arrow_back
கனியாத்ரேயம் கனி 19
கனியாத்ரேயம் chevron_right பகுதி 19 / 22

கனி 19

visibility 8
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 19

 

வீட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல், அவர்கள் தங்கள் துணையுடன் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர்.

 

முந்தைய நாள் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குச் சென்று, இறைவனைத் தரிசித்து, அன்றைய பொழுதை மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டுத் திரும்பியிருந்தனர்.

 

அடுத்த நாள் காலையில், மூன்று பெண்களும் ஒரு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, மூன்று ஆண்களும் மற்றொரு அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

 

“என்னதான் இருந்தாலும், ரெண்டு நாள் வெளியூர்ல தங்கியிருந்ததே கொஞ்சம் போர் அடிக்கிற மாதிரிதான் இருக்கு. பேசாம இன்னைக்கே வீட்டுக்குப் போயிடலாமா?” என்று அமிர்தவள்ளி பரிந்துரைத்தார்.

 

“ஆமா, நானும் அதைத்தான் நினைச்சேன். ரெண்டு நாள் வெளியில தங்கியிருந்தது போதும். வீட்டுக்குப் போயிடலாம்” என்று மலர்விழி கூறினார்.

 

“ஆமா அக்கா, நம்ம வீட்டுக்குப் போயிடலாம். பாவம், பசங்க வீட்டுல தனியா சமைச்சுச் சாப்பிட்டுட்டு இருப்பாங்க. நாம போயிட்டா, அவங்களுக்கு ரெஸ்ட் கிடைக்கும்” என்று கலைவாணியும் கூறினார்.

 

மூன்று பெண்களுக்குமே வீட்டுக்குச் சென்று பிள்ளைகளைப் பார்த்தால்தான் நிம்மதியாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது.

 

ஆண்கள் அறையில்…

 

“என்னதான் இருந்தாலும், இன்னைக்கு வீட்டுக்குப் போகணும்னு தோணல” என்று யோகநாதன் கூறினார்.

 

“ஆமா, எனக்கும் அப்படித்தான் இருக்கு. ஆனா, இன்னைக்கு ஒரு நாள் மட்டும் பீச்சுக்குப் போயிட்டு, மதியம் ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு, சாயங்காலமா வீட்டுக்குப் புறப்படலாமே” என்று மணிமாறன் யோசனை கூறினார்.

 

“அதுவும் நல்ல யோசனைதான். கொஞ்ச நேரம் பீச்சுல இருந்துட்டு, மதியச் சாப்பாட்டையும் முடிச்சுட்டு வீட்டுக்குப் போயிடலாம்” என்று திருச்செல்வம் ஒத்துக்கொண்டார்.

 

இப்படியாக, மூவரும் சேர்ந்து கடற்கரைக்குச் செல்லத் திட்டமிட்டனர்.

 

தங்கள் மனைவியருடன் இப்படித் தனியாக நேரம் செலவிடுவது, அவர்களுக்கு இளம் தம்பதிகளைப் போல மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் மணிமாறனுக்குத்தான் அதிக வருத்தம் இருந்தது. சிற்ப வேலை காரணமாக, ஆர்டர் கிடைக்கும் இடங்களுக்கெல்லாம் செல்ல வேண்டியிருந்ததால், தன் மனைவி கலைவாணியுடன் நேரம் செலவிடும் வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன.

 

பெண்கள் இருந்த அறையின் வாசலில் மூவரும் வந்து நிற்க, மாறன் கதவைத் தட்டினார். கதவைத் திறந்தவுடன் அமிர்தவள்ளி, “மாறன், இன்னைக்கே வீட்டுக்குக் கிளம்பலாமா?” என்று கேட்டார்.

 

“ஏன் அக்கா, அதுக்குள்ள என்ன அவசரம்? இப்போ பீச்சுக்குப் போயிட்டு, மதியம் வெளியே சாப்பிட்டு, அப்படியே நம்ம வீட்டுக்குக் கிளம்புவோம்” என்றார் மாறன்.

 

“என்னாலதான் முடியல. நேத்து கோயிலுக்குப் போனதுல இருந்தே முட்டி வலிக்குது. இப்பவே என்னால மணல்ல கால் வச்சு நடக்க முடியாது” என்று அமிர்தவள்ளி புலம்பினார்.

 

“அக்கா, நீங்க நேத்து கோயிலுக்குள்ள நடந்ததைப் பார்த்தா, உங்களுக்கு முட்டி வலி இருக்குன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க” என்று கலைவாணி கிண்டலாகக் கூறினார்.

 

“கலை, நீ வேற! அப்போ சாமி கும்பிடணும்னு ஒரு ஆர்வத்துல நடந்துட்டேன். இப்பதான் வலியே தெரியுது” என்று அமிர்தவள்ளி கூறினார்.

 

அந்த நேரத்தில் அறைக்குள் வந்த திருச்செல்வம், “ஏன் வள்ளி, ரொம்ப வலிக்குது?” என்று கேட்டார்.

 

“என்னத்த சொல்ல? முட்டி வலிக்குது. என்னால மணல்ல கால் வச்சு நடக்கவே முடியாதுங்க” என்று அவர் மீண்டும் புலம்பினார்.

 

அதைக் கேட்ட திருச்செல்வம், சற்றும் யோசிக்காமல், “அப்படியா? நான் வேணும்னா உன்னைத் தூக்கிட்டுப் போகட்டுமா?” என்று துடுக்காகக் கேட்டார்.

 

அமிர்தவள்ளி திருச்செல்வத்தை முறைத்துப் பார்க்க, “அட! உனக்கு முட்டி வலிக்குதுன்னு சொன்னியே! அதான் உதவி செய்யலாம்னு பார்த்தேன். அதுக்குக்கூட இவ்வளவு கோபப்படுறியே!” என்று திருச்செல்வம் அப்பாவியாகக் கேட்டார்.

 

“ஆமா, பெரிய உதவி! நீங்க என்னைத் தூக்கிட்டு நடக்கப் போறீங்களாக்கும்?” என்று அமிர்தவள்ளி நக்கலாகக் கேட்டார்.

 

“ஏன், உன்னைத் தூக்குறதுக்கு எனக்கு என்ன குறை? சொல்லு, இப்பவே தூக்கட்டுமா?” என்று அவர் உரிமையோடு கேட்டார்.

 

அதற்குள் மணிமாறன், “என்ன மச்சான், என் அக்காவைத் தூக்கிட்டு வருவீங்களா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.

 

“ஆமா, ஏன்? என்னால முடியாதுன்னு நினைக்கிறியா?” என்று திருச்செல்வம் பதிலுக்குக் கேட்டார்.

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மச்சான். முதல்ல உங்க முட்டியை வச்சு உங்களால நடக்க முடியுமான்னு பாருங்க” என்று மணிமாறன் கிண்டலாகக் கூறினார்.

 

அதைக் கேட்டதும் அனைவரும் சிரித்தனர்.

 

“ஐயய்யோ! போதும், போதும்! நீங்க பேசாம வெளியே போங்க. நாங்க பீச்சுக்குக் கிளம்பி வாறோம்” என்று அமிர்தவள்ளி வெட்கத்துடன் கூறினார்.

 

“சரி, சரி! நீங்க எல்லாரும் சீக்கிரம் ரெடி ஆகுங்க. ஆம்பிளைங்களுக்கு பத்து நிமிஷம் போதும்” என்றார் யோகநாதன்.

 

அதைக் கேட்ட திருச்செல்வம், அமிர்தவள்ளியைப் பார்த்துக் குறும்பாகப் புன்னகைத்துவிட்டு வெளியேறினார்.

 

அவர் சென்றதும், அமிர்தவள்ளி தன் தலையில் கையை வைத்துக்கொண்டார்.

 

“இந்த மனுஷனோட தொல்லை தாங்க முடியல!” என்று அமிர்தவள்ளி புலம்ப,

 

“அண்ணி, உங்களுக்கு முட்டி வலிக்கிறதைவிட, அண்ணா உங்களைத் தூக்குறேன்னு சொன்னதுதான் அதிகமா வெட்கப்பட வச்சிருக்கு போல!” என்று மலர்விழியும் தன் பங்கிற்குக் கிண்டலடித்தார்.

 

“மலரு, நீங்க வேற” என்று அமிர்தவள்ளி வெட்கத்துடன் கூற, அந்த அறையே சிரிப்பால் நிறைந்தது.

 

கடற்கரையை வந்தடைந்த மூன்று தம்பதிகளும், கடல் காற்றை ரசித்தபடி மணலில் மெதுவாக நடக்கத் தொடங்கினர்.

 

அமிர்தவள்ளியின் முட்டி வலியை நினைவில் வைத்திருந்த திருச்செல்வம், அவருடைய இடது கையைப் பற்றிக்கொண்டார்.

 

“அவசரமில்லை வள்ளி, நீ மெதுவாவே நட. பார்த்துக் கவனமா ஒவ்வொரு அடியையும் எடுத்து வை. கீழே விழுந்துடப் போற!” என்று அக்கறையுடன் கூறினார்.

 

கணவரின் அக்கறையை ரசித்தபடி அமிர்தவள்ளியும் அவருடன் கைகோர்த்து நடந்தார். கடற்காற்று முகத்தை வருடிச் செல்ல, இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக நடந்த அந்தப் பொழுது அவர்களுக்கு இதமாக இருந்தது.

 

மூன்று தம்பதிகளும் கடல் அலைகள் அதிகமாக வராத ஓரிடத்தில் இருந்த மணல் மேட்டில், சிறிது இடைவெளி விட்டு அமர்ந்தனர்.

 

சிறிது நேரம் கழித்து, மணிமாறன் கலைவாணியைப் பார்த்தார்.

 

“கலை, வா! கடல் தண்ணியில கால் நனைச்சிட்டு வரலாம்”

 

“ஐயோ, வேண்டாங்க! நான் வரல. நீங்க போயிட்டு வாங்க” என்று கலைவாணி மறுத்தார்.

 

“என்ன கலை, எத்தனை வருஷத்துக்குப் பிறகு இப்படி நாம ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கோம்! வா, கொஞ்ச நேரம்தானே!” என்று மணிமாறன் அன்புடன் அழைக்க, அவரும் சிரித்தபடி எழுந்தார்.

 

இருவரும் கைகோர்த்துக்கொண்டு கடல் அலைகளை நோக்கி நடந்தனர்.

 

அவர்கள் செல்வதைப் பார்த்த திருச்செல்வமும் அமிர்தவள்ளியை அழைத்தார்.

 

“வள்ளி, நாமளும் போயிட்டு வரலாமா?”

 

“ஐயோ, வேண்டாங்க! புடவை எல்லாம் நனைஞ்சிடும். அதுவும் என் முட்டி வேற வலிக்குது” என்று அமிர்தவள்ளி சாக்குப்போக்குச் சொன்னார்.

 

“அட, புடவை நனைஞ்சா வேற புடவை வாங்கித் தரேன். வா, உன் கையைப் பிடிச்சுக்கிட்டே மெதுவா கூட்டிட்டுப் போறேன்” என்று திருச்செல்வம் கூறினார்.

 

“அப்படியெல்லாம் என்னைச் சமாளிக்கப் பார்க்காதீங்க” என்று அமிர்தவள்ளி சிணுங்கினார்.

 

“அட, என் பொண்டாட்டியைக் பீச்சுக்கு அழைச்சிட்டு வந்துட்டு, கடல் தண்ணியில கால் நனைக்காம விட்டுடுவேனா? வா, வள்ளி” என்று அவர் வற்புறுத்த, வேறு வழியின்றி அமிர்தவள்ளியும் சிரித்தபடி எழுந்தார்.

 

அதேபோல், யோகநாதனும் மலர்விழியை அழைத்தார்.

 

“மலரு, வா நாமளும் கடல் தண்ணியில கால் நனைச்சிட்டு வரலாம்”

 

“நீங்க போயிட்டு வாங்க. நான் இங்கேயே இருக்கேன்” என்று மலர்விழி மறுக்க,

 

“அட, எல்லாரும் போறாங்க. நாம மட்டும் இங்கே உட்கார்ந்திருந்தா நல்லாவா இருக்கும்? வா, கொஞ்ச நேரம்தானே” என்று யோகநாதன் அழைத்தார்.

 

அவருடைய பேச்சில் சிரித்த மலர்விழியும் எழுந்துகொள்ள, மூன்று தம்பதிகளும் தத்தம் துணைகளின் கைகளைப் பற்றிக்கொண்டு கடல் அலைகளை நோக்கி நடந்தனர்.

 

கடல் அலைகள் அவர்களின் பாதங்களைத் தொட்டுச் செல்ல, அந்த வயதிலும் ஒருவருக்கொருவர் காட்டிய அன்பும் அக்கறையும் அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியாகப் பிரதிபலித்தன.

 

மணிமாறன் இந்தத் தருணங்களை மறக்கக் கூடாது என்பதற்காகச் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

 

கடல் அலைகளில் கால்களை நனைத்துவிட்டு, மூன்று தம்பதிகளும் மீண்டும் மணல் மேட்டை நோக்கி வந்தனர்.

 

அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை அடைந்ததும், மணிமாறன் மூன்று ஐஸ்கிரீம்களை வாங்கிக்கொண்டு வந்து, ஒவ்வொரு ஜோடிக்கும் ஒன்றாகக் கொடுத்தார்.

 

அதைப் பார்த்த திருச்செல்வம், “மாறன், நீ பண்றதெல்லாம் கொஞ்சம் ஓவராதான் இருக்கு!” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

 

“என்ன மச்சான், ஐஸ்கிரீம் வாங்கிக் கொடுத்ததுகூட ஓவரா?” என்று மணிமாறன் கேட்க,

 

“அதெல்லாம் ஒண்ணுமில்லை” என்று கூறிய திருச்செல்வம், மேலும் இரண்டு ஐஸ்கிரீம்களை வாங்கிக்கொண்டு வந்தார்.

 

ஒன்றை யோகநாதனிடம் கொடுத்துவிட்டு, மற்றொன்றை அமிர்தவள்ளியிடம் நீட்டினார்.

 

அதை அமிர்தவள்ளி சிரித்தபடி வாங்கிக்கொண்டார்.

 

இதற்கிடையில், கலைவாணி தன்னுடைய ஐஸ்கிரீமைச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

 

“கலை, எனக்கும் கொஞ்சம் கொடு” என்று மணிமாறன் கேட்க,

 

“சாப்பிடுங்க” என்று அவர் தன்னுடைய ஐஸ்கிரீமை நீட்டினார்.

 

மணிமாறனும் அதிலிருந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு, “இப்போதான் நல்லா இருக்கு” என்று சிரித்தார்.

 

அவர்களின் செயலைப் பார்த்து அமிர்தவள்ளி சிரிக்க, திருச்செல்வம் மட்டும் வெட்கத்துடன் முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

 

“அடடா, இங்கே என்ன நடக்குது? வயசானாலும் உங்க காதல் மட்டும் குறையவே குறையாதுபோல!” என்று யோகநாதன் கிண்டலடிக்க, அந்த இடமே சிரிப்பால் நிறைந்தது.

 

“ஆமா, நாதன் மச்சான், கண்ணு வச்சிடக் கூடாது. உங்களுக்கு வேணும்னா மலர் அக்காகிட்ட வாங்கிச் சாப்பிட்டுக்கோங்க!” என்று மாறன் நக்கலடித்தார்.

 

மணிமாறனின் கிண்டலுக்குப் பதில் சொல்ல முடியாமல் யோகநாதன் புன்னகைத்தார்.

 

சில நிமிடங்கள் கடல் அலைகள் கரையை நோக்கி வந்து நுரையைச் சேர்த்தன. அந்த நுரைகள் ஈரமான மணலைத் தழுவிக்கொண்டிருக்க, ஓரிரு குட்டி நண்டுகள் அலைகள் அடித்து விலகியதும் வெளியே வந்து எட்டிப் பார்த்துவிட்டு, மீண்டும் மணலுக்குள் புதைந்துகொண்டன.

 

அந்தக் காட்சிகளையெல்லாம் மூன்று தம்பதிகளும் ரசித்துக்கொண்டிருந்தனர்.

 

“ஏங்க, இதுக்குப் பிறகும் நம்ம பிரிஞ்சுதான் இருக்கணுமா?” என்று ஏக்கத்துடன் கலைவாணி கேட்டார்.

 

“கொஞ்ச நாள் பொறுத்துக்கோ கலை. ஆந்திரா வேலை மட்டும் முடியட்டும். அதுக்குப் பிறகு நாம ஏதாவது சின்னதா ஒரு கடை மாதிரி வச்சுக்கலாம். அப்புறம் உன் பக்கத்திலேயே இருக்கேன்” என்றவர், மனைவியின் கையை ஆறுதலாகப் பிடித்துக்கொண்டார்.

 

அங்கே யோகநாதனோ, “மலரு, சோளம் ஏதாவது வாங்கித் தரவா?” என்று கேட்டார்.

 

“இல்லங்க, வேண்டாம்” என்று மலர்விழி மறுத்தார். கணவருடன் கிடைத்த இந்தத் தனிமையே அவருக்குப் பெரிதாக இருந்தது.

 

“சரி, மலரு. நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி நமக்காக வந்தோம். அப்புறம் நம்ம பொண்ணுக்காக வந்தோம். இப்போ மறுபடியும் நமக்காக வந்திருக்கோம்” என்ற யோகநாதன், இளமையில் தங்களுக்குள் இருந்த காதலை முதுமையில் மீட்டெடுத்தார்.

 

“ஆமாங்க. இந்த மாதிரி மனசுவிட்டுப் பேசி ரொம்ப வருஷம் ஆகிருச்சுல” என்று மலர்விழி ஏக்கத்துடன் கூறினார்.

 

அந்த வார்த்தைகளுக்குள் எவ்வளவு ஏக்கம் ஒளிந்திருந்தது என்பதை யோகநாதனால் உணர முடிந்தது.

 

“ஆமா, மலரு. இனிமே நீ வீட்டுல தனியா இருக்க வேண்டாம். என்கூட மில்லுக்கு வந்துடு” என்றார் யோகநாதன்.

 

அவர்களுக்குச் சொந்தமான மில்லில் ஏற்கெனவே ஐந்து பேர் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

 

“உண்மையாவா சொல்றீங்க? ஆனா, சமையல் வேலை எல்லாம் இருக்கே” என்று மலர்விழி தயக்கத்துடன் கேட்டார்.

 

மில்லில் வேலை செய்பவர்களுக்கும் சேர்த்துச் சமைக்க வேண்டுமே என்ற கவலை அவருக்கு இருந்தது.

 

“இனிமே உன்கூட நானும் வேலை செஞ்சு தரேன். அப்புறம் சீக்கிரமே மில்லுக்குப் போயிடலாம்” என்று யோகநாதன் உறுதியுடன் கூறினார்.

 

அதைக் கேட்ட மலர்விழியின் முகம், இன்று பூத்த மலரைப்போல மலர்ந்தது.

 

மூன்று தம்பதிகளும் கடற்கரையில் இன்னும் சிறிது நேரம் மனம்விட்டுப் பேசிக்கொண்டும், கடல் காற்றை ரசித்துக்கொண்டும் இருந்தனர்.

 

மதிய நேரம் நெருங்கியதும், அனைவரும் அங்கிருந்து கிளம்பி, அருகிலிருந்த ஹோட்டலுக்குச் சென்றனர். அங்கே ஒன்றாக அமர்ந்து மதிய உணவைச் சாப்பிட்டனர்.

 

உணவு முடிந்ததும், சிறிது நேரத்தில் வீட்டுக்குப் புறப்படத் தயாரானார்கள்.

 

பயணத்தின்போது மூன்று தம்பதிகளும் தங்களுக்குள் நடந்த இனிய உரையாடல்களை நினைத்துப் புன்னகைத்தனர். கடற்கரையில் கிடைத்த அந்தச் சிறிய நேரம், அவர்களின் மனங்களில் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு புதிய மகிழ்ச்சியை விதைத்திருந்தது.

 

இரண்டு, மூன்று மணி நேரப் பயணத்திற்குப் பிறகு, யோகநாதனும் மலர்விழியும் தங்கள் வீட்டின் அருகில் இறங்கிக்கொண்டனர். மற்ற இரண்டு தம்பதிகளும் தங்கள் வீட்டை வந்தடைந்தனர்.

 

பயணம் சென்றவர்கள் வீடு திரும்ப, வீட்டில் உள்ள அனைவரின் மனமும் நிம்மதியானது.

 

கனியும் கௌரியும் சேர்ந்து இரவு உணவைத் தயாரித்து வைத்திருந்தனர்.

 

வந்தவர்கள் தேனீரைப் பருகிவிட்டு, உடலைச் சுத்தப்படுத்திக்கொண்ட பிறகு, ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்திருந்தனர்.

 

பிள்ளைகளுக்காக வாங்கிக்கொண்டு வந்திருந்த சிறு சிறு பொருட்களை ஒவ்வொருவருக்கும் கொடுத்தனர். வெற்றிக்காக வாங்கி வந்த பொருளைக் கனியிடம் கொடுத்த அமிர்தவள்ளி,

 

“கனி, இதை வெற்றிக்குக் கொடுத்துடு” என்றார்.

 

“கொஞ்சம் இருங்க அத்தைம்மா, அவரைக் கூட்டிட்டு வரேன்” என்ற கனி, அறையை நோக்கிச் சென்றாள்.

 

கனி அறைக்குள் நுழைந்து, வெற்றியைப் பார்த்தாள்.

 

“அம்மா, அப்பா எல்லாரும் வந்துட்டாங்க. உங்களுக்குக் கண் தெரியும்கிற விஷயத்தை நீங்களே போய்ச் சொல்லிடுங்க” என்றாள்.

 

“கனி, நான் நாளைக்குச் சொல்லிக்கிறேன். இப்போதானே வந்திருக்காங்க” என்றான் வெற்றி.

 

“இல்ல, நீங்க இப்பவே சொல்லணும்” என்று கனி பிடிவாதமாகக் கூறினாள்.

 

“பொண்டாட்டி, கொஞ்சம் புரிஞ்சுக்கோடி” என்று அவன் கெஞ்சினான்.

 

“முடியாது! இப்பவே வந்து சொல்லுங்க!” என்று அவள் அவனை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்.

 

அவளுடைய பிடிவாதத்தைப் பார்த்த வெற்றி, இனி எத்தனை கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமோ என்ற யோசனையுடன் அவளைப் பின்தொடர்ந்தான்.

 

 

*******

என் அருமை வாசக சொந்தங்களே உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 

நன்றி ❤️🙏

 

அடுத்த அத்தியாயம்

கனி 20

கனி 20  மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த வெற்றி, அமிர்தவள்ளியின் அருகில் வந்து நின்றான். அவனது கையைப் பிடித்துக்கொண்டவர், “என்னய்யா வெற்றி, நல்லா இருக்கியா? உடம்பெல்லாம் நல்லா இருக்கா?” என்று அக்கறையுடன் கேட்டார்.“நல்லா இருக்கேன்மா...” என்றவன், சிறிது தயக்கத்துடன், “அம்மா... உங்ககிட்ட ஒரு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்