தேன் மழையில் சிறுதுளி 3---- சௌந்தர்யா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

Author
Author
Joined
Sep 17, 2018
Messages
10,634
Reaction score
27,750
Points
113
Location
Home Town
முத்தழகனின் ஒரு கை அருவியின் வளைக்கையோடு உறவாட.. மறு கை அவள் இளையிடையோடு விளையாடி கொண்டிருந்தது. அவன் வதனத்தில் இருந்த திகைப்பு நீங்கி மகிழ்ச்சியும் ஆச்சரியமும் கலவையாக தோன்றி இதழ் கடையோரம் சிரிப்பில் நெளிந்தது.

அவன் வதனத்தில் காதல்ரசம் பொங்கி வழிந்தது.‌.. எதுவோ ஒன்றை அறிந்துகொண்ட களிப்பில் அவன் உள்ளம் துள்ளி குதித்து துந்துபி முழங்கியது... அந்த பரவசத்தில் தேனருவியின் இதழ் தேனை உண்ணத் தொடங்கினான் அவனருவி அதை உணரும் முன்னரே...

அங்கு ஆதித்தனோ தன்னை தொடர்ந்த உருவத்திற்குச் சொந்தகாரரை தேடிச்சென்ற போது.. எங்கிருந்தோ வந்த அம்பொன்று அவன் மேலாடையை துளைத்து அருகிலிருந்த மரத்தில் குத்தி நின்றது. அதை ஆராயும்போதே மற்றொரு அம்பு அவன் தோளை உரசிச்சென்று பின்னிருந்த மரத்தில் துளைத்து நின்றது.

மீண்டும் அவன் அந்த அடையாள குறியிட்ட இடத்தை நோக்கி ஓடினான். அந்த உருவமும் அவனை தொடர்ந்தது. சரியாக அந்த மரக்கொம்புகளை அடையாளமாக ஊன்றிய இடத்திற்கு அந்த உருவம் வரவும் ஆதித்தன் அதன்முன் தோன்றினான்.

திரும்பி நின்றவாறே இந்த முறை எய்த அம்பை தன் கைகளால் பிடித்தான் ஆதித்தன். அதிர்ச்சியில் தன் மேல் மூடியிருந்த கருப்புச்சீலையை விலக்கி வெளியே வந்தாள் அந்த சாகசக்காரி.

ஆதித்தன் தான் பற்றிய அம்பை கைகளாலேயே எய்தான் அவளை நோக்கி‌. உள்ளுக்குள் பயந்தாலும் வெளியே காட்டாது நின்றாள் அந்த அழுத்தக்காரி.

அம்பு அவளை நெருங்கவும் தன் விழிகளை மூடினாள் அந்த மான்விழியாள். அவளோ அம்பை எதிர்நோக்கி காத்திருக்க அவளை தழுவியதோ மலர்மழை.. ஆம் ஆதித்தன் கைகளால் பறித்த பூக்கள் நிறைந்த காதல் மழை.

மனதில் ஒரு கனம் சலனம் எழுந்தாலும் மறுநிமிடமே தன் வாளை உருவி சண்டையிட தயார் நிலையில் அவனை நோக்கினாள். ஆனால் ஆதித்தனோ அவளை காதலுடன் நெருங்கினான்.

அவன் காதலில் உருகி கரைந்து ஓடிய மனக்குதிரையை கடிவாளமிட்டடக்கி தான் நினைந்த இலக்கை நோக்கிச் செலுத்தினாள். நெருங்கியவன் நெஞ்சிலே தன் வாளையிருத்தி அவனை அங்கேயே நிறுத்தினாள்.

"அழகி.... நான்.." என்ற ஆதித்தனை தொடரவிடாமல் தடுத்தது கன்னியவளின் காந்தக் குரல்.

"வாள் வீச பயமோ?? சோழ இளவரசருக்கு..." எதைச் சொன்னால் அவனைச் சீண்டலாம் என்றறிந்து கேட்டாள்.

"ஹா... ஹா... ஹா... அப்படியும் இருக்கலாம்.. அழகி.. அதைவிட யார் வெற்றிபெறினும் என் அடிமை சாசனம் உன்னிடம்.." என்று சிரித்தான் அந்த கள்வன்.

"வாள் வீசுங்கள் என் அடிமையே..." என்று அவனை எள்ளினாள்.

"வாள்போர் செய்யும் காலமா??? இந்த பௌர்ணமி இரவு.... இதழ் போர் செய்யும் காலம்.. " காதல் பொங்க சொன்னான் ஆதித்தன்.

சிறிது நேர யோசனைக்குபின் ஓர் முடிவுகண்டவளாக வாளைக்கொண்டு அவன் அறியா வண்ணம் அவன் கழுத்தில் கிடந்த சூரிய முத்திரை பதித்த பதக்கத்தை அறுக்க முயன்றாள்.

அவ்வளவுதான் தெரியும் அவளுக்கு.‌... நொடிப்பொழுதில் அவள் கைகளோ அவன் கைகளுக்குள்... பாவையவளோ அவன் தோள்களென்னும் அரணிற்குள். அங்கு வீழ்ந்ததென்னவோ இருவரின் வாள்கள் தான்.

"என் அழகிக்கு என்ன பிணக்கோ என்னிடத்தில்... " என்று அவள் கன்னத்தை தன் கன்னம் கொண்டு உரசினான்...

"இந்த ஏய்ப்பெல்லாம் என்னிடம் செல்லாது.. இளவரசே..." என்றாள் முறைப்புடன். எனினும் உள்ளுக்குள் அவன் செயலில் மயங்கத்தான் செய்தாள்.

"என்ன கோபமென உரைத்தால் ஆவென செய்து என் அழகியை குளிர்விப்பேன்" என்று கூறி கண் சிமிட்டினான்.

"தாங்கள் பெரிய வீரராம்.... தம்மை வெல்வோர் இப்பாரிலேயே இல்லையாம்... அப்பொழுது நான்???" என்று கொஞ்சினாள்.

"யார் சொன்னது என்னை வெல்வோரில்லையென்று???? இருவர் உள்ளனர்..." என்றுகூறி தன் மீசையை முறுக்கினான்.

இவ்வளவு நேரம் பொறாமை கொண்டது போல் நடித்த வீரமங்கை... அவன் கூற்றில் திகைத்து அவனை கேள்வியாய் நோக்கி, "யாராரோ???" என்றாள்.

"ஒன்று‌.. என் மனையாளும் மந்திரிமகளும் தளபதியின் தங்கையும் என் பெற்றோரின் மற்றொரு மகளும் என் தங்கையின் தோழியுமான என் அழகி... அழகெல்லாம் மையம் கொண்ட பேரழகி... என் நிலவழகி... போரென்றில்லை... யாதொரு சங்கதியிலும் நான் உன் அடிமையடி... உன்னை எதிர்க்கும் துணிவு எனக்கில்லை.." புகழில் ஆரம்பித்து... அஞ்சுவது போல் முடித்தான்..

முறைக்க முயன்று தோற்று நகைத்தாள் ஆதித்தனின் நங்கை... பின்னர் ஞாபகம் வந்தவளாய்... "மற்றொருவர்???" என்றாள்.

"அவன்தான் நான் காண்பதற்கு ஏங்கும் மன்னவன்... என் பெருமைக்கும் பொறுமைக்கும் உரியவன்... என் வீரத்திற்கும் தீரத்திற்கும் வாரிசு... நான் மறிக்கும் போதென்னை தன்மடி தாங்கும் என் மகன்..‌. அவனை என் கைகளிலேந்த காலம் இன்னும் கூடிவரவில்லை..." என்று கண்சிமிட்டினான்.

கண்களில் துளிர்த்த நீர்த்துளிகளை சுண்டியது அக்காரிகையின் விரல்கள்... "இன்னும் ஒன்பது மாதங்களில் அவன் தங்கள் கைகளில் தவழ்வான்... அழகரே.."என்று கூறினாள் நாணத்தில் சிவந்த முகத்தோடு...

முதலில் புரியாமல் விழித்த ஆதித்தன் புரிந்ததும் அவன் அழகியின் அழகு வதனத்தில் நூல் வெளியிடையின்றி முத்தமிட்டு முகிழ்ந்து மகிழ்ந்தான். அவள் வதனமோ... அரைத்த மஞ்சளில் சுண்ணாம்பு கலந்தது போல் செந்நிறம் பூசியது...

சற்றென்று அவன் வதனத்தில் ஓர் சொல்லொனா... சோகம்... காரணமறிந்தவளோ அவனை தேற்றினாள்..
"நம் திருமணத்தை.‌.. பாண்டியன் மீது படையெடுத்து சென்று வெற்றிவாகை சூடிய பின் அனைவருக்கும் இனிப்பாக பரிசளியுங்கள் அழகரே... ஏனிந்த தேவையற்ற கலக்கம்..."


ஆனாலும் அவன் தெளியாததை கண்டு.. அவனை மாற்றும் பொருட்டு.. " தமது முத்த அமுதம் உமது அழகிக்கு மட்டும்தானா... எனது குட்டி அழகன் கோபம்கொள்வானே..." என்று அவனை சீண்டினாள் அவனது அழகுப்பாவை.


அவன் முகமோ மீண்டும் ஆனந்தத்தில் திளைத்தது.. "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளர்வான்.." என்று சிரித்தான்...
குழம்பிய அவனழகியோ...
"எதெற்கு இந்த பொருந்தா மொழி???" என்றாள்.


"இது பழமொழியடி என் மங்குனி அழகி.." என்றான் அவளை கேலியுடன். பின் கோபத்தில் சிவந்த அவள் மூக்கின் நுனியை பிடித்து ஆட்டியபடியே " நீ யார் எனக்கு??" என்று கேட்டான்..
அவளோ முறைத்தாள்..


பின்னர் ஆதித்தனே தொடர்ந்தான்... "மந்திரியின் பிள்ளை... அதாவது ஊரார் பிள்ளை... உனக்கு முத்தமளித்தாலோ... உணவூட்டினாலோ... உனக்குள் இருக்கும் என்பிள்ளைக்கு தன்னாலே அனைத்தும் சென்று சேரும்.." என்றவாறே அவள் இதழணைத்தான்.

சிறிதுநேரம் அவளுடன் பொழுதை இனிமையாக கழித்துவிட்டு ஆதித்தன் அவளை அழைத்துக்கொண்டு முத்தழகனைத் தேடிச்சென்றான்.
தொடரும்...
 
Last edited:

Advertisements

Latest Episodes

Advertisements