arrow_back
சக்கரவியூகம் அத்தியாயம் 14
சக்கரவியூகம் chevron_right பகுதி 14 / 26

அத்தியாயம் 14

visibility 917
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.9/5 (14 மதிப்பீடுகள்)
பகிர்

பகவான் சிரித்துக் கொண்டே கர்ணனிடம் சொன்னார், ‘அடே துஷ்டனே, எந்த சமயம் திரௌபதி நிர்வஸ்திரமாக்கப்பட்டுக் கொண்டிருந்தாளோ, அந்த சமயம் உன்னுடைய தர்மம் எங்கே போய் விட்டது? எப்போது அபிமன்யு அநியாயமாக கொல்லப்பட்டானோ, அந்த சமயம் உன்னுடைய தர்மம் எங்கே போய் விட்டது? பாண்டவர்களுக்கு பன்னிரண்டு வருஷ வனவாசம், ஒரு வருஷ அஞ்ஞாதவாசம் அனுபவிக்க வேண்டியிருந்ததே, அந்த சமயம் உன்னுடைய தர்மம் எங்கே போய் விட்டது?

இருள் கவிழ்ந்திருந்தது!

மௌனமாக வீட்டினுள் நுழைந்தாள் தமிழ்நதி.

பெற்றோர் இருவருமே வீட்டிலில்லை. வேலையாட்கள் மட்டுமே வீட்டுக்குப் பின் இருக்கும் தோப்பிலிருந்தனர். வீட்டுக்கு வேலைக்கு உதவிக்கு இருக்கும் ராஜாத்தி மட்டுமே வீட்டிலிருக்க,

“அம்மாவும் அப்பாவும் எங்கே ராஜாத்திக்கா?” தன்னை வரவேற்று பேகை வாங்கியவளிடம் தமிழ் கேட்டாள்.

“எல்லாரும் முனியப்பன் கோயில் பூசாரியை பார்க்க போயிருக்காங்கமா…” என்றவாறே தண்ணீரை அவளிடம் கொடுத்தாள் ராஜாத்தி.

“ம்ம்ம்… எதற்கு?” சாதாரணமாகத்தான் அவள் கேட்டாள்.

“குலதெய்வத்துக்குத்தானே மொத பத்திரிக்கை வைக்கணும்… அதுக்கு தான்…” என்று அவள் கூறவும் தமிழுக்கு நெருப்பை மிதித்தது போலிருந்தது.

‘முதல் பத்திரிக்கையா?’ என்ற அவளது திகைத்த பார்வையை உணராமல்,

“இன்னைக்கு படையல் போட்டுட்டு வேலையை ஆரம்பிக்கறாங்கம்மா… மதினி உங்களை ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தாங்க… நல்ல நாள் போய்ட கூடாதேன்னு தான் போய்ட்டாங்க… நாளைக்கு உங்க அத்தையம்மா வராகளாம்… ”

“ஓஓ…” என்ற அவளது தலையாட்டலில் சற்றும் உயிர்ப்பில்லை.

“நைட்டுக்கு டிபன் செஞ்சு வைக்க சொன்னாங்க… வெச்சுட்டேன்மா… நீங்க வந்தவுடனே என்னைப் போக சொன்னாங்க… நான் கிளம்பட்டா?”

தமிழின் பதிலை எதிர்பார்த்து அவள் நிற்க,

“ம்ம்ம்… கிளம்புக்கா… நான் பார்த்துக்கறேன்.” உணர்வு எங்கோ பயணித்துக்கொண்டிருக்க சுரத்தே இல்லாமல் அவள் கூறினாள்.

“ஒரு மாதிரியா இருக்கீங்களே… கொஞ்சம் காப்பி தரட்டா?” ராஜாத்தி அக்கறையாகத் தான் கேட்டாள். ஆனால் நினைவுகள் அவனிடமே ஸ்தம்பித்து விட்டதைப் போல உணர்ந்தாள் தமிழ்நதி.

“காபியை விட எனக்கு ஜிஞ்சர் டீ தான் பிடிக்கும் தமிழ்… நீ காபி வாங்கிக்க,”

திருச்சியில் நான்கு மணிக்கு மதிய உணவென்ற பெயரில் கிடைத்ததை உண்டு விட்டு அவனுக்காக ஜிஞ்சர் டீயை சொன்னவனின் குரலே அவளது காதில் ஒலித்துக்கொண்டிருந்தது.

அவளுக்கோ டீயை விடக் காபிதான் பிடிக்கும் என்று அறிந்து கொண்டு அவளுக்குத் தனியாக காபியைக் கூறிவிட்டு அந்த ஜிஞ்சர் டீயை ரசித்து அருந்தியவனின் அந்த முகத்தை இந்தப் பிறவியில் மறக்க முடியுமா?

“காபி வேண்டாம் ராஜாத்திக்கா… நல்லா இஞ்சியைத் தட்டிப்போட்டு ஜிஞ்சர் டீ கொடுங்க…” என்று அவள் கூறினாள். அவளை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு அகன்றாள் ராஜாத்தி.

புலிப் பசித்தாலும் புல்லை உண்ணாது என்பதைப் போல அந்த டீயின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்காதவள் தமிழ். மாலை வேளையில் அவர்களது வீட்டில் அனைவரும் டீ குடிக்கும் போதும் தனக்குக் காபி மட்டும் தான் வேண்டும் என்று லோகாம்பாவிடம் சண்டை பிடித்த பெண்ணா இப்போது ஜிஞ்சர் டீ கேட்கிறாள் என்று வியந்து பார்த்தாள் ராஜாத்தி!

புன்னகையோடு தமிழ் கேட்ட டீயை அவள் போட போக, தமிழோ அவனது குறும்பான செய்கையிலே மனம் லயித்திருந்தாள்.

அவனது டீயை ரசித்துக் குடித்தவன், மத்திய பேருந்து நிலையத்தின் மக்கள் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடியே மௌனமாக காபியை அருந்திக்கொண்டிருந்த தமிழை ரசித்துப் பார்த்தான்.

நான்கு மணி வெயிலும் இல்லாமல் மேகமூட்டத்தோடு இருந்த வானம் சிலுசிலுவென வாடை காற்றை வீச, அந்தச் சூழ்நிலை ஏனோ அவனுக்கு ரம்யமாக தெரிந்தது. அழகானபெண்… அதிலும் மனதுக்குப் பிடித்த அழகானபெண் இருந்தால் அனைத்துமே ரம்யமாகத்தான் இருக்கும் போல!

அவனுக்கு முன்னிருந்த நாற்காலியில் கால்மேல் காலிட்டுக்கொண்டு கேட்ச் கிளிப்பில் மட்டும் அடக்கிய முடியை மார்பின் மேலிட்டுக்கொண்டு பார்வையை வெளியே பதித்தபடி காபியைக் குடித்துக்கொண்டிருந்த தமிழை ஆழ்ந்து நோக்கியவன்,

“தமிழ்…” தாழ்ந்த குரலில் அழைக்க, என்னவென்று அவனைப்பார்த்தாள்.

“உனக்கு இந்த யட்சிணி, நீலி, மோகினி இதில் எல்லாம் நம்பிக்கை இருக்கா?”

சம்பந்தமே இல்லாமல் அவன் கேட்ட கேள்வி அவளுக்கு அப்போது புரியவில்லை..

“ஏன்?”

“இல்ல… எங்க பக்கம் கஞ்ஞிரோட்டு யக்ஷின்னு ஒரு யக்ஷி தெய்வம் இருக்கு…” என்று கூறும் போதே, “இருங்க யக்ஷின்னா பேட் எலிமென்ட் தானே…” என்று இடையிட்டு அவள் கேட்டாள்.

“ம்ம்ம் ஆமா… ஆனால் அதைச் சிறு தெய்வமா இன்ஸ்டால் பண்ணிட்டா அது மக்களுக்கு நல்லது பண்ண ஆரம்பிச்சுடும்ங்கறது நம்பிக்கை… நாகர்கோவிலில் இசக்கி அம்மன், மதுரையில் பேச்சியம்மன், பொள்ளாச்சில மாசாணியம்மன், மாரியம்மன், வீரமாத்தியம்மன் எல்லாம் இப்படித்தான். ரொம்ப கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அல்லது தற்கொலை பண்ணிட்டு, அதுக்கு அப்புறமா அவை போற வர்றவங்களை எல்லாம் பழிவாங்கி, அதற்கப்புறம் ஊரில் இருக்கவங்க அவங்களைத் தெய்வமா வழிபடறோம்ன்னு வாக்கு கொடுத்து சாந்தி செய்வார்கள். அதே மாதிரித்தான் எங்கே கஞ்ஞிரோட்டு யக்ஷி… ஆனால்…” என்று அவன் இடைவெளி விட, என்னவென்பதை போலப் பார்த்தாள்.

கதை சுவாரசியமாக இருந்தது.

“அவ ரொம்ம்ம்ம்ப அழகான மோகினியாம்… அவ வாழ்ந்த காலத்தில் எல்லா ஆண்களையும் வசியம் பண்ணி மயக்கி…” என்று ராகமிழுத்து, “ரத்தத்தை குடிச்சுடுவாளாம்…”

“ஹையோ… அப்புறம்…” கண்களை விரித்துக் கொண்டு அவள் கேட்டாள்.

“ம்ம்ம் அப்புறம்… அந்தக் கதை ரொம்ப பெருசு… திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் சுவாதித் திருநாள் ராம வெர்மாவோட மனைவி சுந்தர லக்ஷ்மியோட இஷ்ட தெய்வம் இந்த கஞ்ஞிரோட்டு யக்ஷியம்மாவாம்… மங்கலத்து சிறுதேவின்னும் சொல்வார்கள். இப்ப அவங்க கோவில் இல்லை.”

“ஓஹோ… இந்தக் கதை இப்ப எதற்கு?” புரியாமல் அவள் கேட்டாள்.

“அந்த கஞ்ஞிரோட்டு யக்ஷி, கள்ளியங்காட்டு நீலி எல்லாம் ஒரே ரூபமா எனக்கு முன்னாடி உட்கார்ந்து இருக்காளோன்னு தோணுது…” சிரிக்காமல் அவன் கூறினான். அவள் அதிர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“எங்கே? நிஜமாவேவா?” அவளது கண்களில் பயம் தெரிந்தது.

“ம்ம்ம் ஆமா… அந்த மோகினிப்பேய் இப்ப காபி குடிச்சுட்டு இருக்கு…” என்று கூறவும் ஒரு கணம் இன்னமுமே பயந்தவள். மறுநொடியே,

“இந்த கொலஸ்ட்ரால் உங்களுக்கு மட்டும் எக்கச்சக்கமா வெச்சு பேக் பண்ணி அனுப்பிட்டானா இந்தப் பிரம்மன்? முடியலை சாமி என்னால் முடியலை…” உதட்டை சுளித்துக் கொண்டு அவள் கூறினாள்.

“ஆமா தமிழ் என்னாலையும் தான் முடியலை… பார்க்கவே முடியலை… முடியெல்லாம் முன்னாடி அள்ளி போட்டுட்டு அந்த மோகினிப்பேய் என்னை பயமுறுத்திட்டு உட்கார்ந்துட்டு இருக்கு…” மெல்லிய குறும்புப்புன்னகையோடு அவன் கூறினான். அவளது கையிலிருந்த காபியை டேபிளின் மேல் வைத்துவிட்டு அவனை அடிக்க வந்தாள்.

‘என்ன வால்த்தனம் இவனுக்கு!’ உள்ளுக்குள் கோபத்தை போல ஏதோ ஒன்று தோன்றியதே தவிர அவனைக் கோபித்துக்கொள்ளவே முடியவில்லை. அவ்வளவு வசீகரித்தான் அவனது அந்தக் குறும்பான பேச்சால்!

“ஐ வில் மிஸ் யூ… உங்களை… உங்களுடைய இந்த ஹியுமரஸ் பேச்சை… எல்லாத்தையுமே மிஸ் பண்ணுவேன்…” மிகவும் வருத்தமாக அவள் கூறினாள். அவளை ஆழ்ந்து பார்த்தான் ஸ்ரீதரன். அந்தப் பார்வையிலிருந்த ஏதோவொன்று அவளைக்கட்டிப் போட்டது.

“ஐ வோன்ட் மிஸ் யூ தமிழ்…” மிகவும் இயல்பாக, மென்மையாக, ஆனால் உறுதியாக அவன் கூறினான். நிமிர்ந்து பார்த்த அவளது கண்களில் குழப்பம்!

‘இவனை எந்த அளவு மிஸ் செய்ய போகிறேன் என்று சொன்னாலும் நான் உன்னை மிஸ் பண்ண மாட்டேன்’ என்று கூறுமளவுதான் தன்னை குறித்தானத் தாக்கமா? விதம் விதமாகக் கோட்டை கட்டியது தான் மட்டுமா? என்ற நிராசையில் மனம் வலித்தது!

பதில் பேசாமல் எழுந்துகொண்ட தமிழைக் கைப்பிடித்து அமர வைத்தான். தன்னருகில்!

“ஐ வோன்ட் மிஸ் யூ…” என்று மீண்டும் ஒருமுறை கூறினான். “ஹான்…” என்று திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.

“யூ ஆர் மை வெரி குட் ஃப்ரென்ட்… அன்ட்…” என்று இழுத்து இடைவெளி விட்டு, “இந்த அளவு நல்ல ஃப்ரெண்ட்ஷிபை எப்படி மிஸ் பண்ண முடியும் தமிழ்?

அவளுக்கு மண்டையில் அடித்தார் போல இருந்தது. ஒரே நொடியில் அவன் மாற்றியது அர்த்தத்தை மட்டுமல்ல…!

இந்த மாற்றத்தை ரசிக்கலாம் ஆனால் வாழ்க்கையை?

அவன் கூறிவிட்டான். இது நட்புதானென்று! ஆனால் இந்த மனம் அதை ஒப்புக்கொள்ள வேண்டுமே?

ஆனால் அவனது வார்த்தைகளில் அவள் கண்டதெல்லாம் வெறும் நட்பு மட்டுமல்ல.

அவனது கண்களில் தான் கண்டது வெறும் ஈர்ப்பு மட்டுமல்ல.

அவனது அணைப்பில் தான் கண்டது வெறும் பாதுகாப்பு மட்டுமல்ல.

அவனது தலை வருடலில் தான் கண்டது வெறும் ஆறுதல் மட்டுமல்ல.

வாழ்க்கையின் தேடல் அவனிடம் தான் முற்றுப் பெற வேண்டுமென்பது போன்ற உணர்வு!

அனைத்தையும் தாண்டிய ஏதோவொரு பிணைப்பு!

ஏதோவொரு பிறவியில் முற்று பெறாதவொரு பிணைப்பு… இப்போதும் வாழ்வோடு பிணைக்கப்பெறாதா என்று அவளை ஏங்கச்செய்யும் பிணைப்பு.

‘அதைக் காதலென்று தான் வரையறுக்க முடியுமானால்… ஆம்! அவனை நான் காதலிக்கிறேன்!… உளப்பூர்வமாக… உள்ளும் புறமுமாக… உணர்வும் உயிரும் உறைந்த காதலை அவனிடம் நான் உணர்கிறேன். ’

ஆனால் அது முடியுமா? தன்னால் முடிந்த ஒன்றா? அனைத்தையும் கடந்து அவனிடம் செல்வதற்கான தைரியம் தன்னிடம் இருக்கிறதா?

அதற்கு தன் பெற்றோர்கள் தயாராக இருக்க வேண்டுமே?

அதைக்காட்டிலும் நிச்சயம் செய்துவிட்டு போனவன்?

அவனை முழுவதுமாக மறந்தல்லவா போயாகிவிட்டது?

முதலில் அவனுக்கந்த ஏக்கம் இல்லையா? இயல்பாகக் கூறிவிட்டானே… நட்பென்று!

பதில் பேசாமல் அவனை பார்த்து கொண்டிருந்தவளுக்கு மனம் குழம்பியது. ஒரு தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை. இந்தப் புறமா அந்தப் புறமா என்று மனம் அல்லாடியது.

அழுத்தம் அதிகமாகக் கையிலிருந்த காபியை வைத்து விட்டு எழுந்தாள்.

“ஏன் காபி வேண்டாமா? உனக்குப் பிடித்துத்தானே கேட்ட?” இரண்டு பொருளில் அவன் கேட்டான்.

“எனக்குக் காபி பிடிக்கும் தான். ஆனால் இப்ப கசக்குதே…” அவளும் அதே போல பதிலளிக்க,

“ஓய் நாட்… காபின்னா கசக்கத்தான் செய்யும்… பாயசம் மாதிரி இருந்தா அது காபி கிடையாது…” என்றவன் அவளது காபியை எடுத்து ஒரு சொட்டு மிச்சம் விடாமல் அருந்தினான்.

“தேங்க்ஸ் பார் யுவர் காபி… ம்ம்ம்ம்… உனக்கு ஜிஞ்சர் டீ வேண்டுமா தமிழ்?” அவன் கேட்ட கேள்வி தேநீருக்கானது இல்லையென்பது அவளுக்கும் புரிந்துதானிருந்தது.

உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருக்கத்தான் முயன்றாள் ஆனால் அவளது கண்கள் அமெச்சூர்த்தனமாக கலங்கிக் காட்டிக்கொடுத்தது.

அதே கலங்கிய கண்களோடு வேண்டாமென்று இடம் வலமாகத் தலையாட்டினாள்.

அப்போது தோள்களை குலுக்கி விட்டு அவன் நகர்ந்து விட, இப்போது ராஜாத்தியிடம் அவன் கூறிய ஜிஞ்சர் டீயை போட சொல்லிச் சொட்டு சொட்டாக அருந்திக்கொண்டிருந்தாள்.

அவனது நினைவுகளையும் பருகியபடி!

ஒரு நாளில் இப்படி மாறிப்போவோம் என்று யாராவது கூறியிருந்தால் கைக்கொட்டித்தான் சிரித்திருப்பாள்.

ஆனால் இப்போது அவனைத் தவிர வேறு எதையுமே நினைக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தாள்.

கைப்பேசி அழைத்தது. அவன் தானோ என்று ஆர்வமாக அவள் எடுத்துப்பார்க்க, லோகா தான் அழைத்திருந்தார். மனதுக்குள் ஒரு சலிப்பு தோன்றியது.

“ம்ம்ம்… சொல்லும்மா…” சுரத்தே இல்லாமல் அவள் கேட்டாள்.

“ஏய் என்னடி… குரல் ஒரு மாதிரியா இருக்கு…”

“ஒண்ணுமில்லம்மா… டயர்ட்டா இருக்கு…” அவரிடம் தப்பித்துக்கொண்டாலும் அவளது நிலையைக்கண்டு அவளுக்கே பயமாகத்தான் இருந்தது.

மறக்கவே முடியாதே…!

“உடம்பு சரியில்லாத மாதிரி இருக்காடி?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீ எப்ப வர்ற? இன்னும் என்ன கோவில்ல படையல் போட்டுட்டு இருக்க? விட்டா நடுராத்திரி முனி வேட்டைக்குப் போகும் போது ஊட்டி விட்டுவிட்டுத்தான் வருவ போலருக்கு…” எப்போதும் போல அவள் கிண்டலடிப்பதை கேட்ட போதுதான் லோகாவுக்கு நிம்மதியாக இருந்தது.

பத்து நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டு பெண் இப்படி சுரத்தேயில்லாமல் இருக்கிறாளே என்று மனதில் பக்கென்று இருந்தது அவருக்கு.

“ஆமா ஆத்தா… முனி வேட்டைக்குப் போகும் போது நான் ஊட்டி விடறேன். நீயே அருவா கொடுத்தனுப்புடி…” கிண்டலாகச் சிரித்துக்கொண்டே அவர் கூறினார்.

“அட லோகாம்பாவுக்கு சிரிக்கக்கூடத் தெரியுமா?”

“ம்ம்ம் ஆமான்டி… உனக்கும் உங்கப்பாவுக்கும் நான் வேற்று கிரகத்து உயிரினம் தானே… என்னை மனுஷியாவா பார்க்கறீங்க?”

“ஹை அப்பப்ப உண்மையெல்லாம் சொல்ற…” என்று அவரைக் கிண்டலடித்தாலும் பெண்ணைத் திருமணம் செய்து தரப்போகும் மகிழ்ச்சியோடு அவள் மறுவீடு போகப்போகிறாளே என்ற கவலையும் தெரிந்தது அவரது குரலில்.

கிண்டலடித்தாளே தவிர அந்தக் குரலில் சற்றும் உயிர்ப்பில்லை என்பது லோகாவுக்கு அப்போதைக்குத் தெரியவில்லை.

“சரி சரி… ஒழுங்கா சாப்பிட்டுட்டு கதவை அடச்சுட்டு படு தமிழ்… புழக்கடை கதவை நல்லா சாத்திக்க, தோப்பில் தேங்காய் லோடு ஏத்திட்டு இருக்காங்களாம்… ஆம்பிளைங்க நடமாட்டம் இருக்கும்…” என்றவர்… மறுபுறத்திலிருந்து சப்தம் வராததில்,

“ஏய்… என்னடி… தூங்கிட்டியா?” என்று கேட்டார்.

“ம்ம்ம்… சரிம்மா…” என்று தன்னிச்சையாக தலையாட்டிவிட்டு, “சீக்கிரம் வாம்மா…” வார்த்தைகள் வலியோடு ஜனித்தன.

தாயின் மடியில் தலை வைத்து படுத்துறங்க வேண்டும் போல தோன்றியது!

அந்தக் குரலில் இருந்த ஏக்கம் லோகாவை கரைய வைத்தது.

“வந்துடறேன்டா… பத்திரிக்கை கொடுக்க ஆரம்பிச்சுட்டோம்ல… அதான் ஒவ்வொருத்தர் வீட்டுக்கா போய் லேட்டாகுது. பத்து நாள் தானே இருக்கு… இப்போதே ரொம்ப லேட்டாத்தான் ஆரம்பிச்சுருக்கோம் தமிழ்… கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்க, புகழை வேணும்னா வர சொல்லட்டா? உன் சித்தியும் சித்தப்பாவும் இங்க இருக்காங்க…” என்று கேட்டார்.

“இல்லம்மா… நானே இருந்துக்கறேன். காலையில் சித்தி வீட்டுக்கு போறேன்.” என்று முடித்தாள்.

“சரிடா பார்த்து இருந்துக்க,” என்று அவர் கைப்பேசியை வைக்க, அந்தச் கைப்பேசியையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனது பெயர் தெரியும்… அவன் நடத்துவதாகக் கூறிய நிறுவனத்தின் பெயர் தெரியும்… அவ்வளவே!

அதைத் தாண்டி என்ன அறிவாள்? அவனைப்பற்றி?

அவனது விலாசம்?

படித்த படிப்பு?

போன் நம்பராவது தெரியுமா?

அவன் அவளது கைப்பேசியில் அவசரத்துக்காகப் பதிந்து வைத்த எண்களையும் கூட விட்டுச்செல்லும் போது அழித்து விட்டானே!

அதை என்னவென்று சொல்வது?

இத்தனை கேள்விகள் இருந்தாலும் அவளால் அவளது மனதை மாற்றிக்கொள்ள முடியும் என்று தோன்றவில்லை.

ராஜாத்தி செய்து வைத்த டிபனை அவள் தொடவும் இல்லை!

அறைக்குக் கூட செல்லவில்லை.

முற்றத்தில் அவளது பாட்டனார் உபயோகித்த சாய்வு நாற்காலி தன்னந்தனியாக கிடந்தது. அவளைப்போல!

சிறு வயதில் அந்தச் சாய்வு நாற்காலியில் அவர் அமர்ந்து கொள்ள, தமிழும் அவர் மேல் அமர்ந்துகொண்டு,

“பாட்டா எனக்கு ஒரு கதை சொல்லு…” என்று அவள் நச்சரித்த காட்சி இப்போதும் அவளது கண்களில், இப்போது கண்ணீரோடு!

குழந்தைகளாகவே இருந்து விட்டால் பிரச்சனையே இல்லையோ? கவலையற்ற வாழ்க்கை… பார்த்துக் கொள்ள நம்மையே தாங்கும் ஜீவன்கள். தமக்கென்று தனியான உலகம்… அதில் பொய்மை இல்லை, வஞ்சமில்லை, சூதுவாதில்லை, சூழ்ச்சிகளில்லை, ஏமாற்றங்களும் இல்லை!

குழந்தைகளின் உலகம் மட்டும் தான் அழகு!

ஆனால் உலகம் அங்கேயே நின்றுவிடுவதில்லையே.

மௌனமாக அந்த நாற்காலியில் அமர்ந்து சாய்ந்துகொண்டாள்!

தேய்பிறை சந்திரன் வானில் காய்ந்து கொண்டிருந்தான். அந்த வெளிச்சம் முற்றத்தில் அமர்ந்திருந்த அவளது முகத்தில் பட்டு தெறித்துக்கொண்டிருந்தது!

பாட்டனாரின் மடியில் தலை சாய்ந்து இருப்பது போல ஒரு பிரமை! கண்களை மூடிப்படுத்து இருந்தவளின் கற்பனையில் இப்போது பாட்டனாருக்கு பதிலாக ஸ்ரீதரனின் முகம்!

அதிர்ந்து விழித்தாள்!

இவன் விட்டுவிடவே போவதில்லை. அவன் கூறியதை போலவே!

“ஐ வோன்ட் மிஸ் யூ தமிழ்…” மீண்டும் அவளது காதில் ஒலித்தது.

எந்த முகாந்திரமும் இல்லாமல் எப்படி இவ்வாறு சொல்ல முடியும்? அந்த வார்த்தைகள் அவளது நட்புக்காக மட்டும் தான் சொல்லப்பட்டதா?

தாகமாக இருப்பது போல இருக்க, நீருக்காகச் சமையலறைக்கு செல்வதற்காக எழுந்தாள். அவளுக்கு முன்பிருந்த டேபிள் கண்ணில் பட்டது.

டேபிளின் மேல் திருமண பத்திரிக்கை!

கத்தையாக!

கைகள் நடுங்க எடுத்துப்பார்த்தாள்!

ஸ்ரீதர் வெட்ஸ் தமிழ்நதி!

பத்திரிக்கையின் மேலே அழுத்தமான எழுத்துக்கள்!

கால்கள் தொய்ந்து விழுந்துவிடும் போல தோன்றியது!

கைகள் வெளிப்படையாகவே நடுங்க, உள்ளுக்குள் எழுந்த கேவலை அடக்க முடியாமல் கையால் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டாள். அவளால் அழுகையை அடக்க முடியும் என்பதைப் போல தோன்றவில்லை.

மீண்டும் அந்தப் பத்திரிக்கையின் பெயரைப்பார்த்தாள். என்ற பெயர் அவளைக் கொன்று தின்று விடும் போல தோன்றியது. எனக்கந்த சுழல் வேண்டாமென்று அவள் நினைத்தாலும் அது அவளை விட்டுவிடப் போவதில்லை. அவளைச் சுற்றி அவன் வாசனை மட்டுமே.

குறும்புக் கண்ணனாக அவள் இடையைப் பற்றிக்கொண்டு வம்பளத்த ஸ்ரீதரன், தோள் மேல் சாய்த்துக் கொண்டு சிகை தடவி நானிருக்கிறேன் என்று சொல்லாமல் சொன்ன ஸ்ரீதரன், அவளை வேண்டுமென்றே பயமுறுத்த காரை நிறுத்திவிட்டு வம்பு வளர்த்த ஸ்ரீதரன், நான் உன்னையும் உன் நட்பையும் மிஸ் செய்ய மாட்டேன் என்று உறுதியாக இறுதியாகத் தெரிவித்துவிட்டு போன ஸ்ரீதரன். அவளது நினைவில் அவன் மட்டுமே!

முகத்தை மூடிக்கொண்டு சரிந்து அமர்ந்தவளின் கண்களில் கண்ணீர் வெள்ளம்… வாய் விட்டுக்கதறினாள்.அவனை இப்போது ஏன் காட்டினாய் இறைவா? காட்டாமல் இருந்திருந்தால் எந்தச் சலனமும் இல்லாமல் பெற்றோர் பார்த்து வைத்த ஸ்ரீதரை மணந்து நிம்மதியாக இருந்திருப்பாளே.

இப்போது இந்த பெயரே மனதுக்குள் நிலநடுக்கத்தை கொடுக்கிறதே!

இந்த நட்பையும் உன்னையும் மிஸ் செய்ய மாட்டேன் என்று கூறியவன் அவளைத் தனியே விட்டுப் போனதேன்? சோழவந்தானில் தன்னை விட்டுப் பிரியும் போது அவன் பார்த்த பார்வையில் இருந்ததென்ன?

அதுக் காதலில்லாவிட்டால் பின் வேறெதுதான் காதல்?

சோழவந்தான் வந்து அவளை விட்டு மதுரை செல்வது அவனுக்குச் சிரமமாக இருக்குமென்று அவள் கூறிய போதும் அவளைத் தனியே அனுப்ப முடியாதெனக்கூறி தன்னுடனே வந்தவன், வாழ்க்கையில் அவளை தன்னந்தனியே விட்டுவிடத்தானா?

திருமங்கலம் சாலையில் சோழவந்தானுக்கு சற்று முன்னரே இறங்கி இருவருமாகத் தனியே நடந்து வந்த போது அந்த இடத்தில் குடியிருந்த கனமான மௌனத்தின் அர்த்தம் என்ன?

“இதற்கு மேல் ஆட்கள் நிறையப் பேர் இருப்பார்கள். நான் போய்க்கறேன்.” என்று அவனை பாராமல் விடைபெற்றுப் போக முயன்றவளின் கையைப் பிடித்தவனின் கண்கள் கூறிய செய்தி என்ன?

மொழிபெயர்க்கத்தான் முயன்றாள் முடியவில்லை! முடியுமென்றும் தோன்றவில்லை!

கண்கள் கரித்துக்கொண்டு வந்தது!

உள்ளத்தை வெளிப்படுத்த முடியாமல் உதடுகள் துடித்தது.

“தமிழ்… கல்யாணம் எப்போன்னு கூடச் சொல்ல மாட்டேங்கற…” மெல்லியப்புன்னகையோடு அவன் கேட்ட போது. மனம் கொதித்தது!

சலனமே இல்லாமல் இருந்தவளை ஒரே நாளில் பிச்சியாக்கி விட்ட பின்னும் அவன் கேட்ட கேள்வியில் அவனை உணர்வைத் துடைத்த பார்வை பார்த்தாள்.

ஆழமாக அவனைப் பார்த்தாள்.

கண்களை ஊடுருவி உள்ளத்தைப் படிக்க முடியுமா? அவனிடம் அது முடியாத காரியமாக தோன்றியது.

மௌனத்தைக் கடந்து செல்வதின் சிக்கல்களை உணர்ந்து அவனது கையை விடுவித்து விட்டுத் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.

அவனைப் பார்க்க முடியவில்லை. அழுகையில் கரைந்து விடவும் அழுத்தி வைத்த உணர்வுகள் வெடித்து விடவும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.

ஸ்ரீதர் வெட்ஸ் தமிழ்நதி என்ற அந்த வார்த்தைகள் அவளது மனதை மேலும் கூறு போட, எதிர்காலத்தைப் பற்றி முடிவெடுத்தேயாக வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், என்ன செய்வது என்பது புரியாமல் அழுது கரைந்தாள் தமிழ்நதி!

ஸ்ரீதரனின் தமிழ்நதி!

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 15

பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பிரமிப்பூட்டும் பல தந்திரங்கள் கையாளப்பட்டன. அதில் ஒன்றுதான் ‘சக்கர வியூகம்’ எனப்படுகிறது. இது வெவ்வேறு அளவிலான ஏழு சுழலும் வட்டங்களைக் (சக்கர) கொண்ட போர்த் தந்திரச் செயல்திட்டம். இதில், ஒவ்வொரு சக்கர அடுக்கும் திருகு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 3 கருத்துகள் உள்ளன

  1. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

உங்கள் கருத்தைப் பகிருங்கள்