• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உயிர் தேடல் நீயடி 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,936
Reaction score
35,613
Location
Vellore
IMG-20200213-WA0032 (1).jpg

உயிர் தேடல் நீயடி

அத்தியாயம் 6

கடிகாரத்தையும் வாசலையும் மாறி மாறி பார்த்தபடி பதற்றமாக நடந்து கொண்டிருந்தார் பார்கவி.

காவ்யதர்ஷினி வழக்கமாக வரும் நேரத்தை விட நாற்பது நிமிடங்கள் கடந்திருக்க, அவரின் தாயுள்ளம் பதற ஆரம்பித்திருந்தது.

“மஞ்சு, காவ்யா போன் எடுத்தாளா?” என்று சின்ன மகளிடம் கேட்க,

“இல்ல மா, ஃபுல் ரிங் போய் கட்டாகுது” என்ற மஞ்சரிக்கு, தாயின் பதற்றம் தன்னையும் தொற்றிக்கொள்ள, மீண்டும் தன் அக்கா எண்ணிற்கு முயற்சித்தாள். இம்முறையும் எடுக்கப்படவில்லை.

இதை எதையும் கவனிக்காமல் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்த மகனை கண்டு, “டேய் சிவா, காவ்யா இன்னும் வரல டா. வயசு பொண்ண வேலைக்கு அனுப்பிட்டு வயித்துல நெருப்ப கட்டிகிட்ட கதையா இருக்கு” என்று பார்கவி புலம்ப ஆரம்பிக்க,

“முதல்ல புலம்பறத நிறுத்து மா, நம்மூர் டிராஃபிக் பத்தி தான் உனக்கு தெரியும் இல்ல, கொஞ்சம் முன்ன பின்ன ஆனாலும் காவ்யா வந்திடுவா” என்றான் உறுதியாய்.

அவனை பொறுத்தவரை அவன் அக்கா ஜான்சிராணி தான். அப்பா தவறிய அதிர்ச்சியிலும் கவலையிலும் சிதறிக்கிடந்த அவர்களை சமாளித்து தேற்றி, தைரியமூட்டியவள் அவள் தானே.

இத்தனைக்கும் காவ்யா தான் அப்பாவின் முதல் செல்லம். அவளின் மனவேதனையையும் தாங்கிக்கொண்டு, குடும்ப பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டதோடு அடித்துப் பிடித்துப் பகுதி நேர வேலையையும் தேடிக் கொண்டாள்.

சரிந்து போயிருந்த தங்கள் குடும்பத்தை தூக்கி நிறுத்த காவ்யா மேற்கொண்ட போராட்டங்களை இவனும் கண்கூடாக பார்த்துக் கொண்டு தானே இருந்தான், தன்னால் முடிந்த மட்டும் அவளுக்கு உதவிக் கொண்டு.

எனவே தான் தன் அக்காவின் மனதைரியத்தில் எப்போதுமே அவனுக்கு அதீத நம்பிக்கை உண்டு. எத்தனை இக்கட்டான சூழ்நிலையையும் சமாளித்துவிடும் திறமை அவளிடம் இருப்பதாக பெருமை கொண்டிருந்தான்.

“ஆறு மணிக்கு மேல ஆச்சே டா” பார்கவி கவலையாக சொல்லும்போதே காவ்யா வீட்டு வாசலை அடைந்திருந்தாள்.

“ஏன் காவ்யா இவ்வளோ லேட்டு? என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்” பார்கவி நிம்மதியாக விசாரிக்க,

“எல்லா பஸ்லயும் நிறைய கூட்டம் வழிஞ்சதுமா, அதான் சீக்கிரம் பஸ் கிடைக்கல” ஓய்ந்து போய் கைப்பையை கழற்றி மேசையில் வைத்தாள்.

“லேட்டானா ஒரு ஃபோன் பண்ணி சொல்லலாம் இல்லக்கா?” மஞ்சரி கேள்வியோடு செம்பில் தண்ணீரை மோந்து வந்து காவ்யாவிடம் நீட்ட,

“கூட்ட நெரிசல்ல ஃபோன் எடுத்து பேச முடியல, சாரிடீ” என்று தண்ணீரை வாங்கி பருகலானாள்.

“ரொம்ப ஓய்ஞ்சு தெரியற காவ்யா, உடம்புக்கு ஏதாவது செய்யுதா?” சிவா கேட்க, “இல்லடா கொஞ்சம் டையர்ட், அதான்” என்று உள்ளே சென்றவள் முகம் கழுவி, இலகுவான ஆடைக்கு மாறி வந்து, கூடத்தின் தரையில் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டாள் காவ்யா.

அந்த மாலை முடிந்து இரவின் தொடக்க பொழுதில், அவர்கள் வீட்டின் சிறிய கூடத்தில் ஒருபக்கம் புத்தகங்களை விரித்து போட்டுக் கொண்டு மஞ்சரி படித்துக் கொண்டிருக்க, மறுபக்கம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான் சிவா.

பார்கவி பிள்ளைகளுக்கு தேநீர் டம்ளர்களை கொடுத்துவிட்டு, தனக்கான தேநீருடன் காவ்யா அருகில் அமர்ந்து கொண்டார்.

காவ்யதர்ஷினி வழக்கம் போல, தேநீரின் புத்துணர்வு வாசத்தை ஆழ மூச்செடுத்து உள்ளிழுத்து ரசித்துவிட்டு மெதுமெதுவாய் பருகலானாள். இது அவளின் பழக்கதோஷம் என்பதை அறிந்திருந்த மற்ற மூவரும் அதனை பெரிதாகக் கண்டுகொள்வதாய் இல்லை.

தன் மடியில் அசதியாக படுத்துக் கொண்ட மகளின் கேசத்தை பார்கவி மெதுவாக வருட, காவ்யாவின் ஓய்ந்த தோற்றம் அவர் மனதில் பாரமேற்றியது.

“உங்க அப்பா மட்டும் இப்ப இருந்து இருந்தா, உன்ன இப்படி கஷ்டப்பட விட்டிருப்பாரா என்ன?” என்ற அவரின் கண்கள் கலங்கின. அன்பு கணவனின் இழப்பிலிருந்து இன்னும் அவரால் முழுமையாக மீள முடியவில்லை.

“அச்சோ அம்மா, நான் கஷ்டப்படுறேன்னு யாரு உனக்கு சொன்னது? அப்பா மட்டும் இப்ப இருந்தா, எனக்கு இவ்வளவு பெரிய கம்பெனில வேலை கிடைச்சதுக்கு குதிச்சு ஆடி ஆர்ப்பாட்டம் செஞ்சு இருப்பாரு தெரியுமா?” என்று அம்மாவை சமாதானம் செய்தவள், “என்ன, போகவும் வரவும் மூணு பஸ் மாறி ஏறி வரவேண்டியதா இருக்கு. அதுவும் பஸ்ல வழியிற கூட்டத்தில அடிச்சு பிடிச்சு ஏறி வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது” என்று தன் களைப்பிற்கான காரணத்தையும் சொன்னாள்.

“எதுக்கும் நீ சூதானமா இருந்துக்கோ காவ்யா, காலம் போற போக்குல, தினமும் நீ வூடு வந்து சேர்றத்துக்குள்ள எனக்கு பதட்டமா தான் இருக்குது” என்று பெருமூச்செறிந்தார் பார்கவி.

“எங்க கம்பெனி பத்தி தான் சொல்லி இருக்கேன் இல்லமா. அங்க வேலை செய்றவங்கள்ல நிறைய பேர் பெண்கள் தான். அங்க எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நீ பயந்துக்காம தைரியமா இருந்துக்க மா” என்று அவள் தைரியம் சொல்ல, அரைகுறையாக சமாதானம் ஆனவர், இரவு சாப்பாட்டை கவனிக்கச் சென்றார்.

காவ்யாவின் ஓய்வு நேரமும் முடிந்து போக, அவரோடு எழுந்து சமைக்க உதவி செய்யலானாள்.

புத்தக பக்கங்களை மறுபடி மறுபடி மனனம் செய்து சலித்துப் போக, “ச்சே, இதையெல்லாம் படிச்சு மண்ட காயறத்துக்கு பேசாம, ப்ளூவேல் கேம் விளையாடி சூசைட் பண்ணிக்கிறது பெட்டர்” என்று மஞ்சரி வெறுத்து போய் சொல்ல, சிவா சத்தமாக சிரித்து விட்டான்.

“ஏய், என்னடி இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்சிட்ட?” சமையலில் உதவியபடி காவ்யாவும் சிரிப்புடன் கேட்க,

“பின்ன என்னக்கா, என்னதான் பப்ளிக் எக்ஸாமா இருந்தாலும் இப்படியா எங்களை போட்டு படி படின்னு பிழிஞ்சு எடுப்பாங்க? காலையில எட்டு மணியில இருந்து சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் படிக்கனும் டெஸ்ட் எழுதனும் மறுபடி படிக்கனும் டெஸ்ட் எழுதனும். லன்ச் ப்ரேக் கூட இருபது நிமிசம் தான். அரக்கபறக்க சாப்பிட்டு மறுபடி படிக்கனும். மண்ட காயுது காவ்யா” மஞ்சரி அழாத குறையாக புலம்பினாள்.

“ஏன்டீ கழுத, ஒழுங்கா படிச்சு பாஸாக தான இவ்வளவு படிக்க வைக்கிறாங்க, இதுக்கு போய் இப்படி அலுத்துக்கிற” பார்கவி சின்ன மகளை கண்டிக்க,

“அட போமா, தமிழ், இங்கிலீஷ், மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்யூட்டர் சயின்ஸ் இன்னும் லொட்டு லொசுக்குனு இதையே திரும்ப திரும்ப படிச்சு படிச்சு தலை ரெண்டா பொளந்திடும் போல இருக்கு எங்களுக்கு” மஞ்சரி ஒரே மூச்சில் சொல்லி முடிக்க, பார்கவி வாய்மேல் கைவைத்து கொண்டார்.

இன்றைய திணிப்பு முறை கல்வியால் ஏற்படும் மன உளைச்சலை நன்றாகவே அறிந்து இருந்ததால் காவ்யா எதுவும் பேசவில்லை. அவளும் அந்த கட்டத்தை தாண்டி வந்தவள் தானே!

வெறும் மதிப்பெண்களை மட்டுமே மையமாக கொண்ட இன்றைய கல்விமுறை மாணவர்களின் மன அழுத்தத்தை கூடுமானவரை அதிகரித்து சாதனை படைத்து கொண்டிருக்கிறது என்பதே கசப்பான நிதர்சன உண்மை.

“ஏய் போதும் டீ, லெவல்த் படிக்கிற உனக்கே இப்படின்னா, இனிமே அஞ்சாங்கிளாசுல இருந்தே பப்ளிக் எக்ஸாம் வைக்க போறாங்களாமா? அந்த குழந்தைங்க நிலமைய கொஞ்சம் நினைச்சு பாரு. நீ, நாமெல்லாம் தப்பிச்சோம்னு நினச்சு சந்தோசப்படுவியா” சிவா சொல்ல,

“ஆமாண்டா, அஞ்சாவதுலயே பப்ளிக் எக்ஸாம்னு நியூஸ் கேட்டதுல இருந்து அதை நினச்சாலே பக்குனு தான் இருக்கு” மஞ்சரி தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினாள்.

“அப்படியே அடிச்சு புடிச்சு படிச்சு முடிச்சாலும் உடனே வேலை கிடைச்சிடுதா என்ன? நாயா பேயா வேலை தேடி அலைய வேண்டி கிடக்கு. ஒரு நல்ல வேலை கிடைக்கறத்துக்குள்ள பாதி வயசு போயிடுது” சிவா இன்றைய இளைய தலைமுறையின் ஆதங்கத்தைக் கொட்டினான்.

“எல்லாத்துக்கும் சட்டம் போடுற உரிமைய மட்டும் எடுத்துக்கிற அரசாங்கம், மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைய மட்டும் கண்டும் காணாம காத்துல பறக்க விட்டுடுது” மஞ்சரியும் தன் அறிவுக்கு எட்டிய வரையில் அரசியல் பேசினாள்.

இதுவரை அவர்கள் வாதத்தை கேட்டுக் கொண்டிருந்த காவ்யா, “அரசியல் பேச கூ-டா-து” என்று ஒவ்வொரு எழுத்தாய் உச்சரித்து எச்சரிக்கை குரல் கொடுக்க, “சின்ன பசங்களுக்கு எதுக்கு இந்த பெரிய பெரிய பேச்செல்லாம்?” பார்கவியும் அதட்டினார்.

“ஏன் அரசியல் பேச கூடாது? நம்ம எல்லாருக்கும் அரசியல் பத்தி தெரிஞ்சு இருக்கனும், கடவுள் பத்தி தெரிஞ்சு வச்சிருக்கோமோ இல்லையோ, ஒவ்வொருத்தரும் அரசியல் பத்தி கண்டிப்பா தெரிஞ்சு வச்சிருக்கனும்! இப்ப நம்மல மாதிரி இளைஞர்கள் தான் அரசியல் பேசனும். அனுபவசாலிங்கனு நம்பி பெரியவங்ககிட்ட அரசியலை ஒப்படைச்சதால தான் இப்ப நம்ம வாழ்வாதாரமே கேள்வி குறியாகி அல்லாடிட்டு இருக்கோம். இப்பவும் நாம அரசியல் பேசலைனா நம்மால எழுந்து நிக்கவே முடியாது, மண்ணோட மண்ணா நம்ம போட்டு பொதைச்சுடுவாங்க” சிவா ஓங்கிய குரலில் ஒரே மூச்சாக பேச, மூன்று பெண்களும் அவனை கண்கள் விரிய பார்த்து நின்றனர்.

“என்ன காவ்யா, இவன் இப்படியெல்லாம் பேச ஆரம்பிச்சுட்டான்?” பார்கவி வாய் பிளக்க,

“இப்ப நம்ம நாடு போற போக்குல ஒவ்வொருத்தர் மனசும் இப்படி தான் மா கொதிச்சிட்டு கிடக்கு” என்றவள், “இப்படி வீட்டுக்குள்ள கத்தி பேசறதால ஒன்னும் மாற போறதில்லடா, நம்ம நாட்டு மக்கள் ஒவ்வொருத்தருக்கும் அரசியல் பத்தின விழிப்புணர்வு வரனும் அப்ப தான் எல்லாம் மாறும். நேரமாச்சு பாரு வந்து சாப்பிடு” என்று காவ்யா பேச்சை மாற்றி விட்டாள்.

“மாறனும் காவ்யா, ஆனா எங்க? நம்ப மக்கள்கிட்ட தான் ஒற்றுமை கேள்விக் குறியாவே இருக்கே!” என்று அலுத்து சொல்லிவிட்டு சிவா சாப்பிட எழுந்து வர,

“மாறினா நல்லாதான் இருக்கும்” என்று மஞ்சரியும் சாப்பிட அமர்ந்தாள்.

“இந்த தேவையில்லாத பேச்சையெல்லாம் விட்டுட்டு ரெண்டு பேரும் ஒழுங்கா படிக்கிற வேலைய மட்டும் பாருங்க” என்று பார்கவி பிள்ளைகளுக்கு உணவு பரிமாறினார்.

அன்றைய இரவில் தம்பியும் தங்கையும் பேசிய பேச்சை மறுபடி மனதில் ஓட்டி பார்த்து வியந்தபடியே காவ்யதர்ஷினி உறங்கி போயிருந்தாள்.


***

ராக் இசை துள்ளலாய் ஒலித்து கொண்டிருக்க, அதற்கேற்ப விரல்களால் தாளம் தட்டியபடியே, மிதமான வேகத்தில் காரினை இயக்கி வந்தவனின் அலைப்பேசி சிணுங்க, புளூடூத் வழி பேசலானான்.

“எஸ், விபீஸ்வர் ஹியர்”

மறுமுனையில் அவனுக்கு கிடைத்த தகவலில் அவன் நெற்றி சுருங்கியது. காரின் வேகம் முழுதாக குறைந்து சாலையோரம் நின்றது.

“ஓகே, ஐ’ல் ஹேண்டில் திஸ்” என்று தொடர்பை துண்டித்தவனின் முகத்தில் சிந்தனை பரவியது.

இப்போதும் அவன் விரல்கள் ஸ்டேரிங் வீலில் தாளம் தட்டிக் கொண்டிருந்தன. ஆனால் இசைத்தட்டு ஒலிக்கவில்லை. அவன் முகத்தில் யோசனை ரேகைகள் பரவ, தலையை குலுக்கிக் கொண்டவன் பார்வையில் அவள் தெரிந்தாள்.

அந்த சாலையில் சற்று முன்னே, இவன் பார்வை படும் தூரத்தில் நின்று, அவ்வழியே செல்லும் ஆட்டோவை நிறுத்த கையாட்டி கொண்டிருந்தாள் காவ்யதர்ஷினி.

'ஆபிஸ் டைம்ல இவ இங்க என்ன செய்றா?' அவனுள் எழுந்த முதல் கேள்விக்கு, அவள் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்திருப்பது சற்று தாமதமாக நினைவுக்கு வந்தது.

கொளுத்தும் வெயிலில் நெற்றியிலும் முகத்திலும் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்தபடி, ஒரு ஆட்டோவை நிறுத்தி அவள் இடத்தை சொல்ல, அவன் முடியாது என்று கையசைத்து நகர்ந்து விட்டான்.

கடந்து போன ஆட்டோவை தன்னால் முடிந்த மட்டும் முறைத்துவிட்டு வேறு ஆட்டோவிற்காக காத்து நின்றாள் அவள்.

காவ்யாவை பார்த்திருந்த இவன் பார்வையில் சுவாரஸ்யம் கூடியது.

அடுத்து வந்த ஆட்டோவை நிறுத்தி, அவள் பேச அந்த ஓட்டுநர் சரி என்றிருக்க வேண்டும். அவளின் முகம் பிரகாசமானது. அவரிடம் காத்திருக்கும்படி கைகாட்டி விட்டு அருகே இருந்த கட்டிடத்தில் நுழைந்தவள் இரண்டு நிமிடங்களில் பார்கவியோடு வெளியே வந்தாள்.

அவரை பார்த்தவுடன் இவனால் கணிக்க முடிந்தது காவ்யாவின் அம்மா என்று. அவரின் கண்களில் அணிந்திருந்த பெரிய அளவிலான கருப்பு கண்ணாடியை கவனித்தவனின் பார்வை அவர்கள் வந்த கட்டிடத்தின் பெயர்ப்பலகை நோக்கி திரும்ப, அது பிரபல கண் மருத்துவமனை.

'ஓ அம்மாவோட ஐ ஆப்ரேஷனுக்காக லீவ் எடுத்திருக்கா போல' என்று அவனே ஊகித்து உறுதிபடுத்திக் கொண்டான்.

அதற்குள் ஆட்டோவில் பார்கவியை மெதுவாக அமர வைத்து, காவ்யாவும் அமர்ந்துகொள்ள, சாலையில் ஆட்டோ வேகம் பிடித்து அவன் பார்வைக்கு மறைந்தது.

காவ்யாவை இங்கு பார்த்ததும், இவனுக்குள் உழன்ற யோசனைக்கு இப்போது சரியான திட்டம் தோன்றிட, அவன் முகத்தில் இயல்பான உற்சாகம் மீண்டது. அவன் காரும் சாலையில் வழுக்கிச் சென்றது.


***
(நன்றி ஃபிரண்ட்ஸ்❤❤❤ அடுத்த பதிவு வெள்ளி அன்று...)
 




saideepalakshmi

மண்டலாதிபதி
Joined
Nov 11, 2023
Messages
116
Reaction score
183
Location
Salem
அப்படி என்ன திட்டம் போட்டு இருப்பான்?
அவன் எப்போதும் எதற்காகவும் அலட்டிக் கொள்வது இல்லை என ஒவ்வொரு செயலிலும் காட்டுகிறான்.
ஆட்டோ வராததற்கு கூட காவ்யா முறைப்பு அழகு.
நல்ல அழகான பதிவு.
 




CRVS

மண்டலாதிபதி
Joined
Jun 19, 2021
Messages
172
Reaction score
732
Location
Ullagaram
இவன் காவ்யாவை சாதாரணமா பார்க்கிற மாதிரி தானே இருக்குது.
அப்புறம் எப்படி ரெண்டு பேருக்குள்ளேயும் காதல் வந்தததுன்னு தெரியலையே..??
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,936
Reaction score
35,613
Location
Vellore
இவன் காவ்யாவை சாதாரணமா பார்க்கிற மாதிரி தானே இருக்குது.
அப்புறம் எப்படி ரெண்டு பேருக்குள்ளேயும் காதல் வந்தததுன்னு தெரியலையே..??
:unsure: :unsure: :unsure:
CRVS (or) CRVS 2797
இனி அவன் பார்வையில் வித்தியாசம் வரும் 😉 நன்றி டியர் 😍
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,936
Reaction score
35,613
Location
Vellore
அப்படி என்ன திட்டம் போட்டு இருப்பான்?
அவன் எப்போதும் எதற்காகவும் அலட்டிக் கொள்வது இல்லை என ஒவ்வொரு செயலிலும் காட்டுகிறான்.
ஆட்டோ வராததற்கு கூட காவ்யா முறைப்பு அழகு.
நல்ல அழகான பதிவு.
நன்றி டியர் 😍
அவன் எதற்கும் அலட்டிக் கொள்ளாதவன், அவனை அல்லல் பட வைப்பவள் அவளொருத்தி தான் 😂
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top