• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகான ராட்சசியே-6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
199
Reaction score
1,060
Location
Bangalore
அத்தியாயம்-6

மறுநாள் காலை கண் விழித்த மகிழன் அதிர்ந்து போனான்...

வழக்கமாக எப்பவும் காலையில் எழும் பொழுது அந்த சிங்கார வேலனின் சிரித்த முகத்தை கண் முன்னே கொண்டு வந்து இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் என மனதில் நினைத்து கொண்டே கண் விழிப்பான்..

இது அவன் அன்னை சிவகாமி அவன் சிறு வயதில் இருந்தே பழக்கிய பழக்கமாக்கும்..

இன்றும் அதே போல படுக்கையில் இருந்தவன் கண் விழிக்கும் முன்னே அந்த சிங்கார வேலனை கண் முன்னே கொண்டு வர முயல, திடீரென்று அந்த வேலனுக்கு பதிலாக அந்த ராட்சசியின் முகம் கண் முன்னே வந்தது.. அதுவும் இடுப்பில் கை வைத்து அவனை பார்த்து முறைத்தவாறு நின்றாள்..

அவளை கண்டதும் அதிர்ந்து போய் துள்ளி குதித்து எழுந்தான் மகிழன்.. சுற்றிலும் கண்களை சுழற்றி பார்க்க, அலுவலக க்யூபிக்கலும் லேப்டாப் ம் மிஸ்ஸிங். மீண்டும் கண்களை நன்றாக தேய்த்து கொண்டு உற்று பார்க்க அப்பொழுதுதான் விளங்கியது இது அவன் அறை என்று...

"ஐயோ முருகா.. நேற்றுதான் இவ தொல்லை தாங்க முடியாம முக்கியமான வேலையை கூட அப்படியே விட்டுட்டு வீட்டுக்கு ஓடி வந்திட்டேன். இன்னைக்குமா ?

காலையிலயே அந்த வேலனுக்கு பதில் இந்த ராட்சசி வந்து நிக்கறாளே.. இன்னைக்கு நாள் விளங்கின மாதிரிதான்.. " என்று புலம்பி கொண்டே எழுந்து குளியல் அறைக்கு சென்றான்..

ரெப்ரெஸ் ஆகி உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தன் காலை உடற்பயிற்சியை தொடர்ந்தான்..கைகளும் கால்களும் தினமும் செய்யும் பழகிய உடற்பயிற்சிகளை செய்ய, அவன் மனம் மட்டும் அவளை எப்படி ஹேண்டில் பண்ணுவது என்றே யோசித்து கொண்டிருந்தது...

இன்னைக்கு இவ கிட்ட எதுவும் சண்டை வச்சுக்க கூடாது என்று முடிவு செய்தவன் அதற்கு பிறகு அவளை பின்னுக்கு தள்ளி அன்றைய நாள் க்கான தன் அஜென்டாவை நிர்ணயித்தவாறு தன் பயிற்சியை முடித்து தன் அறைக்கு திரும்பி சென்று குளித்து தயாராகி அலுவலகத்துக்கு செல்ல கிளம்பி வந்தான்..

நேற்று பாதியில் விட்டு வந்த வேலைகள் பாக்கி இருப்பதால் இன்று சீக்கிரம் போய் அதை முடிக்க வேண்டும் என்று சீக்கிரமே கிளம்பி விட்டான்.

மாடிப்படியில் இறங்கி வர, அவன் அண்ணி மதுவந்தினி அப்பொழுது தான் பூஜை முடித்து கையில் ஆரத்தி தட்டுடன் வெளி வர மகிழனை கண்டதும்

“குட்மார்னிங் மகி.. “ என்று புன்னகைத்தவாறு அந்த கற்பூர தட்டை அவன் முன்னே நீட்டினாள்..

காலையிலயே தலைக்கு குளித்து உடலை உறுத்தாத ஒரு காட்டன் புடவையில் தலையில் சுற்றிய டவலுடன் நெற்றி வகிட்டில் வைத்த குங்குமத்துடன் மங்களகரமாக சிரித்த முகத்துடன் தன் முன்னே நின்றிருந்தவளை கண்டதும் மனதுக்குள் இதம் பரவியது.

இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா என்று ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு.. அவள் முகத்தை பார்த்தாலே எல்லா டென்ஷனும் ஓடி விடும் போல இருந்தது..

அதனால்தான் எப்பவும் முறுக்கி கொண்டே சுத்திகிட்டிருந்த ACP நிகிலன் IPS கூட இப்பொழுது ரொம்பவுமே இலகி விட்டான்...

கண்ணில் எப்பவும் தெரியும் அந்த கடின பார்வை மறைந்து ஒரு கனிவு தோன்றியது மது வினால் தான்.. எப்படி இருந்தவனையும் இப்படி மாற்றி விட்டாளே.. இவள் வந்த பிறகு தான் அந்த வீட்டிற்கே ஒரு களை வந்தது என்பதும் அவன் அறிந்ததே..

"இப்படி ஒரு பெண் மனைவியாக கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. முருகா, எனக்கும் இதே மாதிரி ஒரு பொண்ணை கண்ணுல காட்டேன் .. " என்று மனதில் நினைக்க அடுத்த நொடி சந்தியா வந்து அவனை பார்த்து முறைத்தாள்...

"ஐயோ.. இவ மாதிரி ஒரு ராட்சசி மட்டும் எனக்கு வேண்டவே வேண்டாம்.." என்று அவசரமாக ஒரு அப்ளிகேசனை போட, திடீரென்று அவன் கையில் யாரோ கிள்ளுவது உறைத்தது... ஆ வென்று அலறியவன் நிமிர்ந்து பார்க்க

"என்ன மகி சார்.. நின்னுகிட்டே கனவு காண்கறீங்களா?? சீக்கிரம் விபூதி எடுத்துக்கங்க.. கை சுடுது.. " என்றாள் மது அவன் கையை நறுக்கென்று கிள்ளி சிரித்தவாறு ..

தன் நினைவுக்கு வந்தவன் அசட்டு சிரிப்பை சிரித்தவாறு அவள் நீட்டி இருந்த கற்பூரத்தை தொட்டு வணங்கியவன் அதில் இருந்த விபூதியை எடுத்து சிறு கீற்றாக வைத்து கொண்டு

“குட்மார்னிங் மது... யூ ஆர் லுக்கிங் சோ ப்யூட்டிபுல்.. அந்த சாமியார் ரொம்ப லக்கி பெல்லோ.. “ என்று சிரித்தான்..

“மகி.. எத்தனை தரம் சொல்றது.. என் புருசனை சாமியார் னு சொல்லாத.. “ என்று செல்லமாக முறைத்து சிணுங்கினாள் மது.

“ஹா ஹா ஹா. சாரி மது.. நீ எத்தனை தரம் சொன்னாலும் மறந்து போய்டுது..இனிமேல் சொல்லலை.. டீல்! “ என்று தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி சிரித்தவாறு கீழிறங்கி செல்ல அங்கு சிவகாமி ஒரு நடுத்தர வயதானவரிடம் எதையோ விவாதித்து கொண்டிருந்தார்..

அங்கு சென்றவன்

"குட்மார்னிங் மா.. " என்று சிரித்தான்.. அவன் குரல் கேட்டதும் அதுவரை குனிந்திருந்த அவர் நிமிர்ந்து

"வணக்கம் தம்பி.. நல்லா இருக்கீங்களா? " என்றார் தன் காவி பற்களை காட்டி சிரித்தவாறு.. அவரை கண்டதும் அதிர்ந்தவன்

"ஐயோ இவரா?? " என்று தன் அன்னையை ஒரு கேள்வி பார்வை பார்க்க அவரும் சிரித்து கொண்டே

"டேய்.. மகிழா.. இப்படி வந்து உட்கார்.. " என்றார்.

அவனும் தன் லேப்டாப் பேக்கை அருகில் இருந்த சோபாவில் வைத்து விட்டு அவர் அருகில் சென்று அமர்ந்தவன்

"மா.. இப்ப எதுக்கு இவரை வர சொல்லி இருக்க ?. அதான் நிகிலனுக்கு கல்யாணம் ஆகிடுச்சு இல்ல.. மறுபடியும் எதுக்கு இந்த பொண்ணு தேடும் படலாம்.. என்ன அவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்க போறியா?

மது பிச்சுடுவா உன்னை.. அவ முன்னை மாதிரி வாயில்லா பூச்சி இல்ல. கொஞ்சம் கொஞ்சமா டெரர் ஆ மாறிகிட்டிருக்கா... இப்ப கூட என்னை கையில கிள்ளி வச்சா... " என்றான் சிரித்தவாறு..

அதை கேட்டு முறைத்த சிவகாமி

"டேய்.. கொஞ்சம் நிறுத்தறியா .. பொண்ணு தேடறது அவனுக்கு இல்லை.. உனக்குத்தான்.. " என்று முறைத்தார்.. அதை கேட்டு அதிர்ந்தவன்

"வாட் சிவகாமி தேவி.. எனக்கா?? கல்யாணமா? " என்றான் அதிர்ச்சியாக

"ஏன்டா.. இதுக்கு போய் இவ்வளவு ஷாக் ஆகற?.. உனக்கும் 29 நடக்குது.. அது முடியறதுக்குள்ள உனக்கும் ஒரு பொண்ணை புடிச்சு கட்டி வச்சுட்டனா நான் நிம்மதியா இருப்பேன்... "

"ஹ்ம்ம் நீ நிம்மதியா கோவில் கோவிலா சுத்துவ.. நான் இல்ல அவ கிட்ட மாட்டிகிட்டு முழிக்கணும்..என்னை மாட்ட விட்டுட்டு நீ எஸ் ஆக பார்க்கறியா? .. நோ வே.. அதெல்லாம் வேலைக்கு ஆகாது..

எனக்கு இன்னும் ஒரு இரண்டு வருசம் போய் நல்லா இந்த பேச்சுலர் வாழ்க்கையை அனுபவிச்சுட்டு அப்புறம் அந்த வலையில மாட்டறேன்.. இப்ப என்னை ஆள விடு .. " என்று எழ முயன்றான்...

அவனை கை பிடித்து இழுத்து அமர்த்தியவர்

"டேய்.. விளையாண்டது போதும்.. சீரியசா சொல்றேன்.. இந்த வருசத்துக்குள்ள உனக்கு கல்யாணத்தை முடிக்கணும்.. இதுல ஏதாவது ஒரு பொண்ணை புடிச்சிருக்கானு பார்த்து சொல்.. " என்று அவன் கையில் அவர் பார்த்து கொண்டிருந்த ஆல்பத்தை திணித்தார்..

அவனும் வேற வழியின்றி அந்த ஆல்பத்தை புரட்ட, அதில் ஒவ்வொரு பொண்ணும் விதவிதமான மேக்கப்பில் சிரித்த படி இருக்க, அதை பார்க்கும் பொழுது ஒவ்வொன்றும் நாக்கை நீட்டியும் பல் பெரிதாக நீண்டு தலையில் கொம்புடன் ராட்சசி போல அவனை பார்த்து முறைப்பதை போல தோன்றியது...

"ஐயோ.. நான் வரலை இந்த ஆட்டத்துக்கு.. அம்மா.. என்னை விட்டுடு.. இதுல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் ராட்சசி, இரத்த காட்டேறிங்க மாதிரி இருக்குங்க... எனக்கு வேண்டாம்.." என்றான் அலறியவாறு..

அதை கேட்டு முறைத்த சிவகாமி அவன் காதை பிடித்து திருகி

"டேய்.. ஒழுங்கா விளையாடாம நல்லா உற்று பார்.. உன் அண்ணனை இப்படி காதை திருகி காலா காலத்துல கல்யாணம் பண்ணி வைக்காம விட்டுட்டு பின்னாடி நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.. அதனால அந்த தப்பை உன் விசயத்துல பண்ண போறது இல்லை...

இந்த வருசத்துக்குள்ள உனக்கு கல்யாணத்தை முடிச்சாகணும்.. அதனால ஒழுங்கா இதுல இருக்கிற ஏதாவது ஒரு பொண்ணை பார்த்து செலக்ட் பண்ணு.. இல்லை நானே ஏதாவது ஒரு பொண்ணை செலக்ட் பண்ணி கட்டுடா தாலியனு சொல்லிடுவேன். " என்று மிரட்டினார்..

"ஆஹா.. காலையில் பார்த்த அந்த ராட்சசி முகம் இப்பயே வேலையை காட்ட ஆரம்பிச்சிட்டுதே.. ஏழரை என் வீட்ல இருந்தே ஆரம்பிடுச்சு.. இன்னும் என்னெல்லாம் பார்க்க போறனோ.. " என்று மனதுக்குள் புலம்பியவாறு அந்த ஆல்பத்தை புரட்ட அந்த புகைப்படங்கள் எல்லாம் முன்பே பார்த்த மாதிரி இருந்தது...

உடனே எதிரில் அமர்ந்திருந்த அந்த கல்யாண புரோக்கரை பார்த்தவன்

"சார்... இந்த போட்டோஸ் எல்லாம் முன்னாடியே பார்த்திருக்கேனே.. ஹ்ம்ம் எங்க பார்த்தேன் ?.. " என்று தலையை சொரிந்தவன்

“ஆங் ஞாபகம் வந்திடுச்சு... இதே போட்டோவைத்தான் என் அண்ணன் நிகிலன் க்கு பொண்ணு தேடறப்ப காட்டினிங்க..இன்னும் அதே போட்டோவை வச்சுகிட்டே சுத்திகிட்டிருக்கீங்களா ?...

இந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் இன்னுமா கல்யாணம் ஆகலை? இல்லை உங்க ஆல்பத்தை வெய்ட் ஆக்கறதுக்காக அந்த போட்டோவை எல்லாம் அப்படியே வச்சிருக்கீங்களா?? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்.. " என்று முறைத்தான் மகிழன்..

"ஹீ ஹீ ஹீ .. அதே பொண்ணுங்க தான் தம்பி.. இன்னும் கல்யாணம் ஆகாம காத்துகிட்டிருக்காங்க... எங்க இந்த காலத்து பொண்ணுங்க ஏகப்பட்ட கன்டிசன்ஸ் வச்சிருக்குங்க..

பல மாப்பிள்ளையை கொண்டு போய் நிறுத்திட்டேன்.. எல்லாத்தையும் ரிஜக்ட் பண்ணிடுதுங்க.. மூக்கு சரியில்ல, முழி சரியில்ல, தலையில முடி இல்லை, நல்ல சம்பளம் இல்லை, ஆடி கார் இல்லை, சொந்த வீடு இல்லைனு இப்படி பல காரணங்கள் சொல்லுதுங்க..

அதான் தம்பி..அதுக்கெல்லாம் நானும் இன்னும் மாப்பிள்ளையை தேடி கிட்டிருக்கேன்.. அவங்க சொல்ற கன்டிசன்ஸ் க்கு எல்லாம் நீங்கதான் செட் ஆகறீங்க... ஏதாவது ஒரு பொண்ணை ஓகே பண்ணுங்க தம்பி.. உங்க புண்ணியத்துல ஒரு பொண்ணுக்காவது வாழ்வு கொடுங்க.. என் ஆல்பமும் கொஞ்சம் ப்ரியாகும்.. " என்று அசடு வழிந்தார்..

"என்னது? நான் வாழ்வு கொடுக்கறதா ? ..அப்புறம் என் வாழ்க்கையை முடிச்சிடுவாளுங்க.. " என்று மனதுக்குள் புலம்பியவன்

"புரோக்கர் சார்.. எனக்கு இப்ப கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா இல்லை.. அப்படி ஐடியா வர்ரப்போ நானே உங்களை கூப்பிடறேன்.. நீங்க இப்ப நடையை கட்டறீங்களா..

இனிமேல் எங்கம்மா சொன்னாங்கனு இந்த ஆல்பத்தை தூக்கிட்டு இங்க வந்தீங்க, என் அண்ணன் கன் ஐ எடுத்து என்கவுண்டர் லயே போட்டிடுவேன்..நான் போலீஸ்க்காரன் தம்பியாக்கும்.. மரியாதையா ஓடிடுங்க.. " என்றான் முறைத்தவாறு..

அவன் மிரட்ட அவரும் வேகமாக தன் ஆல்பத்தை வாங்கி கொண்டு சிவகாமியிடம் விடை பெற்று வேகமாக ஓடி விட்டார்..

அதை கண்டு கடுப்பான சிவகாமி

"டேய்.. ஏன்டா அவரை விரட்டின ? " என்று முறைத்தார்..

"ஹ்ம்ம்ம் அத அப்புறம் சொல்றேன்.. இப்ப எனக்கு பசிக்குது .. முதல்ல சோத்தை போடு.. அப்புறம் நீ நிக்க வச்சு கேள்வி கேட்கலாம். " என்று எழுந்தவன் டைனிங் ஹாலை நோக்கி நடந்தான்..

அவன் பசிக்குது என்று சொல்லவும் சிவகாமியும் உருகி போய் அவனுடன் டைனிங் ஹாலுக்கு வேகமாக சென்று ஒரு தட்டை எடுத்து வைத்தார்..

மது ஏற்கனவே சமைத்த உணவுகளை எல்லாம் கொண்டு வந்து அந்த மேஜையில் வைத்திருந்தாள்..

காலை உணவு எப்பொழுதும் தனித்தனியாகத்தான் உண்பர்.. ஒவ்வொருவரும் வெவ்வேறு நேரத்தில் கிளம்புவதால் அவரவர் நேரத்திற்கு தகுந்த மாதிரி சாப்பிட்டுவிட்டு கிளம்பி விடுவர்..

அகிலாவும் நிகிலனும் முன்பே காலை உணவை முடித்து கிளம்பி சென்றிருந்தனர்.. மகிழன் மட்டும் அங்கிருக்க, சிவகாமி அவனுக்கு தட்டில் சுடச்சுட இட்லியை எடுத்து வைத்து அதற்கு சாம்பார், சட்னியை எடுத்து வைத்தார்...

அதை எடுத்து வாயில் வைத்தவன் ருசித்து உண்ண

"வாவ்.. இட்லி சூப்பரா இருக்குமா .. விட்டால் ஒரு இரண்டு டஜன் சாப்பிடலாம் போல இருக்கு.. இந்த மல்லிகை பூ போன்ற இட்லியையும் சூப்பரான சாம்பார் சட்னி யையும் செய்த இந்த பொன்னான கைக்கு தங்க இல்லை வைர வளையல்தான் வாங்கி போடணும்..

என்னுடைய அடுத்த மாசத்து சம்பளத்துல உனக்கு வைர வளையல் கேரண்டி.. " என்று சிரித்தவன் அருகில் நின்றிருந்த தன் அன்னையின் கையை எடுத்து முத்தமிட்டான்...

இதுவரை முறுக்கி கொண்டிருந்த சிவகாமியும் அந்த முத்தத்தில் உருகியவர்

"போதும் டா.. நீ வச்ச ஐஸ்ல எனக்கு சளி புடிக்க போகுது.. நீ வைர வளையல் வாங்கணும்னா என் மருமக கை அளவை எடுத்துக்கோ...

ஏன் னா அவதான் இப்ப இந்த கிச்சனுக்கு மஹாராணியாயிட்ட.. எனக்கு வயசாயிடுச்சுனு என்னை ஓரமா உட்கார வச்சுட்டு இந்த வீட்டோட ஆட்சியை புடுங்கிட்டா.. " என்றார் மூக்கை உறிஞ்சியவாறு..

"யார் அது? இந்த சிவகாமி தேவியின் ஆட்சியை புடுங்கிய அந்த தேவசேனா ? அவளுக்கு இப்பவே தண்டனை தர்ரேன்.. தலையை சீவிடலாமா ?? " என்று சிரித்தான் மகிழன்.

அப்பொழுது டொங். என்று சத்தத்துடன் ராகி கலி செய்து வைத்திருந்த பாத்திரத்தை கொண்டு வந்து முன்னால் வைத்தாள் மது மகிழனை முறைத்தவாறு...

"ஆஹா.. அடுத்த சிங்கத்தை எழுப்பி விட்டுட்டனா.. ஆளாளுக்கு நம்மளை பார்த்து முறைக்கிறாங்களே.. " என்று வடிவேல் ஸ்டைலில் உள்ளுக்குள் புலம்பியவன் மது வை பார்த்து

"ஹீ ஹீ ஹீ சாரி மது குட்டி. நான் உன்னை தலையை சீவ சொல்லலை.. " என்று ஏதோ சொல்லி சமாளிக்க

"மிஸ்டர் சின்ன பாகுபலி.. உங்க சிவகாமி தேவியை இந்த கலியை சாப்டிட்டு ஒழுங்கா ரெஸ்ட் எடுங்க சொல்லுங்க.. பிபி, சுகர், கொலஸ்ட்ரால் னு எல்லா வியாதியும் சேர்ந்துகிச்சாம்..நேற்று மயங்கி விழுந்திட்டாங்க.. இனிமேல் இந்த கலிதான் சாப்பிடணுமாம்.. டாக்டர் நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்றாங்க. சொல்லி வைங்க.” என்று முறைத்தாள் மது இருவரையும் பார்த்து..

அதை கேட்ட மகிழன் அதிர்ந்து தன் அன்னையை பார்த்தவன்

"என்ன மா இதெல்லாம்? மது சொல்றது உண்மையா? மயக்கம் போட்டியா ? " என்றான் சிறு பதற்றத்துடன்...

அவன் கண்ணில் தெரிந்த சிறு வலியும், தனக்கு ஒன்று என்ற உடனே பதறி துடிப்பதையும் கண்ட சிவகாமி உள்ளுக்குள் பெருமையாக இருக்க

"அதெல்லாம் ஒன்னும் இல்லை சின்னவா.. சும்மா உன்னை பயமுறுத்தறா.. " என்று சமாளித்தார் சிவகாமி சிரித்தவாறு…!
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top