- Joined
- Aug 2, 2020
- Messages
- 3,139
- Reaction score
- 9,909

தமயந்தி அழைத்தவுடனேயே, எந்த விதத் தயக்கமும் இல்லாமல் தனது தங்கை அவளுடன் கைக் கோர்த்துக் கொண்டு செல்வதைப் பார்த்த கார்த்திக்கிற்கு ஆச்சரியமாக இருந்தது.. எப்பொழுதாவது பிசினஸ் விஷயமாக தந்தையுடன் பேசப் போனாலும், தன்னைப் பார்த்து பயந்து ஒதுங்கி நிற்கும் அவளா இது என்ற ஆச்சரியம் மனதினில் எழவே செய்தது..
தனது அன்னையிடம் அவளை அழைத்துச் சென்ற தமயந்தி, “அம்மா என்னோட புது ஃப்ரெண்ட் கீர்த்திகா..” சிறுமியை அறிமுகப்படுத்த, மீனா அவளைக் கேள்வியாகப் பார்த்தார்.
“தெரிஞ்சவங்களோட தங்கைம்மா.. அவங்க அப்பாவை இங்க அட்மிட் பண்ணிருக்காங்க.. இவ காலையில இருந்து எதுவுமே சாப்பிடல போல.. தண்ணியைத் தண்ணியைக் குடிச்சிட்டு இருந்தா..” அவள் சொல்லி முடிப்பதற்கு முன்பே, சிறுமியின் கன்னத்தை வருடிய கல்யாணி பாட்டி,
“குழந்தை நல்ல பசியில இருக்கறா போல இருக்கு.. கூட்டிட்டு போய் ஏதாவது சாப்பிட்டுட்டு வாங்க..” எனவும், தனது பாட்டியை கனிவுடன் பார்த்தவள்,
“உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க.. நான் வாங்கிட்டு வரேன்..” எனவும்,
“இப்போ எதுவும் வேண்டாம் தங்கம்.. பெரிய தங்கத்தைப் பார்த்துட்டு அப்பறம் சாப்பிடறோம்.. நீ வேணா போயிட்டு வா மீனா..” என்று தனது மருமகளை அவர் சொல்லவும்,
“இல்லை அத்தை.. நானும் அவளைப் பார்த்துட்டு சாப்பிடறேன்..” அவரும் சொல்லிவிடவும், இருவரையும் பார்த்தவள்,
“எனக்கு பசிக்குதுப்பா.. நாங்க போய் சாப்பிட்டு வரோம்..” என்று அவள் கிளம்பும் நேரம், கையில் கவருடன் விஜய் வந்து சேர்ந்தான்.
“இந்தாங்க பாட்டி.. அத்தை.. இட்லி வாங்கிட்டு வந்தேன்.. இதுல ஸ்பூன் இருக்கு.. அப்படியே மூணு பேரும் சாப்பிட்டு முடிச்சிருங்க..” என்றவனின் பார்வை தமயந்தியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த சிறுமியின் மீது படிந்து, தமயந்தியின் மீது கேள்வியாக விழுந்தது..
“இது.. கார்த்திக்கோட சிஸ்டர் மாமா.. நானும் அவளும் சாப்பிட தான் போயிட்டு இருந்தோம்..” அவள் சொல்லவும், விஜயின் பார்வை சிறிது தூரத்தில் அமர்ந்திருந்த கார்த்திக்கின் மீது பாய்ந்தது..
“இன்னும் அவங்க அப்பா கண்ணு முழிக்கல.. ஒருவேளை அவங்க நகர்ந்த நேரத்துல கூப்பிட்டா என்ன செய்யறதுன்னு அவரு வரல..” எனவும், அவளைப் பற்றித் தெரிந்திருந்த விஜய்,
“சரி.. ரெண்டு பேரும் நல்லா டைம் என்ஜாய் பண்ணிக்கிட்டே சாப்பிட்டு வாங்க.. நாங்க ரூம்ல இருக்கோம்..” என்றவன், மீனா, கல்யாணி இருவரையும் அழைத்துக் கொண்டு தாமரைக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குச் செல்ல, தமயந்தி கீர்த்திகாவுடன் மருத்துவமனையின் எதிரில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றாள்.