அத்தியாயம் 10
அதிகாரம் கொடுக்கும் போதையை வேறெந்த போதை வஸ்துவும் கொடுத்து விடப் போவதில்லை!
அதிகாரம் கொடுக்கும் மமதையை வேறெந்த செயலும் தீர்மானிக்கப்போவதில்லை!
அதிகாரம் கொடுக்கும் அகங்காரத்தை எந்த பொருளும் தடுக்கவும் போவதில்லை!
“கொஞ்சம் ஸ்பீட் குறைவா போங்க ஸ்ரீதர்…” திக்கி திணறிக் கூறிய தமிழை இன்னாதென்று கூற முடியாத உணர்ச்சி கலவையில் பார்த்தான்.
“ஏன்? ஆக்சிடென்ட் பண்ணிடுவேன்னு பயமா?”
“இல்ல… இவ்வளவு ஸ்பீட் எனக்குப் பழக்கமில்லை. உடம்பு உதறுது…”
“கொஞ்சம் நேரம் போச்சுன்னா பழகிடும். போனவனுங்களை அப்படியே விட முடியாது…” என்றவன் வேகத்தை மேலும் அதிகரித்து நூற்றியென்பதை தொட்டான்.
“ஐயோ…” என்றவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தலையில் கைவைத்து ஒடுங்கி அமர்ந்து கொண்டாள்.
அவளது உடல் வெளிப்படையாகவே நடுங்கியது.
“தமிழ்…” மெல்லிய குரலில் அவளை அவன் அழைக்க, அவளிடமிருந்து பதில் வரவில்லை.
“தமிழ்…” சற்று பலமாகவே அழைத்துப் பார்த்தான். பதிலில்லை. நிமிர்ந்து பார்க்கக் கூடப் பயமாக இருந்தது அவளுக்கு.
சூழ்நிலைகளால் ஏற்பட்ட தாக்கம் ஒருபுறம் என்றால் ஸ்ரீதரன் எப்படிப்பட்டவன் என்று அறியாமலேயே அவனிடம் சிக்கியிருக்கும் மடமையை எண்ணி வெதும்பினாள்.
நெடுஞ்சாலையில் விபத்தில் உதவியவனா இப்படி ருத்ரமூர்த்தியாகத் தாண்டவமாடிக் கொண்டிருப்பது?
இவனுக்கு மொத்தம் எத்தனை முகங்கள்? ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு முகத்தைக் காட்டுவானா? உள்ளுக்குள் பிறந்த குளிர் இதயத்தைக் கவ்வி பிடித்தது.
“ஏய் இங்கிலீஷ் ரிவர்… அவ்வளவு வாயடிச்ச… இவ்வளவுதானா நீ?” கிண்டலாக அவன் கேட்ட தோரணையில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“நீங்க யார்? கையோட பிஸ்டல் வெச்சு இருக்கீங்க… திடீர்ன்னு ரெண்டு பேர் ஷூட் பண்றாங்க… போன்ல டார்வின் தியரி லெசன் எடுக்கறீங்க?… பயமா இருக்கு…” நடுக்கத்தோடு கூறியவள் இடைவெளி விட்டு, “மிஞ்சி மிஞ்சிப் போனா லோகாம்பா கூடச் சண்டை போடுவேன்… கிழவியை வம்பிழுப்பேன்… என் தங்கச்சி தம்பி… அவ்வளவுதான் என்னுடைய உலகம் எல்லாம்… எனக்கு இதெல்லாம் பழக்கம் கிடையாது. ப்ளீஸ் என்னை எங்கயாவது இறக்கி…” என்று முடிக்கும் முன்பே, அவன் குறுக்கிட்டான்.
“கண்டிப்பா… நாம போற வழில எங்கயாவது பஸ்ஸ்டான்ட் கண்ல பட்டா… உங்களை மதுரைக்கு பஸ் ஏத்தி விட்டுடறேன்மா…” என்று சட்டென்று பன்மையில் அவன் கூற, ஏனோ ஒரு ஏமாற்றம் அவளது மனதில்.
இருவருக்குமே தொண்டைக்குள் ஏதோ முள் சிக்கியது போலிருந்தது.
ஆனால் அவளது நிலையிலிருந்து பார்க்கும்போது அவளது இந்த உணர்வுகள் நியாயமாகவே தோன்றியது அவனுக்கு!
அதிலும் பத்து நாட்களில் திருமணம் வேறு…!
அவனையும் அறியாமல் அவளது திருமணத்தைப் பற்றி நினைத்தபோதுதான் மனம் அழுந்தியது!
திருமணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணின் பால் மனம் சரியலாமா? நீயெல்லாம் ஒரு மனிதனா என்று மனசாட்சி அவனை நிற்க வைத்துக் கேள்வி கேட்பது போலத் தோன்றியது.
நிச்சயம் நடந்த பெண் என்பவள் பிறன் மனையாயிற்றே… இன்னொருவனுக்குச் சொந்தமான பெண்ணைத் தவறாக நோக்குவது எத்தகைய தவறு!
இதைதான் உன் தாய் உனக்குக் கற்று கொடுத்தாரா என்று யாரேனும் கேள்வி கேட்டால் என்ன பதிலுரைப்பாய்?
அதிலும் எத்தகைய சிக்கலில், சுழலில் நீ சிக்கியிருக்கிறாய் என்பதை நீ அறிய மாட்டாயா? அந்தச் சுழலில் இவளையும் இழுக்கத்தான் உனக்கு விருப்பமா?
உன் உயிரே உனக்குச் சொந்தமானது அல்ல என்று ஒரு சிலர் கொக்கரிக்கும் நிலையில் உனக்கு இந்தக் காதல் அவசியமா?
காதலா? கசப்பான அனுபவங்களுக்குப் பிறகுமா? ஆனால் இதுவரை எந்தப் பெண்ணிடமும் மனம் இந்தளவு சென்றதில்லையே… அவளது முகம் வெகு பரிச்சயமாக தோன்றுகிறது! அவளது செய்கைகள், தான் எப்போதோ பார்த்து பழகியதைப் போல இருக்கிறதே! சுருக்கமாக ஏதோ ஒரு பிறவியில் அவளோடு உயிரோடு உயிராகக் கலந்து உறைந்தது போல தோன்றியது.
இது போன்ற உணர்வுகள் அவனுக்கு புதியது! சந்திக்கும் பெண்களிடமெல்லாம் இந்த உணர்வுகள் தோன்றி விடுமா என்ன?
மனசாட்சி விடாமல் கேள்வி எழுப்ப… அவனால் அதன் கேள்விகளுக்குப் பதில் கூற முடியவில்லை.
அது கோபமாக மாறிக் கால்களுக்கு இடம் மாறியது.
வாகனம் முன்பை காட்டிலும் பறந்தது!
அவனது குரலிலிருந்த அந்த ஏமாற்றத்தை அவளால் உணர முடிந்தது, “இல்ல… நான்…” அது அவளுக்குமே ஏமாற்றத்தைக் கொடுக்க வார்த்தைகளைக் கோர்க்க திக்கித் திணறினாள்.
“உங்க மேல தப்பில்லம்மா… என்னோடு வர்றது உங்களுக்கு சேப் இல்லை. தமிழ்நாட்டில் தானே இருக்கோம்ன்னு கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்துட்டேன்.”
அதுவரை இருந்த நெருக்கம் பறிபோக அவனது ஒட்டாத அந்தப் பேச்சு அவளை நெருடியது. மனம் விசித்திரமாகச் சினந்தது.
“இப்ப எதற்கு இப்படி பேசறீங்க?”
நேரடியாக அவனைக் கேட்டாள். அவனுக்குச் சற்றும் புரியவில்லை.
“என்ன பேசறேன்.?”
“நல்லாத்தானே பேசிட்டு இருந்தீங்க… இப்ப என்னாச்சு?”
“நல்லாத்தான்மா இருக்கேன்… நத்திங்…”
“சரி… நீங்க நல்லாவே இருங்க… முதலில் எனக்கு ஒரு பதிலைச் சொல்லுங்க… அப்புறமா நீங்க என்னைப் பஸ் ஏத்திவிடலாம்…” அவனது ஒட்டாத பேச்சில் எரிச்சலடைந்து அவள் இப்படிக் கேட்டாள்.
“நீங்கத் தானேம்மா உங்களை இறக்கி விடச் சொன்னீங்க… ஏன் இப்படி மாற்றி மாற்றிப் பேசிட்டு இருக்கீங்க?” அவனுமே விடாமல் கெட்டு கொண்டிருந்தான். உள்ளுர எரிச்சல் கனன்றுக் கொண்டிருந்தது.
“வில் யூ ப்ளீஸ் ஸ்டாப் திஸ் அம்மா… நான் என்ன அவ்வளவு வயசான மாதிரியா இருக்கேன்? அம்மா அம்மான்னு…” கடுகடுத்தவளைச் சிறு புன்னகையோடு பார்த்தான். உதடுகளில் அந்தக் கிண்டல் சிரிப்பு மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.
“அம்மான்னா அம்மான்னே அர்த்தமாம்மா? ஒரு மரியாதைக்குக் கூப்பிடத்தான் ம்மா அந்த அம்மாங்கற வோர்ட் இருக்கு… இது கூட உங்களுக்குத் தெரியலையாம்மா?” மூச்சுக்கு முந்நூறு தரம் அம்மா என்றழைத்து மீண்டும் கலாய்த்தவனை கொலைவெறியோடு பார்த்தாள் தமிழ்.
“வேண்டாம்… எனக்கு வர்ற கோபத்துல உங்க கழுத்தை அப்படியே நெரிச்சுடுவேன்…” என்று அவனை நெரிப்பது போலப் பாவனை செய்தவளைக் கண்டும் காணாமல்,
“என்னம்மா நீங்க அம்மான்னு சொன்னா கூடக் கோபப்பட்டா எப்படி?”
“வேண்டாம்…” என்று அவனது கழுத்தை நெரிக்கச் சீட்டிலிருந்து எழுந்தவள், “ம்மா…” என்று முகத்தைச் சுளித்து கொண்டு வலி கொடுத்த வேதனையை உணர்ந்து அப்படியே அமர்ந்தாள். காலைப் பிடித்துக் கொண்டு!
வாகனத்தின் வேகத்தைச் சற்று குறைத்து அவள் புறம் திரும்பி, “தமிழ் என்னாச்சு?” என்று உண்மையிலேயே சீரியசாகக் கேட்டான்.
“என்னன்னு தெரியலை… முட்டியில் உயிர் போற மாதிரி வலிக்குது…” உதட்டைக் கடித்தபடி வலியைத் தாங்கிக்கொண்டு அவள் கூற, அவனது முகத்தில் பதட்டம்.
வேறெதையும் விட அவளது அந்த அவஸ்தை அவனுக்கு முக்கியமாகப் பட்டது. போனவர்களைத் தொடர்வதை இப்போதைக்குத் தேவையில்லையென்று ஒதுக்கி அவனது வாகனத்தை ஓரமாக நிறுத்தினான்… அவளது வலி சூழ்ந்த முகம் அவனைத் திருப்பிப் போட்டிருந்தது.
இருள் விலகத்துவங்கியிருந்த நேரம்.
முன்னர் நிறுத்திய இடம்போல இல்லாமல் இந்த இடம் ஆள் நடமாட்டத்தோடு ஒரு சிறு நகரத்தின் ஆரம்பம் போலத் தோன்றியது. அவ்வப்போது தாண்டிச் செல்லும் வாகனங்களின் வெளிச்சம் பளீரெனக் கண்ணை உறுத்தியது.
அவளது முட்டி விண்டும் விடும் போல வலித்தது. தூக்கம் இல்லாததால் கண்கள் வேறு கூடுதலாக எரிந்தது.
வாகனத்தை நிறுத்தியவன் வெளிச்சத்திற்காக லைட்டை ஆன் செய்தான். அப்போதுதான் கவனித்தான் அவளது கைகளிலும் சிராய்த்து இருப்பதை.
“இங்க கையைக் காட்டுங்க…”
சிராய்த்து இருப்பதை அப்போதுதான் அவளும் கவனித்தாள்.
“ஸ்ஸ்ஸ்ஸ்…” அந்த எரிச்சலும் சேர்ந்து கொள்ள, முகத்தை அவள் சுருக்கினாள்.
அவசரமாக இறங்கி வண்டியில் எப்போதும் இருக்கும் முதலுதவி பெட்டியை எடுக்கப் போனான். சிறு பாக்ஸில் அவசர தேவைக்காக முதலுதவி மருந்துகளையும் பொருட்களையும் அவன் வைத்திருப்பது எப்போதுமேயான வழக்கம்.
“கை நீட்டுங்க…” என்றவன் டிஞ்சரை பஞ்சில் தொட்டு கொண்டு அவளது கையில் தடவ முயல, “இல்ல… கொடுங்க நானே தடவிக்கறேன்.” அவனை மறுத்துப் பஞ்சை அவளது கையில் வாங்கினாள்.
“அவசரத்துக்கு என்ன தப்பு… ஸ்டுபிட் மாதிரி பிஹேவ் பண்ணாதீங்க…”
அவளது அந்தச் செய்கை அவனைச் சிடுசிடுக்க வைத்தது. ஆனால் அவளோ அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. டிஞ்சரை பஞ்சில் நனைத்துச் சிராய்த்த இடத்தில் வைத்தாள்.
“ஸ்ஸ்ஸ்… ம்மா…”
கால் வேறு வின்வின்னென்று வலித்தது.
“தமிழ் நீட்டுங்க…” என்று அவன் அவசரப்படுத்த, காலை நீட்டத்தான் பார்த்தாள். ஆனால் முடியவில்லை.
வலி உயிர் போனது.
“முடியலை… ரொம்ப வலிக்குது…” வலி தாங்க முடியாமல் அவளது கண்களில் கண்ணீர் சூழ்ந்தது.
அவளைச் சற்றும் அசைக்காமல் காலை அவன் புறமாக மெதுவாகத் திருப்பப் பார்க்க, அவனது கையைத் தட்டி விட்டாள்.
“இருங்க நானே பார்க்கறேன்.”
அவனது தொடுகை அவளுக்கு ஒப்பவில்லை. அந்தச் சங்கடத்தில் அவள் மறுக்க, அவளது அந்த மறுப்புகள் அவனைக் கோபத்தில் ஆழ்த்தியது.
“ஏய் அறிவிருக்கா? இப்ப நான் தொட்டு பார்த்தா என்னவாகிட போகுது? டாக்டர் வந்து எக்சாமைன் பண்ணா நீ என்ன செய்வ? அப்பவும் இப்படித்தான் முட்டாள்தனமா நடந்துக்குவியா?” கடுப்பில் அவளை வாட்டியவனை நேராகப் பார்க்காமல்,
“யார் என்னன்னே சொல்லமாட்டானாம்… இந்த அழகுல இப்படி கோபம் வேற… இந்த ஆல் இன் ஆல் அப்பாடக்கருக்கு இருக்கக் கொழுப்பு இருக்கே…” என்று தனக்குள்ளாக முணுமுணுத்து விட்டுக் கை வைத்து முட்டியைத் தொட்டு பார்த்தாள்.
கைப்பிசுபிசுத்தது!
அடிபட்டதற்கு அடையாளமாக ரத்தம்!
அதுவும் இவ்வளவா என்ற அதிர்ச்சியில், “ஐயோ ரத்தம்ம்ம்ம்…” என்று தன்னையும் அறியாமல் அவள் கூறிவிட, ரத்தத்தைப் பார்த்தவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
“ஓ மை காட்… அப்படியே இருங்க…” என்று அவசரமாகக் கூறியவன், காரை விட்டிறங்கி அவள் புறம் சென்று, காலைத் தாங்கிப் பிடித்தான்.
“ஹய்யோ… தயவுசெய்து விடுங்க…” யாரோ ஒருவன் தன் காலைப் பிடிப்பதா என்ற லஜ்ஜையில் அவள் மறுக்க, நிமிர்ந்து பார்த்து முறைத்தான்.
அவளுடைய சப்தநாடியும் ஒடுங்கியது. அவ்வளவு கோபம் அவனது கண்களில்… எப்படி சடுதியில் அவ்வளவு கோபத்தையும் ஒரே நொடிப்பார்வையில் காட்டுகிறான் என்று அதிர்ந்தாள்.
“இப்ப ஒன்னும் உன்னைக் கடித்து முழுங்கிட மாட்டேன். வாயை மூடிகிட்டு உட்கார்…” இறுக்கமான அவனது சொற்கள் அவளை மேலும் மறுக்கவிடவில்லை.
அவளது லாங் ஸ்கர்ட்டை சற்றே மேலே ஏற்ற, ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
மேலும் ஏற்ற முயல… அவனது கைகளை அவளது கைகளால் தடுத்தாள். கணுக்காலைத் தாண்டி அவன் பார்க்க நேரிட்டதே அவளுக்குக் கூச்சமாக இருந்தது.
“ஷிட்… ஜஸ்ட் லீவ் இட் தமிழ்… இட் இஸ் ஜஸ்ட் பார் அ மெடிக்கல் எமர்ஜென்சி…”
அவளுக்குத்தான் கூச்சமும் அச்சமுமே தவிர அவன் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை. அந்த அடர்ந்த தாடியும் மீசையும் அவனது உணர்வுகளைக் காட்டிவிடுமா என்ன?
முட்டி நன்றாக வீங்கிவிட்டிருந்தது.
“ஐ திங்க் இட் மே பி ஸ்ப்ரைன் ஆர் அ மைல்ட் ஃப்ராக்ச்சர்…!” என்று அவனுக்குள்ளாகக் கூறிக்கொண்டவன் மருந்தை எடுப்பதற்காக எழுந்து ஸ்டியரிங் அருகிலிருந்த முதலுதவி பெட்டியை எடுக்க முயல… அவனை உராய்வதைத் தடுக்கும் பொருட்டு,
“இருங்க நானே எடுத்துத் தர்றேன்.” மனம் படபடக்க எடுத்துக் கொடுத்தாள்.
அவளது இந்தச் செய்கைகள் அவனது புருவத்தை நெரிக்க வைத்தன. ஆனாலும் வலியோடு அவளிருந்த நிலை அவனைப் பொறுமையாக இருக்கக்கூறியது.
பஞ்சினை எடுத்து வழிந்த ரத்தத்தைத் துடைத்தவன் மினரல் வாட்டரால் அந்த இடத்தைக் கழுவி விட்டான்.
“ப்ச்… நானே கழுவறேன்.” அவனிடமிருந்து பாட்டிலை பிடுங்க முயல,
“கொஞ்சமாவது அடங்கு… ரொம்ப அலட்டாத… வெறுமனே இந்தக் காலைப் பார்க்கறதுல…” என்று ஆரம்பித்தவன் அவளது முகம் போன போக்கைப் பார்த்து நிறுத்தினான்.
“இப்படியே இரு, அப்புறம் இன்னும் கன்னாபின்னான்னு சொல்லிடுவேன்… ஜாக்கிரதை…”
கிண்டலாக ஆரம்பித்து மிரட்டலாக முடித்தவனைப் பார்த்து முறைத்தாள்.
“என்ன? கன்னாபின்னான்னா?” கலக்கமாக அவள் கேட்டாள்.
“ம்ம்ம்… டெமோ காட்டனுமா?” என்று அவளை உறுத்து முறைத்து விட்டுப் பஞ்சால் டிஞ்சர் தடவினான். அவளோ நெளிந்து கொண்டே அமர்ந்திருக்க,
“எப்படி இப்படி அடிப்பட்டுச்சு?”
“ம்ம்ம்… இழுத்துட்டுப் போய்க் குழில தள்ளி விட்டுட்டு கேட்கிற கேள்வியைப் பாரு… பக்கி… ஸ்ஸ்ஸ்…” சற்று சப்தமாகவே கண்களில் கண்ணீரோடு முணுமுணுத்தவளை நிமிர்ந்து பார்த்துக் குறும்பாகப் புன்னகைத்தான்.
“ம்ம்ம்… இழுத்துட்டுப் போய்த் தள்ளி விட்டு…” என்றவன் வாய்விட்டே சிரிக்க துவங்கினான்.
“என்னுடைய வலி உங்களுக்குக் கிண்டலா தெரியுதா?” கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டே அவள் கேட்டாள்.
“நீ சொன்ன வோர்ட்ஸ் தான் ஹைலைட்டே… செம டைமிங்கா டெலிவரி பன்றியே தமிழ்…” என்று கூறிவிட்டு, “அசைக்காத… நான் போய் இங்க எங்கயாச்சும் ஹாஸ்பிடல் இருக்கான்னு கேட்டுட்டு வர்றேன்.”
சற்று தூரத்தில் வந்து கொண்டிருந்தவர்களைக் கேட்டவன், காரை நோக்கி ஓடி வந்தான்.
ஸ்டார்ட் செய்துக் கொண்டே, “இன்னும் கொஞ்ச தூரம் போனா ஒரு சின்ன ஹாஸ்பிடல் இருக்காம்… டுவன்டி போர் அவர்ஸ் ஹாஸ்பிடல்…” என்றவன் அந்த ஹாஸ்பிட்டலை தேடி நிறுத்தினான்.
அதன் பின் காரியங்கள் வேகமாக நிகழ்ந்தன… ஆனால் கெட்ட நேரத்திலும் நல்ல நேரமாகக் கால் ஃப்ராக்ச்சர் இல்லையென்றும் காயத்தோடு சிறு ஸ்ப்ரைன் தான் என்று அவசர சிகிச்சை பிரிவிலிருந்த மருத்துவர் கூறினார். நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
“ஷப்பா… நல்ல வேலை…” என்றவனை, “என்ன?” என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“இல்ல… இன்னும் பத்து நாளில் உனக்குக் கல்யாணம் இல்லையா? இந்த நேரத்தில் உன்னுடைய கால் ஃப்ராக்சர் ஆகியிருந்தா லைப் முழுக்க என்னைத் தான் திட்டிட்டு இருந்துருப்பல்ல?” மிகவும் இயல்பாக அவன் கேட்டு விட, அவளுடைய முகத்தில் வெந்நீரை அள்ளிக் கொட்டியது போல உணர்ந்தாள்!
இது எப்படி மறந்தது?
பத்து நாட்களில் திருமணம் என்பது முடிவானதுதானே!
அதைத் தானும் ஏற்றுக் கொண்டு அதற்காகத் தன்னை தயார்படுத்திக் கொண்டு இருந்தவள் தானே… இப்போது மட்டுமென்ன இப்படியொரு அதிர்ச்சி என்று மனசாட்சி கேள்வி கேட்டது.
மனம் ஏதோ விபரீதமாக உணர்வதைத் தாமதமாகத்தான் உணர்ந்தாள்.
இது சரி கிடையாதே!
மாலையிடக் காத்திருப்பவன் ஒருவன். இங்கு இன்னொருவனிடம் மனம் லயிப்பதா? உனக்கே இது சரியாகப்படுகிறதா? புத்தி அவளைச் சரமாரியாகத் திட்டிக்கொண்டிருக்க மனமோ மயக்கத்தில் ஆழ்ந்திருந்தது. எதற்கும் பதில் கூற விருப்பப்படாமல்!
எதுவும் சொல்லாமல் காயத்திற்கு டிரெஸ்ஸிங் செய்வதற்காக அவனோடு சென்று கொண்டிருக்க, அவனோ அவளது பதிலை எதிர்பார்த்தான்.
அவளது திருமணத்தை அறிந்தவன் தான். ஆனாலும் இந்த ஓர் இரவு பழக்கத்துக்குப் பின் அவளை விட்டுப் பிரிவது என்ற நினைவே ஏனோ கசந்தது. வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்க முடியுமா, அது நடக்குமா என்று மனம் கேள்வி கேட்டது?
அவளிடமிருந்து ஏதாவது பதில் தேவைப்பட்டது இப்போது அவனுக்கு…! அது எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை. வார்த்தைகள் மட்டுமே!
ஆனால் அவளது மௌனம் உடையவும் இல்லை! அவனாக உடைக்கவும் இல்லை!
மௌனம் மௌனமாகவே போராடிக்கொண்டிருந்தது.
“முதலில் இஞ்சக்ஷன் போட்டுக்கலாம்மா…” என்று அந்த நர்ஸ் கையில் இஞ்சக்ஷனோடு வர, தமிழ் ஸ்ரீதரனின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
“இது இடுப்பில் போடற ஊசிம்மா… உங்க ஹஸ்பன்ட் வெளியே இருக்கட்டும்…” அந்த நர்ஸ் கூறிவிட்டு அவரது வேலையைப் பார்க்க, தமிழ் தான் அதிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“இல்…” என்று கூற வந்தவளை கண்களைக் காட்டி வேண்டாமென்று தடுத்து விட்டு லேசான சிரிப்போடு வெளியே போகப் பார்த்தான். அவனை இழுத்துப் பிடித்து நிறுத்தினாள்.
“எனக்கு ஊசின்னா பயம்…” என்று அவனது தோளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு திரும்பிக் கொள்ள, அவன் சிரித்து கொண்டே மறுபுறம் திரும்பிக்கொண்டான்.
அந்த நர்ஸ் சிரித்து கொண்டே ஊசி போட்டுவிட்டு, “என்ன சார்… ரொம்ப செல்லமோ? பாருங்க இந்தக் குட்டி ஊசிக்குப் போய் இப்படி நடுங்கறாங்க…”
“ஆமா சிஸ்டர்… என்ன பண்றது என்னுடைய ஒரே ஒய்ப்பா போய்ட்டாங்க… அதான் கொஞ்சம் செல்லம் ஜாஸ்தி…” என்று குறும்பாகக் கூற, அந்த நர்ஸ் வாய்விட்டுச் சிரித்தார்!
தமிழ் அவனை உறுத்து விழித்தாள்.
எவ்வளவு தைரியம்… எதில்தான் விளையாட்டு என்று அளவில்லை?
“ஏன்மா இப்படி பயந்தா எப்படி குழந்தை, டெலிவரி எல்லாம்? தைரியமா இருங்க…” என்று ஃப்ரீ அட்வைஸ் செய்ய, தமிழுக்கு கொலைவெறியே வந்தது அவனது வாய்கொள்ளா சிரிப்பைப் பார்த்து.
அதே சிரிப்போடு அவருக்குப் பர்சிலிருந்து ஆயிரம் ரூபாய் தாளை எடுத்து நீட்ட, அவரோ,
“ஐயோ என்ன சர்…! நீங்க?” வாங்கத் தயங்கினார். தமிழ் எதையும் கிரகிக்க முடியாத நிலையிலிருந்தாள். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சிவைத்தியம் பார்ப்பவனை உடன் வைத்திருந்தால்?
“இருக்கட்டும் சிஸ்டர்… வெச்சுக்கங்க… இவங்களுக்கு வலிக்காமல் ட்ரசிங் பண்ணி விட்டுடுங்க…” என்று சிரிப்போடு கூறிவிட்டு வெளியே சென்றான்.
ட்ரசிங் முடிந்து இறுக்கமாகவே வந்தவளை அழைத்துக்கொண்டு வந்தான். அவனைச் சண்டை பிடிப்பதற்காகக் கோபமாக வாயெடுத்தவளை, “உஸ்ஸ்” என்று சைகையால் எச்சரித்தான்.
தன்னுடைய ஐபோனை கையில் வைத்துச் சில நொடிகள் தீவிரமாகப் பார்த்தான். அவனது முகத்தில் சிந்தனைக்கோடுகள்.
“தமிழ்… உன்னுடைய போனை தாயேன்…”
எதுவும் விளங்காமல் தன்னுடைய போனை எடுத்து அவனிடம் நீட்டினாள்.
முக்கியமான சில எண்களை மட்டும் அவசரத்திற்காக அவளது கைப்பேசிக்கு மாற்றினான். எல்லாவற்றையும் செக் செய்து கொண்டு அந்தக் கைப்பேசியை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து பார்வையிட்டான்.
அதன் பின்…
அவன் கையிலிருந்த அந்த லேட்டஸ்ட் மாடல் ஐபோன் செவன் அருகிலிருந்த குப்பைத்தொட்டியை தஞ்சமடைந்திருந்தது!






😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳