில்லையே!” இந்துமதி தயங்கி விசாரிக்க,

“படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு இப்பவே இதைப்பத்தி விசாரிக்கிறீங்க? முதல்ல அவ படிக்கட்டும். இப்போதைக்கு எதுவும் பேசி அவ மனச கலைக்காதீங்க!” கண்டிப்போடே சொல்லி அனுப்பினார். 

சத்து மருந்துகளோடு மகளை புகுந்த வீட்டில் விட்டுச் சென்றனர். 

ஒரு மாதமாயிற்று. இன்னும் குலதெய்வ கோவிலுக்கு போகும் ஏற்பாட்டைக் காணோம். 

இவளும் விருந்துக்கு வந்தவள் போல் அன்னபாக்கியத்துடன் சேர்ந்து சமைக்க, சாப்பிட, துவைக்க, தூங்க என பொழுதை கழிக்கிறாள். 

சுகுமாரனோடு பேசிவிட்டு உள்ளே வந்தாள். அன்னபாக்கியம் அவளுக்கும் காஃபி கொடுக்க வாங்கிக் கொண்டு சேஃபாவில் அமர்ந்தாள்.

“நீங்களும் வாங்கத்தை!” என்று அழைக்க, 

“வேலையிருக்கு அபி!” என்றார். 

“எங்கம்மா மாதிரியேதான் நீங்களும். அடுப்படி விட்டு வரமாட்டேங்கறீங்க. இருக்கறது நாலு பேரு தானே? பொறுமையா சமைக்கலாம். வாங்க!” என்றாள்.‌ 

அதற்கு சிரிப்பு மட்டுமே அவரிடம். 

அவளும் வந்ததிலிருந்து பார்க்கிறாள். தேவைக்கு‌ மட்டுமே அம்மாவிடம் சுதாதரன் பேசுகிறான். தேவைக்கு கூட தயாளன் பேசுவதில்லை. அவர்‌ பேசவேண்டிய அவசியமே இருக்காது‌. கண்‌ பார்வையிலேயே‌ எல்லாம்‌‌ நடக்கும்.

இவளுக்கு காஃபி கொடுத்துவிட்டு அடுக்களை சென்றுவிட்டார். அப்படி என்னதான் இருக்கு அந்த அடுப்படியில. வந்த நாள் முதல் அவளது யோசனை அதுதான். 

டீவி கூட போடவில்லை. வீடு அமைதியின் பிடியில் இருந்தது. அடுக்களையில் அன்னபாக்கியம் வேலை பார்க்கும் சத்தம் மட்டுமே. அதுகூட ஹஸ்கி வாய்ஸில்தான் கேட்டது. பாத்திரத்துக்கு வலிக்கும் என வேலை பார்ப்பார் போல என்று நினைத்துக் கொண்டாள். 

இவளது வீடாக இருந்திருந்தால் வீடு இந்நேரத்துக்கு அமளிதுமளிபடும். தங்கை, தம்பிகள் என இவளோடு சேர்த்து ஏழு உறுப்படி. அதிலும் ஆண்பிள்ளைகள் ஐந்து. சண்டைக்கும், பஞ்சாயத்துக்கும் பஞ்சமே இருக்காது. பள்ளி கிளம்புமுன் அது எங்கே, இது எங்கே என யாராவது ஒருத்தர் ஏலம் விட்டுக் கொண்டே இருப்பர். தம்பிகளோடு அடித்த லூட்டியெல்லாம் நினைத்துப் பார்த்தவளுக்கு அவளே அறியாமல் இதழ்கள் புன்னகையால் விரிந்தது. கூடவே, பிறந்த வீட்டின் ஏக்கமும் பிறந்தது. இவளிடம் கைபேசி கூட இல்லை. வந்ததிலிருந்து அன்னபாக்கியம் ஃபோனில்தான் அம்மாவுக்கும், தங்கை, தம்பிகளுக்கும் அழைத்து பேசுகிறாள்‌. சுவர் கடிகாரத்தைப் பார்த்தாள். இந்நேரம் தங்கை, தம்பிகள் பள்ளிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருப்பார்கள். வீடு போர்க்களம்‌ போலிருக்கும். அதுவும் அரவிந்தனுக்கு எது வேண்டுமென்றாலும் அக்காதான் எடுத்து தரவேண்டும். இந்துமதி அடுப்படியே கெதியென இருந்து விடுவதால் தம்பிக்கு சகலமும் அக்காதான். தம்பியை நினைத்த மாத்திரத்தில் இதழ்கள் சிரிப்பால் விரிந்தது‌.

மாடியிலிருந்து இறங்கி வந்தவன்‌ பார்வை பிறந்த வீட்டின் நினைவில் தனியாக புன்னகைத்தபடி அமர்ந்திருந்த அபியைத் துளைத்தது. 

இப்பொழுது தானே சுகுமாரனோடு சிரித்துப் பேசிவிட்டு உள்ளே வந்தாள். அவனைப் பார்த்த சந்தோஷம் போல என்று எண்ணிக் கொண்டான். வண்டி சாவியை எடுத்துக்‌ கொண்டு வேகமாக வெளியேறிவிட்டான். பைக் கிளம்பும் சத்தம் கேட்டுதான் சுயத்துக்கு வந்தாள். 

அவளுக்கும் சந்தோஷமாகத்தானிருந்தது. சுகுமாரனைப் பார்த்ததால் அல்ல. அவனது புது வண்டியைப் பார்த்து‌. அவளுக்கும் அந்த மாதிரி பைக் ஓட்ட வேண்டும் என்பது வெகுநாளைய ஆசை. சித்தப்பாக்களிடம் இருந்தது ஸ்ப்ளென்டரும், யுனிகார்னும். சுகுமாரன் பைக்கைப் பார்த்ததும் அவ்வளவு துள்ளல் அவளுக்குள். அவன் வைத்திருந்தது என்ஃபீல்டு லேட்டஸ்ட் மாடல். 

இன்னும் அவளால் சுதாகரனை நேருக்கு நேராக பார்க்க முடியவில்லை. ஏனோ அவன் பார்வை அச்சத்தை தாண்டி‌ய ஏதோ ஒரு உணர்வு. சரியாக சொல்லத் தெரியவில்லை. பார்த்தாலே அடி வயிற்றில் பயம் கவ்வும். 

இப்போது கூட அவளை சாதாரணமாக பார்த்துச்‌ செல்லவில்லை. அவன் வெளியே சென்றதும் தான் அவளுக்கு இயல்பாக மூச்சுவிடவே முடிந்தது. ஏனோ அவனைப் பார்க்கையில் முதல் நாள் அவன் நடந்து கொண்டதுதான் நினைவிற்கு வந்தது. முதல் முத்தம். முதல் அணைப்பு. நினைத்த மாத்திரத்தில் மேனி முழுவதும் பரவசம் பொங்கிப் பரவ வேண்டாமா? இவளுக்கு ஏனோ முகச்சுழிப்பைத்தான் கொடுத்தது. இப்பொழுது கூட இவளை‌கடந்து செல்லும் போது சிகரெட் நாற்றம். 

கையிலிருக்கும் காஃபியை மறந்து சென்றவனையே பார்த்திருக்க, 

“அவனோட உனக்கென்ன பேச்சு?” முதுகுக்குப் பின் கேட்ட குரலில் விலுக்கென திரும்பினாள். தயாளன்‌ நின்று கொண்டிருந்தார். வீட்டின் அமைதியைக் உடைத்தது தாயாளனின் கனத்த குரல்.

பட்டென எழுந்துவிட்டாள். “சுக்கு, என்னோட ஸ்கூல்ல படிச்சவன் மாமா. முன்னவே தெரியும்.” என்றவளுக்கு ஏனோ நெஞ்சு படபடத்தது. 

“அதென்ன சுக்கு, மிளகுன்னு?” 

“அவன நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம்.”

“அவனோட‌ பேச்சு வச்சுக்காதே” என்று சொல்லிக் கொண்டிருக்க, அன்னபாக்கியம் இவரது குரல்‌ கேட்டு காஃபியோடு வெளியே வந்தார்.

“உன் மருமகட்ட சொல்லி வை! யார்கிட்ட பழகணும், பழக்கக்கூடாதுனு!” காஃபியை வாங்கியவர் அங்கே டீபாய் மீதிருந்த பேப்பரை கையில் எடுத்துக் கொண்டு வெளியே ஊஞ்சலுக்கு சென்றுவிட்டார். 

சன்னக் குரலில், “சுகுமாரன அவருக்குப் பிடிக்காதா அத்தை? அவனும் கூப்பிட்டப்ப உள்ளே வரல!” என்றாள்.

“அவங்களுக்கும், நமக்கும் கொஞ்சம் சடவும்மா!”

“இவருக்கு தம்பி மகன்தானே?” 

“சுகுமாரனோட பெரியப்பாவும், அப்பாவும் இவருக்கு சித்தி மகனுங்க” என்றதும் புரியாமல் பார்த்தாள். 

“சுதாகரோட தாத்தாவுக்கு ரெண்டு தாரம் அபி! மூத்த தாரம் இறந்துட்டாங்க. அவங்களுக்கு உங்க மாமா ஒரே பையன்தான். இவரோட அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அவங்களுக்குப் பிறந்தவங்கதான் மத்த ரெண்டு பேரும். அதனால அவங்கள உங்க மாமாவுக்குப் பிடிக்காது.”

“ஹோஓஓ.. அதான் நிச்சயத்துக்கு கூட அவங்க வரலையா?”

“ம்ம்ம்… சொத்து பிரிச்சதுல கொஞ்சம் பிரச்சினை ஆயிடுச்சு. வீட்ல மொத கல்யாணம். ஊர்ல பேசுவாங்கனுதான் கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிட்டாரு. நீயும் அதிகமா அவனோட பேசாதே” என்று சொல்ல அமைதியாகக் கேட்டுக் கொண்டாள். அதனால் தான் சித்தப்பா பிள்ளைகளுக்கும் சுதாகரனுக்கும் இவ்வளவு வயது வித்யாசம் போல என்று நினைத்தாள். 

தயாளன் வாலிப பிராயத்தை எட்டும் வயதில் தான் அவரது அம்மா இறந்தது. அதன் பிறகு அவரது அப்பா இரண்டாவது திருமணம் செய்து கொண்டது அவருக்கு பிடிக்கவில்லை. சில வருடங்களில் அப்பாவும் இறந்துவிட, குடும்பத் தலைவன் பொறுப்பிற்கு வந்தவர் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருந்தார். 

சித்திக்கு பிறந்தவர்களுக்கும் மணம் முடித்து குடும்பம், குழந்தையென ஆகும் வரைக்குமே சொத்து முழுவதும் இவரது கட்டுப்பாட்டில்தான். வரவு செலவெல்லாம் தயாளன் பொறுப்புதான். 

சொத்து பிரிக்கும் பொழுதுதான் இவரது சூட்சமம்‌ அவர்களுக்குப் புரிந்தது. சொத்தை இரண்டாகப்‌ பங்கிட்டு ஒரு பங்கு இவருக்கும், மற்ற ஒரு பங்கில்‌ தம்பிகள் இருவருக்கும் என அவரது அப்பா‌ உயிரோடிருக்கும் போதே உயில் எழுதி வாங்கிவிட்டார். 

தம்பிகள், அது எப்படி, மூவருக்கும் சமமாகத்தானே பிரிக்க வேண்டும் என்றதற்கு இரண்டாம் தாரத்துப் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு கொடுத்ததே பெரிது என்பது போல் பேசி வெளியே அனுப்பி விட்டார். பரம்பரைச் சொத்துதான். பெற்றவரும் உயிரோடில்லாத பட்சத்தில் இரண்டாம் தாரத்துப் பிள்ளைகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கோர்ட்டுக்குப் போனால் இவர் என் அப்பாவிற்கு சட்டப்படி மனைவியில்லை, இல்லீகல் என்று சொல்லக்கூட தயங்கமாட்டார். தயாளன் அதிகாரம் ஊர் அறிந்ததே.

 பூர்வீக வீட்டையும் அவரே வைத்துக் கொள்ள, இப்படி அடிச்சுப் பிடுங்குன சொத்துக்கு வாரிசில்லாம போகும் என்று மண்ணை வாரி தூற்றிச்சென்றார் இவரது சித்தி.  

“சுதா எங்கம்மா? அவனும்‌ இறங்கி வந்த மாதிரி இருந்துச்சு!” என்றவர் கையில் இன்னொரு காஃபி‌ டம்ப்ளர். 

“வெளியே போய்ட்டார் அத்தை!”

“அதுக்குள்ள எங்க போனான்? காஃபி கூட குடிக்கல!” 

“தெரியல, பைக் சாவி எடுத்துட்டுப் போன மாதிரி இருந்துச்சு!” என்றதும் வெளியே வந்து பார்த்தார். வண்டி இல்லை. 

பேப்பர் பார்த்துக் கொண்டிருந்த தயாளனிடம், “என்னங்க… குலசாமி கோவிலுக்கு எப்ப போறது? எத்தனை நாளைக்கு சின்னஞ் சிறுசுகல பிரிச்சு வைப்பீங்க?” மெதுவாக கேட்டுப் பார்த்தார். 

பேப்பரிலிருந்து பார்வையை எடுக்காமலே, “உன் மருமகட்ட கேட்டு சொல்லு. உங்க ரெண்டு பேருக்கும் தேதி தோதுப்பட்டா போய்ட்டு வந்துறலாம். நானும் எத்தனை நாளைக்கு அர்த்த ராத்திரியில கள்ளப்புருஷனாட்டம் வந்து உன் ரூம் கதவைத் தட்டறது?” என்றதும் அன்னபாக்கியத்திற்கு நெருப்பை மிதித்தது போல் சுளீரென்றது. வேகமாக மருமகளை திரும்பிப் பார்த்தார். அவளது கவனம் இங்கில்லை என்று தெரிந்த பிறகே ஆசுவாசமானார். அதற்குள் அவளுக்கு கேட்டிருக்குமோ என ஒரு சில கணங்களே எனினும் உடல் கூசிற்று. 

ஆழ்ந்து மூச்செடுத்தவர், “இந்த வாரமே போலாம்! சம்பந்தி வீட்டுக்கு சொல்ல வேண்டாமா?”

“அதெல்லாம் தேவையில்ல!” என்றவர்‌ பார்வை இன்னும் பேப்பரிலேயே இருந்தது. அவர் குடித்து வைத்த காஃபி டம்ப்ளரை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தார். 

அங்கே தோப்பில் சுகுமாரனது புது பைக் அபிராமி தடவிப் பார்த்த வலது பக்க கண்ணாடி நொறுக்கப்பட்டு, சீட் கவர்‌ தாறுமாறாக கிழிக்கப்பட்டிருந்தது. இரண்டு டயர்களும் பழுது. 

*****

“என்ன அபி… ஏதாவது விசேஷமா?” 

“ஆமாம்மா…‌ இந்த ஊர்ல திருவிழா வருது. எல்லாருக்கும் சொல்லணும்னு அத்தை சொல்லிட்டிருந்தாங்க.”

“இப்ப திருவிழாவா முக்கியம்? நீ மாசாமாசம் ஒழுங்கா குளிக்கிறயா?”

“அத கேக்குறீங்களா? அந்த டாக்டர்கிட்ட போய்ட்டு வந்ததுலருந்து ஒழுங்கா பீரியட்ஸ் வருதும்மா.” 

“அப்போ இன்னும்‌ குளிச்சிட்டுதான் இருக்கியா?”

“அதுக்கு தானம்மா டாக்டர்கிட்ட போனது.” கடுப்பாக வந்த அபியின் பதிலில் எதிர்முனையில் இந்துமதி தலையில் அடித்துக் கொள்வது இவளுக்கு இங்கே தெரியாமலில்லை. எதற்கு சுற்றி வளைக்கிறார் என புரிகிறது. 

“ஏன்டீ… கல்யாணமானவகிட்ட ஏதாவது விசேஷமான்னு கேட்டா புள்ள உண்டாகியிருக்கியான்னு அர்த்தம்!”  பட்டென உடைத்துக் கேட்டார். 

திருமணம் முடிந்து ஒரு வருடமாகப் போகிறது. வீட்டுக்கு வருவோர், போவோர், வழியில் பார்ப்போர் என எல்லாருக்கும் இவளிடம் இதேதான் கேள்வி‌. திருமணம் முடிக்காதவர்களிடம் எப்பொழுது திருமணம். திருமணம் முடித்தவர்களிடம் எப்பொழுது விசேஷம். இது இரண்டு தவிர வேறு எதுவும் தெரியாது நாலுவிதமாகப் பேசும் நாலுபேருக்கு. 

அன்னபாக்கியம், குலசாமி கோவிலுக்கு சென்றுவந்த அன்று, மாலை இவளை புதுப்புடவை உடுத்திக் கொள்ள சொன்னார். அவரே தலை சீவி, அலங்காரம் செய்து தலைநிறைய மல்லிகைப் பூவை வைத்துவிட்டார். அவளுக்கு புரிந்து போயிற்று‌. திருமணம் முடிந்த முதல் நாள் சித்திகளும் இதைத்தானே செய்தார்கள். அப்பொழுதே அவளுக்கு பயம் நெஞ்சைக் கவ்விப் பிடித்தது. 

இத்தனை நாள் போல, தங்களோடே படுத்துக் கொள்கிறேனே என கேட்கவும் முடியவில்லை. திருமணம் முடிந்ததும் கணவன், மனைவி ஒரே அறையில் தான் தங்கவேண்டும் என்பது வரை தெரிந்திருந்தது. 

அதன் பிறகு, என்று நினைத்ததும் அன்று நடந்தது ஒவ்வாமையைக் கொடுத்தது. நினைத்த மாத்திரத்தில் பசிகூட மறத்துப் போயிற்று. பேருக்கு சாப்பிட்டு எழுந்து கொண்டாள்‌. 

அன்று இரவோடு இரவாக மகன் கோபமாக வீடு திரும்பியது அன்னபாக்கியத்திற்கும் தெரியும். ஏன், எதற்கு என்று மகனிடம் கேட்டுக் கொள்ளவில்லை‌. அவனை ஏதாவது கேட்டால் அதற்கு பதில் தயாளனிடமிருந்து வரும். அந்த பதிலும் உனக்குத் தேவையில்லாதது என்பது போல் இருக்கும். மகனிடம் கூட அவரால் மனம் விட்டு பேசமுடியாது. கடந்த சில வருடங்களாகவே மகனை அவரிடம் கூட அதிகமாக ஒட்டவிடாமல் தயாளன் விலக்கி வைத்திருப்பதாகப் பட்டது. 

அபியை அவனது அறைக்குள் விட்டவர், மகன் வருகைக்காக சோஃபாவில் காத்திருந்தார். 

தயாளன் என்ன என்பது போல் பார்க்க, “சின்ன பிள்ள. அதான் அவன்கிட்ட சொல்லிட்டு போலாம்னு…” தயக்கத்தோடு இழுக்க,

“எதை யார்கிட்ட பேசறதுன்னு வெவஸ்த்தை இல்ல. அவனென்ன சின்ன பையனா? இதெல்லாமா அவன் கிட்டப் பேசுவ?” அவ்வளவுதான். மறுபேச்சின்றி எழுந்து பக்கத்து அறைக்குள் செல்ல முற்பட,

“இன்னும் அங்க எங்கே போற?” அடுத்த கேள்வி முதுகில் அறைந்தது. 

திரும்பிய அன்னபாக்கியம் தர்மசங்கடமாக அவரைப் பார்க்க, அவர் பார்த்த பார்வையில் மௌனமாக கால்கள் தயாளன் அறைக்குள் சென்றது. மகன் வரும்வரை தயாளன் காத்திருந்தார். 

அபி, அவன் வருவதற்கு முன் கண்களை இறுக மூடிப் படுத்துக் கொண்டாள். அறைக்குள் வந்தது தெரிந்தது. மூச்சுவிடும் அசைவுகூட இல்லை அவளிடம். சுதாகரனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. கட்டிலின் மறுபக்கம் படுத்துக் கொண்டான். அந்தளவுக்கு போதும் என்றிருந்தது இவளுக்கும். ஆனால் தூக்கம் தான் அண்டமாட்டேன் என்றது.  

அடுத்தடுத்து வந்த நாட்களிலும் அதுவே தொடர்ந்தது. இப்பொழுதெல்லாம் சிகரெட் வாடை கூட வருவதில்லை. 

ஒரு நாள் மெதுவாக அவளே அறியாமல் கண்ணயர்ந்த நேர்த்தில், அரைத்தூக்கத்தில் அவளை ஆக்கிரமித்திருந்தான். அவனிடம் ஏதோ ஒரு மூர்க்கத்தனம். மூச்சுமுட்ட ஆக்கிரமித்தவன் சற்று நேரத்தில் சட்டென விலகிப் படுத்துக் கொண்டான். இவளுக்கோ புரிந்தும் புரியாத நிலை. பலநாட்கள் இது தொடர்கதையானது. 

சுதாகரன் அருகில் வரும்போதெல்லாம் அவளுக்குள் ஏதோவொரு பதற்றம் குடியேறிவிடுகிறது. அவன் விலகிச் சென்ற பிறகுதான் இயல்பாக மூச்சுவிட முடிகிறது.

கணவன் என்றால் இப்படித்தானா? திருமணமான பெண்கள் எல்லோருமே இப்படித்தான் உணர்வார்களா?

அவளுக்குத் தெரிந்ததெல்லாம், அவனருகில் இருக்கும்போது தனக்கு ஏற்படும் அந்த இனம் புரியாத பயமும், அசூயை மட்டும்தான்.

அவனது அணைப்பு காதலாகவோ, அன்பாகவோ அவளுக்குத் தோன்றவில்லை. ஏதோவொரு உரிமையில் தன்னை இறுக்கிப் பிடிப்பதாகவே உணர்ந்தாள். ஆனால் அது ஏன் என்று கேட்டுத் தெரிந்துகொள்ளும் துணிவும் அவளுக்கு இல்லை. அவனைப் பிடிக்கவில்லை என்பது வேறு. அவன் தன்னைத் தொடும்போது ஏன் இப்படி உடம்பெல்லாம் இறுகிப் போகிறது என்பது வேறு. இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்றுகூட அவளுக்குத் தெரியவில்லை.

ஆரம்பத்தில் வேண்டுமானால் பருவம் உணர்த்தியதை உள்வாங்கிக் கொள்ளமால் இருந்திருக்கலாம். ஆனால், சில நாட்களாக அவன் மூர்க்கமாக அவளை தழுவுவதும், அடுத்த சில நொடிகளில் அவன் தோல்வியைத் தழுவுவதும் தான் ஏனென்று புரியவில்லை. முன்னபின்ன செத்திருந்தாதானே சுடுகாடு தெரியும் கதைதான் அவளுக்கு. இதை யாரிடம் கேட்க முடியும்‌. விடிந்ததும் முழு போதையில் இருப்பான். 

இதோ இப்பொழுது விசாரிக்கும் அம்மாவிடம் கூட இதைப்பற்றி வெளிப்படையாக கேட்க முடியவில்லை. என்னவென்று கேட்பது. எப்படி கேட்பது என்ற தயக்கம். புரிந்தும் புரியாத நிலை. 

திடீரென ஒரு நாள் தயாளன் இருவரையும் மருத்துவரைப் பார்க்க அழைத்துச் சென்றார். அபி வீட்டாரிடம் கூட சொல்லவில்லை. 

அன்னபாக்கியத்திடம் மட்டும், ஒரு வருடமாகப் போகிறது. இன்னும் குழந்தை உண்டாகவில்லை. மருத்துவரைப் பார்க்க அழைத்துப் போவதாகச் சொன்னார். மூவரும் வீடு திரும்ப இரவானது. 

“எங்க அபி போனீங்க. டாக்டரப் பாத்துட்டு வர இவ்வளவு நேரமா?” என்று விசாரித்தவரிடம்,

“சென்னைக்கு அத்தை!” என்றதும் தான் சென்னை போனதே அவருக்குத் தெரிய வந்தது. 

அதிர்ந்தவர், “ஏன் அவ்வளவு தூரம்? விழுப்புரத்துல லேடீ டாக்டர் யாரும் இல்லையா என்ன?” புரியாமல் கேட்க,

“நீதான் விசாரிச்சு சொல்லேன். போறதே போறோம். ஒரேடியா இதுக்குனு இருக்குற ஹாஸ்பிடல் போலாம்னுதான் போனது. நான் நால்லா விசாரிச்சுட்டேன்‌. கைராசி டாக்டராம். உடனே சக்சஸ் ஆகும்னு சொன்னாங்க.”

இதற்கு மேல் அவர் என்ன பேச. அடுத்த கேள்விக்கே இடமில்லை. அதுக்கு அவர்கள் இருவர் மட்டும் போனால் போதாதா? அவன் என்ன சின்னபிள்ளையா? நீங்க எதுக்கு? இதை என்னிடம் கூட ஏன் சொல்லவில்லை? இப்படி அவருக்குள்ளும் ஆயிரம் கேள்விகள். கேட்டால் பதில் கிடைக்காது. 

தயாளன் அழைத்துச் சென்றது வம்சம் ஃபெர்டிலிட்டி சென்டர். அது முதன்முறையாக அங்கு போனதுபோல் இல்லை. நல்ல பழக்கம் போல் மருத்துவருடன் தயாளனும், சுதாகரனும் பேசிக் கொண்டதாகப் பட்டது. 

அபிக்கு ஆரம்பகட்ட சிகிச்சைகள், சோதனைகள் என்று ஆரம்பிக்காமல், நேரடியாக குழந்தையின்மைக்கான சிகிச்சைகளே ஆரம்பிக்கப்பட்டது. இரத்தப் பரிசோதனை, அல்ட்ரா சவுன்ட எடுக்கப்பட்டது. கருமுட்டை வளர்ச்சிக்கான சிகிச்சையே தொடங்கப்பட்டது. அடுத்த மாதம் குறித்த தேதியில் வந்துவிட‌வேண்டும் என சொல்லியிருந்தார். சுதாகரனிடம் எந்த பரிசோதனையும் மேற்கொள்ளவில்லை‌. அவனைப் பற்றிய முழுவிபரமும் தான் ஏற்கனவே அவருக்குத் தெரியுமே.  

அங்குதான் பயிற்சி மருத்துவராக மகப்பேரு மருத்துவர் விஜயலட்சுமியின் கீழ் நந்தினி வேலை பார்த்தாள். (எட்டாவது எபிசோட்ல விஷாலிக்கு ட்ரீட்மெண்ட் பார்த்த ஹைனகாலஜிஸ்ட்)

அந்த வயதிற்கே உரிய அதீத ஆர்வம். பயிற்சி மருத்துவராக இருந்தவள், விஜயலட்சுமியிடம் வரும் அனைத்து தம்பதியரின் விபரமும் சேகரிக்கத் தொடங்கினாள். எப்படி இவர்களால் இத்தனை சக்ஸஸ் ரேட்டிங் குறுகிய சிகிச்சை காலத்திற்குள் கொடுக்க முடிகிறது என்ற சந்தேகம் அவளுக்குள்‌. 

குருப்ரசாத், ஷைலஜா மற்றும் அபிராமி, சுதாகர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்த குழந்தைக்கான சிகிச்சை கோப்பு அவளது ஆர்வத்தைத் தூண்டியது. 

 

 

 

 

 

 

 

 

 

 

அடுத்த அத்தியாயம்

என் வீட்டு தோட்டத்தில் 20

20கடந்த சில நாட்களாகவே தனக்குள் நடக்கும் மாற்றங்களுக்கு காரணம் புரியாமல் தவித்துப் போனாள் சிறுபெண். காரணமே இல்லாமல் கோபமும், எரிச்சலும் அவளிடம்  நிரந்தரமாகக் குடி கொண்டன. ஏதோ ஒரு ஏக்கம். ஆற்றுப்படுத்தப்படாத ஆற்றாமை‌‌. ஆணின் ஸ்பரிசமும், முத்தமும், தழுவலும் பரிச்சயம் செய்யாத ஏதோ…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 9

  1. Manju Mohanபொதுக் கருத்துManju Mohan

    Ada pavingala...ellathuleyum fraud thana... education and medical system leyum ipdi aniyayam panrale...nice...edhuku inda aluku ellam oru kalyanam..kadavule inda family ya pathi therinji than onum kodulayooo.

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      மெடிக்கல் சிஸ்டட்ம் தான் ஃபுல் கரப்டட்.
      இங்கு எல்லாமே பணம் தான்.

      நீதி நேர்மையெல்லாம் அப்பாவிகளுக்குதான். அடப்பாவிகளுக்கு இல்லம்மா...

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  2. Chitra Srinivasanபொதுக் கருத்துChitra Srinivasan

    அவளை ஏமாற்றி விந்து தானம் மூலம் குழந்தை பெற வைத்திருக்கிறார்கள்.. சுதாகரன் உபயோகமில்லலை போல. Very sad.

    1. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      😔😔😔😔😔
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

    2. SM Eshwariபொதுக் கருத்துSM Eshwari

      யார் யாரை ஏமாத்துனாங்கனு பாக்கலாம்‌...

  3. KAMSY_777 பத்தி 70 பேப்பரிலிருந்து பார்வையை எடுக்காமலே, “உன் மருமகட்ட கேட்டு சொல்லு. உங்க ரெண்டு பேKAMSY_777

    Sappa vasikum pothe engalukum koosi pochu. Ipdi koodava irupanga

    1. SM Eshwari பத்தி 70 பேப்பரிலிருந்து பார்வையை எடுக்காமலே, “உன் மருமகட்ட கேட்டு சொல்லு. உங்க ரெண்டு பேSM Eshwari

      இதெல்லாம் சாம்பிள் தான். இதுக்கு மேலேயும் இருக்காங்க....

      😌😌

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

உங்கள் கருத்தைப் பகிருங்கள்