காதல் அடைமழை காலம் - 14

#1
காதல் அடைமழை காலம் – 14

அத்தியாயம் – 15

கமர் மருமகளை அடித்ததும் பதறி போயினர் அனைவரும்.” எங்க உம்மாவ அடிக்க நீங்க யாரு?” என வரிந்து கட்டிக் கொண்டு வந்தனர் மகள்கள் இருவரும்.

“ இங்க பாருங்க.... ஏதோ குடும்ப விஷயம் பேசணும் னு சொன்னதுனால தான் நான் ஒதுங்கி நிற்கிறேன். நீங்க இப்படி வரம்பு மீறி நடந்துகிட்டா அப்புறம் நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன்” என்றான் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் பந்தமான சுல்தான்.

“ சாரி மச்சான்... சாரி” என ரமீஸ் அவனை சமாதானபடுத்த,

“ அவங்க எனக்கு தாய் மாதிரி மருமகனே.... என்னை அடிக்க அவங்களுக்கு முழு உரிமையும் இருக்கு. தயவுசெய்து எல்லாரும் அமைதியா இருங்க” என எல்லாரையும் அமைதிபடுத்தினார் சபூரா.

“ என்ன ஆச்சா இது.... எவ்வளவு வருஷம் கழிச்சி சாச்சிய பார்க்குறோம். இப்படி நடந்துக்குறீங்களே” என கண்டித்தான் ரமீஸ்

“ பின்னே என்னலே..... வாழ வேண்டிய மவன வாரி கொடுத்துட்டு உட்கார்ந்துருக்கேன் ரமீஸு... இவ முகத்தையும் என் பேத்திமார் முகத்தையும் பார்த்து தானே என் காலத்தை ஓட்டணும். என் பேத்திங்க பேசுறதையும் சிரிக்கிறதையும் பார்த்து தானே என் கவலைய மறந்துட்டு இருந்தேன். எவளோ என்னவோ சொல்லிட்டா னு இவ வீட்டை விட்டு போயிடலாமா? இவ கோபத்துனால என் பேத்திங்க எத்தனை சந்தோஷத்தை இழந்திருப்பாங்க.....? எத்தனை கஷ்டங்கள சந்திச்சியிருப்பாங்க.....? கடைசி வரைக்கும் அமீரும் ஜமீலாவும் இவங்கள பார்க்காமலே போயிட்டாங்களே.... இதை எல்லாம் இப்போ சரி பண்ண முடியுமா சொல்லு?” என மூச்சு வாங்க பேசியவர் ரமீஸின் தோளிலேயே சாய்ந்து அழுதார்.

கமர் ஒரு புறம் அழுக, சபூரா ஒரு புறம் அழுக யாஸ்மீனும் மைசராவும் யாருக்காக பேச என புரியாமல் முழித்தனர். கமரின் வார்த்தைகள் நியாயமாகவே தெரிந்தது. அவர் தன் மகளயே ‘எவளோ’ என கூறுகிறார் என்றால் சபூராவை இழந்து அவர் எவ்வளவு வருந்தியிருக்கிறார் என புரிந்தது. அவர் மனம் முழுவதும் தாங்கள் தான் நிறைந்திருக்கிறோம் என உணர்ந்த நொடி உயிர் வரை தித்தித்தது.

“ ஆச்சா.... முடிஞ்சி போன விஷயத்தை திரும்ப திரும்ப பேசுறதுனால எதுவும் மாற போறதில்லை. இனிமே நடக்க போறத பாருங்க.... இதோ உங்க மருமகளும் ரெண்டு பேத்திங்களும் உங்க கிட்டயே வந்துட்டாங்க. நீங்க ஆசை தீர பாருங்க.... இத்தனை வருஷ கவலைய இதோ இந்த குட்டி பயலோட சிரிப்புல மறந்திடுங்க” என்றவன் சுல்தானின் தோளில் படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த குழந்தையை தூக்கி சூழ்நிலையை இலகுவாக்கினான். ஒருவாறு தன்னை சரிபடுத்தி கொண்ட கமர் கொள்ளு பேரனை ரமீஸிடமிருந்து வாங்கி கொஞ்சினார்.

“ என் சிங்க குட்டிக்கு என்ன பேர் வைச்சிருக்கீங்க?” குழந்தை தூக்க கலக்கத்தில் இருந்ததால் சுல்தானிடம் கேட்டார்.

“ முபாரக் சல்மான்” என்றதும் கமருக்கு முகமும் அகமும் மலர்ந்து போனது.

“ இந்தா.... வந்துட்டானே என் மவன்... இனிமே எனக்கு என்ன கவலை” என பூரித்து போனார்.

“ மாமி.... என்னை மன்னிச்சிடுங்க” என சபூரா ஏதோ கூற வர,” விடு சபூரா.... ரமீஸ் சொன்ன மாதிரி பழச பேசி என்னாக போகுது?எல்லாத்தையும் மூட்டை கட்டி தூக்கி வீசிடுவோம்” என்றவர் தன் பேத்திகளை வாஞ்சையாய் அணைத்து கொண்டார்.

அனைவரும் அளவலாவியபடியிருக்க,” ஆச்சா.... நாளைக்கு காலையில முதல் வேலையா வீட்டுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லணும். இப்போ ரொம்ப நேரமாகிடுச்சு” என ரமீஸ் கூறவும்,

“ வேண்டாம் ரமீஸ். இந்த விஷயத்தை யாருகிட்டயும் சொல்லிடாத” என பதறினார் சபூரா.

“ ஏன்? ஏன் சொல்ல கூடாது?” என அனைவரும் ஒருசேர கேட்டனர்.

“ வேணாம் மாமி. எங்கள இங்க பார்த்தது, பேசுனது எதையும் யாரு கிட்டயும் சொல்லிடாதீங்க.... நா...நான் இப்படியே இருந்துட்டு போறேன்”

“ இப்படி ஒண்டிகட்டையா வாழணும் னு உங்களுக்கு என்ன தலைவிதியா சாச்சி?” ரமீஸுக்கு கூட கோபம் வந்துவிட்டது.

“ ரசியா உன்னை ஏதாவது பேசிடுவா னு பயப்படறீயா?” என்றதும் தலைகுனிந்து விசும்பினார் சபூரா.

“அதெல்லாம் பேச மாட்டாங்க. நீங்க வாங்க சாச்சி” என ரமீஸ் கெஞ்சினான்.

“ பேச மாட்டாளா ரமீஸ்? அவளுக்கு என் மேல கோபம் போயிடுச்சா?” என்றதும் இருவருமே மௌனமாகினர். இன்னமும் ரசியா சபூராவை வெறுத்து கொண்டு தான் இருக்கிறார். ஓடி போன மருமகளுகாக என்னிடம் கோபப்படுகிறாயே என கமரிடம் சண்டை போடுவார். சபூரா பற்றிய பேச்சு வந்துவிட்டால் கண் மண் தெரியாமல் கோபம் வந்துவிடும் அவருக்கு.” அவ மட்டும் இந்த வீட்டு வாசபடிய மிதிக்கட்டும் அவ காலை வெட்டி கையில கொடுத்துவேன்” என கத்த ஆரம்பித்துவிடுவார். ஆகையால் அவர் இருக்கும் போது யாருமே சபூராவை பற்றி பேச மாட்டார்கள்.

“ எனக்கு தெரியும் மாமி.... அவளுக்கு என் மேல உண்டான கோபம் போகவே போகாது. அவளோட வார்த்தைகள கேட்குற சக்தி எனக்கு இல்லை” என்றார் வலியும் வேதனையும் நிறைந்த குரலில்.

“ ம்மா... நீ ஏன்மா பயப்படுற.... காகா நீங்க போன் போட்டு எல்லாருக்கும் சொல்லுங்க. அந்த ரசியா என்ன பண்ணுறாங்க னு நானும் பார்க்குறேன்” என எகிறினாள் மைசரா.

“ ஏய்... ரசியா உனக்கு மாமி... அவள பேரு சொல்லி பேசுற” என கண்டித்தார் சபூரா.

அன்னையை ஆற்றாமையோடு பார்த்தவள்,” ஏம்மா உன்னை அங்க வாழ விடாம துரத்தி விட்டவங்களுக்காக நீ ஏன்மா பரிந்து பேசுற” என தாயிடமே மல்லுக்கு நின்றாள்.

“ அதானே... இவ்ளோ நாள் எப்படியோ இப்போ நாங்க உன் கூட இருக்கோமா. பயப்படாத” என்றாள் யாஸ்மீன்.

“ இங்க பாருங்கலா. எந்த நேரத்தில என்ன பண்ணனும் னு எனக்கு தெரியும். நீங்க கொஞ்சம் அமைதியா இருங்க” என மகள்களை அதட்டினார்.

அனைவரும் எவ்வளவு சொல்லியும் சபூரா திருச்சி செல்ல சம்மதிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் தன்னை பார்த்ததையே சொல்ல கூடாது என்றும் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

“ சில விஷயங்கள என்னால மறக்கவும் முடியாது. ஜீரணிக்கவும் முடியாது. நான் நிம்மதியா இருக்கணும் னா என்னை இப்படியே விட்டுடுங்க. இல்லைனா நான் இங்கிருந்து எங்கையாவது போயிடுவேன்” என கூற அதற்கு மேல் யாராலும் அவரை வற்புறுத்த முடியவில்லை.

மாமியாரை நிமிர்ந்து பார்க்கும் துணிவில்லாது விறு விறுவென சென்று விட்டார் சபூரா. மற்றவர்களும் இருவரிடமும் சொல்லி கொண்டு கிளம்பினர். வீட்டிற்கு வந்து மகள்கள் இருவரும் அன்னையை துளைக்க, ஒரு வார்த்தை கூட பேசவில்லை சபூரா. கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

என்ன பிரச்சனை? எதற்காக வீட்டை விட்டு வந்தார்? ரசியா என்ன பேசினார்? இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஏன் திரும்ப மறுக்கிறார்? மகள்களின் கேள்விகளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. குற்றவாளி போல் கூனி குறுகி நிற்கும் அன்னையை அதற்கு மேலும் கேட்டு கஷ்டபடுத்த பிடிக்காமல் இருவரும் தூங்க சென்றுவிட்டனர். தூங்க சென்றார்களே தவிர தூங்க முடியவில்லை. விடிய விடிய விழித்திருந்து காலை வேளை தொழுகையையும் முடித்துவிட்டு தான் சற்றே கண்ணயர்ந்தனர்.

இரவு முழுவதும் தூங்காததால் காலை பத்து மணியாகியும் தூங்கிக் கொண்டிருந்தாள் மைசரா. அவளின் தூக்கத்தை கலைத்தது அலைபேசி சிணுங்கல். மெல்ல இமை பிரித்து அலைபேசியை பார்த்தாள். புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. அவளுக்கு புதிய எண்ணிலிருந்து அழைப்பு வர வாய்ப்பில்லை. அன்னை, அக்கா, மற்றும் தோழி இஷ்ரத் தவிர யாரும் அவளை அழைத்தது கிடையாது. கமர் அல்லது ரமீஸாக தான் இருக்கும் என்றது உள்மனம். மீண்டும் திருச்சிக்கு அழைத்தால் என்ன சொல்வது என யோசித்து கொண்டே அழைப்பை இணைத்து காதில் வைத்தாள்.

- மழை வரும்

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 

Sponsored

Advertisements

New threads

Top