arrow_back
கனியாத்ரேயம் கனி 8
கனியாத்ரேயம் chevron_right பகுதி 8 / 13

கனி 8

visibility 12
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 8 

 

ஓரிரு நாட்களுக்கு பிறகு,

 

சந்திரன் வீட்டுக்குச் செல்லும் வேளை, எப்போதும் போல அதிகாலையிலேயே எழுந்த கனி, குளித்து முடித்து அழகாகப் புடவை அணிந்து, உச்சியில் குங்குமம் வைத்துக்கொண்டு, வெற்றி அணிவித்த மாங்கல்யத்தை கையில் எடுத்துப் பார்த்தவள், அதற்கு ஒரு முத்தமும் கொடுத்துவிட்டு, புடவையைச் சரி செய்தபடி வாசலுக்குச் சென்றாள்.

 

கோலம் போடத் தொடங்கினாள். அதே நேரத்தில் சூரியன் உதிப்பதற்கு முன்பே வழக்கம்போல சூரிய நமஸ்காரத்தையும் செய்துவிட்டாள்.

 

அதன்பிறகுதான் கிழக்கே சூரியன் மெல்ல மெல்ல உதிக்கத் தொடங்க, பொன்னிறக் கதிர்கள் வீட்டைச் சுற்றிலும் பரவின. பனித்துளிகள் படர்ந்திருந்த புல்வெளியும், குளிர்ந்த காற்றில் அசைந்தாடிய மரங்களும் அந்தக் காலைப் பொழுதுக்கு இன்னும் அழகு சேர்த்தன.

 

கோலம் போட்டு முடித்த கனி, பூஜை அறைக்குச் சென்று விளக்கேற்றி, சாமியைக் கும்பிட்டுவிட்டு நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டாள்.

 

அதன்பிறகு சமையலறைக்குச் சென்று அனைவருக்கும் சேர்த்து தேனீர் கலந்து வைத்தாள். அதை எடுத்துக்கொண்டு அமிர்தவள்ளியி கொடுத்தாள்.

 

கனியைப் பார்த்த அமிர்தவள்ளியின் மனதுக்குள் ஒரு விதமான சந்தோஷம் பொங்கியது. அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் வேலைகளைச் செய்து, பூஜை முடித்து, அனைவருக்கும் தேனீர் கொடுக்கும் கனியைப் பார்த்தபோது அவருடைய முகத்தில் பெருமிதம் தெரிந்தது.

 

அதே நேரத்தில் கிருத்திகாவும் எழுந்து வந்து தன் வேலைகளைச் செய்யத் தொடங்கினாள். இரண்டு மருமகள்களும் அதிகாலையிலேயே எழுந்து வீட்டைக் கவனித்துக்கொள்வதைப் பார்த்த அமிர்தவள்ளிக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது.

 

தேனீரை அனைவருக்கும் கொடுத்துவிட்டு, கனி மாடிக்குச் சென்று வெற்றியைப் பார்த்தாள். அவன் இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் கீழே வந்தாள்.

 

கீழே வந்த கனி, கலைவாணி சமையலில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தாள். அவளுக்குத் தேர்வு காலம் நெருங்கியதால், எப்படியாவது படித்தாக வேண்டும் என்ற எண்ணத்தில் புத்தகத்தில் மூழ்கியிருந்தாள்.

 

“கனி, வெற்றி எழுந்ததும் டி குடுக்கப் பாரு” என்று கலைவாணி கூற, தன் மார்புக்குள் புதைந்திருந்த தாலியைப் பார்த்தவள்,

 

“சரிம்மா” என்றபடி, ஏழு மணி அளவில் அறைக்குள் சென்றவள், வெற்றி பால்கனியில் சரணுடன் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பதைப் பார்த்தாள்.

 

மீண்டும் கீழே சென்று இரண்டு தேனீர் கோப்பைகளை எடுத்துக்கொண்டு வந்து இருவருக்கும் கொடுத்தாள்.

 

“அண்ணா, உங்க கை பரவாயில்லையா?” என்று சரணைப் பார்த்துக் கேட்டாள்.

 

“ஹா… பரவாயில்ல கனிமா”

 

சரண், “கனிமா” என்று அழைத்ததும், 

‘கனிமா..

ஆச பட வச்சான் ஆள விழ வச்சானே..

ஹே மாப்ள..’ பாடல் நினைவில் வெற்றி, உதட்டில் பூத்த சிரிப்பை தேனீருடன் சேர்த்து விழுங்கியிருந்தான்.

 

கண்ணுக்கான மருந்தை எடுத்துக்கொண்டு வந்த கனி, வெற்றியின் பின்னால் நின்றாள்.

 

“அத்தான், கொஞ்சம் நிமிருங்க” என்றதும், அவன் தலை அவளது வயிற்றில் பட்டது. திடுக்கிட்டு நிமிர்ந்தவன்,

 

“நான் உள்ளே… உள்ளே வாறேன்”

 

“இல்ல, பரவாயில்லை. நீங்க இப்படியே இருங்க” என்று கூறி, அவள் வெற்றியைச் சிரமப்படுத்த விரும்பவில்லை.

 

மருந்து ஊற்றிய பிறகு அண்ணாந்து சில நிமிடங்கள் அப்படியே இருந்தான்.

 

“அத்தான், நான் காலேஜுக்குப் போயிட்டு வாறேன்”

 

“அண்ணா, நீங்க அவரைப் பத்திரமா பார்த்துக்கோங்க. நீங்களும் கவனமா இருங்க அண்ணா” என்று சரணிடம் சொன்னாள்.

 

“சரி கனிமா, கவனமாக போயிட்டு வாங்க” என்ற சரண் சொல்ல, ஒரு நிமிடம் வெற்றியைப் பார்த்துவிட்டுதான் அவள் எதுவும் கூறாமல் விறுவிறுவென கீழே வந்துவிட்டாள்.

 

கீழே வந்த கனி, அமிர்தவள்ளியம்மாவைப் பார்த்து, “அத்தையம்மா, நான் காலேஜுக்குப் போயிட்டு வாறேன். அத்தானைப் பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு வாசலுக்கு வந்தாள்.

 

“சரிம்மா, நீ கவனமா போயிட்டு வா” என்று அமிர்தவள்ளியம்மா கூறினார்.

 

கனி, “அத்தான்” என்று அழைத்ததும், ‘கனி என் பையனை மாத்திருவா’ என்று திடமாக நம்பினார் அமிர்தவள்ளி.

 

மறுவீட்டுக்கு மித்ரனையும் கிருத்திகாவையும் கௌரியையும் மட்டும் அனுப்பி வைத்தார் அமிர்தவள்ளி. 

 

வீட்டின் வாசலில் மணிமாறன் பைக்குடன் தயாராக நின்றுகொண்டிருந்தார்.

 

“வா கனி, நேரமாச்சு. காலேஜ்ல விட்டுட்டு வாறேன்”

 

“சரிப்பா” என்றபடி கனி பைக்கில் ஏறிக்கொண்டாள்.

 

மணிமாறன் கனியை அழைத்துக்கொண்டு கல்லூரிக்குச் சென்று, அவளை வாசலில் இறக்கிவிட்டார்.

 

கல்லூரிக்குள் சென்ற கனி, வழக்கம்போல தனது வகுப்பறைக்குச் சென்றாள்.

 

கனியாவைப் பார்த்ததும் வர்ஷினியும் சுவேதாவும் அப்படியே அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

அவளது உச்சியில் இருந்த குங்குமமும், கழுத்தில் புதிதாகத் தெரிந்த மஞ்சள் கயிறும் அவர்களது கண்களில் முதலில் பட்டிருந்தது.

 

அவர்கள் தன்னைப் பார்த்து அதிர்ச்சியடைவதற்கான காரணம் கனிக்கு நன்றாகவே புரிந்தது.

 

“ஏய்… ஃப்ரீ பீரியட்ல சொல்றேன்டி. அதுவரைக்கும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க. ப்ளீஸ்”

 

“ஓகேடீ…”

 

“என்னடி, எங்களுக்கு கூட ஒரு வார்த்தை சொல்லாம கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசையா உனக்கு?”

 

“அதான் சொல்றேன்டி. ஃப்ரீ பீரியட்ல எல்லாத்தையும் சொல்றேன்டி. ப்ளீஸ்… டென்ஷன் ஆகாதீங்க”

 

பேராசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்க, வர்ஷினிக்கும் சுவேதாவுக்கும், கனிக்கு எப்படி திருமணம் நடந்தது என்றுதான் மனமுழுதும் இருந்தது.

 

முதலாம் பாடவேளை முடிய, பேராசிரியர் வேறு வகுப்பிற்குச் செல்ல, அடுத்த பாடவேளைக்கான பேராசிரியர் வராமல் இருக்க, கனியா நேற்று நடந்தவற்றை அரை மணி நேரத்தில் விளக்கமாகக் கூறி முடித்தாள்.

 

அதைக் கேட்ட வர்ஷினியும் சுவேதாவும் அதிர்ச்சியுடன், “அடி, உண்மையாவே நம்ப முடியலடீ?” என்று சுவேதா கூறினாள்.

 

“ரொம்ப சந்தோஷமா இருந்தேன். வெற்றி அண்ணாக்கு கல்யாணம் நடக்குதுன்னு. நான் இப்படி ஒரு முடிவு எடுப்பேன்னு நான் எதிர்பார்க்கல”

 

“கனி, நேத்து நைட்…” என்று வர்ஷினி கேட்க முயல்வதையே கனி முடித்துவிட்டாள்.

 

“அந்த அளவுக்கெல்லாம் யோசிக்காதீங்கடி. ஒன்னும் இல்ல” என்று சொல்லி முடித்தாள்.

 

“கனி, முகமே சரி இல்ல உனக்கு” என்று வர்ஷினி கூறினாள்.

 

“அத்தானுக்கு என்னைப் புடிக்கல டீ” என்று இரவு நடந்ததை எல்லாம் கூறினாள்.

 

“அத்தான், இன்னும் நைராவ நினைச்சிட்டு இருக்காரு. அதை நினைக்கும்போதுதான் டீ எனக்கு ஆத்திரமா வருது. விட்டுப் போனவளை நினைச்சு என்னடி பயன். ஃபீலிங்ஸ் இருக்கிறது புரியுது. இருந்தாலும் என்னை கொஞ்சம் நினைச்சிப் பார்க்கலாமே!”

 

“அப்போ நீ வெற்றி அண்ணாவ லவ் பண்ணுற?” என்று சுவேதா கேட்டதும்,

 

“ஆமா,மூணு நாளா” என்று கலங்கிய கண்களில் கூறினாள் கனி.

 

“கனி, அழுகுறத விட்டுட்டு வெற்றியாண்ணா கூட எப்படி வாழலாம்னு பாரு. அவர் அந்தப் பொண்ண நினைச்சிட்டு இருக்கார்னு சொல்லி, நீயும் விட்டுப்பிடிக்கலாம்னு நினைக்காத. நீ உன்னோட நினைப்பை அவருக்குள்ள வர வைக்கணும்”

 

“எப்படி?” என்று தீவிரமாக கேட்டாள்.

 

வர்ஷினியும் சுவேதாவும் சேர்ந்து நல்ல திட்டங்களை கூற, “சீ போங்கடி, நான் இதெல்லாம் பண்ணமாட்டேன்” என்றாள் கனி.

 

அதே நேரத்தில், வீட்டில் சரண் வெற்றியைப் பார்த்து,

 

“அண்ணா… கனி தங்கச்சி காலேஜுக்குப் போயிட்டு வாறேன்னு சொல்லிட்டு போறாங்க. நீங்க ஏன் அவகிட்ட எதுவுமே பேசாம இருக்கீங்க?” என்று கேட்டான்.

 

சிறிது நேரம் அமைதியாக இருந்த வெற்றி,

 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல சரண். அவகிட்ட நான் எந்தவிதத்துலயும் அட்வான்டேஜ் எடுத்துக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். அவ இன்னும் படிக்கிற பொண்ணு. என்னைய பார்த்து நானே பாவப்பட்டுக்கிறேன். இப்போதான் ஒரு குழியில் விழுந்து எழும்பிருக்கேன். திரும்பியும் இன்னொரு குழிக்குள்ளே விழுவேனோன்னு பயமா இருக்கு”

 

வெற்றியின் பேச்சைக் கேட்ட சரண் சிரிப்பை அடக்கிக்கொண்டு,

 

“அண்ணா, வயித்துல குழந்தைய வச்சிட்டே ஒலிம்பிக்ல ஓடுறாங்க. நீங்க என்னன்னா படிப்பு படிப்புன்ட்டு இருக்கீங்கண்ணா. அதெல்லாம் பார்த்துக்கலாம்ண்ணா. அதான் பெரியவங்க சொல்ற மாதிரி காலா காலத்துல ஒரு குழந்தை பிறந்துட்டா எல்லாம் சரியா போயிரும்ண்ணா” என்று துணுக்காகச் சொன்னான்.

 

அதைக் கேட்ட வெற்றி ஒரு நொடி அமைதியாக இருந்து, லேசாகச் சிரித்தபடி,

 

“பார்த்தியா? நீயெல்லாம் அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நான் இருக்கேன் இப்போ” என்றான்.

 

பிறகு வெற்றி, “சரண், உங்கிட்ட நான் ஒன்னு கேப்பேன். தப்பா நினைக்காதே. கனி காலேஜுக்கு என்ன ட்ரெஸ் பண்ணிட்டு போனா, எப்படி போனா?”

 

“புடவை கட்டி, உச்சில குங்குமம் வச்சு, கல்யாணமான பொண்ணு மாதிரிதான் போனாங்க அண்ணா” சரண் அப்படிக் கூறவும் வெற்றிக்கு என்னவோ போல் இருந்தது.

 

“ஓகே சரண், ஷாப்பிங் போகலாம். பட் நீதான் செலக்ட் பண்ணணும்”

 

“சரி அண்ணா, என்ன வாங்கப்போறோம்?”

 

“வந்து பாரு”

 

சரணின் இடது கை விரலில் மட்டும்தான் கட்டு போட்டிருந்ததால், அவனுடைய கை முழுவதுமாக பாதிக்கப்படவில்லை. அதனால் சரண்தான் வண்டியை செலுத்தினான்.

 

இருவரும் கடைக்குச் சென்றனர். வெற்றி எதற்காகச் சுடிதார் வாங்குகிறான் என்று சரணுக்குப் புரியவில்லை.

 

கனிக்கு பத்து சுடிதார்களை வாங்க வேண்டும் என்று வெற்றி முடிவு செய்திருந்தான். அவள் புடவை கட்டிக்கொண்டு கல்லூரிக்குச் செல்வதை நினைத்துப் பார்த்ததுமே, அவளுக்காக சுடிதார் வாங்க வேண்டும் என்று அவன் மனம் சொல்லியது.

 

வெற்றியால் நேரடியாகத் துணிகளைத் தேர்வு செய்ய முடியாததால், சரண்தான் ஒவ்வொரு சுடிதாராகப் பார்த்துத் தேர்வு செய்தான்.

 

அதன்பிறகு வெற்றிக்கு இருந்த டாக்டர் அப்பாயின்மென்ட்டுக்காக கிளினிக்கிற்குச் செல்ல இருவரும் கிளம்பினர்.

 

அப்போது மணிமாறனிடமிருந்து வெற்றிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

 

“மாப்பிள்ளை, நீ டாக்டரைப் பார்க்கப் போகும்போது கனியை காலேஜ்ல இருந்து அழைச்சிட்டு போயிட்டு, வீட்டுக்கு வரும்போது கூட்டிட்டு வந்துடு”

 

வேறு வழியில்லாமல், “சரி மாமா” என்று சொல்லி வெற்றி தொலைபேசியை வைத்தான்.

 

“சரண், வண்டிய காலேஜுக்கு விடு” என்று வெற்றி கூற, சரணின் மனதிற்குள்,

 

‘எத்தனை நாளைக்கு இப்படி இருக்கீங்கன்னு பார்க்குறேன்’ என்று நினைத்துக்கொண்டான்.

 

சிறிது நேரத்தில் கார் கல்லூரியை வந்தடைந்தது.

 

கல்லூரி வாசலில் அத்தானுடைய கார் நிற்பதைப் பார்த்த கனி, ‘அத்தானோட கார் ஏன் இங்கே இருக்கு?’ என்ற சந்தேகத்துடன் அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள்.

 

அடுத்த நொடி காரின் கதவு திறக்கப்பட்டு, வெற்றி வெளியே வந்து நின்றான்.

 

அவனைப் பார்த்ததும் கனியின் முகம் அப்படியே மலர்ந்தது. சந்தோஷத்தில்,

 

“அடி அத்தானு… என்னைக் கூட்டிட்டு போக வந்திருக்காரு!” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

 

அவளது தோழிகள் இருவரும், “சரி சரி… நீ ஜாலியா போ. ஜாலியா போயிட்டு வா” என்று கிண்டலாகச் சிரித்தனர்.

 

கனி அவர்களைப் பார்த்து சிரித்துவிட்டு, வெற்றியின் அருகில் சென்று,

 

“அத்தா… நீங்க என்னைக் கூட்டிட்டு போக வந்தீங்களா?” என்று கேட்டாள்.

 

அந்த நேரத்தில் செந்தூரன் அவர்களைக் கடந்து சென்றான்.

 

கனியின் நெற்றி குங்குமத்தையும், கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றையும், வெற்றியுடன் அவள் நிற்பதையும் பார்த்த செந்தூரனுக்கு, கனிக்கு திருமணம் நடந்துவிட்டது என்பது புரிந்தது. அவன் எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.

 

கார் முழுவதும் கனி மட்டும் வெற்றியிடம் தோழிகள் கிண்டல் பேசியதை சந்தோஷமாகக் கூறிக்கொண்டே வந்தாள். வெற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

 

சிறிது நேரத்திற்குப் பிறகு சரணிடம் கனி,

 

“சரண் அண்ணா… நம்ம போற வழி வேற மாதிரி இருக்கு. நம்ம எங்கே போறோம்?” என்று கேட்டாள்.

 

“வெற்றி அண்ணாக்கு இன்னிக்கு டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கு. அதனால அங்கே போறோம்”

 

“ஓ… சரி சரி” என்று கனி அமைதியாகிவிட்டாள்.

 

கிளினிக்கிற்குச் சென்றதும் மருத்துவர் வெற்றியின் கண்களைப் பரிசோதித்தார்.

 

சில நிமிடங்கள் பரிசோதித்துவிட்டு,

 

“வெற்றி, கண்களில் நல்ல இம்ப்ரூவ்மெண்ட் இருக்கு. கண்ணில் இருந்த அந்த வெள்ளைப்படலும்கூட இப்போ கொஞ்சம் பெட்டரா இருக்கு. இப்படியே மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்திக்கிட்டு வாங்க” என்றார்.

 

அதன்பிறகு வெற்றியின் வயிற்றில் காயம் பட்ட இடத்தையும் மருத்துவர் பரிசோதித்தார்.

 

“இந்த இடத்துல சின்னதா இன்ஃபெக்ஷன் ஆகியிருக்கு. ரெண்டு மூணு இடத்துல கொப்பளம் மாதிரி வந்திருக்கு. இதுக்கு இந்தக் க்ரீமை தினமும் தடவிக்கோங்க. சீக்கிரம் சரியாகிடும்” என்று கூறி மருந்தை எழுதிக் கொடுத்தார்.

 

“டாக்டர், இன்னும் ஒரு மாசத்துல நான் அமெரிக்கா போகணும். நான் அங்கே போகலாமா?” என்று வெற்றி மருத்துவரிடம் கேட்டான்.

 

“தாராளமா போகலாம் வெற்றி. ஆனா அங்கே வேலை பார்க்கும்போது ரொம்ப கவனமா இருக்கணும். குறிப்பா உங்க கண்களை ரொம்ப கவனமா பார்த்துக்கணும். உதவிக்கு யாரையாவது வச்சிக்கோங்க”

 

“கண்டிப்பா டாக்டர்”

 

கனி அருகிலேயே இருந்ததால், வெற்றி அமெரிக்கா போகப் போகிறான் என்றதும் அவளுக்கு ஒருவிதமான கவலை ஏற்பட்டது. கல்யாணம் நடந்தவுடனேயே அவன் அமெரிக்கா போகிறானே என்ற எண்ணமே அவளுக்கு மனதை நெருடியது.

 

ஆனால் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல், மருத்துவர் சொல்வதையெல்லாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

 

மருத்துவரைப் பார்த்துவிட்டு அனைவரும் வீட்டிற்கு வந்தனர்.

 

அன்று இரவு சாப்பிடும்போது, சாப்பாட்டுத் தட்டில் வெற்றியின் விரல் துழாவிக்கொண்டிருக்க, அவன் சாப்பிடாமல் இருப்பதைப் பார்த்த கனிக்கு மிகவும் கவலையாக இருந்தது.

 

“அத்தான்… சாப்பிடுங்க” என்று கூறியபடி, கனி அவனுக்கு ஊட்டிவிட்டாள். கனி ஊட்டிவிட, வெற்றியும் அமைதியாக சாப்பிட்டான்.

 

அமிர்தவள்ளியும் கலைவாணியும் தூரத்திலிருந்து பார்த்து மகிழ்ச்சியடைந்தனர். கௌரி இடையில் வந்தவள், அவளுக்குத் தேவையான உணவை எடுத்துக்கொண்டு அவளது அறைக்குச் சென்றிருந்தாள்.

 

காரிலிருந்து சுடிதார் பைகளை சரணை விட்டு எடுக்கச் சொன்ன வெற்றி, சரணிடம்,

 

“நீயே வாங்கிக்கொடுத்த மாதிரி குடுத்திறு” என்றான்.

 

சரண் வெற்றியிடம், “சரி அண்ணா” என்று சொல்லிவிட்டு, சுடிதார் பைகளை எடுத்துக்கொண்டு கனியிடம் சென்றான்.

 

“கனிமா, இதெல்லாம் உங்க ஆத்துக்காரர்தான் வாங்கிக் கொடுத்தாரு”

 

என்று சரண் கூறியதும், கனி திடீரெனத் திரும்பிப் பார்த்தாள். அங்கே வெற்றி நின்றுகொண்டிருந்தான்.

 

அவனைப் பார்த்ததும் கனி ஒரு நொடி அப்படியே நின்றுவிட்டாள்.

 

“அத்தானு…”

 

வெற்றி எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுகொண்டிருந்தான்.

 

“எனக்குக் கண்ணுதான் தெரியாது. ஆனால் காது நல்லாவே கேக்கும், சரண்” என்றதும் சரண் வெற்றியைப் பார்த்தான்.

 

“ஐயோ… அண்ணா!” என்று சொல்லியபடியே அப்படியே நின்றுவிட்டான்.

 

பைகளில் உள்ள சுடிதார்களை விரித்துப் பார்த்தவள்,

 

“எல்லாம் ரொம்ப அழகா இருக்கு அத்தான். நன்றி அத்தான்” என்று சொல்லிவிட்டு, சுடிதார்களை அலமாரியில் அடுக்கச் சென்றாள்.

 

“சரண்ண்ண்” என்று அடித்தொண்டையிலிருந்து வெற்றி கூப்பிட்டான்.

 

“அண்ணே! நான் உங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிச்சுக் கொடுத்திருக்கேன்” என்ற சரணின் குரல் பம்மியது.

 

“இந்த மாசம் சேலரில ட்வெண்டி பர்சண்ட் கட்” என்று சொல்லிவிட்டு வெற்றி தன் அறைக்குச் சென்றான்.

 

உடைகளை அலமாரியில் அடுக்கி வைத்த கனி, பின்னர் கட்டிலில் இருந்த போர்வையைச் சரி செய்துகொண்டிருந்தாள்.

 

அதே நேரத்தில் வெற்றியும் அறையின் சுவரைப் பிடித்தபடி மெதுவாகக் கட்டில் அருகே வந்து கொண்டிருந்தான். கனி அங்கே இருப்பதை அவன் அறிந்திருக்கவில்லை. கட்டிலில் அமர்வதற்காக வெற்றி முழங்காலை மடக்கியபோது, அவனது கால் கனியின் மேல் பட, கனி குப்புற விழ, வெற்றியும் அவள் மேலே நேராக விழுந்தான்.

 

கனி, “அம்மா…!” என்று கத்தினாள்.

என்ன நடந்தது என்று புரியாமல் ஒரு நொடி அதிர்ச்சியடைந்த வெற்றி, உடனே தன்னைச் சுதாரித்துக்கொண்டு எழுந்து நிற்க முயன்றான். அப்போது கனி அவசரமாகத் திரும்பி எழ முயன்றாள்.

 

அவள் காலைத் திருப்பியபோது, ஏற்கனவே சமநிலையில்லாமல் நின்றுகொண்டிருந்த வெற்றி, இந்த முறை கனி பக்கமாகத் திரும்பியிருந்ததால், அவளுக்கு நேராக மேலே விழுந்தான்.

 

கனியின் சத்தம் கேட்டு பக்கத்து அறையிலிருந்து சரண் எட்டிப் பார்க்க, பார்த்த வேகத்தில் அவனது அறைக்குச் சென்று கதவைச் சாத்தினான்.

 

இருவரின் நெற்றிகளும் முட்டிக்கொள்ள, கனியின் இதழ்மேல் வெற்றியின் இதழ் பட்டும் படாமல் உரசியது. இருவரும் அப்படியே ஒரு நொடி உறைந்துபோய் இருந்தனர்.

 

வெற்றிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கனியின் மூச்சும் தடுமாறியது. வெற்றியின் முழுப் பாரத்தையும் கனியின் உடல் தாங்கியிருந்தது.

 

“அத்தானு… நீங்க வெயிட்டா இருக்கீங்க. ப்ளீஸ், எழும்புங்க” என்று திக்கித் திணறிக் கூறினாள்.

 

மெத்தையில் கைகளை ஊன்றி எழுந்தவன், சுவரைப் பிடித்துக்கொண்டு குளியலறைக்குச் சென்றான்.

 

அதன் பிறகு இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இருவரும் பயத்திலேயே வராத உறக்கத்தைத் தேடி உறங்கினர்.

 

*******

அடுத்த அத்தியாயம்

கனி 9

கனி 9 திருமணம் முடிந்து ஒரு மாதம் கடந்திருந்தது. இந்த ஒரு மாதத்திற்குள் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பொங்கல் வைத்து வந்திருந்தனர். வீட்டிலும் திருமணமான இரு ஜோடிகளும் அவரவர் வாழ்க்கைக்குள் மெல்ல மெல்ல இயல்பாகப் பழகத் தொடங்கியிருந்தனர். அதே நேரத்தில், கனியின் கல்வியாண்டின் இரண்டாவது…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்