• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

Kadhal Kadan - 19

Messages
620
Likes
2,717
Points
133
Location
Bangalore
#1
காதல் கடன்

(19)

“ஒரு வார்த்தை பேச விடறாளா பாரு, சரியான வாயாடி, கையில கிடைக்கறதை எடுத்து அடிப்பாளாமே, பொண்ணாட்டமா பேசறா, பேட்டை ரவுடியாட்டம் பேசறா, எல்லாம் இந்த அம்மாவைச் சொல்லணும், பொண்ணைப் பாத்து கல்யாணம் பண்ணி வேக்கறேன்னு ஒரு போக்கிரியைப் பிடிச்சு கட்டி வெச்சுருக்கா...ஊசி மொளகா, ஊசி மொளகா...பேச்சுல என்ன காரம்...வார்த்தை அப்பிடியே சுள்ளுன்னு இருக்கு, ஆனா மூஞ்சி மட்டும் பஞ்சுமிட்டாய் ரேஞ்சுக்கு சிவக்கறது இவளுக்கு...” தான் கூறுவதையே காதில் போட்டுக்கொள்ளாமல், படபடவென்று பட்டாசாய் பொரிந்துவிட்டு போனவளைத் திட்டிக்கொண்டிருந்தான் பரத்.

தானும் அவளிடம் சற்று நேரம் முன்பு அப்படித்தான் நடந்துகொண்டோம் என்று வெகு வசதியாக மறந்து விட்டிருந்தான் அவன்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் அவனுடன் மௌனப் போராட்டம் நடத்தினாள் ராதிகா. இருவரும் உட்கார்ந்து மணிக்கணக்கில் அரட்டை அடிக்கவில்லை என்றாலும், தேவைப்பட்டால் மட்டுமே பேசிக்கொண்டாலும், இருவருக்குமிடையேயான மௌனம் கூட இயல்பானதாக இருக்கும்.

ஆனால் இப்போது ராதிகாவின் மௌனத்தில் கனன்று கொண்டிருந்த அவளது கோபம் அப்பட்டமாய்த் தெரிந்தது,முள்ளாய்த் தைத்தது பரத்துக்கு.

பரத்தின் கணிப்பின்படி ராதிகாவின் கோபமும் அவளுடைய மௌனப் போரும் அவனை எந்தவிதத்திலும் பாதித்திருக்கக் கூடாதுதான். ஆனால் அவனுடைய கட்டுப்பாடின்றி அவன் மனம் முரண்டு பிடித்தது, முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு திரியும் அவளைச் சமாதானம் செய்து விடவேண்டுமென்று ஏனோ ஒரு தவிப்பு அவனை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

என்ன செய்தால் சமாதானம் ஆவாள் என்றுதான் அவனுக்குப் புரியவில்லை. அதற்காக ரொம்பவும் இறங்கிப் போய் அவளிடம் பேசவும் அவன் தயாராக இல்லை. இன்னும் எத்தனை நாள்தான் இப்படியே இருக்கிறாள் என்றுதான் பார்ப்போமே என்று அவனும் மௌனம் சாதிக்கலானான்.

மருமகளும் மகனும் திருமணமாகி முதல் முறையாக மருமகள் வீட்டிற்கு விருந்துக்கு போகிறார்கள் என்பதற்காக பர்வதம் மாமி ஏற்பாடுகளை ஜோராகவே செய்திருந்தார். வீட்டிலிருக்கும் அனைவருக்கும் புத்தாடைகள், பரிசுப்பொருட்கள், கைமுறுக்கு, தேன்குழல், முள்ளு முறுக்கு, மாலாடு, சோமாசி, அதிரசம், தேங்காய் பர்பி, திரட்டுப்பால் என்று வகை வகையான பட்சணங்கள், பழங்கள் என்று அமர்க்களப் படுத்திக்கொண்டிருந்தார்.

“அம்மாவாத்துக்குதானே போறேன், இவ்வளவெல்லாம் எடுத்துண்டு போகணுமா என்ன? ஏதோ ஒரு கிலோ ஸ்வீட்டும், ஒரு சீப்பு வாழைப்பழம், ரெண்டு முழம் பூன்னு வாங்கிடு போனா போறாதாம்மா? இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தியா தோணறதும்மா” என்ற ராதிகாவின் கையைப் பிடித்து தன்னருகில் உட்காரவைத்துக்கொண்டவர்,

“நோக்கொரு விஷயம் தெரியுமா ராதும்மா, இந்த அம்மாவோட மனசு இருக்கே, பொண்ணைப் பத்தி எப்போவுமே கவலைப் பட்டுண்டே இருக்கும், பொண்ணுங்களோட புக்காத்தப் பத்தின விஷயத்துல அது கண்ணு முன்னால தெரியற விஷயத்தை எல்லாம் அப்படியே ஏத்துக்காது, அந்த மனசுக்குள்ள ஒருவிதமான சஞ்சலம் இருந்துண்டே இருக்கும், நம்ம பொண்ணு அந்த ஆத்துல நிஜமாவே சந்தோஷமா இருக்காளா, இல்லை நமக்காக சந்தோஷமா இருக்கறாப்ல காமிச்சுக்கறாளான்னு...அவளைச் சுத்தி நடக்கற ஒவ்வொரு காரியத்தையும் ஆராய்ஞ்சு பாத்துண்டே இருக்கும், அப்படி சஞ்சலப்படற மனசுக்கு இப்பிடி பொண்ணு அவளோட புக்காத்துல இருந்து வர்றச்சே தனக்காக கொண்டு வர்ற வஸ்துக்களைப் பார்த்து ஒரு சின்ன நிம்மதி கிடைக்கும், இந்த சாமானெல்லாம் கொண்டு போய்தான் அவளோட ஆம் நிறையனும்னு இல்லை, இல்லையானா இதை நம்பித்தான் அவாளோட ஜீவனம் அப்படிங்கறதும் இல்லை, ஆனா இதெல்லாம் தன்னோட அம்மவாத்துக்காரளுக்காக ஒரு பொண்ணு செய்யறச்சே, தன்னோட புக்காத்துல தன் பொண்ணு எவ்வளவு சுதந்திரமா முடிவெடுக்க முடியறது, அவ தன் ஆசை போல தனக்கு வேண்டியதை எந்த அளவுக்கு செஞ்சுக்க முடியறது அப்படின்னு அது அவளுக்கு புரியவைக்கும், அதுவே அவளோட மனசுக்கும் ஒரு சின்ன நிம்மதியை குடுக்கும், அதனாலதான் இதையெல்லாம் செஞ்சு அனுப்பறது...இன்னிக்கி மட்டுமில்லை ராதும்மா, நீ எப்போ அம்மவாத்துக்குப் போனாலும் இப்படித்தான் செய்யணும், புரியறதா?” என்று கூறிய மாமியாரை கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் ராதிகா.

“அம்மா, இதுல இவ்வளவு விஷயம் இருக்கறதா? ஆனா எல்லாராலயும் இப்படியெல்லாம் செய்ய முடியாதேம்மா, அப்போ என்ன பண்ணுவா?” என்றவளின் கன்னத்தில் செல்லமாகத் தட்டியவர், “அவாவா வசதிக்குத் தகுந்தமாதிரி அவாவா செஞ்சுப்பா, உனக்கென்ன கோடீஸ்வரன் பொண்டாட்டி நீ, அதுக்கு தகுந்தாப்ல நிறக்க செய்ய வேண்டாமா? அம்மவாத்துக்குப் போய் சீராடறதுக்கு நமக்கு எவ்வளவு உரிமை இருக்கோ, அதே அளவு அவாளை சீராட்டற கடமையும் நமக்கிருக்கு, அதையெல்லாம் விட்டே குடுக்ககூடாது, இதை எப்போவுமே ஞாபகத்துல வெச்சுக்கோ ராதும்மா,” என்று சொன்னவர், “அப்படியே சிவராத்திரிக்கும், நந்தினியோட வளைகாப்புக்கும், நீயும் பரத்தும் சேர்ந்து உங்க அம்மாவாத்துக்காராளை அழைச்சுட்டு வாங்கோ,” என்று கூறி அதற்கான பத்திரிக்கைகளையும் அவளிடம் கொடுத்துவிட்டு வேறு வேலைகளை பார்க்கச் சென்றுவிட்டார்.

எல்லா ஏற்பாடுகளும் நல்லபடியாகச் செய்யப்பட்டிருக்க, வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு கிளம்பவேண்டுமென்று பரத் கூறியிருந்ததால், விடியற்காலையிலேயே தயாராகி சிறு பிள்ளையின் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தாள் ராதிகா. எத்தனை நாள் அம்மா வீட்டில் இருக்கப்போகிறோம், எப்போது திரும்பி வரப்போகிறோம் என்பதெல்லாம் தெரியாததால், அவன் மீது கோபமாக இருந்ததால், இதைப் பற்றி பரத்திடம் கேட்கவும் முடியாததால், தோராயமாக இரண்டு மூன்று நாட்களுக்குத் தங்குவதுபோல் தயாராகி இருந்தாள்.

அவளுடைய லக்கேஜுடன் சேர்த்து ஊருக்குக் கொண்டு செல்வதற்காகக் கட்டி வைக்கப்பட்ட பார்சல்களைப் பார்க்கவே மலைப்பாக இருந்தது ராதிகாவிற்கு. இதையெல்லாம் எந்த வண்டியில் வைத்து எடுத்துச் செல்லப்போகிறோம் என்பதை நினைத்தாலே தலை சுற்றிக்கொண்டு வந்தது அவளுக்கு. இதைப் பற்றியெல்லாம் எதுவும் கவலைப் படாமல், அனைத்து பொருட்களையும் காரின் டிக்கியிலும் பின் சீட்டிலும் ஏற்றிய பரத், தன் பங்குக்கு இன்னும் இரண்டு மூன்று பெட்டிகளைச் சேர்த்திருந்தான்.

“இருக்கற லக்கேஜ் போறாதுன்னு இன்னும் இது வேறயா, மாமியாராத்துக்கு விசிட்டுக்கு போறாரா, இல்லை வீட்டை காலி பண்ணிண்டு போறாரா?” என்று முணுமுணுத்துக்கொண்டே காரில் தன்னருகில் அமர்ந்துகொண்டவளை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே வண்டியைக் கிளப்பினான் பரத்.

சரி, காரிலேயே ஸ்ரீரங்கம் போகிறோம் போலிருக்கிறது என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க, திருசூலம் விமான நிலையத்தில் ப்ரைவேட் ஜெட்கள் நிறுத்தப்படும் டார்மாக்கினுள் சென்று வண்டியை நிறுத்திய பரத்தின் மீது சுறுசுறுவென்று கோபம் பொத்துக்கொண்டு வந்தது ராதிகாவுக்கு.

“சாதாரண மனுஷாளாட்டம் பஸ்சுல, ட்ரெயின்ல, இல்லை தீராதுன்னா கார்லையோ இல்லைன்னா கமர்ஷியல் ப்ளேனலையோ போற பழக்கமெல்லாம் இல்லை போலருக்கு இந்த மனுஷனுக்கு, முணுக்குன்னா, அதென்ன ப்ரைவேட் ஜெட் வேண்டு கிடக்கு, பணத்திமிரு, பகட்டு வேஷம்,” என்று ராதிகா அவனுக்குத் தெரியாதபடி வேறு பக்கம் திரும்பி தனக்குத்தானே முணுமுணுத்துக்கொண்டிருக்க,

“அந்த கார் கண்ணாடிகிட்ட ரகசியமா முணுமுணுக்கறதை கொஞ்சம் சத்தமா பேசினா நாங்களும் என்னன்னு கேட்டுப்போமே, திட்டறதை நேரடியாத்தான் திட்டறது, அதென்ன உனக்குள்ளயே பேசிக்கற?” ஒரு அளவிற்கு மேல் அவளுடைய இந்த அமைதியையும் முணுமுணுப்புகளையும் தாங்க முடியாமல் மௌனக்குமிழியை உடைத்தேவிட்டான் பரத்.

“நேக்கெதுக்கு வம்பு, நான் அனாவசியமா ஏதாவது பேசப்போய் அதுல நீங்க மையலாகி, என்கிட்டக்க மயங்கிட்டேள்னா, அப்பறம் உங்க வைராக்கியம் வெண்டைக்காயெல்லாம் என்னாகறது, அதனால என்னோட நானே பேசிக்கறதுதான் எல்லாருக்குமே க்ஷேமம், என்கிட்டே நானே மயங்கமாட்டேன் பாருங்கோ...” என்றாள் ராதிகா முகம் சிவக்க.

அவள் பேசிய வார்த்தைகளை எல்லாம் ஓரம் தள்ளி சிவந்திருந்த அவள் முகத்திலேயே நிலைத்திருந்தன பரத்தின் கண்கள். கோபமாகவே பேசியிருந்தாலும் இரண்டு நாட்களுக்குப் பின் தன்னிடம் ஒருவழியாகப் பேசினாளே என்ற ஒரு மெலிதான நிம்மதி ஏற்பட்டது அவனுக்கு.

“நீ எண்ணி பேசற ரெண்டு வார்த்தையிலேயே மயங்கி மடியற அளவுக்கு என்னோட வைராக்கியம் அவ்வளவு ஒன்னும் பலஹீனமானது இல்லை, அதனால நீ தாராளமா என்னோட நேரடியாவே சண்டை போடலாம்...” என்றான் அவளைப் பார்த்து சீண்டலாக.

தீண்டத் தீண்டச் சுடர் விடும் தீபம் போல, அவன் சீண்டச் சீண்ட கொழுந்து விட்டெரிந்தது ராதிகாவின் கோபம்.

அவனுக்கு பதிலளிக்க அவள் வாயைத் திறக்கும் முன், “சண்டையை சாவகாசமா போட்டுக்கலாம், இப்போ கீழ இறங்கு, நாழியாயிடுத்து,” என்று சொன்னவனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்துவிட்டு காரைவிட்டு இறங்கினாள் ராதிகா. “பஞ்சு மிட்டாய், எப்போவும் பாயறதுக்குன்னே ரெடியா இருக்கா, தீவிரவாதி, சர்வாதிகாரி” என்று சரமாரியாக அவளுக்குப் பெயர்களை வைத்து, தனக்குள் முனங்கியபடியே அவனும் காரை டார்மாக்கினுள் பார்க் செய்துவிட்டு பயணத்திற்குத் தயாரானான்.

விமானம் மெதுவாக ரன்வேயில் ஓடத்தொடங்க, ராதிகாவிற்கு அருகில் இருந்த இருக்கையில் வந்தமர்ந்து சீட் பெல்டைப் போட்டுக்கொண்டான். முன்பு வந்த விமானம் போல்லாமல் இருவர் மட்டுமே பயணம் செய்யும்படியான சிறு விமானமாக இருந்தது அந்த செஸ்னா வகை விமானம்.
 
Messages
620
Likes
2,717
Points
133
Location
Bangalore
#2
இருக்கையில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டவனைப் பார்த்த ராதிகாவிற்கு கோபம் இன்னும் அதிகரிக்க, மறுபடியும் தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் அவளுடைய செய்கையைக் கண்டுகொள்ளாமல் இருந்தவன், ஒருநிலைக்கு மேல் பொறுக்கமுடியாமல், “இப்போ என்ன ஆச்சு, நான்தான் நேரடியா என்கிட்ட பேசுன்னு சொல்றேனே, இன்னும் ஏன் தனியாவே முணுமுணுத்துண்டு இருக்கே?” என்றான் அவளை பார்த்து.

“முதல்ல உங்க கிட்டக்க பேசறதுதான் உங்களுக்கு பிரச்சினையா இருந்தது, இப்போ எனக்கு நானே பேசிக்கறதும் பிரச்சினையா, வாயை மூடிக்கறேன் போறுமா, இல்லை அதனாலயும் உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா?” என்றாள் கோபமாக.

எந்தப்பக்கம் போனாலும் அந்தப்பக்கமும் எரிமலையாய் வெடித்து கோபத்தை லாவாவாய் உமிழும் ராதிகாவை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் ஆயாசமாக இருந்தது பரத்துக்கு. பதிலெதுவும் பேசாமல் மறுபடியும் கண்களை மூடிகொண்டு உட்கார்ந்துகொண்டான்.

அவன் அவளைச் சீண்டினாலும் கோபம் வந்தது, சீண்டாமல் அமைதியாக இருந்தாலும் கோபம் வந்தது ராதிகாவுக்கு.

“இல்லை, எதுவா இருந்தாலும் சாதாரணமாவே செய்யத் தெரியாதா உங்களுக்கு, அதென்ன ஹவர் சைக்கிள் வாடகைக்கு எடுக்கறாமாதிரி முணுக்குன்னா ப்ரைவேட் ஜெட்டை வாடகைக்கு எடுக்கறேள், உங்ககிட்ட பணமிருந்தா அதை சேமிச்சு வெச்சுக்கோங்கோ, இல்லன்னா தர்மம் பண்ணுங்கோ, அதை விட்டுட்டு என்னத்துக்கு இப்பிடி தண்ட செலவு பண்றேள், எல்லாம் பணத்திமிரு, வெட்டி பந்தா,” மெளனமாக இருந்தவனைச் சீண்டும்விதமாக பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டாள் ராதிகா.

இப்பொழுது தன் இருக்கையில் திரும்பி ராதிகாவை பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்படி உட்கார்ந்துகொண்டான் பரத். ராதிகாவின் முகத்தையே சுவாரசியமாகப் பார்த்தபடி “ஹ்ம்ம், அப்பறம்,” என்றான்...

ராதிகாவும் சண்டை போடும் சுவாரசியத்தில் அவனை நோக்கித் திரும்பி உட்கார்ந்துகொண்டவள், “என்ன அப்பறம், நான் என்ன கதையா சொல்றேன்?” என்று அவன் முகத்தைப் பார்க்க, அவனுடைய பார்வையில் தெரிந்த சுவாரசியத்தில், முகத்தைத் தீவிரமான பாவனையில் வைத்துக்கொள்ள முயன்றாலும், இதழ்க்கடையில் லேசாக வெளிவரத் துடித்த புன்னகையில் அடுத்து என்ன சொல்ல வந்தாள் என்று மறந்து போனது ராதிகாவிற்கு.

இருக்கையின் கைப்பிடியில் ஒரு கையை ஊன்றி மறுகையால் கன்னம் தாங்கி அவளுடைய கோப முகத்தையே விழியகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தவனின் கண்கள் கோபத்தில் அலைபாய்ந்து கொண்டிருந்தவளின் கண்களைக் கைது செய்தன. பரத்தின் ஆழப்பார்வையில் ராதிகாவின் முகம் கோபச்சிகப்பை விட்டு வெட்கவண்ணம் பூசிக்கொண்டது. அவன் எதிர்பார்த்த பஞ்சுமிட்டாய் பிங்க் நிறம் அவள் கன்னங்களில் படர, திருப்தியாக அவளைப் பார்த்து புன்னகைத்தவன், “சீட் பெல்ட் போட்டுக்கோ, லேண்ட் ஆகப்போறோம்,” என்று கூறியபடி திரும்பி உட்கார்ந்துகொண்டான்.

கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த கோபம் பரத்தின் ஒற்றைப் பார்வையில் ஒரு பக்கெட் ஐஸ்வாட்டரைக் கொட்டியதுபோல் “புஸ்” என்று அணைந்துவிட,இரண்டு நாட்களாக கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்த கோபம் திடீரென்று காணாமல் போனதில் ஒரு நொடி நிலைகுலைந்து போனாள் ராதிகா. “அவரோட வைராக்கியத்தை நீ கலைக்கறது இருக்கட்டுமடி ராதிகா, அவரோட ஒரு ஸ்மைல்ல உன்னோட வைராக்கியம் ஆட்டம் கண்டிடும் போலருக்கே,” என்று அவள் மனமே அவளைக் கிண்டல் செய்தது. அதன் பிறகு வீட்டிற்குச் செல்லும்வரை வாயே திறக்கவில்லை ராதிகா.

இவர்களின் வருகைக்காக வாசலிலேயே காத்திருந்தனர் மொத்தக் குடும்பமும். மரகதம் வாயெல்லாம் பல்லாக மகளுக்கும் மருமகனுக்கும் ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துக்கொண்டு போக, ஸ்ரீநிவாசனோ பல நாட்களாகப் பிரிந்திருந்த நண்பனைப் பார்த்ததுபோல ஓடிச்சென்று அத்திம்பேரைக் கட்டிக்கொண்டான். பானுவும் ஒருவித உற்சாகத்துடனேயே அத்திம்பேரிடம் வளவலத்துக்கொண்டிருக்க, பரத்தும் எந்தவிதமான தங்குதடையுமின்றி அவர்கள் மீது பாசமழையைப் பொழிந்துகொண்டிருந்தான்.

அவர்களின் பின்னாலேயே, டிரைவர் கொண்டு வந்து இறக்கிய பரிசுப்பொருட்களைப் பார்த்து மலைத்துப்போனார் மரகதம். “என்னத்துக்கு மாப்பிள்ளை இவ்வளவெல்லாம்...” என்று சங்கடமாகக் கூறியவரிடம், “எனக்கு இதைப் பத்தியெல்லாம் ஒன்னும் தெரியாது மாமி, எல்லாம் அம்மாவும், உங்க பொண்ணும் செஞ்ச ஏற்பாடுதான்,” என்று ராதிகாவைக் கைகாட்டியவன், பானுவுக்கு புதிய உயர் ரக மொபைல் ஃபோன், ஆடியபாதத்திற்கு ஐபேட், மரகதத்திற்கு காபி மேக்கர், சீனுவுக்கு லேட்டஸ்ட் மாடல் எக்ஸ்பாக்ஸ் கேமிங் கன்சோல் என்று அவனும் தனியாக எல்லோருக்கும் பார்த்து பார்த்து பரிசுகள் வாங்கி வந்திருந்தான். மேலும் மரகதத்திடம் ஒரு தூக்குச்சட்டியை நீட்டி, “இது ஸ்பெஷலா உங்களுக்காக” என்று கூற, “என்ன மாப்பிள்ளை இது,” என்ற கேள்வியோடு அதைத் திறந்து பார்த்த மரகதம் “அசோகா அல்வா,” என்று மகிழ்ச்சியாகக் கூற, “உங்களுக்கு ரொம்ப பிடிக்குமாமே, அதனால திருவையாருல சொல்லி ஸ்பெஷலா ஆர்டர் பண்ணி உங்களுக்காக வாங்கிண்டு வந்தேன், டிரைவர் சித்த முன்னாடிதான் போய் ஃப்ரெஷ்ஷா டெலிவரி வாங்கிண்டு வந்தார். சூடா இருக்கு சாப்பிடுங்கோ,” என்று மாமியாருக்கு “அல்வா” கொடுத்து அவரையும் இலகுவாக கைக்குள் போட்டுக்கொண்டான் பரத்.

“எப்படிம்மா இருக்க ராதிகா,” என்று கேட்டதுடன் விட்டுவிட்டு, பிறகு “மாப்பிள்ளை, மாப்பிள்ளை” என்று அம்மாவும் அப்பாவும் பரத்தையே ஒரே தாங்காகத் தாங்க, தன்னை விட்டுவிட்டு பரத்துடன் சென்று ஒட்டிக்கொண்ட தம்பியையும் தங்கையையும் பார்க்கப் பார்க்க பொறாமையாக இருந்தது ராதிகாவுக்கு.

அவளிடம் கோபமாக நடந்துகொண்டவன், தன்னுடைய தாய் வீட்டினருடன் எப்படிப் பழகுவானோ என்ற மனக்கலக்கத்தில் இருந்தவளுக்கு ஆச்சரியமளிக்கும் விதமாக, அவளே எதிர்பார்க்காத வண்ணமாக, கலகலப்பான பேச்சும், அக்கறையான விசாரிப்பும், மனதறிந்து வாங்கிவந்த பரிசுகளுமாக, வீட்டிலிருந்த அனைவரையும் ஒரே சுருட்டாகச் சுருட்டி தன்னுடைய சட்டைப் பாக்கெட்டினுள் போட்டுக்கொண்டுவிட்டிருந்தான் அந்தக் கள்வன்...
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top