• Please register and if already registered, log in! Read the stories and always share your opinions. Writers expect only your opinions. Thanks

kk 11

anisiva

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
1,589
Likes
7,676
Points
230
Location
Tvl
#1
அந்த மூன்று மாத காத்திருப்பு ஒரு யுகமாக இருந்தது. ஃபோனில் பேசினாலும் போதவில்லை. ஆம் மைதிலியுடன் ஃபோனில் பேசிவிட்டான். ஃபோனை அவளிடம் சேர்த்தது ஜெய்யின் வேலை என்ற எண்ணத்தில்,

“ஜெய் எப்படி அங்க வந்தான் மைதிலி?”

அவன் கேட்ட கேளிவியின் அர்த்தமே அவளுக்குக் குழப்பமாய் இருந்தது.

“ஜெய் வரலையே, பாரதி தான் வந்தா.”

முகிலுக்கு எங்கோ பொறித்தட்டியது. அவனிடம் கொடுத்து வைத்திருந்தது, பாரதியிடம் எப்படி? ஆள் இருக்குன்னு சொன்னானே அது இது தானா?

முகில் ஜப்பான் திரும்பியதிலிருந்து, கார்த்தியை எங்கும் சந்திக்க முடியவில்லை. அவன் நண்பர்கள் தங்கியிருந்த இடத்தில் போய் விசாரித்துப் பார்க்க, அவன் இப்போது இங்கில்லை, சென்னையில் இருப்பதாகத் தகவல். இப்படிச் சொல்லாமல் போகும் அளவிற்கு என்ன?

கார்த்தி விஷயத்தை விட்டுவிட எண்ணி அது முடியாமல் போக, அவன் நண்பன் தந்திருந்த நம்பருக்குப் ஃபோன் செய்தான்.

உடனே எடுத்தவன் “முகில், எப்படியிருக்கே? உன்னைத் தேடினேன். உன் ஆபிஸ்ல கால் பண்ணிக்கேட்டேன், நீ ஊருக்கு போயிட்டேன்னு சொன்னாங்க...” என்றான்.

“ஆமா கொஞ்சம் அவசர வேலை. நீ என்ன திடீர்னு சென்னைக்கு? எப்ப வர இங்கே?”

கார்த்தி சிறு அமைதிக்குப் பின், “என் கம்பெனி லேஆஃபில் எனக்கு வேலை போயிடிச்சு முகில்...”

இவன் போகிற போக்கு சரியில்லை என்று எத்தனை முறை முகில் சொன்னான். கேட்டுத் தொலைத்தானா? இப்போது? பத்தோடு பதினொன்று என்று வேலை செய்யாதவனுக்கெல்லாம் சம்பளம் கொடுப்பார்களா?

“எப்போ..?”

“அது நாளாச்சு. அங்கேயே வேற வேலை தேடி பார்த்தேன், எதுவும் சரிவரலை. சம்பளம் இல்லாம எனக்கு செலவும் ஜாஸ்தி. அதான் ஊருக்கு வந்துட்டேன்...”

“ம்ம்”

“அப்புறம், எனக்கு இந்த வாரம் கல்யாணம் முகில்.”

ஒன்றும் சொல்வதற்கு இல்லை. முகிலுக்கு அவனிடம் இந்தத் தருணத்தில் பேசவே எப்படியோ இருந்தது.

“ஓகே, நீ பிஸியா இருப்பே, கல்யாண வேலையை பார்.”

ஃபோனை வைத்தவனுக்கு கார்த்திக்கு இந்தக் கட்டத்தில் தான் நிச்சயம் ஏதாவது செய்தால் என்ன என்று தோன்ற ஆரம்பித்தது.

ஜப்பான் திரும்பியதிலிருந்து மைதிலியிடம் பேசுவது ஒரு கடமையாகவே செய்தான் முகில். ஓவர்டைமில். எப்படி அவள் இந்த ஃபோன் விஷயத்தில் தன் தந்தையிடம் இன்னும் அகப்படாமல் இருக்கிறாள் என்பது ஆச்சரியம்.

இப்படி ஆமையாய் நாட்கள் சென்றாலும், அவன் திருமண நாள் விரைவில் நெருங்கியது.

இந்த இடைப்பட்ட நாட்களில் கார்த்திக்கு வேறு வேலை ஏற்படு செய்து மறுபடியும் ஜப்பான் வரவழைத்துவிட்டான் முகில். கார்த்தி அவன் மனைவி திவ்யாவுடன் வந்து டோக்கியோவில் குடித்தனம் தொடங்கியாயிற்று.

“நீ குடும்பஸ்தன். இனிமேலாவது, வேலையில் கவனம் செலுத்துவேன்னு நம்புறேன்...”

கார்த்தியும் தன் தவற்றை உணர்ந்திருந்ததால், முகிலின் வார்த்தைகள் அவனுக்குத் தவறாகப் படவில்லை.

“எனக்குக் கல்யாணம் கார்த்தி, இந்தா பத்திரிக்கை. கட்டாயம் வந்திடு...” என்றான் முகில் அவனின் திருமண பத்திரிக்கையை நீட்டி.

“சூப்பர் முகில், பொண்ணு எந்த ஊரு?”

“என் ஊர்தான். நான் கிளம்புறேன்.” என்று கிளம்ப, கார்த்திக்கு முகிலின் வாழ்கையில் நடக்கப் போகும் இந்த மங்கள நிகழ்ச்சியில் நிரம்பச் சந்தோஷமே.

மீதியிருந்த சில்லறை நாட்கள் கடந்து போன பின் திருமண நாள் நெருங்கி விட்டது. விடிந்தால் முகிலின் திருமணம். வளர்மதி வழக்கம்போல் தன் சேட்டைகளை ஆரம்பித்திருந்தாள்.

வளர்மதிக்கு சுத்தமாய்ப் பிடிக்காத சம்பந்தம். உடன் பிறப்பின் சந்தோஷம் எல்லாம் அவள் லட்சியம் செய்யவில்லை. அவள் திருமணத்துக்கும் எத்தனை மெனக்கிட்டிருக்கிறான். அவளானால் மூன்றாம் மனிதர் போல் நடமாடிக் கொண்டிருந்தாள்.

அன்றும் சாரதா அவளிடம் கத்தியது அவன் செவிகளில் விழுந்தது.

“சுபகாரியத்தின் ஆரம்பத்திலேயே அபசகுனமா பேசாதே வளர்மதி. உனக்கு இந்தப் பெயரை எவ்வளவு ஆசையா வச்சேன். ஆனா மூளையைத் தவிர எல்லாம் வளர்ந்திருக்கு உனக்கு...” என்று எப்போதும் அவளுக்கு ஆதரவாய் இருந்த சாரதாவை புலம்ப வைத்துவிட்டாள் வளர்மதி.

“இந்த வளர்மதி செய்றது கொஞ்சம் கூட சரியில்லை. நாத்தனார் முறைக்கு ஓடி ஆடி செய்யாம, சும்மாவேயிருக்கா. எத்தனை முறை சொல்றது.?”

அம்மா அப்பாவிடம் புலம்பியதையும் முகில் கேட்க நேர்ந்தது.

“இத்தனை இடம் கொடுத்தது, நீதானே அனுபவி” அவர் சொல்லவும் அம்மா விசும்பிய சத்தமும் கேட்டது.

“சரி சரி விடு. இப்பவாவது புத்தி வந்ததே உனக்கு. கொஞ்சம் தட்டி கொடுத்துப் பார். வீம்பு காட்டினா அவளை ஒதுக்கிவிட்டு என் தம்பி மகளை வச்சி கல்யாண வேலை எல்லாம் செய்...” எனவும், அங்கே அமைதி.

“அது எப்படிங்க?” சாரதா இழுக்க, “நான் சொல்றபடி செஞ்சிப்பார். தானா வழிக்கு வருவா.” என்றார் மகளைப் பற்றி தெரிந்தவராய்

குடும்பத் தலைவன் என்பது லேசுபட்ட காரியமில்லை அடித்து நொறுக்கவும் வேண்டும், அன்பால் கொண்டு செல்லவும் வேண்டும். முகிலின் தந்தையிடம் அந்த இரண்டும் உண்டு. குட்டு கொடுத்து சாரதாவிற்கு புரிய வைத்தவர், தன் பேச்சுக்கு பணியவும் வைத்தார்.

முகிலின் சித்தப்பா மகள் கயல்விழியை வைத்து மைதிலிக்கான நலுங்கை சாரதா செய்ய ஆரம்பிக்க, வளர்மதி வெகுண்டெழுந்தாள்.

“நான் தானே செய்யணும் இதெல்லாம்.?”

“தம்பி கல்யாணத்தில் என்ன தூக்கம் வேண்டிக்கிடக்கு உனக்கு.? நாத்தனாரை கூப்பிடுங்கன்னு எல்லாரும் சொன்னப்போ கயல் தான் பக்கமிருந்தா.”

வளர்மதியை அனைவரும் சேர்ந்து ஏகத்துக்குப் பேசிவிட, என்றும் அவளுக்கு ஆதரவு தரும் சாரதாவும் கண்டுகொள்ளவில்லை. அரண்டுவிட்டாள் வளர்மதி. அடுத்த நாளில் இருந்து எல்லா விஷயத்துக்கு அவள் ஆஜர். இத்தனை களேபரங்களுக்கு நடுவில் இனிமையாய் நடந்தது முகில் மைதிலி திருமணம்.

“கெட்டிமேளம் கெட்டிமேளம்...”

அழகு பதுமையாய் அவன் பக்கம் அமர்ந்தவளின் கழுத்தில் மஞ்சள் நாணத்தைப் பூட்டி அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான். அவள் எப்படி உணர்ந்தாளோ தெரியாது. ஆனால் இவன் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தான்.

மைதிலி அவன் கண் பார்க்க, அந்த அழகில், மயக்கத்தில் லயித்துப் போனான் முகில். அந்தப் பார்வையை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது என்று பட்டது அவனுக்கு. திருமணச் சடங்கில் அவளை முழு நேரமும் பக்கத்தில் இருந்து ரசித்தவன், வீடு வந்து சேர்ந்த பிறகு தனித்து விடப்பட்டான். நெடுநேரம் பிறகும் கூட அவள் கண்ணில் படவில்லை.

அவன் அன்னையைத் தனியாகப் பிடித்தவன், “அவ எங்கம்மா...” என்று கேட்டான்.

“ஏன்டா...?” என்று பதில் கேள்வி வர, அசடு வழிந்தானே ஒழிய, பதில் இல்லை. முதலில் இதென்ன கேள்வி?

அவன் முழியைப் பார்த்த சாரதா, “அவசரப்படுறியே...” என்று அவன் தோளில் ஒருதட்டு தட்டி சொல்லிவிட்டு, யாரோ அவரை அழைத்தக் குரலுக்கு ஓடிவிட்டார்.

சாரதா அகலவும், இவன் மறுபடியும் உறவினர் கூட்டத்தில் ஐக்கியமாகி, அவர்கள் கேள்வி கனைகளில் திணற ஆரம்பித்தான்.

அன்று இரவு மைதிலியை அவர்களின் அறைக்கு அழைத்து வந்த அவன் அக்கா, என்றும் இல்லாமல் நிரம்பவும் வம்பு செய்தாள்.

“அவளை விட்டிட்டு, நீ கிளம்பு...” அவன் சொன்னாலும்,

“இருடா பொண்ணு மிரளுது பார்...” என்று இல்லாத காரணத்தை சொல்லி அறை வாசலில் நகராமல் இருந்தாள் வளர்மதி.

ஆளுக்கும், பெயருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? மனதில் அவளைத் திட்டியபடி, மைதிலி பக்கம் திரும்பிய முகில்,

“மாமனைப் பார்த்தா உனக்கு பயமாவா இருக்கு...?” என்று கண்ணடித்தபடி கேட்க,

அவளோ அக்காள் தம்பி இருவரையும் மாறி மாறிப் பார்த்து, இல்லை என்பது போல் தலையாட்டிய பிறகே முகிலால் வளர்மதியை அங்கிருந்து துரத்த முடிந்தது. அறைக்குள் சென்று கதவை அடைத்தது தான் தாமதம் அவளை இறுக கட்டிக்கொண்டான்.

“முகில் விடுங்க...” சிணுங்க ஆரம்பித்தவளின் முகத்தில் முத்தங்களை ஆரம்பித்தான். அவளைப் பேச விடாது அதரங்களையும் சிறை செய்தான். இத்தனைக்கும் பிறகு எடுத்த காரியத்தை முடித்தே தீருவேன் என்பதாய் இரு கைகளால் மைதிலியை ஏந்திக் கொண்டான்.

அவன் செய்கையில் வெட்கமாகி இத்தனை நேரமும் வேண்டாம் என்றவள் இப்போது மனம் மாறி அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்துக் கொண்டாள். அவளையே விழுங்குவதைப் போல் பார்த்திருந்தவன், இத்தனை நாள் தாமதத்தையும் சரி செய்யவென்று புது மாப்பிள்ளையின் பணியைச் செவ்வனே செய்ய ஆரம்பித்தான்.

காலையில் தாமதமாய்க் கண்விழித்தவனைக் குளித்து முடித்துப் புடவையில் நின்றிருந்தவள் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனுக்குப் பிடித்த வண்ணமான லாவண்டர் நிறத்தில், எழிலோவியமாய் நின்றிருந்தவளை பார்த்துக்கொண்டு மட்டுமே இருக்க முடியவில்லை அவனால்.

சோம்பல் முறித்துக் கொண்டு, “கிட்ட வாடி என் பொண்டாட்டி...” என்றழைக்க நகைத்தவாறு,

“ம்ம்ஹும்...” என்றவள் அவள் காரியத்தை தொடர, போர்வையை விளக்கிவிட்டு அவளை நெருங்கி கட்டிக்கொண்டான் முகில்.

“ப்ளீஸ், குளிச்சிட்டு வாங்க முகில்...” என்று அவள் சொன்னாலும், அவன் கேட்பதாக இல்லை.

“லேட் ஆகிடிச்சு. நீங்க முடிச்சிட்டு வர வரை நான் இங்கேயே இருக்கேன். சொல்றதை கேளுங்க...”
 
anisiva

SM Exclusive
Author
SM Exclusive Author
Messages
1,589
Likes
7,676
Points
230
Location
Tvl
#2
அவன் வாழ்க்கையில் இத்தனை விரைவான ஒரு குளியல் குளித்திருப்பானா தெரியாது. அவன் வெளிவர அவள் தலையில் பூ சூடிக் கொண்டிருந்தாள். அவளையும் பூவையும் ஒரு சேர வாசம் பிடித்தவன், அவள் எவ்வித எதிர்ப்பும் காட்டாததால்,

“என்ன, இன்னிக்கி ரொம்ப வித்தியாசமா இருக்கே?” என்றான்.

அவள் பதில் சொல்லும் நிலையில் அல்லாமல் இப்போது அவனின் செய்கையில் மூழ்க ஆரம்பித்திருந்தாள்.

சற்று நேரத்தில் உணர்வுக்கு வந்தவளாய், “ஐயோ ரொம்ப நேரம் ஆயிடிச்சு...” என்று அவனை விட்டு விலக,

“இன்னும் கொஞ்ச நேரம் இரேன் டி... ” என்று கட்டிக் கொண்டான் தன் மனைவியை.

‘ம்ம்ஹூம்’ என்றவள் சிரித்தபடி அவனை விட்டு ஓடினாள்.

சம்சாரக் கடலில் ஐக்கியமாகிவிட்டான் முகில். மைதிலி இத்தனை நாளும் வேறு மாதிரி இருந்தாலும் திருமணம் முடிந்து மனைவிக்கான இலக்கணங்களில் சிறிதும் பிழையில்லாமல் இருந்தாள். முகில் என்ன சொன்னாலும் அட்சரம் பிசகாமல் செய்தாள்.

அடுத்தவர் முன் பேசவே தெரியாதவள் போல் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்வாள். என்ன நினைக்கிறாள் என்பதில் அவனுக்கு ஏக குழப்பம். இதெல்லாம் புது மனைவியின் முதல் சில மாதங்களுக்கான குணாதிசியங்கள் என்பது முகிலுக்கு அப்போது புரிந்திருக்கவில்லை.

வளர்மதி மைதிலியிடம் பேசுவதும் செய்வதும் அவள் நிறைவாகவோ குறைவாகவோ முகிலிடம் சொல்வதில்லை. முகில் பார்த்த வரையில் வளர்மதி அவளைச் சீண்ட மைதிலி முதலில் அரண்டாலும், பின் தன் பாணியில் சமாளிக்கத் தான் செய்தாள்.

இன்னும் அவர்கள் தஞ்சாவூரில் இருக்கப் போவது சில தினங்களே.

***

கண்மணியின் நிலை நிதானமடைந்ததும், சாரதா அவளிடம், “உன் வீடு எங்க இருக்குன்னு சொல்லும்மா, உன்னை அங்க விட்டிடுறோம்...” என்று கேட்க,

பதில் சொல்ல சற்று யோசித்த பின், “நான் இந்த ஊர் இல்லைம்மா...” என்றாள் அவள்.

ஒவ்வொரு வாக்கியமும் பேச சக்தி தேவைப்பட்டது. சாரதாவுக்கு அவள் நிலை நன்றாகப் புரிந்தது. ஒழுங்கே சாப்பிட்டு பல மாதங்கள் ஆன பெண் போலிருந்தாள். கைகளில் ஒரு வித நடுக்கம்.

இவர் விசாரித்துக் கொண்டிருந்த சமயத்தில் முகில் தன் தந்தையுடன் அவர்களிடம் வர,

“முகில், நாம இந்த பொண்ணை நம்மக்கூட அழைச்சிட்டு போகலாம் ப்பா, பாவம் பசி மயக்கம் தான் அவளுக்கு...” என்று சாரதா சொல்ல, கண்மணி ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டாள்.

அவளுக்கு இப்படி யாரோ முகம் தெரியாதவர்கள் தனக்கு உணவு வாங்கித் தருவது அவமானமாய் இருந்தது. தன் நிலை இப்படிப் போக வேண்டுமா?

முகிலுக்கு அவன் அன்னையைத் தடுக்க வழியில்லை. தெரியாத பெண்ணை எதற்கு கூடக் கூப்பிட்டு போக வேண்டும். மைதிலி விஷயத்தில் ஆரம்பித்த மனச்சஞ்சலம் இன்னும் தொடர்ந்தது, இப்போது இந்தப் பெண்ணின் விஷயத்தில்.

எல்லாரும் அங்கிருந்து கிளம்பி காரில் போக, வழியில் ஒரு மருத்துவமனையில் நிறுத்தச் சொன்னார் பத்மநாதன். முகிலை விடுத்து, பத்மநாதன், சாரதா கண்மணியை உள்ளே அழைத்துச் சென்றனர்.

மருத்துவர் அவளைச் சோதித்தபிறகு, “இன்னும் கொஞ்சம் காயம் ஆழமாகியிருந்தால் தையல் போட வேண்டி வந்திருக்கும்...” என்றுவிட்டு, நர்ஸிடம் காயத்துக்கு டிரஸ்ஸிங் பண்ணிவிடச் சொன்ன மருத்துவர்,

“ஹெச் பி யும் கம்மியா இருக்கும் போலிருக்கு. இந்த மாத்திரை போடுங்க..” என்று, அவர் எழுதித் தந்த மருந்துகளை வாங்கி அவளை காருக்கு அழைத்து வந்தனர்.

“கண்மணி நீ எந்த ஊர் ம்மா? ஏன் இங்க வந்திருக்க?”

அவள் தயங்குவதை சட்டை செய்யாமல் சாரதா மறுபடியும் கேட்டார். அப்போதும் மௌனம் அவளிடம்.

“சொல்ல இஷ்டமில்லைன்ன விடேன் சாரதா.” பத்மநாதன் தன் மனைவியின் வாயை அடைத்ததும் அமைதியாகி விட்டார்.

காரில் ஏறவும் முகில் அவள் தலைக்கட்டை பார்த்தும் பார்க்காததைப் போல் திரும்பிக் கொண்டான். அதன்பின் தஞ்சாவூரில் சென்று மதிய உணவு முடிக்க, கண்மணி முழு நேரமும் மௌனம்.

ஹோட்டலை விட்டு வெளிவரவும், “அம்மா இங்க சென்னைக்கு போற பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டிருங்க...” என்று கண்மணி சொன்னதும் முகில் வண்டியைப் பேருந்து நிலையம் நோக்கிச் செலுத்தினான்.

“சென்னையில் யார் இருக்கா கண்மணி?” இப்போது பத்மநாதன் முறைப்பைக் கண்டு கொள்ளாமல், சாரதா கேட்க, கண்மணியிடம் பதில் இல்லை. சாரதா ஆதரவாய் அவள் கைபற்றி,

“நான் உன் அம்மா மாதிரி, என்கிட்ட சொல்லும்மா, என்னால் முடிந்த உதவியை செய்றேன்.” என்றதும், கண்மணியின் கண்கள் கலங்கியது.

“சொல்லும்மா...”என்று சாரதா விடாமல் கேட்க,

“நான் ஒரு அநாதை. அம்மா அப்பா இறந்துட்டாங்க. அக்கா இருந்தும் இல்லைன்ற நிலை...” என்றவள் அழுதாள்.

முகில் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு தானிருந்தான். அவன் முகம் எந்த மாற்றத்தையும் காட்டவில்லை. சாரதா அவள் முதுகை ஆதரவாய் தடவிவிட்ட படி,

“யாரையும் தெரியாம சென்னைக்குப் போய் என்னம்மா பண்ணுவே?” என்று அடுத்த கேள்விக்கு போக,

அடுத்தவர் கவலையை தன் தலையில் எடுத்துப் போட்டு போடுவதுபோல் இருந்தது ஆண்கள் இருவருக்கும். அவர்கள் அமைதியைச் சாதகமாக எடுத்துக் கொண்ட சாரதா கண்மணியிடம் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“நான் படிச்சிருக்கேன், டீச்சரா வேலை பார்த்திருகேன்... ஏதாவது வேலை தேடிப்பேன். இதுவரை நீங்கச் செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி...” என்று சொல்லிக் கொண்டிருந்தவள், முகில் வண்டியை நிறுத்தியிருக்கவும் சட்டென்று இறங்கி நடக்கலானாள்.

சாரதாவுக்கு மனது அடித்துக்கொண்டது. செர்ட்டிபிகேட் போல் தோன்றிய ஃபோல்டரை கையில் பிடித்திருந்தாள். நீருக்குள் விழுந்தச் சமயம் கூட அதை கண்மணி அவள் இடுப்பில் சொருகியிருந்தாள்.

சாரதா பார்த்த வரை அது மட்டுமே அந்தப் பெண்ணிடம் இருந்தது. சென்னைக்குப் போக வழிச் செலவுக்கு என்னச் செய்வாள்? மகாலட்சுமி போல் இருக்கும் இப்பெண்ணை அந்த மாநகரம், தனியே பாதுகாப்பாய் வாழ விட்டுவிடுமா.?

காரின் ஜன்னல் கண்ணாடியை இறக்கி, “கண்மணி நில்லும்மா...” என்று கத்திப் பார்த்தார் சாரதா.

கேட்டிருக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் அவள் திரும்பியும் பாராமல் நடந்து சென்றுவிட்டாள்.

“விடு சாரதா, நீ ஏன் இத்தனை மெனக்கிடுறே...?”

“இல்லைங்க, இந்த மருந்துகளை விட்டுட்டு போயிட்டா? அவக்கிட்ட இதை கொடுக்கணும்.”

சாரதா சிரமப்பட்டு இறங்க முற்பட, ஏற்கனவே தன் அன்னைக்கு நடப்பதில் சிரமம். இதில் எங்கேயிருந்து அவளை தேடுவார் என்றெண்ணிய முகில்,

“நீங்க வண்டியில் இருங்க, நான் தேடி கொடுத்திட்டு வரேன்...” என்று அவள் போன வழியில் பின்தொடர்ந்தான்.

சென்னை பேருந்துகள் இருக்கும் தடத்துக்கு அவள் நடக்க, முகில் அவளை நெருங்கினான். இவன், “ஏங்க...” என்பதற்குள்

“ஏ டி கண்மணி, இங்க தான் இருக்கியா? யார்கிட்ட உன் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுறே?” என்று சொல்லியபடி, ஐம்பது வயது போல் தோன்றியவன் அவளின் கைபற்றி வம்படியாக இழுத்தான்.

“என்னை விடு...” என்று அவனிடமிருந்து தன் கையை பிரிக்கப் போராடி பார்த்தாள். யாரையும் உதவிக்கு அழைக்கலாம் என்று இவள் திரும்பிப் பார்க்க அங்கு முகில் நின்றிருந்தான்.

“சார், முகில் சார்.. ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க...”

“யாரு டி இவன்? இவனைப் பார்க்க தான் இத்தனை தூரம் ஓடி வந்தியா?” அந்த நரைமுடி பேச்சைக் கேட்டதும்,

“மிஸ்டர், வார்த்தையை அளந்து பேசுங்க. முதலில் அந்த பொண்ணு கையை விடுங்க.” என்ற, முகிலின் வீரமெல்லாம் அந்த முதியவனைச் சிறிதும் அசைத்துப் பார்க்கவில்லை.
 
Advertisement

Latest Episodes

Advertisements

Top