arrow_back
சக்கரவியூகம் அத்தியாயம் 16
சக்கரவியூகம் chevron_right பகுதி 16 / 26

அத்தியாயம் 16

visibility 917
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 4.9/5 (11 மதிப்பீடுகள்)
பகிர்

சக்கரவியூகத்தை உடைக்கும் வித்தையை பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு மட்டுமே உபதேசித்தார். போர்களத்தில் சுழலும் மரண இயந்திரமாகச் சக்கர வியூகம் கருதப்பட்டது. மிக நுட்பமான அறிவும் ஆற்றலும் இல்லையெனில் இதன் உள்ளே செல்பவர்கள் உயிர் பிழைத்து மீண்டும் வெளியில் வருவது மிக அரிது. பாண்டவர்களை வீழ்த்த துரோணாச்சாரியார் இந்தச் சக்கர வியூக அமைப்பை ஏற்படுத்தினார். பெரும் சிக்கலை ஏற்படுத்தி எதிரியை மதிமயங்க வைக்கும் இந்த பயங்கரமான போர்த் தந்திரத்தை முறையாகப் புரிந்து கொண்டு இந்தச் சக்கர வியூகத்தின் உள்ளே ஊடுருவிச் சென்று போர் புரிந்து பிழைத்து அதைத் தகர்த்து உயிருக்குச் சேதமில்லாமல் மீண்டு வரும் திறமை பாண்டவர்களில் அர்ஜூனன் உட்பட ஒருசிலருக்கே இருந்தது.

அவன் மகனான அபிமன்யுவிற்கு உள்ளே செல்லும் வித்தை மட்டுமே தெரிந்திருந்தது. அதனால் ஜெயத்ரதன் முதலானோர் அவனை சூழ்ந்து கொண்டு அவனை அநியாயமாக விதிகளை மீறிக் கொன்றனர்.

இப்போது சொல் ஸ்ரீதரா நீ அர்ஜுனனா அபிமன்யுவா?

சில்லென்ற காற்று முகத்தில் அறைந்தது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. மழை பெய்திருக்கும் போல என்று நினைத்துக்கொண்டான் ஸ்ரீதரன். சென்னையில் பார்க்க முடியாத பசுமை!

இத்தனை வருடங்களாக அவன் பார்க்க விரும்பாத பசுமை!

கண்களில் நிரப்பிக்கொண்டான். அது அவனது தாயின் மண்.

மாவேலிக்கரா!

காலத்தின் ஓட்டத்தில் மறக்கப்பட்டு விடலாம்… எவ்வளவோ சம்பவங்களை போல மறைக்கப்பட்டு விடலாம்.

எத்தனையோ நினைவுகளைத் தட்டி எழுப்பிக்கொண்டிருந்தது அந்தப் பசுமையும் பூட்டப்பட்டிருந்த அந்தப் பழமையான பதினாறு கெட்டில் மாளிகையும்!

ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான மாளிகையாக இருந்தது அது.

வல்லியகொட்டாரம் எனப்படும் வடக்கு கொட்டாரம்!

கோலஸ்வரூபத்தின் கிளையான கோலத்துநாட்டு பரம்பரையின் மீதம்!

திருவிதாம்கூரின் சகோதரிக்கிளை.

அவர்களின் கொட்டாரங்கள் பலவாக இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் தாய் கொட்டாரம் தான் இந்த வடக்கு கொட்டாரம். ஆதிக் கோவிலகம்!

திருவிதாம்கூர் அரண்மனை, அனந்தபுரம் அரண்மனை, லக்ஷ்மிபுரம் அரண்மனை, செம்பரோல் அரண்மனை, பூஞ்சாறு அரண்மனை, கிளிமானூர் அரண்மனை போன்ற பெயர் பெற்ற பரம்பரைகள் தளிர்க்க பெண் பிள்ளைகளை வழங்கிய பெருமைமிகு வல்லிய கொட்டாரத்தின் மீதங்களை கைகளை கட்டிக்கொண்டு பார்த்தான் ஸ்ரீதரன் வெர்மா!

இந்நேரத்திற்குத் தான் வந்த செய்தி எங்கெங்கு செல்ல வேண்டுமோ, அங்கெல்லாம் பரவியிருக்கும் என்றெண்ணிக் கொண்டான்.

குளக்கரையின் சில்லென்ற காற்று முகத்தைத் தீண்ட கண் மூடி அனுபவித்தான். தாயும் தந்தையுமாக இங்கு வந்தபோதெல்லாம் தான் அனுபவித்த சந்தோஷங்கள் அவனது நினைவில் ஊஞ்சலாடியது.

தாயையும் தந்தையையும் நினைக்கும் போது மனம் வலித்தது.

பதவியும் அந்தஸ்தும் பணவெறியும் உறவென்றும் பார்ப்பதில்லை. தன் ரத்தம் என்றும் உணர்வதில்லை. பேராசைகளுக்குத் துரோகங்களும் ரத்தாபிஷேங்கங்களும் பெரிய விஷயமாகத் தெரிவதில்லை.

ஆனால் அந்தத் துரோகமும் வஞ்சமும் அழகான ஒரு குடும்பத்தை இல்லாமல் செய்து விட்டதே!

இப்போது நினைத்தாலும் உள்ளுக்குள் கோபம் பொங்கிக்கொண்டு தானிருந்தது. ஆனால் கோபப்பட்டு காரியத்தைக் கெடுத்து கொள்ளும் நேரமல்ல இது.

கோபம் அறிவை மழுங்கடிக்கும்… புத்தியைக் குழப்பி விடும். பிரச்சனையின் வீரியத்தை மூளை உணராமல் செய்துவிடும்.

அது கூடாது!

கூடவே கூடாது.

இந்த நேரத்தில் தெளிவாக தள்ளி நின்று பார்ப்பதனால் மட்டுமே வாமனனை கையாள முடியும்.

வாமனன் முன் அந்தத் தெளிவும் நிதானமும் மிகவும் முக்கியம்… எதிராளியைக் கோபப்படுத்தினால் அவனது அறிவனைத்தும் திறனற்றதாகிவிடும் என்பதை அறிந்த புத்திசாலி அவன்.

வாமனன் கோபத்திலும் கடைப்பிடிக்கும் நிதானத்தை ஸ்ரீதரன் கண்டதுண்டு.

அந்த நிதானம் தான் இப்போது தனக்கும் வேண்டும் என்று உறுதியாக உணர்ந்தான் ஸ்ரீதரன்.

“எண்டே குருவாயூரப்பா… கொச்சு தம்புரானே வந்தே… ஞான் நோக்கி… எண்டே கொச்சு தம்புரானை ஞான் கண்டிட்டு…” ஸ்ரீதரனை பார்த்த மகிழ்ச்சியில் கூத்தாடிய அந்த கிழவனாரை மகிழ்ச்சி பொங்கப் பார்த்தான்.

அவர் அந்த வல்லிய கொட்டாரத்தின் பழைய பாதுகாவலர். இப்போதும் கொட்டாரத்தின் அருகிலிருக்கும் மனையில் தங்கியிருக்கிறார் என்பது வரை அவனுக்குத் தெரியும்.

கிருஷ்ணன் கோவிலின் பணிகளையும் அவர் தான் முன்னின்று பார்த்து கொள்வதும். வயதாகிவிட்டதால் அவரது மகனை ஐந்து வருடம் முன்பே அந்தப் பொறுப்பில் நியமித்த ஞாபகம்.

அதற்குப் பின் அவரது மகன் கிருஷ்ணன் கோவிலில் கழுத்தறுபட்டு கிடந்த போதும் கூட வடக்கு கொட்டாரத்தின் பக்கம் நின்றவர் அவர். தள்ளாமையையும் பொருட்படுத்தாமல் இப்போதும் தொண்டூழியம் செய்து கொண்டிருப்பவர்.

கிருஷ்ணன் கோவிலின் நினைவு வரும் போதே அவனது உடல் இறுகியது.

வெளியிலிருந்து பார்த்து ரசிக்கலாம்… ஆனால் உள்ளிருப்பவர்களுக்குத் தெரியும்… அந்தக் கோவில்களும் கோவிலகங்களும் ரகசியங்கள் நிறைந்தவை, ஆபத்தானவை என்று!

“எந்தா பணிக்கரே… சுகந்தன்னே?” மெல்லிய புன்னகையோடு ஸ்ரீதரன் கேட்டான்.

“வளர சுகம்… (தமிழிலேயே இருக்கட்டுமே)… எங்க கொச்சு தம்புரானை (சிறிய தம்புரான்) காணாத வருத்தம் தான். இப்ப அதுவும் இல்ல… குருவாயூரப்பா… உங்களுக்கு ஷேமத்தையும் நல்ல ஆயுளையும் குருவாயூரப்பன் நல்கட்டும் தம்புரானே…” ஸ்ரீதரனை கண்ட மகிழ்ச்சியில் அவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர்.

“நன்றி பணிக்கரே… கோவிலகத்தோட சாவி உங்ககிட்ட தானே இருக்கு?” குறிப்பாக அவன் கேட்ட கேள்வியைப் புரிந்து கொண்டவர்,

“ஆமா… கண்டிப்பா அது என்னைத் தாண்டி வேறெங்கும் செல்லாது. இந்த உயிர் வல்லிய கொட்டாரத்துக்கானது தம்புரானே…”

அந்த வயதான கண்களில் தான் அவ்வளவு ஒளியும் திடமும்!

அது எங்கிருந்து வந்தது?

காலம் காலமாக உண்மையாக நேர்மையாக ஊழியம் செய்யும் ஊழியனின் ஒளி அது!

அவர் ஊழியம் செய்ததும் செய்வதும் கோவிலகத்துக்கு அல்ல… அந்த மகாவிஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ கிருஷ்ணருக்கு!

தனக்குள்ளாகப் புன்னகைத்துக்கொண்டான். விலை போகாதவை பல இந்த உலகத்தில் உண்டு என்று வாமனனுக்கு காட்ட வேண்டும் என்பது போல தோன்றியது.

“தம்புரானே… போரிடுவதும் போராடுவதும் ஷத்ரியனின் இயல்பு… மன்னிப்பதற்காகவோ நிம்மதியை நாடி தேசாந்திரம் செல்வதற்காகவோ அவன் படைக்கப்படவில்லை. அது அவனது பிறப்பின் நோக்கமுமல்ல… ஷத்ரியன் போராடாவிட்டால் துரோகிகளுக்கு அது கொண்டாட்டமாகி விடும். அது வரலாற்றுப் பிழை… ”

அந்த அறச்சீற்றம் அவரது விழிகளில் தென்பட… உதிர்த்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் மூன்று வருடங்களாக தன்னிடம் கூறுவதற்காக அவர் காத்திருந்து கொதித்து கொட்டியவை என்பது அவனுக்கு புரிந்தது. இந்த வார்த்தைகள் அவனுக்கு கண்டிப்பாக தேவைதான்.

தான் நிம்மதியை தேடிப்போக ஓநாய்களின் அதிகாரம் வளர்ந்து விட்டதே!

“இனி அப்படி நடக்காது பணிக்கரே… போவதாக இருந்தாலும் அனைத்தையும் முடித்து விட்டுத்தான் போவேன்…” அவனது குரல் உறுதியாக ஒலித்தது. ஏனோ அந்த நேரத்தில் தன்னுடைய கடமைகளுக்கு முன் தன்னுடைய காதல் மிகவும் அற்பமானதாக தோன்றியது.

அவசரமாகச் சாவியை எடுத்துக்கொண்டு வந்தவரின் பின்னால் இன்னும் பத்து பேர்!

அனைவரும் அங்குப் பணியாற்றிய உண்மை ஊழியர்கள்.

“கொச்சு தம்புரானே…” ஒவ்வொருவரின் கண்களிலும் நீர்ப்படலம்… மரியாதை, பாசம் என்பதைத் தாண்டி ஒருவித பக்தி.

அது அந்த மாளிகையின் தம்புராட்டிக்கு அவர்கள் தரும் மரியாதையின் பிரதிபிம்பம்.

ஸ்ரீசாக்த வெர்மாவின் மனைவி ஸ்ரீவித்யா லக்ஷ்மிக்கு அவர்கள் தரும் மரியாதை.

மருமக்கதாயத்தில் வம்சம் விருத்தியாவது பெண்களை கொண்டேயாம்… அதாவது தமிழகத்தில் தந்தைக்கு மகன் வாரிசு என்று தந்தை வழி சமூகம் இருப்பது போல கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் தாய் வழி சமூகமே இருந்தது.

திருவிதாம்கூர் சமஸ்தானத்திலிருந்து ஆரம்பித்தால் அத்தனை கோவிலகங்களும் அப்படியே!… பொதுவில் இந்தத் தலைமுறை வேண்டும்னாலும் மாற்றம் கண்டிருக்கலாம்… ஆனால் இன்னமும் திருவிதாம்கூரோ, மாவேலிக்கரையோ எதுவானாலும் மருமக்கதாயமே.

அதாவது ஒரு வீட்டில் பெண் பிள்ளைகள் இல்லையென்றால் குலம் தழைக்கத் தோதான வீட்டிலிருந்து பெண்களை தத்தெடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தான் அந்தந்த மாளிகையின் வாரிசுகள்.

அதன்படி ஸ்ரீ சுதர்சன வெர்மாவின் சகோதரி ஸ்ரீவித்யாவின் வாரிசு ஸ்ரீதரனே தன் மாமனின் வாரிசு.

அதனால் அவனுக்குத் தான் அங்கு அனைத்து முதல் உரிமைகளும்!

“இவ்வளவு நாளா எங்க போயிட்டீங்க? பெரிய தம்புராட்டியும் தம்புரானும் போனது ஒரு இடியென்றால் நீங்க இப்படி பண்ணீட்டீங்க… நாங்க எல்லாரும் இல்லையா? எங்களை எல்லாம் நீங்க உறவா நினைக்கவில்லையா?”

அவர்கள் கேட்பதும் உண்மைதானே?

ஊழியம் செய்பவர்களாக இருந்தாலும் தன் தாய் அவர்களை அவ்வாறு நடத்தியதில்லையே… ஒவ்வொருவரையும் உறவாகத்தான் நினைக்க வைத்திருந்தார்.

மெலிதாக புன்னகைத்துக்கொண்டான்.

“அதான் வந்துட்டாரே ராதேயா… இனி அவர் மாவேலிக்கரையையும் ஆலப்புழையையும் தாண்டிப்போகாம நாம பார்த்துக்கலாம்…” என்று கொச்சுண்ணி கூற, அங்கு அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் அனைவரது முகத்திலும் சிரிப்பு மலர்ந்தது.

பணிக்கருக்கும் சேர்த்து!

காற்றைப் பிடித்து குடுவையில் அடைத்து வைக்க முடியுமா என்று நினைத்துக்கொண்டார்.

இவன் போக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் நிறுத்த நினைக்கக்கூட முடியாதே… நினைக்கும் போதே அவரது முகத்தில் புன்முறுவல் பூத்தது. ஆனால் அவன் கொடுத்த உறுதியை நினைத்துப் பார்த்துக் கொண்டார்.

முதலில் அவனை அவன் வெற்றிக் கொண்டு வரட்டும் என்று நினைத்துக் கொண்டார்.

பணிக்கரின் கைப்பேசி அழைத்தது.

அழைத்தது வாமனன்!

எடுத்துப் பேசியவர், வாமனன் என்று கசப்பாக கூறி ஸ்ரீதரனிடம் கைப்பேசியைக் கொடுக்க, அதற்காகக் காத்துக்கொண்டிருந்தவனாக வாங்கியவன்,

“சொல்லு வாமனா…” அழுத்தமான குரலில் மிகவும் அமர்த்தலாக அவன் கேட்டது ஸ்ரீ சாக்தரின் குரல் போலவே இருக்க, ஒரு கணம் தடுமாறினான் வாமனன்.

“மூன்று வருடம்…” பெருமூச்சோடு இடைவெளி விட்டவன், “எப்படி ஸ்ரீதரா எங்களை எல்லாம் விட்டுட்டு இருந்த? எங்க போன?” வாமனனின் குரலில் மருந்துக்கும் பகைமை தெரியவில்லை. அந்த அளவு திறமையாளன் அவன்.

அரசியல்வாதி ஆயிற்றே!

“எங்க போனன்னு கேட்கறியா? இல்ல ஏன் வந்தன்னு கேட்கறியா வாமனா?” அழுத்தந்திருத்தமாக அவன் கேட்டான்.

“எப்படித் திரும்பி போவன்னு யோசிக்கிறேன்.” அவனும் அலட்டாமல் கூறினான்.

“நான் வடக்கு கொட்டாரத்தில் தான் இருப்பேன்… முடிந்தால் இங்க வந்து என்னை நேரா பேஸ் பண்ணு வாமனா… கோழையாட்டாம் விளையாடாதே…” சற்றும் சுதி உயராமல், வார்த்தைகளில் உணர்வுகளைக் கலக்காமல் அவன் பேசியதை கேட்ட வாமனனுக்கு கோபம் பற்றிக்கொண்டு வந்தது.

முந்தைய ஸ்ரீதரன் இப்படி அல்லவே… கொஞ்சம் கோபப்படுத்தினாலும் வெடித்து விடுபவன். ஆனால் இப்போது அவனிடமிருக்கும் நிதானம் வாமனனை யோசிக்கச் செய்தது.

இந்த ஸ்ரீதரன் ஆபத்தானவன்!

“ஸ்ரீதரா… வடக்கு கொட்டார கோவிலகம் என்னுடையது. அதை விட்டுடு…” பொங்கிவந்த கோபத்தை அடக்கிக்கொண்டு வாமனன் கூறினான்.

“ஒரு அடி கூட தர முடியாது. அந்த மாவேலியை வாமனன் ஏமாற்றி இருக்க முடியும். ஆனால் இந்த மாவேலிக்காரனிடம் உன்னுடைய வஞ்சம் செல்லாது வாமனா… என்னுடைய பாரம்பரியத்தை யாருக்கும் விட்டுத்தர முடியாது. எதையுமே!” நின்று நிதானமாக அவன் கூறிய வார்த்தைகள் வாமனனின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தன.

“நானும் மாவேலிக்காரன் தான். உன்னை மட்டுமே உன்னுடைய குடும்பத்தில் விட்டு வைத்திருக்கிறேன். உன்னுடைய கதையை முடிக்க எனக்கு சில நொடிகளே போதும்… ஜாக்கிரதை ஸ்ரீதரா…”

கோபத்தை வெளிக்காட்டாமல் அவன் கூறிக்கொண்டிருக்கும் போது இங்கு வடக்கு கொட்டார கோவிலகத்துனுள் நுழைந்தனர் ராஜீவும் அவனது ஆட்களும்!

கிட்டத்தட்ட ஐம்பது பேர்!

ஒவ்வொருவரின் கண்களிலும் கூர்மை!

நொடிகளில் அந்த இடத்தின் பாதுகாப்பை அவர்கள் கையிலெடுத்து கொள்ள, ஸ்ரீதரனை பார்க்க வந்திருந்தவர்களுக்கு உள்ளுக்குள் குளிர் பிறந்தது.

மூன்று வருடத்திற்குப் பிறகு, ஸ்ரீதரன் இப்போது ஆடுபுலி ஆட்டத்தை ஆரம்பித்து விட்டான் என்று தோன்றியது.

இப்போது வீழ்த்தப் படுவதும் வீழ்வதும் யார் என்பதுதான் அவர்கள் முன் இருந்த கேள்வி!!

எப்படி இருந்தாலும் பெருமை மிக்க கோவிலகத்தின் பாரம்பரியத்திற்குக் குந்தகம் வருவதையோ கிருஷ்ணன் கோவில் மீண்டும் ரத்த வெள்ளத்தில் மிதப்பதையோ யாருமே விரும்பவில்லை.

ராஜீவ் கண்களால் ஸ்ரீதரனுக்கு செய்தியை சொல்லிவிட,

“நீ எச்சரிப்பது இருக்கட்டும் வாமனா… முதலில் நீ எச்சரிக்கையாக இரு… அப்படியே விட்டு விட்டுப் போக நான் ஒன்றும் பழைய ஸ்ரீதரன் இல்லை. ஒன்றுக்கு பத்தாக திருப்பித் தர வந்திருக்கும் ஸ்ரீதரன். மாதவன் குட்டி எங்கே என்று விசாரி… அவனுடைய நிலைக்கு உன்னை ஆளாக்க எனக்கும் சில நொடிகளே போதும்…” என்றவன் கைப்பேசியை துண்டித்து விட்டான்.

இவர்கள் போன்றவர்களுக்கு நியாயமோ தர்மமோ பார்க்கவே கூடாது. தர்மமில்லாதவற்றைச் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பது இவர்களைப் பொறுத்தவரை அது அவர்களுக்கான பலமாகவும் நல்லவர்களின் பலவீனமாகவுமே கொள்ளப்படுகிறது.

சாது மிரண்டால் என்னவாகும் என்பதை அவனும் தான் தெரிந்து கொள்ளட்டுமே என்று எண்ணிக்கொண்டான் ஸ்ரீதரன்.

வாமனனோ கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தான்.

திருவண்ணாமலையில் மாதவன் குட்டியும் அவனது ஆட்களும் சென்ற இரண்டு சுமோவும் லாரியில் மோதி அவன் அந்த இடத்திலேயே இறந்த செய்தியை கேட்டு அதிர்ந்து நின்றான்.

அவனது முதல் இழப்பு!

அதுவரைக்கும் அடித்தாடிக்கொண்டிருந்த வாமனன் முதன் முதலாக அடி வாங்கி, அந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் அமர்ந்திருந்தான்.

இனி தானே ஸ்ரீதரனின் ஆட்டம் ஆரம்பமாகப் போகின்றது!

வாமனனின் சக்கர வியூகத்தை உடைக்க வந்தவன் அர்ஜுனனா இல்லை அவனது மகனா?

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 17

சக்கரவியூகம் என்பது போர்களத்தில் சுழலும் மரண இயந்திரம். சுழன்று கொண்டே இருக்கும் அந்த இயந்திரம் மரண ஹோமம் செய்ய காத்திருக்கும் சிறந்த போர்வீரர்களால் கட்டமைக்கப்பட்டது. அந்த வியூகத்தை உடைத்தேயாக வேண்டிய நிலையிலிருக்கும் நீ அர்ஜுனனா அபிமன்யுவா? ஆலப்புழை ஆட்சித்தலைவர் அலுவலகம் பரபரப்பாக…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 3 கருத்துகள் உள்ளன

  1. 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

உங்கள் கருத்தைப் பகிருங்கள்