ஹாய் ஃபிரண்ட்ஸ்,

Suvitha

Brigadier
SM Team
#1
ஹாய் ஃபிரண்ட்ஸ்,
‘ஏய் நீ ரொம்ப அழகாயிருக்கே’ இது அழகியின் குறுநாவல் என்பது எல்லாருக்கும் தெரியும். அதில் கடைசி அத்யாயத்தில் ஆத்மிகா ஸ்வரா மீது பாசம் இல்லாமலா அவங்க கூப்பிட உடன் போயிருக்கா? என்று ராதா சொல்லும் போது, நீ வேற, ஸ்வரா கூட க்யூட்டா பேபி ஒன்னு வரும் னு சொன்னாளா இல்லையா? முதல்ல அதுக்கு வழியப்பாரு இன்னும் உன் கூட ஒட்டிக்குவா என்னும் அபராஜிதனின் டயலாக்கை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வாழ்வில் அடுத்து என்ன நடந்திருக்கும் என்று என் கற்பனை யில் உதித்ததை ஒரு பதிவாகத் தந்திருக்கிறேன் தோழமைகளே. படித்து விட்டு எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்..

அன்று வீடே ரெண்டு பட்டுக்கொண்டிருந்தது. காரணம் அபராஜிதன்- ராதா தம்பதியரின் மூன்று வயது நிரம்பிய தவப்புதல்வன் ‘அர்ஜுன்’ முதல்நாள் பள்ளிச்செல்ல அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான். ஆம்...மூன்று வயது தவப்புதல்வன் தான். “நீயும் அதுக்கு முதல்ல ஒரு வழியைப்பாரு அப்புறம் ஆத்மி இன்னும் உங்கூட ஒட்டிக்குவா” என்று அபராஜிதன் ராதாவிடம் சொன்ன நேரம் தேவதைகள் ததாஸ்து என்றனவோ! அடுத்த பத்தாவதே மாதம் அர்ஜுன் அவர்களின் கைகளில் தவழ்ந்தான்.

தாய்மையின் பூரிப்பில் மேடிட்டிருக்கும் ராதாவின் வயிற்றைக் தன் பிஞ்சுக்கைகளால் தடவி ‘ஆன்டி ‘ வயிறு ஏன் பெரிதாக இருக்கு என்று கேட்கும் ஆத்மி குட்டிக்கு, “உங் கூட விளையாட இன்னும் கொஞ்சம் நாளில் தம்பியோ, தங்கச்சியோ பிறக்க போறாங்கடா? அவங்களுக்கு நீங்க தான் அக்கா. பாப்பாவை நல்லா நீங்க நல்லா கவனிச்சுக்கனும் என்ன...” என்று அழகாக சொல்லிக் கொடுப்பாள் ராதா. ‘அக்கா’ என்ற பட்டம் அந்த சின்னச்சிட்டை சிறகில்லாமலேயே வானத்தில் பறக்கச்செய்தது.
பள்ளிச்செல்லும் நேரம், படிக்கும் நேரம் தவிர ஆத்மியின் பொழுதுகள் அனைத்தையும் அந்த வீட்டின் புதுவரவு அர்ஜூனே திருடிக்கொண்டான். கைப்பிள்ளையாய் அர்ஜூன் இருக்கையிலேயே அவனை தன் கைகளில் வாங்கத்துடித்தவள், அவன் நடைபயின்ற பின் தம்பியை விட்டு அகலுவாளா? எந்நேரமும் அர்ஜூனின் பின்னோடே அலைந்தாள் ஆத்மிகா.

என்ன புரியுமோ? எப்படி புரியுமோ? அந்த இளவலுக்கும் தன் அக்கா மீது அலுக்காத பாசம் உண்டு. இருவரும் சேர்ந்தால் அந்த வீடே கலகலப்பில் குலுங்கிப்போகும்.
அர்ஜூனை எந்த பள்ளியில் சேர்க்கலாம் என்ற பேச்சு வீட்டில் எழுந்த போது” அப்பா! தம்பியை, என்னோட ஸ்கூல் ல சேர்த்து விடுங்கப்பா. எங்கூடவே கூட்டிட்டு போய்ட்டு கூட்டிட்டு வந்துடுவேன் என்று ஆசையோடு சொன்ன ஆத்மியின் ஆசைக்கிணங்க அவளது பள்ளியிலேயே விஜய தசமி அன்று அட்மிஷன் போடப்பட்டது அர்ஜூனுக்கு.
இப்போதெல்லாம் அபியின் அம்மா சுஜாதாவிற்கு கொஞ்சம் உடல்நலக்குறைவு அடிக்கடி ஏற்படுவதால் தன் வேலையை விட்டிருந்தாள் ராதா. வீட்டிலிருந்தபடியே தன் கணவனுக்கு எஸ்டேட் கணக்கு வழக்குகளை கவனித்து கொள்வதில் உதவியாக இருந்தாள். ஆதலால் பிள்ளைகள் இருவர் மட்டுமே பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
அழுது ஆர்ப்பாட்டம் செய்த பேரனைக் கண்டு மனம் வருந்திய சுஜாதாம்மா “ ஏம்மா ராதா! இந்த மூனு வயதிலேயே பிள்ளையை பள்ளிக்கு அனுப்பனுமா மா. நாமெல்லாம் ஐந்து வயசு முடிஞ்சப்புறம் தானே போனோம்” என்றார் ஆத்மியையும் மூன்று வயதில் தானே அனுப்பினோம் என்பதை வசதியாய் மறந்து.

ஒருவழியாக அர்ஜூனை அதை இதைச் சொல்லி சமாதானம் செய்து தம்பதி சமேதராய் ‘ப்ளாக் ஆடியில் ‘ குழந்தைகளை பள்ளியில் கொண்டு விட்டு ஆசிரியரையும் பார்த்து பேசிவிட்டே வந்தனர் இருவரும். பள்ளி வளாகத்தைத் தாண்டவும் இப்போது கண்கலங்குவது ராதா முறையாகிற்று. காரை ஓரமாக நிறுத்தியவன் “ ஏய் ராதா! நான் சின்னவரையும் ஸ்கூலுக்கு அனுப்பியாச்சு, இனி அடுத்து டபுள்ளா ரிலீஸ் பண்ணலாமா? என்று கால்குலேட் பண்ணிட்டு வந்தால் நீ இப்படி கதறி, கதறி அழறியே கண்ணம்மா” என்று அவளை கலாய்க்கும் விதமாய் கூற... “என்னது? டபுள்ஸ்ஸா? விட்டா உங்க பிள்ளைங்களைச் மட்டும் சேர்க்க இந்த ஊட்டியில் புது கான்வெண்ட் ஓப்பன் பண்ணிலாலும் பண்ணிடுவீங்க சாமி. அதுக்கு நான் ஆளில்லை” என்று புன்னகை முகமாகவேக் கூறினாள் ராதா.
என்னதான் ஆசிரியராக வேலை பார்த்திருந்தாலும் அவளும் ஒரு தாய் தானே. முதல்நாள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் போது எல்லா தாய்மார்களுக்கும் வரும் மனநிலை இவளுக்கும் வருவது இயல்பு தானே.

அபி ராதாவை வீட்டில் இறக்கிவிட்டு விட்டு எஸ்டேட் வரைக்கும் போய்விட்டு லஞ்சிற்கு வருவதாகவும், பின் பள்ளிவிடும் சமயத்தில் சென்று பிள்ளைகளை அழைத்துவருவதாகவும் ஏற்பாடு. வீட்டினுள் வந்த ராதாவிடம் பேரன் பள்ளியில் அழுதானா? எப்போ திரும்பி வருவான் போன்ற இன்ன பிற தகவல்களையும் பெற்றுக்கொண்டார் சுஜாதா.
 
Suvitha

Brigadier
SM Team
#2
மாலையும் வந்தது. அபராஜிதன் பிள்ளைகளை அழைத்துவர தன் ப்ளாக் ஆடியில் பறக்க...வீட்டிலோ ஏதோ பல வருடங்களுக்குப் பிறகு வரும் பிள்ளைகளை காணப்போவதைப் போன்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது பெண்களிடம். பிள்ளைகளுக்கு பிடித்த சிற்றுண்டியோடு பெண்களிருவரும் காத்திருக்க, ‘அம்மா’ என்ற ஆர்ப்பரிப்போடு ஓடி வந்தான் வில்லாளன். அவனை அள்ளி மடிதாங்கி, உச்சி முகர்ந்து பள்ளிக்கதைகளை பேசத்தொடங்கினாலும், பெண்ணவளின் மற்றொரு கை தன்மகளையும் வாஞ்சையோடு அணைக்கத்தவறவில்லை... தன்னவளின் கையணைப்பில் இருக்கும் தன் இருமகவுகளையும் மனநிறைவோடு பார்த்துக்கொண்டிருந்தான் அபராஜிதன் தன் மனையாளுக்கு அருகினில் அமர்ந்து கொண்டு. என்னதான் பேசினாலும் நாளைக்கு தான் பள்ளிக்கு செல்லப்போவதில்லை என்றே உதடுபிதுக்கினான் அவளின் செல்வன். அவனின் மனநிலையை மாற்றும் பொருட்டு “ குட்டா! உங்களுக்கு அப்பாம்மை குண்டு குண்டு குலோப்ஜாமூன் செய்து வச்சிருக்கேன் வந்து பாருங்க” என்று மருமகளின் மடியிலிருந்து தன் பேரனை எழுப்பி கூட்டிச்சென்றார் சுஜாதா.

ராதாவின் கைவளைவில் நின்றிருந்த ஆத்மிகா வில்லாளன் விட்டுச்சென்ற இடத்தை அழகாகவே நிரப்ப, குலாப்ஜாமூனை சாப்பிட்டு விட்டு அக்காவிற்கும் சின்ன கிண்ணத்தில் கொண்டு வந்த சின்னவர் தன்இடம் பறிபோன கோபத்தில் “இது என் அம்மா மடி , நானு தான் உக்காருவேன், நீ இதங்கு என்றான் ஒற்றைக் கையால் ஆத்மியை இழுத்துவிட்டுக்கொண்டே... இந்த மாதிரி என்றும் நடந்ததில்லை..காலையிலிருந்து முதன்முறையாக தாயைப் பிரிந்திருந்த பிஞ்சு தன் உரிமைப் போராட்டத்தை தொடங்க, கேட்ட வார்த்தையில் விதிர்விதிர்த்து போனாள் ராதா.

ஆனால் இது எதுவுமே ஆத்மிக்கு இல்லை போலும், “ஹாங்...இது என்னோட ‘அம்மா’ மடி நீ தூரப்போடா” என்று வாகாக ராதாவின் கழுத்தைக்கட்டிக்கொண்டு “அப்படித்தானேம்மா” என்று ராதாவைத் துணைக்கழைத்தாள்.
ஒருவினாடி, ஒரே ஒருவினாடி கண்கள் குளமாக அந்தக்கண்களில் மின்னலின் வீச்சு வந்து போக ஆனந்தமயமாக தன் ஆதவனை நோக்கி விட்டு “ உங்க ரெண்டு பேருக்குமே அம்மா மடியில் இடமிருக்கு செல்லங்களா” என்று கூறியவள் வில்லாளனையும் இழுத்து அணைத்து மடிதாங்கி கொண்டாள்.

ஆத்மியிடம் இருந்து வந்த ‘ஆன்டி’ என்ற வார்த்தையை எப்படி இயல்பாக ஏற்றுக்கொண்டாளோ அதேபோல் ஆத்மியிடமிருந்து வந்த ‘அம்மா’ என்ற வார்த்தையில் அவளுள்ளம் பொங்குமாக்கடலைப் போல பொங்கினாலும் தன் பெண்ணரசி முன் இயல்பாக இருப்பது போல காட்டிக்கொண்டாள் பெண்ணவள்....
மனமெங்கும் சந்தோஷமும், நிம்மதியும் ஊற்றெடுக்க அந்த அழகான காட்சியை தன் கண்களினாலேயே படமெடுத்து தன் மனமெனும் பெட்டகத்தில் சேமித்துக்கொண்டான் அபராஜிதன்.

“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...”
 
#6
அருமை ?. சுவி அழகாக இப்படியும் ஒரு அழகிய கதை நீட்சி. சொல்ல வார்த்தைகளே இல்லை அவ்வளவு அருமையாக இருக்கிறது. அழகியின் கைவண்ணத்தில் வந்துள்ளதோ என்று ஐயுறுவண்ணம் மற்றொரு அழகியிடமிருந்து. எந்த இடத்திலும் புதியவர் என்ற எண்ணமே தோன்றவில்லை. கம்பன் வீட்டு கட்டுத் தறியெல்லாம் கவி பாடுது நமது தளத்தில்.
 
Latest Episodes

Advt

Advertisements

Top