arrow_back
கனியாத்ரேயம் கனி 20
கனியாத்ரேயம் chevron_right பகுதி 20 / 23

கனி 20

visibility 12
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 20 

 

மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த வெற்றி, அமிர்தவள்ளியின் அருகில் வந்து நின்றான். அவனது கையைப் பிடித்துக்கொண்டவர், “என்னய்யா வெற்றி, நல்லா இருக்கியா? உடம்பெல்லாம் நல்லா இருக்கா?” என்று அக்கறையுடன் கேட்டார்.

“நல்லா இருக்கேன்மா…” என்றவன், சிறிது தயக்கத்துடன், “அம்மா… உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றான்.

“என்னப்பா, சொல்லு. என்ன விஷயம்?” வெற்றி ஒரு கணம் அமைதியாக இருந்தான். எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் தயங்கியவன், இறுதியில் தன் தாயைப் பார்த்து, “எனக்கு… கண் பார்வை திரும்ப வந்துருச்சும்மா!” என்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்ட அமிர்தவள்ளி, ஒரு கணம் அவனையே பார்த்துக்கொண்டிருந்தார். அடுத்த நொடியே அவனது கையை இறுகப் பற்றிக்கொண்டவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது.

“நான் கும்பிட்ட சாமியெல்லாம் என்னைக் கைவிடலய்யா! என் வேண்டுதல் வீண்போகல!” என்றவர், கண்ணீருக்கிடையே புன்னகைத்தார்.

“கனியும் உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டுடா. கனி உன் வாழ்க்கைல வந்த நல்ல நேரம்தான்!”

அவரது மகிழ்ச்சியைக் கண்டு மாறனும் திருச்செல்வமும் வெற்றியின் அருகில் வந்தனர்.

“வெற்றி, நிஜமாவே கண்ணு தெரியுதா? என்னைப் பார்க்க முடியுதா?” என்று கேட்ட திருச்செல்வத்தின் குரலிலும் உணர்ச்சி வெளிப்பட்டது. மகனின் பதிலுக்காகக் காத்திருந்தவரின் கண்களிலும் கண்ணீர் தேங்கியது.

“உங்க எல்லாரையும் பார்க்க முடியுதுப்பா” என்றான் வெற்றி.

எப்போதும் தனது சிரிப்பால் சபையை நிறைக்கும் மணிமாறனுக்கோ, அந்த நொடி வார்த்தைகள் வரவில்லை. கண்களைத் துடைத்துக்கொண்டே வெற்றியை ஆரத்தழுவினார்.

கலைவாணியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் மின்னியது. வெற்றியின் கண் பார்வை திரும்பிய செய்தி, தன் மகளின் வாழ்க்கையிலும் இனி நல்ல மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையை அவருக்குள் விதைத்தது.

“சரிய்யா, எப்போ உனக்குக் கண் பார்வை வந்துச்சு? டாக்டரைப் பார்த்தியா? உனக்குக் கண்ணு இப்போ நல்லா இருக்குன்னு சொன்னாங்களா? மருந்தெல்லாம் வாங்கினியா?” என்று அமிர்தவள்ளி கேள்விகளை அடுக்கினார்.

அதற்குள் மித்ரன், “அம்மா, அண்ணாவுக்குக் கண் பார்வை வந்து மூணு மாசத்துக்கு மேல ஆகுது. ஆனா, நமக்குத்தான் இப்போதான் தெரியுது! அமெரிக்காவிலேயே அண்ணாவுக்குக் கண் ஆபரேஷன் பண்ணிடாங்க. அதுக்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமா பார்வை திரும்ப வர ஆரம்பிச்சு, இப்போ முழுசாக் கண்ணு தெரியுது. அதுக்கப்புறம்தான் இங்க வந்திருக்கான்!” என்றான்.

அமிர்தவள்ளி அதிர்ச்சியுடன் வெற்றியைப் பார்த்தார்.

“என்னய்யா வெற்றி? ஏன் எங்ககிட்ட மறைச்ச? இவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்லாம இருந்திருக்கியே!” என்று சற்று கவலையுடனே கூறினார்.

வெற்றி மெதுவாகப் பதிலளித்தான்.

“இல்லம்மா, அது வந்து… கனி என்னை நல்லா கவனிச்சுக்கிறாள்னு நீங்க எல்லாரும் சொன்னீங்க. அவ என்னை எப்படி கவனிச்சுக்கிறான்னு நானும் பார்க்கணும்னு ஆசையா இருந்துச்சு. அதனாலதான் இவ்வளவு நாளா சொல்லாம இருந்தேன்”

அதைக் கேட்ட கனி அவனை நேராகப் பார்த்தாள். அவளது முகத்தில் இருந்த மகிழ்ச்சி மெல்ல மறைந்து, அதற்குப் பதிலாகக் கோபம் எட்டிப் பார்த்தது.

“கொஞ்ச நாள் சொல்லாம இருந்தேன்னு சொல்லாதீங்க. எங்கிட்ட மறைச்சீங்கன்னு சொல்லுங்க! எங்கிட்ட மட்டுமில்ல, எல்லார்கிட்டயுமே மறைச்சிருக்கீங்க!”

அவளது குரலில் வெளிப்பட்ட கோபத்தை அமிர்தவள்ளியால் உணர முடிந்தது.

ஒரு கணம் அமைதியாக இருந்த கனி, அடுத்த நொடியே சரணின் பக்கம் திரும்பினாள்.

“இதெல்லாம் சரண் அண்ணாவுக்குத் தெரியும்! அவருக்கூட ஒரு வார்த்தை சொல்லல!” என்று வருத்தமாகக் கூறினாள் கனி.

எதிர்பாராத விதமாகத் தன்னை இந்தப் பிரச்சினைக்குள் இழுத்துவிட்ட கனியைப் பார்த்த

சரண், “அண்ணா சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டாரு. அதான் நானும் யார்கிட்டையும் சொல்லல, கனிமா!” என்றான்.

கனியின் முகத்தில் கோபம் குறையவில்லை. வெற்றியோ அவளைப் பார்த்தபடி அமைதியாக நின்றான்.

“அத்தைம்மா, கண்ணோட கலர் பிரவுனா இருக்குறதால நாங்க இவ்வளவு பயத்துல இருந்தோம். எல்லாரும் கேட்டோம், என்னாச்சு, என்னாச்சுன்னு. ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்ல? எங்களைப் பார்த்தா என்ன லூசுங்க மாதிரி தெரியுதா உங்க பையனுக்கு?” என்று கனி கேட்க, அமிர்தவள்ளி அமைதியாகிவிட்டார். மகனுக்குப் பார்வை திரும்பியதில் மனம் நிறைந்திருந்தாலும், அவன் செய்த காரியத்தால் கனி எவ்வளவு வேதனைப்பட்டிருக்கிறாள் என்பதும் அவருக்குப் புரிந்தது.

மாறன் கனியைப் பார்த்து, “மா, மாப்பிள்ளைக்குக் கண் பார்வை வந்துருச்சு. அப்படியிருக்கும்போது நீ இவ்வளவு கோபப்படலாமா? உங்களோட வாழ்க்கையைச் சந்தோஷமா வாழ ஆரம்பிங்க. சின்னப் பிள்ளைம்மா, ஏதோ தெரியாதனமா பண்ணிட்டாரு! விடுமா” என்றார்.

“அவர் சின்னப் பிள்ளையா, நான் பெரிய மனுஷி அப்படிதானே!” என்று கேட்ட கனி, அப்பாவின் முன்னால் வந்து நின்றாள்.

கிருத்திகா கௌரியைப் பார்த்து, “என்னால முடியல கௌரி, எனக்குப் பசிக்குது” என்று வயிற்றைத் தடவியவாறு கூறினாள்.

“வாங்க, நாங்க கிச்சனுக்குள்ள போயிரலாம்” என்று கௌரி, கிருத்திகாவுடன் சென்றாள்.

இதற்கிடையில், கலைவாணி மாறனைப் பார்த்துக் கண் சிமிட்டினார்.

“ஏங்க! இது அவங்க குடும்பப் பிரச்சனை. நம்ம ஏன் நடுவுல நிக்கணும்? நம்ம வீட்டுக்குப் போகலாமா, வாங்க” என்றார்.

மனைவியின் அழைப்பைப் புரிந்துகொண்ட மாறனும் அவருடன் கிளம்பினார்.

“போங்க, போங்க, கட்டிக்கொடுத்ததும் உங்க வேலை எல்லாம் முடிஞ்சுதுல்ல!” என்ற கனியின் கண்களில் இருந்த கண்ணீர் விளிம்பைத் தாண்டியது.

இருவிரல்களால் நெற்றியைத் தேய்த்த அமிர்தவள்ளி, என்ன செய்வது என்று ஒரு கணம் யோசித்துவிட்டு, “வெற்றி, இங்க வா” என்று அழைத்தார்.

“சொல்லுங்கம்மா” என்று அவரருகில் வந்தவன் பணிந்தான்.

“நீ பண்ண வேலைக்கு, பேசாம கனி கால்ல விழுந்து மன்னிப்புக் கேட்டிடு” என்றார்.

வியப்பில் விழிகளை அகல விரித்த வெற்றி, “அம்மா!” என்று நீட்டி அழைத்தான்.

அதைக் கேட்ட அனைவருக்குமே சற்றே வியப்பாகத்தான் இருந்தது. கனி திருதிருவென விழித்தாள்.

“ஆமா வெற்றி, பொண்டாட்டிக்கிட்ட தோத்துப்போயிரு. உன் வாழ்க்கை நல்லா இருக்கும்” என்று தாயார் உபதேசிக்க, அவனும் அதற்கு இணங்கினான்.

கனி உடனே திருச்செல்வத்துக்குப் பின்னால் நின்றுகொண்டு, “யாரும் என் கால்ல எல்லாம் விழ வேண்டாம். இதுக்கு அப்புறம் எங்கிட்ட எதுவும் மறைக்கக் கூடாதுன்னு சத்தியம் பண்ணச் சொல்லுங்க, அத்தைம்மா!” என்றாள்.

அமிர்தவள்ளி வெற்றியைப் பார்த்துக் கண் அசைக்க, அவனும் கனியைப் பார்த்து, “சத்தியமா, இனி என் பொண்டாட்டிக்கிட்ட நான் எதுவும் மறைக்க மாட்டேன்” என்று கூறினான்.

மற்றவர்கள் ஒவ்வொருவராகத் தங்களது அறைகளுக்குச் சென்றனர். கனி, வெற்றி, திருச்செல்வம், அமிர்தவள்ளி ஆகிய நால்வர் மட்டுமே வீட்டின் மண்டபத்தில் இருந்தனர்.

அமிர்தவள்ளி வெற்றியைப் பார்த்து, “இதெல்லாம் தப்பு வெற்றி. கனி எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கா! உன்னை எவ்வளவு அக்கறையா பார்த்துக்கிட்டா! அவளுக்கு இப்படியா நீ செய்யறது? பாவம்டா, நல்லா பார்த்துக்கோ. கனி இன்னும் சின்னப் பிள்ளை!” என்றார்.

திருச்செல்வமும் வெற்றியைப் பார்த்து, “கனி உனக்கு மனைவியா வந்திருக்கிறது எனக்கு இந்நாள் வரைக்கும் சந்தோஷமா இருக்கு. நம்ம வீட்டிலேயே வளர்ந்த பொண்ணு. அதுவும் ரொம்பப் பொறுப்பான பொண்ணு. உன்னை நல்லா பார்த்துக்கிட்டா. அவளை எப்பவும் சந்தோஷமா பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு. அழவைக்காதடா!” என்றார்.

பெற்றோர் இருவரும் கூறியதைக் கேட்ட வெற்றி, மறுப்பேதும் தெரிவிக்காமல் தலையசைத்தான்.

அதன்பிறகு, நேற்று நைரா வந்ததையும், அதற்குப் பிறகு நடந்த விஷயங்களையும் வெற்றி அவர்களிடம் விரிவாகக் கூறினான்.

“அந்தச் சனியன் எதுக்குத் திருப்பி இங்க வருது? நீ போலீஸுக்குப் போனதுதான் சரி” என்றார் அமிர்தவள்ளி.

“மூணு நாள் வீட்டுல இல்ல. என்னென்ன நடந்திருக்குன்னு பாருங்க!” என்று திருச்செல்வத்திடம் கூறினார்.

நடந்தவற்றை நினைத்துப் பார்த்த திருச்செல்வத்துக்கே வியர்த்துக் கொட்டியது. அமிர்தவள்ளி, நடந்தவை எல்லாம் பெரிதாகச் செல்லாமல் சிறிதாக முடிந்ததற்காக நெஞ்சில் கைவைத்து கடவுளுக்கு நன்றி கூறினார்.

“சரி, நேரம் போனதே தெரியல! ராத்திரி சாப்பாட்டுக்கு லேட் ஆகிருச்சு. கௌரி, சாப்பாடு வை மா!” என்று அமிர்தவள்ளி குரல் கொடுத்தார். அவரது குரல் கேட்டதும் கௌரி இரவு உணவை மேசையில் அடுக்கினாள். பிரியாணியின் மணம் வீடு முழுவதும் பரவியிருந்தது. அனைவரும் அமர்ந்தும் வெற்றி அமராமல் இருந்தான்.

“ஏன்பா, நீ சாப்பிடலையா?” என்று திருச்செல்வம் கேட்க,

“என் பொண்டாட்டிக்கூட உட்கார்ந்து சாப்பிடுறேன் அப்பா” என்றான் வெற்றி.

“நல்லது வெற்றி” என்றதோடு, அமர்ந்த அனைவரும் வேகமாக உணவருந்தி அவர்களுக்கு இடம் கொடுத்தனர்.

வெற்றியின் அருகிலிருந்த கதிரையில் கனி அமர்ந்தாள். அடுத்த நொடியே, அவளை கதிரையோடு தன் அருகில் இழுத்து வைத்துக்கொண்டான் வெற்றி.

அவனது செயலில் கனி பெருமூச்சு விட்டாள்.

வெற்றி, கோழித்துண்டைப் பிய்த்து, பிரியாணியைக் கொஞ்சமாக அள்ளி அவளுக்குக் கொடுக்க, அவளும் மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். அவனும் சாப்பிட்டவாறு அவளுக்கும் உணவளித்தான்.

சமையலறையில் பாத்திரங்கள் அப்படியே கிடந்தன. கனி பாத்திரங்களைக் கழுவ ஆரம்பித்தாள்.

“பொண்டாட்டி, நான் உனக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று கேட்டான் வெற்றி.

“வேணாம். நீங்க மேலே போயிட்டு தூங்குங்க. நான் வாறேன்” என்றபடி பாத்திரங்களைத் தேய்த்துக் கொண்டிருந்தாள்.

கனி வேண்டாமென்று சொன்னதும், வெற்றி அவளை வற்புறுத்தவில்லை. அவளுக்குத் தொந்தரவு செய்யாமல் சமையலறைத் திட்டைத் துடைக்க ஆரம்பித்தான்.

பாத்திரங்களைக் கழுவி முடித்ததும், சமையலறையை நேர்த்தியாக வைத்துவிட்டு வெளியே வந்தனர்.

வெற்றி, “கனி, மேல என்ன இருக்குன்னு கொஞ்சம் அண்ணாந்து பாரு” என்றான்.

அவள் அண்ணாந்து பார்க்கும் நேரத்தில், டக்கென்று அவளைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டான். எதிர்பாராத அந்தச் செயலில் கனிக்குத் திக்கென்றது.

“ஐயோ, அத்தான்! ஆபரேஷன் பண்ணியிருக்கீங்க! வெயிட் தூக்கக்கூடாது. என்னைக் கீழே விடுங்க!” என்று படபடவென்று கூறினாள்.

வெற்றி படிகளில் ஏறியவாறே, “பொண்டாட்டி, என்ன சொன்ன? சரியா கேக்கல” என்றான்.

“ஆபரேஷன் பண்ணா வெயிட் தூக்கக்கூடாது, அத்தான். என்னைக் கீழே விடுங்க!” என்று மீண்டும் கனி சொன்னாள்.

அவள் முகத்தைப் பார்த்துக் குறும்பாகச் சிரித்தவன், “நீயெல்லாம் வெயிட்டுன்னா, வெயிட்டுக்கும் என்ன சொல்லுறது?” என்று அவளைக் கேலி செய்தான்.

கனி அறைக் கதவைத் திறந்தாள். இத்தனை நாள் அவள் பழகிய வெற்றிக்கும் இப்போது பார்வை திரும்பிய வெற்றிக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் தெரிந்தன.

அவன் தன்னைப் பார்க்க முடிகிறது என்ற உண்மையே அவளுக்குள் புதுவிதமான தயக்கத்தை ஏற்படுத்தியது. அவனுக்குப் பார்வை திரும்பியதில் மகிழ்ச்சிதான் என்றாலும், இனி அவன் தன்னுடன் எப்படி நடந்துகொள்வான் என்று நினைக்கும்போதே அவளுக்குப் பிபி எகிறியது.

வெற்றி அவளை மெதுவாகக் கட்டிலில் உட்கார வைத்தான்.

“சாரி, பொண்டாட்டி. கோபிச்சிக்காதே!” என்றவன், அவளது கைகளில் மெதுவாக முத்தமிட்டான்.

கனி தனது கைகளை மெதுவாக உருவிக்கொண்டாள். எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பியவன் மீண்டும், “சாரி, பொண்டாட்டி. கோபிச்சிக்காதே! ஆசையா இருந்துச்சுடி. எல்லாரும் என்ன சொன்னாங்க தெரியுமா? நீ என்னை நல்லா பார்த்துக்கிற, நல்லா பார்த்துக்கிறன்னு சொன்னாங்க. அதனால, நீ என்னை எப்படியெல்லாம் பார்த்துக்கிறன்னு நானே தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு. அதுக்காகத்தான் உங்கிட்ட சொல்லாம இருந்தேன்” என்றான்.

சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த வெற்றி, “ஆனா, உண்மையாவே நீ என்னை நல்லா பார்த்துக்கிட்டேடீ. எங்க அம்மா, நான் சின்னப் பிள்ளையா இருந்தப்போ என்னைப் பார்த்துப்பாங்கல்ல… அதே மாதிரிதான் நீயும் என்னைப் பார்த்துக்கிட்டே. தேங்க்யூடி, பொண்டாட்டீ” என்றான்.

அவனது குரலில் நெகிழ்ச்சி நிறைந்திருந்தது. அவளது மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டான் வெற்றி.

அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, வெற்றி அவளது உதடுகளை மெதுவாகத் தொட்டு, குறும்பாகப் புன்னகைத்தான்.

“என்னடீ, எப்பவுமே எனக்குப் பதில் பேசுற இந்த உதடு இன்னைக்கு எதுவுமே பேசாம இருக்கு?” என்று அவளது உதடுகளை இரு விரல்களால் மெதுவாகப் பிடித்துக் கேட்டான்.

அவனது குறும்பான செயலில் கனியின் பதற்றம் மேலும் அதிகரித்தது. இத்தனை நாள் அவனிடம் தயக்கமின்றிப் பேசியவளுக்கு, இப்போது அவன் தன்னைப் பார்க்கிறான் என்ற எண்ணமே புதுவிதமான உணர்வைக் கொடுத்தது.

“இல்லை… இத்தனை நாள் உங்களுக்குப் பார்வை இல்லன்னு, நான் ரொம்ப… ரொம்பப் பேசினேன். உங்களுக்குப் பார்வை இல்லங்கிற ஃபீல் வரக்கூடாதுன்னு கொஞ்சம் அதிகமாவே நடந்துக்கிட்டேன். ஆனா, இப்போ உங்களுக்குப் பார்வை வந்திருச்சுன்னு தெரிஞ்சதிலிருந்து எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. கொஞ்சம் பயமாவே இருக்கு. உள்ளுக்குள்ள படபடன்னு இருக்கு. வயித்துக்குள்ள எலிக்குட்டி ஓடுற மாதிரி இருக்கு” என்று தயக்கத்துடன் கூறினாள் கனி.

அவளது மடியில் தலை வைத்துப் படுத்திருந்த வெற்றி, அவள் சொன்னதைக் கேட்டதும் குறும்பாகச் சிரித்தான். அடுத்த நொடியே, அவளது வயிற்றில் மென்மையாக ஒரு முத்தம் பதித்தவன், தன் முகத்தை அவளது வயிற்றில் லேசாகப் பதித்துத் தேய்த்தான்.

“இப்போவும் எலிக்குட்டி ஓடுற மாதிரி இருக்கா?” என்று அவன் குறும்பாகக் கேட்டான்.

“ஏன் அத்தான்… நீங்க வேற என்னைப் பயமுறுத்துறீங்க!” என்று கனி பதறியபடி அவனது தலையைத் தள்ளிவிட முயன்றாள்.

அவளது பதற்றத்தை ரசித்தபடி எழுந்தவன், அவளுக்கு அருகில் ஒட்டியவாறு அமர்ந்தான். அவளது கையைப் பிடித்துக்கொண்ட வெற்றி, தன் விரல்களோடு அவளது விரல்களைக் கோர்த்துக்கொண்டான். அவளது விரல்களை ஒவ்வொன்றாக வருடியவன், அவற்றின் மென்மையை ரசித்தபடியே அவளது முகத்தைப் பார்த்தான்.

“ஆமா, உனக்குக் கோபம் வந்ததுல என்னையா? ரெண்டு நாளா அத்தான்னுகூடக் கூப்பிடாமப் பிடிவாதமா இருந்தல்ல?” என்று கேட்டான்.

“எனக்கு உங்க மேல கோவம் வந்துச்சு. அதான்…” என்றாள் கனி, முகத்தைத் திருப்பிக்கொண்டு.

“அப்படியா? கோவம் வந்து என்னெல்லாம் பண்ணுவ?”

“உங்களை நான் வாங்க, போங்கன்னு பேசினேன். இதுக்கு அப்புறம் கோபம் வந்தா வாடா, போடான்னு பேசவேண்டி வரும்…” என்று அவள் சொல்ல, வெற்றி சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தான்.

“பொண்டாட்டி, நான் உங்கிட்ட ஒண்ணு கேட்கவா?” என்று கேட்ட வெற்றிக்கே சற்றுத் தயக்கமாக இருந்தது.

“என்ன அத்தானு, கேளுங்க?”

“எனக்குப் பார்வை இல்லாதப்போ, திடீர்னு என்னைக் கிஸ் பண்ணுவல்ல… அது மாதிரி ஒண்ணு இப்போ கிடைக்குமா?” என்று ஏக்கமாகக் கேட்டான்.

அவள் லேசாக வாயைப் பிளந்து அவனையே பார்த்துக்கொண்டிருக்க,

“உன் அத்தானுக்கு இதைக்கூடப் பண்ண மாட்டியா?” என்றான்.

அவன் கேட்க, அவளால் மறுக்கவும் முடியவில்லை. எச்சிலை விழுங்கியவள், “ஒண்ணே ஒண்ணுதான்! ஆனா, நீங்க கண்ணை மூடணும்” என்றாள்.

அவளது நிபந்தனைக்குக் கட்டுப்பட மறுத்தவன்,

“அது முடியாது. அப்போ முத்தம் கொடுக்கும்போது உன்னைப் பார்க்க முடியாம எவ்வளவு ஃபீல் பண்ணியிருக்கேன் தெரியுமா? என் பொண்டாட்டி எனக்கு முத்தம் தர்றதை நான் முழுசாப் பார்த்து ஃபீல் பண்ணணும்” என்றான்.

அவனது ஏக்கத்தை உணர்ந்த கனி, மெதுவாகக் குனிந்து அவனது கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள். பிறகு அவனது நெற்றியில் ஆழமாக முத்தமிட்டாள்.

கண்களைத் திறந்திருந்தவன், முத்தங்களை அளிக்கும் உதடுகளை இரசித்தான்.

“என்ன பொண்டாட்டி, சின்னப் பிள்ளை மாதிரி கன்னத்துலயும் நெத்தியிலயும் முத்தம் கொடுக்கிற?” என்று கொஞ்சலாகக் கேட்டான்.

அவள் வெட்கத்துடன் அவனைப் பார்க்க, அவளது ஒரு விரலை மெதுவாகப் பிடித்து, தன் உதடுகளுக்கு அருகில் கொண்டுவந்தான்.

 

“இங்கதான் முத்தம் கொடுக்கணும், பொண்டாட்டி…” என்று தன் உதடுகளைச் சுட்டிக்காட்டினான்.

அவன் சொன்னதைக் கேட்ட கனி, வெட்கத்தில் தலைகுனிந்தாள்.

அவனது கையிலிருந்த தன் விரலை மெதுவாக விடுவித்துக்கொண்டாள்.

அவளது முகத்தைத் தன் பக்கம் திருப்பியவன், தன் கைகளில் அவளது இரு கன்னங்களையும் ஏந்திக்கொண்டான். அவளது கண்களை ஆழமாகப் பார்த்தான். அவளும் அவனது கண்களைப் பார்த்தபடி அசையாமல் நின்றாள்.

சில நொடிகள் இருவரது பார்வைகளும் ஒன்றோடொன்று கலந்திருக்க, திடீரென்று அவளது உதடுகளில் தன் உதடுகளைப் பதித்தான்.

முதலில் மென்மையாகத் தொடங்கிய அந்த முத்தம், மெல்ல மெல்ல ஆழமானது. அவனது அணைப்பில் தன்னை மறந்த கனி, அவனது சட்டையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள். அவளது அருகாமையும், அவளது உதடுகளின் மென்மையும் வெற்றியை மெய்மறக்கச் செய்தன.

இருவரும் ஒருவரையொருவர் பிரிய மனமின்றி அந்த முத்தத்தில் கரைந்திருக்க, மூச்சுக்காற்றுக்காகத் தன்னவள் தடுமாறுவதை உணர்ந்த வெற்றி, மெல்ல அவளது உதடுகளிலிருந்து விலகினான்.

அவளது முகத்தைத் தன் கைகளுக்குள் ஏந்தியபடியே அவளைப் பார்த்தான். மூச்சைச் சீராக்க முயன்ற கனி, வெட்கத்தில் தலைகுனிந்தாள்.

அவனது கண்கள் அவளது முகத்தைத் தேட, அவளோ இன்னும் வெட்கம் கலந்த புன்னகையுடன் தலைகுனிந்தாள்.

“என்ன பொண்டாட்டி, மூச்சு விடக் கஷ்டமா இருந்துச்சா?” என்று குறும்பாகக் கேட்டான் வெற்றி.

அவள் வெட்கத்தில் தலைகுனிய, “கொஞ்சம் பிராக்டீஸ் பண்ணா சரியாயிடும். பிராக்டீஸ் மேக்ஸ் பர்ஃபெக்ட்!” என்றான் சிரித்தபடி.

“போங்க அத்தான்!” என்று அவள் அவனது தோளில் மெதுவாக அடிக்க, அவன் சிரித்துக்கொண்டே அவளை அணைத்துக்கொண்டான்.

“என் பொண்டாட்டியை ரொம்பப் பயமுறுத்த மாட்டேன். கொஞ்சம் கொஞ்சமாத்தான் பயமுறுத்துவேன்!” என்று அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

“போதும் அத்தான்… தூங்கலாம்!” என்றவள் அவனது மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

“சரிடீ பொண்டாட்டி!” என்றவன், அவளை இறுக்கமாக அணைத்தபடி கண்களை மூடினான்.

அந்த இரவு, காதல் தந்த புது உணர்வுகளோடு இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி உறங்கிப் போனார்கள்.

 

*********

 

 

 

 

அடுத்த அத்தியாயம்

கனி 21

கனி 21 வெற்றிக்குக் கண் பார்வை திரும்பிய பிறகு, கனி அவனிடம் காட்டிய தயக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. அவளுடைய ஒவ்வொரு தயக்கத்தையும் குறும்பாலும் காதலாலும் மாற்றிக்கொண்டிருந்தான் வெற்றி.அவனுடைய பார்வையில் தெரிந்த காதலும், அவளிடம் அவன் காட்டிய அன்பும் கனிக்குள் புதுவிதமான உணர்வுகளை…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்