கனி 7
கனி 7
திருமணம் முடிந்த இரண்டு ஜோடிகளும் வீட்டிற்கு வந்தனர். அவர்களுக்காக ஏற்கனவே ஆரத்தி தயாராக இருந்தது.
அமிர்தவள்ளி, கலைவாணி, கிருத்திகாவின் அம்மா மலர்விழி மூவரும் சேர்ந்து இரண்டு புதுமணத் தம்பதிகளுக்கும் ஆரத்தி எடுத்து, அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றனர்.
வீட்டிற்குள் வந்ததும் இரண்டு மருமகள்களையும் பூஜை அறையில் விளக்கேற்ற வைத்தார்.
கனியை அணைத்துக்கொண்ட அமிர்தவள்ளி, “கனி உண்மையா உன்னை மித்ரனுக்கு கல்யாணம் பண்ணணும்னு உண்மையா ஆசைப்பட்டேன். அப்புறம் அவன் காதலிக்கிறானு சொல்லவும் பரவாலன்னு விட்டுட்டேன். ஆனா நீயே எனக்கு மருமகளாகவே வந்துட்ட. அதுவும் மூத்த மருமகளா. எனக்கு ரொம்ப சந்தோஷம் கனி. என்ன சொல்றதுனு தெரியல. கும்பிட்ட சாமி எதுவும் கைவிடல. வெற்றி கல்யாணம் நடக்காம இருந்தா, நான் பரலோகம் போயிருப்பேன்” என்று கூறினார்.
அதற்கு மேல் கனி, அமிர்தவள்ளியைப் பேச விடாமல் தன் கைகளால் வாயைப் பொத்தினாள்.
அப்போது திருச்செல்வம் கனியைப் பார்த்தார். “நீதாம்மா என் குலதெய்வம்” என்று கூறியபடி கையைத் தூக்க முயன்றார்.
“வேண்டாம் மாமா… ப்ளீஸ். ரெண்டு பேரும் என்னைய சங்கடப்படுத்தாதீங்க” என்று கூறிய கனி, அவரது கையை கீழே இறக்கிவிட்டாள்.
பின்னர் புதுமணத் தம்பதிகளுக்கு பாலும் பழமும் கொடுத்தனர். பயந்துகொண்டே கனி, வெற்றிக்கு கப்பை வாய் அருகில் எடுத்துச் செல்ல, அதனை உணர்ந்தவன்,
“வேண்டாம் கனி… நீ சாப்பிடு” என்று உணர்ச்சிகள் செத்துப்போன விரக்தியில் வெற்றி சொன்னான்.
சரியென்று கனி மட்டும் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
அப்போது அமிர்தவள்ளி, “அப்படி இல்ல வெற்றி… நீ கொஞ்சமாவது சாப்பிடணும்” என்று கூறினார்.
“அம்மா… ப்ளீஸ். என்னை ஃபோர்ஸ் பண்ணாதீங்க. எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியல”
அப்போது மணிமாறன், “வேண்டாம் அக்கா. கட்டாயப்படுத்த வேணாம். அவன் ரொம்ப டென்ஷனா இருக்கான். ரெண்டு நாள் அவனை ஃப்ரீயா விடுங்க. ரிலாக்ஸா இருக்கட்டும்” என்றார்.
அதன்பிறகு யாரும் வெற்றியை எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை. இந்தச் சூழ்நிலை மித்ரனுக்கும் கிருத்திகாவுக்கும் மனக்கஷ்டமாகவே இருந்தது.
கிருத்திகாவின் அப்பா யோகநாதனும் அம்மா மலர்விழியும் வீட்டை விட்டுக் கிளம்பத் தயாராகிக்கொண்டிருந்தனர். அவர்களின் ஒரே மகளைப் பிரிந்து செல்வது இருவருக்குமே மிகவும் மனக்கஷ்டமாக இருந்தது. கிருத்திகாவும் அழத்தொடங்கி இருந்தாள்.
அப்போது யோகநாதன், “சமந்தி… எனக்கு என் பொண்ணோட கல்யாணம் நடந்ததைவிட, வெற்றியோட கல்யாணம் நடந்ததுதான் மனசுக்கு நிறைவா இருந்துச்சு. ஒரு நல்ல குடும்பத்துல நான் என் பொண்ணை கொடுத்திருக்கேன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு.
சரி சமந்தி… நாங்க போயிட்டு வர்றோம். நாளைக்கு மறுவீட்டுக்கு எல்லாரும் கண்டிப்பா வரணும்” என்று ஆசையாகக் கூறினார்.
அதன்பிறகு கிருத்திகா தாய்தந்தை இருவரையும் கட்டியணைத்து நன்றாக அழுதிருந்தாள். பெற்றவர்களுக்குமே சற்று கலக்கமாகத்தான் இருந்தது.
இருவரும் மகளை விட்டு சென்றனர். கிருத்திகாவின் பெற்றோர் அவர்களது வீட்டிற்குக் கிளம்பிய பிறகு, வெற்றி சரணிடம்,
“சரண்… என்னை ரூமுக்கு கூட்டிட்டுப் போ” என்றான். வெற்றியின் மனநிலையே புரிந்த சரண் அவனை அறைக்கு அழைத்துச் சென்றான்.
“சரண், ஏன் எதுவும் பேசாம இருக்க? என்னைப் பார்த்தா, உனக்கும் பரிதாபமா இருக்கா?” கண்ணில் கட்டியிருந்ததை அவிழ்த்து வீசினான்.
வெற்றி இப்படிக் கேட்டதும், சரணுக்கு என்ன பதில் கூறுவது என்று தள்ளாடினான்.
“இல்ல அண்ணா. உங்களுக்கு அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நான் பெரியவன் இல்லண்ணா. நைராவை மறந்துருங்கண்ணா. இதுதான் எனக்கு சொல்ல முடியும். உங்களுக்குனு ஒரு வாழ்க்கை இன்னிக்கு கிடைச்சிருக்கு. அந்த வாழ்க்கை முக்கியம்னா நீங்கள் நினைச்சா…”
என்று சரண் கூறி முடிக்கவில்லை, வெற்றி மீதியைத் தொடர்ந்தான். “பாவம் கனி, அவளுக்கு என்னென்ன ஆசை இருந்துச்சோ தெரியல. மாறன் மாமா சொன்னதுக்காக என்னைய கல்யாணம் பண்ணிட்டா போல”
“எனக்கு நம்பிக்கை இருக்கு அண்ணா. நீங்க இதுக்கப்பறம் நல்லா இருப்பீங்க”
“சரி, நம்ம வேலைய பார்ப்போம் சரண்” சரண் அனைத்தையும் கவனிக்க, வெற்றியின் மனம் எதிலும் நிலைக்காமல் இருப்பதை சரண் உணர்ந்தான்.
“அண்ணா… நான் இதுக்கு மேல பார்த்துக்குறேன். நீங்க போய் தூங்கி ரெஸ்ட் எடுங்க”
“எனக்குத் தூக்கம் வரல சரண். நான் கொஞ்சம் இதைப் பார்த்துக்குறேன். என்று வெற்றி கூறியதும், சரண் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் அவனுடன் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தான்.
அமிர்தவள்ளி மறுபுறம், கௌரி கனியையும் கிருத்திகாவையும் ஒரே அறைக்குச் சென்று ஓய்வு எடுக்கச் சொன்னாள்.
மித்ரனும் தன்னுடைய அறைக்குச் சென்று ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தான்.
திருச்செல்வமும் மணிமாறனும் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். வீட்டில் அமிர்தவள்ளியும் கலைவாணியும் மட்டும் இருந்தனர்.
சமையலறையில், அமிர்தவள்ளியும் கலைவாணியும் சேர்ந்து இரவு உணவு வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அமிர்தவள்ளி நாசுக்காக, “கலை, இன்னைக்கு ராத்திரி என்ன பண்ணுறது?” என்று கேட்டார்.
சற்று யோசித்த கலைவாணியும் நாசுக்காக, “அக்கா… நம்ம கடமைய நாம செய்வோம். அதுக்கு மேல அவங்கவங்க விருப்பம். அவங்க மனசுக்கு என்ன தோணுதோ, அதன்படி இருக்கட்டும்” என்றார்.
அமிர்தவள்ளிக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. பின்னர் அமிர்தவள்ளி திருச்செல்வத்திற்கு தொலைபேசி செய்து,
“சாய்ந்திரம் பழங்கள், பூக்கள் எல்லாம் வாங்கிட்டு வாங்க. லேட் பண்ணாதீங்க” என்று திருச்செல்வத்திடம் கூறியிருந்தார்.
“சரிம்மா” என்று திருச்செல்வம் கூறினார்.
இரவு உணவை முடித்த பின்னர் திருச்செல்வமும் மணிமாறனும் மணிமாறன் வீட்டில் உறங்க, அமிர்தவள்ளியும் கலைவாணியும் மாத்திரம், பட்டும் படாமல், சமையலறையில் காய்ச்சிய பால் இருப்பதை கூறிவிட்டு, அவர்களும் உறங்கச் சென்றனர்.
கிருத்திகா எதுவும் அலட்டிக்கொள்ளாமல் ஒரு செம்பில் பாலை ஊற்றிவிட்டு நகர்ந்தாள்.
அதே போல கனியும் பாலை எடுத்துக்கொண்டு வெற்றி இருக்கும் மாடி அறைக்கு சென்றாள்.
அறைக்குள் கிருத்திகா மெதுவாக நடந்து வந்தாள். அவளைப் பார்த்ததும் மித்ரனின் முகத்தில் பல வருடங்களாகக் காத்திருந்த ஏக்கமும், இன்று நடந்த திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டதே என்ற நிம்மதியும் ஒன்றாகத் தெரிந்தது.
கையில் கொண்டு வந்திருந்த பால் செம்பை மேசையின் மீது வைத்துவிட்டு, அடுத்த நொடி மித்ரன் கிருத்திகாவை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
பத்து வருடக் காதல்.
இத்தனை வருடக் காத்திருப்புக்குப் பிறகு, இன்று திருமணம் நல்லபடியாக முடிந்துவிட்டதே என்ற நிம்மதியை அந்த அணைப்பில் இருவருமே உணர்ந்தார்கள்.
அந்த உணர்வை வார்த்தைகளால் சொல்ல முடியாமல், மித்ரன் அவளது நெற்றியில் முத்தமிட்டான். பின்னர் கண்கள், கன்னம், மூக்கு என முகம் முழுவதும் அன்புடன் முத்தமிட்டான்.
கிருத்திகாவும் அவனை அணைத்துக்கொண்டு, தன்னவன் முகம் முழுவதும் முத்தமிட்டாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகு மித்ரன் மேசையிலிருந்த பாலை எடுத்துக்கொண்டு கிருத்திகாவிடம் கொடுத்தான்.
அவள் கொஞ்சம் குடித்துவிட்டு அவனிடம் கொடுக்க, மித்ரனும் அதைப் பகிர்ந்து குடித்தான்.
“இன்னைக்கு நம்ம கல்யாணம் முடிஞ்சதே எனக்கு எவ்வளவு பெரிய விஷயமா இருக்கு தெரியுமா கிருத்தி?”
“ஆமா மித்து… இன்னைக்கு நம்ம கல்யாணம் நடக்கும்னு நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. கனியை எந்த வார்த்தையால பாராட்டணும்னே எனக்குத் தெரியல. இப்படியொரு சூழ்நிலையில, நான் வெற்றி அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்ன்னு அவளே வந்து சொன்னதை இன்னும் என்னால நம்பவே முடியல.
ஒரு பொண்ணால இவ்வளவு பெரிய முடிவை இப்படி ஒரு சூழ்நிலையில எடுக்க முடியுமாங்கிறதே எனக்கு கொஞ்சம் மலைப்பா இருந்துச்சு. கனி சின்னப் பிள்ளைதான்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்போ அவளைப் பார்க்கும்போது அவளுக்குள்ள இவ்வளவு பெரிய மனசு இருக்குன்னு புரியுது.
கடவுளே… உன் அண்ணா கனியோட சேர்ந்து நல்லபடியா வாழ்ந்துட்டார்னா, எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் மித்து”
கிருத்திகா சொன்னதை அமைதியாகக் கேட்ட மித்ரன்,
“தேங்க்யூ கிருத்திகா” என்று மெதுவாகக் கூறினான்.
“எவ்வளவு நேரம் நின்னுக்கிட்டு பேசுறது. உக்காந்து பேசலாம்” என்று கூறிய மித்ரன், இருவரும் கட்டிலில் அமர்ந்ததும் பேசத் தொடங்கினான்.
“என் அண்ணா ரொம்ப நல்லவன். இப்பக்கூட அந்த லாரி டிரைவர் மேல கேஸ் போடலாம்னு சொன்னதுக்கு வேண்டாம்னு சொல்லிட்டான். அவன் மாதிரி நல்ல மனசு உள்ளவங்களுக்குத்தான்டி வாழ்க்கையில சோதனைக்கு மேல சோதனை. நீ சொல்ற மாதிரி என் அண்ணா கனி அண்ணிக்கூட நல்லபடியா வாழணும். அவனுக்கு கண்ணுக்கு டோனர் கிடைக்கணும். கண் ஆபரேஷன் நல்லபடியா நடக்கணும். அவனுக்கு கண் பார்வை நல்லபடியா திரும்பணும். இது மட்டும் நடந்துட்டுனா எனக்கு பெரிய நிம்மதி. அவனோட லைஃப் செட்டில் ஆகிடும்”
“நீ அதெல்லாம் ஒன்றும் யோசிக்காத மித்து. கடவுள் இருக்காரு. கண்டிப்பா எல்லாம் நல்லதாவே நடக்கும். கனி வந்த நேரம் அண்ணாக்கு கண்டிப்பா கண் பார்வை கிடைக்கும்”
“நீ சொல்றது சரிதான். ஆனா இப்பக்கூட அவன் ரூம்ல என்ன பண்ணிக்கிட்டிருக்கான்னுதான் தோணுது எனக்கு” என்று மித்ரன் கூற, இதைத் தவறாகப் புரிந்துகொண்டாள் கிருத்திகா.
“ஏய் ச்சீ! மித்து… நீ இதெல்லாம் யோசிப்பியா? உங்க அண்ணனுக்கும் ஃபர்ஸ்ட் நைட் டா? நீ எப்பட்றா இதெல்லாம் யோசிக்க முடியுது உன்னால?” என்று கிருத்திகா வெட்கமில்லாமல் இதையெல்லாம் கேட்பியா என்று கேட்டாள்.
“ஹேய் லூசா? அதை நினைக்கலடி. உனக்கு என்ன சொல்ல வாறேன்னு புரியல. இரு, நான் சொல்லுறேன். அண்ணாக்கு இதுக்கு முதல் ஒரு மேரேஜ் நடந்துச்சுடி. அது வந்து அம்மாதான் பொண்ணு பார்த்து எல்லாம் கல்யாணம் பண்ணி வச்சாங்க. அப்போ அண்ணாக்கு இருபத்தஞ்சு வயசு. பொண்ணு நல்ல பொண்ணுதான்டி. ஆனா ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள போனவங்க என்ன நடந்துச்சுன்னா, அந்தப் பொண்ணு அழுதுட்டிருக்கா. ஏன் அழுறன்னு கேட்டிருக்கான். அப்போதான் ஒருத்தரை லவ் பண்றேன்னு சொல்லவும், இவன் கொண்டு சேர்த்து வச்சுட்டான்டி அவ லவ்வர்கூட. அது நினைச்சாலே பயமா இருக்குடி”
அகலவிரிந்த கண்களுடன் கிருத்திகா, “மித்து… என்ன சொல்லுற? இந்த மாதிரிலாம் நடந்துச்சா?”
“ஆமாடி. அதை ஏன்டி கேக்குற? அந்தப் பொண்ணு எல்லாத்தையும் தெளிவா சொல்லிருக்கு. கல்யாணத்துக்கு காரணம், வீட்டுல கஷ்டம்னால கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அப்போ அண்ணாவும் அந்தப் பொண்ணுக்கிட்ட கேட்டிருக்கான். ஏன் உன்னோட லவர் வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கல? நீ வீட்டுல சொல்லிருக்கலாமே நீ லவ் பண்றேன்னு. அவனுக்கு வசதி இல்லாததனால அவன் பயப்பட்றான்னு சொல்லவும், உடனே அந்த நைட்டே கூட்டிட்டுப் போய் மொதராத்திரி படத்த மிஞ்சுட்டாண்டீ. கூட்டிட்டுப் போய் மூணு லட்சம் காசையும் கொடுத்து, பொண்ணையும் கொடுத்துட்டு வந்துட்டான். அதுக்கப்புறம் மூணு மாசத்துல மியூச்சுவல் டைவர்ஸ் குடுத்துட்டான்”
“சரி… அப்புறம் வீட்டுல அம்மாலாம் எப்படி எடுத்துக்கிட்டாங்க? அப்போ அண்ணா ஃபீல் பண்ணலையா?” என்று கிருத்திகா கேட்டாள்.
“நாங்களாம் வீட்டுல அவனைத் திட்ட ஆரம்பிச்சிட்டோம். ஒரே ஒரு வார்த்தை சொன்னான். மனசுல ஒருத்தனை நினைச்சுட்டு என் கூட வாழ்றது, அதுக்குப் பேர் வாழ்க்கையே கிடையாது, சொன்னான். அப்பறம் அமெரிக்கா போனான். நாங்கலாம் நம்புனோம்டீ, நைரா வந்து அண்ணா கூட வாழ்வா, நல்லபடியா இருப்பான்னு. அண்ணாக்கு கண் பார்வை இல்லாததுன்னு அவன் எப்படி செய்வான்னு நாங்க நினைச்சுப் பார்க்கல. அது உண்மையா நினைக்கும்போது எனக்கே ஆதங்கமா இருக்கு. ஆனா எங்கேயாவது நான் நைராவை கண்டேன்னா, உண்மையா எந்த இடம்னாலும் சரி, கண்டிப்பா என் கையால கன்னம் பழுக்கும் அவளுக்கு”
“சரி விடு மித்து. இப்போ அண்ணாக்கு நல்ல லைஃப் கிடைச்சிருக்கு இல்ல? எல்லாம் சரியாகும்” என்று கூறிய கிருத்திகா, மித்ரனின் தோளில் சாய்ந்துகொண்டாள்.
கனி தயக்கத்துடன் மெதுவாக அறைக்குள் நடந்து வந்தாள். அவள் நடந்து வந்ததில் கொலுசின் ஒலியும் மெதுவாகவே இசைந்தது. விசாலமான அறைதான். அதுவும் அவளுக்கு புதிய இடமொன்றும் இல்லை. கட்டில் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்ததுமே கனியின் இதயத்துடிப்பு அதிகரித்தது. ஏசி அறையாக இருந்தும், அவளுக்கு வியர்த்து கொட்ட ஆரம்பித்தது.
அந்தச் சத்தத்தை உன்னிப்பாகக் கேட்ட வெற்றி, “கனி…” என்று அழைத்தான்.
“ம்…” என்றாள். வெற்றி என்ன மனநிலையில் இருக்கிறான் என்பதுதான் கனியின் முழு சிந்தனையானது.
சிறிது நேரம் அமைதியாக இருந்த வெற்றி, “உங்க அப்பா உன்னை ஃபோர்ஸ் பண்ணி இந்தக் கல்யாணம் பண்ணி வச்சிட்டாருன்னு ஃபீல் பண்றியா கனி? கண்ணு தெரியாதவன் கூட வாழப்போறோமேன்னு உனக்கு வருத்தமா இருக்கா?” என்று கேட்டான். மூன்று வருடம் காதலித்தவளே ஏமாற்றிய நிலையில், கனி தன்னுடன் நெடு நாட்கள் இருப்பாளென்ற நம்பிக்கை எல்லாம் அவனிடம் இருக்கவில்லை.
“அப்பா என்னை ஃபோர்ஸ் பண்ணல அண்ணா. நான்தான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அப்பாகிட்ட கேட்டேன்” என்று கனி கூறியதும், வெற்றி அதிர்ந்தான். இப்படி ஒன்று நிகழ்ந்ததை அவன் அறிந்திருக்கவில்லை.
“சாரி அத்… அத்…” என்று கனி தடுமாறியபடி சொல்ல, அதற்கு மேல் அவளால் வார்த்தைகள் எதுவும் வரவில்லை. காற்றுதான் வந்தது. அவள் பேச வருவதையும், தயக்கத்தையும் புரிந்தவன்,
“என்ன கனி, உனக்கு ஏசி ரூம்ல வேர்க்குதா?”
“சாரி அத்தான்!” என்று கனி கூற, வெற்றிக்கு புரியாமல்,
“எதுக்கு சாரி? எதுக்கு அத்தான்?” என்று கேட்டான்.
“எப்பவும் போல அண்ணானு கூப்பிட்டேன் அதுக்கு சாரி. வெற்றி.. ஆத்ரேயன் எனக்கு தாலி கட்டினதுக்கு அப்பறம்.. அத்தான்னு கூப்பிடனும் தோணுது” இதை சொல்லி முடிப்பதற்குள் மூச்சு முட்டி போதும் போதும் என்றானது அவளுக்கு.
சின்னப் பெண்ணிடம் நான் எதும் எதிர்ப்பார்க்காத போது அவள் கொடுக்கும் அன்பும் அக்கறையும் தன்னால் கொடுக்க முடியாதெனவே தோன்றியது. மீண்டும் ஒரு ஏமாற்றத்தை அவன் இதயம் இதற்கு மேல் எதையும் தாங்காது என்றிருந்தது.
“நீ அத்தானு கூப்பிடும்போது நைரா என்னை வெட்டட்டோன்னு கூப்பிடுவா அதுதான் ஞாபகம் வருது. மலையாளத்தில் அதான் அர்த்தம்” பழைய நினைவு மீண்டு செல்ல,
நைரா என்று கூறும்பொழுது கனிக்கு கோபம் வந்ததுதான் உண்மை. எதுவும் கூறாமல் பெருமூச்சை விட்டாள்.
“மாறன் மாமாகிட்ட என்ன கல்யாணம் பண்ணனும் ஏன் கேட்ட, அவ விட்டுப் போனதும், என்னை பார்த்தா பரிதாபமா இருக்கா?”
“அண்..அத்தான், நான் உண்மைய சொல்லவா, பொய் சொல்லவா?” அவள் பக்குவப்பட்டிருந்தாள்.
“உண்மை மட்டும் சொல்லு” வெற்றியின் காதுகள் கூர்மையாகின.
“அந்த நேரம் உண்மையாவே உங்களை பார்க்கும்போது பரிதாபமாதான் இருந்துச்சு. அதே நேரம் பெரியம்மாவும் தலசுத்தி விழுந்துட்டாங்க. எனக்கு ரொம்ப பயமாகிருச்சு, அவங்களுக்கு எதுவும் ஆகிடுமானு. அப்போதான் டக்குனு நம்ம ஏன் வெற்றி அண்ணாவ நாம கல்யாணம் பண்ணிக்கிலாம்னு நானே முடிவு எடுத்தேன்.”
“இதுக்குப் பேர் எமோஷனல் டிசிஷன் கனி. இது லவ்வும் கிடையாது, அஃபெக்ஷனும் கிடையாது” கனி எதுவுமே கூறவில்லை. அமைதியாக இருந்தாள்.
அதன் பிறகு, “கனி நீ யாரையாவது லவ் பண்ணுறியா?” என்று வெற்றி கேட்டான்.
“ஏன் அத்தான் சேர்ந்து வைக்கப் போறீங்களா?” வெற்றியை குத்திக் காட்டியது போல இருந்தாலும், கனிக்கு கோபம்தான் வந்தது. அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்து, அவள் தொடர்ந்தாள்.
“நான் யாரையும் லவ் பண்ணி இருந்தா? உங்கள கல்யாணம் பண்ணிருக்க மாட்டேன் அத்தான். என்னை ஒரு பையன் லவ் பண்ணான், காலேஜ் சீனியர், எனக்கு பிடிக்கலன்னு வெளிப்படையா சொல்லிட்டேன். இதுக்கு அப்புறம் கண்டிப்பா லவ் பண்ணுவேன். உங்கள மட்டும் அத்தான். வேற எதும் கேட்க இருக்கா” அவன் பதில் எதுவுமே கூறவில்லை.
“சரி அத்தான். உங்க கண்ணுக்கு டிராப்ஸ் போட்டு, நான் தூங்கப் போறேன். காலைல சீக்கிரம் எழணும்”
“ஆனா ஒன்னு, பொண்ணுங்க நீங்க எடுக்கிறது மட்டும்தான் எப்பவுமே முடிவாகுதில்ல” என்று வெற்றி கூறியது கனியை நெருடியது.
“தெரியல அத்தான். ஆனா உங்கள வாழ்க்கைல நடந்தது வச்சி சொல்றிங்கன்னு மட்டும் புரியுது.”
மருந்தை எடுத்தவள் வெற்றியின் கண்களில் ஊற்றினாள். கட்டிலில் இருக்கும் பூக்களையெல்லாம் அப்புறப்படுத்தியவள், “நீங்க இப்போ படுத்துக்கோங்க அத்தான்” என்றாள்.
“நீ எங்க தூங்குற?”
“கீழ”
“நீ கீழே தூங்குறதாலன்னா எனக்கு உன் மேல லவ் வராது கனி, கட்டிலயே படுத்துக்கோ” அவள் எதுவும் கூறாமல் கீழே படுத்தாள். அவன் கூறியதற்கு பதில் இல்லாமல் போக, அவன் அதற்கு மேல் கனியைத் தொந்தரவு செய்யவில்லை.
‘சின்ன வயசுல என்னை பார்த்தாலே நடுங்குவா, மேக்ஸ் சொல்லிக்குடுக்கும் போது உட்காந்து அழுவா, இப்போ என்னன்னா எனக்கு சரிசமமா பதிலுக்கு பதில் பேசிட்டு இருக்கா’ என்று அவனை அறியாமலேயே சத்தமாக உச்சுக்கொட்டினான்.
கனி சத்தம் கேட்டவுடன் டக்கென்று எழுந்து அமர்ந்தாள். “அத்தான் எங்கேயும் வலிக்குதா?” என்று கேட்டாள்.
“இல்ல கனி, பல்லி சத்தம் போட்டிருக்கும்” சின்னப் பெண்ணிடம் மானம் போவதை எண்ணி அவன் சமாளித்தான்.
“ஹோ… பல்லி மாதிரி நீங்கதானா சத்தம் போட்டீங்களோனு எனக்கு தோணுச்சு அத்தான்”
கனி உள்ளுக்குள் சிரித்தவாறு மீண்டும் படுத்துக்கொண்டாள். வெற்றி தூக்கமே வரவில்லை என்றாலும் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான்.
******
உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள். நன்றி அன்பு நெஞ்சகளே ❤️❤️❤️






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!