arrow_back
சக்கரவியூகம் அத்தியாயம் 15
சக்கரவியூகம் chevron_right பகுதி 15 / 26

அத்தியாயம் 15

visibility 899
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.8/5 (13 மதிப்பீடுகள்)
பகிர்

பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் பிரமிப்பூட்டும் பல தந்திரங்கள் கையாளப்பட்டன. அதில் ஒன்றுதான் ‘சக்கர வியூகம்’ எனப்படுகிறது.

இது வெவ்வேறு அளவிலான ஏழு சுழலும் வட்டங்களைக் (சக்கர) கொண்ட போர்த் தந்திரச் செயல்திட்டம். இதில், ஒவ்வொரு சக்கர அடுக்கும் திருகு சுழல் வடிவில் சுழன்று அமையும். அது உள்ளே செல்லச் செல்ல இறுக்கமாக மூடிக் கொள்ளும். ஒரு வீரர் இதன் உட்பகுதிக்கு முன்னேறும்போது பெரும் குழப்பமும், சோர்வும் அடைவார். இதன் இறுதிச் சக்கர அடுக்கில் தலை சிறந்த வீரர்கள் உள்ளே வருபவரைக் கடுமையாகத் தாக்குவதற்காகக் காத்திருப்பார்கள்.

மதுரையின் மிகப்பெரிய பட்டு மாளிகை அது! திருமணத்திற்குப் புடவை எடுக்கவென காலையிலிருந்து லோகாம்பாள் தமிழ்நதியை படுத்தியெடுத்துக்கொண்டிருந்தார்.

உடன் சம்பந்திமார்கள் வேறு! லோகாவின் பரபரப்புக்குக் கேட்கவா வேண்டும்? மாப்பிள்ளை வீட்டினர் எடுக்கும் முகூர்த்தப் புடவையை நல்ல விலையில் எடுத்து விட வேண்டும் என்பதில் மிகத்தெளிவாக இருந்தவர், விலை சற்று குறைவான, அதாவது இருபதாயிரம் முப்பதாயிரம் வகையறாக்களை கழித்துக் கட்டிக்கொண்டிருந்தார். சும்மாவா… வரதட்சணை என்று கொட்டிக்கொடுக்கும் போது, இதைக் கூடவா அவர்கள் செய்யக்கூடாது என்ற எண்ணம் தான்!

அதுவும் நியாயம் தானே?

“பெரிம்மா… இது உனக்கே நல்லா இருக்கா? அந்தப் புடவை முப்பத்து அஞ்சாம்… அதைக் கூட வேண்டாம்ன்னு சொல்ற?” அருகில் நின்று கொண்டிருந்த புகழேந்தி லோகாவின் காதை கடிக்க,

“அடேய்… செத்த வாயை வெச்சுட்டு சும்மா இருடா… அவங்களுக்கு கேட்டுட போகுது. இந்தச் செலவை தானே செய்றாங்க… கொஞ்சம் நல்லாத்தான் செய்யட்டுமே…” என்று தாராள தர்மலிங்கமாக மாறி உபதேசம் வழங்க,

“ம்ம்ம்… இப்பவே யோசித்து வெச்சுக்க, என் பொண்டாட்டிக்கு ரூபாய் ஐம்பதாயிரத்துக்குக் குறைய கூடாது சொல்லிட்டேன். நீயும் உன் ஓரகத்தியும் சேர்ந்துக்கிட்டு அதுல கை வெச்சீங்க… நான் மனுஷனா இருக்க மாட்டேன். பார்த்துக்க!” என்று மிரட்டிய புகழேந்தியை ஏற இறங்கப் பார்த்தார் லோகா.

“டேய் உனக்கு என்னடா வயசாவுது? பன்னெண்டாவது படிக்கிற மொளைக்காத மொட்டைக்கெல்லாம் இப்பவே கல்யாணப்பேச்சு கேக்குதா?”

கேலியாகக் கேட்டாலும் புகழேந்தி அவருடைய செல்லம். இரு குடும்பங்களுக்குமாக இருக்கும் ஒரே வாரிசு என்பதால் எல்லோரிடமும் செல்லம் அதிகம்… லோகாவிடம் ஒரு பங்கு அதிகம்.

அவனது தாயை விட இவரிடம் ஒட்டுதலும் அதிகம். எங்குப் போனாலும் லோகாவுடன் கூடவே ஒட்டிக்கொண்டு வரும் ஒட்டுப்புல் என்று சித்ராவும் கூட அவனைக் கிண்டலடிப்பார்.

“போம்மா… உனக்கு கோழிக்கறி செய்யவே தெரியலை… பெரியம்மா இன்னைக்கு பச்சை மசாலா கோழிக்குழம்பு வெச்சு இருக்காம்… நான் அங்க சாப்ட்டுட்டு ஸ்கூலுக்கு போறேன்.” என்று சித்ராவிடம் கூறிவிட்டு அவரது பதிலை கூட எதிர்பார்க்காமல் ஓடிவிடும் மகனை வேறெப்படி அழைப்பார் அவரும்!

இருவரும் பேசிக்கொண்டிருந்ததை பார்க்கும் போது சித்ராவினால் பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஏய் சித்து… என்னடி இவன்? இப்பவே இப்படி அடி போடறான்?” அருகில் அமர்ந்து கொண்டிருந்த ஓரகத்தியைப் பார்த்து அவர் கேட்டார்.

“கோழிக் குழம்பா ஊட்டி வளர்த்தல்லக்கா… இதுக்கும் நீயே பதில் சொல்லிடு… துரைக்கு நாம பார்த்து வைக்கிறதா? இல்ல அதையும் அவரே பார்த்துக்க போறாராமா?”

கிண்டலாக சித்ரா கேட்க, “பொண்ணா? அதுவும் இரண்டு கிழவியும் சேர்ந்து எனக்கும் ஒரு கிழவியை பார்ப்பீங்க… அதை நான் கட்டனுமா? நோ சான்ஸ்…” என்று புகழேந்தி சிரித்தான்.

“அடப்பாவி பய மக்கா…” என்று லோகா கேலியாக சிரிக்க, அப்போதுதான் சித்ரா தமிழ்நதியை கவனித்தார்.

இதில் எதிலுமே கலந்துகொள்ளாமல் விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த தமிழ்நதியை!

நேரடியாக அவளைக்கேட்காமல் அருகில் அமர்ந்திருந்த லோகாவிடம்,

“க்கா… என்ன தமிழு ஒரு மாதிரியா இருக்கு?” என்று கேட்க,

“ஒன்னும் இல்லையே சித்து. இன்னைக்கு அவளை நான் எதுவுமே கேக்கக்கூட இல்லையே…”

“இல்லக்கா… முகமே சரியில்லை. புகழும் இருந்தா தமிழு எப்படி வாயடிக்கும்… இப்ப பாருங்க சோர்ந்து போய் இருக்கு…” சித்ரா சரியாக கணித்து விட, லோகாவினால் சட்டென்று அப்படி முடிவுக்கு வர முடியவில்லை.

“இல்ல சித்து. எப்படி இருந்தாலும் அடுத்த வீட்டுக்கு போற நேரம்… அவங்க எப்படி இருப்பாங்களோன்னு ஒரு கவலை இருக்கத்தானே செய்யும்? அதுவுமில்லாம நம்மளை விட்டுட்டு போற கவலையும் இருக்குமில்லை.” அவராக நினைத்துக்கொண்டு கூறினார்.

சித்ராவின் முகம் தெளியவில்லை. அவருக்கு மனதில் உறுத்தியது. தமிழ் சரியில்லையென்று… எதையோ பறிகொடுத்தார் போல இருந்தது அவளது முகம்.

அவரது தெளிவின்மையை பார்த்து லோகாவும்,

“சரி சித்து. நான் கேட்டா பதில் சொல்ல மாட்டா… எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு அடக்குப்புடுவா உன் பொண்ணு… நீயே பக்குவமா கேளு…” என்று அவரிடமே வேலையைச் சாட்டிவிட, தமிழை எப்படிக் கேட்பது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார் சித்ரா.

“என்ன இரண்டு கிழங்களும் ப்ளான் பண்ணுதுங்க?” இருவருக்குமிடையில் தலையை விட்டுப் புகழ் கேட்டான்.

“போடா பெரிய மனுஷா…” சித்ரா அவனது தலையில் தட்ட.

“சித்து. வளர்ற புள்ளை தலையில் தட்டாதே…” பார்வை புடவையில் இருந்தாலும் ஓரகத்தியைக் கண்டிப்பதில் தவறவில்லை அவர்.

“என்ன தமிழம்மா… இந்த மாம்பழ கலரு தமிழுக்கு நல்லா இருக்குமே… பார்க்கலாமா?” ஸ்ரீதரின் தாயார் வெள்ளந்தியாகக் கேட்டார்.

“ம்க்கூம்… இந்த இரண்டு கிழவிகளோட வில்லத்தனம் தெரியாம இருக்காங்க அய்த்தை…” மனசாட்சியின் குரலாக அந்த இருவருக்கு மட்டும் கேட்பது போலப் புகழேந்தி கிசுகிசுக்க,

“டேய்… கொஞ்சம் அடக்கசடக்கமா இருடா… இல்லைன்னா உன்னை இப்பவே வீட்டுக்குப் பத்தி விட்டுடுவேன்…” சித்ரா மிரட்டினாலும் புகழ் அதையெல்லாம் கண்டுகொண்டால்தானே!

அவனது கிண்டல் தொடர்ந்து கொண்டே தானிருந்தது. அவன் அப்போது வாஸந்தியைத்தான் மிஸ் செய்தான். அவளும் இருந்திருந்தால் கச்சேரி களை கட்டியிருக்குமென்று அவ்வப்போது பிலாக்கணம் வேறு!

“தமிழு… புடவைய பாருடி… நீ தான் கட்டிக்க போறவ… யாருக்கோ வெச்ச விருந்து மாதிரி உட்கார்ந்துட்டு இருக்கியே? பாரு சம்மந்தியம்மா உன்னையே பார்த்துட்டு இருக்காங்க… கொஞ்சமாவது சிரிச்ச மாதிரி இருக்கலாம்ல ஆத்தா…” சித்ரா விசனமாகக் கேட்டார்.

“சரி சித்தி…” என்று அமைதியாகப் புடவைகளை பார்க்க ஆரம்பித்தாள். பார்வைதான் புடவையில் இருந்ததே தவிர நினைவெல்லாம் ஸ்ரீதரனை நோக்கியே இருந்தது.

ஒரு போன் கூடவா செய்ய வழியில்லாமல் போய்விட்டது அவனுக்கு? திருச்சியில் சாப்பிட்டு முடித்தவுடன் அவன் செய்த முதல் காரியம் போனை வாங்கியதுதான். அதிலும் அவனது முந்தைய போனை போலவே.

இப்போதும் அவளது கார்டை தேய்த்தவன், அவளது அக்கௌன்ட் நம்பரை வாங்கி ராஜீவ் மூலமாக பணத்தை அவளது அக்கௌன்ட்டில் போடச் செய்திருந்தான்.

அப்போது அவள் எதைப் பற்றியும் கவலைப்படும் நிலையில் இல்லை.

போனை வாங்கியவுடன், “ஹேய் இங்கிலீஷ்… இங்க வா…” என்றழைக்க, என்னவென்று கேட்காமல் அருகில் சென்றாள்.

அந்தச் கைப்பேசி விற்பனை நிலையத்தில் இருந்த பெரும்பாலானோர் அவர்களைச் சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஒரு செல்பி எடுத்துக்கலாமா?” புன்னகையோடு அவன் கேட்டான். அவனை முறைத்து விட்டு அவள் நகரப் பார்த்தாள். அவளை நகர விடாமல் அவளது கையைப் பற்றி அவனுக்கு அருகில் இழுத்துக் கொண்டு, புருவத்தை உயர்த்தி மெல்லிய புன்னகையோடு அவளைப் பார்த்து எப்படி என்று கேளாமல் கேட்டான்.

அவனைத் தள்ளி நிறுத்த அவள் செய்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, “ப்ச்… ஒரு ஸ்நாப்… ஒழுங்கா நின்னா விட்டுடுவேன்… இல்லைன்னா…” என்று குறும்பாக அவன் மிரட்ட, எதுவும் பேசாமல் செல்பிக்கு முகத்தைக் கொடுத்தாள்.

அவளது முகத்தில் சற்றும் உயிர்ப்பில்லாமல் இருக்க, “ஹேய் என்னாச்சு… நேற்று செல்பி எடுக்கறேன்னு நடு ராத்திரில அட்ராசிட்டி பண்ண… இப்ப இப்படி இருக்க, எனக்கு அந்த இங்கிலீஷ் ரிவர் தான் வேணும்…” திரும்பி அவளைப்பார்த்தபடி அவன் கூறினான். அவள் அதற்கும் பதிலேதும் பேசவில்லை.

திடீரென்று அவளது இடையைப் பற்றி தன்னருகே வெகு நெருக்கமாக இழுத்தான். அந்த நொடி அவள் அதிர்ந்தாலும் அவனது அந்தச் செய்கையை அவள் வெறுக்கவில்லை.

அதைக்காட்டிலும் அந்த செல்பி புகைப்படத்தில் ஸ்ரீதரன் அருகில் அவள் மெல்லிய வெட்கப்புன்னகையோடு இயல்பாக இருப்பதைப் பார்த்தவளால் அந்த நிமிடம் அப்படியே உறைந்து விடாதா என்று தானிருந்தது.

“ஹேய் இங்கிலீஷ்… உனக்கு ஏதாவது கிப்ட் வாங்கவேண்டும். என்ன வேணும்னு கேளேன்…” செல்பி புகைப்படத்தை பார்த்து உற்சாகமாக அவன் கேட்டான். எதுவும் பேசாமல் அவள் நகரப் பார்த்தாள்.

“சரி… உனக்கொரு ஐபோன் செலக்ட் பண்ணு…” அவளை இழுத்து மீண்டும் அவனருகில் வைத்துக்கொண்டு கேட்டான். அவனை முறைத்தாள்.

“என்னாச்சு இங்கிலீஷ்… நான் இரண்டு வார்த்தை பேசினா நீ பத்து வார்த்தை பேசுவ… இப்ப என்னன்னா உல்ட்டா வா இருக்க? இது தப்பும்மா… உலகம் அழிஞ்சுடும்…” என்று அவளை வம்பிழுத்தாலும் அவள் மௌனமாகவே இருந்தாள்.

நட்பென்று கூறிவிட்டு தன்னுடைய திருமணத்திற்கு வாழ்த்துக் கூறியவனிடம் பேசப்பிடிக்கவில்லை. ஆனால் அவன் அவளது திருமண ஏற்பாடுகளைச் சுட்டிக்காட்டி கலாய்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அவள் உணரவில்லை. அவனது விளையாட்டுத்தனங்களை அவள் மிகவும் சீரியசாகவே நினைத்துக்கொண்டிருந்தாள்.

“இங்கிலீஷ்… உன்னுடைய மேரேஜுக்கு ஒரு கிப்ட் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.” வேண்டுமென்றே அவளை மீண்டும் அந்த வார்த்தைகளைக் கூறி வம்பிழுத்தான். அவளது திருமணத்தை பற்றிக்கூறும் போதெல்லாம் முறைத்துக் கொண்டு அவள் முகத்தைத் திருப்பிக்கொள்வதை பார்க்க அவனுக்குச் சுவாரசியமாக இருந்தது.

அவன் நினைத்தது போலவே அவனை முகம் சிவக்க கோபமாகப் பார்த்தவள்,

“உங்க கிப்ட்டை கொண்டு போய் குப்பையில் போடுங்க…” என்று கூறிவிட்டு விடுவிடுவென்று வெளியே சென்றாள்… அவனிடமிருந்து இப்போதைக்குத் தப்பித்தாக வேண்டும் போல இருந்தது. அவனருகில் இருந்தால் சுவாசிப்பதும் சிரமமாக இருப்பது போல தோன்றியது.

“குப்பையில் போட்டதுக்கு அவ்வளவு பெரிய லெக்சர் எடுத்தியே இங்கிலீஷ்…” அவளைத் துரத்திக்கொண்டு வந்தவன் அவளது தோளை பற்றி நிறுத்திக்கேட்டான்.

“அழற குழந்தைக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்து சமாதானம் செய்கிறீர்களா?” கண்களில் நீர் சூழ கேட்டாள்.

“மிட்டாய் வேண்டாம்னா இந்தக் குழந்தைக்கு என்னதான் வேண்டும்?” சிரித்துக் கொண்டே அவன் கேட்டான்.

“எனக்கு என்ன வேணும்னு உங்களுக்குத் தெரியும்…” அவனைப் பார்க்காமல் அவள் கூறினாள்.

“குழந்தை கேட்கிறதெல்லாம் இப்போதைக்கு வாங்கித் தர முடியாது தமிழ்… அதுவும் இந்த நேரத்தில்… அதுக்கு நேரம் காலம் இருக்கு…” அவளது பாணிலேயே அவனும் பதில் கூறினான்.

“சரி… எவ்வளவு நேரமானாலும் நான் வெய்ட் பண்றேன். நீங்க ஒரு வார்த்தை சொன்னாக்கூட போதும்…” அவளது வார்த்தைகளில் இருந்த ஏக்கம் அவனைச் சுட்டிருக்க வேண்டும். அவளையே ஆழ்ந்து பார்த்தவன்,

“போலாம் தமிழ்… நேரமாயிற்று…” என்றவன் அவளைத் திரும்பி பார்க்காமல் செல்ல, அவளுக்கு அவளது கண்ணீரை அடக்க முடியவில்லை. ஆனால் பொது இடமென்ற ஸ்மரணை அவளை கட்டுப்படுத்தி வைத்தது.

அவன் ஒரு முடிவில் இருந்தான் தான். ஆனால் முடிக்க வேண்டிய வேலைகள் நிறைய இருந்தன… இவளுக்கு நம்பிக்கையைக் கொடுத்துவிட்டு பின் ஏதாவது என்றால் என்று யோசித்த போது மனம் பக்கென்று இருந்தது. அந்த நினைவு ஒன்று மட்டுமே அவனது வேகத்தைக் கட்டுப்படுத்தி வைத்தது!

ஆனால் அதை அவள் அறியவில்லை. அது எத்தகைய சூழ்நிலைக்குக் கொண்டு செல்லும் என்று ஸ்ரீதரன் அறிந்திருந்தால் அவளை அப்போதே அழைத்துக் கொண்டு போயிருப்பானோ?

அத்தனையும் விதி வசமே அல்லவா!

அவனது அந்த அழுத்தமான மௌனத்தைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கோபமும் ஆற்றாமையும் மாற்றி மாற்றி அவளைச் சுழற்ற, பட்டுப்புடவையில் பார்வையை பதித்து இருந்தாலும் அதற்குச் சற்றும் சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீதரனின் நினைவுகளில் ஆழ்ந்திருந்தாள்.

“ஸ்ரீதர் வந்தாச்சு…” என்ற சப்தம் கேட்க… திடுக்கிட்டு விழித்தாள் தமிழ்நதி!

ஸ்ரீதரனா? இங்கா? எப்படி சாத்தியம்?

மிகுந்த ஆவலோடு நிமிர்ந்து பார்த்தவளின் கண்களில் விழுந்தது.

அவளுக்கு நிச்சயிக்கப்பட்ட ஸ்ரீதர்!

அவளைப் பார்த்து புன்னகை புரிந்தபடி வந்து கொண்டிருந்தான்.

மின்சாரம் தாக்கியது போல அதிர்ந்து பார்த்தாள்.

உண்மைநிலை அவளைச் சுட்டது!

நிச்சயம் முடிந்த நிலையில் என்ன செய்து கொண்டிருக்கின்றாள்? யாருக்கு உண்மையாக இருக்கிறாள்? நினைத்துப் பார்க்கும் போது ஒருவருக்கும் தான் உண்மையாக இல்லை என்று தோன்றியது.

“ஹாய்…” என்றபடி அவளருகே ஸ்ரீதர் வந்தமர, அனிச்சையாகத் தள்ளி அமர்ந்தாள் தமிழ்நதி.

“ஹாய்…” குரலில் ஒட்டாத தன்மை!

“சாரி செலக்ட் பண்ணியாச்சா?” அவளைப் பார்த்து ஸ்ரீதர் கேட்டான். புகழேந்தி இருவருக்குமிடையே வந்தமர்ந்தான்.

“அதை என்கிட்டே கேளுங்க மச்சான்… இந்த அம்மாவும் பார்க்கறா பார்க்கறா பார்த்துட்டே இருக்கா… ஆனால் எதையும் முடிவு செய்த பாட்டை காணோம்… அட்லீஸ்ட் நீங்களாவது செலக்ட் பண்ணுங்க…” சிரித்துக்கொண்டே புகழேந்தி தமக்கையை வார,

“சரிங்க மாப்பிள்ளை…” என்று அவனும் சிரித்துக்கொண்டான்.

“ஏங்க மச்சான்… எல்லாரும் கல்யாணம் நிச்சயமானா போனும் கையுமாத்தான் இருப்பாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்… நீங்க என்ன சுத்த சைவமா இருக்கீங்க?”

“கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் பேசிட்டா அதற்கப்புறம் என்ன பேசறது மாப்பிள்ளை…” கிண்டலாக அவன் கூறினான்.

“அதுவும் சரிதான்…” என்று புகழ் சிரித்தான். தமிழ்நதியோ இதில் எதிலுமே கலந்துகொள்ளாமல், ஒட்டாமல் இருந்தாள். ஸ்ரீதர் அவளை அவ்வப்போது பார்த்துக் கொண்டான்.

அதற்குப் பின் அவர்கள் இருவரும் பேச்சில் ஆழ்ந்து விட, அவளது நினைவில் மீண்டும் அவளது ஸ்ரீதரன் வலம் வரத்துவங்கினான்.

புகழேந்தி மாப்பிள்ளையாகப் போகும் ஸ்ரீதரிடம் வம்பளத்துக்கொண்டிருப்பதை பார்த்துக் கடுப்பான சித்ரா அவனைக் கண்ணால் அழைக்க, அதைச் சற்றும் அவன் கண்டுகொள்ளவில்லை.

தமிழ்நதி ஸ்ரீதரிடம் பேசிக்கொண்டிருந்தால் அவளுக்கும் பிடிப்பு வரும் என்ற நினைவில் தான் அவளையும் புடவை எடுக்க அழைத்துக் கொண்டு வந்தனர். ஆனால் இங்கும் அவள் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க, புகழ் அவளுக்குப் பதிலாக மொக்கைப் போட்டு கொண்டிருப்பதைப் பார்த்தவருக்கு சுறுசுறுவென கோபம் வந்தது. ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல்.

“எலேய் புகழு… இங்கன ஒரு எட்டு வந்துட்டு போடா’ …” சித்ரா புகழை அழைப்பது வேலைக்காக இல்லையென்பது அவனுக்கும் தெரியும் ஆனாலும் தாயை சீண்டினான்.

“ஏன் சித்துமா…? மச்சான் கூட தானே இருக்கேன்…” என்று சிரித்தான்.

“ம்ம்ம்… இனிமே காலம் முச்சூடும் உன் மச்சான் கூடத்தான் இருப்ப… இப்ப இங்கன வந்துட்டு போ…” குரலில் இனிமை இருந்தாலும் அவனால் அதில் உள்ள எரிச்சலைப் புரிந்துகொள்ள முடியாதா என்ன?

“மச்சான்… இன்னும் இங்க இருந்தேன்னா உங்க சின்ன அய்த்தை என்னைப் பிரம்பால் பொரட்டி எடுத்துடும். நான் உத்தரவு வாங்கிக்கறேன்.” என்று அவன் சற்று தள்ளிப்போனதும் ஸ்ரீதருக்கு வசதியாகத்தான் இருந்தது.

திருமணம் செய்துகொள்ள போகும் பெண் என்றாலும் வழிந்து கொண்டு நிற்பதோ உருகுவதோ அவனுக்கோ அவன் வகிக்கும் பதவிக்கோ அழகல்ல என்று நினைப்பவன்.

பெண்களிடம் சற்று இடம் கொடுத்து விட்டாலும் மடத்தைப் பிடுங்கி விடுவார்கள் என்ற கொள்கை எங்கோ ஒரு மூலையில் இருக்கும் போல அவனுக்கு… வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் செய்கையில் அந்த ஆளுமை வெளிப்பட்டுவிடும்.

ஒருமுறை தனது நண்பனிடம் விளையாட்டு போல கூறியதுண்டு.

“நாம ரெண்டும் ரெண்டும் அஞ்சுன்னு சொன்னா ஆமாங்கன்னு தலையை மட்டும் ஆட்டனும்… அப்படி வெச்சுருக்கணும் பொண்டாட்டியை…”

விளையாட்டுக்காகக் கூறினாலும் உள்ளுர அந்த உறுதி எப்போதுமே இவனுக்கு உண்டு. அதனாலேயே இப்போது வரைக்குமே தமிழிடம் கைப்பேசியில் கூட பேசாமல் இருந்தான்.

ஆனால் பேரழகு பொக்கிஷமாக தன்னருகே அமர்ந்திருந்தவள் அவனது உறுதியை இப்போது சோதித்துக்கொண்டிருந்தாள்.

“என்ன படிச்சிருக்க தமிழ்நதி?” அவளிடம் பேச வேண்டும் போல தோன்றியது. அவள் அவனிடம் உரிமையாகப் பேசினால் எப்படி இருக்குமென்று எண்ணிப்பார்த்தான்.

திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண்ணை பற்றி இப்படிக்கூட நினைத்து பாராவிட்டால் எப்படி என்று அதற்கொரு சமாதானம் வேறு!

“ஹா…” என்பது போல புரியாமல் அவள் அவனைப் பார்த்தாள். மீண்டும் அவனது கேள்வியை கேட்டான். சற்று யோசித்தவள்,

“ம்ம்ம்… ஃபேஷன் டெக்னாலஜி…” என்று கூறினாள்.

“ரொம்ப பிடிக்குமோ?” அவளை அளந்து கொண்டே அவன் கேட்டான். அவளுக்கு அந்தப் பார்வை சற்றும் பிடிக்கவில்லை. இவ்வளவுக்கும் அவனும் தவறாக பார்க்கவில்லை.

வெகு ஒழுக்கமான பார்வைதான். ஆனால் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை பார்க்கும் உரிமையான பார்வை.

ஆனால் வேறுபுறம் சென்றுவிட்ட மனம் அவனது பார்வையை வெறுத்தது!

அது அவளது தவறா? அவளது தலைவிதியின் தவறா?

“ம்ம்ம்… ரொம்ப…” என்றுக்கூறிவிட்டு வேறுபுறம் திரும்பிக்கொள்ள,

“வேலை பார்க்கனும்ன்னு நினைக்கிறியா?” வெறும் வார்த்தைக்காகக் கேட்காமல் ஏனோ அவளைத் திருப்தி செய்ய வேண்டும் போல தோன்றியது.

“ம்ம்ம்… ஆமா…”

“ம்ம்ம்… அலப்பிய விட கொச்சில ஃபேஷன் ஹவுஸ் அதிகம்… அங்க வேண்ணா ட்ரை பண்றேன்.” என்று அவன் கூறினான். அவள் அதிர்ந்து விழித்தாள்.

“நீங்க எங்க இருக்கீங்க?” முதன் முதலாக அவளாகக் கேட்கும் கேள்வி.

“உனக்குத் தெரியாதா?” குழப்பமாக அவன் கேட்டாள்.

“இல்லை. தெரியாது…” அவசரமாக அவள் கூறினாள். அவளுக்கு அந்த அலப்பி என்ற வார்த்தை தூண்டிவிட்டிருந்தது. ஆலப்புழை ஸ்ரீதரனின் ஊரல்லவா… அதன் பின் வேறு ஏதோ ஒரு ஊர் கூறினானே.

“நான் என்னவா இருக்கேன்னு கூடவா தெரியாது?” உண்மையிலேயே அது அவனது ஈகோவுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி!

“தெரியாதே…”அப்பாவியாக அவள் கூற, பதில் பேசாமல் தன்னுடைய தாயைப் பார்த்தான். அவரும் லோகாம்பாள் மற்றும் சித்ராவுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டு ஏதோ கதை பேசிக்கொண்டிருந்தார்.

ஆண்கள் தனியாக அமர்ந்து வம்பளத்துக் கொண்டிருந்தனர்.

இப்படியொரு மொக்கையை தனக்குப் பார்த்த பெண் தனக்கு தருவாள் என்று கனவிலும் எண்ணியிருக்கவில்லை அவன். அவள் அவனையே சற்றும் எண்ணவில்லை என்று அவனறிந்தால்?

“டி சி யா இருக்கேன் தமிழ்நதி… அதாவது டெபுடி கலெக்டர்… அலப்பில…” என்று அவன் கூற, அவளுக்கு ஏனோ ஸ்ரீதரனை அவனிடம் கூறிக் கேட்டால் என்னவென்று தோன்றியது!

“அப்படியா…” என்று கண்களில் சற்று மலர்ச்சியை அவள் காட்டியவள், “என்னுடைய ஃப்ரென்ட் ஒருத்தரைப் பத்தி தெரியவேண்டும். அவங்களும் அலப்பி தான்…” என்று கேட்டாள்.

“திருப்பதில போய் மொட்டைய தேடின மாதிரிதான்…” என்று அவன் சிரித்தான். அவளது முகம் விழுந்தது.

“சரி முதல் முதலா கேட்கற… கேளு தமிழ்நதி… என்னால் முடிந்த அளவு ட்ரை பண்றேன்.”

“ஸ்ரீதரன் வெர்மா… என்னுடைய ஃப்ரென்ட்… இப்ப எங்க இருக்கார்ன்னு தெரியல்…” என்று சற்றும் தயங்காமல் அவனிடம் கேட்டவளை வித்தியாசமாகப் பார்த்தான் ஸ்ரீதர்.

அந்தப் பெயர் அவனைச் சற்று அசைத்தும் பார்த்தது.

“ஃப்ரென்ட்னா…” என்று அவன் இழுத்தான்.

“ஃப்ரென்ட் தான்…” என்று சற்று தயக்கமாக இழுத்தாள்.

“லவ்வா…” என்று அவன் சிரிக்க, அவள் திகைத்தாள். இதற்கு என்ன பதிலுரைப்பது? அதுக் காதலென்று அவனே அங்கீகரிக்கவில்லையே… அதை எப்படி இவனிடம் அறிவிப்பது என்ற உணர்வு!

பதிலேதும் கூறாமல் அவள் மௌனமாக அமர்ந்திருந்தாள்.

“இந்த வயசுல இது சகஜம் தமிழ்நதி… இதைக் கடக்காதவர்கள் ரொம்ப குறைவு… ஆனால் கொஞ்ச வருஷம் கழிச்சு நினைச்சு பார்த்தா சிரிக்கத்தான் தோணும்… நீயும் கடந்து வா… சரியா?” மிகவும் பொறுப்பாக அவன் கூறினான். அவள் பதிலேதும் கூறாமல், புடவையை வெறித்துக்கொண்டிருந்தாள்.

ஸ்ரீதரின் கைப்பேசி அழைத்தது.

“எஸ்… ஸ்பீகிங்…” என்று ஆரம்பித்தவனின் முகம் மறுபுறத்திலிருந்து வந்த பதிலில் பெரிய அதிர்வினை காட்டியது.

“…”

“பிஜு… ஐம் நாட் கெட்டிங்… கம் அகைன்…” அந்த பிஜுவிடம் மீண்டும் அழுத்திக் கேட்டான். தன் காதில் விழுந்தது உண்மையா என்று!

“…”

“ஓ மை குட்நெஸ்… கொச்சு தம்புரான் எப்ப வந்தார்?”

“…”

“பிரச்சனை ஒன்றும் இல்லையே…”

“…”

“சரி… நான் உடனே புறப்பட்டு வரேன்… கீப் போஸ்டட்…”

வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டவன்,

“கிளம்பறேன் தமிழ்நதி… ரொம்ப அர்ஜன்ட்…” என்று அவளிடம் மன்னிப்பு கேட்டவன், தனது தாயை பார்த்து,

“ம்மா… அர்ஜன்ட் வேலைம்மா… நீங்கப் பார்த்து எடுத்துவிட்டு வந்துடுங்க… கார்டை வெச்சுக்கங்க…” என்று அவனது கார்டை கொடுத்தவன், மிகவும் அவசரமாகக் கிளம்பினான்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 16

சக்கரவியூகத்தை உடைக்கும் வித்தையை பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மட்டுமே உபதேசித்தார். போர்களத்தில் சுழலும் மரண இயந்திரமாகச் சக்கர வியூகம் கருதப்பட்டது. மிக நுட்பமான அறிவும் ஆற்றலும் இல்லையெனில் இதன் உள்ளே செல்பவர்கள் உயிர் பிழைத்து மீண்டும் வெளியில் வருவது மிக அரிது.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum ஒரு கருத்து உள்ளது

  1. 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

உங்கள் கருத்தைப் பகிருங்கள்